Thursday, February 16, 2012

வேரென நீயிருந்தாய்...(46)

நதீஷா பொலித்தீன் உறையினால் சுற்றப்பட்டவொரு பார்சலை என்னிடம் நீட்டினாள். வாங்கிப் பிரித்தேன். கடித உறையொன்று மேலாகத் தெரிந்தது. எடுத்துப் பார்த்தேன். அதனுள் சில ஆவணங்கள் இருந்தன. எடுத்துப் படித்தேன். அவை எமது வேலணை வீட்டினதும் மற்றைய காணிகளினதும் உறுதிகள். ஆச்சரியத்துடன் அவளை நோக்கினேன்.

“இதுகளெல்லாம் எப்பிடி உங்களிட்ட வந்தது”

“மற்றதுகளையும் பாருங்களன்”

உறுதிகளை ஒரு பக்கம் வைத்துவிட்டு அவள் தந்த பார்சலுக்குள் இருக்கும் மற்றவற்றை நோக்கினேன். ஒரு சிறிய பொதியொன்று காணப்பட்டது. பிரித்தேன். அத்தனையும் அம்மாவினதும் அக்காவினதும் நகைகள். இவையெல்லாம் எப்படி இவளிடம் வந்திருக்கும்? ஒருவேளை அம்மா கண்டிக்கு வரும்போது தன்னுடன் எடுத்து வந்திருக்கக்கூடும். நான் அவற்றைக் கவனிக்காமல் விட்டிருந்திருக்கிறேன். அம்மாவின் செத்தவீட்டில் இவள் அவற்றைக் கவனித்து பத்திரமாக எடுத்து வைத்திருந்திருப்பாளோ?

“எனக்கே இதெல்லாம் இஞ்சையிருந்தது தெரியாது. உங்களுக்கு எப்பிடிக் கிடைச்சது?”

“ஆ! மந்திரத்தால வந்தது. எப்பிடிக் கிடைச்சதெண்டதைப் பற்றி நீங்க ஏன் கவலைப்படுறீங்க? உங்கட things உங்களுக்குக் கிடைச்சாச் சரிதானே?”

“please உண்மையைச் சொல்லுங்க நதீஷா?”

“அப்ப மிச்சத்தையும் பாருங்க”

அவள் தந்த பார்சலைத் துளாவினேன். அடியினில் ஒரு கடிதம் ஒட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது. எடுத்துப் பிரித்தேன்.

என்ரை ஜேன்குட்டிக்கு!

கனக்க எழுத ஆசை. ஆனா ஏலாம கிடக்கு. ஏனெண்டு தெரியேல்ல இந்தக் கடிதத்தை எனக்கு எழுதவேணும் போல கிடக்கு. எனக்கு இப்ப நெஞ்சுக்குள்ளை என்னவோ செய்யுது. இது ஆஸ்மாவால வாற முட்டா எனக்குத் தெரியேல்ல நான் இன்னும் எவவளவு நேரத்துக்கு உயிரோட இருப்பனோ தெரியாது. அதுக்குள்ள உனக்குச் சில விசயங்களைச் சொல்லிப் போடவேணும். நீ சரியான கல்லுளி மங்கனடா. லவ் பண்ணினா அதைச் சொல்லுறதுக்கு துணிச்சல் வேணும். ஆம்பிளைப் பிள்ளையா இருந்து கொண்டு இப்பிடிச் செய்ய உனக்கு வெக்கமாயில்லை. உனக்கொண்டு தெரியுமா? நானும் உன்ரை கொப்பரும் லவ் பண்ணித்தான் கட்டின்னாங்க. நான் ஓமெண்ட உடனேயே உன்ரை அப்பா தங்கட வீட்டில சொல்லிப்போட்டு நேரே வந்து உன்ரை அம்மாப்பாட்டைச் சொல்லிப்போட்டேர். அந்தத்துணிச்சலில ஒரு கொஞ்சம் கூட உன்னட்டை இல்லையெண்டது கவலையாயிருக்கு. நதீஷா சிங்களமெண்டதாலை தான் நீ பயப்பிடுறாய் எண்டு விளங்குது. ஆனா காதல் எண்டு வந்திற்றா இதெல்லாத்தையும் பார்க்கேலாது. முதலில மனிசராயிருக்கவேணும். தமிழ் சிங்களமெண்டிறதெல்லாம் அதுக்குப் பிறகுதான். எனக்கெப்பிடி இதெல்லாம் தெரியுமெண்டு யோசிக்கிறியா? உன்ரை முகத்தைப் பார்த்தவுடனேயே உனக்கு என்ன பிரச்சினை எண்டு எனக்குத் தெரிஞ்சிரும். நதீஷா தான் எனக்கு இப்ப துணையா என்னோட ஆஸ்பத்திரியில நிக்குது. நான் அவளுக்கெண்டு வாங்கின சங்கிலி இதுக்குள்ள இருக்கு. அதை நீயே அவளின்ரை கழுத்தில போட்டுவிடு.
எனக்கு நெஞ்செல்லாம் சரியா வலிக்குது. எனக்கேதும் ஒண்டு நடந்துதெண்டா உன்னை நதீஷா பாத்துக்கொள்ளும். நீ ஒண்டுக்கும் கவலைப்படாம இரப்பன்.

இப்படிக்கு,
அன்புள்ள அம்மா

அம்மாவுக்கு எப்படி இதெல்லாம் தெரிந்திருக்கும்? ஆச்சரியத்தின் எல்லைக்கே போய்விட்டேன். நதீஷாவின் முகத்தை நோக்கினேன் முறுவலித்தாள்.

“அம்மாக்கு எப்பிடி உங்களைப் பற்றித் தெரியும்? உங்களுக்கு எப்பிடி அம்மாவோட பழக்கம்?”

“நீங்க கல்யாணம் கட்ட மாட்டனெண்டு சொன்னதில அம்மாக்கு doubt வந்திற்று. அவா தீபனுக்கு call பண்ணிக் கேட்டிருக்கிறா. அவர் சாடையா என்னைப்பற்றிச் சொல்லியிருக்கிறேர். பிறகு நான் உங்கட வீட்ட ஒருநாள் சாப்பிட வந்தனான் தானே. அண்டைக்கு சாப்பிட வந்த ஆக்களுக்குள்ள நான் மட்டும் தானே பெம்பிளை. அதால அவா என்னோட வடிவாக் கதைச்சவா. அப்ப நான் நல்லாத் தமிழ் கதைச்சதால அவாக்கு நான் ஆரெண்டு தெரியாதாம். அண்டைக்கே அவாக்கு என்னைப் பிடிச்சுக் கொண்டுதாம். பிறகு நான் ஆரெண்டு தீபனிட்டைக் கேக்க அவர் எல்லாத்தையும் சொல்லிப்போட்டேர். அதுக்குப் பிறகு உங்கட அம்மாதான் எனக்கு call பண்ணிக் கதைக்கத் தொடங்கினவா”

“அப்ப இதெல்லாம் தீபனக்குத் தெரியுமா? உங்கட நம்பர் அம்மாக்கு என்னெண்டு கிடைச்சது?”

“தீபனுக்குத் தெரியமா தெரியாதெண்டு எனக்குத் தெரியாது. ஆனா நான் உங்கட வீட்ட சாப்பிட வந்த அண்டைக்கு நான் ஆரெண்டு தெரியாமலே அம்மா என்ரை hand phone நம்பரை என்னெட்ட வாங்கினவா. அதோட நான் தமிழ் எண்டு நினைச்சு உங்களுக்கு கட்டி வைக்க அவாக்கும் விருப்பம் வந்ததாம். உடனே கேக்கிறது சரியில்லையெண்டிட்டுத்தான் கேக்காம இருந்தவாவாம்”

“அப்பையேன் அம்மா இதைப்பற்றி எனக்கொண்டும் சொல்லேல்லை”

“நான் கேட்டன். அவா சொன்னா காதலிக்கிறது நீங்க. அதால நீங்களாவே வந்து சொல்லவேணும். அந்தத் துணிச்சல் உங்களுக்கு வரவேணும். அதால தானும் உங்களை tease பண்ணுறதாவும், என்னையும் உங்களை tease பண்ணச்சொல்லிச் சொன்னவா. உங்களுக்குத் தெரியுமா? நான் எனக்கு proposal ஒண்டு சரிவந்திற்றுது எண்டு சொல்லி ஒருநாள் half day leave எடுத்தன். அண்டைக்கு உங்கட வீட்டபோய் நான் தான் சமைச்சன். நீங்களும் taste ஆ இருக்கெண்டு சொன்னீங்க எண்டு அம்மா சரியான சந்தோஷமாம். ஏனெண்டா நல்ல ருசியாச் சமைச்சுக் குடுத்தா எந்தப் புருஷனும் தன்ரை மனிசியோட சண்டைபிடிக்க மாட்டினமாம். அப்ப நாங்களும் சண்டை பிடிக்காம இருப்பம் எண்டு சொன்னவா”

அம்மா மேலிருந்த மரியாதையும் பாசமும் பன்மடங்கு பெருகின. அப்படிப்பட்ட அம்மாவின் இழப்பை நினைக்கையில் கண்கள் கலங்கின.

“please அழாதீங்க ஜேந்தன். இனி உங்களை நான் நல்லாப் பாத்துக்கொள்ளுவன் எண்டு உங்கட அம்மாக்கும் promise பண்ணிக் குடுத்திருக்கிறன்”

இப்படியான உறவுகள் கிடைக்க நான் என்ன தவம் செய்திருக்க வேண்டும்?

“சரி! நேரமாகுது. விட்டா நீங்க இப்பிடியே இருந்திருவீங்க போலகிடக்கு. எழும்புங்க வெளிக்கிடுவம்.”

எழுந்தேன். அம்மாவின் கடித உறைக்குள்ளிருந்த சங்கிலி நிலத்தில் விழவே, சங்கிலி பற்றி அம்மா எழுதியிருந்ததும் நினைவிற்கு வந்தது. குனிந்து அந்த சங்கிலியை எடுத்தேன். அதில் ஒட்டிக்கொண்ட மண்துகள்களை ஊதினேன்.

“அக்காவின்ரை நினைவிடத்தில இருக்கிற மண்ணும் பட்டபடியா அக்காவின்ரை ஆசீர்வாதமும் இந்தச் சங்கிலிக்குக் கிடைச்சிற்றுது.”

“அப்ப உங்களுக்கு அக்காவில கோபம் வரேல்லையா?”

“உண்மையைச் சொல்லட்டா? உங்கட அம்மா சொல்ல முதலே எனக்கு அந்த dount வந்திற்றுது. ஏனெண்டா முந்தி எனக்கு ஒரு குழப்பம். உங்களுக்கும் என்னில விருப்பம் இருக்கெண்டு தெரியும். எப்பிடித் தெரியுமெண்டு கேக்காதீங்க. ஒரு ஆம்பிளை எங்களோட பழகிறதை வச்சே நாங்க பெம்பிளையள் ஈசியா அதைக் கண்டு பிடிச்சிருவம். ஆனா என்னில விருப்பமிருந்தும் நீங்க ஏன் என்னை லவ் பண்ண hesitate பண்ணுறீங்க எண்டு குழம்பிக் கொண்டிருந்தன். அப்பா செத்தாப் பிறபு வந்த news paper களில வந்த செய்திகளை வாசிக்கேக்க ஒருவேளை அது உங்களட அக்காவா இருக்கலாம் எண்டு நினைச்சன். முதலில கோபம் வந்தது. ஆனா பிறகு உங்கட நிலையிலயிருந்து யோசிச்சுப் பார்த்தன். நானா இருந்தாலும் அப்பிடித்தான் behave பண்ணியிருப்பன். அதால எனக்கு உங்களில வந்த கோபம் போய் லவ் தான் இன்னும் கூடிச்சுது.”

அவளின் பேச்சைக் கேட்கையில் அவளை அப்படியே இறுக்கிக் கட்டித்தழுவ வேண்டும் போலிருந்தது. அடக்கிக் கொண்டேன்.

“நானும் எவ்வளவு நேரமாக் கழுத்தை நீட்டிக்கொண்டிருக்கிறன். சங்கிலியைக் கையில வைச்சுக்கொண்டு என்ன யோசினை?

நீட்டிய அவள் கழுத்தில் அம்மா வாங்கிய சங்கிலியை அணிவித்தேன்.

“மாங்கல்யம் தந்துநானே ந மம ஜீவ ந ஹேது நா கண்ட் டே பத்னாமி சுபகே சஞ்சீவ சரத சதம்”
பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11 பாகம்-12 பாகம்-13 பாகம்-14 பாகம்-15 பாகம்-16 பாகம்-17 பாகம்-18 பாகம்-19 பாகம்-20 பாகம்-21 பாகம்-22 பாகம்-23 பாகம்-24 பாகம்-25 பாகம்-26 பாகம்-27 பாகம்-28 பாகம்-29 பாகம்-30 பாகம்-31 பாகம்-32 பாகம்-33 பாகம்-34 பாகம்-35 பாகம்-36 பாகம்-37 பாகம்-38 பாகம்-39 பாகம்-40 பாகம்-41 பாகம்-42 பாகம்-43 பாகம்-44 பாகம்-45

1 comment:

  1. அருமை.
    என்ன கனகாலமா பதிவை காணேல்ல.
    ஆனா அதுவே அடுத்த பதிவுக்கான எதிர்பாப்பை மேலும் அதிகரித்தது என்னவோ உண்மைதான்

    ReplyDelete