Thursday, December 31, 2009

என்னைக் கண்டீர்களா?எனக்குள்ளேயே
நான் இருப்பதாய்
நெடுநாளாயிருந்தவென்
நினைப்பு கலைந்ததெனக்கு.

வேறெங்கோவெல்லாம்
என்னைக் கண்டதாய்,
கண்டவர்கள் வந்து
சொல்லக் கேட்டேன்.

வாய்வழி வந்து
செவிவழி புகுந்து,
பின்னும் நான்
அலைகின்றேனாம்.

பலரும் பார்த்துவிட்டுப்
பார்க்காமலேயே போவதைப்,
பார்த்ததாய்ச் சொல்கிறார்கள்.

காற்று வெளிகளில்
கால்தடம் பதி்ப்பதாய்
தூற்றவும் செய்கிறார்களாம்.

எனக்குள் நானிருந்ததான
நினைப்பெனக்கு
கலைந்ததிப்போ.

உங்களைத் தான்!
எங்கேனும் கண்டீர்களா
நானின்றி என்னை?

Sunday, December 27, 2009

கனவு

இரவைத் தின்று
வளர்கின்றன கனவுகள்.
வதவதவென விதவிதமாய்
கற்பனைக்கும் அப்பால்.

புவியீர்ப்புவிசை எனக்கு
புறக்கணிக்கப்படுகிறது.
ஈர்ப்பின்றியவாறே எனது
இசைவுகளும் அசைவுகளும்.

அர்த்தங்கள் இழக்கும்
தர்க்கங்களும், எந்தவொரு
புத்தகத்திலும் இல்லா
வித்தகங்களுமாய்...

கனவிலும் வருகின்ற
கனவுகள் எந்தப்
புனைவிலும் வாராத
நினையா நிகழ்வுகள்.

கற்பிதங்களா? அன்றி
அற்புதங்களா? அவைபற்றி
செப்பவே முடியாத
சொப்பனங்கள்.

கனவு வாழ்க்கையா?
வாழ்க்கைக் கனவா?
இரவுகளில் கனவா?
கனவுகளில் இரவா?

கனவு தின்கின்ற
உறக்கம்! அல்லது
உறக்கம் தின்கின்ற
கனவு! நிஜமெது?

Monday, December 21, 2009

விடுகதையா வாழ்க்கை?நேற்றைய தினம், நண்பன் ஒருவனின் இல்லத்தில், அவர்களின் பெற்றோரின் வரவினை ஒட்டி விருந்துடன் கழிந்தது. பலரும் கலந்து கொண்ட அந்தத் தமிழக விருந்திற்கு முந்தைய தினம் பிறிதொரு நண்பன் வீட்டில் இலங்கை விருந்து. இரண்டிலும் குழந்தைகளின் இயல்புகளை வியப்புடன் கவனித்தக் கொண்டிருந்தேன். தஙகளுக்குள் அவர்கள் அடிபட்டு அழுதுகொண்டாலும் பின் சிறிது நேரத்தில் தாங்களாகவே கோபங்களை மறந்து மீண்டும் விளையாட்டினைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். நினைத்த போதிலெல்லாம் ஓடினார்கள், துள்ளினார்கள், கூக்குரலிட்டார்கள். இப்போதைய நிலையில் எங்களால் அப்படி முடியுமா?

குழந்தைப் பருவத்தி்ல் நாங்கள் அனைவருமே அப்படித்தான் இருக்கிறோம். ஆனால் வளர வளர எமக்கிடையிலான பேதங்களும் கோபங்களும் வளர்ந்து கொண்டே வருவதுடன் எமது இயல்புகளை இழந்து விட்டு (வரட்டுக்) கௌரவங்களைக் கட்டிக் கொள்கின்றோமே. எதற்காக? அல்லது எவற்றிற்காக? சரி! எதற்காகத்தான் எமக்கு இந்த வாழ்க்கை?

“பிறருக்கு நன்மை செய்யப் பிறந்த நீ, நன்மையைச் செய்யாவிட்டாலும் தீமையையாவது செய்யாதிரு.” என்றார் விவேகானந்தர். அப்படியானால் மற்றவர்கள் எதற்காகப் பிறந்தார்கள் என்ற குதர்க்கம் தானாகவே எழுகிறது. எல்லோருமே ஒருவருக்கொருவர் நன்மை செய்யவே பிறந்ததாக/பிறப்பதாக வைத்துக் கொண்டால், அதற்காக எதற்குப் பிறக்க வேண்டும். பிறக்காமலேயே இருந்திருக்கலாமே. சரி அப்படிப் பிறந்தாலும் பின் எதற்கு இறக்க வேண்டும். வாழ்க்கை என்பது பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியாக இருக்கையில், ஏன் அது அனைவருக்கும் சமமானதாக இல்லாமல் இருக்கிறது?

மாலை செம்பாவாங் கடற்கரைக்குச் சென்றிருந்தோம். பலரும் பொழுதுபோக்கிற்காக தூண்டிலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். கரையை அண்டிய அந்த இடத்திலும் பரவலாக மீன்கள். சில மீன்கள் இரையை அருந்திவிட்டு இலாவகமாகத் தப்பித்துச் செல்ல வேறுசில (அப்பாவி?) மீன்கள் தூண்டிலில் தப்பிக்க முடியாமல் மாட்டிக் கொண்டிருந்தன. அந்த மீன்களைப் போலத்தான் எங்களின் வாழ்க்கையுமா?

இரவு உணவு முடிந்து விடைபெற நேரம் இரவு 9.00 இனைத் தாண்டி விட்டிருந்தது. 'அட்மிரல்டி' தொடரூந்து நிலையம் வரை கூடவே வந்தான் நண்பன். பலவிடயங்களையும் உரையவாடியவாறே வருகையில், விருநதிற்கு வந்திருந்த இன்னொருவரால் பகிரப்பட்ட ஒரு உணமைச் சம்பவம் நினைவுக்கு வரவே, அவனிடம் கூறினேன்.

ஒரு தாய் தன் குழந்தைப்பிள்ளையையும் அழைத்துக் கொண்டு கடைககுச் செல்கையில் அந்தக் குழந்தை தன் தாயிடம்,

“அம்மா! ஏன் நாங்க கடைக்குப் போறம்?”

“பொருட்கள் வாங்க.”

“ஏன் பொருட்கள் வாங்க வேணும்?”

“சமைக்கிறதுக்கு.”

“ஏன் சமைக்க வேணும்?”

“சாப்பிடுவதற்கு.”

“ஏன் சாப்பிட வேணும்?”

“சாப்பிட்டால்தான் உயிரோடிருக்கலாம்.”

“ஏன் உயிரோடிருக்க வேணும்?”

பதில் தெரியாமல் திண்டாடினாள் தாய்.

கதையை முடித்துவிட்டு, “சரி நான் வெளிக்கிடுகிறேன். பிறகு பார்க்கலாம்.” என்றவாறே விடைபெற்றேன் நண்பனிடம்.

“இரண்ணா! கதையை முடிக்காம, இப்பிடிப் பாதியிலயே விட்டுட்டுப்போனா எப்படி?” என்றான் நண்பன்.

விடை தெரியாமல் எனக்குள் உறுத்திக் கொண்டிருக்கும் வினா அது. பின்னால் பலாப்பழத்துடன் பலரும் நிற்பது போன்ற உணர்வு எழ சிரித்துக்கொண்டு விடைபெற்றவாறே, அலைபேசியில் வானொலி இணைப்பினை ஏற்படுத்தினேன்.

அப்போது இரவு 09.30 மணி தாண்டியிருக்கவே, மின்னல் F.M. உடன் காற்றலை வழியே இணைந்து கொள்ள,

“விடுகதையா வாழ்க்கை? விடைதருவார் யாரோ....”
பாடல் கேள்விகளைச் செவிகளுக்குள் செருகிக் கொண்டிருந்தது.

Thursday, November 12, 2009

தொடரூந்து (MRT) எனக்கொரு போதிமரம்


இன்றைய மதிய நேரம். ஒரு கோடியிலிருந்து மறுகோடி வரையிலான நீண்ட தொடரூந்துப் பயணம். ஆரம்பத்தில் பயணிகள் அதிகம் இல்லையாயினும் பயணத்தூரம் செல்லச்செல்ல இருக்கைகள் நிரம்பி, நின்று கொண்டு பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. தொடரூந்து நிலக்கீழ்ச் சுரங்கத்திற்குள் நுழைய அலைபேசியின் வானொலி இணைப்புத் துண்டிக்கப்பட்டது. சுற்றிவர நோட்டமிட்டேன். வழமை போன்றே ஒவ்வொரு பயணிகளும் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாதது போல் தங்கள் தங்கள் உலகில் ஜீவித்துக் கொண்டிருந்தார்கள். அநேகமானோர் காதுகள் iPod-உடனேயே இணைக்கப்பட்டிருந்தன. சிலர் PSP (PlayStation Portable) யில் தீவிரமாக விளையாடிக்கொண்டிருந்தனர்.

அடுத்த தரிப்பிடத்தில் இறங்குவதற்காய், எனக்கருகிலிருந்தவர் எழ, அந்த இருக்கையைக் குறிவைத்து ஒரு சீன இளம்பெண் வந்தாள். அங்கங்கே அங்கங்கள் காட்டும் ஆடையுடன் மதர்ப்பாயிருந்தாள். வாளிப்பாய், வனப்பை அள்ளிக்குவித்து வைத்தது போல் கவர்ச்சியாய் இருந்தாள். அருகில் அமர்ந்ததும் உள்ளம் கிளுகிளுப்பாவதை உணர்ந்தேன்.

அடுத்து வந்த தரிப்பிடத்தில் எனக்கு மறுபக்கத்தில் அமர்ந்திருந்தவர் எழ, அப்போதுதான் உள்ளே நுழைந்த இன்னோர் சீன மூதாட்டி அதில் வந்தமர்ந்தாள். உற்று நோக்கினேன். கூன்விழுந்து உடல் தளர்ந்து நரைதிரை கண்ட பெண். கைகளில் முகத்தில் ஆங்காங்கே பட்டைபட்டையாய் தோல் உரிந்தும் சில இடங்களில் புண்ணாகியும்...அருவருப்பாய் உணர்ந்தேன்.

எனக்குள் பார்த்தேன். ஒருபுறம் தேவதை மறுபுறம் தேவாங்கு என்று எழுந்த எண்ணம் மறுகணமே அடங்கிப்போனது. இப்போது என்னால் அருவருப்பாய்ப் பார்க்கப்படுகின்ற இந்த முதிய பெண்ணும் பல ஆண்டுகளுக்கு முன்னர், அப்போதைய இளைஞர்களுக்கு ஒரு தேவதையாய் இருந்திருக்கக்கூடும். யார் கண்டது, எத்தனை இளைஞர்கள் இவள் பின்னால் அலைந்தார்களோ? இதோ இப்போது என்மறுபக்கத்தில் சுண்டி இழுக்கும் கவர்ச்சியுடன் காணப்படும் இந்த இளம்பெண் இன்னும் பல ஆண்டுகள் கழித்து, அப்போது வரும் இளைஞர்களால் அருவருப்பாய்ப் நோக்கப்படக்கூடும்.

அழகு, நிரந்தரமற்றதெனினும் முதற்பார்வையில், நாம் அழகாய் தெரிபவற்றின் மேல் கவரப்படவும் அசிங்கமாய் தெரிபவற்றின் மேல் வெறுப்புறவும் தானே செய்கிறோம். வாழ்வின் இருகோடி அந்தங்களும் என் இருபுறமும் இப்போது இருப்பதாய் எனக்குப்பட்டது. அழகைக் கண்டு ரசிப்பதா? அல்லது அசிங்கத்தைப் பார்த்து வெறுப்பதா? உணர்வுகள் திண்டாடின.

சரி! இந்த மூதாட்டியை எல்லோருமே அருவருப்பாய்த்தான் பார்ப்பார்களா? மீண்டும் அந்த மூதாட்டி பக்கம் திரம்பினேன். அட! அவருக்கு மறுபுறம் அவரை ஆதுரமாய் அணைத்தவாறே ஒரு வயோதிகர், அவரின் கணவராய் இருக்க வேண்டும். இருவருமே மிகவும் மகிழ்ச்சியாக தங்களுக்குள் உரையாடிக்கொண்டிருந்தனர்.

என்னால் அருவருப்பாய் வெறுக்கப்பட்ட அதே பெண், இன்னொருவருக்கு விருப்புக்குரியவராய் அழகானவராய்த் தெரிகிறார். “காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு” என்கின்ற பழமொழி ஞாபகத்தில் வந்து போனது. ஆக அவர் அருவருப்பாய் எனக்குத் தெரிவது எனது பிரச்சனையே அன்றி அந்த மூதாட்டியின் பிரச்சனையல்ல. அப்படியானால் எனக்கு அழகாய்த் தெரியும் மறுபுறம் அமர்ந்திருக்கும் அந்தப் பெண்ணும் வேறு யாராலும் வெறுக்கப்படக் கூடுமா? என்கின்ற கேள்வி எழுந்தது. இருக்கலாம், யாருக்குத் தெரியும்? “ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளே இருப்பது ஈரும் பேனுமாம்”. பொதுவாக அழகான பெண்களிடம் காணப்படும் அகங்காரத்தினால் எத்தனையோ பேரை இவள் கேவலமாக நடத்தியிருக்கக்கூடும். சிலவேளைகளில் இவள் அகங்காரமற்றவளாய், எல்லோருடனும் அன்பாய் பழகுவளாய்க்கூட இருக்கலாம். இல்லை வேறுவிதமான இரசனை கொண்டவர்களுக்கு சிலவேளை இவள் அசிங்கமாய்க்கூடத் தெரியலாம். ஆக இவள் எனக்கு அழகாய்த் தெரிவதும் எனது பிரச்சனையே அன்றி அவளுக்கும் அதற்கும் சம்பந்தமேயில்லை. ஒரு தெருநாய்க்கு ஒரு குட்டை போட்ட பெட்டைநாய் தான் அழகாய் கவர்ச்சியாய்த் தெரியுமேயன்றி ஐஸ்வர்யாராய் அல்ல.

அழகுகூட ஒரு ஒப்பீடே என்றது உள்மனது. உண்மைதான் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு இன்னொருபொருள் கிடைக்காத போதுதான் நாம் ஒன்றை அப்படியே அது உள்ளவாறே ஏற்றுகொள்வோம். ஆனால் அப்படி, ஒப்பிடமுடியாத ஒரு பொருள் என்று எதுவும் எம்மிடையே உள்ளதா?

உண்மையைச் சொல்லுங்கள். இந்தக் கேள்வியை வாசித்ததும் உங்களுக்குள் ஒரு ஒப்பீடு நடந்ததா? இல்லையா? இதுதான், இந்த ஒப்பீடுதான் எமது எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம். ஆனால் இதே ஒப்பீடுதான் இன்றைய விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சிக்கும் காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக நாம் பிரச்சனைகள் என்று எண்ணுபவற்றிற்கு காரணம் நாம் ஒப்பிடும் பொருட்கள் அல்ல, மாறாக நாம்தான் எமது பிரச்சனைகளுக்குக் காரணம் என்பது புரிந்தது.

இப்போது அந்த அழகிய இளம்பெண் பக்கம் திரும்ப அவள் எனக்கு இளம்பெண்ணாக (அழகிய விடுபட்டுப் போனது) தெரிந்தாள். மறுபுறம் திரும்ப அசிங்கமாய்த் தெரிந்த மூதாட்டி, வயதான பெண்ணாக (அசிங்கம் விடுபட்டுப் போனது) தெரிந்தார். ஏதோ புரிபட்டதாய் உணர்ந்தேன். இன்னும் ஒப்பீடு இருப்பதாகவே தெரிந்தது. நேரம் செல்லச்செல்ல இருவரும் பெண்களானார்கள் (இளமை/முதுமை என்பது விடுபட்டுப் போனது). மேலும் சில கணங்கள் கழிய இருவருமே சக மனிதர்களானார்கள் (பெண்கள் என்பது விடுபட்டுப்போனது). மேலும் சில கணங்கள் கடக்கையில்... நான் இறங்கவேண்டிய தரிப்பிடம் வந்துவிட்டதாக அறிவிக்கப்பட சிந்தனை கலைந்து வெளியே வந்தேன்.

வெளியே வானொலிக்கான சமிக்ஞைகள் இல்லாததால் iPod-இனை அணிந்து கொண்டேன்.

“...எறும்புத்தோலை உரித்துப் பார்த்தேன், யானை வந்ததடா. -நான்
இதயத்தோலை உரித்துப் பார்த்தேன் ஞானம் வந்ததடா...”

கண்ணதாசனின் பாடல்வரிகள் அர்த்தத்துடன் செவிகளை வந்தடைந்து கொண்டிருந்தன.

Monday, November 9, 2009

வள்ளுவர் ஆணாதிக்கவாதி. தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளையையும் கிள்ளிய டாக்டர் கி.வீரமணிசிங்கப்பூர், பெரியார் சமூக சேவை மன்றத்தின் ஏற்பாட்டில், நேற்றைய (08 நவம்பர் 2009) மாலை வள்ளல் பொ.கோவிந்தசாமிப்பிள்ளை திருமண மண்டபத்தில் நடைபெற்ற, 'பெரியார் கண்ட வாழ்வியல்' எனும் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தோம்.


புதுமைத் தேனி மா.அன்பழகன் அவர்கள் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்த எம்.இலியாஸ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். வழமையான வரவேற்புரை போன்றல்லாது அது, வரவிருக்கும் செம்மொழி மாநாட்டினையொட்டியதான ஒரு வேண்டுகோள் உரையாகவும் அமைந்திருந்தது. பின் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் “புதியதோர் உலகம் செய்வோம்...” பாடலுக்கு மாணவியொருவர் மிக அற்புதமாக நடனமாடினார். பின்னர் வந்த குழந்தையொன்று “தமிழுக்கு அமுதென்று பேர்...” என்கின்ற பாடலை வயதிற்கு மீறிய முதிர்ச்சியுடன் மிக அருமையாகப் பாடினார்.

இம்முறை முதன்முறையாக சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தினரால் 'பெரியார் விருது' விருது வழங்கப்பட்டது. சிங்கை தேசிய நூலக வாரியத்தின் மூத்த அதிகாரி திருமதி புஷ்பலதா அவர்கள், தமிழ்மொழி வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய/ஆற்றிக் கொண்டிருக்கும் பணிக்காக அவ்விருது, வழங்கிக் கௌரவிக்கபட்டார்.

டாக்டர். சோம. இளங்கோவன் அவர்களின் வாழ்த்துரையினை அடுத்து தமிழ்நாடு திராவிடர் கழகத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் சிறப்புரை ஆரம்பித்தது.


அவரின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவர் 30 நிமிடங்கள் மட்டுமே உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் பெருமளவு நிமிடங்களுக்கு மேடையில் அமர்ந்திருந்தவர்களைப் பற்றியே புகழ்ந்து கொண்டிருந்தபோது, ச்சே! 30 நிமிட நேரத்தையும் இப்படியே தான் விரயமாக்கப் போகின்றாரோ என்று, அவரிடம் வேறு பல விடயங்களையும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த மனது சலிததுக் கொண்டது. பின் அவர் பெரியாரின் வாழ்வில் இடம்பெற்ற பல சம்பவங்களையும் பகிர்ந்து கொண்டபோது என்ன மனிதர் இவர்? இப்படிக் கீழ்த்தரமானவராக நடந்து கொள்கின்றாரே என்றுதான் எண்ணத்தோன்றியது.

பெரியார் ஒருபோதுமே தன்னை யாரும் மேடையில் வைததுப் புகழ்ந்து பேசுவதை விரும்பியதில்லை. மேலும் அவர், ஒருவரை மிகக் கடுமையாகத் தண்டிக்க வேண்டுமெனில், தண்டிக்கப்பட வேண்டியவரை மேடையில் ஏற்றி வைத்துவி்ட்டு அவரைப்பற்றிப் புகழ்ந்து கொண்டே இருந்தால் அதை விடக் கடுமையான தண்டனை வேறொன்று இருக்க முடியாது என்றார். அப்படியானால் மேடையில் இருந்து விழாவைச் சிறப்பித்தவர்கள் மேல் டாக்டர் கி. வீரமணி அவர்களுக்கு அப்படி என்ன கோபமோ? தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளைகளையும் கிள்ளி விட்டிருந்தார்.

30 நிமிடங்களைத் தாண்டி சூடுபிடித்து நீண்டு சென்ற உரை ஒரு மணித்தியாலத்திற்கும் அதிகமான நேரத்தினை விழுங்கி விட்டிருந்தாலும் பார்வையாளர்களைத் தனது பேச்சினால் கட்டிப்போட்டிருந்தார். பெரியார் கண்ட வாழ்வியலினை பலரும் முறையாக அறிந்திருக்கவில்லை என்று குறைபட்டுக் கொண்டார். பெரியாரைப் பற்றிப் பலரும் அறிந்திருந்தாலும் அவர்களில் பெரும்பாலானவர்களும் குருடர்கள் பார்த்த யானை போன்றே பெரியாரின் ஒவ்வொரு பக்கங்களை மட்டுமே அறிந்திருப்பதாகவும் கூறினார். உண்மைதான், பெரியாரினால் வலியுறுத்தப்பட்ட பெண்விடுதலை, சிக்கனம், சீர்திருத்தத் திருமணம் என்பவற்றையெல்லாம் விட்டுவிட்டு , நாத்திகம் பேசுவதற்கு மட்டுமே இப்போதெல்லாம் பெரியாரின் பெயர் உபயோகிக்கப்படுகிறது.

“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்”

என்கின்ற குறளினை உவமைக்கு எடுத்திருந்த டாக்டர் கி.வீரமணி அவர்கள், ஆண்களை மட்டுமே இக்குறள் குறிப்பதாகக் கூறினார். மேலும்,

“ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்”

என்கின்ற குறளினையைம் கூறிய அவர் வள்ளுவர் ஆணாதிக்க வாதியாக இருந்திருப்பாரோ என்கின்ற சந்தேக விதையினையும் தூவிவிட்டிருந்தார். ஒரு ஆணுக்கு இந்த சமூகத்தில் என்னென்ன உரிமைகள் உள்ளதோ அதே உரிமைகள் ஒரு பெண்ணுக்கும் இருக்கவேண்டும் என்பதற்காக பெரியார் அயராது உழைத்ததாகவும் கூறினார். சிங்கப்பூர், எப்போதோ பெரியார் கண்ட, பெண்விடுதலையை அடைந்து விட்டிருப்பதைப் பார்த்து தான் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறினார்.

நிகழ்ச்சிகள் நிறைவுற வெளியே வந்தோம். அப்போது வயதானவர் ஒருவர் எங்களருகில் வந்து நாங்கள் எங்கே இருக்கின்றோம் என்று வினவினார். நாங்கள் சொன்னதும், என்னருகில் நின்றிருந்த அம்மாவிடம் “உங்கள் பெண்பிள்ளைகள் யாரும் மணமாகாமல் இருக்கின்றார்களா?” என்றார். ஒருவேளை அந்த அம்மாவிற்கு தெரிந்தவராய் இருக்கலாம் என்கின்ற எண்ணத்தில் நான் பார்வையாளனானேன். அவர் தனது மகனுக்குத் தகுந்த பெண் தேடுவதாகவும், ஊரில் (இந்தியாவில்) பெண்கள் இருந்தால் அறியத்தரும்படியும் கேட்டது தான் அந்த உரையாடலின் சாராம்சம். பின் அநத அம்மாவுடன் உரையாடிய போது இன்றுதான் அவரை முதன்முதலில் சந்திப்பதாகவும், இங்குள்ள பெரும்பாலான பெற்றோர் தங்கள் ஆண்பிள்ளைகளுக்கான மணமகள்களை ஊரிலேயே தேடுவதாகவும், அப்படி இணைந்து கொண்ட குடும்பங்கள் ஒற்றுமையாக இருப்பதாகவும், இங்கேயே திருமணம் செய்து கொண்ட பெரும்பாலனவர்களின் குடும்பங்கள் விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் நிற்பதாகவும் கூறினார். அப்படியானால், இதைத்தான் பெரியார் கண்ட பெண்விடுதலை என்பதா?

Friday, October 30, 2009

வேரென நீயிருந்தாய்... (7)

அன்று சனிக்கிழமை, விடுமுறை நாள். அறையில் இருந்த நண்பர்களில் சிலர் தங்களின் வீடுகளிற்குச்சென்றுவிட்டிருந்தார்கள். இப்போதெல்லாம் குருந்துவத்தைச்சந்தியால் இறங்குவதைத்தவிர்த்து அங்குணாவலையூடாக எமது பாதையினை மாற்றி விட்டிருந்ததில் சிரேஷ்ட மாணவர்களின் பார்வையில்படுவதை பெருமளவில் தவிர்த்துக்கொண்டிருந்தோம். அன்றைய காலைஉணவிற்காக அங்குணாவலைச்சந்தியை அடைய, ச்சே! வெறுத்துப் போனது மனது. சிரேஷட மாணவர்கள்! ஏற்கனவே பல தடவைகள் சந்தித்து தாராளமாய்த்தோப்புக்கரணமும் ரிப்சும் (தண்டால்) அவர்களின் பெயரால் வாரி வழங்கியிருந்தோம்.

“டேய்! இஞ்சை ஏன்ரா வந்தனீங்கள்?”

”சாப்பிட”

”உங்களையெல்லாம் குருந்துவத்தையிலதானே சாப்பிடச்சொன்னது. சீனியர்ஸிற்குச் சுத்திக்கொண்டு இஞ்சால ஒளிச்சுத்திரியிறியள் என. வாங்கடா! இண்டைக்கு அக்பரில வந்து சாப்பிடுங்கோ.”

வெறுத்துப்போன மனதுடன், சிரேஷ்ட மாணவர்களுடன் பேருந்துத் தரிப்பிடத்தினை அடைய பேருந்தும் வந்துசேர்ந்தது.

சிங்கத்தின் குகைக்குள் செல்வது போன்றிருந்தது. வரிசையில் நின்று சாப்பாட்டிற்கு காசு கொடுத்தபோது திகைப்பாயிருந்தது. விலைகள் எல்லாம் அவ்வளவிற்கு குறைவாயிருந்தன.

“இனித் திரும்பிப்போறது உங்கட கெட்டித்தனம்.” என்று சொல்லிவிட்டு அவர்கள் சென்றுவிட, வேறு சிலர் எம்மைச்சூழ்ந்துகொண்டனர். ஒவ்வொருவரையும் ஒவ்வொரு திக்காய்ப்பிரித்து அழைத்துச்சென்றனர். மாடிப்படிகள் நிலத்துக்கு கீழே செல்வது ஆச்சரியமாயிருந்தது.

நாமும் நடக்க தானும் நடக்கின்ற ஏகாந்தப்பெருங்ககனம் என்பது போல் இருண்ட ஹொரிடோரின் வழியாக நடந்து கொண்டேயிருந்தோம். அறையிலக்கங்கள் 2024 முடிந்து 3122ம் முடிந்து 4103 இற்கு வருகையில்,

”மச்சான் கம்பூச்சி வந்து நிக்கிறேராமடாப்பா. இவன வச்சிருந்தால் பிரச்சனை. ஆளை அனுப்பு” - என வேகமாக வந்து சொன்ன இன்னொரு சிரேஷ்ட மாணவனின் சொற்கேட்டு.

“உனக்கு இண்டைக்கு நல்ல காலம். ஓடித்தப்பு”

என்று என்னை விரட்டினார்கள். திரும்பி தனியே வர பாதை பிடிபடவில்லை. மாறி குளியலறைத்தொகுதிக்குள் நுழைய....

“you can go this way.” ஒரு சிங்கள சிரேஷ்ட மாணவன் சரியான பாதைகாட்ட அறை இலக்கம் 2001 தாண்டி வர வெளியே வாசல் தெரிந்தது. வரும்போது கீழே இறங்கி வந்தது நினைவிற்குவந்து குழப்பியது. பின்புதான் அக்பர் விடுதியைப்பற்றி மற்றைய மாணவர்கள் கூறியது நினைவிற்கு வந்தது. அது பள்ளம் மேடு சார்ந்தவொரு நிலப்பரப்பில் அமைந்திருந்ததால் ஒரு கட்டடத் தொகுதி மற்றைய கட்டடத்தொகுதியினின்றும் ஒரு தளம் உயர்ந்திருப்பது புரிந்தது. அதன் வழியே வெளியேறி எங்கே செல்வது என்று குழம்புகையில்.

“அணணே! இதுக்குள்ள என்ன தடவுறாய்?”
-ம்ம்ம்...! சரி! இண்டைக்கு ஆப்புத்தான் என்றது மனது.

“வாடா வா அப்பிடியே எனக்குப்பின்னால சத்தம் போடாம வா” - பின்தொடர்ந்தேன்.

“போய்க் கதவைத் திற” - திறந்தேன்.

“சின்னனில ஒளிச்சுப்பிடிச்சு விளையாடியிருக்கிறியா? ”

”ஓம்”.

”அப்ப இந்த றூமுக்குள்ள எதுக்குள்ளையெண்டாலும் போய் ஒளி. நான் உன்னத் தேடுறன்.”

ஙே!

“என்னடா முழிக்கிற? ரெண்டு அலுமாரி கிடக்கு, கட்டிலுக்குக் கீழ எவ்வளவோ இடங்கிடக்கு. கெதியா ஒளி”.

கட்டிலுக்குக்கீழே குனிந்தேன். திகைத்தேன். அதற்குள் வேறொரு மாணவன் படுத்துக்கிடந்தான். மறுபுறம் திரும்பி மற்றக்கட்டிலின் அடியில் பார்க்க அட! அங்கேயும் வேறொரு மாணவன்.

“என்ன ஒளிஞ்சாச்சா?”

அவசரமாய் அலுமாரிகளைத் திறந்தேன். எல்லாமே ஏற்கனவே வேறு சக மாணவர்களால் நிரப்பப் பட்டிருந்தன.

”என்ன இன்னும் ஒளியேல்லையா?”

”இ.. இ..இடமில்லையண்ணே.”

”சரி அப்ப வந்து கதிரையில இரு.”

கண்களுக்கு எந்தக் கதரையுமே தட்டுப்படவில்லை.

“என்னடா? சொன்னது விளங்கேல்லையோ? கதிரையிலை இருடா எண்டால் வாய்பாத்துக் கொண்டு நிக்கிறாய்”

“ல்ல.. கதிரையொண்டையும் காணேல்ல”

“பேய்ப்... உங்கொப்பனா இஞ்ச கதிரைகொண்டந்து வச்சவன். டேய்! உள்ளுக்க இருக்கிறவங்கள் எல்லாம் வெளியால வாங்கடா” - வந்தார்கள்.

“ஆராரு (யார்யார்) நேற்று ராத்திரியே வந்தாக்கள்?”- இருவர் கையுயத்தினர்.

“ரெண்டு பேரும் ஓடுங்கோ. நீங்க மூண்டு பேரும் வரிசையா வந்து கதிரையில இருங்கோ”

மற்றைய இருவரும் கதிரையில் உட்காருவதைப் போலவே பாவனை செய்ய நானும் உட்கார்ந்தேன்.

”டேய் புதுசா வந்தனி! காலுக்கு மேல கால் போட்டுக்கொண்டு இரு. இருடா எண்டுறன். தூக்கடா ஒரு கால.” - தூக்க முயற்சித்தேன். அப்படியே தவறிக் கீழே விழுந்தேன்.

”ஏன்ரா கதிரையை உடைச்சனி? டேய் குட்டான்! நீ சிரிக்கிற என. போடா போய்ச் சிரிப்ப வெட்டி எறிஞ்சிற்று வா”
முதலாவதாயிருந்த அந்த சின்ன உருவம் தன் சொண்டினை (உதடுகள்) ஒருகையால் இழுத்துப்பிடித்தவாறே மற்றைய கையால் கத்தி கொண்டு அறுப்பது போன்றும் பின் அறுபட்டதை ஜன்னலால் எறிவது போன்றும் பாவனை செய்தான்.

“நீ நல்லா ராக்கிங் வாங்கித்தானிருக்கிற. சரி அப்பிடியே நிலத்தில இரு” - அவன் இருந்தான்.

“டேய் ரெண்டாவது நீ மக்ஸிமம் எத்தனை தோப்பு போட்டிருக்கிற?”

”முன்னூறு”

“நீ”

”நானூற்றிஎண்பது”

“ஆருக்குப் போட்டனி?”

“ஒணரபிள் சுப்பர் சுப்பர் சீனியர் ரமேஷ்”

“சரி எல்லாரும் கிட்ட வந்து நிலத்தில இருங்க” அருகே சென்று அமர்ந்தோம்.

“ஒவ்வொருத்தரா உங்கட detailsஅ சொல்லுங்கோ. இஞ்ச வைச்ச பெயரொண்டும் வேண்டாம்.”

“என்ர பேர் பாலசிங்கம் இந்திரன். சொந்த இடம் கோப்பாய்.....”

“நீ”

“என்ர பேர் சண்முகலிங்கம் கணேசன். சொந்த இடம் பருத்தித்துறை.....”

“நீ”

“என்ர பேர் சுந்தரலிங்கம் ஜெயந்தன். சொந்த இடம் வேலணை....”

“சரி! உங்களில ஆருக்குப்பாட்டுப்பாடத் தெரியும்?”

மூவருமே தெரியாதெனத் தலையாட்டினோம்.

“டேய் பருத்தித்துறையான்! அப்ப நீயொரு கதைசொல்லு. பருத்தித்துறை ஊராம் பவளக்கொடி பேராம்.. எண்டில்லாம நல்லொரு கதையைச் சொல்லு.”

“அண்ணே எனக்குக் கதை தெரியாது.”

“ஆமை முயல் கதை தெரியுமா?”

“ஓம்”

“அப்ப அதைச் சொல்லு.”

“ஒரு ஊரில ஒரு ஆமை இருந்துதாம்.”

“என்னடா அம்புலிமாமாக் கதை போல ஒரு ஊரில ஒரு ஆமையெண்டு? ஊரின்ரை பெயரைச் சொலலிச் சொல்லு”

“பருத்தித்துறை என்கின்ற ஊரில ஒரு முயல் இருந்துதாம்.”

“அப்ப முயலுக்குப் பேரில்லையோ?”

“பருத்தித்துறை என்கின்ற ஊரில ராமன் என்கின்ற முயல் இருந்துதாம்.”

“எப்ப இருந்ததாம்?”

“1997 ஆம் ஆண்டு”

“கதை சொன்னா முழுசாச் சொல்ல வேணும். நீ பிழை விட்டால் திரும்பி முதலில இருந்து சொல்ல வேணும் சரியா? இப்ப சொல்லு”

“1997ஆம் ஆண்டு தை மாதம் 14ம் திகதி பருத்தித்துறை என்கின்ற ஊரில இருந்த ராமன் என்கின்ற முயல் ஒரு ஆமையிடம் சென்று...”

“நிப்பாட்டு. ஆமைக்குப் பெயரில்லையோ?”

“1997ம் ஆண்டு..... ராமன் என்கின்ற முயல் மணி என்கின்ற ஆமையிடம் சென்று ஓட்டப்போட்டிக்கு வருமாறு அழைத்தது. போட்டி தொடங்கியதும்...”

“இஞ்ச வா! போட்டி எங்க நடந்தது?”

“1997ம் .....அழைத்தது. போட்டி மணியாறன் வளவடியில் இருந்த ஒழுங்கையில் தொடங்கியது.”

“எத்தின மணிக்குத் தொடங்கினது?”

“1997.....போட்டி மாலை 4.00 மணிக்குத் தொடங்கியது. ராமன் என்கின்ற முயல் வேகமாக”

“நிப்பாட்டு. போட்டிக்கு ஆரு நடுவர்?”

“1997.... யோன் என்கின்ற நாயை நடுவராக வைத்து போட்டி தொடங்கியது.”

“ஆமை முயல் எல்லாம் ஓடேக்குள்ள என்ன உடுப்பு போட்டிருந்ததுகள்?”

“1997..... ராமன் என்கின்ற முயல் நீல நிறக்காற்சட்டையும் வெள்ளைநிற மேற்சட்டையும் அணிந்திருந்தது.”

“டேய்! ஓட்டபபோட்டி நடக்குது. முயல் ஜட்டி போடாமா ஓடுதாம். ஆருக்குக் கதை விடுறாய்?”

“1997...........”

“....”

“199.....”

“....”

“19......”

“....”

“1......”

“....”

“@#$%^&*......”

“மவனே றூமுக்குப் போய் ஒழுங்கா prepare பண்ணீற்று நாளைக்கு வந்து எனக்கு இந்தக்கதையை முழுக்கச் சொல்லோணும். இல்லையெண்டால்.” - சரியென்றவாறு கணேசன் தலையாட்டினான்.

”சரி எப்பிடி வெளியால போறதெண்டு தெரியுமா? இப்ப lunch time. அக்பர் வாசலால போனீங்களெண்டால் வேறையாரும் பிடிப்பாங்கள். இப்பிடியே அக்பருக்கும் facultyக்கும் இடையால போற றோட்டால போய் பனிக்குள்ள (பனிதெனியா) இறங்கி தப்பிப் போங்கடாப்பா. ”


பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6

Thursday, October 29, 2009

வேரென நீயிருந்தாய்...(6)

1997 ஓகஸ்ற் திங்கள் 11ஆம் நாள் காலை, எமக்கான தீவிர ஆங்கில வகுப்புகள் (Intensive course) ஆரம்பமாயின. எமது வசிப்பிடமாக, பேராதனை முதல்நாளே மாறிவிட்டிருந்தது. கண்டியின் கடுங்குளிரை விரட்டி காலைக்கடன்களை முடித்துவிட்டு குருந்துவத்தைச்சந்தியை நோக்கி இறங்கிக்கொண்டிருந்தோம். எதிர்பார்த்ததைப்போன்றே சிரேஷ்ட மாணவர்கள் வழிமறித்தாலும் வகுப்பிற்கு நேரமாகிவிட்டதால் எம்மை யார் கூப்பிட்டாலும் திரும்பிப் பார்க்காமல் ஓடச்சொல்லிப்பணி்த்தார்கள். சற்று நேரத்திலேயே, எம்மை நிற்கச்சொல்லி சில குரல்களும் ஓடச்சொல்லி சிலகுரல்களும் எம்செவிகளை வந்தடைந்தாலும் ஓடுவதே அவர்களிடமிருந்து தப்புவதற்கான வழி என்பதால் ஓடிக்கொண்டிருந்த எம்மை மிதிவண்டியில் துரத்திவந்த இருவர் வழிமறித்தனர்.

“நிக்கச்சொன்னது காதில கேக்கேல்லையோடா உங்களுக்கு?”

“டேய்! நீதான் கோடுபோட்ட சேட்டு, இஞ்சகிட்ட வாடா.”

பளாரென்ற ஓசைகேட்டுத்திடுக்கிட்டேன். சீலன் தன் கன்னத்தைத்தடவிக் கொண்டிருந்தான். அவனின் விழியோரங்களில் கண்ணீர்த்துளிகள் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தன.

“உனக்கு எங்களப்பாத்தாச் சிரிப்பு வருகுதோ? பேய்ப்... என்னடா பேர் உனக்கு?”

“பார்சிலோனா”

“ஆரடா வச்சது?”

“ஒனரபிள் சுப்பர் சீனியர் செந்தூரன்”

“உங்கொப்பாம்மா வச்சபேர் என்னடா?”

“தில்லைநாதன் சாந்தசீலன்”

“மவனே இண்டைக்கு பின்னேரம் கிளாஸ் முடிய நேர பேய்வீட்டுக்கு வாற. வேறையாரும் கூட்டிக்கொண்டுபோய்ற்றாங்கள் எண்டு சொல்லி வராம விட்டியெண்டா நீ செத்தாய். எல்லாரும் ஓடுங்கடா”

பின்னங்கால் பிடரியில் பட ஓடத்தொடங்கினோம்.

வகுப்பின் இடைவேளையில்,

“என்னை ஐசே! உங்களோட இருக்கிற சீலனை பேய்வீட்டுக்கு வரச் சொல்லியிருக்கிறாங்களாம். அவன் போனா பிறகு அடுத்தடுத்து நீங்களும் போக வேண்டி வரும்.” -என்றான் எனது வகுப்பில் இருந்த நண்பன்.

“பேய்வீடு எங்கை ஐசே இருக்கு? அங்க போனா என்ன செய்வாங்கள்?”

“குருந்துவத்தையிலதான் இருக்கு. அங்க விஐபி-மாரத்தான் கொண்டு போறவங்கள். அங்க போனா முறிமுறியெண்டு முறிச்சுப்போடுவாங்கள். கறண்ட்ஷொட் எல்லாம் குடுப்பாங்கள். கீழ விழேக்குள்ள முழங்கைச் சில்லெல்லாம் வெடிக்கிறமாதிரியிருக்கும். போனவருஷம் எங்கட இம்மீடியற் சீனியர்ஸ்ஸில கறண்ட்ஷொட் வாங்கினவையின்ர இரத்தம் இப்பையும் சுவரில இருக்காம் ஐசே.”

மண்டை விறைத்தது. எப்படி இந்த பகிடிவதைக்குள்ளால் தப்பிப் பிழைக்கப்போகின்றோமோ என்கின்ற பயம் பிரமாண்டமாய் மனமெங்கும் வியாபித்தது. அதற்குள் இன்னொரு சக மாணவன் வந்து எல்லோரது விபரங்களையும் ஒரு தாளில் திரட்டிக்கொண்டிருந்தான். அது சிரேஷ்ட மாணவர் ஒருவரால் அவனுக்கு வழங்கப்பட்ட கோர்ஸ்வேர்க் (course work).

“ஐசே சீனியர்ஸ்ட்ட குடுக்கமுதல் போட்டோக்கொப்பியொண்டு எடுத்து வச்சிற்றுக்குடும்.” என்ற நண்பனிடம் எதற்கு என்றேன்.

”எங்களிட்டையும் இந்தக் கோர்ஸ்வேக்கத் தருவாங்கள். இப்பையே ஒரு கொப்பி எடுத்து வச்சிற்றால் பிறகு நாங்கள் அலையவேண்டியிருக்காது” என்றான்.

அவன் இரண்டாம் தடவையில் பல்கலைக்கழக அனுமதி பெற்றிருந்ததால் தற்போது எமக்கு immediate seniors ஆக இருக்கும் அவனது பாடசாலைக்கால வகுப்புத்தோழர்களிடமிருந்து எல்லாத்தகவல்களையும் அவன் அறிந்து வைத்திருந்தான்.

மாலை வகுப்புக்கள் முடிந்ததும் அவனுடனேயே வேறு பாதையால் இறங்கி புகையிரதப்பாதை வழியே நடந்து பனிதெனியாவை அடைந்து பின் பேருந்தி்ல் ஏறி கலகாச் சந்தியில் இறங்கி மீண்டும் கம்பளைக்கான 718 இலக்க பேருந்தினைப்பிடித்து குருந்துவத்தைச் சந்தியில் இறங்க அதிர்ஷ்ட வசமாய் யாரும் இல்லாதிருக்கவே சந்திக்கடையி்ல் வெதுப்பியினை (bread) வாங்கிக் கொண்டே எனது அறையினை அடைய அறை நண்பர்களில் ஒருவன் ஏற்கனவே வந்துவிட்டிருந்தான்.

பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5

Friday, October 23, 2009

'தனி' குறும்படமும் தனிமையும்.

நேற்று மாலை அங்மோக்கியோ பொதுநூலகத்தில் 'தனி' குறும்பட நிகழவிற்கு நண்பன் ஒருவனுடன் சென்றிருந்தேன். சிங்கையில் நடைபெறும் வழமையான நிகழ்வுகள் போன்றே சிற்றுண்டி வழங்கலின் பின் நிகழ்வுகள் மாலை 06.30 அளவில் ஆரம்பமாயின. செவிக்குணவில்லாத போது வயிற்றுக்கும் கொஞ்சம் ஈயப்படும் என்றார் வள்ளுவர். ஆயினும் இங்கே சிங்கையில் நடைபெறும் அநேக நிகழ்வுகளிலும் வயிற்றிற்கு உணவளித்த பின்பே செவிகட்கும் விழிகட்கும் விருந்தளிக்கப்படகின்றன. ஒருவேளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எல்லோருமே பசி வந்திடப் பத்தும் பறந்துபோம் என்கின்ற ஔவையாரின் கருத்துக்களுடன் உடன்பட்டிருக்கக்கூடும்.


மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் முயற்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த கொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்.


என்று நல்வழிப் படுத்தி என் போன்றவர்களின் வயிற்றில் பால்வார்த்த ஔவைப்பாட்டிக்கும் நன்றி. பின் பாலப்பம் போன்ற தின்பண்டம் தந்த கவிமாலைப் பொழுதின் ஔவைப்பாட்டிக்கும் நன்றி. “வடை சூப்பரா இருக்கண்ணா.” என்ற கூடவந்த நண்பன் தங்கள் ஊரில் (விழுப்புரத்தில்) கையேந்திபவனில் சாப்பிட்ட தருணங்களை நினைவுகூர்ந்தான். உண்மையிலேயே வடையும் அன்னாசியில் செய்யப்பட்ட கேசரியும் அருமையாவே இருந்தன். 'அடு' எடுத்துச் சாப்பிட்டோம்.


தொடர்ந்து வழமைபோன்று தலைமையுரை, வரவேற்புரை என்பவற்றின் பின் குறும்படங்களின் வரலாறு பற்றிய ஒரு உரையினையும் அடுத்து 'இன்று' என்கின்ற குறும்படமும் பின் அதனைத் தொடர்ந்து 'தனி' குறும்படம் பற்றிய மதிப்புரைகளும் இடம்பெற்றன. 'தனி' மற்றும் 'தனிமை' என்கின்ற சொற்களுக்கிடையிலான கருத்து வேறுபாடுகள் மிக அழகாக எடுத்துரைக்கப்பட்டன. ஒவ்வொருவர் பார்வையிலும் 'தனி' குறும்படத்தின் குறியீட்டுப் படிமங்கள் மாறுபட்டிருந்ததனை அவதானிக்கக்கூடியதாயிருந்தது. கவிஞர் பேராசிரியர் அப்துல் ரகுமான் அவர்கள் தனது நூலொன்றில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். ஒரு இலக்கியப் படைப்பானது வாசகரின் பார்வைக்கு ஏற்ப பல்வேறு கருத்துக்களையும் தரக்கூடியதாக இருத்தல் வேண்டும். ஒரே வாசகனுக்குக் கூட அது சிலவேளைகளில் வெவ்வேறு கருத்துக்களைத் தரக்கூடியதாக அமையவும் வேண்டும் என்றார். அவர் ஒருமுறை இரட்டை அர்த்தத்தில் திருக்குறளின் மூன்றாம் பிரிவாகிய காமத்துப்பால் பற்றி எழுதிய,


கடைப்பால்
எனவே
கலப்புப்பால்


என்கின்ற கவிதை வரிகளுக்கு வாசகர்கள் மூன்றாவது அர்த்தம் கூறித் தன்னை வியப்பில் ஆழ்த்தியதை விபரித்திருந்தார். ஆக 'தனி' குறும்படத்திற்கு அதுவும் வசனங்கள் எதுவும் அற்றவொரு குறியீட்டுப் படத்திற்கு அவரவர்கள் தங்கள்தங்கள் புரிதலுக்கு ஏற்றவாறு மதிப்பீடுகள் வழங்கியது ஏற்றுக் கொள்ளக்கூடியதே.


ஞானி ஓஷோ அவர்கள் ஏற்கனவே ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு தனித்தனித் தீவுகளே என்று கூறியிருக்கிறார்.ஒரு குடும்பமாகட்டும் அல்லது ஒரு சமூகமாகட்டும். அங்கே இருப்பவர்கள் எல்லோருமே எல்லா விதத்திலும் ஒத்த எண்ணங்களையும் விருப்பு வெறுப்புகளையும் கொண்டிருப்பதில்லை. அந்த வகையில் அவர்களின் உலகங்கள் வேறானவை. ஒவ்வொருவரும் தனித்தனித் தீவுகளிலேயே அதாவது தங்கள் தங்கள் எண்ணங்களிலேயே வசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆயினும் அந்தத் தீவுகளுக்கிடையே ஏற்படுத்தப் பட்டிருக்கும் பாலங்களே உறவுகள் என அழைக்கப்படுகின்றன. தேவைப்படும் பொழுதுகளில் அந்த உறவுப்பாலங்களில் அவர்கள் சந்தித்துக் கொள்கின்றனர். மற்றம்படிக்கு தங்களின் தனித்தனித் தீவுகளுக்குள் மட்டுமே அவர்களின் எண்ணங்கள்/வாழ்க்கை. இப்படியான உறவுப்பாலங்கள் யாவுமே துண்டிக்கப்பட்டவர்களையே நாம் தனிமையில் வாழ்கின்றவர்கள் என்கின்றோம். சிலர் தாமாக விரும்பி இவ்வாறான உறவுப்பாலங்களைத் துண்டித்துக் கொள்கின்றனர். இவர்கள் கீதையில் சொல்லப்படுவதைப் போல், தனிமையில் கூட்டத்தில் இருப்பதைப் போலவும் கூட்டத்தில் தனிமையில் இருப்பதைப் போலவும் உணரும் வல்லமை படைத்த ஞானிகள். சிலரோ ஏனையவர்களால் துண்டித்துக் கொள்ளப்படுகின்றனர். அப்படிப்பட்டவர்களே வேதனைக்குரியவர்கள். தனிமையில் வாடித் தவிப்பவர்கள். பரிதாபத்திற்குரியவர்கள்.


சி்ஙகையில் வசிக்கும் இளைஞர்களான பாண்டித்துரை மற்றும் அறிவுநிதி ஆகியோரின் தயாரிப்பில், கவிஞர் அய்யப்பமாதவன் அவர்களின் நெறியாள்கையில் ஒளிப்பதிவாளர் செழியன் அவர்களினால் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் 'தனி' குறும்படம் தனிமையில் வாடித் தவிக்கும் ஒருவனின் நிலையை வெளிக்கொணர்வதாக அமைந்திருக்கிறது. தனியாக தனிமையில் வசிக்கும் ஆடவன் ஒருவனின் அன்றாட வாழ்க்கையினை ஏறத்தாழ பத்து நிமிடங்களிற்குள் சித்திரிக்கும் இக்குறும்படத்தினை மூன்று தடவைகள் பார்த்த பின்னரேயே மதிப்பீடு வழங்கியவர்களின் புரிதல்களை ஓரளவிற்காவது உணர்ந்து கொள்ள முடிந்தது. (இக்குறும்படம் ஏற்கனவே இந்தியாவில் திரையிடப்பட்டு http://youthful.vikatan.com/youth/documant28072009.asp என்கின்ற தளத்தில் பார்வையிடக் கூடியதாக இருப்பதை ஏற்கனவே என்னுடன் வந்திருந்த நண்பன் கூறியிருந்தான்.) கதையின் பாத்திரமான ஆடவனுடன் சில செக்கன்களே காட்டப்படும் பெண்ணும் ஒரு பூனையுமே இக்குறும்படத்தில் இடம்பெற்ற உயிருள்ள பாத்திரங்கள்.


குறும்பட வெளியீட்டினை நடாத்திய பின் தமிழ்த் திரையுலகின் ஒளிப்பதிவாளர் செழியன் அவர்களின் உரையும் அதைத் தொடர்ந்து அவருடனான கலந்துரையாடல் என்கின்ற பெயரில் கேள்வி பதில் நிகழ்ச்சியும் இடம்பெற்றது. சில வாரங்களுக்கு முன்னர் இதே தமிழ் திரையுலகிலிருந்து இயக்குனர் சேரன் அவர்களின் உரையும் அவருடனான கலந்துரையாடலும் இடம்பெற்றிருந்தது. அன்றைய நிகழ்வில் பார்வையாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த இயக்குனர் சேரன் அவர்கள் முதலெழுத்து (initial) இல்லாமல் வெறுமனே சேரன் என்றே தனது பெயரினைப் பாவிப்பதைத் தவறென்று ஏற்றுக் கொண்டாலும் இனிமேலும் அதை மாற்றுவதற்கில்லை என்று வெளிப்படையாகச் சொல்லிய பாங்கு அவர் மீதான மரியாதையை என்னுள் அதிகரிக்கச் செய்திருந்தது. ஆயினும் தரமான, குடும்பத்துடன் அமர்ந்திருந்து இரசிக்கக் கூடிய தமிழ்த் திரைப்படங்களைத் தரமுடியாதிருப்பதற்கான பிரதான காரணமாக இருப்பது தமிழ் இரசிகர்களே என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. குத்துப் பாடல்களையும் அங்கங்கள் அனைத்தையும் அரைகுறையாகக் காட்டும் விதமாக ஆடையணிந்து வரும் நடிகைகளையும் கொண்டிருக்கும் படங்களுமே வெற்றி பெறுவதாகவும். கலாச்சார விழுமியங்களைப் பேணியவாறு வரும் படங்கள் தயாரிப்பாளர்களுக்கு நட்டத்தினையே ஏற்படுத்துவதால் எந்தவொரு தயாரிப்பாளருமே அவ்வாறான படங்களில் முதலீடு செய்வதற்கு தயாராயில்லை என்பதுவே யதார்த்தம் என்றார். ஆயினும் விதிவிலக்காகவே அவரின் ஆட்டோகிராப் படம் வெற்றியீட்டியது என்றும் பொக்கிஷம் படம் நட்டத்தையே ஏற்படுத்தியதாகவும் கூறி, தமிழ் இரசிகர்கள் மீதே அதற்கான பழியினைச் சுமத்தியிருந்தார்.


ஒவ்வொரு தனிமனிதனுக்குள்ளும் பல்வேறு இரசனைகள் வக்கிரங்கள் இருந்தாலும் சமூகம் என்று வருகின்ற போது அவர்களுக்குள் தங்களது தனிமனித வக்கிர எண்ணங்களை மறைத்துக் கொண்டு தன் சமூகம் தன் குடும்பம் என்கின்ற எண்ணமே மேலெழுகின்றது. குத்துப் பாடல்களையும் அரைகுறை ஆடை அழகிகளையும் இரசிக்கும் ஒவ்வொரு மனிதனும் தன்னை அல்லது தன் குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் அவ்வாறு ஆடையணிவதையோ அல்லது அவ்வாறான படங்களைத் தன் குடும்பத்தவருடன் சேர்ந்திருந்து பார்ப்பதையோ விரும்புவது கிடையாது. தனிமனித விருப்பம் வேறு. அதே தனிமனிதர்கள் பலர் ஒன்று சேர்ந்து உருவாக்கியிருக்கும் சமூகம் என்பது வேறு. 'தாவணிக் கனவுகள்' என்கின்ற பாக்கியராஜ் அவர்களின் நடிப்பில் வெளிவந்த படத்தில்கூட இவ்வாறானவொரு காட்சியமைப்பு இருக்கிறது. திரையரங்கிற்கு தன் தங்கைகளுடன் செல்லும் ஏழைக் கதாநாயகன், படத்தில் ஆண்பெண் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் வரும் ஒவ்வொரு கட்டத்திலும் தன்னிடமிருக்கும் நாணயங்களைக் கீழே போட்டுவிட்டு தன் தங்கைகளைக் கீழே குனிந்து அவற்றைத் தேடுமாறு கூறுவார். இறுதியில் அப்படியான ஒரு காட்சி வரும்போது கீழே போடுவதற்கு அவரிடம் பணமிருக்காது. அப்போது அவரின் குட்டித் தங்கை ”அண்ணா காசு கீழே போடவில்லையா?” என்று கேட்பது, படம் பார்த்து பல வருடங்கள் கழிந்த பின்பும் இன்னமும் மனதில் நிற்கிறது. ஆக திரையுலகத்தில் உள்ளவர்களுக்கும் இப்படியான உண்மைகள் தெரிந்திருந்தும், அவர்கள் இன்னமும் தனிமனித வக்கிரங்களைத் தீர்க்கும் வகையிலான படங்களை எடுத்துத் தங்கள் கல்லாப்பெட்டிகளை நிரப்பிக் கொள்கின்றார்கள் என்பதே உண்மை. அவர்கள் ஒரு சமுதாயத்தின் விருப்பிற்கேற்ப படமெடுக்கவில்லை. மாறாக நீங்கள் விரும்பிப் பார்ப்பதையே நாங்கள் தருகின்றோம் என்றுகூறித் தம்மை நியாயப் படுத்திக் கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.


இயக்குனர் சேரனும் சரி, ஒளிப்பதிவாளர் செழியனும் சரி, தமிழ்த்திரையுலகில் காணப்படும் குறைகளை அவர்கள் அந்தத் துறையில் இருந்தாலும் வெளிப்படையாகவே ஏற்றுக் கொள்கின்றனர். மேலும் திரு. செழியன் அவர்கள் மேலும் ஒருபடி மேலே போய் பிற மொழிகளில் காணப்படும் தரமான திரைப்படங்களைச் சிலாகித்தும் அவற்றையும் தமிழ் இரசிகர்கள் பார்வையிட வேண்டும் என்று சொன்னதுடன் மட்டுமல்லாது அவ்வாறான தரமான பிறமொழிப் படங்கள் பதினைந்தினை தான் பாண்டித்துரை அவர்களிடம் கொடுத்திருப்பதாகவும் யார் வேண்டுமானாலும் அவற்றைப் பிரதி பண்ணி வீட்டில் சென்று பார்வையிடுமாறும் கூறினார்.


எப்படி ஒரு ஒளிப்படக் கருவியானது தான் காண்பவற்றை எந்தவித உணர்ச்சி வெளிப்பாடுகளுமின்றி அப்படியே பதிவு செய்து கொள்கிறதோ, அவ்வாறே ஒளிப்பதிவாளர் செழியனும் தனது உரையின் போதும், பின் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதும் ஏற்றவிறக்கமின்றிய உணர்ச்சிவசப்படாத ஒரே குரலிலேயே பதிலளித்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


அண்மையில் நான் மிகவும் இரசித்த 'மறைபொருள்' என்னும் தலைப்பிலான குறும்படம் கீழே உங்கள் பார்வைக்காக.

தொல்லைபேசிகளாகும் தொலைபேசிகள்!

மலேசிய வானொலியாகிய மின்னல் F.M. இன் நேற்றைய கண்ணாடித்துண்டுகள் என்னும் பெயரிலான சமூகப்பிரச்சினைகளை அலசி ஆராயும் நிகழ்ச்சியினை செவிமடுத்த போதினில் நெஞ்சு பகீரென்றது. வரும் குறுந்தகவல்கள் (SMS) மற்றும் அறியாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புக்கள் எத்தனை தூரத்திற்கு இளையவர்களுக்கு, அதிலும் குறிப்பாக பள்ளிப்பருவப் பெண்களுக்கு ஆபத்தினை ஏற்படுத்துகின்றது என்பதைப் பாதிக்கப்பட்டவர்கள் பகிர்ந்து கொண்ட போது நெஞ்சடைத்துப் போனது.

பொதுவாக முன்பின் தெரிந்திராத நபர்களிடமிருந்து வரும் குறுந்தகவல்கள், அதை அனுப்பியவர் யாராயிருக்கும் என்கின்ற ஆவலைத் தூண்டிவிடும். அதிலும் குறிப்பாக இளையவர்கள் அதனை ஒரு புதிர் போல எண்ணி அதை விடுவிக்கும் முயற்சியில் இறங்கி விடுகிறார்கள். எனவே அவர்களும் பதில் அனுப்ப, அவர்களைச் சுற்றிப் பின்னப்பட்ட வலைக்குள் அவர்கள் விழுந்து விடுகிறார்கள். குறுந்தகவல்களினூடாக ஏற்படும் உறவுகளுக்குள் சிக்கியவர்களில் இளம்பெண்களே கூடுதலான பாதிப்பினை அனுபவிக்கிறார்கள். நேற்றைய நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவி கூறியவாறு சிலவேளைகளில் அதன் பாதிப்பு அவர்களின் வாழ்க்கை முறையையே மாற்றிவிடுகிறது. அல்லது அவர்களை ஒருவகை மனநோய்க்குள் தள்ளி விடுகிறது. தமக்கு ஏற்பட்ட பாதிப்பினை பெற்றோர்களிடம் கூடச் சொல்வதற்கான அவர்களின் தயக்கத்தால் அவர்கள் மனநோயாளிகளாக மாறிவிடும் அபாயமும் இருக்கிறது.

அந்த நிகழ்ச்சியில் கல்நது கொண்ட கல்வியியலாளர்கள் கூறியது போல் சிறுவர்களுக்கு கைத்தொலைபேசி தேவைதானா என்கின்ற கேள்வி நியாயமானதாகவே எனக்கும் பட்டது. கைத்தொலைபேசியால் சிறுவர்களுக்கு கிடைக்கும் அனுகூலங்களை விட பிரதிகூலங்களே அதிகம். அதிலும் இப்போது video-camera உட்பட இணையத் தொடர்பு வசதிகளும் கைத்தொலைபேசியில் கிடைக்கப்பெறுவதால் பதின்ம வயதினரின் முக்கிய கவனக்கலைப்பானாக இந்தக் கைத்தொலைபேசிகள் மாறி விடுகின்றன. பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவிடப் பெற்றோர்களாலும் முடியாதிருப்பதால் பிள்ளைகள் என்ன செய்கின்றார்கள் என்பதை அறியாது தங்கள் பிள்ளைகள் அப்பாவிகள் என்றே பெரும்பாலான பெற்றோர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

இந்தக் கைத்தொலைபேசிகளால் ஏற்படும் தொல்லைகள் பதின்மப் பருவத்தினரை மட்டும் தான் பாதிக்கின்றன என்று சொல்வதற்கில்லை. ஆயினும் பாதிக்கப்பட்டவர்களில் பெருமளவிலானோர் பதின்மப் பருவத்தினராகவே காணப்படுகின்றனர். நேற்றைய கண்ணாடித்துண்டுகள் நிகழ்ச்சியினை செவிமடுத்துவர்கள் பல தகவல்களை அறிந்திருப்பார்கள். அந்நிகழ்ச்சியினை வழங்கியவர்கள் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்கள்.

எனக்கும் இப்படியான முன்பின் அறிந்திராத நபர் ஒருவரிடமிருந்து தொல்லை வந்து கொண்டிருந்தது. அது 2003ஆம் ஆண்டு காலப்பகுதி. ஒரு நாள் நள்ளிரவு தாண்டிய நேரம் திடீரென தொலைபேசி அலறியது. நித்திரை குழம்பி அதை எடுக்க கையசைக்க அழைப்பொலி நின்று விட்டது. யாராயிருக்கும் என்கின்ற நினைப்புடன் அழைப்பு எண்ணைப் பார்த்த போது, அது புதிய இலக்கமாயிருந்ததுடன் அதே இலக்கத்திலிருந்து ஒரு குறுஞ்செய்தியும் வந்திருந்தது. 'Sellam niththiraiyaa? Good night da sellam'. மண்டை குறுகுறுத்தது. எவன்டா அவன்? அறுப்பான் நித்திரையால இருக்கிறவனை எழுப்பி good night சொல்லுறது என்கின்ற ஆத்திரத்துடன் அந்த இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்த இணைப்புத் துண்டிக்கப் பட்டது.

தொடர்ந்து சில நாட்களுக்கு நள்ளிரவு ஒரு மணி இரண்டு மணிக்கெல்லாம் குறுஞ்செய்தியும் சில கணநேர அவகாசத்தில் துண்டிக்கப்படும் அழைப்புகளும் தொடர்ந்தன. நான் அழைப்பினை ஏற்படுத்த இணைப்புத் துண்டிக்கப்பட்டு விடும். அட! யாரோ ஒரு பொண்ணு எனக்கும் ரூட்டு விடுது என்று மனதுக்குள்ளும் சின்னதாய் ஒரு சந்தோசம்.

அந்த சந்தோசம் ஒரு நாள் கூட நிலைக்கவில்லை. மறுநாள் வந்த குறுஞ்செய்தி விசரைக் கிளப்பியது. “Ennadi nee, naan eththanai sms anuppuran nee oru sms kooda enakku anuppa maaddiyaa?". அந்தச் செய்தியைப் பார்த்ததும் யாரோ என்னைக் காய வைக்கிறார்கள் அல்லது தவறுதலாக எனக்கு அனுப்புகிறார்கள் என்றே எனக்குப் பட்டது. எனவே பதிலுக்கு அவர் யாரெனக் கேட்டு குறுஞ்செய்தி அனுப்பினேன். “Your sweet heart" என உடனேயே பதில் வந்தது. சரி விளையாடுறான். வாடா மாப்பிள, வந்து மாட்டிக்கிட்டியா நாங்களும் விளையாடுவோம்ல, என்கின்ற எண்ணத்தில் நானும் அந்த முகமறியாத் தொடர்புடன் விளையாடத் தொடங்கினேன்.

நண்பன் ஒருவனின் உதவியுடன் தொலைபேசி இலக்கத்தை வைத்து அந்த நபரின் விபரங்களை அறிந்த போது அவர் என்னிலும் 8 வயதுகள் குறைந்த ஒரு மாணவன் என அறிய வந்தது. அவன் நான் பெண் எனவே நம்பிவிட்டான். என்னை சீரியசா காதலிப்பதாக வேறு குறுஞ்செய்திகளில் உளற ஆரம்பித்தான். இத்தனைக்கும் ஒருதடவை கூட தொலைபேசியில் உரையாடியதில்லை. ஒருநாள் அதிகாலை 3 மணியளவில் “Intraikku enka veeddila maadu kantru poaddathu. enakku un gnaapakam thaan. niththirai varukuthillai. sms anuppudi" என்று குறுந்தகவல் அனுப்பி விட்டு துண்டித்த அழைப்பினை (missed call இனை தமிழில் துண்டித்த அழைப்பு எனலாமா?) ஏற்படுத்தினான். வழமை போன்றே நானும் சற்று நேரம் கழித்து துண்டித்த அழைப்பினை ஏற்படுத்தினேன். மறுநாள் யோசித்த போது பாவமாய் இருந்தது. எனக்கு இதுவரையிலான செலவு 2.00 ரூபாய் தான் (ஒரேயொரு குறுஞ் செய்தி மட்டுமே. மற்றதெல்லாம் துண்டித்த அழைப்பு). ஆனால் அவனுக்கோ அது 200.00 ரூபாயையும் தாண்டி விட்டிருந்தது. மேலும் விளையாட்டைத் தொடருவும் மனம் விரும்பவில்லை.

மறுநாள் பொதுத் தொலைபேசியில் அவனை அழைத்து விபரம் சொன்னபோது அதிர்ந்து விட்டான். ஆனாலும் அவன் லேசுப்பட்ட ஆளில்லை. வெள்ளவத்தை W.A.சில்வா மாவத்தையில் இருந்து கொண்டு வீட்டிலை மாடு கன்று போட்டிருக்குதென்று கதை விட்டிருக்கிறான். தன்னுடன் இணையத்தில் பெண் பெயரில் chat செய்த ஒருவரே தனது தொலைபேசி இலக்கம் என்று என்னுடைய இலக்கத்தினை அவனுக்குக் கொடுத்ததாகக் கூறினான். இதைப் பற்றி என் நண்பர்களிடம் கூறி அந்த குறுஞ்செய்திகளைக் காட்டியபோது அவர்களும் “மச்சான் இதே உண்மையில ஒரு பெட்டைக்குப் போயிருந்துதெண்டா அவன்ரை லவ் சக்சசாகியிருக்கும்” என்றனர். உண்மைதான் பெரும்பாலான குறுஞ்செய்திகள் அவ்வளவு உருக்கமாகவும், மனதைக் கரைப்பனவாகவுமே இருந்தன.

ஆக பெற்றோர்களே உங்கள் பதின்மவயதுப் பிள்ளைகளின் கைத்தொலைபேசிகள், அழைப்புக்கள், குறுந்தகவல்கள் தொடர்பாகக் கவனமாக இருங்கள். சரி பெரியவர்கள் என்று அழைக்கப்படுகின்றவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை இந்த அசைபடத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
Wednesday, September 30, 2009

தமிழ்மொழி தன்னைத் தக்கவைத்துக் கொள்ளுமா?“தக்கன பிழைக்கும்” என்றார் சாள்ஸ் டாவின்.

செம்மொழியாகிய எம்மொழியாம் தமிழ்மொழி எதிர்காலத்தில் தன்னைத் தக்கவைத்துக் கொள்ளுமா?

இவ்வினாவினை எனக்குள் விதைத்தது அண்மையில் எனக்கு வந்தவொரு கருத்துப் பகிர்வு. பொதுவாக பெயரில்லாமல் (Anonymus) வரும் பின்னூட்டங்களுக்கு நான் பதிலளிப்பதில்லை. ஆயினும் இது, நான் திகதிகளை குறிப்பிடும் முறையைத் தவறென்று கூறி “நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே” என்கின்ற எச்சரிக்கையுடன்(?) வந்ததாலும், அந்தத் குற்றச்சாட்டு சரியென்று நானும் உணர்ந்ததாலும் அதற்கு நானும் பதிலளித்திருந்தேன். பின் அந்த நக்கீரர் தன்னை எனக்கு அறியத்தந்த போது மிக்க மகிழ்ச்சியாய் இருந்தது. எனது மரியாதைக்குரிய நபர்களில் அந்தக் கலைஞனும் ஒருவர். பல கலைஞர்களை உருவாக்கிய பெருமைக்கும் சொந்தக்காரர் அவர்.

இப்போதெல்லாம் தமிழ் திகதிகளை பெரும்பாலும் தின நாட்காட்டிகளிலும் மற்றும் அழைப்பிதழ்களிலும் மட்டுமே காணக்கூடியதாய் இருக்கிறது. மற்றம்படிக்கு நாங்கள் யாவருமே ஆங்கிலத் திகதியினையே எமது வழக்கில் கொண்டிருக்கின்றோம். சரி, உலக நியமத்திற்கு அமைவாக அதைத்தான் பயன்படுத்த வேண்டும். இல்லையேல் நிச்சயமாக அதனால் பல சிக்கல்கள் உருவாகும். இலக்கங்களில் பயன்படுத்துகையில் மொழிப் பிரச்சனை இல்லை. ஆனால் அதில் உள்ள சிக்கல் என்னவென்றால் சில இடங்களில்/நாடுகளில் நாள்/மாதம்/ஆண்டு (dd/mm/yyyy) என்றும் வேறுசில இடங்களில்/நாடுகளில் மாதம்/நாள்/ஆண்டு (mm/dd/yyyy) என்றும் பாவனையில் இருப்பதால் பல சந்தர்ப்பங்களில் சரியான திகதியை அறிவது கடினம். உதாரணமாக 08/09/2009 என்கின்ற திகதியை எடுத்துக் கொண்டால் அது ஒன்பதாம் மாதத்தின் (September) எட்டாம் நாள் என்பதா அல்லது எட்டாம் மாதத்தின் (August) ஒன்பதாம் நாள் என்பதா என்கின்ற குழப்பத்தை உருவாக்கிவிடும். ஆனால் 14/09/2009 என்பதிலோ அல்லது 09/14/2009 இந்தப் பிரச்சனை இல்லை. இது சம்பந்தமான நடைமுறைச் சிக்கல்களை, கணினியில் database சம்பந்தமான வேலைகளில் உள்ளவர்கள் அறிந்திருப்பார்கள். எழுத்து வழக்கில் இந்தச் சிக்கலை எவ்வாறு கையாள்வது?

ஆங்கில ஆண்டு January யில் தொடங்கி December இல் முடிவடைவதாலும் அதற்கேற்ப தற்போது தமிழ் ஆண்டு தை மாதத்தில் தொடங்கி மார்கழி மாதத்தில் முடிவடைவதாலும், இன்றைய திகதியினை எழுத்தில் குறிப்பதற்கு புரட்டாதி 30 எனப் பயன்படுத்தலாம் என்றே எண்ணியிருந்தேன். அது தவறு என்று சுட்டிக்காட்டப்பட்டதை ஏற்றுக் கொண்டதால் இலங்கைப் பத்திரிகைகள் எவ்வாறு இதைக் கையாள்கின்றன என்று பார்த்த போது அவை தமிழ் திகதியினைத் தமிழிலும் ஆங்கில திகதியினை ஆங்கிலத்திலுமே அச்சடிக்கின்றன. இன்றைய திகதியை September 30 என்று அழைப்பதே சரியானதாகத் தோன்றுகிறது. ஆயினும் இதனை ஆங்கிலம் கலவாமல் தமிழில் எழுதும் போது செப்ரம்பர் என்று எழுதுவதா அல்லது செப்டம்பர் என்று எழுதுவதா? அதே போல் இலங்கையைச் சேர்ந்தவர்கள் August மாதத்தினை ஓகஸ்ற் என்று உச்சரிக்கும்/எழுதும் அதேவேளையில் இந்தியாவில் இருப்பவர்கள் ஆகஸ்ட்டு என்றும் சிலர் ஆகஸ்து என்றும் உச்சரிக்கறார்கள்/எழுதுகிறார்கள். ஆக தமிழ் மொழியில் இந்த மாதங்களைக் குறிப்பதில் சிக்கல்கள் உண்டாகின்றன.

வேற்று மொழிச் சொல்லைத் தமிழ்மொழிக்குள் உள்வாங்குவது தவறல்ல. அப்படி உள்வாங்கினால்தான் அந்தமொழி வளரும் என்று உறுதியாக நம்புகின்றேன். ஆயினும் அப்படி உள்வாங்கப்படும் சொல் ஒரே சொல்லாகவும் (spelling) ஒரே உச்சரிப்பையும் கொண்டதாகவும் அமைந்தாலே அது அழகாக இருக்கும் என்றே நான் நினைக்கின்றேன்.
ஆங்கிலத்தில் இங்கிலாந்தின் ஆங்கிலத்திற்கும் அமெரிக்க ஆங்கிலத்திற்கும் வேறுபாடுகள் உள்ளன. உதாரணமாக இங்கிலாந்து ஆங்கிலத்தில் colour என்கின்ற சொல்லிற்கு அமெரிக்க ஆங்கிலத்தில் color என்கின்ற சொல்லே பயன்படுத்தப் படுகிறது (spelling வித்தியாசம்). இப்படியானவற்றை வைத்துக் கொண்டு தமிழிலும் அவ்வாறே பயன்படுத்தலாம் என்று கூறுவதிலும் பார்க்க பொதுவான ஒரு சொல்லைப் பயன்படுத்துவதே சிறந்ததாயிருக்கும் என்று நான் கருதுகின்றேன். அண்மையில் இங்கே பதிவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கூட்டத்திற்கு எதேச்சையாக நானும் சென்றிருந்தேன். அங்கிருந்த பதிவர்களில் பலர் தங்களது எழுத்துப்பிழைகளைத் திருத்துவதற்கு தமிழில் ஒரு எழுத்துப்பிழைதிருத்தி (spell checker) இல்லையே என்று கவலை தெரிவித்திருந்தார்கள். ஏற்கனவே தமிழ் எழுத்துப் பிழைதிருத்தி ஒன்று (https://addons.mozilla.org/en-US/firefox/addon/8902) Mozilla Firefox இணைய உலாவியிற்கு addon வடிவில் ஒழுங்கமைக்கப்பட்டிருப்பினும் அதில் இன்னமும் பெருமளவிலான சொற்கள் இணைக்கப்படவேண்டி இருக்கின்றன.

ஓலைச்சுவடிகளில் எழுதிப் பின் அச்சிலேற்றி தமிழை வளர்ப்பதென்பதெல்லாம் மலையேறிப்போய்விட்ட இலத்திரனியல் காலம் இது. விஜயதசமி அன்றோ அல்லது தைப்பூசம் அன்றோ தட்டில் அரிசி பரவி ஏடுதொடக்குவதெல்லாம் வருங்கால சந்ததியினருக்கு பழைய பஞ்சாங்கம். இனி ஏடு தொடக்குவது கூட (அப்படி ஒரு சடங்கு செய்யவேண்டும் என்று விரும்புவர்கள்) கணினியில் தான் தொடங்குவார்கள். ஆக தமிழையும் கணினியில் கையாள்வதற்குத் தகுந்த மாதிரி இலகுவாக்கினாலேயே கணினியில் தமிழ் வளரும். அதற்காக தமிழின் சிறப்பியல்புகளை புறக்கணிக்க வேண்டியதில்லை. “'ங'-போல் வளை” என்று ஒரு பழமொழியே இருக்கிறது. உயிர்மெய் எழுத்துக்களில் 'ங' வரிசையில் 'ங' தவிர ஏனை எழுத்துக்கள் பாவனையில் இல்லை. ஆயினும் 'ங'-விற்காக அந்த வரிசையில் உள்ள ஏனைய 11 எழுத்துக்களையும் தமிழில் வீணாக வைத்துக் கொண்டிருக்கும் அதேவேளையில் பல ஆங்கிலச் சொற்களைச் சரியாக உச்சரிப்பதற்கான தமிழ் எழுத்துக்கள் எங்களிடம் இல்லை. வடமொழியின் ஆதிக்கம் தமிழிற்குள் பல சொற்களைப் (ஜ,ஸ,ஷ,ஹ) புகுத்தியது. அப்போதிருந்த தமிழறிஞர்கள்/ஆர்வலர்கள் இதைச் செய்திருக்கிறார்கள். ஆகவே தமிழ் மொழிக்கு வெறுமனே செம்மொழி என்கின்ற அந்தஸ்தை மட்டும் அளித்துவிட்டு தங்கள் கடமை முடிந்து விட்டது என்று உரியவர்கள் எண்ணாமல் தமிழ் மொழி தன் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியை (“கன்னித் தமிழோ கம்பன் கவியோ...” என்று பாடாமல் இனி “கன்னித் தமிழோ கணினித் தமிழோ...” என்று வேண்டுமானாலும் பாடலாம்.) அடைய உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய தருணம் இது.

இல்லையேல் “தக்கன பிழைக்கும் அல்லன அழியும்.” என்பதற்கு எடுத்துக்காட்டாக தமிழ்மொழியும் அமைந்துவிடும்.

Sunday, September 27, 2009

தமிழ் அழிகிறது. நடிக்கத் தெரியாத இயக்குனர் சேரன் ஆட்டோகிராப் தர மறுத்தார்


இன்றைய காலை எனக்கு, அதிகாலை 5.00 இற்கே ஆரம்பித்து விட்டது. 4.45 இற்கு ஒலிஎழுப்பி நித்திரையைக் குழப்பிய விழிப்புமணி (Alarm) ஓசையுடன் ஆரம்பித்த உறக்கத்திற்கும் விழிப்பிற்குமான போரில் 5.00 மணியளவில் உறக்கத்தைத் தோற்கடித்து விழிப்பு அதிசயமாய் வெற்றிவாகை சூடிக்கொண்டது. காலைக்கடமைகளாய் வரித்துக்கொண்டவற்றை முடித்து, இருப்பிடம் விட்டு வெளியேற நேரம் காலை 6.15 ஐத் தாண்டி விட்டிருந்தது. மென்பனிக்குளிரின் சில்லிடலுக்கு உடலில் ஏறியிருந்த உஷ்ணம் குறைவது இதமாய் இருந்தது.

நீண்டநாட்களின் பின்னானவொரு இயற்கை மதிய உணவினை முடித்துவிட்டிருக்கையில், மாலை 3.15 மணியளவில், இங்கு வந்த பின்னர் அறிமுகமாகியிருந்த அம்மா ஒருவரின் அழைப்பு. இன்று மாலை சிங்கப்பூர்க் கவிமாலையினரின் 10ஆம் ஆண்டு நிறைவையொட்டி பொது நூலகத்தில் கவிதைநூல் வெளியீடு இருப்பதாகவும், தனது கவிதைகளும் அந்நூலில் பிரசுரிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். வழமையாக இங்கே நடைபெறும் விழாக்களுக்கு அவரே தன்னுடன் என்னை அழைத்துச் செல்வது வழக்கம். ஆனால் இம்முறை அவர் அழைக்கையில் நான், அவரிடத்தில் இருந்து வெகுதொலைவில் இருந்தேன். அத்துடன் இந்நிகழ்ச்சிக்கு சிங்கப்பூர் சட்ட அமைச்சர் திரு. சண்முகம் அவர்களுடன் சிறப்பு விருந்தினராக சேரனும் வருவதால் என்னை வரமுயற்சிக்குமாறு அறிவுறுத்தினார்.


கவிமாலைப் பொழுது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சேரன் யாராயிருக்கும் என்பது பிடிபடவில்லை. பெரும்பாலும் இலங்கையைச் சேர்ந்த ஒரு கவிஞராக இருக்கும் என நினைத்துக் கொண்டேன். ஏனெனில் சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றவொரு கவிமாலை நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து தெளிவத்தை ஜோசப் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார். இலங்கையிலிருந்து சேரன் என்கின்ற பெயரில் ஒரு பிரபலமான கவிஞரை நான் கேள்விப்பட்டதில்லை. நெல்லைக் க.பேரன்-ஐ அறிந்திருக்கிறேன். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார்.


இருந்தாலும் பொதுநூலகத்தின் அரங்கினை மாலை 4.45 மணியளவில் சென்றடைந்தேன். ஒருசிலரே அங்கே காணப்பட்டனர். 5.00 மணியளவில் அரங்கினுள் சென்று அமர்ந்தேன். அப்போதுதான் மேடையைக் கவனித்தேன். அதிலிருந்தே இயக்குனர் மற்றும் நடிகரான திரு. சேரன் அவர்களே சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பதை அறிந்து கொண்டேன். 5.15 வரை அதிகம் கூட்டமில்லாதிருந்த இடம் நிறையத் தொடங்கியது. அவர்கள் குறிப்பிட்டிருந்ததைப் போன்று சரியாக மாலை 5.30 இற்கு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. இயக்குனர் சேரன் எந்தவித பந்தாவுமில்லாமல் சாதாரண உடையுடன் வந்து முன்வரிசையில் அமர்ந்து கொண்டார்.


கவிமாலைப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்றவர்களின் கவிதைகளைத் தொடர்ந்து சட்ட அமைச்சர் திரு சண்முகம் அவர்களும் விழாவில் பங்கேற்றுக் கொண்டார். தொடர்ந்து “பொன்மாலைப் பூக்கள்” கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டினை இயக்குநர் திரு சேரன் அவர்கள் நடாத்தி வைத்தார். நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை மேடைக்கு வந்து நூல்களைப் பெற்றுக் கொள்ளுமாறு அடுத்தடுத்து விடுக்கப்பட்ட வேண்டுகோளினை அடுத்து நானும் சென்று ஒரு நூலினைப் பெற்றுக்கொண்டேன். அத்தனை பேருக்கும் சலிக்காமல் இன்முகத்துடன் கைகொடுத்து களைத்திருந்தார் சேரன். அவரது கைகள் கடினமாயிருக்கும் என்றே எண்ணியிருந்தேன். ஆனால் அவை மிகவும் மிருதுவாகவேயிருந்தன. பொதுவாகவே ஒருவருடன் கைகுலுக்கும் போது என்னையறியாமலேயே என் மனம் அவரது கையின் மென்மையை எடைபோட்டுவிடும். இது நபிகள் அவர்களின் வாழ்க்கையில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தினை பாடசாலைக்காலங்களில் பாடப்புத்தகத்தில் படித்ததனால் ஏற்பட்ட விளைவு என்றே நினைக்கிறேன். மீண்டும் எனது இருக்கைக்கு வந்து கவிதைத் தொகுப்பினை பிரட்டினேன்.


“நீயும் போய் சிநேகாவைத் தொட்டு நடிச்ச கைக்கு, கைகொடுத்திட்டு வா.” என்கின்ற குரல் கேட்டு திரும்பிய எனக்கோ அதிர்ச்சி. அதைச்சொன்ன வாலிபருக்கு வயது நிச்சயம் 65 இற்கு மேல் இருக்கும். தன்வயதொத்த இன்னொரு இளைஞரிடம்(?) அவர் அதனைக் கூறிக்கொண்டிருந்தார். இருவருமே எனக்கு அடுத்தடுத்த இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். புத்தகத்தினைப் படிப்பது போல் பாவனை செய்து கொண்டே அவர்களை அவதானித்தேன. முதலில் கூறியவர் தனது சட்டைப்பையில் இருந்து ஒரு பேனாவைத் தனது நண்பருக்கு எடுத்துக்காட்டி, இந்தப்பேனையாலே தான் சிநேகாவிடம் ஆட்டோகிராப் வாங்கியதாகப் பெருமைப்பட்டுக் கொண்டார். பின் அவரும் போய் சினேகாவைத் தொட்டு நடித்த கைக்கு கைகொடுத்துவிட்டு வந்தது வேறுவிடயம்.


சட்ட அமைச்சர் திரு. சண்முகம் அவர்கள் தனதுரையில் தமிழ்மொழி அழிந்து வருவதையிட்டு தனது வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டார். பத்தாண்டுகளுக்கு முன்னர் ஏறத்தாழ 50% மான தமிழ்க்குடும்பத்தினர் இங்கே தங்களுக்குள் தமிழில் உரையாடிக் கொண்டதாகவும், தற்போது அது 20% மாகக் குறைந்து விட்ட தகவலையும் அவர் தெரிவித்தார். உண்மைதான். காலையில் நான் சென்றிருந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒரு தமிழ் மாணவனுக்கு தமிழில் உரையாடத் தெரியவில்லை. அவரால் மற்றவர்கள் பேசுவதை ஓரளவிற்கு புரிந்து கொண்டாலும், ஒரு வார்த்தைகூட தமிழி்ல் பேசுவதற்கு அவரால் இயலவில்லை.


பின் திரு. சேரன் அவர்களைப் பற்றி அறிமுக உரையாற்றிய பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள் இயக்குனர் சேரனுக்கு நடிக்கத் தெரியாது என்றார். ஆமாம்! பின்னர் சேரன் அவர்களின் உரையிலும் அதை அறியக்கூடியதாய் இருந்தது. அவர் உரையாற்றுகையில் எவ்வித நடிப்புமி்ன்றி வெளிப்படையாகவே பேசினார். சேரன் அவர்களின் சிறப்பியல்புகள் பற்றி மேலும் விபரித்த திரு இளங்கோ அவர்கள், சிங்கப்பூர் விமானநிலையத்தில் பணத்தாள் ஒன்றில் கையெழுத்திடுமாறு கேட்ட இரசிகர் ஒருவருக்கு பணத்தாளில் ஆட்டோகிராப் இட இயக்குனர் சேரன் அவர்கள் மறுத்துவிட்டதைக் கூறிப் புகழ்ந்தார்.


இயக்குனர் சேரன் அவர்களின் படங்களை விரும்பிப் பார்த்திருந்தாலும் அவரின்மேல் தனிப்பட்ட ரீதியில் எந்தவிதமான அபிமானமும் இன்றி ஏனைய பெரும்பாலான (பெரும்பாலான என்பதைக் கவனிக்கவும்) திரையுலகத்தினரைப் போலவே அவரையும் பத்தோடு பதினொன்றாக எண்ணியிருந்தேன், இறுதி நிகழ்வாக இடம்பெற்ற அவரின் சிறப்புரையினைக் கேட்கும் வரை. அதன்பின்னான கேள்வி பதில் நிகழ்வில் அவர் பதிலளித்த விதமும் வெளிப்படையாகவே தன் தவறுகளை நியாயப்படுத்தாமல் அதை ஒப்பக் கொண்ட விதமும், அவர் மேலான மரியாதையை மிகவும் உயர்த்தின.

(இந்தப்பதிவு நீண்டு விட்டதால் இவை பற்றிய தகவல்கள் அடுத்த பதிவில்)

மறக்கமுடியாத சரஸ்வதி பூசையும், சாப்பாடும்


அது 2003ஆம் ஆண்டு காலப்பகுதி. அக்பர் விடுதியை ஞாபகப்படுத்தும் விதத்திலேயே தெஹிவளையில் எமது வசிப்பிடமும் அமைந்திருந்தது. அதே விடுதி நண்பர்கள் பலரும் ஒன்றாக, மீண்டும் அக்பர் வாழ்க்கையை நாம் அனுபவித்துக் கொண்டிருந்தோம். அந்த வருடத்தைய வீட்டுப்பூசையன்று என்னையும் இன்னொரு நண்பனையும் தவிர ஏனையவர்கள் கொழும்பில் வசிக்கும் தங்களின் உறவினர்கள் வீட்டிற்கு சென்று விட்டிருந்தனர்.

எங்கள் இருவருக்கும் அவல், சுண்டல் எல்லாம் சாப்பிடவேண்டும் என்கின்ற அவா. கோவிலுக்குப் போகலாமா என்றான் நண்பன். எனக்கோ கோவிலுக்குச் செல்ல இஷ்டமில்லை. ஆயினும் இருவருக்குமே சரஸ்வதி பூசைச் சாப்பாடு சாப்பிட்டே ஆகவேண்டும் என்கின்ற கட்டாயம். அதற்கு உணவின் மீதான பிரியம் மட்டுமல்ல, மற்றைய நண்பர்களிடம் கடி வாங்காமல் இருக்கவேண்டுமே என்கின்ற மானப்(?) பிரச்சனை. சிறிது நேரம் யோசித்து விட்டு என்னுடன் பணியிடத்தில் அறிமுகமாகியிருந்த வேறொரு நண்பரின் வீட்டுக்குச் செல்வதென்கின்ற முடிவுடன் வெள்ளவத்தைக்குப் புறப்பட்டோம்.

அந்த நண்பரின் வீட்டில் இப்படியான கொண்டாட்டங்கள் எல்லாம் மிகச் சிறப்பாகச் செய்யப்படும். அங்கே சென்றபோது அவர்கள் வீட்டில் பூசை நடைபெற்றுக் கொண்டிருந்தது. எம்மைக் கண்டதும் நண்பரின் தாயார் இருந்து சாப்பிட்டு விட்டுப் போகும்படி கூறினார்.

“ஏன் அன்ரி? என்ன விசேசம்?” என்றோம்.

“இண்டைக்கு சரஸ்வதிபூசை வீட்டில செய்யிறம்.” என்றார்.

“ஓ! அப்ப சரஸ்வதி பூசை தொடங்கீற்றுதா?” என்றான் என்னுடன் வந்திருந்த நண்பன்.

“பரவாயில்லை அன்ரி. நாங்க இன்னொரு நாளைக்கு வாறம். இண்டைக்கு வேற அலுவல் ஒண்டு இருக்கு.” என்றேன் நான்.

உடனேயே நாங்கள் வந்திருந்த வீட்டுக்குரிய நண்பர் “அதெல்லாம் முடியாது. இருந்து சாப்பிட்டிட்டுத்தான் போக வேணும். இன்னும் கொஞ்ச நேரத்தில பூசையெல்லாம் முடிஞ்சிரும்.” என்றவாறே பூசையறைக்குள் சென்று விட்டார்.

“இல்ல, நாங்க போகவேணும்.” என்றவாறே தலையைச் சொறிந்தான் என்னுடன் வந்திருந்த நண்பன்.

மற்ற நண்பரின் தாயாரின் வற்புறுத்தலின் பேரில் ஒருவாறாக இருவரும் இருந்து சாப்பிட்டுவிட்டுச் செல்வதற்கு இணங்கிக் கொண்டோம். சிறிது நேரத்திலேயே சக்கரைப் பொங்கல், அவல், சுண்டல் உழுந்து வடையென வயிறும் மனமும் நிறைந்துவிட விடைபெற்றவாறே வீட்டை விட்டு விலகி வீதிக்கு வந்தவுடன் ஆரம்பித்த சிரிப்பு தெஹிவளையில் எமது இருப்பிடம் வந்து சேர்ந்த பின்னும் நிற்கவில்லை. மறுநாள், என்றைக்கேனும் நான் மீண்டும் எழுத ஆரம்பிக்கும் காலங்களில் இந்நிகழ்ச்சியைப்பற்றி கட்டாயம் எழுதுமாறு என்நண்பன் கேட்டுக்கொண்டான்.

அதற்கடுத்தடுத்த வருடங்களில் வந்த சரஸ்வதி வீட்டுப்பூசையன்று நாங்களே அவல் மற்றும் சுண்டல் செய்து கொண்டதும், வேறு நண்பர்களின் இடங்களில் கோழிப்பொங்கல் செய்து பகிர்ந்து கொண்டதெல்லாம் வேறு விடயம்.

Friday, September 25, 2009

நிலைமாறும் உலகம்.


இன்றைய நடுநிசி தாண்டிய நள்ளிரவில், தொடரூர்ந்து (MRT) விட்டு, கூடவந்த நண்பர்கள் விலகி எனது இருப்பிடம் நோக்கிய நடைப்பயணத்தில் IPod இனை அணிந்து கொள்ள, “நிலைமாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி....” என்கின்ற பழைய பாடல் நெஞ்சத்தைக் கிள்ளியது.

இருப்பிடம் அடைந்து இணையத்தில் இணைகையில் “மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது.” என்கின்ற மிகப்பிரபலமான வாக்கியம் (Change is the one that never changes in the world) கண்ணில் பட்டது.

மின்னஞ்சலில் வாசிக்கப்படாதிருந்த மின்மடல்களில் ஒன்று சில வாரங்களுக்கு முன்னர் Yahoo Geocities யிடமிருந்து வந்திருந்தது.

ஆகா! அவர்களும் கடையை மூடுகிறார்களாம்.

2000ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் பல்வேறு நிறுவனங்கள் இலவச இணையத்தள சேவைகளை வழங்கிக் கொண்டிருந்தாலும், அப்போதெல்லாம் நிரந்தர நம்பகத் தன்மை கொண்டதாக Yahoo குழுமத்தின் geocities சேவையே விளங்கியது. பல தளங்களில் உருவாக்கி வைத்திருந்த இலவச இணையத்தளங்கள் பலவும் சிலமாதங்களுக்குத் தொடர்ச்சியான கவனிப்பில்லாமல் இருக்கையில் அந்த சேவை வழங்குனர்களால் துண்டிக்கப்பட்டிருந்தன. ஆயினும் Yahoo குழுமம் தனது சேவையினைத் தொடர்ச்சியாக வழங்கி அதன் கொள்கைகளைப் பேணிப் பாதுகாத்துக் கொண்டிருந்தது. இப்போது அந்த நம்பிக்கையிலும் கைவைத்து விட்டார்கள். வரும் ஐப்பசி (October) 26 ஆம் திகதியுடன் Yahoo குழுமத்தின் Geocities தனது இலவச இணையத்தள சேவையினை நிறுத்திக் கொள்வதாக உத்தியோகபூர்வமாக அறிவித்து விட்டார்கள்.

அனிச்சையாய் mouse pointer கணினியின் வலப்பக்க கீழ் மூலையில் சென்று ஓய்வெடுக்க September 26, 2009 என இன்றைய தேதி மின்னியது.

ஒவ்வொரு கணங்களும் மின்னல்வேகத்தில் ஓடிமறைய காலச்சக்கரம் சீக்கிரமாய்ச சுழன்று செல்வதான உணர்வுகள்.

சில தசாப்தங்களுக்குள் எத்தனை மாற்றங்கள். இப்படியான ஓர் தினத்தில்தான் பாரதத்தின் பணநோட்டுக்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் காந்தியின் (மகாத்மா) வேதனையுடன் கூடிய அவமானம் கலந்த கண்ணீரில் கரைந்து போயிருந்தன.

பாரதத்தின் தேசபிதாவாகக் கருதப்படும் மகாத்மா காந்தி, பாகிஸ்தான் பிரிந்து சென்ற பின்னர் அந்நாட்டுக்கு இந்திய திறைசேரியிலிருந்த பகிர்நதளிக்கப்படாதிருந்த நிதியினைப் பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைக்கச் சொல்லி, இந்திய அரசிற்கு எதிராக அவரது பாணியிலான அகிம்சாவழியிலான உண்ணா நோன்பினை மேற்கொண்டிருந்தார். அப்போதைய பாரதப் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களும், பாரதத்தின் பண நெருக்கடிக்கள்ளும் மகாத்மாவின் போராட்டத்திற்கு மதிப்பளித்திருந்தார்.

பின் பேரன்கள் காலம், மாற்றம் மட்டுமே மாறாதது என்பதை அதுவும் உணர்த்தியது.

Wednesday, September 16, 2009

இன்றுடன் நிறைவுற்ற இன்று ஒரு தகவல்


இன்றைய மாலைநேரச் செய்தி இந்தத் தகவலைச் செவியில் அறைந்தது. தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்கள் இன்று (16 புரட்டாதி 2009) இயற்கையெய்தி விட்டார். இனிமேல் எமக்கு இன்று ஒரு தகவல் சொல்ல அவர் வரமாட்டார்.

பிரபலமான எழுத்தாளரும் வானொலி மற்றும் தொலைக்காட்சிப் பேச்சாளருமான அமரர் தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள், தமிழ் உலகால் நன்கு அறியப்பட்டவர். தன் தனிப்பட்ட பாணியிலான பேச்சாற்றலினால் கேட்பவர் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர். அவரின் 'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சியினை அநேகமாக தமிழ் வானொலி நேயர்கள் அனைவருமே இரசித்திருப்பார்கள். யாழ்ப்பாணத்தில் 'வலம்புரி' நாளிதழ் தினந்தோறும் இவரின் 'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சியினைப் பிரதியெடுத்து வெளியிட்டு வந்தது.

நல்லவொரு கருத்தினைக் கூறிவிட்டு முத்தாய்ப்பாக அதற்குப் பொருத்தமானவொரு நகைச்சுவைக் கதையையும் கூறி எம் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தவர். முதன்முதலில் அவரது நிழற்படத்தினைப் பார்த்த பொழுது இவரா அவர் எனச் சந்தேகமாகவே இருந்தது. கருத்துக்களில் மட்டும் சொல்லாது வாழ்க்கையிலும் செய்து காட்டிய மிக அரிய எளிமையான மனிதர் அவர். அவரை முதற்தடவை பார்க்கும் எவருமே இந்த மனிதருக்குள் இப்படியொரு திறமையிரக்கும் என நம்பமாட்டார்கள். அவரது ஒரு நிகழ்ச்சியில் அவரே இதைப்பற்றிக் கூறியிருக்கிறார். அது அவர் தொலைக்காட்சியில் அறிமுகமாகியிராத காலம். ஆனாலும் வானொலியினூடாக அவரது 'இன்று ஒரு தகவல்' மூலம் தென்கச்சி கோ.சுவாமிநாதன் என்கின்ற பெயர் பிரபலமாகியிருந்தது. ஒருமுறை அவர் பேருந்து ஒன்றில் பயணித்துக் கொண்டிருக்கையில் அவரின் பின்னால் இருந்தவர்களில் ஒருவர், மற்றவரிடம் “முன்னுக்கிருப்பவரைப் பார்த்தால் தென்கச்சி கோ.சுவாமிநாதன் போல் உள்ளது.” என்றுகூற அதற்கு மற்றவர் “இருக்காது, அவர் எவ்வளவு அறிவாளி. இவரைப் பார்த்தால் படித்தவர் போலவா தெரிகிறது?” என்றாராம். நம்மாளோ (அதாங்க தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்கள்) எதையுமே காட்டிக்கொள்ளாமல் அமைதியாய் இருந்துவிட்டாராம்.

அண்மையில் இவரிடம், சிரிக்கச் சிரிக்க கதை சொல்கிறீர்களே? ஒரு குட்டிக்கதை மூலம் கேட்பவர்களைக் கண் கலங்கச் செய்ய முடியுமா? எனக் கேட்டதற்கு அவர் அளி்த்த பதில்;

நல்ல இதயமுள்ள வாசகர்களைக் கண்கலங்கச் செய்ய இன்றைக்குக் குட்டிக்கதை கூடத் தேவையில்லை. ஒரு வார்த்தை போதும்.

''ஈழத் தமிழர்கள்!''


(தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களுக்கு எமது இதய அஞ்சலிகள்)

Monday, August 31, 2009

கனவினைக் குழைத்தொருஅவனுக்குக் குழப்பமாயிருந்தது. எப்படி இப்படி? தலை விண்விண்ணென வலியைக் கிளப்பிக் கொண்டிருந்தது. இது மப்புத்தான். ஆனால் எப்படி? அவனுக்கு சுத்தமாக நினைவிற்கு வரவில்லை. யாருடன் சென்றிருப்பான் எனக் குழப்பமாயிருந்தது. நிச்சயமாக இது பியராக இருக்க முடியாது. அவனது பிரியத்திற்குரிய ரைகர் பியர் ஒருபோதும் இப்படியான ஒரு போதையைத் தந்ததில்லை. இது வேறு. எல்லாமே குழம்பிப்போன நிலை. அழைத்துச் சென்றவன் வேறு ஏதேனும் 'பெரிசு' கலந்து தந்திருப்பானோ?. இல்லையில்லை. இது கனவு. வெறும் கனவு மட்டுமே. இது நிஜமெனில் கூட வந்தவனையாவது அவன் நிச்சயம் நினைவில் வைத்திருந்திருப்பான். மழைக்கால இருட்டென்றாலும் மந்தி கொப்பிழக்கப் பாயாது என்பதற்கு இன்றுவரை அவன் உதாரணமாய் இருந்தவன். ஆக இது கனவே தான். கனவில் மட்டுமே சம்பந்தாசம்பந்தமில்லா நிகழ்ச்சிகள் வரும். அவன் இதைக் கனவென்றே நம்பத் தொடங்கினான்.

கனவென்பது மனதிற்கு உறுதியானதும், கனவிலேயே அவன் தான் குடித்திருக்கின்றேனா என்பதை உறுதிப்படுத்த விரும்பினான். எழுந்து நடந்தான். உடல் இலேசாகியிருந்தது போன்ற உணர்வு. மெல்ல வீதியைக் கடந்து நடைபாதையில் நடந்தவன் எதிர்பாராத விதமாய் எதிரே வந்தவருடன் மோதிக்கொண்டான். பலத்த இடி முன்நெற்றியில். தடவிவிட்டுக் கொண்டான். வலி அடங்குவதாய்த் தெரியவில்லை. கனவென்றால் இப்படி வலிக்காதே. ஒருவேளை இது நிஜமோ? தன்னைத்தானே கையில் கிள்ளிக் கொண்டான். வலிமட்டுமல்லாது கிள்ளிய இடம் கன்றிப்போய் இருந்தது. அப்படியானால் இது கனவல்ல. இது நிஜமென்று இப்போது நினைக்கத் தொடங்கினான்.

வயிறு பசித்தது. சற்றுத் தொலைவில் சாப்பாட்டுக்கடை தெரிந்தது. அருகே செல்ல ஊதுவத்தி வாசனை மூக்கைத் துளைத்தது. இருக்கையில் அமர முன்னுக்கிருந்தவர்கள் கையை உதறி விட்டு எழுந்தார்கள். பணியாளுடன் பிரச்சனைப்பட்டுக் கொண்டே கல்லாவை நெருங்கியவர்கள். “தோசையின்ர திறத்தில ஆட்டுக்கல்லுக்கொரு மாலை” என்று கோபமாகத் திட்டியவாறே வெளியேறினார்கள்.

அவன் ஆட்டுக்கல்லைப் பார்த்திருக்கிறான். அதில் தோசைக்கு மாவாட்டியுமிருக்கிறான். மாலை போடப்பட்டிருந்த ஆட்டுக்கல்லை உற்று நோக்கினான். அது ஆட்டுக்கல்லல்ல. அவனுக்கது உறுதியாய்த் தெரிந்தது. ஆட்டுக்கல்லின் வடிவில் அமைந்தவொரு உருவம். அந்த உருவத்தை அவன் முன்னரும் பார்த்திருக்கிறான். அந்த உருவத்தைப் பற்றி அவன் புத்தகங்களிலும் வாசித்திருக்கிறான். சட்டென எதுவும் நினைவிற்கு வரவில்லை. அவனுக்கு அங்கிருக்கப் பிடிக்கவில்லை. எழுந்து மீண்டும் நடக்கத் தொடங்கினான்.

இப்போது அவனுக்கு சந்தோசமாயிருந்தது. அது பற்றிய சிறுகுறிப்பொன்று அவன் நினைவிற்கு வந்து விட்டது. அதைப் பற்றிக் கண்ணதாசனின் நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது கலவி நிலையைக் குறிக்கும் ஒரு குறியீடு. புணர்ச்சி நிலையை எதற்காய் ஒரு குறியீட்டால் காட்டவேண்டும். பின் எதற்காய் அதற்கு மாலை போடவேண்டும். ஆகா! அங்கே ஏதேனும் சக்தி ஒளிந்து கிடக்கிறதோ? அதுதானே! புதிதாய் ஒரு ஜீவனை வேறெந்தக் கருவிகளால் உண்டாக்க முடியும்? ஏதோ புரிவது போலவும் புரியாதது போலவும் தோன்றியது. குழப்பம் மறுபடி கூடுவதாய்த் தோன்றியது. இது கனவா இல்லை நனவா என்கின்ற சந்தேகம் மீண்டும் முளைத்தது. இரண்டு பியர் அடித்துவிட்டுப் பேசாமல் போய்ததூங்கி விடலாம் என்றது மனது.

அவன் நடந்து சென்ற பாதையிலேயே அவன் வழக்கமாகச் செல்லும் அந்தக் கடையும் இருந்தது. அவன் தனது வழமையான இருக்கையில் அமர்ந்ததுமே தனது வாடிக்கையாளரைக் கண்டுவிட்ட அந்த இளம்பெண் அவனுக்குப் பிரியமான ரைகர் பியருடன் அவனை நெருங்கினாள். என்றுமில்லாதவாறு இன்று அவள் மிகவும் கிளர்ச்சியூட்டுபவளாய்த் தெரிந்தாள். 'கறந்த இடம் கண்நாட பிறந்த இடம் மனம் நாட...'

ச்சே! எனக்கு என்னவோ ஆயிற்று அவன் மிகத் தீவிரமாகக் குழம்பினான். இது கனவா நிஜமா? எப்படி உறுதிப்படுத்துவது? அந்தப் பெண்ணிடமே ஒரு வெற்றுத்தாளும் ஒரு பேனையும் கொண்டுவருமாறு கேட்டுக் கொண்டான். இப்போது அவனுக்குத் திருப்தியாய் இருந்தது. இது நிஜமெனில் தான் எழுதுவதே ஒரு படைப்பாய் மாறக்கூடும் என அவன் நம்பினான். இல்லை இதுவொரு கனவெனில் தூக்கம் கலைந்த பின்னர் எழுதிய தாள் இருக்காதே. ஆகவே இது கனவென்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவன் நினைத்தான். அவன் தன் மனதில் தோன்றுபவற்றை காகிதத்தில் எழுத நினைத்தான்.

பேனாவை ஒருதடவை பார்த்தவனின் பார்வை அதிலேயே பல நிமிடங்களுக்குத் தொடர்ந்தது. இந்த முனைவடிவை வேறெங்கோ பார்த்திருக்கிறேன். அவன் பார்வையில் இப்போது அந்தப் பேனா மறையத் தொடங்கியிருந்தது. திடீரென அது ஒரு துப்பாக்கிக்குண்டின் முனைப்பகுதியாய் அவன் நெஞ்சைக் குறிபார்த்தது. இந்தச் சின்ன ரவை என்னை என்ன செய்யும் என்று எழுந்த அலட்சியம் சில நொடிப்பொழுதுகளிலேயே அமுங்கிப் போனது. இப்போது அது 50 கலிபர் துப்பாக்கியின் ரவையின் அளவிற்கு வளர்ந்து விட்டிருந்தது. அவனுக்குள் பயம் வேர்விடத் தொடங்குகையில் அது ஒரு ஆர்பிஜி எறிகணையின் அளவிற்கு வளர்ந்திருந்தது. அது தொடர்ந்து வளர்ந்து கொண்டேயிருந்தது. இப்போதைய அதன் பரிமாணத்தை அவன் தன் சின்ன வயதில் பார்த்திருக்கிறான். 50 கிலோகிராம் எடையுள்ள வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட விமானத்திலிருந்து வீசப்பட்டவொரு குண்டினை அவன் 1985ஆம் ஆண்டு காலப் பகுதியில் யாழ்/புனித பததிரிசியார் கல்லூரியில் இடம்பெற்ற கண்காட்சியில் பார்த்திருக்கிறான். பின்நாட்களில் அதை விடப் பாரிய பலமடங்கு எடையுள்ள விமானக்குண்டுகளைப் பார்த்திருந்தாலும் அந்த வடிவத்தில் அவன் பார்த்திருந்த மிகப் பெரிய குண்டு அதுவாகவேயிருந்தது. எனவே இதைவிடப் பெரிதாக அந்தப் பேனா வளரமுடியாது என்கின்ற அவன் கணிப்பைப் பொய்யாக்கி அது மேலும் வளரத் தொடங்கியது.

ஒருவேளை அணுகுண்டு இந்தளவாக இருக்குமோ என்று அவனுள் எழுந்த அனுமானத்தின் அளவுடன் ஒப்பிடுகையில் அந்தப் பேனா சிறிதாகவேயிருந்தது அவனுக்கு ஆறுதலைத் தந்தது. ஆயினும் அது தொடர்ந்து வளர்ந்து அவன் கற்பனையைத் தகர்க்க அவன் உடையத் தொ்டங்கினான். இப்போது அந்தப் பேனாவைப் பார்க்கையில் அதன் முகப்புத் தோற்றம் ஒரு பாரிய விமானத்தின் முகப்பைப் போல் தோன்றியது. இன்னொரு பார்வையில் அதுவொரு நீர்மூழ்கிக் கப்பலின் முகப்பை ஒத்திருந்தது. எப்படியெனினும், தன்னால் வளர்ந்துகொண்டிருக்கும் அந்தப்பேனாவை, தான் அறிந்த வேறொரு பொருளுடன் ஒப்பிடக்கூடியதாயிருப்பதில் அவனுக்குள் ஒருவகை திருப்தியும் சந்தோஷமுமே காணப்பட்டன.

அந்தப் பேனாவை அற்பமாய்ப் பார்த்தான். அது இப்போது விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. முடியாது. இதற்குமேல் இதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கவோ கற்பனை பண்ணிப்பார்க்கவோ அவனால் முடியாது என்பதை உணரத் தொடங்கினான்.

விஸ்வரூபமாய் விரிவடைந்திருந்த பேனா இப்போது அவனை இந்தப் பேரண்டத்தின் ஒரு கோடிக்குள் தள்ளிவிட்டு எங்கும் நீக்கமற விரிவடைந்திருப்பதாய் உணர்கையில் அவன் உருகத் தொடங்கியிருந்தான். அவனுக்குள் ஏற்கனவே உருவாக்கி வைத்திருந்த ஒப்பீடுகளும் எல்லைகளும் உடைந்து சிதறின. அவன் நாபிக்கமலத்திலிருந்து புறப்பட்டு “ஓம்” என்றவாறே அகிலமெங்கும் அதிர்ந்து பரவிய உட்சக்தியுடன் அவன் இலேசாகி, மேலும் இலேசாகி, மேலும் மேலும் இலேசாகி எங்கும் கலக்கத்தொடங்கினான். பின் கரைந்து காணாமல் போனான்.

Monday, August 24, 2009

நினைவுகளில் நீ

முதற்காதலும் முதல்முத்தமும் மட்டுல்ல
முதன்முதலாய் மரிக்கப்பட்ட நட்பும்
மறக்க முடியாதது தான்.

காதலில் தொலைந்தவர்கள் மட்டுமல்ல
நட்பைத் தொலைத்தவர்களும்
கவிதை வரையத் தொடங்கலாம்.

ஜெயந்தா!
அகமகிழ்ந்திருந்தோம்
அஜந்தா ஓவியமாய்
அழியாப் புகழ்பெறுவாயென.

பதின்மப் பருவத்தின்
ஆரம்பப் படிக்கட்டில் நாம்.
உனக்கென்ன வயதப்போ?
பதின்மூன்றா பதின்நான்கா?

பாலகராய்த்தான் நாம்
பள்ளிக்குச் சென்று வந்தோம்.
பாதகர்கள வந்தார்கள். எம்மைப்
பரிதவிக்கச் செய்தார்கள்.

கொடியபடை பாதைகண்டு
விலகிவிட நின்ற உந்தன்
முன்னிருநாள் பசியறிந்த
சிற்றன்னை கஞ்சி தந்தாள்.

கஞ்சி வாயில் வைக்கவில்லை,
கயவர் வாயில் வந்து விட்டார்.
ஓடச்சொல்லிப் பணித்துவிட்டு
சடசடத்தது அவர் துப்பாக்கி.

ஓட்டப் பந்தயத்தில்
எப்போதும் நீ முதலிடம்தான்.
வெற்றிக்கம்பம் தாண்டிக்கூட
களைத்து நீ வீழ்ந்ததில்லை.

இம்முறை நீ வீழ்நதாயாம்.
வீழ்ந்தபின் எழவேயில்லையாம்.
நீ மட்டுமல்ல உன் அயலவர்கள்
எல்லேர்ரும் உன்னுடன் தானாம்.

சேதி அறிகையில் நெஞ்சு துடித்தது.
ஆதி மூலமோ அறியாத் துயிலிலாம்.
ஆரொடு நோவோம்? ஆர்க்கெடுத்துரைப்போம்?
வேரொடு பிடுங்கி, வீசப்பட்ட எம்வாழ்க்கை

உடல்கள் அழியலாம் கொண்ட
உறவுகள் அழிவதில்லை. நீ
மறைந்தாலும் உன் நினைவுகள்
மறைவதில்லை.

(24-08-1990 அன்று வேலணையில் சிறிலங்காப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட இன்பநாயகம் ஜெயந்தனின் 19ம் ஆண்டு நினைவாகவும் அன்றைய தினத்தில் படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களுக்காகவும்)

Saturday, August 22, 2009

அந்த மூன்று நாட்களும், சிந்திய குருதியும் அதன் பின்னான விளைவுகளும்.அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்கின்ற பழமொழியினையோ அல்லது ஆவிகள் பழிவாங்குவதைப் பற்றியோ நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அன்றைய பொழுதும் வழமை போன்றே விடிந்தது. காகங்கள் கரைந்திருந்தன. சேவல்கள் அதிகாலையிலேயே கூவிவிட்டிருந்தன. காலைக்கடன்களை முடித்துவிட்டு வந்து அன்றைய தினநாட்காட்டியில் தேதியினைக் கிழித்தேன்.

ஆவணி 22, 1990

தேநீர் பருகுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த வேளையில்தான் அந்தச் சத்தங்கள் எம்செவிகளை வந்தடையத் தொடங்கியிருந்தன. தூரத்தில் கேட்டுக்கொண்டிருந்த அந்தச் சத்தங்கள் யாரோ இந்தக் காலை வேளையில் விண்கட்டிப் பட்டம் பறக்க விடுகிறார்களோ என்கின்ற சந்தேகத்தையே ஆரம்பத்தில் எழுப்பியிருந்தாலும், அதனுடன் சேர்ந்து கேட்ட உலங்குவானூர்தியின் சத்தம் அட்ரீனலின் சுரப்பியினைத் தூண்டி விட்டிருந்தது. பொம்மர் என்று அழைக்கப்படும் சியாமாசெட்டி ரக குண்டுவீச்சு விமானங்களின் ஓசையுடன் உலங்குவானூர்திகளின் ஓசையும் கேட்கவே புரிந்து விட்டது, எங்கோ தாக்கப்போகிறார்கள் என்பது. பெரும்பாலும் மக்கள் அதிகம் நடமாடும் சந்திகளில் தான் குண்டுவீச்சுக்கள் நடைபெறும் என்கின்ற பட்டறிவு ஏற்கனவே இருந்ததாலும் எங்களின் வீடும் வங்களாவடிச் சந்திக்கு அண்மையில் இருந்ததாலும் உடனேயே நாங்கள் அனைவரும் பதுங்கு குழிகளுக்குள் சென்று விட்டோம்.

தொடர்நது சில நிமிடங்கள் வட்டமிடுவதை ஓசையில் இருந்து அறிந்து கொள்ளக்கூடியதாய் இருந்தது. திடீரென மிகுந்த வீச்சுடன் விமானங்கள் ஒலிஎழுப்ப “றேஸ் பண்ணுறான். எங்கையோ குத்தப்போறான். காதைப்பொத்துங்கோ” எனக்கேட்ட குரல் தொடர்ந்து எழும்பிய பாரிய வெடியோசைக்குள் கரைந்து போனது. அடுத்தடுத்து நான்கு குண்டுகளை வீசிவிட்டு விமானங்களின் ஒலி மறையவே உலங்குவானூர்திகள் தங்கள் கைவரிசைகளினை 50 கலிபர் துப்பாக்கிகளினூடாகக் காட்டத் தொடங்கியிருந்தன. ஏறத்தாழ ஒரு மணி நேர இடைவேளையின் பின் ஓசைகள் அடங்கியிருக்கவே பதுங்கு குழியினை விட்டு வெளியே வந்தோம். வந்து சிறிது நேரத்திலேயே மீண்டும் உலங்குவானூர்திகளின் ஓசை நெருங்கவே மீண்டும் பதுங்கு குழியினைத் தஞ்சமடைந்தோம். அன்றைய பொழுது பதுங்கு குழிக்குள்ளேயே கழிந்தது.

அது யாழ் கோட்டைக்குள் இருந்த சிறிலங்கா படையினர் சுற்றிவளைக்கப்பட்டு முற்றுகையிடப்பட்டிருந்த காலம். ஆகவே வேலணையில் எமது பகுதிகளிலும் சிறிலங்காவின் விமானப்படையினர் இடையிடையே வான்வழித் தாக்குதல்களை நடாத்திக் கொண்டிருந்தனர். ஆனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் அன்றைய நாள் பூராவும் விமானப்படை விமானங்கள் எம்மை பதுங்குகுழிகளுக்குள் முடக்கியிருந்தனர். அன்றைய இரவும் அடிக்கொரு தடவை நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களால் வீடுகளிற்குள் நிம்மதியாக உறங்க முடியவில்லை.

மறு நாள் காலையும் விமானப்படையின் குண்டு வீச்சு விமானங்கள் வந்து தங்கள் கடைமைகளைச் செய்திருந்தன. ஆயினும் முதல் நாளைப் போலல்லாது இடையே சில மணித்தியாலங்கள் நீடித்த அமைதியில், ஊர்காவற்றுறையில் சிறிலங்காப் படையினர் தரையிறக்கப்பட்டு முகாம் அமைத்திருக்கின்றார்கள் என்பதை அறிய முடிந்தது. வீட்டின் யன்னல் கண்ணாடிகள் யாவும் நொறுங்கி வீட்டிற்குள் கால்வைக்க முடியாதபடி செய்திருந்தன. வீட்டுச் சுவர்களில் விரிசல்களைக் காணமுடிந்தது. கூரையோடுகள் விலகி நீக்கல்களை ஏற்படுத்தியிருந்தன. முந்தைய தினப் பட்டினி வேறு வயிற்றைக் கிள்ளியது. அவசரஅவசரமாக உணவு சமைக்கப்பட்டுக் கொண்டிருக்கையிலேயே மீண்டும் விமானங்கள். உடனேயே பதுங்குகுழி. விமானச் சத்தங்கள் குறைந்ததும் மீண்டும் சமையலறை என்றவாறாக ஒருமாதிரி அன்றைக்கு எங்களால் உணவு உட்கொள்ள முடிந்திருந்தது. அன்றைய இரவில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட எறிகணை வீச்சுக்களை அடுத்து அன்றைய இரவையும் பதுங்குகுழியிற்குள்ளேயே கழிக்க வேண்டிய நிலை. தொடர்ச்சியாக நடத்தப்படுகின்ற குண்டுவீச்சுக்களாலும் எறிகணை வீச்சுக்களாலும் எத்தனைபேர் பாதிக்கப்பட்டார்களோ என்கின்ற கவலைவேறு.

மறுநாள் பொழுதும் விடிந்தது.

அது 1990 ஆவணி 24ம் திகதி.

கடந்த இருநாட்களிலும்விட அதிகமான விமானங்களினதும் உலங்குவானூர்திகளினதும் இரைச்சல்கள் காதைக் குடைந்தன. குண்டுத்தாக்குதல்களால் பதங்குகுழியே அதிர்ந்தது. பின் பத்து மணியளவில் குண்டுவீச்சு விமானங்களின் ஓசை குறைந்துவிட உறுமிஉறுமியவாறே உலங்குவானூர்திகள் வட்டமிட்டுக் கொண்டும் இடையிடையே 50 கலிபர்களால் சடசடத்துக் கொண்டுமிருந்தன. மாலை மங்குகையில் யாவும் அமைதியாகி விட்டிருந்தது. பதுங்குகுழிகளை விட்டு வெளியே வந்து அயலவர்களுடன் உரையாடத் தொடங்கிய போதுதான் அதிர்ச்சி அலைகள் பரவத் தொடங்கின.

திரிவிடபலய என அழைக்கப்படும் முச்சக்தி படை நடவடிக்கையாக, சிறிலங்காவின் அந்நாளைய நட்சத்திரத் தளபதிகளான அப்போதைய வடமாகாண படைத்தளபதி மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பே கடுவ, மற்றும் யாழ்மாவட்டப் படைத்தளபதி பிரிகேடியர் விஜய விமலரட்ண ஆகியோரின் நேரடி வழி நடத்தலில் ஊர்காவற்றுறையில் தரையிறக்கப்பட்டு இருநாட்கள் நிலை கொள்ள வைக்கப்பட்டிருந்த சிறிலங்காப் படையினர் கரம்பன், நாரந்தனை, சரவணை, பள்ளம்பலம், வேலணை, சாட்டி, மண்கும்பான் வழியாக அன்றைக்கே அல்லைப்பிட்டியை அடைந்திருந்தனர். அவர்கள் சென்ற வழிகளில் இருந்த கிராமங்களையெல்லாம் சிதைத்து அழித்திருந்தனர். அகப்பட்டவர்களையெல்லாம் சுட்டும் வெட்டியும் கொன்று விட்டிருந்தனர் பலரை இறந்துவிட்டதாக எண்ணிக் காயங்களுடனேயே வெளிகளுக்குள்ளும் பற்றைகளுக்கும் விட்டுச் சென்றிருந்தனர். உறவினர்கள் தங்கள் காயப்பட்ட உறவுகளையும் கொல்லப்பட்ட சடலங்களையும், வேலணை அராலிப் பகுதியில் இராணுவத்தினர் சென்ற பாதையின் அருகேயிருந்த காணிகளுக்குள்ளும் பற்றைகளுக்குள்ளும் தேடியெடுத்துக் கொண்டிருந்தனர். அன்றைய பொழுதினில் மட்டும் சிறுவர்கள் உட்பட 350 வரையிலான அப்பாவிப் பொதுமக்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டிருந்தனர். பலர் கைதுசெய்யப்பட்டுக் கொண்டுசெல்லப்பட்டுமிருந்தனர். அதைத் தவிரவும் வேலணை மேற்குப் பிரதேசத்திலும், சாட்டி மாதா கோவில் மீதும் மேற்கொள்ளப்பட்ட விமானக்குண்டு வீச்சுத் தாக்குதலிலும் ஏராளமான பொதுமக்கள் காயமடைந்தும் கொல்லப்பட்டுமிருந்தனர். (மறுநாள் ஆவணி 25ம் நாள் சிறிலங்கா இராணுவத்தினர், வேலணைத் தீவினை அடுத்திருந்த மண்டைதீவிற்குள் நுழைந்திருந்தனர். அங்கே அவர்களால் ஏற்படுத்தப்பட்ட இழப்புகள் சொல்லி மாளாதவை.)

தொடர்ந்து வந்த நாட்களில் ஊரைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர் இடம்பெயரவும் புலம் பெயரவும் வேலணை வெறிச்சோடத் தொடங்கியது. பின் 1990 புரட்டாதி 26 இல் யாழ்கோட்டையிலிருந்து பின்வாங்கிய படையினர் மண்டைதீவில் தரித்திருந்து பின் 1990 புரட்டாதி 28ஆம் நாள் தாங்கள் வந்த பாதை வழியே, குண்டுவீச்சுகளை நடாத்திவாறே மீண்டும் பின்வாங்கி ஊர்காவற்றுறையைச் சென்றடைந்தனர் பின் மீண்டும் வலம்புரி இராணுவ நடவடிககை மூலம் 1991 இன் நடுப்பகுதியில் தீவகப்பகுதி முழுமையாகப் படையினரால் ஆக்கிரமிக்கப் படுவதற்கு முன்பாக அங்கு வசித்த மக்கள் யாவரும் தங்கள் ஊர்களைவிட்டு வெளியேறியிருந்தனர்.

அது 1992 ஆவணி 08ஆம் நாள்

தீவகப் பகுதியிலிருந்து யாழ்நகரைக் கைப்பற்றுவதற்கான அனைத்துவிதமான ஏற்பாடுகளையும் பூர்த்தியாக்கிவிட்டு, படைநடவடிககையினை ஆரம்பிப்பதற்கு முதல்நாள். சில இராணுவ வாகனங்களில் சிறிலங்காவின் வடமாகாண படைத்தளபதி மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பே கடுவ, மற்றும் யாழ்மாவட்டப் படைத்தளபதி பிரிகேடியர் விஜய விமலரட்ண ஆகிய நட்சத்திரத் தளபதிகளுடன் ஏனைய முக்கியமான தளபதிகளும் இறுதி நேரக் கள யதார்த்தத்தை அறிவதற்காக வேலணை அராலித்துறைக்கு விஜயம் செய்திருந்தார்கள். அனைத்து நடவடிக்கைகளும் திருப்தியளிப்பதாகவே அவர்களுக்குப் பட்டது. அராலிச் சந்திக்கு அண்மையில் அவர்களின் வருகைக்காக உலங்குவானூர்தியொன்று காத்திருப்பதாகத் தகவல் வந்தது.

சற்றேறக்குறைய இரு வருடங்களுக்கு முன்னர் இதே அராலி வெளியில் நூற்றுக்கணக்கான அப்பாவி இளைஞர்களைக் கொன்று குவித்துவிட்டுச் சென்ற அந்த சிறிலங்கா இராணுவத் தளபதிகள் தங்களுக்காகக் காத்திருக்கும் உலங்கு வானூர்தியை நோக்கி ஒரே வாகனத்தில் குதூகலத்துடன் புறப்பட்டார்கள், அவர்களின் வரவிற்காய் ஆவலுடன் காத்திருக்கும் கண்ணிவெடியை அறியாமல்.

இப்போது மறுபடியும் இந்தப் பதிவின் முதற் பந்திக்குச் செல்லுங்கள்.

முள்ளிவாய்க்கால் பற்றி என்கிறீர்களா?

பொறுத்திருந்து பார்ப்போம். தெய்வம் நின்றுதான் கொல்லுமாமே.*****

பின்குறிப்பு: இந்தப் பதிவு சம்பந்தமான சில தகவல்களைப் பெறுவதற்காக இணையத்தினைத் துளாவியபோது மிக்க அதிர்ச்சியாக இருந்தது. இது சம்பந்தமான தகவல்கள் ஒரே ஒரு தளத்தில் மட்டுமே காணப்பட்டது. அதில் சில தகவல்களும், சில சம்பவங்கள் இடம்பெற்ற நாட்களும் தவறாகக் காணப்பட்டன. பின் வேலணையைச் சேர்ந்த பலரைத் தொடர்பு கொண்டபோதும் அவர்களால் இச்சம்பவம் நடைபெற்ற அந்த மூன்று நாட்களின் திகதிகளையும் சரியாக நினைவுபடுத்த முடியவி்ல்லை. ஈற்றில் நண்பர் ஒருவரின் உதவியுடன் அவரின் உறவினரூடகவே சரியான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. அந்தச் சம்பவத்தில் அவர் தனது நெருங்கிய உறவுகள் பலவற்றை இழந்திருந்தார். தகவல்களைத் தந்துதவிய அவருக்கும், அவற்றைப் பெற உதவிய நண்பனுக்கும் எனது நன்றிகள்.

Wednesday, August 19, 2009

வேரென நீயிருந்தாய்... (5)

அடர்ந்து படர்ந்திருந்த இருளினைக் கிள்ளிக் கிள்ளிக் கொய்து விட்டது போல் அந்த அதிகாலைப் பொழுதில் மின்கம்பங்களிலிருந்து ஒளியினைப் பெய்துகொண்டிருந்த வீதிமின்விளக்குகளின் வெளிச்சம் இருட்டினைக் காயப்படுத்திக் கொண்டிருந்தது. நானும் புதிதாகசேர்ந்துகொண்ட நண்பர்களுடன் ஆனிமாதத்தின் அந்தச்சனிக்கிழமை அதிகாலைப்பொழுதில் நடந்து கொண்டிருந்தேன். அதிகாலைக் குளிரைக்குறைப்பதற்காகப் பருகியிருந்த தேநீரின் வீரியத்தினை உடல் இழந்து கொண்டிருந்தது. நேரம் எப்படியும் அதிகாலை நான்கரையைத்தாண்டியிருக்கும். எங்களில் யாருடைய கைகளிலும் கடிகாரங்கள் இருக்கவில்லை. ஐந்துலாம்படிச்சந்தியை நெருங்கிய பிற்பாடு வீதிகளில் சுறுசுறுப்புக்காணப்பட்டது. கொழும்பு மாநாகரின் வியாபாரப்பிரதேசமும் நிறைஅழுக்குப்பிரதேசமுமான 'பெற்றா'விற்குள்ளால் நடந்து கொண்டிருந்தோம். கூடவந்தவர்களில் ஒருவன் அன்றுதான் வாழ்க்கையிலேயே முதன்முதலாக பாட்டா (Bata) இறப்பர்ச் செருப்பு அணிந்திருப்பானோ என்னவோ தேய்த்துத்தேய்த்து நடந்து கொண்டிருந்தான். பெற்றா தனியார் பேருந்து நிலையத்தில் எங்களைப் போலவே பலரும் வந்து சேர்ந்திருந்தார்கள். ஆட்களைத்தன் வயிற்றுக்குள் புதைத்துக்கொண்டு பேருந்து கிளம்புகையில் நேரம் காலை ஐந்து மணியைத் தொட்டுவிட்டிருந்தது. கலைந்திருந்த உறக்கம் கண்களைச்சுழற்றவே இருக்கையில் சாய்ந்து கொண்டேன்.

தூக்கம் கலைந்து கண்விழித்துப் பார்க்கையில் பேருந்து ஒரு மலைப்பாதையில் மிகவும் சிரமப்பட்டவாறே ஏறிக்கொண்டிருந்தது. நாக்கிளிப் புழுவைப்போல் அப்படியும் இப்படியுமாய் வளைந்த கொண்டிருந்த பாதை ஒருவாறாக சீர்பெற்று 20 நிமிடங்கள்வரை கழிகையில் நண்பர்கள் பரபரப்பாகினர். சில நிமிடங்கள் கழித்து வந்த இறக்கத்தில் எல்லோருடனும் சேர்ந்து நானும் இறங்கினேன். கடைகளின் பெயர்ப்பலகையை அவதானித்ததில் பேராதனையை அடைந்து விட்டிருந்தது தெரிந்தது. முதல்தடவை வேறொரு நண்பனுடன் பல்கலைக்கழகத்தில் எம்மைப்பதிவு செய்ய வந்தபோது இறங்கிய இடம் இதுவல்ல என்பது புரிந்தது. துவிச்சக்கர வண்டிகளில் வந்த சிலர் எங்களை வரிசையில் வரச் சொன்னதும் நெஞ்சுக்குள் பயம் அடைத்துக் கொண்டது.

“அறுப்பாங்கள், இப்பவே வந்திட்டாங்கள். இண்டைக்கு course முடிஞ்சு வீட்டபோன மாதிரித்தான்...”

முன்னுக்கு நின்ற நண்பனின் முணுமுணுப்புக்கேட்டது. வந்தவர்கள் எமது சிரேஷ்ட மாணவர்கள் என்பதும் இன்றைக்குப் பகிடிவதை எம்மைப்பிழியப் போகின்றது என்பதும் மனதுக்கு உறைத்ததும் உள்ளம் நடுங்கியது. வந்தவர்களோ சிலர். நாங்களோ பலர். எனவே எங்கள் எல்லோரையும் விசாரிக்கவே அவர்களுக்கு நேரம் போதவில்லை. postal course எனப்படும் ஆங்கில வகுப்புக்கு நேரமாகவே எங்களை அருகிலிருந்த உணவகத்தில் உணவருந்திவிட்டு வருமாறு பணித்தார்கள். பின் அனைவரையும் அணிவகுத்து வருமாறு சொல்லிவிட்டு அவர்கள் மறைந்து விட்டார்கள்.

கண்டி-கம்பளை வீதியின் வழியே அணிவகுத்துச் சென்ற நாங்கள் ஒரு பாலத்தைக் கடந்தவுடன் அங்கே நின்ற வேறுசிலர் வழிமறித்துப்பின், வகுப்பிற்கு நேரமாகவே அருகிலிருந்த ஒற்றையடிப்பாதை போன்று காணப்பட்ட ஒரு பாதையினால் எம்மை ஏற்றி அனுப்பினார்கள். புற்பற்றைகளாய் மண்டிக்கிடந்த அந்தப்பாதை வழியே சென்று கட்டடக் காட்டுக்குள் நுழைந்தோம். எங்களுக்கு அனுப்பப்பட்டிருந்த கடிதங்களில் குறிக்கப்பட்டிருந்த வகுப்பறைகளின் இலங்கங்களைத் தேடிக் கண்டடைகையில் வகுப்புகள் ஆரம்பித்து விட்டிருந்தன. முன்னைய வகுப்புகளிற்கு நான் சென்றிருக்கவில்லையாதலால் ஆங்கில ஆசிரியை எனது பெயரைப்பதிவு செய்துவிட்டு இருக்கையில் சென்று அமருமாறு பணித்தார்.

கண்களால் வகுப்பினைத் துளாவினேன் யாராவது தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்கின்ற ஆவலில். ஊஹும். யாரும் தெரிந்தவர்களாய்த் தெரியவில்லையே.

அட! இவளை எங்கோ பார்த்திருக்கிறேன். நன்றாய்ப்பழகியுமிருக்கிறேன். எனது வரிசையில் எதிர்ப்புறமிருந்த பெண் மனதினைக் குடைந்தாள். நன்றாய் யோசித்தும் சட்டென அவள் யாரென நினைவிற்கு வரவில்லை. ஆனால் அவளுடன் எப்போதோ நன்றாய்ப்பழகியிருப்பதாய் மட்டும் மனது அடித்துச்சொன்னது.

யாராயிருப்பாள் இவள். என்னுடன் ஒன்றாய் ரியூசனுக்கு வந்திருப்பாளோ? எங்கே வந்திருப்பாள் Science Academy-க்கா இல்லை Shamrock-இற்கா? Shamrock-இல் Double maths மட்டும்தான். அங்கேயும் கமலசிங்கம் சேரின் கடிக்குப்பயந்து அவரிடம் படித்த பெண்களே இருவர்தான். அவர்களின் யாருடைய பெயருமே எனக்குத் தெரிந்ததில்லை. அவர்களுடன் கதைத்ததுமில்லை. Science Academy-யில் சோதிலிங்கம் சேரிடம் physics படிக்க வந்திருப்பாளோ? வந்திருந்தாலும் அவளுடன் பழகியிருக்கச்சந்தர்ப்பமில்லை. சனிஞாயிறுகளில் காலை 8.00 மணி physics வகுப்பிற்கு நான் வீட்டிலிருந்து 8.00 மணிக்கு வெளிக்கிட்டால் 8.10 இற்கு சைக்கிளைத்தள்ளிக்கொண்டு உள்ளே செல்ல சரியாக எனக்குப் பின்னால் சாளியைத் (ஒருவகை motorcycle) தள்ளிக் கொண்டு சோதிலிங்கம் சேர் வருவார். இருவருமே ஒன்றாகவே உள்ளே செல்வோம். வகுப்புகளில் பின்னாலிருந்தால் கண்தெரியாது என்பதால் பெரும்பாலும் மாணவர்கள் அமரத்தொடங்கும், முதல் அல்லது இரண்டாம் வாங்கில்களிலேயே (bench) அமர்ந்து விடுவதால் கூடப்படிக்கும் பெட்டைகளைப்பார்க்க முடிவதில்லை. பின்னாலையோ பக்கத்தாலையோ திரும்ப வெட்கம் மட்டுமல்ல, பின்னால் அமர்ந்திருக்கும் பெடியங்களின் கடிதாங்க முடியாததாயிருக்கும் என்பதுவும் ஒரு காரணம். இதே நிலைதான் மணியம் சேரின் chemistry பாடத்திலும். ஆக இவளை நான் ரியூசனில் பார்த்திருக்க முடியாது.

A/L படித்ததோ ஆண்கள் பாடசாலையில். அப்படியெனறால் O/L இல் ஒன்றாய்ப் படித்திருப்பாளோ? படிச்ச பள்ளிக்கூடங்களிலையெல்லாம் சொந்தக்காரர் வாத்திமாரா இருந்ததால எங்கட கலாச்சாரப்படி நானும் பெட்டைகள் இருக்கிற பக்கமே திரும்ப முடியாமல் போய்விட்டது. அப்படியானால் வேறு எங்குதான் இவளைப் பார்த்தேன். நன்றாய்ப் பழகியிருப்பதாய் உள்மனம் சொல்கிறதே. ஒருவேளை 95 இல் யாழ்ப்பாணத்திலிருந்து இடப்பெயர்ந்து வசித்த இடங்களில் அருகருகே இருந்திருப்போமோ. அம்மாவுக்கென்றால் நன்றாகத்தெரிந்திருக்கும். பார்ப்போம், இல்லாவிட்டால் இவளிடமே கேட்டால் போயிற்று. கம்பசில பெட்டைகளோட தாராளமாக் கதைக்கலாம் தானே.

யாழ்ப்பாணத்திலையெண்டால் A/L படிக்கும் வரையும் பெடியளும் பெட்டையளும் ஒராளோடையொராள் frirndly-யாக் கதைக்கேலாது. ஆனால் கம்பஸ்க்கு போனாப்பிறகு எண்டால். அவை தாராளமா கதைப்பினம். பெட்டைகிளின்ர வீட்ட பெடியள் போவாங்கள். பெடியளின்ர வீட்ட பெட்டைகள் போகுங்கள். அதைப்பற்றி ஒருத்தரும் கணக்கே எடுக்கிறேல்லை. ஆனால் A/L படிக்கேக்குள்ள ஒரு பெட்டையும் பெடியனும் கதைச்சால் சரி. உடனேயே வீட்டில விளக்கம் தொடங்கீரும். பிறகு அந்தப் பெட்டை போறவாற இடமெல்லாம் அந்தப் பெட்டையின்ர தம்பியோ அப்பாவோ காவலுக்கு வரத் தொடங்கீருவினம். ஏன்தான் அப்படிச் செய்யினமோ தெரியாது. சிலவேளை Teen-age-இல பிள்ளைகள் வயசுக்கோளாறால ஏதும் செய்துபோடுவினம் எண்ட பயம்தான் காரணம் என நினைக்கிறேன். அதாலதான் teen-age முடியும் வரைக்கும் பிளளைகளை கவனமாப்பாக்கிறவை, teen-ageம் முடிஞ்சு பிள்ளைகள் கம்பஸ் போகத்தொடங்கினாப்பிறகு அவை பழகிறதைப்பற்றி அக்கறைப்படுவதில்லை.

பக்கத்தில் திரும்பி அவளைப்பார்க்கிறேன். அட அவளும்தான் என்னைப் பார்க்கிறாள். அந்தக்கண்களில் தெரியும் பரிவும் காருண்யமும் அப்படியே புத்தரை மனக்கண்ணில் கொண்டுவந்து நிறுத்துகிறது. அவளது சிநேகமான இதழ்வலிக்காத அந்த ஒற்றைப்புன்னகை அடித்துச் சொல்கிறது, இவளுடன் நான் நன்கு பழகியிருக்கிறேன் என்பதை மட்டுமல்லாமல் அவளுக்கும் என்னை நினைவிருப்பதை. Class முடிந்தவுடனேயே அவளிடம் விசாரிக்கவேண்டும் என்று உள்மனம் சொல்வதைக் கேட்க எனக்கே வியப்பாயிருக்கிறது.

என்னாயிற்று எனக்கு? எந்தப் பெண்ணையுமே ஏறெடுத்தும் பாராமல் திரிந்த நான் அவளிடம் வலியச் சென்று பேசுவதா? எப்படி? இதற்கு முன் எனக்கு எந்தப் பெண்ணுடனும் வலியச் சென்று கதைத்துப்பழக்கமில்லையே. முடியாது. அவளாய் வந்து கதைத்தால் இதைப்பற்றிக் கேட்கலாம். இல்லையென்றாலும் இன்னும் நான்கு வருடங்கள் இங்குதானே இருக்கப்போகிறோம். அதற்குள் எப்படியும் அவளைப்பற்றி அறிந்து விடலாம் என்று எண்ணியவாறே இருக்க, கண்கள் மீண்டும் அனிச்சையாய் அவள் பக்கம் திரும்பின.

எனக்குள் வியப்பு மேலிட்டது. என்னாயிற்று இந்தப் பட்டினத்தாருக்கு? இன்னும் அவரைக்காணவில்லையே என்று ஆச்சரியமாயிருந்தது. வழமையாகவே அழகாகத்தெரியும் ஒரு பெண்ணை கண் மீண்டும் பார்க்கத் தூண்டினால் மனதிற்குள் கண்ணதாசன் வந்துநின்று 'இந்திரியம் தீர்ந்து போனால் சுந்தரியும் பேய்போல' என்பார். அதையும் தாண்டி அந்தப் பெண்ணின் அழகை கவர்ச்சியை ரசிக்க மனம் விழைந்தால், பின்பிடரியில் இரண்டு தட்டுத்தட்டி 'பெண்ணாகி வந்ததொரு மாயப்பிசாசாம் பிடித்தென்னைக் கண்ணால் வெருட்டி முலையால்மயக்கிக் கடிதடத்துப் புண்ணாங் குழியிடைத் தள்ளியென் போதப் பொருள்பறிக்க' என்பார் பட்டினத்தார். பின் அவரின் அறுவை ஆரம்பித்து விடும்.

சீயும் குருதிச் செழுநீர் வழும்பும் செறிந்தெழுந்து
பாயும் புடவை ஒன்றில்லாத போது பகல் இரவாய்
ஈயும் எறும்பும் புகுகின்ற யோனிக்கு இரவுபகல்
மாயும் மனிதரை மாயாமல் வைக்கமருந்தி்லையே.

என்றவாறே சலித்துக்கொண்டு அவர் தன் தலையில் அடிப்பது மனதுக்குள் தெரிகையில் அந்தப் பெண் மறைந்து போயிருப்பாள்.

ஆனால் இன்று இவர்கள் இருவருமே வரவில்லையே. ஒருவேளை இவளின் அழகை ரசிக்காமல் இவள் யாரென சிந்திப்பதால் இருக்குமோ? அவளை மீண்டும் பார்க்கிறேன். அதே கனிவான கண்கள். வைத்தகண் வாங்காமல் பார்க்கச் சொல்கின்றன. மற்றம்படிக்கு சாதாரணமாக பாடசாலையில் கூடப் படிக்கும் பெண்களில் ஒருத்தியாக பருமனுமாயில்லாமல் ஒடிசலுமாயில்லாமல் அளவாக அவள் இருந்தாள். உடலியல் ரீதியாக எவ்வித ஈர்ப்புமே அவளிடம் ஏற்படவில்லை. இவளை எங்கோ பார்த்திருக்கிறேன், பழகியிருக்கின்றேன் என்கின்ற சிந்தனை மட்டுமே சுற்றிச்சுற்றி வந்தது.

அவளும் என்னையே பார்த்துக்கொண்டிருப்பதுவாய் உள்ளுணர்வு குறுகுறுக்க மீண்டும் அவளைப்பார்க்கிறேன். என்னையே பார்த்துக்கொண்டிருந்தவள் நான் பார்ப்பதை அறிந்ததும் கீழே குனிந்து எனது கால்களைப்பார்க்குமாறு சைகையால் கூறினாள். கீழே குனிந்து பார்த்ததும் அதிர்ந்து விட்டேன். இருகால்களிலுமிருந்து குருதி சொட்டுச்சொட்டாய் வழிந்து கொண்டிருந்தது. அதைக்கவனித்த அருகிலுருந்த மாணவன் மலையட்டை கடித்துவிட்டதாகக் கூறி ஆசிரியையின் அனுமதியுடன் என்னை வெளியில் அழைத்து வந்தான்.

கழிப்பறையில் சென்று பார்த்தபோது நான்கு அட்டைகள் இரத்தம் உறிஞ்சிக் கொழுத்துப்போய் கால்களில் ஒட்டிக்கிடந்தன. ஏற்கனவே குருதியை அவை வயிறு நிறையக்குடித்திருந்ததால் அவற்றை இழுத்தெறிவது சுலபமாயிருந்தது. பின் கால்களைக்கழுவிவிட்டு வழியும் குருதியின் மேல் காகிதத்தை ஒட்டி விட்டு வகுப்பிற்குள் நுழைந்தோம்.

கட்டுக்கட்டாய் குறிப்புகளைத்தந்துவிட்டு, அடுத்த இரண்டாவது சனிக்கிழமை மீண்டும் சந்திக்கலாமெனக்கூறி ஆங்கில ஆசிரியை வகுப்பினை நிறைவு செய்ய, அவளாகவே என்னிடம் வந்தவள்,

“ஹோமத தங்?” (எப்படி இப்போ?) -என்றாள்.

எனக்கு எதுவுமே புரியாமல் அவளைப் பார்க்க,

“ஆர் யூ சிங்கள?" என்றவளிடம் “நோ" என்றேன்.

“ஓ! சொறி சொறி. ஐ தோட் யூ ஆர் சிங்கள. பை த பை, ஹவ் ஆர் யூ பீலிங் நவ்? ரேக் கெயார் எபவுட் லீச்சஸ்.”

என்றவாறே எனது பதிலுக்குக் காத்திருக்காமல் வெளியேறினாள்.

அப்படியானால் இவள் தமிழிச்சி அல்ல. நான்தான் வீணாகக் குழம்பிப்போயிருக்கிறேன். இதற்கு முன்னர் நான் இவளைப் பார்த்திருக்கவோ பழகியிருக்கவோ எந்தச் சந்தர்ப்பமும் இருக்கவில்லை. ஆயினும் இப்போதும் உள்மனம் சொல்லியது, இவளுடன் நான் நன்றாய்ப பழகியிருக்கிறேன் என்று. சிலவேளை இவளின் சாயலில் யாருடனும் என் சின்ன வயதுகளில் நான் பழகியிருந்திருக்கக்கூடும்.

வெளியேறிய மாணவர்களுடன் சேர்ந்து வெளியேற முயல அருகிலிருந்த மாணவன் தடுத்தான், இவன்தான் என்னைக்கழிப்பறைக்கு அழைத்துச் சென்று அட்டைகளை அகற்ற உதவியவன்.

“கொஞ்சம் பொறும் ஐசே! இப்ப போனால் வெளியில நிக்கிற சீனியேர்ஸ் ராக்கிங் பண்ணப் பிடிச்சுக் கொண்டு போயிருவாங்கள். அவங்கள் எல்லாம் போய் முடிஞ்சாப் பிறகு நாங்க போவம்”.

அரைமணி நேரத்தின் பின் வெளியே வந்த போது யாரையுமே காணக்கிடைக்கவில்லை. வரும் போது வந்த பாதையை ஒருவாறு கண்டுபிடித்து பற்றைக்குள்ளால் இரத்தம் உறிஞ்சும் அட்டைகள் பற்றிய மிகுந்த கவனத்துடன் இருவரும் இறங்கினோம். வீதியினை அண்மிக்கையில் தூரத்தில் ஒருவர் வருவது தெரிந்தது. அவர் ஒரு சிரேஷ்ட மாணவராக இருக்கலாமோ என்கின்ற அச்சம் எங்கள் இருவரிற்குள்ளும்.

கிளீன் சேவ்-உம், காலில் பாட்டா இறப்பர் செருப்பும், பெல்ற் இல்லாத ஜீன்சிற்குள் உள்விடப்பட்டிருந்த சேட்-உம் பார்ப்பவர்கள் யாருக்குமே நாங்கள் புதுமுகம் என்பதை உணர்த்தி விடும்.

“ஐசே! அவர் தமிழில கதைச்சால் நாங்கள் விளங்காத மாதிரி நிப்பம். சிங்களம் எண்டிட்டு விட்டிட்டுப் போயிருவேர்.”

என்றான் நண்பன். அவன் இப்போது நண்பனாகி விட்டிருந்தான். அருகில் நெருங்கி வந்தவர் எங்களைப் பார்த்ததும்,

“மல்லிலா ஒயா சிங்களத?” (தம்பிமார் நீங்க சிங்களமா?) - என்றார்.

ஓம் என்பதுபோலவும் இல்லை என்பது போலவுமாக தலையை மாறிமாறி ஆட்டினோம்.

“யூ நோ இங்கிலிஷ் றைற்? ஆர் யூ சிங்கள ஓ ரமில்?”

தயக்கத்துடன் “ரமில்” என்றோம்.

“பேய்ப்.... ஆருக்கடா சுத்துறீங்க? நடவுங்கடா பிறிட்ஜ் குவாட்டசுக்கு. இண்டைக்கு ரெண்டுபேரும் செத்தீங்கடா மவனுகளே.”
Saturday, August 8, 2009

சிங்கப்பூருக்குப் பிறந்தநாளு - 09 ஆவணி 2009


1965ம் ஆண்டு ஆவணித் திங்கள் 09ம் நாள் பூமித்தாய் தனது புதியதொரு புதல்வனைப் பிரசவித்த பெருமையில் பூரித்துப் போயிருந்தாள். ஆசியக் கண்டத்தில் மலேசியாவிற்கும் இந்தோனேசியாவிற்குமிடையில் பிரசவிக்கப்பட்ட புதிய நாடொன்று பூமிப்பந்தில் தவழத் தொடங்கியிருந்தது. 1963 புரட்டாதி (September) 16ம் திகதி, மலாய், சாபா, சரவாக் ஆகிய பிரதேசங்களுடன் சிங்கப்பூரினையும் இணைத்து மலேசியா என்கின்றவொரு புதிய நாடு உருவாக்கப்பட்டிருந்தது. ஆயினும் சிங்கப்பூரில் இடம்பெற்ற சில இனரீதியிலான முரண்பாடுகளால் ஏற்பட்ட கலவரங்களாலும், அதனால் உண்டான பதட்டங்களாலும், வேறுசில காரணங்களாலும் அப்போதைய மலேசியப் பிரதமர் தலைமையிலான மலேசியப் பாராளுமன்றத்தின் ஒருமித்த ஆதரவுடன் சிங்கப்பூர், மலேசியக் கூட்டமைப்பிலிருந்து 09-08-1965 இல் வெளியேறியது அல்லது வெளியேற்றப்பட்டது. அன்றைய தினத்தில் சிங்கப்பூர் குடியரசு (Republic of Singapore) சுதந்திர நாடாக திரு. லீ க்குவான் யூ (Lee Kuan Yew) அவர்களால் பிரகடனப்படுத்தப்பட்டது.


எந்தவொரு இயற்கை வளங்களும் இல்லாததுடன், 10% - 12% வரையிலான மக்களின் வேலையில்லாப் பிரச்சினையும் அப்போது சிங்கப்பூரின் எதிர்காலத்தைக் கேள்விக்குரியதாக்கியிருந்தன. இப்படியான காரணுங்களுக்கு அஞ்சியே ஆரம்பத்தில் 1963 இல் சிங்கப்பூர் மலேசியாவுடன் இணைந்து கொண்டது. இப்போது பிரிந்து வந்தாகிவிட்டது. பிரச்சினைகளும் அதிகரிக்க ஆரம்பித்து விட்டன. சுதந்திர சிங்கப்பூரின முதற் பிரதமரான திரு. லீ க்குவான் யூ, கலக்கமடையவில்லை. அவரது தீர்க்கதரிசனமிக்க பார்வைகளுடன் கூடிய திட்டங்களும், மனஉறுதியும் அயராத உழைப்பும், மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டியவாறே செயற்பட்ட பாணியும், விடாமுயற்சியும், அவருக்கு உறுதுணையாக அளப்பரிய பங்காற்றிய ஏனைய அதிகாரிகளின் பங்களிப்புகளும், மற்றைய நாடுகளை சிங்கப்பூரைப் பார்த்து வியக்க வைத்தன.


சிங்கப்பூரில் பல்லின, பல்மத, பல்கலாச்சார மக்கள் வாழ்ந்து வந்தாலும் அவர்களிடையே எந்தவிதமான இனமத முரண்பாடுகளும் இல்லாது ஒரேநாட்டு மக்கள் என்கின்ற சிந்தனையே முன்னிற்பது பெருமையளிக்கிறது. அனைத்து அரச நிறுவனங்களிலும் ஆங்கிலம், சீனம், மலாய் மற்றும் தமிழ் ஆகிய நான்கு அரசமொழிகளிலும் எவ்வித வேறுபாடுமின்றி மக்களுக்கான சேவைகள் வழங்கப்படுவதை எப்படிப் பாராட்டுவது?


1990 இல் திரு. லீ க்குவான் யூ, பிரதமர் பதவியிலிருந்து ஓய்வுபெற, திரு.கோ ச்சோ தொங் (Goh Chok Tong) அவர்கள் சிங்கப்பூர் குடியரசின் இரண்டாவது பிரதமர் ஆனார். 2003ஆம் ஆண்டளவில் பரவிய சார்ஸ் (SARS) நோயினால் சிங்கப்பூர் பாரிய பின்னடைவினை எதிர்கொண்டது. அதன் பொருளாதாரம் சரிந்தது. ஆயினும் தலைமைத்துவத்தின் சரியான திட்டமிடுகைகளினால் சரிவிலிருந்து மிக வேகமாகவே மீண்டுகொண்டது.


2004இல் திரு. கோ ச்சோ தொங் ஓய்வுபெற, சிங்கப்பூர் குடியரசின் மூன்றாவது பிரதமராக தற்போதைய பிரதமர் திரு. லீ சென் லூங் (Lee Hsien Loong,) அவர்கள் பதவியேற்றுக் கொண்டார். இப்போதைய சவாலாக, உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட பொருளாதரப் பின்னடைவும், H1N1 எனப்படும் பன்றிக் காய்ச்சல் நோயும் விளங்குகின்றன. ஆயினும் உல்லாசப் பயணிகளின் சொர்க்கபுரியாக விளங்கும் சிங்கப்பூரிற்கு வரும் பயணிகளின் வருகையை இவை பாரியளவில் பாதிக்காமலிருப்பதற்கு தற்போதைய அரசு மேற்கொண்டுவரும் தகுந்த நடவடிக்கைகளே காரணம்.


இன்றைய தினத்தில் தனது 44வது பிறந்த தினத்தைக் கொண்டாடும் சிங்கப்பூருக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Thursday, August 6, 2009

சின்னப் பையனின் நினைவு நாளும் பட்டாம்பூச்சிகளும்

1945 ஆவணி (August) 06ம் நாள் காலையும் வழமை போன்றே ஜப்பானின் ஹிரோஷிமா நகரமும் துயில் கலைந்து பரபரப்பாகிக் கொண்டிருந்தது. எத்தனையோ சுனாமிகளுக்குப் பழக்கப்பட்டிருந்த ஜப்பானியர்களால் வரப்போகும் சூறாவளியைப்பற்றி அறிந்திருக்க முடியவில்லை. எனோலா கே (Enola Gay) என்கின்ற B-29 ரக விமானத்தில் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து, அந்நாட்டின் விமானப்படை வீரரான போல் டிபெட்ஸ், ஹிரோஷிமா நகரினை அண்மித்துக் கொண்டிருக்கையில் நேரம் காலை 8.00 மணியினைத் தாண்டி விட்டிருந்தது. சரியாக காலை 8.15 இற்கு அந்த சூறாவளி விண்ணிலிருந்து தரைநோக்கி முதலாவது அணுகுண்டு மனிதகுலத்தை நாசமாக்க வெடித்துக் கிளம்பியது.

சின்னப்பையன் (Little Boy) தன் கடமையைச் சரிவரச் செய்து விட்டான் என்கின்ற சேதியோடு போல் டிபெட்ஸ் தன் தாயகத்திற்கு திரும்பினார். ஹிரோஷிமா எரிந்தழியத் தொடங்கியது. முதலாவது அணுகுண்டின் அனர்த்தத்தைக் கண்டு மனிதகுலம் உறைந்தது. ஒற்றைக் குண்டு, ஒரு இல்சத்து நாற்பதினாயிரம் அப்பாவி மக்களுடன் அந்த நகரையே சுடுகாடாக்கியிருந்தது. இந்றைக்குச் சரியாக 64 ஆண்டுகள் கழிந்த பின்னரும்கூட மீண்டும் பழைய நிலைக்கு திரும்பாத நினைவுச் சின்ன நகரமாய் ஹிரோஷிமாவும் நாகசாகியும்.

சின்னப்பையனிற்கு 3 நாட்கள் கழித்து, கொழுத்த மனிதன் (Fat Man) என அழைக்கப்பட்ட இரண்டாவது அணுகுண்டு நாகசாகி நகரினைத் துவம்சம் செய்திருந்தது. அத்துடன் நிபந்தனையற்ற சரணாகதியினை ஜப்பான் ஏற்றுக்கொள்ள இரண்டாம் உலகப்போர் உத்தியோகபூர்வமாக முடிவிற்கு வந்தது. ஆயினும், அணுகுண்டின் பிரயோகமின்றியே சில வாரகால இடைவெளிகளில், சோவியத் ரஷ்யப் படைகள் ஜப்பானுக்கெதிராக களத்தில் குதிக்கையில், ஜப்பான் சரணடைந்திருக்கும் என்பதும் அப்போதே அனைவருக்கும் தெரிந்திருந்தது. ஹிட்லரின் படைகளை விரட்டிச்சென்று வெற்றிவாகை சூடியிருந்த சோவியத் ரஷ்யாவின் செம்படைகள், நீண்டபோரினை அடுத்து சற்று இளைப்பாறிக்கொண்டிருந்த நேரம். அமெரிக்காவின் மூன்றெழுத்து நிறுவனம் மிகவேகமாக மூளையைக் கசக்கி, அடுத்த ஏகோபித்த வல்லரசாக தான் மட்டுமே விளங்கவேண்டும் என்கின்ற அதிகார வெறியுடனும், ஏனைய நாடுகளைத் தனது பலங்கொண்டு பணியவைக்கவேண்டும் என்கின்ற திமிருடனும் அந்த அராஜகத்தை நடாத்தி முடித்திருந்தது.

இன்றைய தேதியில் மட்டுமல்ல, அன்றுகூட, மனித உரிமைகள், மீறல்கள் என்று கூச்சலிடுவதெல்லாம் வெறும் 'பம்மாத்து'க்கு மட்டுமே. தனக்கு ஒரு நட்டமும் ஏற்படப்போவதில்லை என்று தெரிந்துவிட்டால் அமைதியாயிருப்பதும், அல்லது தனக்குபிடிக்காத மற்றைய நாடுகளுக்கு எதிரானவொரு துருப்புச் சீட்டாக அதனைப் பயன்படுத்த முடியுமெனின் வாய்கிழியக் கத்துவதும், இன்று எல்லா நாடுகளினதும் விதிகளில் ஒன்றாகிவிட்டதைப்பற்றிக் கதைப்பார் யாருமில்லை.

இன்று ஜப்பானும் ஐக்கிய அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள். சில சந்தர்ப்பங்களில் சில நாடுகளில் அமெரிக்காவால் நேரடியாக மூக்கை நுழைக்கமுடியாத சந்தர்ப்பங்களில், அதன் முகவராக ஜப்பான் செயற்படுவது ஒன்றும் பரமரகசியமல்ல.இன்றைய நினைவுநாளில், ஜப்பானிய தலைவர்களால், உலகில் உள்ள அத்தனை அணுவாயுதங்களும் அழிக்கப்படவேண்டுமென விடுக்கப்பட்டிருக்கும் அழைப்பு வரவேற்கப்பட வேண்டியது. அணுவாயுதங்கள் மட்டுமல்ல, கொத்தக்குண்டுகள், பொஸ்பரஸ் எரிகுண்டுகள் உட்பட அனைத்துரக அழிவாயுதங்களும் அழிக்கப்பட வேண்டியவையே.

எப்படி ஜப்பான் என்றவுடன் அணுகுண்டு நினைவிற்கு வருகிறதோ, அவ்வாறே ஜப்பான் என்றவுடன் நினைவிற்கு வரும் இன்னொரு விடயம் ஹைக்கூ.

மூன்று வரிகளில் அமைக்கப்படும் மிகச்சிறியவொரு கவிதை வடிவம். ஒரு கணநிகழ்வினை படம் பிடித்துக் காட்டி எம் கற்பனைச் சிறகினை விரித்துவிடும் அற்புதப்படிமம். இப்போதெல்லாம் தமிழில் கூட ஹைக்கூ கவிதைகள் பிரபலமாகி விட்டன. தமிழ்நாட்டுக் கவிஞர் ஒருவர் (பெயர் நினைவிற்கு வரவில்லை) ஹைக்கூ அந்தாதியே (நூறு ஹைக்கூ கவிதைகள்) எழுதிப் புதுமை செய்திருக்கிறார். அந்தாதி என்பது, ஒரு பாடலின் அந்தம் (முடிவு அல்லது இறுதி வார்த்தை), தொடர்ந்து வரும் மற்றைய பாடலின் ஆதியாக (ஆரம்பமாக அல்லது முதல் வார்த்தையாக) அமைய எழுதுவதாகும். எனக்குப் பிடித்த ஒரு மொழிமாற்றம் செய்யப்பட்ட ஜப்பானிய ஹைக்கூ;

உதிர்ந்த மலர்,
கிளைக்குத் திரும்புகிறது.
வண்ணத்துப்பூச்சி!


வண்ணத்துப்பூச்சி (Butterfly) என்றவுடன் இப்போதைக்கு சுபானு தான் நினைவிற்கு வருகிறார். மீண்டுமொரு தொடர் விளையாட்டிற்கு, இம்முறை அவரால் நான் அழைக்கப்பட்டிருக்கிறேன். நன்றி சுபானு.
நானும் மூவருக்கு இந்த வண்ணத்துப்பூச்சியை வழங்கவேண்டிய கட்டாயம். பெரும்பாலானவர்கள் ஏற்கனவே வண்ணத்துப்பூச்சியுடன் உறவு கொண்டாடி விட்டார்கள். இந்த மூவரின் தளங்களின் முகப்பிலும் வண்ணத்துப்பூச்சி பறக்காததால் என்னிடமிருந்து அவர்களிடம் பல்கிப்பெருகி (ஒன்றாய் வந்து மூன்றாய்ச் செல்கிறது) பறக்கிறது

1) பாலா இவரின் அத்தனை கவிதைகளையும் எனக்குப் படித்திருக்கிறது. அனாசயமாக வார்த்தைகளுக்குள் கருத்துக்களைப் புதைத்து விளையாடுகிறார்.

2) அறிவிலி என்கின்ற பெயரைச் சூட்டிக்கொண்டு இந்தியாவை ஒளிரவைத்துக் கொண்டிருப்பவர். இவரின் பயணக்கட்டுரைகள், இவர் போகுமிடமெங்கும் எம்மையும் கூடவே அழைத்துச் செல்கின்றன.(இவரிடமிருந்து எனக்கு வந்த சுவாரஸ்ய விருது, சுபானுவிற்குச் சென்றது. இப்போ சுபானுவிடமிருந்து வந்த வண்ணத்துப்பூச்சி விருது, இவருக்குச் செல்கிறது. உலகம் ரொம்பச் சின்னதா ஆயிட்டுதில்ல?)

3) கதியால் இவரது பெரும்பான்மையான இடுகைகள் கிரிக்கட் பற்றியே இருக்கிறது. எனக்கு அதில் ஆர்வம் இருப்பதில்லை. ஆனால் அவரின் சமீபத்தைய இடுகைகள், அதிலும் குறிப்பாக ஈழத்துச் சதன் பற்றிய பதிவினை அடுத்து இந்த வண்ணத்துப்பூச்சி அவரிடம் பறந்து செல்கிறது.