Thursday, May 29, 2014

ஒரு கவிதையின் ஜனனம்


விடலைப் பையனின்
விருப்பக் கனவாய்
அது வந்து என்னிடம் 
தன்னை வனையச் சொன்னது.

அதற்கானவென் சொற்களை
என்றைக்கோ நான் 
கண்கூசும் சூரியவிருட்டில் 
தொலைத்துவிட்டிருந்தேன்

மிகச்சரியான அந்த
ஒற்றை இழையின்றி
யாரால் இயலும்
ஒருகவிதையை நூற்க?

சுரோணிதம் சேராத 
சுக்கிலமென தனக்கான
வார்த்தைகள் இல்லாததால்
வதங்கி அழுதது.

வெளிச்சமில்லாப் 
பெருவெளிகளிலதன்
விசும்பலால் என்னுள் 
மோக விதும்பல்

இறுக்கமாய் நோற்ற
இந்திரிய விரதத்திலும்
கனவின் ஸ்கலிதமென
கசிகிறது இக்கவிதை!