Wednesday, April 8, 2009

வேரென நீயிருந்தாய்...(2)

“அண்ணை டொக்டர் சொன்னவா உங்களையும் கப்பல்ல அனுப்ப வேணுமாம். இஞ்ச வைச்சிருக்கேலாதாம். உங்களோட துணைக்கு வேணுமெண்டால் ஒராள் வரலாமாம். வாறதுக்கு ஆரும் இருக்கினமோ அண்ணை?”

“முதலில என்ர மனிசி எங்கையெண்டு சொல்லங்கண்ணே. அவளுக்கு என்ன நடந்தது?”

“அண்ணை உங்களையே தெரியாது. எப்படியண்ணை உங்கட அவாவ எனக்கு தெரியும்?”

“எனக்கும் அவளுக்கும் வேறை ஒருத்தரையும் இஞ்ச தெரியாதண்ணே.”

“நீங்க எவ்விடம் அண்ணை? உங்கட அவா எந்த ஊர்? அவாவின்ர பேர் என்ன?”

“எந்த இடத்தையெண்டண்ணே சொல்லுறது? வன்னியில எல்லா இடத்திலையும் இருந்தாச்சு.”

“இல்லையண்ணை உங்கட சொந்தக்காரர் ஆரும் இருந்தால் அவையிட்ட கேட்டுப்பார்க்கலாம். இல்லையெண்டாலும் அவையில ஒராள உங்களோட துணைக்கு அனுப்பலாம்.”

“என்ர சொந்தக்காரர் ஒருத்தரும் இஞ்ச உயிரோட இல்லை அண்ணே.”

“அப்ப அவாவின்ரை...?”

“ம்ம்ம்....அவாவுக்கும் இல்லை. நீங்க எனக்கு ஒருக்கா அவா எங்க இருக்கிறா எண்டு கண்டுபிடிச்சுச் சொல்லுவியளே?”

“எப்பிடியண்ணை கண்டுபிடிக்கிறது? எதுக்கும் அவாவின்ர பேரையும் ஊரையும் சொல்லுங்கோ. விசாரிச்சுப் பார்க்கிறன்.”

“அவவின்ர பேர் நதிஷா. ஊர்.....”

“எந்த ஊர் எண்டு சொன்னீங்களெண்டால்தான் ஆரும் ஊர்க்காரரிட்ட விசாரிக்கலாம்.”

“அவா இந்த இடம் இல்லையண்ணே.”

“அப்ப எங்க யாழ்ப்பாணமா?”

“இல்லையண்ணே. அவா வந்து... கண்டி.”

“கண்டியோ...?”

“ஓமண்ணே! கண்டியில கட்டுகஸ்தோட்டை...”

“அண்ணை கொஞ்சம் பொறுங்கோ. அவா சிங்கள ஆளா?”.

“ஓமோம். ஆனா நல்லா தமிழ் கதைப்பா.”

“அப்பிடிச் சொல்லங்கோவன். அந்தச் சிங்கள அக்காவையும் இங்கதான் அட்மிட் பண்ணியிருக்கு. ஆனா அவாவுக்கு பெரிசா காயம் இல்லையெண்டதால இண்டைக்கே விட்டிடுவினம்.”

அப்பாடா! என்ர நதிஷா இஞ்சதான் இருக்கிறாள். கடவுளே என்னைக் காப்பாத்தீற்றாய். மனம் இலேசாகியது.

“அண்ணை அந்த அக்காவை வரச் சொல்லவே?”

நதிஷா சிங்களமெண்டதும், சின்னவன் ஏதும் சொல்லுவான் என்று எதிர்பார்த்திருந்தேன். அவன் அவளை அக்கா என்று சொன்னதும் மனதுக்கு நிம்மதியாயிருந்தது. என்ன அதிசயம். எம்மிடையே எத்தனை எத்தனை உறவுகள் இருந்தன. அண்ணன், அத்தான், மாமன், மச்சான், சித்தப்பா, பெரியப்பா.....அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இன்று? எல்லா உறவுகளும் ஆறு வகைக்குள் அடங்கி விட்டனவே. வயது குறைந்தவரென்றால் தம்பி அல்லது தங்கை. ஏறத்தாழ ஒத்த வயதென்றால் அண்ணே அல்லது அக்கா, வயதானவர்களென்றால் ஐயா அல்லது அம்மா. துன்பம் சூழ்ந்த வேளையில், சாதி மத பேதமின்றி எல்லோருமே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாய்....

“சின்னவன்! அந்த அண்ணையிட்ட விபரம் எடுத்திட்டீங்களே? அவர நாளைக்கு வாற கப்பலில அனுப்ப வேணும்.”
இது முதலில பனடோல் குடுக்கச் சொன்ன அக்கா. பார்க்க முடியாவிட்டாலும் குரலை அடையாளம் உணரமுடிந்தது.

“அண்ணை அப்ப நாளைக்கு அக்காவையும் உங்களோட கப்பலில அனுப்புவம் என?”

“ஓமோம். அவாவை ஒருக்கா இஞ்ச வரச்சொல்லுறீங்களா?”

தூரத்தில் எங்கோ விசில் சத்தம்.

“சின்னவன்!”அந்த டொக்ரரின் பதற்றமான குரல்

“விசில் சத்தம் கேட்டதல்லா? கிபிர் வெளிக்கிட்டிட்டுது போல. இனி ஷெல்லும் மல்ரிபரலும் அடிக்கத் தொடங்கீருவாங்கள். உடனே ஏலக் கூடிய ஆக்களை பங்கருக்குள்ள கொண்டு போங்கோ. போங்கோ இஞ்ச நிக்காதீங்கோ.”

”டொக்ரர்! அப்ப இவரை என்ன செய்யிறது?”

”அவரோடை நிண்டால் நாளைக்கு சிலவேளை உம்மையும் கப்பலில தான் அனுப்ப வேண்டியிருக்கும். உதிலை நிண்டு நீர் ஒண்டுஞ் செய்யேலாது. போம் போம்.”
டொக்ரர் சின்னவனை விரட்டினார்.

“அப்ப நீங்க டொக்ரர்?”

“எனக்கு இப்ப ஒரு கேஸ் வந்திருக்கு. 3 மாதப் பிள்ளையொண்டின்ர ஒருகை ஷெல்லடியில துண்டாகிற்றுதாம். இப்ப தான் கொண்டுவந்திருக்கினம். நாளைக்கு அவையையும் கப்பலில அனுப்பவேணும். கதைச்சு நேரத்தை வீணாக்காமல் பங்கருக்குள்ள போங்கோ சின்னவன்.”

“அணணை ஒண்டுக்கும் பயப்படாதைங்கோ!. நான் இஞ்சதான் பக்கத்தறைக்குள்ள தான் நிப்பன். ஷெல்விழுந்தா எல்லாரும் ஒண்டா மேல போவம்.”
சொல்லிவிட்டு நகர்ந்தார் அந்த பெண் டொக்ரர். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் எப்படித்தான் அவரால் இப்படி இயல்பாகப் பேச முடிகிறதோ?உயிர்ப்பயமென்பதே இவர்களுக்குக் கிடையாதா?

இவள் நதிஷாவும் இப்பிடித்தான். ச்சே! அவளை வரச் சொல்லுவமெண்டால், அதுக்குள்ள ஷெல்லடிக்கத் தொடங்கீற்றாங்கள். நாளைக்கு கப்பலில போறதெண்டால்....
(வேர் விடும்)

6 comments:

 1. புமியை நோக்கி ராட்சத எரிகல் வந்து 1 மணித்தியாலத்துக்குள் பூமி முற்றிலுமாக அழியப்போகிறது என்றால் தான் எல்லா மக்களும் ஒன்று படுவார்கள் இது 21/12/2012 இல் சாத்தியம்==> அல்லது பெரும்பான்மையானவர்கள் நதிஷாக்களை கைப்பிடிக்க சும்மா தயங்க கூடாது......!!!

  நன்றி,
  கணேசன் - ஆரூரன்

  ReplyDelete
 2. மொழி புரிவதற்குக் கஷ்டமாக இருந்தாலும் வலி புரிகிறது.

  ReplyDelete
 3. வரவிற்கும் கருத்திற்கும் நன்றி ஆரூரன். ஊடல் தீர்ந்ததா? :-)

  ReplyDelete
 4. //
  மொழி புரிவதற்குக் கஷ்டமாக இருந்தாலும் வலி புரிகிறது.
  //
  வரவிற்கும் கருத்திற்கும் நன்றி ஷண்முகப்ரியன்.
  எங்களூர் பேச்சுவழக்கில் எழுதியிருக்கிறேன். போகப்போகப் புரியுமென நினைக்கிறேன்

  ReplyDelete
 5. ஆமா இவரை ஆங்கிலத்தில் தானே ஈழத்தமிழனின் வலியை பதிவு செய்ய கேட்கிறோம்===>>>ஷண்முகப்ரியன் போன்ற தமிழ் அறிஞர்களுக்கே
  ஈழ பேச்சு தமிழ் கஷ்டமாக இருக்கும் போது சாதரணர்களுக்கு...??? ஈழத்தமிழனின் வலியை விட இதை மொழிபெயர்ப்பதில் உள்ள வலி அதிகம் மேலும் ஊடல் தீர்ந்து விட்டது இனி கூடல் தான் நீங்கள் ரெடியா..???

  நன்றி,
  கணேசன் - ஆரூரன்

  ReplyDelete
 6. நன்றி ஆரூரன், உங்களின் மீள்வருகைக்கும் பின்னூட்டத்திற்கும். மற்றவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுத முயற்சிக்கிறேன்.

  ReplyDelete