Monday, June 28, 2010

இராவணன் - சொல்ல மறந்த கதை அல்ல, சொல்லாமல் மறைத்த கதைராவணன் திரைப்படத்தினைப் பற்றிய எனது கருத்தினை (எனக்கு விமர்சனம் செய்யத் தெரியாது என்பதனால்) பதிவு செய்யும்படி அத்திரைப்படம் வந்த புதிதினில் என்னிடம் ஒருவர் கேட்டிருந்தார். படத்தினை இரசித்துப் பார்ப்பதற்குரிய மனநிலை இருக்கவில்லையாயினும், 'what ever happens, life has to go on' என்பதனால் நண்பர்களுடன் ஒருவாரத்திற்கு முன்னரே திட்டமிட்டிருந்ததன் பிரகாரம் கடந்த சனி இரவு திரையரங்கினுள் நுழைந்திருந்தோம். இத்திரைப்படம் எந்தவொரு சரித்திர நிகழ்வுடனும் சம்பத்தப்பட்டதல்ல என்பதை ஆரம்பத்திலேயே கூறுவதன் மூலம் பார்வையாளர்களுக்கு இராமயண இதிகாசத்தினை நினைவுபடுத்திவிடுகின்றார் அதன் இயக்குனர் திரு. மணிரத்தினம்.

இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் தனது படங்களுக்கு வித்தியாசமான களங்களையே தேர்வு செய்வதானவொரு கருத்தினை ஏனைய விமர்சனங்களில் இருந்து அறிந்து கொள்ள முடிந்திருந்தது. அவரின் “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்தினைப் பார்வையிட்ட ஈழத்தமிழர்களுக்கு தெரிந்திருக்கும் அந்தக் களத்தின்/காட்சியமைப்புகளின் குறைபாடுகள். ஆயினும் களநிலவரத்தினை நேரில் பார்த்திருந்திராத தமிழக நண்பர்கள் பலர் இப்போதும் அப்படத்தினை சிலாகித்துக்கூறுவது சிலவேளைகளில் சிரிப்பினையே ஏற்படுத்துவதுண்டு. ஆயினும் அப்படத்தினுாடக சில நியாயங்களை வெளிப்படுத்தியிருந்தமை வரவேற்கத்தக்கதே. சிலவேளைகளில் மணிரத்தினம் அவர்களினால் ஈழத்து அவலங்களைக் கற்பனை செய்து பார்ப்பது கடினமானதாக அமைந்திருந்திருக்கக்கூடும். உதாரணத்திற்கு இடம்பெயரும் மக்கள் தலைக்கு மேலே வட்டமிடும் உலங்கு வானூர்தியினை வேடிக்கை பார்ப்பது போல் ஒரு காட்சியமைப்பு அமைந்திருந்தது. உலங்குவானூர்திகளைக் கண்டால் மக்கள் எப்படி ஓடி மறைவார்கள் என்பது அனுபவித்தவர்களுக்கே தெரியும். தூரதிர்ஷ்டவசமாக அந்த வகையிலேயே இந்த ராவணன் திரைப்படமும் அமைந்துவிட்டிருப்பது வேதனைக்குரியதே.

இராவணன் ஒரு காமுகன், கொடியவன், அரக்கன் என்றெல்லாம் பக்கச்சார்பானவர்களால் புனைந்துவிடப்பட்டுள்ள இதிகாசங்களையே எமது முன்னோர்கள் எம்மிடம் விதைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். வல்லவன் வகுத்ததே வாய்க்கால் என்பார்கள். தோல்வியைத் தழுவிய புரட்சிகள், கிளர்ச்சிகள் என மாற்றப்படுவதும், மிகைபலத்துடன் வெற்றியடைந்துவிட்ட கிளர்ச்சிகள் புரட்சிகளாக வரலாற்றில் காட்டப்படுவதும் சர்வசாதாரணமானது. நீ தோல்வியடைந்துவிட்டால், எதனால் தோல்வியடைந்தாய் என்பதை விளக்குவதற்கு நீ இருக்க மாட்டாய். வெற்றியடைந்து விட்டாலோ நீ எப்படி வெற்றியடைந்தாய் என்பதைக் கூறவேண்டிய அவசியம் உனக்கு இருக்காது என்பார்கள். இதுதான் வாழ்க்கை. வென்றவனைப் போற்றுவதே வரலாற்றின் வாடிக்கை. ஒருவனை நல்லவனாய்க் காட்ட வேண்டுமெனில் மற்றொருவனைக் கெட்டவனாய்க் காட்ட வேண்டியது அவசியமாகி விடுகிறது. ஏனெனில் நல்லது என்று தனித்து ஒன்று கிடையாது. ஒப்பீடுதான் நல்லது கெட்டது என்று வகைப்படுத்துகிறது. ஆக ஒரு சாதாரண அரசனான இராமனை ஒரு அவதார புருஷனாகக் காட்ட வேண்டிய கட்டாயத்திற்காக இராவணனை கெட்டவனாகச் சித்தரிக்கப்பட வேண்டிய கடப்பாடு இராமயண கதாசிரியர்களுக்கு உண்டாகி விடுகிறது. (அவர்களும் தங்கள் வயிற்றுப் பிழைப்பினைப் பார்த்தாக வேண்டுமே). அதிலும் கம்பர் இன்னும் ஒருபடி மேலே போய் வான்மீகி இராமயணத்தையே தமிழில் தான் மொழிபெயர்த்ததாய் அவையடக்கம் செய்துவிட்டு தன் கற்பனைகளை அள்ளிவிட்டு இராமனைப்பற்றிப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். இராமனை ஏகபத்தினி விரதனாய்க்காட்டி இராவணனை ஒரு காமுகனாய்ச் சித்தரிப்பதனூடாக இராமனை உயர்த்தி விட்டிருக்கிறார். ஆனால் மணிரத்தினம் அவர்கள் இந்தச் சிக்கல்கள் எதுவும் எழுந்துவிடாமல் தவிர்ப்பதற்காய் இந்தியிலும் தமிழிலும் தனது ராவணனை தானே இயக்கி ஒரே நேரத்தில் வெளியிட்டிருப்பது பாராட்டிற்குரிதே.

இராமாயண கதாபாத்திரங்களான இராமன், இலக்குவணன், சீதை, அனுமன், சடாயு, இராவணன், சூர்ப்பணகை போன்ற பல கதாபாத்திரங்களும் இந்த ராவணன் படத்தில் காட்டப்பட்டிருந்தாலும் இராமாயண கதையோட்டத்திற்கேற்ப அவர்களுக்கிடையிலான காலத்தொடர்புகள் அமைந்திருக்கவில்லை. இராமாயணத்தில் சடாயுவை சந்தித்த பின்னரே அனுமரை இராமன் கூட்டணி சந்திக்கிறது. இங்கே அனுமராக உருவகிக்கப்பட்ட பாத்திரம்தான் சடாயுவாக உருவகிக்கப்பட்ட படகோட்டியைக் கண்டுபிடிக்கிறது. அந்தப் படபோட்டியும் சடாயு பாணியில் ஐஸ்வர்யாராயைக் கடத்திச் சென்ற திக்கைக் காட்டி விட்டு கதையிலிருந்து மறைந்து விடுகிறது.

“ஆண்கள் நீங்கள், உங்கள் சண்டையில் எதற்காய், பெண்களாகிய எங்களைப் பகடைக்காய் ஆக்குகின்றீர்கள்?” என்கின்ற நியாயமான கேள்வியினூடாக காலங்காலமாய் பெண்கள்மீது திணிக்கப்பட்டுவரும் ஆணாதிக்க மனோபாவம் தோலுரிக்கப்படுகிறது. இராமனைக் கண்டு மயங்கி, அவனை அடைய முற்பட்டதாலேயே இலக்குவணன் சூர்ப்பணகையின் காது, மூக்கு முலைகளெல்லாம் அறுத்தெறிந்தானாம். ஒரு பெண்ணை இதைவிட கேவலப்படுத்திவிட முடியுமா? அப்படிச் செய்வதற்கு யார் இராம இலக்குவணன்களுக்கு உரிமை தந்தது? எந்த வகையிலே இதை நியாயப்படுத்த முடியும்? பிறபெண்களின் விருப்பின்றி இராவணன் அவர்களை அடைந்தால் அவன் தலைகள் வெடித்து இறப்பான் என்கின்ற சாபத்தினாலேயே இராவணன் சீதையைத் தீண்டவில்லை என்கிறது இராமயணம். அது உண்மையென்றே வைத்துக்கொண்டாலும் அவன் சீதையை இப்படிக் கேவலப்படுத்தவில்லையே. இராமாயண கதாசிரியர்களின்படி அவன் ஒரு காமுகனாக இருந்திருந்தால் தன் முடிவு தெரிந்திருந்ததும் அவன் சீதையைப் பலாத்காரப்படுத்தியிருந்திருக்கலாமே. அவர்கள் சொல்வது உண்மையென வைத்துக் கொண்டாலும் அவன் சீதையைக் காதலித்திருக்கின்றான் என்றே கொள்ள வேண்டும். அதைத்தான் தனது ராவணன் திரைப்படத்தினூடாக மணிரத்தினம் அவர்கள் சொல்லியிருக்கிறார். ஆனாலும் அவர் சொல்ல மறந்த அல்லது சொல்லாமல் மறைத்த உண்மைகள் ஏராளம் (அவைபற்றிய மேலதிக தகவல்களுக்கு படங்களாக இணைக்கப்பட்டிருப்பவற்றைப் பாருங்கள்). இயக்கனர் செல்வராகவன் அவர்களின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஒரு காட்சி, காதலிற்கும் காமத்திற்கும் இடையிலான அந்த மெல்லிய கோட்டினைக் காட்டிச் செல்கின்றது. பெண்ணின் விருப்புடன் அவளைத் துய்க்க விரும்புவது காதல். பெண்ணின் இசைவின்றிப் பலாத்காரமாக அவளை அனுபவிக்கத் துடிப்பது காமம். அந்த வகையிலே இங்கே ராவணன் காமுகன் அல்ல என்பதை வலியுறுத்திச் சொல்கிறார் இயக்குனர் மணிரத்தினம்.

ஆவதும் பெண்ணாலே மனிதன் அழிவதும் பெண்ணாலே என்பார்கள். அது எந்தளவுக்கு உண்மையோ பொய்யோ பெரும்பாலான இந்துமத புராணங்களில் விரோதிகளாகச் சித்ததரிக்கபட்டிருக்கின்ற பெரும்பாலோனோரின் அழிவுகளுக்கு பெண்களே காரணமாக இருந்திருக்கின்றார்கள். அந்த வகையிலேயே தன்னால் தன் தங்கையை மானபங்கப்படுத்தியமைக்குப் பழிவாங்கும் முகமாக தான் அனுபவித்த அதே வலிகளை அதைத் தந்தவனுக்கே திருப்பித்தரும் எண்ணத்துடன் ஐஸ்வர்யாராயைக் கடத்தி வந்திருந்தாலும், மலைநாட்டுக் கரும்பாறை மேலே தலைகாட்டும் சிறுபூவைப்போல பூத்த அந்தப் பொல்லாத காதல் இந்த வீரா என்கின்ற ராவணனுக்கும் ஏற்பட்டு விடுகிறது. காதல் என்பது தூங்கும் மிருகம் மனசுக்குள் படுத்திருக்கும். அதன் இரண்டு கண்களும் மூடுவதில்லை ஒருகண் விழித்திருக்கும். அந்த வேளை வந்ததும் விஸ்வரூபம் கொண்டு வெளியே குதித்துவிடும். அந்த மிருகம் தான் இந்த ராவணனையும் கொன்று குவித்திருக்கிறது. “நீ என்னைத் தேடி வந்தாயா? அல்லது வீராவைத் தேடி வந்தாயா? என்கின்ற ஐஸ்வர்யாராயின கேள்வியில் பெண்மையின் ஏக்கமும் கோபமும் பொங்கி வழிகிறது. “பதினான்கு நாட்கள் வீராவுடன் இருந்தாயே, அவன் சொக்கத்தங்கமாக இருந்த உன்னை எச்சத் தங்கம் என்று சொன்னானே” என்கின்ற பிரதிவிராஜின் கூற்று அன்றும்சரி இன்றும்சரி ஆண்கள் பெண்களின் உள்ளத்தூய்மையிலும் உடலின் கற்பையே அதிகம் கொண்டாடுகின்றார்கள் என்கின்ற யதார்த்தத்தினை அடித்துச் சொல்கிறது.

இராவணன் பற்றிய என் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த காரணமோ அல்லது வேறேதேனும் காரணங்களோ ஏனோ தெரியவில்லை மணிரத்தினம் அவர்களின் இந்த ராவணன் திரைப்படக்கதை சப்பென்றிருந்தது.

Tuesday, June 8, 2010

முட்டையும் முள்ளிவாய்க்காலும்


பூமிப்பெண்ணும் இந்த
ஆமைப்பெண் போல்தான்
அன்றொருநாள் சூல்கொண்டாள்

ஆயிரம் முட்டைகளின்றியொரு
அக்கினிக் குஞ்சிற்காய்
அடை காத்தாள்.

அடங்காப்பற்றினை அண்டி
அன்னியர் அயலவர்
அனைவரும் வந்தனர்.

இருபத்தொரு தலைமுறைக்கு
கருவறுத்த பரசுராமன்
பரம்பரைதானேயது!

இருபத்தொன்றுக்கு பழிதீர்ப்பதாய்
பகையுடன் சேர்ந்து பதினெட்டில்
பகடையாடியதாம்.

பாருங்கள் இப்படித்தான்...