Saturday, November 26, 2011

வேரென நீயிருந்தாய்...(42)

சிதையில் அம்மாவின் உடல் கிடத்தப்பட்டிருக்க, இறுதியாய் வாய்க்கரிசி போடப்பட்டுக் கொண்டிருந்தது. கடைசியாய் என்னையும் வாய்க்கரிசி போட அழைத்தார்கள்.

அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசை இட்டுப் பார்த்து மகிழாமல் - உருசி உள்ள
தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ
மகனே என அழைத்த வாய்க்கு.

பெட்டி மூடப்பட்டு விறகுககள் அடுக்கப்பட்டன. கொள்ளிக்குடம் இடது தோளில் வைக்கப்பட்டு கையில் கொள்ளியும் தரப்பட்டு இடஞ்சுழியாக மும்முறை வலம்வரப் பணிக்கப்பட்டேன்.

முந்தித் தவம்கிடந்து முந்நூறு நாள் சுமந்தே
அந்திபகலாச் சிவனை ஆதரித்துத் - தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்.

ஒவ்வொரு தடவையும் கொள்ளிக்குடம் கொத்துப்பட பின்னாலேயே தண்ணீரைச் சிதைக்குத் தெளித்தபடி தீபனும் வந்தான்..

வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்து என்னைக் காதலித்து - முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்.

மூன்றாம் சுற்று முடிந்ததும் சிதையைவிட்டுத் திரும்பி நின்றவாறே கொள்ளிக்குடத்தை பின்புறமாய் நழுவவிட்டு கொள்ளியினைச் சிதையினுள் செருகினேன்.

முன்னை இட்ட தீ முப்புரத்திலே
பின்னை இட்ட தீ தென் இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்க மூள்கவே.

திரும்பிப் பாராமல் அப்படியே என்னெ வெளியேறச் சொன்னார்கள். என்னை அணைத்தபடியே திரும்பவிடாமல் கூடவே தீபனும் வந்தான். மனசு குமுறியது.

வேகுதே தீ அதனில் வெந்து பொடிசாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ - மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை.

வீடுநோக்கி பயணம் தொடங்கியது. அனி அம்மாவும் இல்லை என்கின்ற உண்மை நெஞ்சைக் கசக்கிப் பிழிந்தது.

ஐயிரண்டு திங்களாய் அங்கம் எல்லாம் நொந்துபெற்றுப்
பையல் என்ற போதே பரிந்து எடுத்துச் - செய்ய இரு
கைப்புறத்தல் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி.

வீட்டினை அடைய கையில் வாசலின் குறுக்கே உலக்கை போடப்பட்டுக் கிடந்தது. வாசலில் கரைத்து வைத்திருந்த மஞ்சள் தண்ணீரில் முகத்தைம் கைகால்களையும் அலம்பிவிட்டு நிமிர வேப்பிலையைத் தந்தார்கள். அதையும் கடித்துத் துப்பிவிட்டுப் பின்புறமாய்ச் சென்று குளித்துவிட்டு உள்ளே வந்தேன். பெரும்பாலனாவர்கள் ஏற்கனவே வெளியேறிவிட்டிருந்தனர். சில மாணவர்களும் தீபனும் மாத்திரமே வெளியில் இருந்தனர். உள்ளே குசினிக்குள் சில பெண்களின் நடமாட்டம் தெரிந்தது.

“எல்லாரும் சாப்பிடலாம். உள்ளுக்க வாங்க”

நிமிர்ந்தேன். நதிஷா!

இவள் எப்படி இங்கே? ஆச்சரியமாயிருந்தது. எப்போது வந்திருப்பாள்? faculty-யில் கேள்விப்பட்டு வந்திருக்கலாம். தொடர்ந்து சிந்திக்கத் திராணியற்றுக் களைத்துப் போயிருந்தேன்.

மாலை மங்குகையில் எல்லலோரும் வெளியேற,

“தீபன்! dinner ready பண்ணி வைச்சிருக்கு. ரெண்டுபேரும் சாப்பிடுங்க. நான் நாளைக்கு காலமை வாறன். சரி ஜேந்தன். கவலைப்படாம இருங்க”

நதிஷாவும் விடைபெற நானும் தீபனும் தனித்து விடப்பட்டோம். அம்மா இல்லாத முதலாவது இரவு அது. ஆனாலும் நேற்றைய தூக்கமும் இன்றைய களைப்பும் தந்த அசதியில் படுத்த சிறிது நேரத்திலேயே நித்திரை தூக்கியடித்தது.

காலைவிடிந்தது. காடாத்துச் செய்வதற்குரிய ஆட்கள் வர நானும் தீபனும் அவர்களுடன் புறப்பட ஆயத்தமாகுகையில் நதிஷா வந்துவிட்டிருந்தாள்.

மயானத்தை நெருங்குகையில் அடிவயிற்றுக்குள் ஏதோ செய்யத் தொடங்கியது.

வெந்தாளோ சோணகிசி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ - சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரம்கிடந்து
என்தன்னையே ஈன்று எடுத்த தாய்.

கண்கள் ஊற்றெடுத்துப் பெருகத் தொடங்கி கன்னத்தில் கோடிழுத்துக் கொண்டிருந்தன.

“ஜெயந்தன் டேய். என்னடா நீ! அழாதேடா.” தீபன் தோளில் தட்டினான்.

கிரியைகளை முடித்துக்கொண்டு மீண்டும் வீடு திரும்பினோம்.

வீற்றிருந் தாள் அன்னைவீதி தனில் இருந்தாள்
நேற்று இருந்தாள் இன்று வெந்து நீறானாள்...

காலம்யாருக்காகவும் எதற்காகவும் காத்திருப்பதில்லை. அது தன்பாட்டில் ஓடிக் கொண்டிருந்தது. மறுநாள் மாலை,

“ஜெயந்தன் டேய்! நாளைக்கு site-இல concrete போடுறதெடா. நான் போக வேணும். அடுத்த weekend-இற்கு வாறன்.”

தலையசைத்தேன்.

“அப்ப நான் வெளிக்கிடுறன்”

““இரடா அம்மாட்டச் சொல்லீற்றுப் போ. அவா சிலவேளை உனக்கும் சேர்ததுப் புட்டவிக்கிறாவோ?..ஸ்ஸ்ஸ்... sorry-யடா.”
நாக்கைக் கடித்துக் கொண்டேன். அம்மாவின் இல்லாமையை இன்னும் நான் பூரணமாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பது புரிந்தது.

“சரியடா. நீ வெளிக்கிடு. நீயும் இல்லாட்டி நான் என்ன செய்திருப்பனெண்டு எனக்கே தெரியாது. thank you very much-டா”

“சரிமச்சான், நீ கவனமா இரு. அம்மா இல்லையெண்டிட்டு ஒழுங்காச் சாப்பிடாம விட்டிராதை. ஒவ்வொரு நாளும் அம்மாக்குக் காலமையில விளக்கு வைச்சுப் படைக்க வேணும். மறந்திராத, சரியா?”

தீபனும் கிளம்ப. எல்லாமே வெறிச்சோடிப் போனதாய்ப்பட்டது. எனக்கென்று இனி யார் இருக்கின்றார்கள்? உறவுகள் இல்லாத அனாதையாய் உணர்ந்தேன். இதுவரை அனுபவித்திராத உணர்வுகள் என்னைச் சூழ்ந்து கொள்ள மனதுக்குத் தாங்க முடியாமல் இருந்தது. அழுதால் கொஞ்சம் நிம்மதியாயிருக்கும் என்று தோன்றியது. ஆனால் ஏனோ தெரியவில்லை இப்போது அழுகையுமு் வர மறுத்தது.உலகத்திலேயே மிகவும் தூரதிர்ஷ்டமானது தனிமைப்படுத்தப்பட்ட உணர்வுதான். அந்தத் தனிமை உணர்வைப் போக்கின்றவை குடும்ப உறவுகளும் நட்புகளுமே. ஒருமனிதனுக்கு குடும்ப உறவா நட்பா பெரிது எனப் பல பட்டிமன்றங்கள் நடாத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் நான் இப்போது எந்த உறவுகளும் அற்று நட்புகளும் விலகித் தனியனாக உணர்ந்தேன். இப்போது என்னைப் பொறுத்தவரை குடும்பஉறவென்பது உள்ளாடை போன்றும். நட்பென்பது வெளியாடை போன்றும் தோன்றியது. உள்ளாடையா வெளியாடையா முக்கியம்? குடும்பஉறவுகள் எப்போதும் சேர்ந்திருக்கும். ஆனால் நட்புகள் தேவையானபோது சேர்ந்து பின் விலகி பின் சேர்ந்து...அது ஆதி தொடங்கி அந்தம் வரை எல்லாவற்றிலும் கூடவராது.

மறுநாள் திங்கட்கிழமை. வீட்டிலிருந்தால் யோசனைகள் அதிகமாகும் என்பதால் மீண்டும் வேலைக்குச் செல்லத் தொடங்கினேன்.

“ஜேந்தன்! இனி உங்களுக்கு lunch நான் கொண்டு வாறன்.”

“வேண்டாம் நதீஷா! நான் கடையிலயே சாப்பிட்டிருவன்“

“இல்லைப் பரவாயில்லை. நான் கொண்டு வாறன். நீங்க OKயானப் பிறகு நீங்க கடையில சாப்பிடுங்க. இப்ப நீங்க கவலையில சாப்பிடாம விட்டிருவீங்க. Atleast lunch ஆவது ஒழுங்காச் சாப்பிடுறீங்க எண்டிற நிம்மதி எனக்கு இருக்கும்”

என்னால் அவளைப் பரிந்து கொள்ளமுடியாமலிருந்தது. இன்னொருவன் மனைவியாகப் போகின்றவள் எதற்காக என்மேல் இத்தனை அக்கறை செலுத்த வேண்டும். வேண்டாம். இவள் நல்லவள். மிகமிக நல்லவள். இவள் வாழ்க்கையை நான் பாதிக்கக்கூடாது. இவள் என்னுடன் இப்படிப்பழகுவது அவள் வருங்காலக் கணவனுக்கு பிடிக்காமலிருக்கக்கூடும். அத்தோடு உறவுகள் இழந்து தவிக்கும் என்மனதும் இவள்மேல் இன்னும் காதல்வயப்பட்டுவிடும். அது இவள் வாழ்க்கையையும் குழப்பிவிடக்கூடும். அப்படி ஏதும் நடந்து இவள் என்பக்கம் சாய்ந்தாலும், அக்காவைப் பற்றிய உண்மைகள் தெரியவரும் போது இருவர் வாழ்ககையுமே நரகமாகிவிடக்கூடும். இவள் வாழ்க்கை சந்தோஷமாக இருக்க வேண்டும். நான் இவளைக் காதலிப்பது உண்மையானால், அவள் வாழ்க்கை சந்தோஷமானதாக அமைய வேண்டுமென நான் விரும்புவது உண்மையானால், நான் அவளை விடடு விலகுவது தான் நல்லது.

காதலெனும் சொல்லை நானும் சொல்லவில்லை
சொல்ல வந்த நேரம் காதல் எந்தன் கையிலில்லை
..........
என்றும் எனது கண்ணிலே உன் பிம்பம் உனை எண்ணி வாழ்வதே என்னின்பம்
இங்கு நீ சிரிக்க நான் பார்த்தாலே எந்தன் காதல் வாழும்
நீ வாழ்க...நலமாக...நீ வாழ்க...நலமாக...


No comments:

Post a Comment