Thursday, April 5, 2012

வேரென நீயிருந்தாய்...(50)

எங்களுக்கிடையில் சிறிது மௌனம் நிலவியது. நதீஷா வீதியின் இரு பக்கமும் மாறிமாறி விடுப்புப் பார்த்தவாறே வந்தாள். சிறிதாகத் திறந்திருந்த ஜன்னலினுாடாக காற்று வந்து காதோரத்தை அறைந்து கொண்டிருந்தது. அதுகூட இதமாகத்தான் இருந்தது.

“அங்க! அதில தூரத்தில கோயில் மாதிரி ஒண்டு தெரியுது. ஆனா அதைச் சுற்றி ஒரு வீடுகளையும் காணேல்லை. ஏன் அப்ப அந்த வெளிக்குள்ள ஒரு கோயில் கட்டியிருக்கு?”

“அது கறுப்பாத்தை அம்மன் கோயில். அங்கால இன்னும் கொஞ்சம் தள்ளிப்போனா ஆக்களின்ரை வீடுகள் வரும். கோட்டைப்பிரச்சனைக்கு முதல் அங்க நிறைய ஆக்கள் இருந்தவை. ஆனா தொன்னூற்றியொண்டில இடம்பொயர்ந்துபோனாப் பிறகு இப்பை அங்கை ஆரும் இருக்கினமோ தெரியாது.”

“ஓ!”

“இஞ்ச முன்னாலையும் ஒரு கோயில் ஒண்டு வருகுது”

“அதுதான் மண்கும்பான் பிள்ளையார் கோயில். தொண்ணூறாம் ஆண்டு வரைக்கும் தேருக்கெல்லாம் நாங்க வாறனாங்க. சித்திரை வருஷப்பிறப்பண்டுதான் இஞ்சை தேர்த்திருவிழா நடக்கிறது. நிறைய சனம் வரும். கச்சான் கடைகள், மணிக்கடைகள், ஐஸ்கிறீம் வானுகள் எண்டு எங்களுக்கு அண்டைக்கு வேட்டைத் திருவிழாத்தான்.”

“மச்சான் டேய்! வங்களாவடியால போய்ப் போவமா அல்லது இதால திரும்பி வெள்ளைக்கடற்கரையால போவமா?” முன்னாலிருந்த உதயன் கேட்டான்.

“வங்களாவடியாலயே போவம். ஏனெண்டா வீட்டடியையும் பார்த்துக்கொண்டு போகலாம் தானே”

மண்கும்பான் பிள்ளையாருக்காக குறைந்திருந்த van-இன் வேகம் அதிகரித்தது.

“அதென்ன அஙக முன்னால தூரத்தில ஜங்சன் ஒண்டு தெரியுது. அதோட கடல்ப்பக்கமாகயும் றோட்டுப் போகுது. அங்காலயும் ஆக்கள் இருக்கினமா?”

“அதுதான் அராலிச்சந்தி. அங்கால போற றோட்டில போனா அராலித்துறை வரும் பிறகு அதிலயிருந்து boat-இல யாழ்ப்பாண அராலிக்குப் போகலாம்.கோட்டைப் பிரச்சினைக்கு நாங்கெல்லாம் இதால போய்த்தான் யாழ்ப்பாணம் போறனாங்க. இந்தப் பயணமும் கிட்டத்தட்ட கிளாலிப்பயணம் மாதிரித்தான். நிறையப் பேர் இதுக்குள்ளையும் செத்திருக்கினம். கிளாலில நேவி வந்து சுடும். ஆனா இதுக்குள்ளை ஹெலி வந்து சுடும். அதால கொஞ்சகாலத்துக்குப்பிறகு இதாலையும் இரவிலதான் பயணம் செய்யிறனாங்கள்.”

“ஓ!. இதுதுான் அந்த அராலியா? இஞ்சைதானே டென்சில் கொப்பேகடுவா செத்தது?”

“ஓமோம். இஞ்சை இதுக்குக்கிட்டத்தான் அது நடந்தது”

அது 1992ம் ஆண்டு August மாதம் 08ஆம் நாள். தீவகப் பகுதியிலிருந்து யாழ்நகரைக் கைப்பற்றுவதற்கான இறுதிநேர ஏற்பாடுகளைப் பார்வையிடுவதற்காக சிறிலங்காப் படையினரின் அப்போதைய வடமாகாணக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பே கடுவ, மற்றும்யாழ்மாவட்டப் படைத்தளபதி பிரிகேடியர் விஜய விமலரட்ண ஆகிய நட்சத்திரத் தளபதிகளுடன் ஏனைய முக்கியமான தளபதிகளும் வேலணை அராலித்துறைக்கு விஜயம் செய்துவிட்டுத் திரும்பும் வழியில் நிகழ்த்தப்பட்டவொரு நிலக்கண்ணிவெடித்தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தனர். அதைத் தொடர்ந்து அந்தப் படைநடவடிக்கையும் கைவிடப்பட்டிருந்தது.

“உங்கட அப்பாவும்..........”

நதீஷாவின் வார்த்தைகள் சிந்தனையைக் கிளறின.

22 August 1990 வரை இந்திய ஆக்கிரமிப்புப் படைகளினதும் அப்போது அவர்களுடன் கைகோர்த்திருந்த தமிழ் துணைப்படைகளினதும் அராஜகங்களைத் தவிர்த்து நேரடி இராணுவத் தாக்குதல்களுக்குப் பெரிதாக முகம் கொடுத்திராத மக்களுக்கு அன்றைய தினம் எதிர்மாறாய் விடிந்திருந்தது. இந்திய ஆக்கிரமிப்புப் படைகளின் காலத்தில் இயங்கிய தமிழ் இராணுவத்துணைக்குழுக்கள் தமிழ்த் தேசிய இராணுவம் என்கின்ற பெயரில் கட்டாய ஆட்சேர்ப்பில் இறங்கிப் பெருமளவிலான தமிழ் இளைஞர்களை பிடித்திருந்தன. பிள்ளைபிடிகாரர்கள் என்கின்ற காரணப் பெயருடன் வலம் வரும் அவர்களைக் கண்டால் சிறுவர்களாகிய நாங்களே ஓடிஒளிந்து விடுவோம். அப்படியானால் மீசை அரும்பிய இளைஞர்களின் நிலை?. தீவகப்பகுதியிலிருந்த பல இளைஞர்கள் புகையிலை ஏற்றிச்செல்லும் லொறிகளில் மநை்திருந்து இலங்கையின் தென்பகுதிகளுக்குத் தப்பிச் சென்றிருந்தனர். பிரேமதாச அவர்கள் சிறிலங்காவின் அதிபராகி இந்தியப்படைகள் வெளியேற்றப்பட்டதன் பின்னர். நிலமை சீராகியிருந்தாலும் மீண்டும் சமாதானம் சீர்குலையும் அறிகுறிகளே தென்பட்டன. இடையிடையே ஹமீது அவர்கள் பலாலிக்கு வந்து இயக்கத்துடன் நடாத்திய பேச்சுவார்த்தைகளும் பலனின்றிப் போக சண்டை மீண்டும் ஆரம்பித்து விட்டிருந்தது.

22 August 1990 இல் ஊர்காவற்றுறையில் தரையிறங்கி நிலை கொண்டிருந்த சிறிலங்காப் படையினர் இருநாட்கள் கழித்து 24 August 1990 அன்று அங்கிருந்து வடக்கு வீதி வழியாக கடற்கரையை அண்மித்த வெளிகளினுாடாகவும் ஊர்களினூடாகவும் முன்னேறி அல்லைப்பிட்டியை அடைந்திருந்தனர். அவர்கள் சென்றவழியெங்கும் ஏற்படுத்தியிருந்த கொடூரங்கள் சொல்லிமாளாதவை. 350 இற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்களை அவர்கள் கொன்று விட்டிருந்தனர். பெருமளவினோர் சுட்டும் வெட்டியும் குற்றுயிராக விடப்பட்டிருந்தனர். அவ்வாறு காயமடைந்தவர்களைப் தப்பியோடியிருந்த உறவினர்கள் பின்னர் வந்து மீட்டு புங்குடுதீவு வைத்தியசாலைகளில் அனுமதித்திருந்தனர். அதுமட்டுமன்றி அந்த இராணுவத்தினர் பலரைப் பணயக்கைதிகளாக்கித் தங்களுடன் அழைத்துச் சென்றிருந்தனர். எங்ளைப் பாதுகாப்பாக அனுப்பிவிட்டு முக்கியான பொருட்களை எடுத்துவருவதாகச் சொல்லிச் சென்றிருந்த அப்பாவைக் காணாமல் தவித்த எங்களுக்கு, சில நாட்களின் பின்னர் சந்தித்த தெரிந்தவர் ஒருவர் அப்பாவை மண்டைதீவில் வைத்து ஹெலியில் ஜட்டியுடன் ஏற்றியதைத் தான் கண்டதாகக் கூறியிருந்தார் அதன்பின்னர் இன்றுவரை அப்பாவைப்பற்றிய எந்தவொரு தகவல்களும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. அவரைத் தேடித்திரிந்த நவீன காலத்து சாவித்திரியான அம்மாவும், (அம்மா மட்டுமா அம்மாவைப் போல் எத்தனையாயிரம் பெண்கள் தங்கள் கணவர்களையும் பிள்ளைகளையும் தேடிக் கொண்டிருக்கின்றார்கள்) போய்ச் சேர்ந்து இதோ இன்றைக்கு அந்திரெட்டிக்காக அவரின் சாம்பலைக் கரைப்பதற்காக சாட்டிக்குச் சென்று கொண்டிருக்கின்றேன். அக்காவுக்கும் அம்மாவுக்கும் அவர்களின் பிதிர்க்கடன்கனைச் செலுத்தலாம். அப்பாவுக்கு என்ன செய்வது? மரணத்திலும் கொடிது மறக்கப்படுவது என்பார்கள். அதனிலும் கொடிது மறைக்கப்படுதல்.

ஔவையாரும் முருகனும் இருந்திருந்து இப்போது இங்கே சந்தித்து முருகன் ஔவையாரிடம் எது கொடிது என்று கேட்டிருந்தால்.

கொடிது கொடிது வறுமை கொடிது;
அதனினும் கொடிது இளமையில் வறுமை;
அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்;
அதனினும் கொடிது அன்புஇலாப் பெண்டிர்;
அதனினும் கொடிது இன்புற
அவர்கையில் உண்பதுதானே

என்றிருக்க மாட்டார் மாறாக

கொடிது கொடிது மரணம் கொடிது
அதனினும் கொடிது மறக்கப் படுதல்
அதனினும் கொடுது மறைக்கப் படுதல் தானே.

என மூன்று வரியிலேயே முடித்திருப்பார்

“I'm sorry ஜேந்தன். அப்பாவை ஞாபகப்படுத்தீற்றனா?”

“இல்லையில்ல நான் OK”

“அப்பையேன் உங்கடமுகம் ஒருமாதிரி இருக்கு?”

“இல்லை வீடும் கிட்டவரப் பழைய நினைவுகள் வந்திற்றுது. ஆனா நான் OK”

“Sorry ஜேந்தன்”

“என்ன நீங்க? சும்மா சும்மா sorry சொல்லிக் கொண்டு? நீங்க என்ன செய்தனீங்க? நான்தான் உங்களைப் பற்றி நினைக்காம பழைய நினைவுகளில இருந்திற்றன். இந்தா அராலிச்சந்திக்கு வந்திற்றம். இதால அப்பிடியே நேரே போனா ஊர்காவற்றுறைக்குப் போகலாம். இதை வடக்கு றோட் எண்டு சொல்லுறது. பிறகு அங்கையிருந்து அப்பிடியே boat-இல காரைநகருக்கம் போகலாம். முந்தி Ferry service எல்லாம் இருந்தது. சண்டையோட அது நிண்டிட்டுது. இப்பிடியே வலது பக்கம் திரும்பினா முதலே சொன்னது போல அராலித்துறைக்குப் போகலாம். நாங்க இப்ப இடது பக்கம் திரும்பிறம். இதால போனா வேலணை வரும் முந்தியெண்டா பிறகு அங்கையிருந்து புளியங்கூடல் வழியாவும் ஊர்காவற்றுறைக்குப் போகலாம். சுருவில் வழியாவும் போகலாம். ஆனா இப்ப வேலணை central college அடியெல்லாம் camps இருக்கிறதால சுத்திச் சுருவலால தான் போகேலும். அதோட சுருவிலுக்குப் போகாம நேரே போனா அப்பிடியே புங்குடுதீவுக்குப் பாலத்தால போகலாம். பிறகு அங்கையிருந்து boat இல நயினாதீவு நெடுந்தீவு எண்டு மற்றத் தீவுகளுக்கும் போகலாம்”

நதீஷா சிரித்தாள்.

“நல்லா கதையை மாத்துவீங்க என? சரி இதென்ன இப்ப ஒரு சின்னக் கோயிலொண்டு போய்ச்சுது?”

“அது அதிசய வைரவர் கோயில்”

இப்போது van மணியாறன் வீட்டடியை நெருங்கிவிட்டிருக்க,

“நதீஷா! இந்தா இந்த வலது பக்கம் போற ஒழுங்கைக்குள்ளதான் எங்கட வீடு இருந்தது”

“அப்ப திரும்பிப் போகேக்க அங்க போயிற்றுப் போவமா?”

“வேண்டாம். இப்ப அதெல்லாம் ஒரே பத்தைக்காடாக் கிடக்கும். van-இலையும் போகேலுமோ தெரியாது. அதோட போகேக்குள்ள வேறை பாதையால போவம்”

“சரி உங்கட விருப்பம்”

“இல்லை. உங்களுக்கு இடங்கள் காட்டிறதுக்காகத்தான் மற்றப் பாதையால போவம் எண்டனான். அப்பிடியே வெள்ளைக்கடற்கரையடியால மண்கும்பானுக்குப் போய்ப் போகலாம்.”

“சரி, இஞ்சால நிறைய ஆக்கள் இருந்திருக்கினம் போல. ஒரே வீடுகளாகக் கிடக்கு?”

“ஓமோம். இன்னும் கொஞ்சத்தூரம் போக வங்களாடிவச் சந்தி வந்திரும்.அதிலயிருந்து தான் புங்குடுதீவுக்குப் போற றோட்டும் ஊர்காவற்றுறைக்குப் போற றோட்டும் பிரியிறது.”

“நதீஷா! இந்தப் பக்கம் இந்த வீட்டைப் பாருங்களன். இஞ்சை தான் நான் ஞானம் ரீச்சரிட்ட நேசறி படிச்சனான். அவா இப்பையும் இஞ்சதான் இருக்கிறாவாம்”

“ஓ! அதென்ன முன்னால இன்னொரு கோயில் தெரியுது? இஞசாலையெல்லாம் நிறையக் கோயில்கள் என?”

“ஓமோம்! இது வங்களாவடி முருகன் கோயில். கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் எண்டு பழமொழியே இருக்கு. அதால சைவக்காரர் இருக்கிற எல்லா இடங்களிலையும் நிறைய கோயில்கள் இருக்கும்”

“அதேன் இந்தக் கோயில் மட்டும் வித்தியாசமாயிருக்கு?”

“ஏன் என்ன வித்தியாசம்?”

“இல்ல நான் பார்த்த எல்லாக் கோயில்களிலையும் முன்னால ஒருவாசல்தான் இருக்கும். சாமி சிலைகள் எல்லாம் உள்ளுக்க இருக்கும். ஆனா இந்தக் கோயிலில முன்னால இன்னொரு சின்னக்கோயில் மாதிரி கட்டியிருக்கு”

“ஓ! அதுவா? அது வைரவர். முந்தி இதில ஒரு சின்ன வைரவர் கோயில்தான் இருந்தது. ஊராக்களெல்லாம் சித்திரைக் கஞ்சிக்கு இஞ்சைவந்து படைக்கிறவை. ஒருமுறை ஒராளுக்குக் முருகன் கலை வந்து இன்னொராளுக்கு வைரவர் கலைவந்து தாங்கதான் இதிலை இருக்கப்போறமெண்டு ரெண்டு பேரும் சண்டைபிடிச்சு, பிறகு ரெண்டுபேரும் சேர்ந்திருப்பமெண்டு தங்களுக்குள்ளை சமாதானமாகிற்றினமாம். அதுக்குப்பிறகுதான் சனம் முருகன் கோயிலை இதில கட்டினது. அதால அந்தக் கோயிலில ரெண்டு வைரவர். மற்றக் கோயில்களில இருக்கிறமாதிரி உள்ளுக்குள்ளை ஒரு வைரவரும் முந்தியிருந்த வைரவருக்காக வெளியால ஒரு சின்னக் கொட்டிலும் போட்டிருக்கு”

“ஓ OK OK"

வேலணை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கடையடியில் van-ஐ சிறிது நேரம் தரித்து நிற்கச் சொல்லிவிட்டு உதயன் அந்திரெட்டி செய்யும் ஐயரை அழைத்துவருவதாகக் கூறிச் சென்றான்.

“இந்தப் பள்ளிக்கூடத்திலதான் நான் நாலாம் வகுப்பு வரைக்கும் படிச்சனான்.”

முன்னாலிருந்த வேலணை. சரஸ்வதி வித்தியாலயத்தை அவளுக்குக் காட்டினேன். ஏனோ தெரியவில்லை என் சின்ன வயதுக் கதைகளை என்சம்பந்தப்பட்ட இடங்களை நதீஷாவிடம் பகிர்வதில் மனம் அதீத சந்தோஷம் அடைந்து கொண்டிருந்தது.

“அப்பப் பிறகு எங்கை படிச்சனீங்க?”

“91 இல இடம்பெயருற வரைக்கும் வேலணை சென்றலில. ஆனா இப்ப அது security zone-ஆ இருக்கிறதால நாங்க அங்கை போகேல்லாது”

“இஞ்சே அந்தா. அதிலயொரு புளியமரம் தெரியுதெல்லா. அதுக்குக்கீழ முந்தியொரு வயதுபோன ஒராள் பெட்டிக்கடை வைச்சிருந்தவர். அப்பாக்குத் தெரியாம களவாப் போய் புளுட்டோ இனிப்பெல்லாம் அவரிட்டைத்தான் வாங்கிறனாங்க. அதோட முந்தி சின்னனில இன்னொரு ரொபியும் வாங்கிறனாங்க, அதுக்குள்ள நல்லநல்ல வடிவான stickers வரும் எண்டதால”

“ம்ம்ம்...அப்ப சின்னனில நிறைய களவெல்லாம் செய்திருக்கிறீங்க போல...”

“அப்பிடியெண்டில்ல. அப்பாவின்ரை கடை றோட்டுக்கு இந்தப் பக்கம் இருந்தது. அப்பா பல்லுச் சூத்தையாகிப் போயிருமெண்டு இனிப்பு ரொபியொண்டும் சாப்பிட விடமாட்டேர். அதாலதான் அம்மா தாற காசில பெடியளோட களவாய்ப் போய் வாங்கிறனான்”

“இந்தா நேரே முன்னுக்குத் தெரியுது. முந்தி இதில library இருந்தது. அதோட சேர்ந்து ஆயுர்வேத ஆஸ்பத்திரி இருந்தது. சும்மா வருத்தமெண்டு பொய்சொல்லி இஞ்சை வந்த கோரோசனை வேண்டுறனான். எனக்கு அது விருப்பம். VC, court, police station எல்லாம் இந்த வளவுக்குள்ள தான் இருந்தது. இந்தத் தேவா அரங்கு இப்பதான் வந்திருக்கு.”

“எல்லாம் சொல்லீற்றீங்க. அப்ப hospital இஞ்சை இருக்கேல்லையா?”

“நல்ல கதை. அது இப்பிடியே அந்தப் புளியடியால திரும்பினாத் தெரியும். புளியமரத்துக்குப் பின்னால AGA office இருக்குது.”

“அப்ப நீங்க ஒருக்காவும் அந்தக் hospital-க்குப் போனதில்லையா?”

“சைக்கிளால விழுந்து வாற காயங்களுக்கு மருந்துகட்ட அங்கதான் போறனான். சண்டை நடக்கேக்குள்ளை திருநாவுக்கரசு எண்டு ஒரு டொக்ரர் இருந்தவர். அவர்அப்ப bunger-க்குள்ளை வைச்சே பிள்ளைப்பேறெல்லாம் பார்த்தவராம்”

“ஓ! அப்ப உங்களுக்கு வேலணையில வந்திருக்க விருப்பமா?”

“ஆருக்குத்தான் பிறந்த .இடத்தில இருக்கப் பிடிக்காது? சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா எண்ட பாட்டுக் கேள்விப்படேல்லையா?”

“அப்ப நாங்களும் இஞ்சையே வந்திருப்பமா?”

“நதீஷா! நாங்க அடிக்கடி வந்து போகலாம். ஆனா இஞ்சையே நிரந்தரமா இருக்கிறதெண்டது ரெண்டுபேருக்கும் கஷ்ரமாத்தான் இருக்கும்”

“ஏன் அப்படிச் சொல்லுறீங்க?”

“யோசிச்சுப் பாருங்க. எதுக்கா எல்லாருக்குமே பிறந்த இடத்தில பற்று பாசம் எல்லாம் வருகுது?”

“ஏன்?”

“ஏனெண்டா அதுதான் நாங்க.”

“நீங்க என்ன சொல்லுறீங்க?”

“நான் எண்டு நாங்க என்னத்தைச் சொல்லுறம்? இந்த உடம்பையா? அப்பிடியெண்டா சினனனில இருந்த அதே உடம்பா இப்ப இருக்கிற இந்த உடம்பு? இல்லையே. விஞ்ஞானரீதியா உடலில இருக்கிற எல்லாக் கலங்களும் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டுதானே இருக்கு. அதோட ஆக்கள் செத்தாப்பிறகும் அவையின்ரை உடம்பு இருக்குத்தானே”

“அப்ப என்னத்தை நான் எண்டு சொல்லுறது? எங்கட எண்ணங்களையா?”

“எப்பிடி உடம்பில்லாம நாங்க இருக்கமுடியாதோ அப்பிடித்தான் மனம் எண்டு ஒண்டில்லாமலும் நாங்க இருக்கேலாது எண்டுதான் நான் நினைக்கிறன். அதோட உடம்பிலும் விட மனசுதான் நாங்க யாரு எண்டுறதை தீர்மானிக்குது. ஆனா எனக்குத்தெரிஞ்ச ஒராள் அடிபாடு ஒண்டுக்குள்ள அம்பிட்டு மயங்கிவீழந்து ஆஸ்பத்திரியில அட்மிட் ஆகி பிறகு அவருக்கு நினைவெல்லாம் தப்பி அவர் தான் ஆரெண்டதையே மறந்து போய் சரியாக் கஷ்ரப்பட்டுக் கொண்டிருந்தவர். அவற்றை நினைவுகள் எல்லாம் அழிஞ்சாப்பிறகும் தான் ஆரெண்டே தெரியாம அவர் உயிரோடதான் வாழ்ந்தவர் எண்டா எண்ணங்கள் தான் நாங்க எண்டு எப்பிடிச் சொல்லுறது?”

“நீங்க என்ன சொல்ல வந்தனீங்க. இப்ப என்ன சொல்லுறீங்க.”

“ம் கதையில நான் வேறை எங்கையோ போய்ற்றன். நான் என்ன சொல்ல வந்தனானெண்டா, சின்னவயசிலதான் நாங்க ஒவ்வொண்டையும் அறியத் தொடங்குகிறம். எல்லாருக்கும் அவையின்ரை அம்மாவையின்ரை சாப்பாடுதானே நல்ல ருசியாத் தெரியும். ஏன் அப்பிடி? ஏனெண்டா அதுதான் அவை முதன்முதலா விரும்பிச்சாப்பிட்ட சாப்பாடு. அந்த முதல் அனுபவத்தை மூளை மறக்காது. பிறகு வாற அது சம்பந்தமான ஒவ்வொரு அனுபவத்தையும் மூளை அந்த முதலாவது அனுபவத்தோட ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கீரும். முதல் காதலையும் முதல் முத்தத்தையும் மறக்கமுடியாது எண்டுவினம். அதுகளை மட்டுமல்ல. எல்லா முதல் அனுபவங்களையும் மறக்கேலாதுதுான். எங்கட வாழ்க்கையில நடக்கிற பெரும்பாலான சம்பவங்களின் முதல் அனுபவம் சின்ன வயசிலதான் எங்களுக்குக் கிடைக்குது. அதாலதான் சின்னவயசில வளர்ந்த இடத்தில எல்லாருக்கும் ஒரு பற்று வாறது.”

“நீங்க என்ன சொல்ல வாறீங்க? அப்ப உங்களுக்கு இனி இஞ்சையிருக்க விருப்பமில்லையா?”

“அப்பிடியில்லை நதீஷா. நான் என்ன சொல்லுறன் எண்டா சின்ன வயசில அனுபவிச்ச அதே உணர்வுகளை இப்பவும் அனுபவிக்கவேணுமெண்டு ஆசையாத்தான் இருக்கு. ஆனா எதிர்பார்க்கின்ற அந்த உணர்வுகள் இனித்திரும்பிக் கிடைக்காது எண்டதுதான் உண்மை.”

“ஏன் அப்பிடிச் சொல்லுறீங்க?”

“யோசிச்சுப் பாருங்க? அதே சின்னவயசு அனுபவங்களை எனக்குத் தரவோ ஞாபகப்படுத்தவோ இப்பை இந்த இடங்களை விட்டா மனிசர் எண்டு ஆரு இருக்கினம்? சொந்தக்காரரோ ஊராக்களோ ஒருத்தரும் இஞ்சையில்லை. கொஞ்சப்பேர் சண்டையால செத்துப் போய்ற்றினம். அரைவாசிப்பேருக்கு மேல பிரச்சினைகளோட வெளிநாடுகளுக்குப் போய் அங்கையே செற்றிலாகீற்றினம். மிஞ்சின ஆக்களும் யாழ்ப்பாணம் வவுனியா கொழும்பெண்டு போயிற்றினம். அப்ப இந்த நிலத்தையும் கட்டிடங்களையும் விட்டா ஊரெண்டு சொல்லிப் பாசம் வைக்க ஆரு இருக்கினம்? ஊரெண்டிறது வெறும் நிலத்தை மட்டுமில்ல அங்கையிருக்கிற மக்களையும் சேர்த்துத்தான். மக்களே இல்லாமப் போனாப்பிறகு...?”

“அப்ப இப்ப உங்களுக்கு உங்கட ஊரில வெறுப்பு வருதா?”

“ம்ம்ம்...என்ன சொல்லுறீங்க நதீஷா? சொந்தஊரில வெறுப்பு வருமா? சொந்த ஊர் மேல இருக்கிற பாசம்தான் போகுமா? நான் செத்தாலும் எனக்கு என்ரை ஊரில வெறுப்பு வராது. நான் என்ன சொல்லுறன் எண்டா இதில்லை என்ரை நினைவுகள் வாழத்துடிக்கின்ற ஊர். அந்த ஊர் எப்பவோ அழிக்கப்பட்டு விட்டது எண்டதுதான் உண்மை. ஆனா அந்த நினைவுகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுறதுக்கு இது தேவை.”

“அண்ணே! van-ஐ எடுங்கோ. வெளிக்கிடுவம்.”

நதீஷாவுடனான உரையாடலில் உதயனும் ஐயரும் வந்துவிட்டிருந்ததைக் கவனிக்கத் தவறியிருந்தேன்.

van கிளம்பி புளியடியால் திரும்பி ஆஸ்பத்திரி தாண்டிச் சென்று கொண்டிருக்க எங்களுக்குள் மௌனம் வந்து குந்திக்கொண்டது. நதீஷா இருபுறமும் தன் பார்வையைச் செலுத்திக் கொண்டே வந்தாள். அவளுக்கு இவையெல்லாம் புதிது. மலைநாட்டில் பிறந்து வளர்ந்த அவளுக்கு பார்க்குமிடமெங்கினும் சமதரையாகக் கிடக்கும் பிரதேசங்கள் வித்தியாசமாகவே தெரியும். அவளைக்குழப்பாமல் நான் சற்றே கண்களை மூடிக் கொண்டேன்.
பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11 பாகம்-12 பாகம்-13 பாகம்-14 பாகம்-15 பாகம்-16 பாகம்-17 பாகம்-18 பாகம்-19 பாகம்-20 பாகம்-21 பாகம்-22 பாகம்-23 பாகம்-24 பாகம்-25 பாகம்-26 பாகம்-27 பாகம்-28 பாகம்-29 பாகம்-30 பாகம்-31 பாகம்-32 பாகம்-33 பாகம்-34 பாகம்-35 பாகம்-36 பாகம்-37 பாகம்-38 பாகம்-39 பாகம்-40 பாகம்-41 பாகம்-42 பாகம்-43 பாகம்-44 பாகம்-45 பாகம்-46 பாகம்-47 பாகம்-48 பாகம்-49

1 comment:

  1. எனக்கும் பழைய நினைவுகளை கிழறி விட்டுட்டீங்க. கோட்டை பிரச்சினை நேரம் பட்ட கஸ்ரங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதவை. ஊரோடு வாழ்ந்த என்னையும் ஊரை விட்டு நிதந்தர அகதியாய் வெளியேற்றிய காலப்பகுதியது. அண்டைக்கு ஊரை விட்டு வெளிக்கிட்ட நான் இன்னும் ஊருக்கு போக சந்தர்ப்பம் கிடைக்கேல்ல.

    ReplyDelete