Friday, May 8, 2009

புத்தனின் புதிய ஞானம்



ஆசைகளைத் துறக்கச்சொல்லி,
கௌதம புத்தனாய்
பரிநிர்வாணமடைந்த
போதிசத்வருக்கும்
ஆசை வந்தது
மீண்டும் அவதரிக்க.

ஆரம்பப் பிறப்பு
அமிபா-வாய் இருந்தபோது்ம்
இறுதிப் பிறப்பின்
அரச சுகபோகமும்
சித்தார்த்தன் சிந்தையில்
தித்திப்பாய் இருந்தது.
சிந்தித்தார் புத்தர்.

யுத்தம் வெறுத்து
அசோகனைப் பௌத்தனாக்கியது
கலிங்கத்துப் பரணி
இன்றோ அசோகச் சக்கரம்
வழிநடத்த புத்தனின் பக்தரால்
ஈழத்துப் பரணி!

கண்கள் கலங்கியது
கௌதமனுக்கு.
கருவாய் உருவாகிக்
காலத்தைக் கடத்த
காருண்ய உள்ளம்
தடை விதித்தது.

இறங்கி வந்தார்
இலங்கைக்கு,
சமாதான தூதுவனாய்.

அரசனைக் கண்டு
ஆலோசனை சொல்ல
ஆசையும் வந்தது.
தகவல் அனுப்பி,
காத்திருந்தார்.

ஆணவம் பூசிய
சேதி வந்தது!

போர்நிறுத்தம் பற்றிப்
பேசுவதென்றால்
நாடுகடத்தப் படலாம்,
கேட்கவொரு
நாதியில்லையெனில்
கைதியாக்கப்பட்டு
காணாமலும் ஆக்கப்படலாம்.

போதிசத்வர் பொறுமையிழந்தார்
தன்னை யாரென அறிவித்தார்.
அகிம்சைக்குத் திரும்புமாறு
அறிவுறுத்தத் தொடங்கினார்.

பௌத்த பிக்குகள்
புத்தரின் சிலைகளை
அடித்து நொறுக்கினர்.
புத்தரைக் கொல்லச் சொல்லி
ஆர்ப்பாட்டமும் செய்தனர்

அரசகுழாம்,
அந்தரங்க மாநாடு நடத்தி
பேச்சுக்கு அழைத்தது.

சமரசப் பேச்சும்
நடந்து முடிந்தது.

போதிசத்வருக்கு நன்றாய்ப்
‘போதிக்க’ப்பட்டது.
ஆசைகளைத் துறந்தவருக்கு,
ஆசையூட்டப்பட்டது.
நாடாளுமன்றப் பதவியும்
நவநாகரிக மங்கையரும்
கௌதம புத்தரைச் சித்தார்த்தன் ஆக்கின.

இத்தனை இன்பங்களையும்
ஏன் நான் துறந்தேன்?

பெண்ணின்பப் பேரின்பத்தைவிட்டு
வேறின்பத்தைத் தேடி
பேடியாய் அலைந்தேனே.

யசோதரை சரியில்லையோ?
சித்தார்த்தனுக்கு சாடையாய்
சந்தேகம் வந்தது.

அதிகார மமகாரம்
தரும் போதை
எந்தத் தியானம் தரும்?

அன்னப்பறவையின் வழக்கின் பின்
மைத்துனன் சூழ்ச்சி செய்திருப்பானோ?
தேவதத்தனின் கையாளோ என் தேரோட்டி?

சந்தேகநோய் மனப் பிரதேசமெங்கும்
பன்றிக் காய்ச்சலாய் பரவத்தொடங்கியது.

‘மென்டிஸ்’ ரெண்டு பெக்
உள்ளே செல்ல, துறந்தவை
அத்தனைக்கும் ஆசைப்பட்டான்.
அனுபவிக்கத் துடித்தான்.

இம்சித்தல், பெண்களை
இச்சித்தல்,
துய்த்தல், பின்
இரத்தத்தில் தோய்த்தல்.

எங்கே கிடைக்கும்?

சிந்திக்க சிந்திக்க
சித்தார்த்தனுக்கு
மீண்டும் “ஞானம்” பிறந்தது.

புதிய புத்தன் புறப்பட்டான்!
போர்க்களம் நோக்கி,
கூரிய நகங்களுடனும்,
கடைவாய்வரை நீண்ட
கோரப் பற்களுடனும்.