Sunday, November 27, 2011

வேரென நீயிருந்தாய்...(44)

வவுனியாவ வவுனியாவ வவுனியாவ....

தூக்கம் கலைந்து எழுந்தேன். சிற்றூர்தி நடத்துநர் பயணிகளை அழைத்துக் கொண்டிருந்தார். ஜன்னலுக்குள்ளால் வெளியே தெரிந்த கடைகளின் பெயர்ப்பலகைகளைப் பார்த்தேன். அட அதற்குள் மதவாச்சி வந்துவிட்டிருந்தது. bus ticket எடுக்காதது ஞாபகத்திற்கு வரவே purse-இனை எடுத்தேன்.

“ஜேந்தன்! ரிக்கற் நான் எடுத்திற்றன்”

அட! நதிஷாவும் சிற்றூர்திக்குள் இருப்பது ஞாபகத்திற்கு வந்து திரும்பினேன். முறுவலித்தாள்.

“நீங்க எங்க வாறீங்க? ஏன் நீங்க எடுத்தனீங்க?”

“Conductor ரிக்கற் எடுக்கச் சொல்லேக்குள்ள பார்த்தன். நீங்க நல்ல நித்திரை. அதுதான் நான் எடுத்தனான். பிடிக்காட்டி ரிக்கற் காசைத் தாங்கோ. ஆனா இப்ப எடுக்கிற படியால double price. OK- யா?”

சிரி்த்தாள்.

“OK OK. அப்ப நீங்க இண்டைக்கு faculty-க்குப் போகேல்லையா? நீங்க எங்க பயணம்?”

“நான் இப்ப faculty-க்குத்தான் போய்க்கொண்டிருக்கிறன். bus பெராவுக்குத்தானே போய்க்கொண்டிருக்கு. கேக்கிற கேள்வியைப் பாரன். ரிக்கற்றும் எடுக்காம நாலுமணித்தியாலமா நல்லா நித்திரை அடிச்சிற்றுக் கேக்கிறார் கேள்வி”.

சிற்றூர்தி புறப்பட்டது.

“நீங்க தனியா திரும்பி வவுனியாவிலயிருந்து கண்டிக்குப் போவீங்களா?”

“இல்லை எனக்குப் பயம். நீங்க திரும்பிக் கொண்டுபோய் விடுறீங்களா?”

“ஏன் என்னால உங்களுக்கு தேவையில்லாத கஷ்ரம்?”

“அப்ப என்னையும் உங்களோட ஊருக்குக் கூட்டிக் கொண்டு போங்கோ. நானும் இதுசரைக்கும் யாழ்ப்பாணத்தைப் பார்த்ததில்லை. இந்தச் சாட்டோட பார்த்திற்று வருவம்”.

அவள் என்னைக் கிண்டலடிக்கிறாள் என்பது புரிந்தது.

“நீங்க வருவீங்க எண்டா நான் கூட்டிக்கொண்டு போறன்.”

“உங்களால ஏலாது ஜேந்தன். எதுக்குச் சும்மா எல்லாம் கதைக்கிறீங்க?”

“நீங்க வருவீங்க எண்டால் என்னால ஏலும்”

“சலன்ஞ்?”

“சலன்ஞ்!”

சிற்றூர்தி வவுனியாவை அடைந்தது. கீழே இறங்கினோம்.

“Thanks நதஸஷா. இவ்வளவு தூரம் என்னோட வந்ததுக்கு. I'm extremely sorry, நான் நிததிரை கொண்ட படியாலதானே நீங்க வவுனியாவுக்கு வரவேண்டி வந்தது. 11.30 க்கு கண்டி bus இருக்கு. நான் நிண்டு உங்களை ஏத்தி விட்டிட்டு யாழ்ப்பாணத்திற்கு வெளிக்கிடுகிறன்.

“என்ன விளையாடுறீங்களா? அப்ப வரேக்குள்ள பண்ணின சலன்ஞ்?”

“அது சும்மா பகிடிக்கெண்டு உங்களுக்கும் தெரியும். வாங்க போய்ச் சாப்பிட்டிட்டு வருவம். நீங்க கண்டி bus ஏறினாப்பிறகு நான் ஓமந்தை bus எடுக்கிறன்.”

“வாங்க முதலில போய்ச் சாப்பிடுவம்.”

ஓமந்தை ஓமந்தை.. அண்ணே வாங்கோ ஓட்டோவில போவம்..”

முச்சக்கரவண்டிக்காரர்களை விலத்திக்கொண்டு அருகிலிருந்த prince உணவகத்திற்குள் நுழைந்தோம்.

“சரி நதிஷா. அப்ப இனி நீங்க வெளிக்கிடுங்க.”

“அவள் என்னை விலத்தி விடு்டு ஓமந்தை செல்லும் பேருந்திற்குள் ஏறி அமர்ந்து கொண்டாள்.

“நதிஷா விளையாடுறீங்களா? இறங்குங்க.”

“ஏன் இறங்க வேணும்?”

“நீங்க எங்கை வாறீங்க? இறங்கிக கண்டிக்குப் போங்க.”

“நான் எங்க போகவேணுமெண்டுறதைச் சொல்லுறதுக்கு நீங்க ஆரு? என்னைத் தொட்டுத் தாலி கட்டின்னீங்களா?”

அவளிடமிருந்து இதைநான் எதிர்பார்க்கவில்லை. சும்மா என்னுடன் விளையாடுகிறாள் என்நே நான் ஆரம்பத்தில் நினைத்திருந்தேன். ஆனால் இப்போது அவளது முகத்தைப் பார்க்கையில் அவள் இதில் தீவிரமாயிருப்பது புரிந்தது. ஐயோ கடவுளே! தலையிலடித்துக் கொண்டேன். இவளை என்ன செய்வது? இவள் என்னுடன் வரவேண்டும் என்றுதான் ஆரம்பத்தில் என் மனம் ஏங்கியிருந்தது. ஆனால் இப்போது அவள் என்னுடன் வரப் போகின்றாள் என்று தெரிந்ததும், அதன் பின்னான விளைவுகளை நினைத்துப் பயம் வருகின்றது. இந்த மனித மனமே இப்படித்தானே. அதற்கு வேறுவேலை கிடையாது. சும்மா இருக்காமல் கண்டதையும் நினைத்து கற்பனையில் தவிக்கிறது. ஆனால் நிஜவாழ்க்கையில் அதை எதிர்கொள்ள அஞ்சிப் பின்வாங்குகின்றது. சரிவராது என்று தெரிந்தும், அது கிடைக்காது என்று தெரிந்தும் அதற்கா அவாஞ்சைப்படும் மனது அது கிடைக்கும் என்றவுடன் எதிர்மறையான சிந்தனையில் இறங்கிவிடுகிறது. பெரும்பாலான காதல்கள் கல்யாணத்தின் பின் கசந்துபோவதும் அதனால் தானே. காதலிக்கும் வரைக்கும் இருக்கும் சந்டதோஷம் கல்யாணம் நடந்தவுடன் வரும் பொறுப்பினால் (responcible) கசந்து விடுகிறது. எங்களில் பெரும்பாலோரும் சந்தோஷத்தைத்தான் எதிர்பார்க்கின்றோமேயன்றி responcible-இனை ஏற்றுக் கொள்வதில் தயங்கித்தானே நிற்கின்றோம் அதனால்தானே நான் அக்காவின் பாதையை விட்டுவிட்டு படிக்க வந்தேன்.

பலரும் எங்களை வித்தியாசமாய்ப் பார்ப்பதைக் கவனித்து விட்டு அமைதியானேன்.

“கோபமா ஜேந்தன்? நானும் யாழ்ப்பாணம் தான் வாறன். உங்களுக்கு எந்த disturbance-ம் என்னால வராது. நான் அங்க தங்கிறதுக்கு என்ரை uncle ஒழுங்கு செய்வேர். அவர் யாழ்ப்பாணத்திலதான் இப்ப duty-ல இருக்கிறேர்.”

“அப்பையேன் இதை முதலிலயே சொல்லேல்ல?”

“சும்மா உங்களுக்கு ஒரு surprise ஆ இருக்கட்டும் எண்டுதான்.”

“OK. OK”

“உங்களுக்கு இன்னும் என்னில கோபம் போகையில்லப் போல. உண்மையைச் சொல்லுங்க”

“இல்லை நான் ஏன் உங்களில கோபப்படப்போறன். உங்களில கோபப்பட எனக்கு என்ன உரிமையிருக்கு?”

அவளுக்கு நான் கோபப்படுவது புரிந்தது.

“ஜேந்தன் எனக்காக ஒரேயொரு help மட்டும் செய்வீங்களா. please. அதுக்குப்பிறகு நான் உங்களை எந்தவிதத்திலும் disturb பண்ண மாட்டன். promise.ஆ. உங்களை விட்டா எனக்கு இஞ்ச வேறைஒருத்தரையும் தெரயாது.”

“சரி என்னெண்டு சொல்லுங்க.”

“நான் ஒருக்கா கிளிநொசச்சிக்கும் போகவேணும். என்னோட நீங்களும் வரவேணும்.”

மனதிற்குள் உதறல் எடுத்தது. இவள் எதற்காகவோ என்னைப் பயன்படுத்தப் போகிறாள். அவள் எதறகாகக் கிளிநொச்சிக்குச் செல்லவேண்டும்? இவள் அண்ணியின் அண்ணாவும் கிளிநொச்சியில் தானே கொல்லப்பட்டார். ஒருவேளை அது சம்பந்தமாக கிளிநொச்சியில் ஏதாவது பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடப் போகின்றாளா? அல்லது அவர் கொல்லப்பட்ட இடத்திற்குச் சென்று பார்க்க விரும்புகின்றாளா? அல்லது ஒருவேளை இவளிடம் கிளிநொச்சி பற்றிய ஏதேனும் இரகசியங்கள் இருக்கக் கூடுமோ? அப்படியானால், என்னைப் பகடைக்காயாக்கத்தான் என்னுடன் நெருங்கிப்பழகி இப்போது இங்கே ஓமந்தைவரை வந்திருக்கிறாள்.

என் முகமாறுதல்களை அவதானித்தவள்,

“Please ஜேந்தன். என்னில உங்களுக்கு நம்பிக்கையில்லையா. நீங்க ஒண்டும் செய்ய வேண்டாம். என்னோட துணைக்கு மட்டும் வாங்க. please எனக்காக இதைமட்டும் செய்யுங்க. அதுக்குப்பிறகு நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கிறன்”.

அரைமனதாய்த் தலையாட்டினேன்.

ஓமந்தை சிறிலங்கா இராணுவச் சோதனைச் சாவடியில் பிரிந்து பின் மீண்டும் சேர்ந்து இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைந்தோம். அங்கே பயணிப்பதற்கான விண்ணப்பப்படிவங்களைப் பெற்றுக் கொண்டு மீண்டும் வேறொரு பேரூந்தில் ஏறி புளியங்குளத்தை அடைந்தோம். எனக்கான சோதனைகள் யாவும் முடிவடைந்து வெளியே வந்து அவளுக்காகக் காத்திருக்கத் தொடங்கினேன். நீண்ட நேரமாகியும் வரக் காணோம். அவளுக்கு ஏதும் பிரச்சனையோ? அல்லது அவள் பிரச்சனைக்குரியவள் என்று அவர்கள் கண்டறிந்திருப்பார்களோ? நெஞ்சு பதைபதைக்கத் தொடங்கியது.

மேலும் பதினைந்து நிமிடம் கழித்து அவளுடன் இரண்டு பெண் இயக்க உறுப்பினர்களும் என்னை நோக்கி வந்தார்கள். நெஞ்சுக்குள் திக்திக் என்றது. நெருங்கி வந்தவர்கள் என்னைப்பார்த்துப் புன்னகைத்தார்கள்.

“வாங்க எங்களோட” அழைத்தார்கள்.

எதுவும் புரியாமல் அவர்களைப் பின் தொடர்ந்தேன். சற்றுத்தூரம் நடந்து சென்று van ஒன்றில் ஏறினார்கள். என்னையும் ஏறச் சொன்னார்கள். எங்களுக்கிடையில் கனத்த மௌனம். யாரும் எதுவும் பேசவில்லை. சிலமணி நேரங்களின் பின் van கிளிநொச்சியை அடைந்து விட்டிருப்பது தெரிந்தது. சற்றுநேரம் கழித்து van A9 நெடுஞசாலையினின்றும் விலத்தி ஓடத் தொடங்கியது. எங்கே சென்று கொண்டிருக்கின்றோம். எதுவும் புரிபடவில்லை. கற்று நேரத்தின் பின் van-இன் வேகம் குறைவதை உயர்ந்தேன்.

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்

இவள் எதற்காக இங்கே வந்தாள்? ஆச்சரியமாயிருந்தது. என்னை van இல் இருக்கச்சொல்லிவிட்டு அவளும் ஒரு இயக்க உறுப்பினரும் உள்ளே நுழைந்தார்கள். சற்று நேரத்தின் பின் என்னையும் உள்ளே அழைத்தார்கள். வியப்புடன் உள்ளே சென்றோம். எங்களை அழைத்துக் கொண்டே துயிலமில்லத்தினூடாக நடக்கத்தொடங்கினார்கள். ஒரு இடம் வந்ததும். நதிஷாவிடம் ஏதோ சொல்லிவிட்டு அவர்கள் வெளியேற நதிஷா என்னருகே வந்தாள்.

“Please என்னோட வாங்க ஜேந்தன்”

எதுவுமே புரியாமல் அவள் அருகில் சென்றேன்.

“என் இடது கையினைத் தன் வலது கரத்தினால் பிடித்துக் கொண்டவள்,

“Please கண்ணை மூடிக்கொண்டு என்னோட வாங்க. நான் சொல்லும் மட்டும் கண்ணைத் திறக்காதீங்க please...."

அந்த சூழ்நிலை மனதினுள் ஏற்படுத்திய தாக்கம் அவள் வேண்டுகோள்களையெல்லாம் மறுப்பின்றி ஏற்கச் செய்தது.

“அப்பிடியே கீழ இருங்க. நான் சொலு்லும் மட்டும் கண்ணைத் திறக்காதீங்க. please"

அப்படியே கண்மூடியிருந்தேன். சிறிது நேரத்தின் பின்,

“சரி இப்ப கண்ணைத் திறவுங்க”

திறந்தேன். அதிர்ந்தேன்.

அது போர்க்கள உடையில் அர்த்தநாரீஸ்வர். தாயக விடுதலைக்காய்த் தங்களையே ஆகுதியாக்கிய தியாகங்களுக்காய், அவர்களிலும் முகம்காட்ட முடியா வீரமறவர்கள் நினைவாக எழுப்பப்பட்டிருந்த கல்லறை. நெஞ்சுக்குள் ஏதோ செய்தது. கீழே மலர்க்கொத்துக்கள் வைக்கப்பட்டிருக்க நதிஷா அஞசலி செலுத்திக்கொண்டிருந்தாள்.

அப்படியானால்....... இவளுக்கு அக்காவைப் பற்றித் தெரியுமா?

அதிர்ந்தேன். இத்தனை நாட்களாய் அதை ஏன் காட்டிக் கொள்ளாமல் இருந்தாள். தன் அஞ்சலியைச் செலுத்தி முடித்தவள்,

“ஜேந்தன்! நீங்க உங்கட அக்காவிற்கு எதுவும் செய்யேலாம இருந்திருப்பீங்க. இதிலயிருந்து ஒருபிடி மண் எடுத்துக்கொண்டு வாங்க. அம்மாவின்ரை அந்திரெட்டியோட சேர்த்து அக்காவுக்கும் கிரியைகளைச் செய்வம்”

அடிவயிற்றிலிருந்து உருண்டையொன்று பேரலயைாய் எழுந்து வந்து தொண்டைக்குழியை அடைத்தது.

“அக்க்கா....................”

விம்மியழத் தொடங்கினேன்.

“காணும் ஜேந்தன் இனி அழாதீங்க!”

இன்னவென்று சொல்லமுடியாத உணர்வுகள் அலையலையாய் உள்ளத்திற்குள் எழுந்தன. கண்கள் வெடித்துச் சிதறுமாற்போல் கண்ணீர் பொங்கியெழுந்து வழிந்தது. நதிஷா என் கைகயுடன் தன் கரங்களைக் கோர்த்து இறுகப்பற்றினாள். என்னிலை இழந்து தேம்பியழத் தொடங்கினேன். நதீஷா என்னை இழுத்து தன் மார்புடன் அணைத்துக் கொண்டாள்.

“அம்மா...................”

அவள் தோளில் தலைபுதைத்துக் கொண்டேன். இப்போது அவள் எனக்கு தேவதையாய், தேவியாய், நண்பியாய் அக்காவாய், அம்மாவாய் எல்லாமாய், யாதுமாகி நின்றாள்.
பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11 பாகம்-12 பாகம்-13 பாகம்-14 பாகம்-15 பாகம்-16 பாகம்-17 பாகம்-18 பாகம்-19 பாகம்-20 பாகம்-21 பாகம்-22 பாகம்-23 பாகம்-24 பாகம்-25 பாகம்-26 பாகம்-27 பாகம்-28 பாகம்-29 பாகம்-30 பாகம்-31 பாகம்-32 பாகம்-33 பாகம்-34 பாகம்-35 பாகம்-36 பாகம்-37 பாகம்-38 பாகம்-39 பாகம்-40 பாகம்-41 பாகம்-42 பாகம்-43

2 comments:

  1. இது sensitive ஆகப் போகுது. கதையில் வரும் ஜெயந்தன் நதீஷாவை இழந்துவிடக் கூடாது என்று படுகிறது.

    2, 3 பதிவுகளுக்கு முன் சாதரணமாக யோசித்தேன், unexpected twist.

    ReplyDelete
  2. மாவீரர் தினத்திற்கு கதையினூடு எங்களை கிளி கனகபுரம் துயிலும் இல்லம் அழைத்து சென்ற உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள். இன்றைய தினம் துயிலும் இல்லம் சென்று அழுது வந்தது போல் இருக்கிறது...கதைக்கு நன்றி...

    ReplyDelete