Wednesday, March 28, 2012

வேரென நீயிருந்தாய்...(49)

காலை விடிந்துவிட்டிருந்தது. எழுந்து காலைக்கடன்களை முடிக்கையில் உதயனும் வந்து விட்டிருந்தான். அவன் தான் இங்கே அம்மாவின் அந்திரெட்டிக்கிரியைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருப்பவன்.

“மச்சான் டேய்! இன்னும் பத்து நிமிசத்தில van வந்திரும். என்னமாதிரி ரீ ஏதும் குடிச்சிற்று வரப்போறியோ இல்லாட்டி போகேக்கை வழியில ரவுணுக்க குடிச்சிற்றுப் போவமா?”

“இல்லடா. இண்டைக்கு விரதம்தானே. எல்லாத்தையும் முடிச்சிற்றுக் குடிப்பம்.”

“ஐயருக்கு அங்க வேலணையிலயே ஒழுங்கு படுத்தியிருக்கு. சாமான்களெல்லாம் எங்கட வீட்டில கிடக்கு. அப்பிடியே போற வழியில அதையும் ஏத்திக்கொண்டு பாட்டுப்படிக்கிற ஆளையும் மற்றவரையும் ஏத்திக்கொண்டு போவம் என.”

“அதோட நதீஷாவும் வரும்”

“அதாரு நதீஷா?”

“அது தான் என்ரை wife ஆ வரப்போறவா?”

“இப்ப ஆள் எங்க? இதைப்பற்றி நீ முதல்ல ஒண்டும் சொல்லேல்லையே”

“அதெல்லாம் பிறகு ஆறுதலாச் சொல்லுறன். அந்தா van ஒண்டு பள்ளேக்கை (படலைக்குள்ள) நிக்குதுபோல. அதுவா நாங்க போற van?"

“ஓமடா van வந்திற்றுது. அப்ப வெளிக்கிடு போவம்.”

வாகனத்தில் புறப்பட்டு அந்திரெட்டிக்குத் தேவையான பொருட்களையும் மற்றைய இருவரையும் ஏற்றிக் கொண்டு ஆரியகுளம் சந்திக்குச் சென்றோம். அங்கே நதீஷா ஏற்கனவே தயாராக இருக்கவே அவளையும் ஏற்றிக்கொண்டு ஸ்ரான்லி வீதியூடாகச் சென்று மிட்டாய்கடைச்சந்தியில் காங்கேசன்துறை வீதியைப்பிடித்து சத்திரச்சந்தியை அடைய முன்னே முற்றவெளிக்குள்ளால் கோட்டை தெரிந்தது.

“அந்தா! அதுதான் jaffna fort"

நதீஷாவிற்கு காட்டினேன்.

“கிட்ட போகலாமா?”

“உள்ளுக்குள்ள போகேலாது. ஆனா அதுக்குக் கிட்டவாத்தான் இப்ப போகப்போறம்.”

van முற்றவெளிக்கு அண்மையில் வந்து வலதுபுறமாய்த் திரும்ப அந்தப் பாரிய தொலைத்தொடர்பு கோபுரம் கண்ணில் பட்டது.

“இந்தா telecom tower இருக்குத்தானே. அப்ப ஏன் இஞ்ச dialog-இன்ரை coverage இல்லாம இருக்கு?”

“இது அந்தக்காலத்தில இருந்தே இருக்குது. எப்பிடியும் இன்னும் கொஞ்ச காலம் போக இஞ்சையும் coverage வந்திரும்.”

இப்போது van பண்ணையை அடைந்து விட்டிருக்க, கோட்டையின் ஒருபகுதி தெளிவாகத் தென்பட்டது.

“திலீபன்ரை death aniversary அண்டுதானே இதை எல்ரீரி பிடிச்சது?”

“ஓம்! 1990 ஆம் ஆண்டில. பிறகு தொண்ணூற்றைஞ்சில ஆமி யாழ்ப்பாணத்தப் பிடிக்கேக்க கோட்டையும் போய்ற்றுது”

அது 1990 ஆம் ஆண்டு காலப்பகுதி, யாழ்கோட்டையின் முற்றுகையை உடைக்க தீவுப்புகுதியினூடாக நரவேட்டையாடியவாறே மண்டைதீவினை அடைந்திருந்த சிறிலங்காப்படையினர், அதன்பின்னர் கோட்டையினை மீட்பற்கு மேற்கொண்ட முயற்சியில் ஒரு தொகுதிப்படையினர் கோட்டையினுள் சென்று விட்டிருந்தாலும், கோட்டையை தொடர்ந்து தக்கவைத்திருக்க முடியாமு என்பதனை உணர்ந்திருந்தனர். மேலும் திலீபனின் நினைவுநாளன்று மீண்டும் கோட்டையைக் கைப்பற்ற இயக்கம் நடவடிக்கை எடுக்க இருப்பதனை அறிந்து முதல்நாள் இரவே கோட்டையை விட்டு வெளியேறி மண்டைதீவை அடைய திலீபனின் மூன்றாவது நினைவுநாளான 26 september 1990 அன்று யாழ் கோட்டையில் புலிக்கொடி ஏறியது.

“இந்தக் கோட்டையில் என்று புலிக்கொடி பறக்கிறதோ, அன்றுதான் எமக்கு விடிவு. அன்றுதான் எமக்கு சுதந்திரம்.” என்ற திலீபனின் கனவு, யாழ்நகர மக்களைப்

பொறுத்தவரை மெய்ப்பட்டது. இந்தக் கோட்டையில் இருந்து வந்த எறிகணைகளால் ஏற்பட்ட அழிவுகள் எத்தனை? சிறிலங்காப்படைகள் மட்டுமா? அமைதிப்புறா வேடமணிந்து வந்திருந்த வல்லுறுகள், வைத்தியசாலையையே துவம்சம் செய்திருந்தன. காந்தி தேசத்தின் அகிம்சாவாத முகமூடியினை திலீபன் கிழித்தெறிந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே 10 October 1987 அன்று இந்தக் கோட்டையிலிருந்து வந்த இந்தியப்படைகள் யாழ் போதனா வைத்தியசாலைக்குள் புகுந்து அங்கு கடமையிலிருந்த வைத்தியர்கள், ஊழியர்கள், நோயாளிகள் என் சுமார் அறுபது வரையலான அப்பாவிப் பொதுமக்களைப் படுகொலை செய்து கொன்றுகுவித்திருந்தன.

“கட்டிய ஒக்கம கொஹேத யன்னே?” (எல்லாரும் எங்க போறீங்க?)

-பண்ணை சோதனைச்சாவடியிலிருந்த படையினனின் கேள்வியில் சிந்தனை கலைந்தது.

“வேலணைட்ட யனவா” (வேலணைக்குப் போறம்)
முன்னாலிருந்த உதயன் பதிலளித்தான்.

வாகனத்திற்குள்ளால் எல்லாரையும் எட்டிப்பார்த்துத் திருப்தியுற்ற பின்னர் வாகனத்தைத் தொடர்ந்து செல்ல அனுமதித்தான். இப்போது van பண்ணை வீதிவழியே பயணத்தை ஆரம்பித்தது. இரு புறமும் கடலிருக்க அதன்நடுவே அமைந்திருந்த சிதைவடைந்த வீதியினூடாக நாங்கள் பயணிக்கலானோம்.

சங்கிலிப்பாலத்தைக் கடந்து மண்டைதீவுச்சந்தியில் போடப்பட்டிருந்த வேகக்குறைப்புத் தடைகளையும் தாண்டிய பின்னர் van இப்போது ஓரளவிற்கு வேகம் எடுத்திருந்தது. வீதியின் இருமருங்கும் பார்வையைச் செலுத்தலானேன். கடல்நீர் வீதியின் இடது புறத்திலிருந்து வலதுபுறம் நோக்கி 'போக்கு'-களினுாடாகவும் பாலத்தினுாடாகவும் பாய்ந்து கொண்டிருந்தது.

“ஏன் கடல் இப்பிடி இந்தப் பக்கம் தண்ணி கூடவாவும் மற்றப்பக்கம் குறைவாவும் இருக்கு? தண்ணி எப்பவும் இந்தப்பக்கம் தான் ஓடுமா?”
- ஆச்சரியத்துடன் கேட்டாள் நதீஷா.

“இது இப்பிடித்தான். ரெண்டு பக்கமும் மாறிமாறி ஓடிக்கொண்டிருக்கும். காலமையில இந்தப்பக்கம் ஓடிச்சுது எண்டா பின்னேரம் மற்றப்பக்கம் ஓடும்.”

“அப்ப எப்பவுமே காலமையில இந்தப்பக்கத்திலயிருந்துதான் ஓடுமா?”

“இல்லையில்லை. வடிவாத் தெரியாது. நான் நினைக்கிறன் சந்திரன் இருக்கிற பக்கத்துக்கு தான் கடல்தண்ணி ஓடிக்கொண்டிருக்கும். பௌர்ணமிக்கு கடல் பொங்கிறதுக்குக் காரணம் சந்திரனின்ர ஈர்ப்புவிசை எண்டு சொல்லுறவை. இதுவும் அதாலையாத்தான் இருக்கும்”

“ம்ம்... இதுதான் இலங்கையில ஆக நீளமான பாலமாயிருக்கும். என?”

“இதில்ல. புங்குடுதீவுப்பாலம் தான் ஆக நீளம் கூடினது”

இப்போது நாங்கள் அல்லைப்பிட்டியை நெருங்கிக் கொண்டிருந்தோம்

“ஓ! ஆ! அதென்ன பெரிய building ஒண்டு இடிஞ்சு கிடக்கு?“

“அதுதான் அல்லைப்பிட்டி அலுமினியம் factory”

“அப்ப அது இப்ப இல்லையா?”

“எனக்குத் தெரிஞ்சு இது ஒருக்காவும் இயங்கேல்லை. நாங்க சரியான சின்னனா இருக்கேக்கை இயங்கினதாம். பிறகு சண்டை தொடங்கினாப்பிறகு மூடுப்பட்டிட்டுது”

அல்லைப்பிட்டிச்சந்தியிலுிருந்த சோதனைச்சாவடியைத் தாண்டி பயணித்துக் கொண்டிருந்தோம். இருபுறமும் வெட்டவெளிகள். வலது பக்கம் தூரத்தே கடல் தெரிந்தது.

“இந்த இடங்களில ஒருத்தரும் விவசாயம் செய்யிறதில்லையா?”

“மாரி காலத்தில றோட்டடுக்கு ரெண்டு பக்கமும் சரியான வெள்ளம் நிக்கும். அதோட கடல் தண்ணியும் கலக்கிறதால இந்த இடமெல்லாம் உவர் நிலமா மாறிற்றுது. அதால இந்த இடங்களில பயிர் ஒண்டும் செய்யேலாது”

“அப்ப கடலை மறிச்சு அணைகட்டினா கொஞ்ச காலத்துக்குப் பிறகு பயிர் செய்யலாம் தானே. அதோட நன்னீரும் உள்ளுக்குள்ளை நிக்கிறதால அந்தத் தண்ணிய பிறகு பயிர்ச்செய்கைக்குப் பாவிக்கலாம் தானே”

“பூனைக்கு ஆரு மணி கட்டிறதெண்ட மாதிரி இது இப்பிடியே கிடக்கு. முந்தியும் இந்த நன்னீர் சேமிப்புப் பற்றி கனபேர் ஐடியாக்கள் எல்லாம் போட்டவைதான். ஆனா சண்டை நடக்கிறதாலயோ என்னவோ பிறகு அதைப்பற்றி ஒருத்தரும் கதைக்கறேல்ல.”



பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11 பாகம்-12 பாகம்-13 பாகம்-14 பாகம்-15 பாகம்-16 பாகம்-17 பாகம்-18 பாகம்-19 பாகம்-20 பாகம்-21 பாகம்-22 பாகம்-23 பாகம்-24 பாகம்-25 பாகம்-26 பாகம்-27 பாகம்-28 பாகம்-29 பாகம்-30 பாகம்-31 பாகம்-32 பாகம்-33 பாகம்-34 பாகம்-35 பாகம்-36 பாகம்-37 பாகம்-38 பாகம்-39 பாகம்-40 பாகம்-41 பாகம்-42 பாகம்-43 பாகம்-44 பாகம்-45 பாகம்-46 பாகம்-47 பாகம்-48

Tuesday, March 27, 2012

வேரென நீயிருந்தாய்...(48)

“ஜேந்தன் எழும்புங்க!”

நதீஷா என்னைத் தட்டி எழுப்பவே விழித்துப் பார்த்தேன். பேரூந்து முகமாலையை அடைந்து விட்டிருந்தது. இறங்கிச் சென்று எங்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டவுடன் மீண்டும் பேரூந்தில் ஏறிக்கொண்டோம். இப்போது பேரூந்து இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளிருந்து சிறிலங்காப் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைந்தது. மறுபடியும் அங்கே எங்களைப் பதிந்துவிட்டு யாழ்நகர் நோக்கிச் செல்லும் சிற்றூர்தியினுள் ஏறிக்கொண்டோம். மாலைநேரம் நெருங்கிக்கொண்டிருந்ததால் பயணிகளின் எண்ணிக்கையும் குறைவாகவே காணப்பட்டது. இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம்.

நதீஷா மிகவும் களைத்துப் போயிருந்தாள். பேரூந்து புறப்பட நேரமாகுமென்பதால் அருகிலிருந்த சிற்றுண்டிக்கடைக்குள் நுழைந்து நெக்ரோவும் மலிபன் 'கிறீம் கிறேக்கர் விஸ்கற்'-றும் வாங்கிவந்து இருவரும் பசியாறிக்கொண்டோம். வரும்வழியில் நான் தூங்கிவிட்டிருந்ததால் இப்போது தெம்புடன் இருந்தேன். அவளோ மிகவும் களைத்துப்போயிருந்தள். அவள் தலையை என் தோளிற் சாயவைத்து அவளை உறங்கச் சொன்னேன். கண்களை மூடிக்கொண்டாள். நானும் கண்களை மூடிக் கொண்டேன்...

மனம் சிற்றூர்தியிலிருந்து வந்த பாடலில் இலயித்தது.

உன் மடியில் நானுறங்க கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ?

“இப்ப mind எவ்வளவு calm-ஆ, happy-ஆ இருக்குது தெரியுமா?”

“ஏன் இப்ப எழும்பின்னீங்க? பேசாமப் படுங்க நதீஷா. நீங்க சரியாக் களைச்சுப் போயிற்றீங்க”

“எங்களுக்கு ஏற்றமாதிரி situation song போகுது என?”

ஏழ் பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தமிந்த சொந்தமம்மா
வாழ்விருககும் நாள் வரைக்கும் தஞ்சம் உன்தன் நெஞ்சமம்மா


“ம்ம்ம்..........”

அன்னமிடும் கைகளிலே ஆடிவரும் பிள்ளை இது
உன்னருகில் நானிருந்தால் ஆனந்தத்தின் எல்லையது.


“இண்டைக்கு இருக்கிறமாதிரி இவ்வளவு சந்தோஷமா ஒருநாளும் நான் இருந்ததில்லைத் தெரியுமா? இப்ப உங்கட wife-ஆ உங்கட ஊருக்கு வாறதை நினைச்சா எவ்வளவு சந்தோஷமா இருக்கு. அம்மாவும் இருந்திருந்தா அந்தமாதிரி இருந்திருக்கும்.”

“ம்....... எல்லாமே கனவு மாதிரி....”

“யாழ்ப்பாணம் போறாக்கள் கெதியா வாங்கோ. bus வெளிக்கிடப் போகுது. கெதியா. அண்ண புட்போட்டில நிக்காம உள்ளுக்கை போங்கோ...”

வன்னியிலிருந்து அடுத்த பேரூந்தில் வந்த பயணிகளுடன் சிற்றூர்தி நிறைந்துவிட அது புறப்பட்டது. மீண்டும் நதிஷா என் தோளில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள். அவள் அருகாமையினை இரசித்தவாறே நானும் பயணிக்கலானேன். கொடிகாமம், சாவகச்சேரி, கைதடி, நாவற்குழி எல்லாம் தாண்டி செம்மணியை நோக்கி வநது கொண்டிருக்கையில் நதீஷா எழுந்து விட்டிருந்தாள்.

“இன்னும் யாழ்ப்பாணம் வரேல்லயைா?”

“இன்னும் கொஞ்சநேரம் தான். இந்தா செம்மணிக்குக் கிட்ட வந்திற்றம்”

“ஓ! இதுதானா அந்த செம்மணி?”

“ஏன்? உங்களுக்கு செம்மணியைப் பற்றித் தெரியுமா?”

“கேள்விப்பட்டனான். கிருஷாந்தி......... அதெல்லாம் இஞ்சதானே நடந்தது.”

கிருஷாந்தி மட்டுமா?

அது 1996ஆம் ஆண்டு July மாதம் 18ஆம் திகதி அதிகாலையில் முல்லைத்தீவு படைத்தளத்தொகுதி மீது இயக்கம் ஓயாத அலைகள்-1 எனப் பெயரிட்டு அழித்தொழிப்புத் தாக்குதலை மேற்கொண்டது. மறுநாள் மாலை அந்தப் படைத்தளத்தொகுதி முற்றாக அவர்கள் வசம் வீழ்ந்தது. அந்தத் தளத்தினை மீட்பதற்கென வந்த சிறிலங்காவின் மீட்புப்படையினர் கடும் சமரின் பின் 23ம் திகதி அந்தத் தளத்தினை அடைந்திருந்தாலும், அங்கு நிலைகொள்ளமுடியாத காரணத்தினால் அத்தளத்தினைக் கைவிட்டுவிட்டுப் பின்வாங்கியிருந்தனர். அந்தச் சமரில் 1400 வரையிலான சிறிலங்காப்படையினர் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும்முகமாக ஆயிரம் வரையிலான அப்பாவித் தமிழ் இளைஞர்கள் தென்மராட்சிப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டு அறுநூறு வரையிலானோர் செம்மணிப் பிரதேசத்தினுள் கொன்று புதைக்கப்பட்டனர். கிருஷாந்தி கொலை வழக்கில் இத்தகவல்கள் வெளியாகியதைத் தொடர்ந்து இரவு நேரங்களில் செம்மணிப் புதைகுழிகள் இரகசியமாகத் தோண்டப்பட்டு அங்கிருந்த சடலங்கள் எடுக்கப்பட்டு எச்சமின்றி எரித்தழிக்கப்பட்டன.

“அரியாலை, கச்சேரியடி இறங்கிறாக்கள் முன்னால வாங்க. மற்றாக்கள் கொஞ்சம் விலத்தி இறங்கிறவைக்கு வழிவிடுங்கோ”

சிற்றூர்தி இப்போது யாழ்நகரினை வந்தடைந்திருந்தது. கைத்தொலைபேசிகளுக்கான சமிக்ஞைகள் யாழப்பாணத்திற்கு வந்திராத காரணத்தால் அருகிலிருந்த கடையொன்றினுள் செனறு நதீஷாவின் அங்கிளுடன் தொடர்பு கொண்டோம். அவர் ஆரியகுளம் சந்திக்கு அண்மையில் அமைந்திருக்கும் மாடிக்கட்டடத்திற்கு வரச்சொன்னார். அது முன்னர் 'உதயம் பல்பொருள் அங்காடி' - ஆக இருந்தது. இப்போது அது படையினரின் பாவனையில் இருந்தது. முச்சக்கர வண்டியொன்றில் ஏறி அவ்விடத்தை அடைந்து நதீஷாவினை அவள் அங்கிளிடம் விட்டுவிட்டு நான் விடைபெற்றேன்.


பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11 பாகம்-12 பாகம்-13 பாகம்-14 பாகம்-15 பாகம்-16 பாகம்-17 பாகம்-18 பாகம்-19 பாகம்-20 பாகம்-21 பாகம்-22 பாகம்-23 பாகம்-24 பாகம்-25 பாகம்-26 பாகம்-27 பாகம்-28 பாகம்-29 பாகம்-30 பாகம்-31 பாகம்-32 பாகம்-33 பாகம்-34 பாகம்-35 பாகம்-36 பாகம்-37 பாகம்-38 பாகம்-39 பாகம்-40 பாகம்-41 பாகம்-42 பாகம்-43 பாகம்-44 பாகம்-45 பாகம்-46 பாகம்-47