Monday, November 8, 2010

வேரென நீயிருந்தாய்... (13)

“எல்லாவற்றையும் நீ ஏற்றுக் கொள்பவனாயிருந்தால் இந்த உலகில் உனக்கெதிரானது என்று எதுவுமே இராது” - ஓஷோ

அந்தச் சம்பவத்தின் பின்னர், பகிடிவதை பற்றிய எனது எண்ணங்கள் மாற்றமடைந்திருந்தன. பல்கலைக்கழக வாழ்க்கையில் பகிடிவதையும் ஒரு அங்கமே என மனது ஏற்றுக்கொண்டு விட்டதனால் அதைப்பற்றிய பயமும் ஓரளவிற்கு மறைந்து விட்டிருந்தது.

அது 13ம் திகதி October மாதம் திங்கட்கிழமை, காலை விரிவுரை மண்டபத்தில் முதலாவது விரிவுரைக்காகக் காத்திருக்கையில்தான் அந்தச்சேதி எம்மிடையே பரவத் தொடங்கியிருந்தது.

“வரப்பிரகாஷை ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணியிருக்காம்.”
நெஞ்சு திக்கென்றது. “எப்ப நடந்தது? என்ன நடந்தது?” எல்லோரும் குசுகுசுக்கத் தொடங்கினார்கள்.

“போன திங்கக்கிழமை றுாம் ராக்கிங்குக்கு கூட்டிக்கொண்டு போய் அஞ்ஞூறு (500) தோப்படிக்கச்சொல்லி விட்டவங்களாம். பிறகு அவனால நடக்கேலாமக் கிடக்கெண்டு சைக்கிளில ஏத்திக்கொண்டுவந்து பஸ் ஏத்திவிட்டவங்களாம். ஆள் வீட்ட போய் ஏலாதெண்டு இப்ப நவலோகாவில அட்மிட் பண்ணியிருக்காம்.”

ஒவ்வொருவரும் அங்கலாய்த்துக் கொண்டிருக்கையில்,

“மணியடா! அப்ப இனி எங்களுக்கு ராக்கிங் இருக்காது.” - என்றான் ஒருவன்.

”பேய்க்கதை கதைக்கிறாய். ராக்கிங் நிண்டுதெண்டால் இவ்வளவு நாளும் நாங்கள் வேண்டினதை ஆருக்குக் குடுக்கிறது?”

இன்னொருவன் எழுப்பிய கேள்வி விரிவுரையாளரின் வருகையுடன் அடங்கியது.

பல்கலைக்கழக சூழல் ஓரளவிற்கு மாறியிருந்தது. விடுதிகளிலிருந்த சிரேஷ்ட மாணவர்களில் பகிடிவதைக்கு வரச்சொல்லியிருந்தவர்களெல்லாம் வரத்தேவையில்லையென தகவல் அனுப்பியிருந்தார்கள். எல்லோரிடமும் இன்னதென்று கூறமுடியாத ஒருவித பய உணர்வு பரவிக்கிடந்தது.

அந்தவார முடிவின் நாள். வெள்ளிக்கிழமை இரவு. குறிஞ்சிக்குமரன் ஆலயத்தை விட்டு முதல் தடவையாக பகிடிவதை பற்றிய பயமின்றி நண்பர்களாகக் கூடி இறங்கிக்கொண்டிருந்தோம்.

“அண்ணைமார்! என்ன ராக்கிங் குளிர் விட்டுப் போச்சோ? official-ஆ உங்களுக்கு இன்னும் ராக்கிங் முடியேல்ல. ஆ! ஒண்டு ரெண்டு மூண்டு நாலு அஞ்சு. அஞ்சு பேரும் அப்பிடியே எங்களுக்குப் பின்னால குருந்துவத்தைக்கு வாறீங்கள். சரியே?”
பின்னால் அமைதியாக நடந்தோம்.

“டேய்! உங்களுக்குள்ள சிரிச்சுக் கதைச்சுக் கொண்டு வாங்கோ. இல்லாட்டிப் பாக்கிறவைக்கு ராக்கிங்குக்குக் கொண்டுபோற மாதிரி தெரிஞ்சிரும்.”
எமக்கிடையிலான இடைவெளியினை அவர்கள் அதிகரித்தார்கள்.

குருந்துவத்தையை அடைந்து அவர்களின் அறையிற்குள் பிரவேசித்தோம்.

“வரப்பிரகாஷ் ஆசுப்பத்திரியில இருக்கிறதக் கேள்விப்பட்டிருப்பியள் எண்டு நினைக்கிறன். வேறை யாருக்கும் ஆசுப்பத்திரிக்குப் போக விருப்பமோ?”
மௌனமாயிருந்தோம்.

“ராக்கிங் நல்லதோ கூடாதோ?”
அதற்கும் பதில் பேசாதிருந்தோம்.

“ஒழுங்காக் கேட்டா பதில் சொல்லத் தெரியாதாடா உங்களுக்கு?”
“இல்லையண்ணே.... அது வந்து...”
கோரஸாக இழுத்தோம்.

“எங்களோட ராக்கிங்கைப் பற்றிக் கதைக்க பயமாயிருக்கா? அப்பிடியெண்டால் உங்களை என்ன செய்யலாம்......? ஆ...! சரி ஆராருக்கு மேடையில பேசி அனுபவமிருக்கு?”
எல்லோரும் இல்லையென்றவாறே தலையசைத்தோம்.

“சரி அப்ப அஞ்சுபேரும் லைனில நில்லுங்க பாப்போம்.”
எல்லோருமே முதலாவதாக நிற்கப் பயப்பட்டுக் கடைசிக்குப் போய்க் கொண்டிருந்தோம்.

“டேய் என்னடா செய்யுறியள். லைனில நிக்கச் சொன்னால் கடைசீல போய் நிக்கறதுக்கு அடிபட்டுக் கொண்டிருக்கிறியள். இதையே சங்கக் கடையில நிவாரணச் சாமான் வேண்டப் போய் நிண்டியள் எண்டால் முன்னுக்கு நிக்கிறவனைப் பிடிச்சுப் பின்னால தள்ளுவியள்.”
'அட! தமிழனாய்ப்பிறந்த எல்லோருக்குமே சங்கக் கடையில நிவாரணம் வேண்டின அனுபவம் இருக்கும் போல. தமிழில முதல்ச் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் எண்டு மூண்டு சங்கங்கள் இருந்து தமிழ வளர்த்ததெண்டும், ஆனாலும் முதல் இரண்டு சங்க காலங்களின் தகவல்கள் வெள்ளப் பெருக்கால் அழிந்துவிட்டனவென்றும் கடைச்சங்கம் பற்றிய தகவல்களையே அறியக் கூடியதாக இருக்கென்றும் ஓ.எல்லில (O/L) படிச்சனாங்கள். அந்தக் கடைச்சங்கம் மட்டும் இன்னும் அழியாம இருக்கிறது சங்கக் கடையா மாறி எங்கட தமிழருக்கு நிவாரணம் குடுக்கத் தானாக்கும்.' எழுந்த நினைவினைக் கத்தரித்தது சீனியரின் குரல்.

“டேய் இஞ்சால நிக்கிற நீங்க ரெண்டு பேரும் ஒரு குறூப், அங்கால நிக்கிற ரெண்டு பேரும் மற்ற குறூப். நடுவில நிக்கிறநீ நடுவர். சரியா? இப்ப இஞ்சால நிக்கிற ரெண்டு பேரும் ராகிங் நல்லது. அது தேவையெண்டு சொல்லிப் பேச வேணும். அங்கால நிக்கிற ரெண்டு பேரும் ராக்கிங் கூடாது. அது தேவையில்லை எண்டு சொல்லிப் பேச வேணும். நடுவர் கடைசியாத் தீர்ப்புச் சொல்ல வேணும். சரியா? தொடங்குங்க.”
தட்டுத் தடுமாறி பகிடியாக நடுவராக நின்ற நான் ஆரம்பித்து வைக்க விவாதம் பகிடிவதை பற்றிய பயம் மறந்து சீரியாகச் செல்லத் தொடங்கியது. ஒவ்வொருவர் பார்வையிலும் ராக்கிங்கின் அனுகூலங்களும் பிரதிகூலங்களும் வெளிவரலாயின. உடல்வதை (physical & chemical) தவிர்த்து ஏனையவற்றை ஏற்றுக் கொள்வதில் யாருமே முரண்பட்டிருக்கவில்லை. அன்ரி ராக்கராக போவதில் யாருக்கும் உடன்பாடும் இருக்கவில்லை. எல்லோருமே ஒரே சமூகமாக இருந்து பல்கலைக்கழக வாழ்க்கையை அனுபவிக்க விரும்பினார்கள். விவாதம் முடிவின்றித் தொடரவே மீண்டும் பாகம் இரண்டு அடுத்தவாரம் தொடரும் என்று அறிவிப்பாளர் பாணியில் சொல்லிவிட்டு எங்களை அவர்கள் இடத்தினின்றும் விரட்டி விட்டார்கள். அதன் பின்னர் அவர்கள் யாரையும் காணவும் கிடைக்கவில்லை.

அது 26 October 1997, ஞாயிற்றுக்கிழமை இரவு. அக்பர் விடுதியில் இரவுணவினை அருந்திக்கொண்டிருக்கையில் அந்தச்சேதி வந்தது. வரப்பிரகாஷ் மரணித்துவிட்டான். சிரேஷ்ட மாணவர்கள், கனிஷ்ட மாணவர்கள் என்கின்ற வேறுபாடின்றி எல்லோர் முகங்களிலும் சோகம் அப்பிக்கிடந்தது. எங்களுடன் ஒருவனாகவிருந்து பல்கலைக்கழக வாழ்வினை அனுபவிக்கும் கனவுகளுடன் இருந்தவன் ஆரம்பப்படிக்கட்டிலேயே அஸ்தமித்துப்போய்விட்டான். ஏனைய சிரேஷ்ட மாணவர்களைப்போன்றே எதுவித தீய உள்நோக்கமுமின்றி அந்தப்பகிடிவதையில் ஈடுபட்ட அந்த சிரேஷ்ட மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாயிற்று. வாழ்க்கை என்பது எதிர்பாராத பல்வேறு திருப்பங்களைக் கொண்டவொரு திகில்ப் படம் போன்றது என்று கூறுவது எவ்வளவு நிதர்சனமானது என்பதை மீண்டும் அது உணர்த்திற்று.


பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11 பாகம்-12

6 comments:

 1. “எல்லாவற்றையும் நீ ஏற்றுக் கொள்பவனாயிருந்தால் இந்த உலகில் உனக்கெதிரானது என்று எதுவுமே இராது” - ஓஷோ

  என்ன முட்டாள் தனமான வாக்கியம், மீண்டும் மீண்டும் படித்தால் புரியும், புரியாவிட்டால் அதை பொன்மொழி என்றே வலசுவுடன் ஏற்றுகொள்ளவும்.


  வரப்பிரகாஷ் பிறக்கும் போதே பல வரங்களுடன் பிறந்தவன், அவனிடன் கல்வி தவிர்ந்த ஏனைய துறைகளிலும் ஆழமான ஈடுபாடு இருந்தது, கல்வியில் மட்டுமே சிறந்தவன் என்றால் அவனை Intel® Pentium® Processor என்று அடக்கிவிடலாம் ஆனால் எதிர்காலத்தில் நமது சமூகத்திற்கு celebrity ஆக வந்திருக்க கூடிய எல்லா தகுதியும் இருந்தது என்பது உண்மை

  வலசு சொல்வது போன்று "எல்லாவற்றையும் நீ ஏற்றுக் கொள்பவனாயிருந்தால் இந்த ராங்கிங் உனக்கெதிரானது என்று இராது", எனக்கே சில நேரங்களில் என்னை விட தகுதி குறைந்தவர்கள் என நான் கருதும் நபர்கள் அட்வஸ் என்ற தமது கருத்துக்களை திணிக்கும் போது அவர்கள் முகத்தில் அப்ப வேண்டும் போல இருக்கும் வேளையில்...!!!! பகிடி வதையை இவன் தவிர்த்து ஒதுக்கியது என்ன ஒரு காந்தியம்......!!!!

  எமது சமூதாயத்தில் உள்ள மூடப்பழக்கங்களில் உடனடியாக களையப்பட வேண்டியது பல்கலைகழ மாணவ/மாணவியருக்கு ஒருவிதமான சமூக அந்தஸ்து கொடுப்பது ,ஒருவன் பல்கலைக்கழகம் சென்று விட்டால் அவர்கள் செய்வதெல்லாம் சரி குறிப்பாக மருத்துவபீடம், பொறியியல் பீடம், பகிடி வதையுடன் வன்முறையும் இப்படியாக உள் வாங்கப்பட்டது தான்.

  ஆனால் வெளி நாடுகளில் வந்து பார்த்தால் தான் தெரியும் இவர்களது பல்கலை கழங்கள் உலத்தர வரிசையில் எந்த இடத்தில் உள்ளது என்று, அதை மெய்பிப்பது போன்றே இதுவரை ஒரு மாண மாணவியரோ நேபல் பரிசை தட்டி செல்ல வில்லை அல்லது குறிப்பிடத்தக்க

  சாதனைகள் எதுவுமே செய்ய வில்லை....!! பிறகேன் இந்த வெட்டி பந்தா...!!!! இப்போ நமக்கு தேவை International Celebrities எந்த துறையில் ஆவது. முடியுமா.....????

  அன்புடன் ஆரூரன்

  ReplyDelete
 2. குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் குயவர்களுக்கு ஓர் நெத்தியடி ****************

  ReplyDelete
 3. பகிடி வதை....இது ஒரு சமூக வியாதி...இது தொடர்பாக கிடுகுவேலியும் பதிந்துள்ளது....தாங்களும் அதில் பின்னூட்டம் இட்டுள்ளீர்கள்..!
  http://kidukuveli.blogspot.com/2009/08/blog-post_31.html

  ReplyDelete
 4. உண்மை தான் எங்கள் பல்கலை கழங்களில் ஆராச்சிக்களுக்கான வாய்ப்புகள் குறைவு, அத்துடன் மாணவ மணவியர் தமது உச்ச வரம்பு கறுப்பு கோட் அணிந்து குஞ்சம் அணிந்த தொப்பி மாட்டி அதை பல்வேறு கோணங்களில் படம் எடுத்து வீட்டில் மாட்டி விடுவதோடு எல்லாம் முடிந்தது என்று நினைக்கிறார்கள் பெற்றோர்களும் இதில் அடக்கம்.

  இது வசதி குறைவு என்று வைத்துக் கொண்டால், வெளி நாடுகளில் பிறந்து வளர்ந்தவர்கள், தமது உயர்கல்வியை சிறந்த பல்கலைகழகஙகளில் முடித்து பின் அதே மாதிரி கறுப்பு கோட் ....... பின் நல்ல வேலை வாய்ப்பை பெற்று அதிக சம்பளம் வாங்கி, வீடு வாங்கி, கார் வாங்கி மற்றவருக்கு பந்தா காண்பித்து ஒரு வித சுய நலத்தோடு வாழ்கை முடிகிறது.

  உலக கண்டுபிடிப்புகளில் பங்கெடுக்க இவர்களுக்கு தில் இல்லையா..??? அல்லது நேரமில்லாது மாதிரி நடிக்கிறார்களா...???அல்லது எல்லோரும் Intel® Pentium® Processor தானா..??  இதற்கு உலக அறிவு இல்லாதது தான் காரணம், யாழ் நூலகம் தீவைக்கப்படதற்கு பொங்கி எழுவார்கள்,அங்கு கிடைத்தற்கரிய புத்தகங்கள் இருந்தாகவும் அதை காடையர்கள் கொழுத்தி விட்டதால் எல்லாம் போச்சு என்று சுய புரணம் பாடுவார்கள்,

  ஆனால் இப்போதுள்ள யாழ் நூலகத்திற்கு பெரும்பாலும் செல்லும் நபர்கள் காதலை அபிருத்தி செய்ய செல்கிறார்கள்,
  தீவைக்கப்பட்டது ஒரு விபத்து என்று வைத்தாலும் இந்த இடைப்பட்ட காலங்கள் இணையத்தின் ஆதிக்கம் யாழ் நூலகத்தை நகைப்புக்கிடைம் ஆக்கியது என்பது உண்மை.....!


  வலசு இது பற்றி கட்டுரை தொடர் எழுத வேண்டும்...!!!!

  தங்கள் உண்மையுள்ள,
  பெயர் சொல்ல தயங்கும் பொறியியல் பீட மாணவன்
  2 ம் வருடம்

  ReplyDelete
 5. அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்...
  ஒரு சின்ன வேண்டு கோள் தாங்கள் புளொக்கர் தவிர்ந்த ஏனைய இடம் எங்கோ வைத்து டிசைன் செய்கிறிர்கள் என நினைக்கிறேன். சில எழுத்துக்கள் எனது அலுவலக கணணியில் தெரியவில்லை..
  mathisutha.blogspot.com

  ReplyDelete
 6. உலகதர வரிசை என்பது தவறு உலகதர வரிசை என்பது எத்தனை ஆட்கள் பல்கலை கழகத்தில் இருந்து முதுமானிப்பட்டம் பெறுகிரார்கள் என்பதும் அவர்களுடய ஆராட்ச்சிக்கட்டுரைகளின் வெளியிடுகளை பொறுத்த்த்தே கணிக்கப்படுகிறது. ஆயினும் எனது அநுபவத்தில் தொழில்நுட்ப கல்வியின் தரம் எமது( பேராதனை பல்கலை கழகம்)பல்கலைகழகத்தில் உயர்வாகவே காணப்படுகிறது

  ReplyDelete