பொறியியற் கற்கைநெறியின் இரண்டாம் வருடத்தின் இறுதித் தவணைக்காலம் நெருங்கிக் கொண்டிருக்கையில், நாங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள எந்திரிவியற் பிரிவுகளின் விபரங்கள் அறிவிக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் இயலுமானவரை நதீஷாவிற்கும் எனக்குமான இடைவெளியினை அதிகரித்திருந்தேன். அவளிடமிருந்து விலகியிருக்க நான் விரும்புவதை அவள் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. அவளது மனதை நோகடிக்காத வண்ணம் இந்த கற்கையாண்டின் இறுதியுடன் அது தானாகவே நடந்துவிடும் என்கின்ற திடமான நம்பிக்கையும் எனக்கு இருந்ததால் நானும் அதைப்பற்றிப் பின்னர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. எப்படியும் அவள் மின்னியல்சார் எந்திரவியலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பாள் என்றே எண்ணியிருந்தேன். இந்தக் கற்கையாண்டின் ஆரம்ப காலப்பகுதியில் நாங்கள் எமக்கு விருப்பமான கற்கை நெறிகளுக்கு விண்ணப்பித்திருந்ததை குறிப்பிட்டு அதை உறுதிப்படுத்துமாறு கேட்கப்பட்டிருந்த நிரலில் அவள் மின்னியல் துறைக்கே விண்ணப்பித்திருந்தாள். அந்த விபரம் வெளியான அன்றே என்னிடம் வந்து,
“நீங்க உண்மையிலேயே சிவிலா செய்யப் போறீங்க?” - ஆச்சரியமாய்க் கேட்டாள்.
“ஓம்!”
“ஏன்? உங்களுக்கு elect செய்ய விருப்பமில்லையா?”
“இல்லை. எனக்கு civil தான் செய்ய விருப்பம்.”
“ஓ! நீங்க முந்தி சொன்னது தான். but நான் நம்பேல்லை. நீங்க பொய் சொலலுறது எண்டுதான் நான் நம்பினது.” - அவள் முகத்தில் இலேசான கவலைக்கீற்றுகள் வந்து செல்வதை அவதானிக்கக் கூடியதாகவிருந்ததாயினும் அதைப் பற்றிய எண்ணங்கள் தொடர்ந்து விரிவதை அனுமதிக்காமல் அதை அப்படியே விட்டுவிட்டிருந்தேன்.
அன்றைய மாலை நாங்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கும் கற்கைநெறிகளுக்கான இறுதி செய்யப்பட்ட விபரங்கள் வெளியிடப்பட்டிருந்தது. அதில் நதீஷாவும் குடிசார் எந்திரிவியலுக்கே (Civil Engineering) விண்ணப்பித்திருப்பதும் அத்துறைக்கே அவள் தெரிவு செய்யப்பட்டிருப்பதும் வியப்புடனான அதிர்ச்சியாயிருந்தது. இன்னும் இருக்கும் இரண்டு வருடங்களுக்கும் மீண்டும் அவளுடன்தான் ஆய்வுகூடங்களில் செலவிடவேண்டியிருக்கப் போகின்றதே என்கின்ற ஏக்கம் வந்தது. எதற்காக இவள் civil-ற்கு வந்திருப்பாள்? எனக்காகவா? அப்படியானால் அவள் என்னைக் காதலிக்கின்றாளா?
சந்தேகம் வலுக்கத் தொடங்கியிருந்தது. இதுவரை காலமும் சாடையாக அந்தச் சந்தேகம் இருந்திருந்தாலும், அவள் friendly-யாகப் பழகுவதை நான்தான் தப்பாக அர்த்தப்படுத்திக் கொள்கின்றேனோ என்கின்ற எண்ணமே மிகையாகவிருந்தது. இப்போது மனது குழம்பத் தொடங்கியது. பல்வேறு சிந்தனைகளும் மனதிற்குள் ஓடின. ஒருவேளை என்னைப் போலவே அவளுக்கும் நான் தன்னைக் காதலிக்கின்றேனோ என்கின்ற சந்தேகம் இருந்து, என்னிடமிருந்து விலகியிருக்க விருப்பப்பட்டு அதனால் என்னை elect செய்யச் செய்வதற்காக இப்படி நாடகமாடியிருக்கவும்கூடுமோ. ச்சே! ஏன் இப்படியெல்லாம் என்மனம் கேவலமாய்ச் சிந்தனையைச் சிதற விடுகின்றது?
என்னைப் போலவே அவளும் குடிசார் எந்திரவியல் கற்கை நெறிக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கிறாள். இந்தக்கணத்தில் அது மட்டுமே ஆதார உண்மை. ஏனையவையெல்லாம் அதற்கான காரணத்தைச் சிருஷ்டிக்கும் என்னுடைய மனப் பிரமைகளே! உள்மனம் விழிப்படைய சிந்தனை கலைந்தது.
எமக்கு விடப்பட்டிருந்த ஒருமாத கற்கை விடுமுறை கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் மேலுமொரு மாத காலத்திற்கு நீட்டிக்கப்ட்டிருந்தது. பரீட்சைகள் யாவும் முடிவடைய கிடைத்த ஒருமாதகால விடுமுறையைக் கழிக்க ஊருக்குப் புறப்பட ஆயத்தமானோம்.
இன்னமும் யாழ்குடாநாட்டிற்கும் ஏனைய பிரதேசங்களுக்கமான போக்குவரத்து சீராக்கப்பட்டிருக்கவில்லை. திருகோணமலைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பற்போக்குவரத்துக்கூட இடையிடையேதான் நடைபெற்றுக்கொண்டிருந்தது. கப்பல் யாழ் செல்லும் சரியான திகதி தெரியாதிருந்தாலும் யாழ் செல்லும் மாணவர்கள் யாவரும் இணைந்து கப்பலில் செல்வதென்று முடிவாகி ஒருசில இடைவெளிகளில் திருகோணமலையினை நோக்கி எங்கள் பயணத்தை மேற்கொண்டிருந்தோம்.
திருகோணமலைக்குள் செல்வதற்கு ஐந்து இடங்களில் சோதனைச் சாவடிகளில் ஏறியிறங்கிச் செல்கின்ற காலம் அது. அப்போதெல்லாம் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஒன்றுகூடல்களில் யாரேனும் elect செய்யும் மாணவர்களைக் கடிப்பதற்கு இந்தத் திருமலைப் பயணம் ஒரு வாய்ப்பாக அமைந்து விடும். “சிவில் கட்ட ஒக்கம பயிண்ட” (civil ஆக்கள் எல்லாரும் இறங்குங்க) எண்டு check point-ல ஆமிக்காரன் சொல்ல இவர் bus-ஐ விட்ட இறங்கயில்லை. பிறகு ஆமிக்காரன் வந்து “அய்? ஒயா கமுதாவத?” (ஏன்? நீங்க படையினனா?) எண்டு கேக்க “ந, ந, மம elect கரணவா” (இல்லை இல்லை. நான் elect செய்யிறன்) எண்டு சொன்னேராம்”. இப்போது அந்த சோதனைச்சாவடிகளை நாங்களும் அடைந்திருந்தோம். எங்களுடன் வந்திருந்த ஒரு மாணவன் நிறையப் பொருட்களை வைத்திருந்ததால் அவற்றைச் சோதனைக்குக் காட்டுவதற்காக நானும் அவனுடனேயே நின்றிருந்தேன்.
“ஒயா மொணவத கரண்ணே?” (நீங்க என்ன செய்யுறீங்க?)
“மம இஞ்சினேருட்ட இகணகன்னவா” (நான் இஞ்சினியருக்குப் படிக்கிறன்)
“ஐசியெக்கத் தெண்ட” (அடையாள அட்டையைத் தாருங்கள்)
-கொடுத்தான்.
“மே மொணவத?” (இது என்ன?)
”மே இங்குறு” (இது இஞ்சி)
“மேக்க?” (இது?)
”மேக்கத் இங்குறு” (இதுவும் இஞ்சி)
“அற bag-க்கெக்க மொணவத தியன்னே?” (அந்த bag-க்குக்குள்ள என்ன இருக்குது?)
“அற bag-க்கெக்கத் இங்குறுதட தமாய்த் தியன்னே” (அந்த bag-க்குக்குள்ளயும் இஞ்சிதான் இருக்குது)
“ஒயா இஞ்சினேருட்ட இகணகன்னவாத நத்தங் இங்குறு business கரணவாத?” (நீங்க இஞ்சினியருக்குப் படிக்கிறீங்களா அல்லது இஞ்சி வியாபாரம் செய்யிறீங்களா?)
-நக்கலடித்தான் அந்தப் படையினன்.
அக்கால கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ளி இஞ்சி போன்றவைக்குப் பெருந்தட்டுப்பாடாக இருந்தது. சீரற்ற போக்குவரத்துக் காரணமாக திருகோணமலையில் ஐம்பது ரூபாவாக விற்கும் ஒரு கிலோ இஞ்சியின் விலை யாழ்ப்பாணத்தில் இரண்டாயிரம் ரூபாவைத் தொட்டிருந்தது. ஆயினும் நாங்கள் பயணித்த அந்தக் கப்பல் யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்ததன் பிற்பாடு இஞ்சி ஒருகிலோ அறுநுாறு ரூபாயாகக் குறைந்திருந்தது.
பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11 பாகம்-12 பாகம்-13 பாகம்-14 பாகம்-15 பாகம்-16 பாகம்-17 பாகம்-18 பாகம்-19 பாகம்-20 பாகம்-21 பாகம்-22 பாகம்-23
இஞ்சி இடுப்பழக மஞ்ச சிவப்பழக
ReplyDeleteகள்ளச் சிரிப்பழக
மறக்க மனம் கூடுதில்லையே
மறக்குமா மாமன் எண்ணம் மயக்குதே நதீஷாவர்ணம்
மடியிலே ஊஞ்சல் போட மானே வா ..
அத்தான் . நான் உண்மையிலேயே உங்களுக்கத்தான் சிவில் படிக்க வந்தனான். ராமன் இருக்கும் இடம்தானே சீதைக்கு அயோத்தி.
ReplyDeleteபஞ்ச்: உன்னோடு நான் சிவில் படித்த ஒவ்வோரு மணித்துளியும் என் மரணப்படுக்கையிலும் மறவாது கண்ணா!!
இப்படிக்கு
உங்களின் அன்பு நதீஷா
சிவில் கட்டிய ஒக்கம பயிண்ட என்பதுதான் சரியான வார்த்தைப்பிரயோகம் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteபசில் ராஜபக்ஸ
//பொறியியற் கற்கைநெறியின் இரண்டாம் வருடத்தின் இறுதித் தவணைக்காலம் நெருங்கிக் கொண்டிருக்கையில், நாங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள எந்திரிவியற் பிரிவுகளின் விபரங்கள் அறிவிக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.//
ReplyDeleteமுதலாம் வருட இறுதியில் அல்லவா தெரிவு செய்யப்பட்ட் பாட நெறி அறிவிக்கப்படும்.
நாமல் ராஜபக்ஸ