Monday, July 19, 2010

மயிருக்கு மரியாதை


இன்றைய மதியநேர உணவிற்காக வெளியேறுகையில்,
“Hey! wow! you need not to take care about your hair....”
கலாய்த்தவாறே சென்றார்கள் வேறு பிரிவுகளில் பணிபுரியும் சில பெண்கள்.

தலையைத் தடவி விட்டுக் கொண்டேன். என்னோடு அருகில் கூடவந்த, பணியிடத்தில் பக்கத்திலிருந்து பெட்டி தட்டுபவரும் தனது தலையைத் தடவி விட்டுக்கொண்டார். கலாய்த்தவர்கள் இளம்பெண்களாயிருந்திருந்தால் (அதிலும் அழகானவர்களாயிருந்திருந்தால் சொல்லிவேலையில்லை), அட! எங்களையும் லுக்கு விடுகிறார்களே என்று நெஞ்சுக்குள் கிளுகிளுத்திருக்கும். இவர்கள் வயதானவர்கள் என்பதால் சித்தத்தில் பித்தம் ஏறாமல் சிந்தனை வந்தது.

“When the student ready, the teacher appears” (மாணவன் தயாராயிருக்கும் போது குரு தோன்றுகின்றார்) என்றார் விவேகானந்தர். “இதோ, இங்கே செத்துக்கிடக்கும் எலியும் புத்தியுள்ளவனுக்கு முதலாக அமையும்” என்று எதேச்சையாக யாரோ ஒருவருக்குச் சொல்லக் கேட்டதை, அவரிடம் அறிவுரை கேட்க வந்தவன் தனக்குச் சொல்லப்பட்டதாக நினைத்து அந்த செத்த எலியினையே முதலாக வைத்து பெரிய வியாபாரியாகியதைப் பற்றி சின்ன வயதுகளில் பாடசாலைப் புத்தகத்தினில் கற்றிருக்கிறோம். ஆயினும் சிலவேளைகளில் மாணவன் தயாராகாமலிருக்கையில், சம்பவங்களைக் கொண்டு குரு அவனுக்கு விடயங்களை உணர்த்தி விடுகிறார். காமம் தலைக்கேறி அர்த்தசாமத்து அடைமழைப்போதினில் செத்தபிணத்தினை மரக்கட்டையாக நினைத்து ஆற்றைக் கடந்தும், மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த விஷப்பாம்பினைக் கயிறாகக் கருதி சேற்றினைக் கடந்தும் தாசி வீட்டினையடைந்த நகுலனுக்கு, அத்தனை நாளும் காமக்கிழத்தியாய்க் கிடந்தவள், குருவாக மாறி அவனை ராமதாசராக்கினாள். ஆக சூழ்நிலையும், மாணவனின் விழிப்புணர்வும் சரிவர அமைகையில் சாதாரண சம்பவங்களே பல அரிய பாடங்களைக் கற்றுத் தந்து விடுகின்றன.

என்னருகே தனது தலையைத் தடவியவாறு வந்தவர், தனது சிரசிலேயே வெள்ளாமை செய்து கொண்டிருப்பவர். பாரிய பணச்செலவில் மயிரினைப் பயிரிட்டுக் கொண்டிருப்பவர். அண்மையில் நாற்றுநட்டுவிட்ட வயிலினைப்போல் மயிர்க்கற்றைகள் முளைவிட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால் இதே நபர் ஏறத்தாழ பத்து வருடங்களுக்கு முன்னர் தலைமயிர் பற்றிய கவலைகளின்றி என்னைப்போல்தான் இருந்திருப்பார். “உப்பில்லாவிட்டால் தெரியும் உப்பின் அருமை. அப்பன் இல்லாவிட்டால் தெரியும் அப்பனின் அருமை” என்கின்ற பழமொழிக்கிணங்க நாங்களும் எம்மிடம் இப்போது இருக்கின்றவைகளைப் பற்றிய நிறைவான எண்ணங்களையோ அல்லது அவற்றை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதற்குரிய முயற்சிகளையோ விட்டுவிட்டு இழந்தவை பற்றியும் இல்லாதவை பற்றியுமான கவலைகளில் நிகழ்காலத்தினைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றோம்.

“உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும். என் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்” என்கின்ற திரையிசைத் தத்துவப்பாடலுக்கு எளிய உதாரணமும் இந்த மயிர்தான். தலையில் இருக்கும் வரை எத்தனை மரியாதை இந்த மயிருக்கு? அதனை முடி என்று கூட அழைப்பதுண்டு. 'முடி' என்கின்ற பெயர்ச்சொல் மன்னர்கள் அணியும் கிரீடங்களையும் குறிக்கின்றது. தமிழக நண்பர்களுக்கு சில வேளைகளில் மயிர் என்று கூறுவது அசூசையாக இருக்கலாம். 'மயிர்' என்பது பேச்சு வழக்கில் தவிர்க்கப்படவேண்டிய சொல் என்று சில தமிழக நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆயினும் தமிழகத்தின் பழந்தமிழ் இலக்கியங்களில் கூட மயிர் என்கின்ற சொல் பாவனையில் இருந்திருக்கின்றது. “மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்” என்றிருக்கிறார் வள்ளுவர். ஆக மயிர் என்கின்ற வார்த்தை தவிர்க்கப்படவேண்டிய வார்த்தையோ அன்றி அசூசைப்பட வேண்டிய வார்த்தையோ அல்ல. ஆயினும் “ஓரூருக்குப் பேச்சு, இன்னோரூருக்கு ஏச்சு” என்கின்ற பழமொழியும் எம்மிடையே உண்டு. அண்மையில் தமிழக சஞ்சிகை ஒன்றினில் வந்தவொரு கட்டுரையை வாசிக்கையில் அதில் குறிப்பிடப்பட்டிருந்தவொரு உள்ளூர் பழமொழி (பொன்னி வாருவான்னு பொச்சைத் திறந்து வைச்சுக் காத்திருந்தாராம் நம்மூருப் புள்ளாரு [பிள்ளையார்]) எனக்குப் புரியவில்லை. எனது தமிழக நண்பரிடம் அர்த்தம் கேட்டபோது அதைச் சொல்வதற்கு ரொம்பவும் வெட்கப்பட்டார். அப்புறம் அதற்கான விளக்கத்தினை ஆங்கிலத்தில் கூறினார். என்ன இது? தமிழில் கூறுவதற்கு வெட்கம்/கூச்சம்/அசூசை. ஆனால் அதனையே ஆங்கிலத்தில் சொல்வதில் எந்தத் தயக்கமும் இல்லை. ஏனப்படி? “நெருப்பென்றால் சுடாது” என்றும் சொல்கிறார்கள். பின் ஏன் இந்த முரண்பாடு? ஆக 'அஞ்சுவது அஞ்சாமை பேதமை' என்பது போல இதுவும் சொல்லைத் (வார்த்தையை) தெரிந்து அதைச் சொல்லத் தெரிவதில் தமிழ்ப்பண்பாடு குறுக்கிடுகின்றதா? “தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிக்கிறது போல” மயிரை விட்டிட்டு...

“பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா? இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது. அதில் அர்த்தம் உள்ளது” சிரிசிலிருக்கும்வரை தலைமயிருக்கு நாம் செலுத்தும் அக்கறையையும் கவனிப்பையும் பார்க்கும் உதிர்ந்துவிட்ட மயிர் என்ன நினைக்கும்?

எண்ணெய் வைத்து அரப்பு/சீயாக்காய்/ஷம்போ தேய்த்து முழுகி எத்தனையோ வாசனைத்திரவியங்கள் தடவி சீப்பு வைத்து தலை சீவி... எதற்காக? பெண்களின் கூந்தல்அழகினை சிலாகித்துப்பாடாத கவிஞர்கள் உண்டா? பெண்களின் கூந்தல்மணம் இயற்கையா செயற்கையா என்கின்ற வாதத்தில் நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே என்றாரே நக்கீரர். ஒற்றைத் தலைமுடியை வைத்து அரசியின் தொடையில் மச்சமுமிருக்கும் என்பதை ஊகித்து சிலைவடித்தானே சிற்பி. ஒற்றை முடியில் அத்தனை கூறுகளும் அடங்கியிருக்கிறதா? “ஒருபிடி ஓலை. திருபிடி ராசா. காசிக்குப் போனாலும் வாசிக்க ஏலாது” என்று விடுகதையாகச் சொல்லப்பட்டாலும், கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையுமாமே.

அந்தக்காலத்தில் ஒருவனை அவமானப்படத்துவதற்கு அல்லது அசிங்கப்படுத்துவதற்கு அவனை மொட்டையடித்து விடுவார்களாம். ஆக எங்கள் முகவழகினை மெருகூட்டுவதில் இந்த தலைமயிர் பாரிய பங்களிப்பினைச் செய்வதனால்தானா இந்த மயிரைக் கொண்டாடுகின்றோம்? அப்படியானால் தங்கள் அழகினைச் சிதைத்துக் கொள்வதற்காகவா பௌத்த துறவிகள் மொட்டையடித்துக் கொள்கிறார்கள்? அழகாயிருப்பதில் சிந்தை மயங்கும் என்பதனாலா? அழகில் மயங்குகையில் அறிவு அடிபட்டுவிடுவதனாலா? அறிவு அடிபட்டு விடுகையில் உண்மைகளை உணரமுடியாமல் போய்விடுவதனாலா? ஆக அழகு என்பதே வெறும் மாயைதானா? ஆயினும் சில எளிய விடயங்களை ஒப்பிடுவதற்கும் இந்த மயிர் உவமானப்படுத்தப் படுகிறதே. பிறகென்ன மயிருக்கு, இந்த மயிருக்கு இந்த மரியாதை?