Saturday, November 20, 2010

வேரென நீயிருந்தாய்...(17)

பொறியியற் கற்கை நெறியின் முதலாண்டுத் தேர்விற்கான கற்கை விடுமுறையின் இறுதி நாள். மாலை மங்கி இருள் கவியத் தொடங்கியிருந்தது. தமிழ் சிங்கள வேறுபாடின்றி சிரேஷ்ட மாணவர்கள் அனைவரும் முதலாண்டு மாணவர்கள் எல்லோரினதும் அறைகளுக்கு வந்து தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க ஆரம்பித்திருந்தார்கள். பல்கலைக்கழக வாழ்வின் முதல் பரீட்சை. எமக்கான துறையினைத் தீர்மானிக்கப் போவதும் இந்தப் பரீட்சையின் பெறுபேறுகள் தான். அதுவும் ஆங்கில மொழியில். மனதுக்குள் ஏற்கனவே உருவாகியிருந்த பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியிருந்தது.

எப்படி ஆரம்பித்து எப்படி முடிந்தது என்பதை உணர்வதற்குள் காலம் கடுகதி வேகத்தில் நாட்களை ஓட்டி விட்டிருந்தது. மழை விட்டாலும் தூவானம் விடாது என்பது போல் பரீட்சை முடிந்து விட்டிருந்தாலும் Drawing corrections சமர்ப்பிக்கப்பட வேண்டியிருந்தது. அந்த இடைவெளிக்குள் அவசரஅவசரமாக தமிழ்ச்சங்கமும் சங்கீத நாட்டிய சங்கமும் இணைந்து எமது சமாந்தர பிரிவைச் சேர்ந்த அனைத்துப் பீட மாணவர்களுக்குமான வரவேற்பு விழாவினை புதுவசந்தம் என்கின்ற பெயரில் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஊருக்கு சீக்கிரமே போகவேண்டும் என்கின்ற ஆவலில் என்னுடைய Drawing correction-களை இரவு முழுதும் கண்விழித்து காலையிலேயே முடித்து மதியமளவில் சமர்ப்பித்ததில் மனம் நிம்மதியடைந்திருந்தது. விமானப் பயண அநுமதி வேண்டி ஒரு மாதத்திற்கு முதலிலேயே யாழ்ப்பாண மாணவர்கள் எல்லோரும் ஒன்றாக பாதுகாப்பமைச்சிடம் விண்ணப்பித்திருந்தாலும் எங்களுக்கான அனுமதிகள் இன்னமும் வந்து சேர்ந்திருக்கவில்லை.

பெரும்பாலான தமிழ் மாணவர்களின் அறைகளிலிருந்து “கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு...” உரத்த சத்தத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது. அப்போது தான் ஜீன்ஸ் திரைப்படத்தின் திரையிசைப்பாடல்கள் வெளியாகிச் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தன. எங்களுக்கும் விடுமுறைதான். அதுவும் மூன்றரைமாத விடுமுறை முதல் மூன்று மாதங்களும் NAITA-வின் Engineering Training. நல்ல வேளையாக எங்களுக்கான Training யாழ்ப்பாணத்திலேயே கிடைத்திருந்தது. ஆனாலும் எங்களுக்கோ விடுமுறை விட்டும் உடனேயே வீட்டுக்குச் செல்ல முடியாத நிலை. நாடிருந்த நிலையில் வேறுபிரதேசங்களுக்கும் செல்வதில் பல சிக்கல்கள் காணப்பட்டன. எனவே பொழுதைப் போக்குவதற்காக புதுவசந்தம் நிகழ்ச்சிக்குச் செல்வோம் என நானும் தீபனும் முடிவெடுத்து E.O.E.பெரேரா அரங்கினுள் நுழைந்தோம்.

.....
பரீட்சையில் பாஸ்பண்ணி
பாஸூக்கு அலைந்து
எத்தனையோ தடைதாண்டி
'தாண்டிக் குளம்' தாண்டி
.....

எமது சகமாணவன் ஒருவன், கவிதை என்கின்ற பெயரில் அறுத்துக் கொண்டிருந்தான். எப்படா முடிப்பான்? என்றிருந்தது. ஏதாவது நகைச்சுவை நாடகங்கள் இருந்தால் நன்றாயிருக்கும் என்ற எண்ணம் தோன்றியது. அப்படியான அறிகுறி எதுவுமே தெரியவில்லை. ஏதோவொரு பீடத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருந்தனர். பெண்பாத்திரம் ஒன்று திரைக்கு வந்ததும் விசில் பறந்தது. ஏனோ அங்கிருக்கப் பிடிக்கவில்லை ஆயினும் தீபனின் இரசனையைக் கலைக்க விரும்பாததால் அமைதியாயிருந்தேன். சிற்றுண்டியும் குளிர்பானமும் வரவே எடுத்து அருந்திக் கொண்டோம்.

“ஜெயந்தன்! வந்த வேலை முடிஞ்சுது தானே. அப்ப இனி நாங்க வெளிக்கிடுவம்”

'அடப்பாவி! இவன் ஏதோ நாடகத்தை ரசித்துப் பார்க்கிறான் என்று நினைத்தால்...'

“அப்ப CC-க்க போவமாடா? இப்ப போனா ஒருத்தரும் பெரிசா இருக்கமாட்டாங்கள். இன்ரர்நெற் பார்க்கலாம்” தீபனை அழைத்தேன். அப்போதெல்லாம் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்திற்குள் அமைந்திருந்த Computer Center-இல் 6 கணினிகளில் மட்டுமே இணைய இணைப்பு கொடுக்கப் பட்டிருந்தது. பகல் வேளைகளில் அவற்றையெல்லாம் சிரேஷ்ட மாணவர்களுக்கே ஒதுக்கியிருந்தார்கள். எனவே மாலை நான்கு மணிக்குப் பிறகே நாங்கள் CC-க்குள் நுழைய முடியும். அப்படி நுழைந்தாலும் இணைய இணைப்புள்ள கணினிகள் கிடைப்பது அருமை. அதுவும் 32MB RAM கொண்ட அந்தக் கணினிகளின் வேகத்தைச் சொல்லிப் பிரயோசனம் இல்லை.

CC-க்குள் நுழைகையில் அதைப்பூட்டிக் கொண்டிருந்தார்கள்.

“இதுவும் சரிவரேல்லை. ம்ம்... ஆ! பெராவில கார்ணிவெல் நடக்குதடாப்பா! அங்க போய்ப்பாப்பம் வாடா”

Elect lab இற்கும் car park இற்கும் இடையே அமைந்திருந்த பாதையினுாடே நடந்து பனிதெனியாவுக்குள் இறங்கி பேரூந்தினைப் பிடித்தோம். கார்ணிவெல் களைகட்டியிருந்தது. கிணற்றுக்குள் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓடுவதை இரசித்துவிட்டு வெளியே வர,

“ஹேய்!”

எங்கேயோ கேட்ட குரலாக இருக்கவே திருப்பினேன். நதீஷா வேறொரு பெண்ணுடன் நின்றிருந்தாள்.


“When are you going to your hometown?”

“We are waiting for the MOD clearence”

“Oh! Then have you submitted the drawing corrections? I've submitted them this evening."

“Yes! I've submitted before the lunch time.”

“Then how was the exam?”

“just...”

“Tomorrow if you are free, then you can visit my home. It is just one killometer from the Katugastota bridge”திரும்பித் தீபனைப் பார்த்தேன். வேறெங்கோ பாரத்துக் கொண்டிருப்பதாய் பவ்லா காட்டினான். இவன் எப்பவுமே இப்படித்தான். எதுவுமே தெரியாத அப்பாவிப் பிள்ளையாட்டம் பாவனை செய்துவிட்டு பொறுத்த இடங்களில் போட்டுக் குடுப்பவன்.

“Hey! You can also visit to my place.”

அவள் தீபனையும் அழைத்தது நிம்மதியாய் இருந்தது. இனி இவர் இதைப் போட்டுக்கொடுக்கேலாது. அப்பிடிச் செய்தால் அவருக்கும் சேர்த்துத்தான் நோட்டீஸ் வரும்.

“Sure! give me your address, we will come tomorrow for lunch.”

தனது வீட்டு முகவரியையும் எடுக்க வேண்டிய பேரூந்து மற்றும் இறங்க வேண்டிய தரிப்பிடம் என்பவற்றையும் விபரமாகக் கூறிவிட்டு விடைபெற்றாள்.

“என்னடா? உண்மையா நாளைக்குப் போகப் போறியா?” என்னால் தீபனைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

“ரெண்டு பேரும்தான் போறம்.”

“பிறகு லெக்சர்கோலில நோட்டீஸ் விடுவாங்களடா”

“அம்மாண நீயொரு லெப்பையடா. இன்னும் மூண்டரை மாசத்துக்குப் பிறகுதான் இனி எங்களுக்கு கம்பஸ். அதுக்குள்ள இதையெல்லாம் மறந்து போயிருவாங்கள். இல்லாட்டியும் நீயும் நானும் சொல்லாட்டி எங்கட பெடியளுக்கு நாங்க போனது எப்பிடித் தெரியவரும்?”

மறுநாள் மதியம் கட்டுகஸ்தோட்டையில் நதீஷாவின் வீட்டை அடைந்திருந்தோம். ஓரளவிற்கு விசாலமான வசதியான வீடு. வீட்டினுள்ளே குளுமையாக இருந்தது. வீடு பளிச்சென்று துப்பரவாக நேர்த்தியாக அழகாக இருந்தது. தொலைக்காட்சிப் பெட்டிக்கருகில் வெண்கலத்தாலான கண்கள் மூடிய புத்தர் கருணையே உருவாகக் காட்சியளித்தார். அவருக்கு முன்னே பித்தளைத் தட்டத்தில் தண்ணீருக்குள் நித்திய கல்யாணி மலர்கள் வட்ட வடிவில் சீராக மிதந்து கொண்டிருந்தன. நேற்று கார்ணிவெல்லில் பார்த்த அந்தப் பெண்ணும் நதீஷாவுமே இருந்தார்கள்.

“Where is your parents?”
-தீபன் எப்போதுமே ஆட்களைத் தோண்டித் துருவி விடயங்களைக் கறந்து விடுவதில் வல்லவன். அதற்கு நான்கூட விதிவிலக்காக அமைய முடியவில்லை. என்னைப் பற்றிய எல்லா விடயங்களையும் அவன் என்னிடம் 'போட்டு வாங்கியிருந்தான்'.

“My mother is no more. father is working in Colombo, and my brother is a disabled and she is my brother's wife.”

“What is your father?”

“He is a police officer.”

அவளது அண்ணிக்கு நாங்கள் ஆங்கிலத்தில் உரையாடுவது புரியாமலிருந்தது. அவர் நதீஷாவிடம் ஏதோ சொல்ல, அவள் சிரித்துக் கொண்டே

“Shall we talk in Sinhale please. I understand that you don't know much, but she feels odd as she can't understand English.”

“கமன்-ன” (பரவாயில்லை) என்றான் தீபன்.

எங்கள் பேர் ஊர்களைப் பரிமாறிக் கொண்டோம். தீபனிலும் விட அவள் என்னையே அதிகம் விசாரிப்பதாய்ப் பட்டது.

“ஒயாகே தாத்தா மொனவத கரண்ணே?” (உங்கட அப்பா என்ன செய்கிறேர்?)

“நத்தியூணா” (காணாமல் போய்ற்றேர்)

“அய்? மொக்கத உணே?” (ஏன்? என்ன நடந்தது?)

விளக்கமாகச் சிங்களத்தில் சொல்லத் தெரியாததாலும் சொல்வதில் உள்ள தயக்கத்தாலும்,

“மட்ட ஹரியட்ட மதக்க-ந. கொடக் கால இசற மெயா நத்தியூணா” (எனக்கு சரியா நினைவில்ல. கன காலத்துக்கு முதலே காணாமப் போய்ற்றேர்)

“ஒயாகே கஸ்பண்ட் மொனவதக் கரண்ணே?” (உங்கட husband என்ன செய்கிறேர்)
-அவளின் வினாக்களிலிருந்து என்னை விடுவிக்க இடையில் புகுந்தான் தீபன்.

அவள் கண்களில் நீர்த்துளிகள் எட்டிப் பார்த்தன.

“எயாட்ட கொட்டி வெடி தீலா. தங் எயாட்ட மொக்குத் கரண்ட-ப” (அவருக்கு புலி சுட்டது [வெடி வைச்சிட்டுது]. அவரால இப்ப ஒண்டும் செய்யேலாது)

“அய் கொட்டி வெடி தீலா? கொகேத மேக்க உணே?” (ஏன் புலி சுட்டது? எங்க இது நடந்தது?)
-தீபன் கதையை வளர்க்க எனக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது.

“மெயா கமுதாவெட்ட வெடக்கரா. அணுபகாய் வகே வெலிஓயாவெங் பைற்-உணா நே. எத்தக்கொட்ட தமாய் மேக்க உணே. பிட்ட பஸ்ஸ, தாம மெயாட்ட மொக்குத் கரண்ட-ப” (இவர் படையில இருந்தவர். தொன்னூற்றியஞ்சில (95) மணலாறில சண்டை நடந்தது தானே. அப்பத்தான் இது நடந்தது. அதுக்குப் பிறகு இவரால ஒண்டும் செய்யேலாது)

“ஓ!”
-இருவருமே உச்சுக் கொட்டினோம்.

நடைபெறுகின்ற சண்டையில் சிங்களக் குடும்பங்களும் பாதிக்கப்படத்தான் செய்கின்றன என்பது புரிந்தது. ஆனாலும் 95 இல் எதிர்பாரத விதமாகப் பாரிய தோல்வியில் முடிவடைந்த மணலாறு இராணுவப்படைத் தொகுதிகள் மீதான தாக்குதல் சம்பவம் நினைவினில் வந்து போனது. தாக்குதலுக்காக உள்ளே புகுந்திருந்த பெருமளவிலான பெண் போராளிகள் எதிர்பாராது சுற்றிவளைக்கப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டு பின் அவர்களின் பிறப்புறுப்புக்கள் சிதைக்கப்பட்ட நிலையில் அவர்களின் வித்துடல்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரூடாக கையளிக்கப்பட்டிருந்தது. அந்தக் காலம் தமிழர்களுக்குப் போதாத காலம். 1995 ஜூலை 09 இல் ஆரம்பிக்கப்பட்ட முன்னேறிப்பாய்தல் படைநடவடிக்கையினுாடாக வலிமேற்குப் பிரதேசங்களை ஆக்கிரமித்திருந்தது. அந்த வேளையில் தான் நவாலி சென்ற். பீற்றர்ஸ் தேவாலயம் மீது மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் நூறு்றுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உடல் சிதறிப் பலியாகியிருந்தனர். வெற்றிபெற்று விட்டதான இறுமாப்பிலிருந்த சிறிலங்காப்படையினரை அதே மாதம் 14ம் திகதி புலிப்பாய்ச்சல் நடவடிக்கையினுாடாக பழைய இடங்களுக்கே திருப்பியனுப்பிய வெற்றிக்களிப்பில் தமிழர் தேசம் இருக்கையில்தான், தமிழர்படை தன் இதயபூமியில் நடாத்த இருந்த அந்தச் சண்டை பாரிய உயிர் இழப்புக்களுடன் தோல்வியைத் தழுவியிருந்தது. அது கொடுத்த தெம்பில் மீண்டும் யாழ்நகரைக் கைப்பற்றுவதற்கான சூரியக்கதிர் நடவடிக்கையினை சிறிலங்காப்படையினர் ஆரம்பித்திருந்தனர். அந்த நடவடிக்கையைில் ஈடுபட்டிருந்த சிறிலங்காப் படையினரை துடைத்தழிக்கும் நடவடிக்கையில் இறங்கிய தமிழர்படை குறுகிய கால இடைவெளியில் மீண்டுமொரு தடவை எதிர்பாராத வகையில் பாரிய உயிரிழப்பினைச் சந்தித்திருந்தது. அதன் பின்னர் தற்காப்பச் சமரில் மட்டுமே ஈடுபட்டவாறு தமிழர் படை தன் தளங்களை வன்னிக்கு நகர்த்திக் கொண்டது. 95 ஓகஸ்ரின் இறுதியில் ஒட்டுமொத்த வலிகாமமும் வடமராட்சிக்கும் தென்மராட்சிக்கும் இடம்பெயர 95 டிசம்பர் 05ம் திகதி மனிதர்களற்ற யாழ்நகரைக் கைப்பற்றித் தனது வெற்றி விழாவினைக் கொண்டாடியிருந்தது சிங்கள தேசம்.

எங்களிடையே நிலவிய நீண்ட மௌனத்தைக் கலைத்து உணவருந்த வருமாறு அழைத்தாள் நதீஷா.

5 comments:

 1. பிரிவினைவாதம் மற்றும் புரட்சிகள் ஏற்படாமல் இருக்க, எமது தாயகத்தில் இன ஒற்றுமையையும் சமாதானத்தையும் நிலையாக இடம்பெறச் செய்ய வேண்டும்.

  கலகப் போராட்டங்களை ஒழிப்பதை விட ஏழ்மையை ஒழிப்பதே மிகச்சிறந்து என நான் நம்புகிறேன். ஆசியாவின் உன்னத நாடாக எமது தாயகமான இலங்கையை உயர்த்துவதற்கு, வலசு போன்றவர்கள் வெளி நாடுகளுக்கு சேவை செய்யாமல் தாய் நாடு திரும்ப வேண்டும்


  குறிப்பு: இங்கே நதிஷா வேற காத்து நிற்கின்றார் வந்து கலக்கவும் எல்லாத்தையும் நான் பார்த்து கொள்கிறேன்..

  ரசனையுடன் ராஜபக்ஷே.

  ReplyDelete
 2. பரீட்சையில் பாஸ்பண்ணி
  பாஸூக்கு அலைந்து
  எத்தனையோ தடைதாண்டி
  'தாண்டிக் குளம்' தாண்டி என்னடா பிரியோசனம்.....??

  ஜெயந்தன்: நாம் இவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தியில் படித்து பல்கலைகழகம் புகுந்தது(இமாயல சாதனை) நதிஷாவிற்கு தெரிய வாய்பில்லை நமது கஷ்ட நஷ்டங்களை சிங்களத்தில் கவிதை பாடு அப்போது தான் sympathy create பண்ணி அவளை கவர முடியும்.

  ReplyDelete
 3. அன்பே ஜெயந்தன்.
  நீயும் உனது காதலை எமது வீட்டில் நீயே போட்டுடைப்பாய் என்று கடந்த 13 வருடமாய் உன்னை எனது வீட்டிற்கு சாப்பாட்டிற்கு கூப்பிடுகிறேன். ஆனால் நீயும் வந்து வயிறு முட்ட சாப்பிட்டுட்டு எஸ் ஆகீடுகிறாய். பஸ் ரிக்கட் எடுப்பதற்கு உன்னோட இன்னுமொரு அல்லக்கையையும் அழைத்துவருகிறாய். உனக்கு வடிச்சுக்கொட்டியே தனக்கு தலை நரைச்சுட்டதாய் அண்ணி சொல்கிறார். அடுத்தமுறை வீட்டுக்கு வரேக்கை மரியாதையாக விஷயத்தை ஓப்பின் பண்ணு. இல்லாட்டி தீபனிடம் உன்னுடைய யாழ்ப்பாண விலாசம் பெற்று உங்க வீட்டிற்கு நாங்கள் எல்லம் குடும்பமாய் போய் சம்மந்தம் பேசுகிற சாக்கில் நீ எங்கள் வீட்டில் சாப்பிட்டதை வட்டியேடு சாப்பிடுவேன். இது உன் மேல் சத்தியம்.
  என்றும் உன் செல்லம்
  நதி( தமிழில் பெயர்மாத்தீட்டோம்ல. இனி இந்த பெயரையே பாவியுங்க டார்லிங்)

  ReplyDelete
 4. அன்பின் தமிழ் நதியே,
  நான் சாப்பாட்டு விசயத்தில் தான் அரக்கன் என்று நினைத்து கொண்டிருக்கிறாய் போலும்....!!! நான் அசைவ சாப்பாட்டு பிரியன் என்பதை இக்கடிதத்தின் மூலம் நாசுக்காக சொல்லி கொள்ள விரும்புகிறேன்

  கலவி செய்கையில் காதல் பேசி
  கனிவாய் மெலிதாய்க் கழுத்தைக் கவ்வும்
  வெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும்

  டார்லிங்
  ஜெயந்தன்

  ReplyDelete
 5. அன்பரே!
  எனக்கும் கூட உமக்கு அசைவமாய் ஆக்கிப்போட ஆசைதான். ஆனால் பாரும் உமது மாமனாரோ ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரிதான். அவரது வருமானமோ மிகவும் குறைவு. அவரது பென்சனில்தான் நாங்கள் 4 ஜீவன்கள் வாழ்கிறோம். நானும் உமக்கு வடச்சுக்கொட்ட வசதியாக வேலைக்குப்போகாமல் விட்டுவிட்டேன்.
  இப்போதய விலைவாசிக்கு உமக்கு பாற்சோறும் சம்பலும் தருவதே மிக அதிகம்.அத்தோடு அந்த உணவிற்கே நீர் மாதம் ஒரு முறை எனது வீட்டிற்கு வருகிறீர். அதுவே அசைவ உணவாகில், நினைத்துப்பார்க்க கடுப்பாக உள்ளது.
  ஆகவே 
  மிக விரைவில் 
  என்னை உம் 
  ஆத்துக்காறியாக்கும்,
  நான் வந்து
  ஆக்கிப்போடுகிறேன்
  ஆட்டுக்கறி உமக்கு.
  முக்கிய குறிப்பு
  நான் இன்னும் தமிழ் பெண் ஆகவில்லையாததால் உங்களைப்போல தமிழ் கவிதை சொல்ல முடியவில்லை.
  சந்தடி சாக்கில் உனது பற்கள் கறை படந்தது என்று சொல்லியுள்ளீர். அதற்கு காரணம் நீர்தான். உம்மையே என்று  நினைத்திருக்க யாழ்ப்பாண வெத்திலை போடுகிறேன். இனிமேல் வெத்திலையை துப்பியபின் பல் மினுக்குகிறேன். லவ் மூட் ஸ்ராட் ஆயிடிச்சு
  இப்படிக்கு
  உங்களின் தமிழ் நதி

  ReplyDelete