Thursday, November 18, 2010

வேரென நீயிருந்தாய்...(15)



1998ம் ஆண்டின் தைப்பொங்கலினை அக்பர் C-wing இனில் கோலாகலமாகக் கொண்டாடியிருந்தோம். அதைத்தொடர்ந்து வந்த சில நாட்களிலேயே பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு முதலாம் ஆண்டிற்கான முதற்பாதி தவணைக்காலம் அவசரமாக முடிக்கப்பட்டு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. விடுமுறையினை அடுத்து பெருமளவிலான மாணவர்கள் தங்கள் தங்கள் வீடுகளுக்குத்திரும்பியிருக்க யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களில் வேறிடங்களுக்கு செல்லமுடியாதவர்கள் மட்டும் அக்பரில் தங்கியிருந்தோம். சிறிலங்கா அரசு தனது சுதந்திரதினப் பொன்விழாவினை கண்டி நகரில் கொண்டாடுவதற்கு பெருமெடுப்பிலான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்ததனால் பாதுகாப்புக் காரணங்களைமுன்னிட்டு நாங்கள் எல்லோருமே கண்டி நகருக்குள் செல்வதனைத் தவிர்த்துக்கொண்டிருந்தோம். அப்போதைய பிரதிப் பாதுகாப்பமைச்சர் ஜெனரல் அநுருத்த ரத்வத்தை அவர்கள் கண்டிநகரில் நடக்க இருக்கும் சுதந்திரப் பொன்விழாவினை எந்தக்கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாதென சவால் விட்டதை அடுத்து கண்டி நகரெங்கும் பாதுகாப்புக் கெடுபிடிகள் மிகவும் அதிகரித்திருந்தன. தமிழ் மாணவர்களிடையே ஒருவித அச்சநிலை காணப்பட்டுக்கொண்டிருந்தது.


ஜனவரி 25, அதுவொரு ஞாயிற்றுக்கிழமை. முதல்நாள் சனிக்கிழமை இரவு முழுவதும் கொட்டக் கொட்ட விழித்தபடி அடித்திருந்த 'கொன்' (அரட்டை) காரணமாகக் காலையில் ஆழ்ந்த தூக்கத்தில் கிடந்தோம்.

'க்கும்ம்ம்....'

விடுதிக் கட்டடங்கள் யாவும் குலுங்கி அதிர்ந்தன. அதைத்தொடர்ந்து துப்பாக்கி வேட்டுக்கள் சடசடத்தன. எல்லோருடைய நித்திரையும் கலைந்து விட்டிருக்க ஒருவரையொருவர் திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்தோம். எங்கேயோ குண்டு வெடித்திருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்வது அவ்வளவு கடினமானதாக இருக்கவில்லை. காலை உணவிற்காகச் சிற்றுண்டிச்சாலையை அடைகையில் சிங்கள சிரேஷ்ட மாணவர்களின் முறைத்த முகங்களையே எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கண்டி தலதா மாளிகைக்குள் தற்கொடைத் தாக்குதல் நடைபெற்றிருப்பது தெரியவந்தது. வழமையாக உணவிற்காக வெளியே 'அக்கா' வீட்டிற்கோ அல்லது ஐடியலுக்கோ செல்லும் எல்லோருமே பீதியின் காரணமாக அக்பர் சிற்றுண்டிச்சாலையிலேயே தங்கள் உணவினனை அருந்திவிட்டிருந்தனர். மாலை நேரமளவில் ஜே.வி.பி.யின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த சிலர்வந்து தமிழ்மாணவர்களை வெளியே எங்கேயும் செல்லவேண்டாமென்றும். எங்களுக்கான பாதுகாப்பு வெளியே கிடையாது என்றும் எச்சரித்துச்சென்றனர். பல்கலைக்கழக விடுதிகளுக்குள் நுழைய முயன்றிருந்த சில காடையர்களை அவர்கள் திசைதிருப்பி அனுப்பிவிட்டிருந்தது தெரியவந்தது. கட்டுக்கலைப் பிள்ளையார் கோவிலின் முகப்பு வேறுசில காடையர்களால் உடைத்து விடப்பட்டிருப்பதாகச் சேதி வந்தது. அந்தக் கோயிலுக்கு நேர்முன்னாலேயே சிறிலங்கா காவற்றுறையினரின் காவல் நிலையம் ஒன்று அமைந்திருப்பதும் நினைவில் வந்துபோனது.

இரவானதும் மீண்டும் காடையர்கள் எம்மைத்தாக்குவதற்காக எமது விடுதிக்கு வரலாம் என்கின்ற அச்சம் எழுந்தது. அதை எவ்வாறு எதிர்கொள்வது அல்லது எப்படித் தப்பிப்பது என்கின்ற யோசனை எல்லோர் மனதையும் குடைந்தது. ஈற்றில் New-wing இல் உள்ள மாணவர்களும் C-wing இல் சென்று தங்கலாம் என்றும், யாராவது பெருமெடுப்பில் அடிக்க வந்தால் அப்படியே யன்னல்களுக்குள்ளால் குதித்து பற்றைகளுக்குள் பதுங்கி விடுவதென்றும் குறைந்த அளவில் வந்தால் எமது பாதுகாப்பிற்காகத் திருப்பித் தாக்குவது என்றும் முடிவானது. ஆயினும் எல்லோருடைய முகங்களிலும் பயம் பரவிக்கிடப்பதைக் காணமுடிந்தது. உறக்கத்தினைக் கலைப்பதற்காய்ச் சில மாணவர்கள் 304 விளையாட ஆரம்பித்திருந்தார்கள். நேற்றைய இரவுத் தூக்கம் வேறு கண்களைச் சுழற்றியது.


1 comment:

  1. அன்றைய தற்கொலை தாக்குதலில் கொளதம புத்தரின் பல்லுக்கு எதேனும் சேதம் எற்பட்டிருந்தால் பல்கலைகழக தமிழ் மணவர்களின் பல்லு அடித்து நொறுக்கப்படுவதை எந்த கொம்பனானும் தடுத்து நிறுத்தி இருக்க முடியாது.............!

    இப்படிக்கு,
    ஜெனரல் அநுருத்த ரத்வத்தை

    ReplyDelete