Friday, December 5, 2014

வேரென நீயிருந்தாய்...(56)

17 ஓகஸ்ற் 2003, ஞாயிற்றுக்கிழமை. நதீஷாவிற்கு குத்து ஆரம்பித்துவிட்டிருந்தது. பக்கத்துவீட்டு அன்ரியை உதவிக்கு அழைத்தேன். வந்து பார்த்தவர் ஆஸபத்திரிக்குக்கொண்டு செல்லும்படி கூறவே, முச்சக்கர வண்டியில் கிளிநொச்சி பொன்னம்பலம் ஞாபகார்த்த வைத்தியசாலையை அடைந்தோம். நதீஷாவை வோர்ட்டினுள் அனுமதித்துவிட்டு என்னை வெளியே நிற்கும்படி கூறினார்கள். வலியில் நதீஷா அழுவதைப்பார்க்க தாங்கமுடியாமல் இருந்தது. நேரமாக நேரமாக அவள் குரலில் தெறிக்கும் வேதனையின் அளவு அதிகரித்துச் செல்ல, எனக்குள் திகில் பரவத்தொடங்கியது .உள்ளே சென்ற ஒரு தாதி அவளை ஏசத்தொடங்கினாள்

'இப்ப என்னத்துக்கு இந்தக்கத்து கத்துற? வாயாலயே பெறப் போறாய்?'

நதீஷா ஏதோ முனகுவது கேட்க, அந்தத் தாதியின் மேல் ஆத்திரமாய் வந்தது. வந்த ஆத்திரத்தில் உள்ளே சென்று, 

'கதைக்கிறத கொஞ்சம் யோசிச்சுக்கதைக்க வேணும். சரியா?'  என்றவாறே அந்தத்தாதியை முறைத்தேன்.

'ஆரு உம்மை இதுக்குள்ள விட்டது? வெளியேபோம் முதல்ல. வந்திற்றார் பெரிசா ஆட்டிக்கொண்டு விண்ணாணம் கதைக்க,.'

'வாயிருக்கு எண்டிறதுக்காக கண்டுபாட்டுக்கு கதைச்சால் நடக்கிறதே வேற' எனக் கத்த

'இப்பிடிச் சொல்லுறநீர் இதையெல்லாம் பத்துமாசத்துக்கு முதலே யோசிச்சிருக்கோணும். இப்ப சும்மா இதில நிண்டு கத்தி வேலைசெய்யிறாக்களுக்கு இடைஞ்சல் செய்யாம வெளிய போம் முதல்ல'

'ப்ளீஸ்ஸப்பா...'

குரல்கேட்டு நதீஷாவைப் பார்க்க, அவள் விழிகள் பிரச்சனை பண்ணாமல் போகுமாறு இறைஞ்சின. விட்டால் நிலைமை இன்னும் ரசபாசமாகிவிடலாம் என்று அவள் பயப்படுவது புரிந்து மௌனமாய் வெளியேறினேன். 

எல்லாமே என்னால்தான் வந்தது. கருத்தரித்திருக்கலாமென்று கருதுகின்ற அன்றைய கூடலின் முடிவில் சுவாசம் வலமிடமின்றி சமச்சீராயிருந்ததை அவதானித்ததால் உண்டான பயம், குழந்தைபற்றிய எந்தவொரு தகவல்களையும் அது பிறக்கும்வரை எங்களுக்கு தெரிவிக்கக்கூடாதென மருத்துவர்களிடம் முதலிலேயே நான் சொல்லிவிட்டிருந்தேன். அதனாலேயே நதீஷா கண்டியில் இருக்க விரும்பியிருந்தாலும், வேறு காரணங்களைச்சொல்லி பிள்ளைப்பேற்றை கிளிநொச்சியில் அமையுமாறு பார்த்துக்கொண்டேன். இப்போது அவள் அனுபவிக்கும் வேதனைகளைப் பார்க்கையில் என்மேலேயே எனக்கு கோபம்கோபமா வந்தது. இவ்வாறனவொரு தவறு மீண்டும் நிகழ்ந்துவிடக்கூடாதென்ற எண்ணம் உண்டானது. அது பெண்களின் பிரசவநேரத்து சபதம் போல் அமையக்கூடாதென்பதற்காக உடனடியாகவே வெளிநோயாளர் பிரிவிலிருந்த வைத்தியரை அணுகி எனக்கு வாசெக்டமி செய்யும்படி வேண்டினேன். சிரித்தவர்,

'இதுக்கெல்லாம் எத்தனையோ ரெம்பறறி மெதேட்ஸ்; இருக்கு. நீங்க ஏன் பேர்மனெற் மெதேட்டுக்கு இப்ப போறீங்க? இதெல்லாம் நாலைஞ்சு பிள்ளைப்பெத்தவைக்குத்தான் செய்யிறது. அந்த நேர்ஸ் சும்மா அப்பிடித்தான் சத்தம் போடுவா. இல்லாட்டி எல்லாரும் கத்திக் கொண்டிருப்பினமெண்டு. மற்றம்படிக்கு அது அருமையான மனிசி. பேஷன்ற்சை அந்தமாதிரிப் பாத்துக்கொள்ளும்'

அதற்குள் நதீஷாவின் வீரிட்ட ஓலம் கேட்டது. உடனேயே வைத்தியரிடமிருந்து விடைபெற்று நெஞ்சு படபடக்க பிரசவவிடுதியனைநோக்கி விரைய, மறுபடியும் நதீஷாவின் வீரிட்ட ஓலம். உடல் நடுங்கத் தொடங்கியது. எப்படித்தான் பிரவசவிடுதியனை அடைந்தேனோ தெரியாது. உள்ளே கதவு சாத்தப்பட்டிருக்க, வெளியிலிருந்த வாங்கில் அமர்ந்து கொண்டேன். நெஞ்சுக்குள் பல்வேறு எண்ணங்களும் ஓடலாயிற்று. ஒவ்வொரு பிள்ளைப்பேறும் பெண்ணிற்கு மறுபிறப்பென்பார்கள். இப்போது நதிஷாவின் எந்தவொரு சத்தத்தையும் கேட்கமுடியவில்லை. அவளுக்கு ஏதேனும் ஆகியிருக்ககுமோ? உலகத்திலுள்ள அத்தனை கடவுளர்களையும் பிரார்த்திக்கத் தொடங்கினேன்.

'ஜெயந்தன் எண்டிறது ஆரு?'

குரல்கேட்டு திடுக்கிட்டேன். முன்னர் ஏசிய தாதி வெளியே வந்து நின்றாள். எழுந்தேன்.

'ஓ! நீரா? போம் போய் உள்ளுக்க பாரும்'

ஆச்சரியமாயிருந்தது. சிலமணிநேரங்களின் முன்தான் அப்படிச் சண்டை போட்டடோம். அதனால் அவளுக்கு கட்டாயம் நதீஷாவையும் என்னையும் தெரிந்திருக்கும். பின் எப்படி அதை மறந்திருப்பாள்? எனக்கிருந்த அவசரத்தில் மேற்கொண்டு சிந்திக்க நேரமின்றி உள்ளே விரைந்தேன். கட்டிலில் நதீஷா பலவீனமாய் சோர்ந்துபோய் கண்கள் சொருகிப் படத்திருந்தாள். அருகில் சென்று அவள் தலையைக் கோதினேன். மெல்லக் கண்விழித்தவள், என்கைகளைத் தன் கரங்களுக்குள் அடக்கிக்கொண்டாள்

'உங்கடை பிள்ளையைப் பார்த்திற்றீங்களா?' - என்றாள்

அப்போதுதான் அவள் அருகில் குழந்தையைக்காணவில்லை என்பதை உணர்ந்தேன். 

'எங்க எங்கட பிள்ளை?'

'கழுவக்கொண்டு போயிருக்கினம். இப்ப கொண்டுவந்திருவினம்' - என்றாள் உள்ளே வந்த அந்தத்தாதி.

'எங்க கற்கண்டு ரொபியொண்டும் எங்களுக்கில்லையா? நல்ல அப்பாதான்' என்றாள் தொடர்ந்து.

'கற்கண்டா? ரொபியா?' பதைபதைப்புடன் கேட்டேன்.

'வரும்தானே. பாரும்' என்றவாறே அவள் தன் வேலையில் முழ்கினாள்,

வேறிரு தாதியர்கள் கைகளில் குழந்தைகளுடன் எங்களை நெருங்கினர்.

'கொண்கிராயுலேஷன்ஸ் உங்களுக்கு ரெட்டைப்பிள்ளைகள் பிறந்திருக்கினம். கற்கண்டும் ரொபியும் காணாது. எங்களுக்கு நீங்க ஸ்பெஷல் ட்ரீட் தரவேணும்'

நெஞ்சுக்குள் ஏதோ வெடிக்க, தங்யூ, தங்யூ சோமச்சடி என் பொண்டாட்டி! . ஐ லவ்யூடி குட்டீம்மா!!!  

என்னையறியாமலேயே கண்களிலிருந்தும் தாரைதாரையாய் கண்ணீரருவிகள் பெருக்கெடுக்கத்தொடங்கின.
பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11 பாகம்-12 பாகம்-13 பாகம்-14 பாகம்-15 பாகம்-16 பாகம்-17 பாகம்-18 பாகம்-19 பாகம்-20 பாகம்-21 பாகம்-22 பாகம்-23 பாகம்-24 பாகம்-25 பாகம்-26 பாகம்-27 பாகம்-28 பாகம்-29 பாகம்-30 பாகம்-31 பாகம்-32 பாகம்-33 பாகம்-34 பாகம்-35 பாகம்-36 பாகம்-37 பாகம்-38 பாகம்-39 பாகம்-40 பாகம்-41 பாகம்-42 பாகம்-43 பாகம்-44 பாகம்-45 பாகம்-46 பாகம்-47 பாகம்-48 பாகம்-49 பாகம்-50 பாகம்-51 பாகம்-52 பாகம்-53 பாகம்-54 பாகம்-55