Saturday, June 27, 2009

நீ சொல்லுவ மச்சான்,
“நேற்றுப் போல் இன்று இல்லை. இன்று போல் நாளை இல்லை... ”
பாடல் வரிகளைச் சுமந்தவாறே வந்த காற்று காதில் அறைந்தது.

உண்மைதான் கடந்த சனிக்கிழமை, ஊரிலிருந்து வந்த நண்பன் ஒருவனுடன் மிகவும் பரபரப்பாக் கடந்து சென்றிருந்தது. ஆனால் இந்த சனிக்கிழமை? செல்லவேண்டிய அலுவல்கள் இருந்தாலும், பணியிடத்தில் அறிவிக்கப்பட்டிருந்த சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கருத்திற்கொண்டு எங்கும் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தது அலுப்பாய் இருந்தது. மாலைநேரம் தாண்டித் தொடர்ந்து கொண்டிருந்த உறக்கத்தையும், ஐரோப்பியக் கண்டத்திலிருந்து வந்த உறவினர் ஒருவரின் அழைப்புக் கலைத்து விட்டிருந்தது. வெளியே எங்காவது காற்றாடச் சென்றுவரவேண்டும் போல் இருக்கவே குளித்துவிட்டுப் புறப்பட்டேன்.


இருமலுக்கு யோக்கற் (yoghurt, தமிழல் இதையும் தயிர் என்றே அழைப்பது சரியாய் இருக்குமா?) இதமாயிருக்கும் என்ற அறை நண்பனின் கருத்தை ஏற்றுக்கொண்டு அருகிலிருக்கும் 24 மணிநேர Shop & Save இற்குச் சென்று புதிதாக அறிமுகமாகியிருக்கும் யோக்கற்றுகள் இரண்டு வாங்கினேன். ஒன்றுதான் வாங்க நினைத்தேன், ஆனால் ஒரு யோக்கற் $1.10, இரண்டு யோக்கற் $1.65. எனவே இரண்டாகவே வாங்கிக்கொண்டு அருகிலிருக்கும் பூங்காவை அடைந்தேன். ஒன்றை அருந்தி முடிக்கவே வயிறு போதும் என்றது. ஆனால் நாக்கோ மற்றதையும் கவனி என்றது கண்களைப் பார்த்து. எனக்கும் என் நாக்கிற்கும் இப்போது பெரும்யுத்தம். நாக்கின் சுவையரும்புகள் தங்கள் பணிகளை அளவுக்குமீறிச் செய்துவிட்டிருந்ததுடன் கண்களையும் தங்களுடன் கூட்டுச்சேர்த்து விட்டிருந்தன. நேரம் செல்லச்செல்ல எனக்கான ஆதரவாளர்கள் எல்லாம் எதிரணியுடன் கூட்டு வைக்கத் தொடங்கியிருந்தனர். தனிமையில் “நான்”. என் தோல்வியை ஒப்ப மனமும் விரும்பவில்லைபோல் எனக்குக் கூறியது (அல்லது அப்படி நடித்ததோ தெரியவில்லை). மத்தியஸதம் வகிப்பதாகக் கூறி என் மண்டையைக் கழுவத்தொடங்கியது. விழுந்தும் மீசையில் மண்படாமல் காட்டிக்கொள்வதே இப்போதைக்குப் புத்திசாலித்தனம் என பட்டறிவு வேறு, பாடம் புகட்ட நானும் என் சம்மதத்தை வழங்கினேன். சில வினாடிகள் தாமதித்திருந்தாலும், என் சம்மதமின்றியே அது நிகழ்ந்து விட்டிருக்கலாம் என்பது வேறு விடயம்.


அப்பா! என்ன வல்லமை இந்த நாக்கிற்கு!

இதனால்தான் முன்னோர்கள் எல்லாம் நாவடக்கம் தேவையென்றார்களோ? இத்தனை நாளும் நாவடக்கம் என்பது பேச்சை, வார்த்தைகளைப் பற்றியது என்றே எண்ணியிருந்தேன். “வில்லில் இருந்து விடுபட்ட அம்பும், வாயிலிருந்து விடுபட்ட சொல்லும் திரும்பிப் பெற முடியாதவை.” என்கின்ற பழமொழியோ, “ஒரு பெண்ணின் மூன்றங்குல நாக்கு ஆறடி மனிதனைக் கொல்லும்” என்கின்ற சொல்லாடல்களோ ஏதும் அர்த்தமற்றவையாகவே அப்போது எனக்குப் புலப்பட்டன.

குனிந்து யோக்கற் குவளைகளைப் பார்த்தேன். இரண்டுமே வெறுமையாக...

'இங்கே யோக்கற் குவளைகள் வெறுமையாக'. நான் சிரித்துக் கொண்டேன். Zen துறவிகள் யாரையாவது இந்தக் கணத்தில் சந்தித்துக்கொள்ள முடியுமா?


Zen தத்துவங்கள், ஓஷோவின் நூல்கள் மூலமாகவே எனக்கு அறிமுகமாகியிருந்தன. ஆரம்மபத்தில், என் பதின்மப் பருவங்களில் வாசிப்பதற்கு வேறு நூல்கள் கிடைக்காத பொழுதுகளில் பொழுதைப் போக்குவதற்காகவே அவரின் நூல்களை வாசித்தேன். முக்கியமாக அதில் வரும் சின்னச்சின்னக் கதைகளை மட்டுமே வாசித்துக் கொண்டிருந்தேன். பின்னாட்களில் அவரது கருத்துகள் கொஞ்சம் கொ்ஞ்சமாக விளங்குவது (புரிவது) போலவும் விளங்காதது (புரியாதது) போலவும் விளையாட்டுக் காட்டுகையில் ஆர்வம் பிறந்தது. Zen தத்துவங்களைக் கற்றுக் கொள்ள விரும்புவர்கட்கு அது தனது தத்துவங்களை மிகவும் சிறிய சிறிய கதைகளில் அடக்கி வைத்திருக்கிறது என்கின்ற சூட்சுமம் புலப்பட்டது. பொதுவாக முதலாவது கதையாக அது உங்கள் தேநீர்க் குவளை முற்றிலுமாக நிரப்பப்பட்டிருக்கின்றது என்பதாய்ச் சொல்கிறது. அது, வெற்றுக்குவளையாக வாருங்கள் அப்போதுதான் உங்களை நிரப்பிக் கொள்ள முடியும் என்கிறது. ஏற்கனவே வேறு கருத்துக்களால், கொள்கைகளால் நிரம்பி வழியும் உங்களிற்கு, வார்க்கப்படும் உண்மைகள் வெளியே கொட்டப்பட்டுவிடும் என்பதைச் சொல்கிறது.

பொதுவாகவே உண்மைகள் தர்க்கங்கட்கு அப்பாற்பட்டவையாகவே இருக்கின்றன. அப்படி இருப்பதனால் தான் அவை உண்மையாகவும் இருக்கின்றன என்றே நான் நம்புகின்றேன். தர்க்கிப்புகளின் மூலம் ஒன்றை உண்மையெனக் காட்ட முடியுமாயின் அதே தர்க்கிப்புகளின் மூலமு்ம் அதைப் பொய்யாக்கியும் காட்டலாம்.

ஒரு தடவை ஒரு மதப் பிரச்சாரத் தலைவரும், ஒரு நாத்திகப் பிரச்சாரத் தலைவரும் சந்தித்துக் கொண்டனர். பொதுவாகவே ஆத்திகவாதிகள் என்று தம்மைச் சொல்லிக்கொள்பவர்களும் சரி நாத்திகவாதிகள் என்று தம்மைக் காட்டிக் கொள்பவர்களும் சரி, ஒருவரில் ஒருவர் எதிர்மறையாகத் தொங்கிக் கொண்டுள்ளனர் என்பதே உண்மை. எப்போது அவர்கள் சந்தித்துக் கொண்டாலும் அங்கே தர்க்கம் ஆரம்பித்து விடுகிறது. இங்கே சந்தித்துக் கொண்டவர்களோ தலைவர்கள்! தர்க்கம் மணிக்கணக்கைத் தாண்டி, நாட்கணக்கிற்கு எட்டி எப்படியோ முடிவிற்கும் வந்துவிட்டது. தங்கள் இருப்பிடம் வந்ததும் இருவரும் செய்த முதல்வேலை தங்களின் வாதங்களுக்குச் சான்றாக இதுவரை காலமும் வைத்திருந்த அனைத்தையும் தீயிட்டுக் கொளுத்தியதுடன், இருவருமே தங்கள் கொள்கைகளையும் மாற்றிக் கொண்டார்கள். உண்மை மட்டும் அப்போதும் இருவரையும் பார்த்து மௌனமாய்ச் சிரித்திருக்கும்.

இப்போது மீண்டும் Zen-இற்கே வருவோம். எப்படி இவர்களின் நிரம்பி வழிந்திருந்த குவளைகளிற்குள் மற்றவர்களின் தேநீர் நிரப்பப்பட்டது? பொதுவாக தர்க்க ரீதியில் சிந்தித்துப் பார்த்தால் தேநீரால் நிரப்பப்பட்ட குவளைக்குள் தேநீரை ஊற்றிக்கொண்டே இருந்தால், ஊற்றுவதில் பெருமளவு வெளியே சிந்தினாலும், ஏற்கனவே உள்ளே இருப்பதும் சிறிதுசிறிதாக அகற்றப்பட்டு ஒரு கால அளவையின் பின் புதிதாக ஊற்றப்பட்ட தேநீரே அங்கு செறிவுடன் சேர்ந்திருக்கும். அப்படியானால் ஏன் வெற்றுக் குவளைகளாய் வரச்சொல்கிறார்கள்? ஒருவேளை நீண்ட காலம் செல்லலாம் என்பதாலும், பெருமளவிலானவை விரயமாகிவிடும் என்பதினாலும் இருக்குமோ? அல்லது இப்படியெல்லாம் தர்க்கிப்பதால் எந்த உண்மையையும் அறிந்து கொள்ள முடியாமல் எமது காலமும் வீணாகிவிடுமோ?

சிந்தனையை ஊடறுத்து தன்பக்கம் திருப்பியது, உள்ளூர் நண்பன் ஒருவனின் அழைப்பு. (ஆவணி மாதத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிக்காக, இப்போதே Boonlay யில் நடக்கும் ஒத்திகைகளைப் பற்றிக் கூறுவதற்காக அழைத்ததாகப் பின்னர் அழைக்கையில் கூறியிருந்தான்.) அதே நேரத்தில் இன்னோர் தொலைதூர நண்பனிடமிருந்தும் அழைப்பு வரவே, உள்ளூர் அழைப்பினைத் துண்டிக்க வேண்டிய கட்டாயம். வழமையான அலம்பல்களின் பின்னர், “முக்தியடைய என்ன வழி?” என்கின்ற பதிவைப் பற்றி அலசத் தொடங்கினான். சொல்ல வந்த விடயத்தை பலதடவை தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டிருப்பதாய்க குறைப்பட்டான். பின்னூட்டமிட்டவர்களின் கருத்துக்களிலிருந்து, அவர்களனைவருமே நான் குறிப்பிட்ட கடவுளைப் பற்றியோ அல்லது “முக்தி” பற்றியோ தப்பாகவே புரிந்து கொண்டுள்ளார்கள் என்றான். இல்லையே! சிலர் சரியாகப் புரிந்து கொண்டிருப்பதாய்த்தான் எனக்குப் படுகிறது என்றேன். இல்லை அது Anonymous -கள். அவர்கள்கூட பட்டும் படாமலுமே பின்னூட்டமிட்டிருக்கிறார்கள் என்றான். நான் எனது பின்னூட்டங்களில் கூடுதல் விளக்கம் அளித்திருக்கவேண்டும் என்று குறைபட்டுக் கொண்டான்.

“நீ சொல்லுவ மச்சான், ஆனால் நான் ஊருக்கு அடிக்கடி போறனானடாப்பா.”

Friday, June 26, 2009

மைக்கல் ஜாக்சனுக்கும் எனக்குமான தொடர்பு!

இன்று காலை பணியிடத்திற்குள் நுழைந்ததும் சீன நண்பன், "Did you hear the news?" என விளித்தான்.

"What do you mean?" என்றேன்.

"You know Michale Jakson?"

"Yah, yah, I heared it, because of heart attack. isn't it?"

"Yes la, he is my favourite la" என்றான்.

எனக்கோ மைக்கல் ஜாக்சன் ஒரு பிரபல பொப்பிசைப் பாடகர் என்பதைத் தவிர அவரது இசையல்பங்கள் பற்றியோ அல்லது அவரது நடனஅசைவுகள் பற்றியோ எதுவுமே தெரிந்திருக்கவில்லை. அவரைப்பற்றி இலங்கையில் இருக்கும் போது தினசரிகளில் வெளிவந்த செய்திகள் அப்படியொன்றும் அவர் மீது மதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கவில்லை. மாறாக அவர் ஒரு மனப்பிறழ்ச்சி உள்ளவராக இருப்பாரோ என்ற சந்தேகத்தையே எழுப்பியிருந்தன. சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களைப் பற்றி வேறென்ன பெரிதாக அபிப்பிராயப்பட முடியும்? எனவே எனது சீன நண்பனின் துயரம் குறித்து நான் அதிகம் அலட்டிக் கொள்ளாமல்,

"You know he involved in child abuse" என்றேன்.

"Yes, yes, but you should appreciate his music talent." என்றவாறே அவரது பிரபலமான இசையல்பங்களைப் பற்றி அலம்பத்(?) தொடங்கினான்.

எனக்கு மண்டை காயத் தொடங்கியது. கதையை மாற்றுவதற்காகவும் எனக்கும் மைக்கல் ஜாக்சனைத் தெரியும் (?) என்று அவனுக்கு காட்டவும், "You know he is a black." என்றேன்.

"Yah I know la, he is also சாப்பிட்டீங்களா." என்றான், என்னைப் பார்த்துக் கேலியாக.

அடியடா புறப்படலைல! இவனுக்குத் தமிழ் சொல்லிக் குடுத்தது தப்பாப் போய்ச்சு. (வேலைநேரத்தில் அலுப்பு ஏற்படும் நேரங்களில் அவனுக்குத் தமிழில் உரையாடச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். ஆனால் பின்னாளில் அது தப்பென உணர்ந்து அதை நிறுத்தி விட்டிருந்தேன் அவனது தமிழ்க்கொலைகளைச் சகிக்காமலும், சிலவேளைகளில அவனது உச்சரிப்புகள் தப்பான அர்த்தங்களைக் கொடுத்ததாலும். அவனுக்கு ந,ன,ண சுட்டுப்போட்டாலும் வரவில்லை. விமானநிலையம் என்பதை விமலாநிலம் என்கிறான் ஒன்பது மணி என்றால், ..ப்பது மயி என்கிறான். ஆனால் சாப்பிட்டீங்களா?, குளிச்சீங்களா? என்பவற்றை அறுத்து உறுத்து உச்சரிக்கிறான்)

எனக்கு விவேகானந்தர் தான் உடனே நினைவிற்கு வந்தார். அது அவர் அமெரிக்காவி்ல் பிரபலமாகி ஊர்ஊராய்ப போய் பிரசங்கங்கள் செய்து கொண்டிருந்த காலம். அப்போதும் அமெரிக்காவில் கறுப்பர்கள் பெரும்பாலான இடங்களில் அடிமைகளாகவே நடத்தப்பட்டுக் கொண்டிருந்தனர். ஒருமுறை விவேகானந்தர் இரயில் நிலையத்தால் இறங்கியபோது அவருக்கு வெள்ளையர்களால் அளிக்கப்பட்ட மகத்தான வரவேற்பைப் பார்த்து, அவரை அணுகிய ஒரு கறுப்பினத் தொழிலாளி, உங்களைப் பார்த்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். உங்களால் எம்மினம் பெருமையடைகிறது என்றானாம். அவர் அவனைத் தட்டிக்கொடுத்துவிட்டு வெளியேற, விவேகானந்தருடன் அருகில் நின்றவர் நீங்கள் கறுப்பர் அல்ல. இந்தியர் என்று ஏன் சொல்லவில்லை என்று கேட்டாராம். அதற்கு விவேகானநதர், இதே வெள்ளையரால் எனது நிறத்திற்காக ஆரம்பகாலங்களில் நான் அவமானப்படுத்தப் பட்டிருக்கிறேன். பின் எப்படி நிறவெறியால் அவமானப்படுத்தப்படும் அவனிடம் நான் கறுப்பன் இல்லை என்று சொல்ல முடியும் என்றாராம்.

எனக்கும் கறுப்பர்கள் மேல் குறிப்பாக ஆபிரிக்க கறுப்பர்கள் மேல் ஒருவித மரியாதையும், வெள்ளையர்களால் அவர்களுக்கு இழைக்கப்பட்ட வார்த்தைகளால் வர்ணிக்கப்பட முடியாத கொடுமைகளால் அவர்கள் பட்ட இன்னல்களை எண்ணி ஆழ்ந்த அனுதாபமும் அண்மைக்காலம்வரை இருந்தே வந்தது. ஆனாலும் அண்மையில் ஐ.நா.வில் அடக்கப்பட்ட இனத்தின் பிரதிநிதிகளே, இன்னொரு இனத்தினை அடக்கி அழிப்பதனைத் தடுக்காது அதனை ஆதரிக்கத் துணை நிற்பதைக் கண்ட பின்னர்....

ஆனாலும் ஒவ்வொரு மனிதனின் மரணத்தின்போதும் மனம் ரணப்படத்தான் செய்கிறது.

video

Friday, June 19, 2009

இப்படியும் பூக்கலாம் நட்பு(பூ)


அகதிகள் என்றால் யார்?
என்ன, சிரிப்புத் தானே வருகிறது? “அந்த இனத்தில் இருந்து கொண்டே, என்ன நக்கலா?” என்று நீங்கள் முணுமுணுப்பது விளங்குகிறது (புரிகிறது).

சரி! அனாதைகள் என்றால்?
பெற்றோரை இழந்து நிர்க்கதியாய் நிற்பவர்கள். சரியா?

எங்கள் அனுபவங்களில் அகதிகளாக்கப்பட்டிருக்கிறோம். அனாதைகளாயும் ஆகியிருக்கிறோம் எம்மில் பலர். இருந்தபோதிலும் வாழ்க்கைச் சக்கரம் உருண்டுகொண்டேயிருக்கிறது. இல்லையா? எத்தனையோ கவலைகள், சந்தோஷங்கள், ஏக்கங்கள், ஆதங்கங்கள், எவ்வளவோ வலிகள், இழப்புகள், மரணங்கள், மனரணங்கள் இவ்வளவற்றையும் தாங்கி எது எம்மை வாழவைக்கிறது, என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்?

தாய், தந்தை, சகோதரங்கள், உறவுகள் அனைத்துமே எமது சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்றால் நிச்சயிக்கப்படுகிறது. அல்லது எழுமாற்றாக எமது பிறப்பு அவ்வாறு நிகழ்ந்து விடுகிறது. ஆனால் எம்மால் நிர்ணயிக்கப்படக் கூடியதாக எமது விருப்புவெறுப்புகளுக்கு இசைவானதாக ஒரு உறவை ஏற்படுத்திக் கொள்ள முடியுமானால், அந்த உறவு நட்பாக மட்டுமே இருக்கமுடியும். குடும்ப உறவுகளுடன் பகிர்ந்துகொள்ள முடியாத பல பிரச்சனைகளுக்குக் கூட நட்பு வடிகாலாய் அமைகிறது. என்னைப் பொறுத்தவரை நண்பர்களே இல்லாதவர்கள் பிறப்பிலேயே சபிக்கப்பட்டவர்கள்.

உங்களில் யாருக்காவது உங்களின் முதல் நண்பன் அல்லது நண்பி யாரென்று நினைவிருக்கிறதா? எப்படி அந்த நட்பு உங்களிடையே உருவாகியது என்பது ஞாபகத்திற்கு வருகிறதா? அவருடனான நட்பு இப்பொழுதும் தொடர்கிறதா?

சரி, ஒருவருடன் எப்படி இந்த நட்பு மலர ஆரம்பிக்கிறது. ஒன்றாய்ப் படிப்பவர்கள், ஒன்றாய் வேலை செய்பவர்கள், ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் இப்படியானவர்களிடம் இலகுவில் சினேகம் உண்டாகி விடுகிறது. சில வேளைகளில் ஒரே அமைப்பில் இருப்பவர்களிடையும் தோழமை ஏற்பட்டு விடுகிறது. அல்லது ஒரே தொழிலில் இருப்பவர்களிடையே தொழில் நிமித்தம் பழக்கம் ஏற்பட்டு, பின் அதுவே காலப்போக்கில் நட்பாய் விரிகிறது. இவற்றை விடுத்து, முன்பு பேனா நண்பர்கள், இப்போது மின்நண்பர்கள் (e-friends அல்லது internet friends என்பதற்கு இது சரியான தமிழ்ப்பதமாய் அமையுமா?) போன்றவர்களும் காணப்படுகிறார்கள். இவற்றைவிட வேறு எப்படி ஒரு நட்பெனும் பூ மலரக்கூடும்?வழமையாக நான் பேருந்திலிருந்து இறங்கி வேலைத் தளம் நோக்கிச் செல்கையில், அருகிலிருக்கும் தொழிற்சாலைகளில் இரவுப்பணி முடித்து வீட்டிற்குச் செல்வோரைக் காணக்கூடியதாய் இருக்கும். அதில் சிலமுகங்கள், அட! இது நம்மாளு அப்படியென்று சொல்லக்கூடிய வகையில் எமது நிறத்தில், (குதிரைகள் போல, மகாத்மா காந்திக்கு நன்றி!) இருக்கும். அப்படியான சில முகங்களில் கூட ஒன்றிரண்டே, இது பழகுவதற்கு பிரச்சனையாய் இராது என்று மனதின் ஒப்புதலைப் பெறும். அப்படியான ஒர் முகத்தினை வேலைநாட்களில் தினமும் தரிசிக்கக் கூடியதாய் இருக்கும். அப்படி அந்த முகத்தினைக் காண நேர்கையில் மட்டும் மனம், அட இந்த முகத்தை நேற்றுக் கண்டனான் என்று நினைவுபடுத்திக் கொள்ளும். சில வேளைகளில் அது நேற்றல்ல போன கிழமையாகக்(சென்ற வாரம்) கூட இருக்கக்கூடும். அதைப்பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் மனமந்தி வேறுநினைவுக் கிளைகளுக்குத் தாவி விடும்.

அட! தினந்தோறும் இவரைச் சந்திக்கின்றோமே என்கின்ற எண்ணத்தில், ஒரு நாள் சாடையாய் அவரைப்பார்த்துத் தலையசைத்தேன். அவர் உற்றுக்கவனித்திருந்தால் சிலவேளை தன்னைப்பார்த்துத்தான் தலையசைக்கிறேனோ என்கின்ற சந்தேகம் மட்டுமே ஏற்படும் வகையில் அந்தத் தலையசைப்பு இருந்தது. அவரிடமிருந்து எதுவித எதிர்வினையும் இன்றியே ஏதோ காற்றில் வந்த தூசிக்கு விலத்திய தலையாட்டலாய் அது போய்விட்டது. மறுநாள் காலையில் மீண்டும் முதல்தினத்தை விட சற்று அதிகமாய் தலையசைத்தேன். இது தனக்குத்தானோ என்கின்ற சந்தேகத்திலோ என்னவோ (அல்லது எனக்குத்தான் அப்படி ஒரு பிரமையோ?) என்னை ஒருமாதிரிப் பார்த்துவிட்டு எதவும் நடக்காததுபோல் அவர் சென்றுவிட்டார். எனக்கும் ஒருவித ஆர்வம் வந்தவிட்டது. மறுநாளும் அவ்வாறே. இம்முறை அவருக்கு தன்னைப் பார்த்துத் தான் தலையசைக்கிறேன் என்கின்ற சந்தேகம் வந்திருக்கும். பின் வாரஇறுதி விடுமுறைகளைக் கழித்துவிட்டுச் சென்றதில் அவரைப் பற்றிய நினைவுகளை மறந்து விட்டிருந்தேன். கடந்து சென்ற பின்னர்தான் கடந்த வாரத்து நினைவுகள் மீண்டுவந்தன. பின்னால் திரும்பினேன். அடடா! அவரும் தான். மறுநாள் சாடையாக சந்தேகத்துடன் இருவருமே தலையசைத்தக் கொண்டோம். நாட்கள் செல்லச்செல்ல தலையசைப்புடன் புன்னகைகளையும் பூக்கவிட்டுக்கொண்டோம். ஒருவார்த்தைகூட பேசியதில்லை. இந்தவாரம் முதல் நான்குநாட்களும் அவரைக்காண முடியவில்லை. எனது பயணங்களின் சிலநிமிடநேரத் தாமதங்கள் காரணமாய் இருந்திருக்கக்கூடும்.

இன்று காலையும் சற்றுத் தாமதமாகவே சென்றிருந்தேன். பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வீதியினைக் கடப்பதற்காக நின்ற சமயம், மறுகரையில் அவர். பலமாகக் கைகாட்டி ஹாய் சொன்னார். பதிலுக்கு நானும் கைகாட்டினேன். நான் வீதியைக் கடக்கும் வரை காத்திருந்தவர், அருகில் சென்றதும்,
“you tamil-ஆ?” என்றார்.

“ஆமா! சொல்லுங்க. எப்பிடியிருக்கீ்ங்க?” என்றேன்.

சிறிதுநேர உரையாடலின்பின் நானும் தமிழ்நாடு என்கின்ற நினைப்பில்
“நீங்க பாலக்காடு பக்கமா?” என்றார்.

“இல்லைங்க, நான் யாழ்ப்பாணம்” என்றேன்.

“ஓ! அப்படியா? நீங்க பேசறதப் பார்க்கையிலயே கெஸ் (guess) பண்ணினேன். தப்பா எடுத்துக்காதீங்க” என்றார்.

“பரவால்லீங்க, பாண்டீல கூட நாம தமிழில பேசினா, கேரளாவா? என்னு தான் கேப்பாங்க” என்றேன்

“ஓ! நீங்க, அங்க இருந்திருக்கீங்களா?” என்றவர்,
“எப்படிங்க, இப்ப உங்க ஊரு நிலமை? என்னங்க எல்லாமே இப்பிடியாச்சே! ஆமா, நியூசில சொல்றதெல்லாம் உண்மையாங்க?, உண்மையிலேயே அவரு இருக்காருங்களா? இல்ல இறந்திட்டாருங்களா? முகாமில அடைச்சு வச்சிருக்கிறவங்களையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் பிடிச்சக்கொண்டுபோய் கொல்லுறாங்களாமே?” ஆதங்கத்துடன் அவர் கேள்விகளை அடுக்கத் தொடங்கினார்.

எந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டிவருமோ என்கின்ற தயக்கத்தில், இப்போதெல்லாம் நான் google chat மற்றும் yahoo messanger களில் பிறர் பார்வையினின்றும் மறைந்து (invisible) நிற்கின்றேனோ அந்தக் கேள்விகள் நெஞ்சைப் பிசையத் தொடங்கியது.

என் இனிய தமிழக நண்பர்களே! உங்களைப் போலத் தான் நாங்களும். சில வேளைகளில் எங்களிலும் விட உங்களுக்குத்தான் அதிகம் தெரிந்திருக்கும். அதற்கான வாய்ப்பும், வசதியும், தெரிந்துகொள்வதற்கான தயக்கமின்மையும் உங்களுக்கே அதிகம்.

(இப்போதுதான் அவர் பெயரை நானோ, இல்லை என்பெயரை அவரோ கேட்டுக்கொள்ளவில்லை என்பது நினைவிற்கு வருகிறது. வரும் வாரமும் காலைகள் விடியும் தானே!)

Wednesday, June 17, 2009

முக்தியடைய என்ன வழி?

(இது ஒன்றும் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் நோக்கத்திலல்ல)

காலாதிகாலம் தொட்டே பிறந்தவர் அனைவருக்கும் இறப்பும் உறுதிப்படுத்தப்பட்டே வந்திருக்கிறது. மார்க்கண்டேயர், அசுவத்தாமா போன்றவர்களைச் சிரஞ்சீவிகள் என்று கூறினாலும் இன்றுவரை அவர்களின் இருப்பு உறுதிப்படுத்தப்படவில்லை. எனவே கணிதத் தொகுத்தறிவுக் கோட்பாட்டின் பிரகாரமும் இறப்பு உறுதிப்படுத்தப்படுகிறது. ஆக இறப்பு மட்டுமே நிச்சயப்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்கையில் வாழ்க்கை ஜனனத்திற்கும் மரணத்திற்கும் இடையில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறது.

அப்படியெனில் எதற்காக இந்த வாழ்க்கை? வாழ்க்கையின் இலக்குத்தான் என்ன?

இப்படியான கேள்விகள் எழுந்த போதினில்தான் மதங்கள் உருவாகினவா? சரி மதங்கள் என்ன கூறுகின்றன? முக்தியடையச் சொல்கின்றன. அதற்கான வழிகள் எனச் சிலபல முறைகளையும் கூறுகின்றன. அவ்வாறான வழிகளில் விஞ்சி நிற்பது கடவுளை ஏற்று வழிபடுதலாகும். கடவுளின் அருள்பெற்றால் முக்தியடையலாம் என்று அடித்துச் சொல்லப் படுகிறது.

எனினும் காலந்தோறும் கடவுளர் எனத்தம்மைச் சொல்லிக்கொண்டோ, அன்றி கடவுளரின் தூதர்கள் எனத் தம்மைப் பிரகடனப்படுத்திக் கொண்டோ இப்புவியில் அவதரித்து எம்மை முக்திக்கு அழைத்துச் செல்லும் வரம் நல்குவதாக பலர் உறுதியளித்திருந்தாலும், ஏனோ தெரியவில்லை, இன்னமும் எம்மில் யாரும் முக்தியடைந்ததாகத் தெரியவில்லை. ஆதலால் அந்தக்கடவுளரையும் அவர்தம் தூதர்களையும் புறக்கணித்து விட்டு ஆதிக்கடவுளை நம்பி தவங்கள் மட்டுமே தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டுமாதலால், ஆத்திகர்களுக்கு எதிராய் நாத்திகர்களும் கடைவிரிக்கிறார்கள். இது கலிகாலம் வேறா? இப்போது கடவுளே இல்லை என்னும் நாத்திகவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. கடவுள் உண்டு, அவர் எமக்கு மோட்சமளிப்பார் என்கிற நம்பிக்கையில் தவம் செய்வோரில் பலருக்கும் குழப்பம். அவர்கள் கடவுளை மறுப்போருக்கெதிராக தாமும் கதைக்கத் தொடங்க தவம் கலைந்து போவதைப் பற்றிய கவலை பலருக்கு இல்லாமல் போய்விடுகிறது.

“தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்” என்றவர் தெய்வப்புலவர் வள்ளுவர். ஆக கடவுளால் முடியாதெனினும் தீவிர முயற்சி அறுவடையைத்தரும். எமது தவமோ மோட்சத்தைத் தேடி. அதை அடைவதற்கு இந்துமதம் பல வழிகளைக் கூறி உதாரணபுருஷர்களாய் நாயன்மார்களைப் பட்டியலிடுகிறது.

ஒருதடவை பெங்களூர் சென்றிருந்தபோது அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் (ISKCON) மையத்திற்கும் செலலும் வாய்ப்புக் கிடைத்தது. அதன் ஸ்தாபகர் மறைந்த, பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா அவர்கள் அருளிச்சென்ற சில ஆன்மீக நூல்களை தரிசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. கலிகாலத்தில் மோட்சம் அடைவதற்கு இலகுவான வழி இறைவனின் நாமவளிப் பிரார்த்தனையாகும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இந்து மதத்தில் மோட்சமடைவதற்கான வழிகளில் ஒன்றாக அடியவர் வழிபாடு பற்றியும் சொல்லப்படுகிறது. சமயகுரவருள் ஒருவரான திருநாவுக்கரசர் மேல் பக்தி கொண்டு அதன்மூலமாகவே ஒரு நாயனாரான அப்பூதியடிகளைப்பற்றியும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஊரெல்லாம் நாவுக்கரசர் நாமத்தில் நீர்ப்பந்தல் அமைத்து அடியவர்கள் தாகம் தீர்த்த அவர் பெருமையை அறிந்திருக்கிறோம்.

“தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்...”
-என்றார் சமயகுரவர் நால்வரில் மற்றொருவரான சுந்தரர்.

எனவே நாம் முக்தியடைவதற்கு, கடவுள் இருக்கிறாரா இல்லையா என்கின்ற வாதப்பிரதிவாதங்களை விட்டுவிட்டு கடவுளின் நாமாவளியைப் பாடிக்கொண்டு அல்லலுறும் அடியவர் துயர்தீர்க்கும் வழிபாட்டில் ஈடுபடுவதே இப்போதைய சூழ்நிலையில் சாலச் சிறந்ததாய் இருக்கும்.

Saturday, June 13, 2009

எக்ஸ்கியூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி!

நீண்டநாட்களுக்குப் பின்னர், நேற்றைய முன்னிரவு தொடரூந்து (இரயில்/MRT) பயணத்தின் போது IPod இனையும் என்னுடன் எடுத்துச் சென்றிருந்தேன். போகிற இடத்தில் பொழுது போகத் தேவைப்படலாம் என்கின்ற எண்ணத்தில் (அது தேவைப்படவில்லை என்பது வேறுவிடயம்). பொதுவாக செய்திகளையும் வானொலி நிகழ்ச்சிகளையும் கேட்பதற்காக கைபேசியினையே (Mobile Phone) பயன்படுத்துவது வழக்கம். தொடரூந்து Lavender நோக்கி நிலக்கீழ்ச் சுரங்கத்தினுள் செல்ல, வானொலி இணைப்புத் துண்டிக்கப்பட IPod-இனை அணிந்து(?) கொண்டேன். City Hall இல் மறு தொடரூந்திற்கு மாறுவதற்கு காத்திருக்கையில், “அமுதமழை பொழியும் முழு நிலவிலே, ஒரு அழகுச்சிலை உடல்முழுதும் நனைந்ததே...” பாடல் ஆரம்பித்தது. மிகமிக நீ...ண்ட நாட்களுக்குப்பின்னர் அந்தப்பாடல் செவிக்கினிமை தந்தது.

சின்னவயதில் சில பாடல்கள் காரணம் தெரியாமலேயே மனதில் தங்கி விடுகிறது. அர்த்தம் புரியாமலேயே அதனை அடிக்கடி முணுமுணுத்தும் கொள்கிறோம். அதனை அடிக்கடி மனம் மீண்டும் கேட்கையில் அதுவும் அதன் அர்த்தம் புரிந்து கேட்கையில் அதன் இனிமை மேலும் கூடிவிடுகிறது. வானொலியில் நான முதன்முதலாய்க் கேட்ட பாடல் எதுவென்று நினைத்துப் பார்க்கிறேன். “மீன்கொடித் தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான்...” என்பது தான் ஞாபகம் வருகிறது. அந்தக் காலத்தில் அனேகமாக தினமும் காலையில் ஒருதடைவையாவது இந்தப்பாடல் இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்டிருக்கும் என்றே நினைக்கின்றேன்.

நேற்றைய மதியநேர உணவின்போது மின்னல் F.M. நிகழ்ச்சியினைச் செவிமடுத்துக் கொண்டிருக்கையில், அறிவிப்பாளினி ஒரு நேயருடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் “புதிய பாடல்கள், முதற்தடவை கேட்கும் போது அவ்வளவு இனிமையாய் இராது என்றும் சிலமுறை கேட்ட பின்னரே அவற்றை இரசிக்கத்தோன்றும்.” என்றார். உண்மைதான்! பெரும்பாலான பாடல்கள் அப்படித்தான். முதல் தடவையிலேயே எமக்குப் பிடித்தமானவையாக அமைந்து விடுவதில்லை. ஆனாலும் ஒரு சில பாடல்கள் விதிவிலக்காக அமைந்து விடுவதும் உண்டு. அப்படி எனக்குப் பிடித்த இரண்டாவது பாடல்தான் விக்ரம்-இன் நடிப்பில், கந்தசாமி படத்தில் இடம்பெற்ற “எக்ஸ்கியூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி...”
[அப்பாடா! தலைப்பிற்கும் பதிவிற்கும் சம்பந்தம் வந்துவிட்டது :-). இப்போதெல்லாம் சில விடயங்களை நேரடியாகச் சொல்லாவிட்டால் நீங்கள் வேறு எதையாவது அர்த்தம் செய்து விடுவீர்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. இது முற்றுமுழுதாக தமிழ்த்திரை பற்றிய ஒரு பதிவே.]

இன்று காலை Vijay TVயில் திண்டுக்கல் லியோனி அவர்களின் தலைமையில் “அந்தக்காலம் Vs இந்தக்காலம்” நிகழ்ச்சியினைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. Remote Control என் கையில். அத்துடன் நான் மட்டுமே நிகழ்ச்சியினைப் பார்த்துக் கொண்டிருந்தேன். புரிந்திருக்குமென்று நினைக்கிறேன். ஆமாம்! சமாந்தரமாக Sun TVயில் அர்ஜூன் நடிப்பில் “ஆணை” படமும். வைகைப்புயலின் நகைச்சுவை முடிய Vijay TVயிற்கு மாற்றிய போது “லஜ்ஜாவதியே...” பாடலைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அதில் இடையிடையே வருகின்ற விளங்காத (புரிந்துகொள்ள முடியாத) வசனங்களிற்கு லியோனி அவர்கள் தன் நகைச்சுவைப் பாணியில் விளக்கமளித்துக் கொண்டிருந்தார். முதலிலேயே சொல்ல மறந்துவிட்டேன், செவிமடுத்த முதற்தடவையிலேயே எனக்குப் பிடித்துவிட்ட முதலாவது பாடல்தான் இந்த “லஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே...”. உண்மையைச் சொல்லப்போனால் அந்தப்பாட்டின் அனேகமான வரிகள் எனக்கு நினைவில் இப்போது இல்லை. ஆனாலும் எதனால் அந்தப்பாடல் என்னைக் கவர்ந்திருக்கும் என்று இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

மலைநாட்டில், அது ஒரு மாலை மங்கி இருள் கவியும் நேரம். சிலமாத கால இடைவெளியின் பின் சொந்த ஊர் பிரிந்த பின் நீண்டகாலம் வாழ்ந்து வளர்ந்த இடத்திற்கு, வேறொரு அலுவல் நிமித்தம் சென்ற போது நண்பர்களிடம் வந்திருந்தேன். வெளியே வழமை போல் “கண்டி மழை” தூறிக்கொண்டிருந்தது. நண்பர்களில் ஒருவன் திரைப்படங்களில் மிகுந்த ஆர்வம் உள்ளவன். அப்போது புதிதாய் வந்திருந்த படங்கள் பற்றி உரையாடுகையில் “4 ஸ்ருடன்ற்ஸ் ” (மலையாளத்தில் “போர் த பீப்பிள்” [for the People] என வெளியாகியிருந்த படம் தமிழில்) பற்றி சிலாகித்தான். சினிமா பற்றிய எனது அறிவு மிகமிகக் கம்மி. அவன் சொல்வதைப் பற்றி அலட்டிக் கொள்ளாதது போல் பாவனை செய்தாலும் உள்ளுக்குள் அவனை வியந்துகொண்டிருந்தேன். நான் அறிந்தவரை இயக்குனரிற்காகப் படம் பார்ப்பவன் அவன் மட்டுமே. பின் படம் பார்க்க ஆரம்பித்தோம். முதலில் அவ்வளவு விறுவிறுப்பாக இல்லாவிட்டாலும் போகப்போக படம் சூடுபிடித்தது. அந்த நான்கு மாணவ்ர்களும் அரசியல்வாதியின் கொடுமைகளிலிருந்து மக்களைப் பாதுகாக்கவும் சமூகவிரோதிகளை அழிக்கவும் தமதுயிரைப் பணயம் வைத்து ஈடுபடுவதும் பின் கிளைமாக்சில் (உச்சக்கட்டம் என்பது சரியான தமிழ்ப்பதமாய் அமையுமா? தெரிந்தவர்கள் சொல்லலாமே!) இறுதி வில்லனை அழிக்கும் முயற்சியில் வெற்றி பெறாமலேயே அவர்கள் அனைவருமே உயிர்துறக்க நேர்வதும், அட ச்சே! என்று ஏற்றுக்கொள்ள மனது கஷ்டப்பட்டு சலிப்புத் தோன்றுகையில்..... அடுத்து இயல்பாகவே இடம்பெறும் நிகழ்வு...இயக்குனரைப் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. நியாயமான எந்தவொரு போராட்டமும் அதன் இலக்கை அடையாமல் முடிந்துவிடுவதில்லை. போராட்டக்காரர்கள் அழிக்கப்படலாம், ஆனால் போராட்டத்திற்கான காரணி இருக்கும் வரையில் போராட்டக்காரர்களும் புதிது புதிதாய் எழுவார்கள். இதனை யாராலும் தடுக்க முடியாது என்பதை மிகத் தெளிவாக தனது படத்தினூடு பார்வையாளருக்குப் புகட்டிய அநத இயக்குனரை என்ன சொல்லிப் பாராட்டுவது? இந்தப்படம் தான் முதன்முதலாக ஒரு படத்தின் வெற்றிக்கு இயக்குனரே ஆணிவேராக அமைகிறார் என்பதை எனக்கு உணர்த்தியது.

Wednesday, June 10, 2009

எனது மரண அழைப்பிதழ்

அன்புடையீர்!

நித்தம்நித்தம் இவ்வாழ்க்கை
நித்தியமென்ற நினைவினில்
நாளிகைகளைக் கழித்தவொரு
விடுமுறைப் பொழுதினில்,
மரணதேவன் எனை
அரவணைக்கவிருப்பதை
அறிவித்துச் சென்றான்.

இன்றோ, நாளையோ,
நாளை மறுநாளோ,
இல்லை இன்னும்சில
யுகங்கள் கழித்தோ
எனக்கான மரணம்
நிச்சயிக்கப்பட்டு விட்டது.

அரவம் கொத்தியோ, இல்லை
கொத்துக் குண்டுகளால் சிதறுண்டோ
என் அரவம் இல்லாமல் போகலாம்.

காக்கிச்சட்டைக் கைதினாலோ, இல்லை
வெள்ளைவான் கடத்தலினாலோ
நான் காணாமல் போகப்படலாம்.

பன்றிக் காய்ச்சலிலோ, அன்றி
பறவைக் காய்ச்சலிலோ
படடென்றென்னாவி பறிக்கப்படலாம்.

யாருக்குத் தெரியும்? இல்லை
இப்படியில்லை என்றொருமுறையில்
நான் இறந்துவிட்டிருக்கலாம்.

எது எப்படியோ எனக்கான
உறுதிப்படுத்தப்பட்ட இறப்பு
அதிர்ஷ்டவசமாய் முன்கூட்டியே
அறிவிக்கப் பட்டிருக்கிறது.

செத்துவிடமுன் செய்துவிடவேண்டியவை
சித்தத்தில் சிந்தனையாய் சீறியெழுகிறது.
காலம் போதுமோ? ஞாலம் தாங்குமோ?

புவியெனக்கிட்ட கடைமைகளை
நிறைவாகச் செய்வேனோ? -இல்லை
செவிகேளா மனிதனாய்க்
குறைகேட்டு நிற்பேனோ?

புண்படுத்திய உள்ளங்களை
மயிலிறகாற் தொடுவேனோ?-பின்
பண்பட்ட அவர்மனதால்
மன்னிப்பைப் பெறுவேனோ?

சத்தியமாய்ச் சொல்கிறேன்,
என்ன நடக்குமென்றோ
எது நடக்குமென்றோ
நடுக்கமில்லை எனக்கு.

இறப்பின் அழைப்பினை
ஏற்றுக் கொண்டதனால்
அழைப்பு விடுக்கிறேன்
அன்புடையீரே!

எப்போதேனும் ஒருதடவையிதை
நீங்கள் வாசிக்கும் கணத்தினில்
காலனுடன் நான்
கைகுலுக்கிக் கொண்டிருக்கக்கூடும்.

அப்போது உங்களுக்கெல்லாம்
அழைப்பனுப்பிக்கொண்டிருப்பது சாத்தியமில்லை.
ஆதலினால், இத்தால் சகலமானவரும்
இவ்வழைப்பை ஏற்றுக்கொள்வீர்களாக!

Tuesday, June 9, 2009

தினந்தோறும் மனதோடு தினவெடுக்கும் நினைவுகள்.

நேற்றைய நினைவிலும்
நாளையின் கனவிலும்
இதோ இந்தக் கணம்
கரைந்து கொண்டிருக்கிறது.

மரணங்கள் பற்றிய
பிரக்ஞையின்றியே
பிரேதங்களின் பின்னால்
பவனி வருகைகள்.

இத்தனை நடந்தபின்பும்,
நிலவுகூட வளர்ந்தும்தேய்ந்தும்...
காற்றுக்கூட வீசாமலில்லை
கடல்கூட மூசாமலில்லை

எவன் எக்கேடுகெட்டால்
எனக்கென்ன என்றவாறே
சுட்டெரித்துக் கொண்டு
சூரியனும் அஸ்தமித்துவிடுகிறது.

நிரந்தரமானது இக்கணமேயெனினும்
நாளையைப் பற்றிப் பேசிப்பேசியே
நாக்கலுத்துப் போகிறது. யாருக்குத் தெரியும்
நாளையப்பொழுதிற்கு நானிருப்பேனா?