Saturday, February 27, 2010

கடவுளின் வரத்தைப் புறக்கணித்தவன்


அது அவனுக்குள் நிகழ்ந்த போது அவன் பால்ய வயதிற்குள் போயிருந்தான். பதின்மம் வராத பருவம் அது. வீட்டு முற்றத்தில் அதே பருவத்தைச் சேர்ந்தவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அது வேறு பாடசாலைகளில் இல்ல விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலம். ஆதலினால் அயல் வீட்டுச் சிறுவர்களும் இணைந்து தங்களுக்குள் அவர்கள் பிரிந்து விளையாடிக்கொண்டிருந்தனர். உயரம் பாய்தல் அவனுக்குக் கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. பாடசாலையில் படிக்கும் வேறொரு மாணவனின் திறமையைப் பற்றிய சிலாகிப்பு வந்தது. அப்படியே காற்றில் பறந்து மிதந்து வருவது போன்றான அவனின் ஸ்ரைல் வியப்பூட்டுவதாய் இருந்தது. அது அவனுக்கு ஒரு கோழியினை நினைப்பூட்டியது.

சில வருடங்களுக்கு முன்னர் அந்த நிகழ்ச்சி நடைபெற்றிருந்தது. அப்போது அவனது வீட்டில் கோழிமுட்டை அடைவைத்திருந்தார்கள். ஒவ்வொரு நாளும் பள்ளிக்குச் செல்லும் முன்னும் பள்ளியால் வந்த உடனேயும் ஓடிச்சென்று குஞ்சு பொரித்து விட்டதா என்று பார்ப்பதே அவன் வாடிக்கை. குஞ்சுகள் ஒவ்வொன்றாய்க் கோதுடைப்பதைக் காண்கையில் அவனுக்குள் ஒரு ஆனந்தப் பரவசம். கைகளையும் கால்களையும் உதறிக் குதித்துக் குதூகலிப்பது அவனது ஆனந்தத் தாண்டவம். சில நாட்களிலேயே அந்தக் குஞ்சுகளைக் கைகளால் அளைவதும் அவற்றை அள்ளிக் கன்னத்தோடு வைத்துக் கொஞ்சுவதும் அவனுக்குள் இன்ப ஊற்றுக்களைக் கிளறிவிடும் சுகானுபவங்கள். ஒரு மதியம் தாண்டிய வேளையில் அவன் வெளியிலிருந்து உணவருந்திக்கொண்டிருந்த வேளையில்தான் அந்த சம்பவம் நிகழ்ந்தது.

கோழிக்குஞ்சுகள் சற்றே வளர்ந்திருந்ததால் அவற்றினை காகங்களால் தங்களின் அலகுகளால் கொத்திக் காவிச்செல்ல முடியாத காரணத்தினால் அந்தக் குஞ்சுகள் தாய்க்கோழியுடன் சுதந்திரமாக உலவிக்கொண்டிருந்தன. எங்கிருந்தோ சட்டென காற்றை சிலாவிக்கொண்டு வந்த பருந்தொன்று தன் கால்களினால் ஒருகுஞ்சினைப் பற்றிக் கொண்டு பறக்க எத்தனித்த போதுதான் தாய்க்கோழி தாவிப்பாய்ந்து பருந்தைத் தாக்கியது. எதிர்பாராது ஏற்பட்ட அமளியில் அங்கே நின்றிருந்த நாயும் பருந்தின் மீது பாயவே பருந்து பயந்து போயிருக்க வேண்டும். கால்களிலிருந்து குஞ்சினை நழுவவிட்டுவிட்டுத் தப்பித்துக் கொண்டது. இருந்தும் கோழி விடுவதாயில்லை. தன் சிறகுகளை அடித்தடித்துப் பறந்து பறந்து பருந்தினை அந்த இடத்தை விட்டுத் துரத்துவதிலேயே குறியாய் இருந்தது. அதற்கு முன்னர் கோழிகள் அவ்வளவு உயரத்திற்குப் பறந்து அவன் பார்த்ததில்லை. இரவில் கோழிகளை வாதனாராணி மரத்தின் கிளைகளில் படுக்க விடுவதற்கே அவை ஒவ்வொரு கிளைகளாய் தாவித் தாவி ஏறுவதை வேடிக்கை பார்த்திருக்கிறான்.

அந்தக் கோழிபோல் தன்னாலும் பறக்க முடிந்தால் எப்படியிருக்கும்? அவனது நினைப்பை மற்றைய பையன்களின் கூக்குரல் கலைத்தது.

“டேய் உன்ர முறை. ஓடி வந்து பாய்.”

“இவனால இந்த உயரத்தைப் பாய ஏலாது.”

அவன் உயரம் பாய்வதற்காக கட்டி வைக்கப்பட்டிருந்த கயிற்றினைப் பார்த்தான். அவனால் அதைத்தாண்ட முடியாது என்றே அவனும் நினைத்துக் கொண்டான். இதற்கு முதல் இதிலும் சற்றுக் குறைந்த உயரங்களையே அவனால் தாண்ட முடிந்ததில்லை. ஆகவே அதைத் தாண்டுவதற்கு தான் தகுதியற்றவன் என்றும் அவன் நம்பத் தொடங்கினான்.

“நான் வரேல்ல. நீங்க விளாடுங்கோ” - அவன் பின்வாங்கி வீட்டீற்குள் நுழைய முற்பட்டான்.

மற்றவர்கள் கேலிபண்ணத் தொடங்கினார்கள்.

“அந்தக் கதைப்புத்தகத்தில வந்த முனிவரைப் (சித்தரை) போல நீயும் தவம் செய்து பறக்கிற வரம் வாங்கிக் கொண்டு வந்தாத்தான் இனி எங்களோட உன்னைய விளாடச் சே(ர்)ப்பம்”.

அவனுக்கு அழுகைஅழுகையாக வந்தது. அந்தப்புத்தகத்தில் வந்த முனிவரைப் போல தன்னால் காற்றில் நடந்து பறந்து திரிய முடியாதா? தவிப்பாயிருந்தது. மனதின் ஒரு மூலைக்குள் உன்னாலும் முடியும் என்றொரு குரல் கேட்டது. வீட்டிற்குள் நுழைந்தவன். திரும்பி வந்தான்

“இஞ்ச விடுங்கோ! நானும் பாய்வன்.”

அவன் ஓடிவந்து ஒரு காலை உயர்த்தினான். அவன் அப்படித்தான். இரண்டுகால்களையும் ஒரே நேரத்தில் ஒன்றாக உயர்த்திப் பாய்வதை அவன் கற்றிருக்கவில்லை. உயர்த்தி வைத்தகாலினை அப்படியே அந்தரத்தில் வேறோ எதுவொன்று தாங்கிப்பிடிப்பதாய் அவன் உணர்ந்தான். படியில் ஏறுவது போல் அவன் மற்றைய காலையும் தூக்கி இன்னும் ஒருபடி உயரே வைத்தான். மற்றவர்கள் அவனை விப்புடன் பார்ப்தை அவனால் அவதானிக்கக் கூடியதாய் இருந்தது.

ஆம். இப்போது அவனால் காற்றுவெளியில் ஏறிச்செல்லக்கூடியதாகவிருந்தது. அவன் இன்னுமொருபடி மேலே ஏற, மற்றையவர்கள் “ஐயோ! பேய்ய்........” என்று அலறியடித்துக்கொண்டே அந்த இடத்தை விட்டு ஓடிக்கொண்டிருந்தார்கள்.

அவர்களின் கூக்குரலைக் கேட்டதும் அவனுக்குள்ளும் அச்சம் துளிர்விடத் தொடங்கியது. அவன் இறங்குவற்கு எத்தனித்தான். முடியவில்லை. அவனால் கால்களால் நிலத்தை நோக்கி இறக்கமுடியவில்லை. அவன் எத்தனிக்கும் ஒவ்வொரு முறையும் அவன் மேலே மேலே போய்க்கொண்டிருந்தான்.

அவன் மிகவும் பயந்து விட்டான். ஏதோவொன்று அவனை மேல்நோக்கி ஈர்த்துக் கொண்டிருந்தது. இப்போது அவன் வீட்டின் சீலிங்கின் உயரத்தை அடைந்து விட்டிருந்தான். அவன் அலறினான் யாரையாவது உதவிக்கு வரும்படி. யாரையும் காணோம். அவன் ஒருவாறாக தன்னைச் சமாளித்துக் கொண்டு வெளியே நீட்டிக்கொண்டிருந்த சீலிங்கிற்கும் கூரைக்குமிடையில் தன்னை நுழைத்துக் கொண்டான். தான் ஒருவாறாக தப்பிவிட்டதாக அவனுக்குள் எழுந்த நினைப்பினைப் பொய்யாக்கி கூரை உடைந்து விடுமாற் போல் ஆடிக்கொண்டிருந்தது. கூரையின் மீதான நம்பிக்கையினை இழந்து விட்டதன் பின்னர் அவன் வேறொரு பலமான ஒரு பொருளைத் தேடத் தொடங்கினான். சற்றுத் தள்ளியிருந்த முற்றத்து வேம்பு கண்ணில் பட்டது. அந்த வேம்பில் ஊஞ்சல் கட்டி ஆடுவது அவன் நினைவிற்கு வந்தது. ஊஞ்சல் ஆடுவது அவனுக்கு மிகவும் பிடித்த செயல். அதில் அவன் தன்னை மறப்பதுண்டு. ஊஞ்சல் ஆடும் அந்த வேப்பமரத்துக் கிளை மிகவும் பலமானதென்று பெரியவர்கள் சொல்ல அவன் கேள்விப்பட்டிருக்கின்றான். காலினைப் பக்கவாட்டில் உதைத்துத் தாவி அவன் அந்த வேப்பமரக் கிளையினைப பற்றிக் கொண்டான். அங்கிருந்த புறாக்கள் வெருண்டு விர்ரென்று சிறகடித்து சற்றுத் தூரத்திலிருந்த தென்னைமரங்களில் அமர்ந்து கொண்டன. அவனுக்கு நிம்மதியாக இருந்தது.

ஆயினும் மேல்நோக்கிய ஈர்ப்பு விசை அதிகரிக்கத் தொடங்கியது. அவனுக்குள் பீதி கிளம்பியது. உதவிக்கு யாரையும் காணவில்லை. அங்கும் இங்குமாய்த் தலையைத் திருப்பிப்பார்த்தான். தென்கிழக்கு மூலையில் முருகன் கோவிலின் விமானம் தெரிந்தது. அவன் முருகனின் நாமத்தை உச்சரிக்கத் தொடங்கினான். மறுபடி மறுபடி ஓம் முருகா என்று உச்சரித்துக் கொண்டிருக்கையில் அவன் நாக்குகுழறத் தொடங்கியிருந்தது. இப்போது அந்த உச்சரிப்பு 'ம்...கா' என்று மருவியிருப்பதை அவன் உணர்ந்தான். அதைத் திருத்த முயற்சிக்க 'கா' 'வா'-வாகி விட்டிருந்தது. அந்த 'ம்...வா' இப்போது 'ம்...ச்வா' வாக மாறி மருவிப் பின் 'சிவா'-வாவி விட்டிருந்ததை அவன் உணர்கையில் அந்தக்குரல் அவனுக்குள் ஒலித்தது.

“நான் கடவுள் வந்திருக்கின்றேன். உனக்கென்ன வரம் வேண்டுமோ கேள்'

அவனுக்கு அதிர்ச்சியாயிருந்தது. அவன் கடவுளை அங்கு எதிர்பார்த்திருக்கவில்லை. அத்துடன் அவனால் அந்தக் குரலையும் நம்பமுடியாதிருந்தது. தன்னை மீண்டும் ஒருமுறை பார்த்துக் கொண்டான். இப்போது இவன் சிறு பராயத்தினன் அல்ல. அவன் தன் தற்போதைய நிலையை அடைந்திருந்தான். ஆயினும் வேப்பமரத்திலேயே தொங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தான். எப்போது அந்த மாற்றம் நிகழ்ந்தது என்பதை அவன் உணரத் தவறியிருந்தான். இப்போது அவன் கடவுளை அலட்சிப்படுத்தத் தொடங்கினான். அந்தக் குரல் அவன் செவிக்குள் மீண்டும் ஒலித்தது. தான் கேலி செய்யப்படுவதாய் அவனுக்குள் சினம் கிளர்ந்தது. “உன்ர வரமும் பூனாவும். என்னைக் கீழே போகவிடு”.

“உன்னை விடுவதாயில்லை. நன்றாக யோசித்துவிட்டுச் சொல்”. இப்போது தன்னருகிலிருந்து ஏதோவொன்று விலகுவதை அவனால் உணரமுடிந்தது. அவனைத் தாங்கியிருந்த அந்த வேப்பங்கிளை மரத்தை விட்டு அவனுடன் சேர்ந்து மேலே கிளம்பத் தொடங்கியிருந்தது.

இப்போது என்ன வரம் கேட்கலாம் என்கின்ற சிந்தனை அவனுக்குள் எழுந்தது. தனக்கு எதுவும் தேவையில்லை. அப்படிக் கேட்பது சுயநலம் என்று எண்ணிக்கொண்டான். தன் உறவுகளுக்காகக் கேட்பதும் சுயநலமே என்றது மனது. நட்புக்களுக்காகக் கேட்கலாமா? அப்படியானால் எந்த நட்புக்காக் கேட்கலாம் என்று குழம்பிய மனது அதுவும் சுயநலத்துடன் சம்பந்தப்பட்டதே என்றது. சரி. என் இனத்திற்காக கேட்கலாமா? ஒரே வரத்தில் என்னினம் மீட்சிபெறமுடியுமாறு கடவுளை மடக்க முடியுமா? அவன் தன் வரத்தினூடாக கடவுளை மடக்குவதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தான்.

எது என் இனம்? அவனுக்குள் குழப்பம் உண்டாயிற்று. என்னினம் தனக்குள்ளேயே அடிபடுகிறதே, என்று கவலைப்படுகையில் சற்றே கீழே குனிந்து பார்த்தான். இப்போது அவன் மிக உயரத்திற்கு வந்துவிட்டிருந்தான். தன்னினம் பற்றிய நினைப்பு மறந்து உலகத்தைப்பற்றிய நினைப்பு உண்டாயிற்று. போரற்ற, வறுமையற்ற, அமைதியான, சந்தோசமான உலகை அவன் நினைக்கத் தொடங்கினான். பூரிப்பாயிருந்தது. தான் சார்ந்த உலகிற்கு தன்னால் ஏதாவது செய்ய முடியும் என்று பரவிய சந்தோசம் சற்று நேரத்திலேயே கலைந்தது. இப்போது பூமிப்பந்து ஒரு கால்பந்தளவில் அவன் கண்களுக்குத் தெரிய அவன் மேலும் மேலும் மேலே போய்க் கொண்டிருந்தான்.

இப்போது பிரபஞ்சம் பற்றிய நினைப்பு அவனுக்குள் எழுந்தது. அவன் வசித்துவந்த பூமிப்பந்து ஒரு புள்ளியாய்த் தெரிய அவனுக்கான உலகில் அவன் விரிந்து கொண்டேயிருந்தான். ஒரு நிலையில் அவனுக்கு எல்லாமே மங்கலாகி மண்ணிறமானவொரு மலைப்பாங்கான பிரதேசம் தென்பட்டது. யாரும் ஏன் எதுவுமே தென்படவில்லை. மரங்களில்லை புற்களில்லை. அதுவொரு சுடுகாடாய்த் இருக்கக்கூடுமென அவன் ஊகிக்கத் தொடங்கினான். எரிந்த பிணங்களின் எஞ்சிய எலும்புத்துண்டுகள் ஆங்காங்கே பரவிக்கிடப்பதாய் உணர்ந்தான். தன்னுடலைப் பார்த்தான். காணவில்லை.

உண்மையாய்த்தான். அவனால் அவன் உடலைக்காண முடியவில்லை. இப்போது அவன் உருவற்றிருந்தான். தான் எங்கிருக்கின்றேன் என்றே அவனால் உணரமுடியவில்லை. இப்போது அவனுக்குப் பயம் வரவில்லை. ஏன்? பதட்டம் கூட வரவில்லை. அப்போதுதான் தான் உணர்வகளும் இழந்திருப்பதாக அவனுக்குப்பட்டது. மகிழ்ச்சியில்லை. வெறுப்பில்லை. சலிப்பில்லை. காதலில்லை. காமமில்லை. ஏன்? இதுவரை காலமும் அவன் அனுபவித்த எந்தவொரு உணர்வுகளுமின்றி அவன் சும்மாயிருந்தான். இப்போது அவன் தன்னைத் தேடத் தோடங்கினான். அவனால் அவனைக்காண முடியவில்லை.

அங்கிருக்கும் ஒவ்வோர் அணுக்களிலும் அவன் இருப்பதாயும் இல்லாமலிருப்பதாயும் ஒரே சமயத்தில் அவன் உணர்ந்தான். தன்னைத் தேடுவதைத் தவிர்த்து அப்படியே சும்மாவிருக்கத் தொடங்கினான். எவ்வளவு நேரம் அப்படியேயிருந்தான் என்பது அவனுக்கச் சரியாகத் தெரியவில்லை. அதுவொரு கணப்பொழுதாகவும் இருந்திருக்கலாம். இல்லை பலகோடி யுகங்களாகவும் இருந்திருக்கலாம். அதைப்பற்றி இப்போதும் அவனால் சரியாகச் அனுமானிக்க முடியவில்லை. ஆயினும் அவன் விழித்த போது அந்த வேப்பமரத்து ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்ததாய் நினைவிற்கு வந்தது. கடவுளின் வரம் பற்றிய சிந்தனைகள் எதுவும் அவனிடம் காணப்படுவதாய்த் தெரியவில்லை.

Thursday, February 25, 2010

வேரென நீயிருந்தாய்... (9)

அன்றும் ஒரு வெள்ளி மாலை. தீவிர ஆங்கில வகுப்புகள் (Intensive English course) முடிவதற்கு ஒரு வாரமே எஞ்சியிருந்தது. முதலாமாண்டிற்கான ஆய்வுகூடங்களுக்கு மாணவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய நிரல் ஆய்வுகூடங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வரவே, யார்யார் எங்கள் group mates ஆக வரப்போகின்றார்கள் என்கின்ற ஆவலுடன் ஆய்வுகூடங்களுக்கு விரைந்தோம்.

Miss. N. Jeyakody
Mr. S. Jeyanthan

அனைத்து ஆய்வுகூடங்களிலும் என்னுடன் ஒரு தமிழ்ப்பெண்ணின் பெயரும் சேர்ந்தே இருப்பது தெரிந்ததும் மனதுக்குள் பரவசம் ஒன்று புகுந்து கொண்டது. யாரந்த ஜெயக்கொடி என்பதை அறிவதற்கு ஆவல்பட்டது நெஞ்சு.

இருப்பிடத்திற்கு திரும்பலாம் என்று நினைக்கையில், தோளில் ஒரு கை விழுந்தது. திரும்பினேன். வரப்பிரகாஸ் நின்றிருந்தான்.

“எப்பிடி இருக்கிறீங்க ஜெயந்தன்? கண்டு கனகாலம் ஆச்சு.”

“இருக்கிறன். நீங்க எப்பிடி இருக்கிறீங்க வரப்ஸ்?”

இருவரும் உயர்தர வகுப்புகளில் ஒன்றாகவே இருந்து படித்திருந்தாலும் எங்களுக்கிடையிலான உரையாடல்கள் நீங்கள், நாங்கள் என்ற வகையிலேயே இருந்து வந்தது. பொதுவாக என்னுடன் நீங்கள் என்று சொல்லி உரையாடும் சமவயதுக்காரர்களை நானும் நீங்கள் என்று சொல்லிக் கதைப்பதையே வாடிக்கையாகக்கொண்டிருந்ததாலும், வரப்பிரகாஸிற்கும் எனக்குமிடையில் நெருங்கிய சினேகிதம் ஏற்படாதிருந்த காரணத்தினாலும் நீங்கள், நாங்கள் என்றவாறே எங்களிற்கிடையிலான உரையாடல்கள் இருந்து வந்தன. ஏறத்தாழ இரு வருடங்களின் பின் முதல்தடவையாக இன்றே அவனைச் சந்திக்கின்றேன். ஆள் ஊரில் இருந்ததிற்கு ஒரு சுற்றுப் பெருத்திருந்தான்.

“என்ன மாதிரி ராகிங்? கஸ்ரமா?”
-என்றான்.

“என்ன இப்ப வந்து இப்பிடிக்கேக்கிறீங்க?”
-அவனை ஆச்சரியத்துடன் கேட்டேன்.

“இல்ல. நான் இன்னும் றூம் ராக்கிங் ஒருத்தரிட்டையும் வாங்கேல்ல. கனபேர் வரச் சொல்லியிருக்கிறாங்கள். போக நேரம் கிடைக்கேல்லை.”

மனதின் ஒரு மூலைக்குள் தாழ்வு எண்ணம் ஒன்று வந்து குந்துவதை உணரமுடிந்தது. நாங்கள் எல்லாம் இவ்வளவு நாளா ராக்கிங் வேண்டி எவ்வளவு கஸ்ரப்படுகிறம். எங்களைப் போல ராக்கிங் வேண்டவேண்டிய இவன் இன்னும் ஒருத்தரிட்டையும் றூம்ராக்கிங் வேண்டவில்லை என்று சொல்வதைக்கேட்கையில் மனத்தி்ற்குள் பொறாமை வந்தது. யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று நினைக்கத்தெரியாத வயது அது. வயது மட்டுமல்ல அந்த சூழ்நிலையும் அப்படியாய்த்தானிருந்தது. எங்கள் மனக்கிடக்கைகளை இன்னொருவரிடம் பகிர்வதனூடாக மனத்தை அழுத்திப் பிடித்துவைத்திருக்கும் விடயங்களிலிருந்து வெளிவருவதற்கான சாத்தியங்கள் அற்று பெரும்பாலானோர் வீடுகளிலிருந்து வெகுதூரம் விலகியிருந்தோம். எங்கள் மனவேதனைகளை பகிர்ந்துகொண்டிருந்த நட்புகள் எல்லாம் ஏறத்தாழ ஒத்த நிலையிலேயேவிருந்ததால் மற்றவர்களின் இன்னல்களுடன் எங்கள் இன்னல்களை ஒப்பிட்டே ஆறுதலடைந்து கொண்டிருந்தோம். ஆக நான் பெற்ற எந்தத்துன்பமும் இவன் பெறவில்லை என்றதும் இயல்பாகவே மனத்திற்குள் அவன் மீது பொறாமை எழுந்தது. ஆயினும் அதை வெளிக்காட்டாமல் நடிக்கத் தொடங்கினேன்.

படிப்பு எங்களுக்கு நிறையவே நடிக்கக்கற்றுத்தந்திருக்கிறது. அதற்குவேறு, நாகரிகம் என்றும் பெயர் சூட்டி விட்டிருக்கிறது. யார் நன்றாக நடிக்கின்றானோ/ளோ அவனே/ளே நல்லவன்/ள் என்று நம்பவும் வைத்திருக்கிறது. அவன்/ள் அப்படி நடந்து கொண்டால் தான் நல்லவன்/ள் என்றும் எமக்கு சொல்லித் தந்திருக்கிறது. புத்தகப்படிப்பு வெறும் அறிதலைத் தருகின்றதே அன்றி புரிதலைத்தருவதில்லை. அறிதல் வேறு, புரிதல் வேறு. யாரோ சொல்வதை அல்லது எழுதி வைத்ததை நம்புவது அல்லது பின்பற்றுவது அறிதல். புரிதல் நாமாக உணர்ந்து கொள்ளுதல். அறிதல் எமக்கு வெளியில் இருந்து எம்மால் பெறப்படுகிறது. புரிதல் எமக்குள் எம்மால் உணரப்படுகிறது. இயல்பாக நடக்கும் ஒரு உளவியல் மாற்றம் அது. அதுவும் ஒருவகை ஞானம் தான். அந்த ஞானம் ஒருசிலருக்கு மட்டும் இயல்பாகவே வந்து விடுகிறது. மற்றையவர்களுக்கு அனுபவம் அதை கற்பித்துத்தருகின்றது. அந்தப் புரிதல் ஏற்பட நிறையவே அனுபவப்படவேண்டியிருக்கிறது. அல்லது வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியையும் விழிப்புணர்வுடன் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. 21 வயதினில் யாரால் அப்படியானவொரு விழிப்புணர்வுடன் இருக்கமுடிகிறது? அப்படியொரு விழிப்புணர்வினைப் பெற்றிருந்தால் அது வரம். அந்த வரம் எத்தனை பேருக்கு வாய்த்திருக்கிறது? ஆனால் அந்த வயதும், பழகிவந்த சூழ்நிலையும் இயல்பாகவே உள்ளத்து உணர்வுகளை மறைக்க கற்றுத்தந்திருந்தது.

“எப்பிடி இன்னும் ஒருத்தற்றையும் றூமுக்குப் போகாமத் தப்பியிருக்கிறீங்க? நீங்க என்ன, அன்ரி-றாக்கரா?” - வியப்புடன் கேட்டேன்.

“இல்லையில்ல. நான் அன்ரிறாக்கர் இல்ல.எனக்கு கிட்டடியில CIMA final exam வருகுது. அதால நான் week-end-க்கெல்லாம் கொழும்புக்கு போயிருவன். ஆரும் வரச் சொன்னாலும் போறதில்லை. அதுதான் பயமாயிருக்கு. அம்பிட்டால் கொண்டுபோய் முறிமுறியெண்டு முறிப்பாங்கள் எண்டுதான் நினைக்கிறன்.” கவலையுடன் சொன்னான்.

அவன் கவலைப்படுவதைப் பார்த்ததும் மனத்திற்குள் ஏதோ இளகியது.

“நீங்க பயப்படுற மாதிரியெல்லாம் இருக்காது வரப்ஸ். என்ன மக்சிமம் ஐநூறு அல்லது ஆயிரம் தோப்படிக்கச்சொல்லுவாங்கள். ரிப்சும் அடிக்க வேண்டியிருக்கும். நீங்க எதுக்கும் வீட்டில இருக்கேக்க தோப்பு அடிச்சுப் பழகினீங்க எண்டால் பிறகு அடிக்கேக்க காலுக்குள்ள பிடிக்காது. சும்மா ஆக்களுக்கெண்டால் முதல் தரம் நூறு அல்லது இருநூறுதான் அடிக்கச் சொல்லுவாங்கள். உங்கள எப்பிடியும் கனக்கத்தான் அடிக்கச் சொல்லுவாங்கள். நீங்கள் அடிச்சுப் பழகிறது நல்லது.”

“அடிக்க எங்க நேரம் கிடைக்குது. சரி. நான் வெளிக்கிடுகிறன். இங்கினேக்க கண்டாங்கள் எண்டால் பிறகு அலுப்பாயிரும்.”
-என்றவாறே வரப்பிரகாஸ் விலகினான்.

இருப்பிடத்தினை நேரத்துடனே அடைந்துவிட்டிருந்தேன். மற்றையவர்களும் வந்து விடவே இரவுணவினை முடித்ததன் பின்னர் கார்ட்ஸ் விளையாட்டுடன் கொன்-னும் ஆரம்பித்தது.

“மச்சான் உனக்கு ஆராரடா குறூப்மேற்ஸ்? எனக்கு எல்லாத்திலையும் கடுவன்கள் தான்”
- என்றான் ஒருவன்.

“எனக்கும் தான்ராப்பா?”
-என்றான் கவலையுடன் மற்றொருவன்.

“எனக்கு ஒண்டுக்கு ரெண்டு மச்சான்.”
-என்றான் இன்னொருவன்.

“அடி சக்கை. அப்ப workshop-ல மூண்டு மடங்கு வேலை செய்யவேணுமெண்டு சொல்லு.”

“Surveying-ஐ விட்டிட்டாய் மச்சான். அப்ப தியோடலைற் போல் (pole) எல்லாத்தையும் அண்ணைதான் காவவேணும்.”

“உங்களுக்குப் பொறாமையடா. அதுதான் இப்பிடிக் கதைக்கிறீங்கள். மவனே ஆரெண்டாலும் சும்மா என்னோட கதைக்கிறதெண்டு சாட்டிக் கொண்டு lab-க்குள்ள வாளிவைக்க வாங்கோ அப்பத் தெரியும்.”

“ஜெயந்தன்! உனக்கு ஆரடா குறுப்மேற்ஸ்?”

மௌனமாயிருந்த என்னையும் கலாய்க்கத் தொடங்கினார்கள்.

“ஆள் பம்மிறதைப் பாத்தால் விளங்கேல்லையே.”

“ஆரடா? தமிழா விசிறியா?”

“தமிழ்“

“ஆராள்?”

“ஆரெண்டு தெரியேல்லை. ஆனா பேர் ஜெயக்கொடி எண்டு கிடக்கு”.

“ஜெயக்கொடியா? கேள்விப்பட்ட பேராத் தெரியேல்ல. எடுறா அந்த லிஸ்ர. எல்லாத் 'தானா'-ப்பெட்டைகளின்ர டீரெய்ல்சும் இருக்குத்தானே.”

list எடுத்துத் தேடினோம்.

“இவள் சுத்திப்போட்டாள் மச்சான். இவளின்ர டீரெய்ல்ஸ் எங்களிட்ட இல்லை.”


பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8

Tuesday, February 23, 2010

தேடல்

எதற்காக அழுகிறது குழந்தை
என்பதை அறியாது தவிக்கும்
தந்தையாய்....

எதற்காகத் தேடல்
அல்லது
எதற்கான தேடல்?

எதையென்று தேடுவது?
எதற்காகத் தேடுவது?
சலித்துப் போகிறது மனசு.

ஈர்ப்பின்றிய தேடல்களா?
தேவையற்ற தேடல்களா?
எஞ்சுகின்றன கேள்விகள்.

சலித்துத் தேடிப், பின்
தேடலைத் தேடி...
தேடிச் சலிக்கிறது நெஞ்சு.

இருந்தும்,
ஓடிக்கொண்டிருக்கிற காலநதியில்
தேடிக் கொண்டுதானிருக்கிறது
பாழாய்ப்போன மனசு.

Monday, February 15, 2010

வேரென நீயிருந்தாய்... (8)

அன்று வெள்ளிக்கிழமை மாலை. தாமதமாகவே இருப்பிடத்தினை வந்தடைந்திருந்தேன். இப்போதெல்லாம் ஆங்கில வகுப்புகள் முடிவடைந்ததும், பனிதெனியாவிற்குள்ளால் இறங்கி கண்டிக்குச்செல்லும் பேருந்தில்ஏறி கலகாச்சந்தியில் இறங்கியோ அல்லது கண்டிநகருக்கோ சென்று நாவலப்பிட்டிப்பேருந்தினை பிடித்து ஹெலிஓயாவிலோ அல்லது கம்பளையிலோ இறங்கிப்பின் மீண்டும் அங்குணாவலையிற்கு வருவதினூடாக பேருந்துகளுக்குள் சிரேஷ்ட மாணவர்களின் பார்வையில் படுவதினை பெருமளவிற்கு தவிர்க்கத்தொடங்கியிருந்தோம். அறைக்குள் சென்றதும் பக்கத்து அறை நண்பன் வந்து சொன்ன சேதி வயிற்றில் புளியைக் கரைத்தது.

சிலவாரங்களுக்கு முன்னர் ஒரு சிரேஷ்ட மாணவனால் எனக்கென வழங்கப்பட்ட course work, dead line முடிவடைந்தும் இன்னமும் என்னால் சமர்ப்பிக்கப்படாதிருந்தது. நாளை காலைக்கிடையில் அதனைச் சமர்ப்பிக்காவிட்டால் விளைவுகள் விபரீதமாகலாம் என்கின்ற அச்சத்தினால் உடனடியாக அந்த சிரேஷ்ட மாணவனைச்சந்திப்பதே எனக்கும் அவனுக்கும் நல்லதாகப் பட்டது. ஏற்கனவே வேறும்சில மாணவர்களிடம் அதே course work இற்கான தகவல்களைப்பெற்றிருந்ததால் அவற்றைப்பார்த்து எழுமாற்றாகச் சில தகவல்களை மாற்றிப்பிரதி பண்ணிக்கொண்டு உடனேயே புறப்பட்டேன்.

“வாடா மாப்பிள”
வரவேற்பு பலமாக இருக்கவே நெஞ்சு திக்கென்றது.

“உன்ன எப்ப submit பண்ணச் சொன்னான்? பெரிய விஐபி ஆகிட்டீங்களோ நீங்கள்?”

“இல்லையண்ண. வேறை சீனியர்ஸ் பிடிச்சுக்கொண்டு போனதால வரேல்லாமப் போய்ற்றுதண்ண.“

“டேய்! ஆருக்குச் சுத்துற? நாங்களும் யூனியர்ஸ்ஸா இருந்துதான் வந்தனாங்கள். உன்னப்போல எத்தினபேர பாத்திருப்பம்? பாவமெண்டு கொஞ்சம் விட்டால் தலைக்குமேல ஏறிருவியள் என?”

“அப்பிடியில்லயண்ண....”

“சரிசரி. இப்ப course work நீயாச் செய்தனியோ அல்லது வேறையாற்ரையையும் copy பண்ணிக் கொண்டந்தனியோ?”

“இல்லையண்ண. நானாத்தான் செய்தனான்.”

“சரி. அப்ப மொத்தமா எத்தின பேர்?”

“பதினைஞ்சு பேர்.”

“அப்ப மெலிசா?”

“.....”

“எல்லாம் 'தானா'-க்களா?”

“இல்லை. ஒராள் முஸ்லீம்”

“சரி அப்ப எல்லாருக்கும் marks போட்டிட்ட?”

“ம்...” -தலையசைத்தேன்.

“சரி! ஆருக்கு highest marks?”

அவசரமாகக் கொண்டு சென்றிருந்த தாளினைப் பிரித்தேன்.
“கஸ்தூரி“

“ம்... எவ்வளவு?”

“78“

“எது எதுக்கு எவ்வளவு போட்டிருக்கிற?”

ஙே! விழித்தேன்.

“என்னடா முழிக்கிற? நீதானே marks போட்டனி?”

“ஓம்!”

“என்னண்டு marks போட்டனி?”

“ஆளப்பாத்து”

“சரி அப்ப கண்ணுக்கு எவ்வளவு? காதுக்கு எவ்வளவு எண்டு ஒவ்வொண்டாச் சொல்லு.”

“இல்லையண்ண. அப்பிடிப் போடேல்ல“

“பேய்ப்... அப்ப என்னெண்டு marks போட்டனி?”

“சும்மா ஆளப் பாத்து...”

“சரி. அப்ப ஆர reference-ஆ வச்சு marks போட்டனி?”

“ல்ல... ஒருத்தரையும் இல்ல...”

“அப்ப அவளிலும் விட வடிவான பெட்டைக்கு எண்டால் நூறுக்கும் மேல marks போடுவியோடா?”

“ல்ல......”

“அம்மாண வாற ஆத்திரத்துக்கு... பேய்ப்... Engineering படிக்கவெண்டு வெளிக்கிட்டு வந்திட்டியள். இன்னும் reference எண்டா என்னெண்டு ஒரு கோதாரியும் தெரியாது. என்னெண்டுதான் lab-இல தாற course work எல்லாம் செய்யப் போறியளோ...”

“....”

“மவனே சுத்தாம உண்மையச் சொல்லு! நீ கஸ்தூரிய பாத்திருக்கிறியா? இஞ்ச என்னட்ட மற்றப் பெடியள் போட்டுத்தந்த marks list-உம் கிடக்கு. இப்ப compare பண்ணிப்பாத்து நீ சுத்துறாயெண்டு பிடிச்சால் பிறகு உனக்கு physical தான்.”

விடயம் விபரீதமாக மாறுவதற்கு முன் உண்மையை ஒப்புக்கொள்வது நல்லதென மனதுக்குப்பட்டது.

“ஓமண்ணே, நான் உண்மையைச் சொல்லுறன். ஆள நான் பார்க்கேல்ல. வேற பெடியள் எழுதி வைச்சிருந்ததை வேண்டி marks-ஐக் கொஞ்சம் மாத்திப்போட்டுக் கொண்டு வந்தனான்”

“நீயொரு லெப்பையடா. போயும் போயும் அவளுக்கு போய் 78 marks போட்டுக் கொண்டு வந்திருக்கிறியே. மற்ற எல்லாரும் அவளுக்குத் தான்ரா குறையப் போட்டிருக்கிறாங்கள். கொஞ்சமாவது யோசிக்க வேண்டாம்.”

“....”

“எடேய்! இப்ப ராகிங்கப்பாத்துப் பயப்பிடுறியள். பிறகு கன விசயங்கள miss பண்ணீற்றமே எண்ட கவலைப்படுவியளடா. ஊரில A/L படிக்கேக்க ஆரும் பெட்டையளோட கதைச்சுப்பழகியிருப்பியளோ? இஞ்சையும் ராகிங் முடிஞ்சுதெண்டால் பிறகு உங்கட batch பெட்டைகள் உங்களோட கதைக்கவே level காட்டுங்களுடா. சும்மா கதைக்கப்போனாலும் வாளி வைக்கிறதுக்கு வழியிறான் எண்டுங்கள். அதுக்காகத்தான் இப்பவே உங்கள ராக்கிங்கச் சாட்டிக்கதைக்கப் பழக்கிறது. அத விட்டிட்டு, சும்மா எங்களுக்குச் சுத்திக்கொண்டிருக்கிறியள். போடா! இனிமே இந்தப்பக்கமே நீ வரக்கூடாது.”

தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று எண்ணியவாறே இருப்பிடத்தை அடைந்தாலும் பகிடிவதைக்கு இன்னொரு பக்கமும் இருப்பதை உணரத் தொடங்கினேன்.


பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7