Wednesday, May 30, 2012

வேரென நீயிருந்தாய்...(55)


20 Decempber 2002, வெள்ளிக்கிழமை மாலை. திட்டமிட்டிருந்ததிலும் சற்று நேரம் கழித்தே வீட்டிற்கு வரமுடிந்தது. வீட்டிற்கு வர நதீஷா ஆயத்தமாயிருந்தாள்.

“கெதியாப் போகவேணுமப்பா. இல்லையெண்டாப் பிறகு check point-ஐ மூடிருவாங்கள்.”

“ஓமப்பா கடைசி நேரத்தில meeting ஒண்டைப் போட்டுத் துலைச்சிற்றாங்கள். அதுதான் லேற்றாகீற்றுது. இனி ஓமந்தை bus கிடைக்குமோ தெரியாது. நாங்கள் motor cycle-இலயே வவுனியா வரைக்கும் போவம். நான் ஒருக்கா முகத்தை அலம்பீற்று ஓடியாறன். நீர் எல்லாத்தையும் ready பண்ணும். என?”

முகம் அலம்பி வர தயாராக அளவான சூட்டுடன் இருந்த தேனீரை அருந்திவிட்டு இருவருமே கிளம்பினோம்.

முறிகண்டிப் பிள்ளையாருக்கு கற்பூரம் ஏற்றிவிட்டு உந்துருளியை விரைவாகச் செலுத்தியவாறே சென்று கொண்டிருந்தேன்.

“ஏனப்பா முன்னால வாறவங்கள் head light அடிச்சுக் காட்டுறாங்கள்?”

“ஓ! நான் கவனிக்கேல்லை.”

எட்டி எனது உந்துருளியின் முகப்பு விளக்கிற்கு (head light) முன்னதாக ஒரு கையை வைத்துப் பார்த்தேன். எனது உந்துருளியின் முகப்பு விளக்கு எரியவில்லை. பிறகு எதற்காக இந்த சமிக்ஞை கொடுத்திருப்பார்கள்? எனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த உந்துருளி தனது வேகத்தைக்குறைத்துக் கொள்ள நான் அதை முந்தியிருந்தேன். எதிரே வந்த வளைவினில் திரும்ப, சற்றுத் தூரத்தில் வெண்ணிற மேற்சட்டையும் நீலநிற காற்சட்டையும் அணிந்திருந்த இரு காவற்றுறையினர் எம்மை வழிமறித்தனர்.

“oh shit! over speed-இல வந்திற்றம் நதீஷா. அதுதான் முன்னால வந்தவங்கள் signal போட்டுக் காட்டியிருக்கிறாங்கள். எங்களுக்கு தான் விளங்கேல்லை.”

உந்துருளியை அவர்களின் அருகே நிறுத்தினேன். அவர்கள் சிரித்துக்கொண்டே வேகமானியின் வாசிப்பினை என்னிடம் காட்டினார்கள். தண்டப்பணம் இருநுாறு ரூபாவிற்கான பற்றுச்சீட்டினைப் பெற்றுக் கொண்டு மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தோம்.

“நீங்க அவையோட கதைச்சுப் பார்த்திருக்கலாமப்பா. சும்மா ஒண்டும் கதைக்காம காசைக்குடுத்திற்று வாறீங்கள்”

“இல்லை நதீஷா. இவங்களோட கதைக்கேலாது. ஏனெண்டா எங்களிலதான் பிழை. சும்மா கதைச்சுக் கொண்டு நிண்டா நேரம் தான் போகும். ஒரு பிரியோசனமும் கிடைக்காது. பாருங்க அவங்கள் சிரிச்சுக் கொண்டுதானே நிக்கிறாங்கள். ஆனாலும் fine கட்டாமப் போக விடமாட்டாங்கள் இதே ஓமந்தைக்கு அங்காலையெண்டா முறைச்சுக் கொண்டு நிப்பாங்கள். ஆனா அம்பதோ (ஐம்பதோ) நூறோ குடுத்திற்றா விட்டிருவாங்கள்”

ஒருவாறாக எல்லைச் சோதனைச் சாவடிகள் மூடப்படுவதற்குள்ளாக ஓமந்தையைக் கடந்து விட்டிருந்தோம். வவுனியா நியாப்பில் வேலைசெய்யும் பொறியியலாளர்களின் குடியிருப்பில் உந்துருளியை விட்டுவிட்டு வந்தோம். 

“இனி கண்டிக்கு direct bus இருக்காது. வாங்க அநுராதபுரம் போய்ப் போவம்.”

அநுராதபுரத்தினை அடைந்து அங்கிருந்து கண்டிக்குப் பயணமாகி கட்டுகஸ்தோட்டையை அடைகையில் நேரம் இரவு 11.30 ஐத் தாண்டி விட்டிருந்தது.

மறுநாள் காலையில் கண்டி நகருக்குச் சென்று எங்கள் பட்டமளிப்பு விழாவிற்குத் தேவையான ஆடைகளைத் தைக்கக் கொடுத்துவிட்டு வந்தோம்.

“நாளைக்கு நாங்க ஒருக்கா டொக்ரரிட்டைப் போவமாப்பா?”

நெஞ்சுக்குள் திக்கென்றாலும் அதை மறைத்துக் கொண்டு,

“ஏன்? என்னத்துக்கு?”

“இல்ல... எனக்கு பீரியட்ஸ் பிந்தி ஒருகிழமையாகிற்றுது. அதுதான் ஒருக்கா டொக்ரரிட்டைப் போய்ச் செக் பண்ணீற்று வருவம்.”

“சரி உம்மட விருப்பம்”

“அப்ப நான் டொக்ரரிட்டை இண்டைக்கே book பண்ணுறன் என?”

“ஓம்”

“என்ன நீங்க? ஏன் ஒருமாதிரி டல்லா இருக்கிறீங்க?”

“சீ! எனக்கொண்டுமில்லை. நேற்று முழுக்க அலைஞ்சதுதானே. அதுதான் tired-ஆ இருக்கு”

“அப்ப நீங்க சாப்பிட்டிட்டுப் படுங்கோ. நான் பிறகு எழுப்பிறன்”

மாலை வைத்தியரின் அறையில் இருந்தோம். நதீஷாவின சிறுநீர் மாதிரியைப் பரிசோதித்து விட்டு,

“Congratulations! It's positive”

நதீஷாவின் முகம் சந்தோஷம், பெருமிதம், பரவசம் எல்லாம் கலந்து காட்சியளித்தது.

வீட்டிற்கு வந்து உணவருந்திவிட்டு, நதீஷாவிற்காக படுக்கையில் காத்திருந்தேன்

“என்ன நீங்க? காலமையிலயிருந்து பார்க்கிறன். ஏன் ஒருமாதிரி இருக்கிறீங்க?”

“இல்லையே.. நான் நல்லாத்தானே இருக்கிறன்”

“பொய் சொல்லாதீங்க. உங்களுக்கு இப்ப குழந்தைவாறது பிடிக்கேல்லையா?”

“என்ன நீங்க? ஏன் இப்பிடியெல்லாம் கதைக்கிறீங்க? ஏன் நானும் சந்தோஷமாத்தானே இருக்கிறன்”

“இல்லை. டொக்ரர் positive எண்டு சொல்லேக்குள்ள உங்கட முகம் ஒருமாதிரிப் போய்ற்றுது. நான் கவனிச்சனான்”

“நீங்க சும்மா குழப்புறீங்க”

“நீங்கதான் மழுப்புறீங்க. உண்மையைச் சொல்லுங்க. உங்களுக்கு என்ன பிரச்சினை? please...”

மாவீரர் நாள் இரவு வந்து மனதில் உறுத்தியது. அன்றைக்குத்தான் கர்ப்பம் தரித்திருக்குமோ? அன்றைய அந்த நிகழ்வு முடிகையில் என் சுவாசநாடி 'ஈதா'வாகவுமில்லாமல் 'பிங்காளா'வாகவுமில்லாமல் சமச்சீராக இருந்ததே. சாத்திரங்களில் சொல்லப்படுவது உண்மையானால் இந்தக்கரு ஆணுமன்றி பெண்ணுமன்றியல்லவா இருக்கும். இதை எப்படி இவளிடம் சொல்வது? கடவுளே சாத்திரங்கள் பொய்யானதாக இருந்துவிட வேண்டும். கர்ப்பிணியாய் இருக்கும் இவளைக் கவலைப்படாமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு. முகத்தில் சிரிப்பினைத் தவழவிட்டேன்.

“சரி உண்மையைச் சொல்லுறனே. டொக்ரர் positive எண்டு சொன்ன உடனே எனக்குப் பயம் வந்திற்றுது. வரேக்குள்ளை ரெண்டுபேரும் motor cycle-இலதானே வந்தம். அது ஏதும் affect பண்ணுமோ எண்டுதான் யோசிச்சுக் கொண்டிருந்தன்”

“சரியான லூசப்பா நீங்க. அதெல்லாம் ஒண்டும் affect பண்ணாது.”

“எண்டாலும் இனி நீர் கவனமாயிருக்க வேணும். கண்டபாட்டுக்கெல்லாம் இனி வேலைசெய்யக்கூடாது”

“அய் பெண்டாட்டியில இவ்வளவு நாளும் இல்லாத பாசம் இப்ப பிள்ளை வருகுதெண்ட உடனே பொத்துக் கொண்டு வருகுது போல”

“ம்ம்ம். அப்பிடியெண்டே வைச்சுக்கொள்ளுமன்”

“பார்ப்பம் பார்ப்பம் வாற பெடியன் அப்பருக்கு எப்பிடியெல்லாம் அலுப்படிக்கிறான் எண்டு”

“என்னெண்டு சொல்லுவீர் இது பெடியனெண்டு? நான் சொல்லுறன் இது பெடியனில்லை” - நாக்கைக் கடித்துக் கொண்டேன்.

“ஏன் கவலைப்படுகிறீங்க? இன்னும் மூண்டு மாசத்தில scan பண்ணினா தெரிஞ்சிரும் தானே?”

“உமக்கு அப்பிடி scan பண்ணிப் பார்க்க விருப்பமா?”

“ஏன் உங்களுக்கு விருப்பமா?”

“எனக்கு விருப்பமில்லை”

“எனக்கும்தான். ஆம்பிளைப்பிள்ளையெண்டான்ன பெம்பிளைப்பிள்ளையெண்டான்ன இது எங்கட பிள்ளை. அது வெளியில வரேக்கை பார்க்கலாம். அப்பத்தான் அதில கூடத் திரில்லிங்கா இருக்கும்”

“Thanks நதீஷா! என்ன பிள்ளையெண்டாலும் அது எங்கட பிள்ளை. ஆனபடியா அது எப்பிடியிருந்தாலும் நாங்க சந்தோஷமா அதை வளர்க்க வேணும். சரியா”

“அதிலயென்ன சந்தேகம் உங்களுக்கு”

“சரி அப்ப வாங்கோ. நான் எங்கடை பிள்ளையைக் கொஞ்ச வேணும்”

“ஆ! ஆசைதான். அதெல்லாம் இப்ப செய்யேலாது”

“நான் பிள்ளையைக் கொஞ்சப்போறன் எண்டுதானே சொன்னனான். வேறையேதுஞ் செய்யப்போறனெண்டு சொல்லேல்லையே”

“வேறையொண்டும் செய்யாமத்தான் இப்ப பிள்ளை வந்ததோ?”

“அட கள்ளி!”

***********

26 December 2002 எங்களுக்கான பட்டமளிப்புவிழா நாள். காலையிலேயே பல்கலைக்கழக வளாகமெங்கும் களைகட்டியிருந்தது. நீண்ட காலத்தின் பின்னர் முதல்தடவையாக வடபகுதியிலிருந்தும் மாணவர்களின் உறவினர்கள் தரைமார்க்கமாக பேராதனைக்கு வரக்கூடியதாக இருந்ததால் பெருமளவிலான தமிர்களும் அங்கே வந்திருந்தனர். குழுக்களாகப் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தவர்களை அணிவகுத்துவரச் சொன்னார்கள். அக்பர் பாலத்தின் கீழாக, இலங்கையின் மிகநீண்ட நதியான மகாவலி நதியினருகாகச் செல்லும் லவ்வர்ஸ் லேன்-ஊடாக எங்கள் அணிவகுப்பு நகர்ந்து கொண்டிருந்தது. இங்கேயும் எங்கள் பதிவிலக்கத்தின் படியே நானும் நதீஷாவும் அருகருகே, 

“நதீஷா! .இப்பத்தான் லவ்வேர்ஸ் லேனுக்குள்ள ரெண்டுபேரும் வாறம் என”

“என்ன செய்யிறது? நீங்க துணிச்சல் உள்ள ஆம்பிளையா இருந்திருந்தா, நாங்க எப்பவோ வந்திருக்கலாம்”

“சொல்லுவீங்கடா! Engagement முடிஞ்சாப்பிறகு ஒருநாள் போவமோ எண்டு கேட்டதுக்கு, டீசன்ற் இல்லை எண்டு சொல்லிப்போட்டு இப்ப இப்பிடிச் சொல்லும்”

“அது அண்டைக்கு. நீங்க அடுத்த நாளும் கேட்டிருக்கலாம் தானே. உங்களுக்கும் பயம் பிறகு கதைக்கிறீங்க. ஆனா பாத்தீங்களா எங்கட பிள்ளை எவ்வளவு துணிச்சல்காரனெண்டு? வயித்திலயிருந்து வெளிய வாறதுக்கு முதலிலேயே அவன் லவ்வர்ஸ் லேனுக்குள்ள வந்திற்றான்.”

“உங்களை.....”

“என்ன உங்களை?”

“வேண்டாம் சும்மா இருங்கோ. பக்கத்திலையெல்லாம் ஆக்கள் இருக்கினம்”

“பக்கத்திலை ஆக்கள் இருக்கேக்குள்ளை சும்மா இருக்கச் சொல்லுறீங்கள். அறிவில்லை?”

“அம்மா தாயே ஆளை விடுங்கோ. ஒழுங்கா convocation-ஐ முடிச்சிற்று வீட்ட போய்ச் சேருவம்”.




பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11 பாகம்-12 பாகம்-13 பாகம்-14 பாகம்-15 பாகம்-16 பாகம்-17 பாகம்-18 பாகம்-19 பாகம்-20 பாகம்-21 பாகம்-22 பாகம்-23 பாகம்-24 பாகம்-25 பாகம்-26 பாகம்-27 பாகம்-28 பாகம்-29 பாகம்-30 பாகம்-31 பாகம்-32 பாகம்-33 பாகம்-34 பாகம்-35 பாகம்-36 பாகம்-37 பாகம்-38 பாகம்-39 பாகம்-40 பாகம்-41 பாகம்-42 பாகம்-43 பாகம்-44 பாகம்-45 பாகம்-46 பாகம்-47 பாகம்-48 பாகம்-49 பாகம்-50 பாகம்-51 பாகம்-52 பாகம்-53 பாகம்-54

4 comments:

  1. வெரென நீயிருந்தாய் வேர் போலவே நீழ்கிறது... அருமை...

    ReplyDelete
  2. அவாவுக்கு இன்னும் தமிழ் வாசிக்கத் தெரியாது என்று புரியுது...

    ReplyDelete
  3. Amazing story telling and enjoyed every bit of it. Looks like you are from E/96 batch. I was on your immediate senior match (E/95) and did Civil. I should know you but could not recognize as you did not list your profile.
    Sathees

    ReplyDelete
    Replies
    1. எனக்கு உங்களைத் தெரியும். உங்களுக்கும் என்னைத் தெரிந்திருக்கலாம்
      velanaivalasu@gmail.com

      Delete