Wednesday, October 11, 2017

காத்திருக்கும் கண்ணகிகளும் அகலிகைகளும்


1995
தூண்டில் வீசுகின்ற
மீன்கள்!
உன் விழிகள்.
ஏற்கனவே உன் கவிதைகளெனும் தூண்டிலில் இந்த மீன் மாட்டிவிட்டதே கண்ணா? மீண்டுமெதற்காய் வலைவீசுகின்றாய்?”

செல்லமாய்ச் சிணுங்கியவாறே தன் மிதிவண்டியை நிறுத்திவிட்டு, காத்திருந்த அவன் கைவலைக்குள் விரும்பிப்போய் விழுந்தாள் அவள்.

அதென்ன கண்ணா! எப்போதுமே உனக்கென் கண்மேல்தான் கண்ணா?” செல்லமாய் ஊடினாள்

கண்கண்டார் கண்ணே கண்டாரடி கிளியே! அதற்கும் கீழே அத்துமீறினால், ஆசைகள் அவிழலாம், ஆடைகள் நழுவலாம். எம்நிலையும் வழுவலாம். ஏனடி வீண்வம்பு? கண்டுண்டிலோம் பொறுத்திருப்போம். காலம் வரும்வரை காத்திருப்போமடி

சரிசரி என் கண்ணையே நீபாரு கண்ணா. அதையே நீபாடு கண்ணா

குளம்முழுதும் ஒருமீனாய்
தளும்புமிரு குளங்கள்!
மூழ்கவா நீந்தவா?

நீ எங்கே வரச்சொன்னாலும் நான் வந்து விடுகிறேனடா கண்ணா

என்னதூஉஉஉ?”

நீதானே கண்ணா, என்னை மூழ்க வா, நீந்த வா என்று இருமுறை வரச்சொன்னாய்

ஆகா! அருமை அருமை. நான் உன் விழியாழிகளுக்குள் மூழ்கட்டுமா இல்லை நீந்தட்டுமா என்று கேட்டால், உன்நாவில் தமிழ் வந்து வளைந்து விளையாடுகிறதே என் கண்மணியே

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடுமென்றால், இந்தக் கவிமன்னன் காதலி நாவில் தமிழ் கொஞ்சம் வளையாதோ? நானும் கொஞ்சம் கவிதை சொல்லவா?”

நீயே ஒரு கவிதை இப்போ நீ ஒரு கவி தை.

உருவற்ற அநங்கனின்
கரும்பு வில்லோ? - உன்
அரும்பு மீசை?

எப்படியிருக்கிறது இக்கன்னியின் கன்னிக்கவிதை?

அஞ்சுகமே அடியென் அருஞ்சுகமே - எனைக்
கொஞ்சுவென உனைக் கெஞ்சுவனே
கண்நகைக்கும் அருங் கண்ணகியே
பெண்பகைக்கும் நீ பெருஞ்சகியே!
உன்நெஞ்சமடி அதுவென் மஞ்சமடி -நான்
உன்தஞ்சமடி நீயென் வஞ்சியடி

கொல்லாதேடா கொலைகாராஅவன் மார்பில் தலைசாய்த்து மோகமயத்தில் கிறங்கினாள். அவன் இதழ்களெனும் இருமலர்கள் அவள் விழிவண்டுகளை மொய்த்தன. அவன் நயனங்களைத் துளைக்கும் நோக்குடையவாய் துகிலுக்குள் அவள் நகில்கள். தானாகத் தாழ்ந்த விழிகளை பிடுங்கியெடுத்து சூல்கொண்ட கார்முகிலென திரண்டிருந்த அவள் கூந்தலில் சூடினான்.

அகில் மணக்குமுன் கூந்தல்
அதில் மயங்குமென் மனது
அய்யோ கொடுமையடி!
குறுநகை விழியாளே!
குறுகுறுத்த விழியாலே
எனைப் படித்தவளே!
படிக்கவா நானுமோர்
நல்லதொரு குறுந்தொகையை?

கொங்குதேர் வாழ்க்கை அம்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே (குறுந்தொகை -2)


அடுப்பில் வைத்த சிரட்டை மூசியெரிகையில் உண்டாகும் சீறுமொலியும் அதைத் தொடர்ந்தெழுந்த கூய்ய்ய்ங்ங்ங்.............. எனும் சத்தமும். கிபிர் மிகையொலி விமானங்கள் இரண்டு அருகில் எங்கோ குண்டுவீச தாழப் பறந்துவருவதை உணர்த்திற்று.

கான யானை கைவிடு பசுங்களை
மீன் எறி தூண்டிலின் நிவக்கும்..  (குறுந்தொகை -54 இல் இருந்து)

சட்டென்று பிரிந்து வீழ்ந்து நிலத்தோடு படுத்துப் பதுங்கினார்கள்.

மதயானைகள் புகுந்த மூங்கிற்காடாயானது அருகிலிருந்த நகரம். அவனும் அவளும் அவரவர்வீடு நோக்கி விரைந்தார்கள். சில வாரங்களிலேயே ஊர்முழுதுமே வேருடன் பிடுங்கி வீசப்பட்டது.


1998

யாழ்ப்பாணத்துக்கு திரும்பி வந்து ரெண்டு வருசமாச்சு. ஆராரு இப்ப எங்கெங்கை இருக்கினமோ? சும்மா அவனையே நினைச்சுக் கொண்டிருக்காம அடுத்த அலுவலைப் பார்க்கவேணும் நகி. அம்மா சொல்லுறா, கனடாவில இருக்கிற மாப்பிள்ளைக்கு, உன்ரை போட்டோவ ஆற்றையோ கலியாண வீட்டு அல்பத்தில பாத்திற்று பிடிச்சுப்போய்தான் கேட்டு வந்தவையாம். இது உனக்கு நல்ல ஒரு சான்ஸ். விட்டிராத

சும்மா லூசுத்தனமாக் கதைக்காதை

நீதான் விசரி மாதிரிக் கதைக்கிறாய். சும்மா இந்தச் செக்பொயின்ருகளுக்கையும் கேர்பியூக்களுக்கையும் (ஊரடங்குச்சட்டம்) கிடந்து கஷ்ரப்படாம அங்க கனடாக்குப் போனா எவ்வளவு சந்தோஷமா இருக்கலாம் தெரியுமா? அதுமட்டுமில்லை கொஞ்சக் காலத்திலயே உன்ரை அப்பா அம்மாவையையும் ஸ்பொன்சர் பண்ணீரலாம். அதுக்குப்பிறகு நீங்க எல்லாருமே அங்க சந்தோஷமா இருக்கலாம் தானே. இஞ்சை கிருஷாந்தி, ரஜினி ஆக்களுக்கு நடந்த கதை தெரியும் தானே. பிறகேன் யோசிக்கிறாய்”?

அந்தப் கதைகளையெல்லாம் இனி என்னோடை கதைக்காதை. எனக்கு அவனைப்பற்றி நல்லாத் தெரியும். அவன் எப்பிடியும் என்ன கொன்ராக்ற் பண்ணுவான். அதுவரைக்கும் நான் அவனுக்காகக் காத்திருப்பன்.

நீயென்ன சரியான லூசா? அவன் உயிரோட இருக்கிறானோ எண்டுகூடத் தெரியாது. அப்படி எங்கையாலும் இருந்திருந்தா உன்ரை இந்த விலாசத்துக்கு ஒருகடிதமாவது போட்டுப் பாத்திருக்கலாம் தானே?

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே - சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே. (குறுந்தொகை -3)

இதுக்குத்தான் நான் அப்பவே படிச்சுப் படிச்சுச் சொன்னனான் ஏ.எல்லில கொமர்ஸ்ஸைப் படியெண்டு. கேட்டாத்தானே. இப்பபார் ஆர்ட்ஸ் பக்கல்ரிக்குள்ள போய் அழிஞ்சுபோனதுதான் மிச்சம். வேலையும் எடுக்கேலாது...

கொமர்ஸ் படிச்சாப்போல உனக்கென்ன இப்ப அரசாங்க வேலையா கிடைச்சிருக்கு?”

அடுத்த மாதம் வாற லங்கா முடிதகப்பலில நான் கொழும்புக்குப் போயிருவன். அங்க பிறைவேற் கம்பனிகளில அரசாங்கச் சம்பளத்திலும் விட கூடச் சம்பளம். நீ சும்மா அவனையே நினைச்சுக் கொண்டு உன்ரை வாழ்க்கைய வீணாக்கிப்போடாத. அதமட்டும்தான் என்னால சொல்லேலும். நான் வெளிக்கிடுறன். எனக்கு பயண அலுவல்கள் நிறையக் கிடக்கு

அவன் வாருவானா?

கன்று முண்ணாது கலத்தினும் படாது
நல்ஆன் தீம்பால் நிலத்துஉக்கா அங்கு
எனக்கும் ஆகாது என்ஐக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என்மாமைக் கவினே. (குறுந்தொகை 27)


2004

வீட்டுக்குள்ள ஒருத்தரையும் காணேல்லை. வீடெல்லாம் திறந்து கிடக்கு, நான் சரியான விலாசத்துக்குத்தான் வந்திருக்கிறனோ எண்டும் தெரியுதில்லை. குசினிப் புகட்டுக்குள்ளால புகை வருகுது. இவள் உள்ளுக்குள்ளதான் இருக்கிறாள் போல. வீட்டுக்காரர்... வீட்டுக்காரர்....

ஆரது? நான் இஞ்ச குசினிக்குள்ள அலுவலா நிக்கிறன். நீங்க உள்ளுக்குள்ள வாங்கோ . . . அடீஇஇ நீயா! எப்பயடி கொழும்பால வந்தனீ? எப்படிப் பயணமெல்லாம்?. யாழ்ப்பாணத்திலயிருந்து கப்பலில கொழும்புக்குப் போனனீ. இப்ப பஸ்ஸில கிளிநொச்சிக்கு என்னைத்தேடி வந்திருக்கிறாய் என? என்ன மாதிரி ஓமந்தையில செக்கிங் பிரச்சினைகளொண்டும் இருக்கேல்லையா?”

அதெல்லாம் ஒண்டும் பெரிய பிரச்சனையில்லை. அதுசரி கல்லயாணமெல்லாம் முடிஞ்சுதெண்டு கேள்விப்பட்டன். எங்கை ஆளைக் காணேல்ல. ஆராள்? என்ன செய்கிறேர்? முந்தியெண்டா குசினிப்பக்கமே எட்டிப் பாக்காத நீ, இப்ப குசினிக்குள்ள அறம்புறமாச் சமைச்சுக்கொண்டு நிக்கிறாய். நான் வருவனெண்டும் உனக்குத் தெரியாது. ஆருக்கு இப்பிடி விசேசமாய்ச் சமைக்கிறாய்?”

கேள்வியெல்லாம் கேட்டு முடிஞ்சுதோ? ஏன் உனக்கு அவரைத் தெரியாதா? அவர் உயிரோட இருக்கிறேரா இல்லையோ எண்டெல்லாம் என்னை நக்கலடிச்சாய். இன்னும் கொஞ்ச நேரத்தில மத்தியானச் சாப்பாட்டுக்கு வந்திருவார். இரு சொல்லுறன் அவரிட்ட

வாவ்! உண்மையாவாடி? ஐ ஆம் சோ ஹப்பீடி. எங்கையாம் இருந்தவர்?”

அவரே வருவேர். நீ அவரிட்டையே கேட்டுக் கொள்ளு. உன்னோட கதைச்சுகதைச்சு நான் சமையலைக் கவனிக்காம விட்டிட்டன்”.

தன் சேலைத் தலைப்பால் அடுப்படியிலிருந்த சட்டியைப் பிடித்து இறக்கும் அவளைக் காண அவள் தோழிக்கு வியப்பாயிருந்தது.

என்னெடி அப்பிடி ஆவெண்டு பாக்கிறாய்?”

இல்ல முந்தியெண்டா உன்ர உடுப்பில ஒரு சின்ன ஊத்தைபட்டாக்கூட கத்திக் கூப்பாடு போடுவ. இப்ப கரிச்சட்டியையே சீலைத்தலைப்பால பிடிச்சு இறக்கிற. அதுதான் நான் பாக்கிறது கனவா இல்ல நனவா எண்டு யோசிக்கிறன்.

இல்லையடி குழம்பு நல்ல பதமா வந்திற்றுது. இதுக்குமேல வத்த விட்டா அவருக்குப் பிடிக்காது அதுதான். சீலையைப் பிறகும் தோச்சுக் கொள்ளலாம் தானே

அம்மா தாயே! உன்னை அடிச்சுக்க யாராலுமே முடியாதும்மா

அடி போடி. தமிழைப் படிக்காத உனக்கெல்லாம் இது எங்க விளங்கப்போகுது?”

முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
இனிதுஎனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே (குறுந்தொகை 167)


2017

கண்முன்னே கட்டிய காதல் கணவனைக் கைதாக்கிக் கயவர் கொண்டுசெல்ல கையறுநிலையில் கலங்கி நின்று கதறியவள் அவள். காணாமல் போனோரைக் கண்டுபிடித்துத் தருமாறு நடாத்தப்படுகின்ற எல்லாப் போராட்டங்களிலும் அவளும் கண்ணீர் உகுக்கக் கால்கள் தேயக் கலந்து கொள்கிறாள். அவனில்லா வீட்டில் அவள் நுழைய முடியாத அளவிற்கு அவன் ஞாபகங்கள் அங்கிங்கெனாது எங்கும் நீக்கமற வியாபித்துப் பரவியிருந்தன. களைத்து வந்த, அவள் தளிர் மேனி ஒரு மூலையில் குறங்கிக் கிடக்கிறது. திருமணத்தின் போது அவளைத் தழுவியவாறு நின்று அவன் எடுத்து படம் அவள் மனதை வதைக்கிறது.


விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து,
முரண் மிகு சிறப்பின் செல்வனுடன் நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி நெடிது உயிரா
மா இதழ் ஏந்திய மலிந்து வீழ் அரிப் பனி
செவ் விரல் கடைக்கண் சேர்த்தி, சில தெறியா
புலம்பொடு வதியும் நலம் கிளர் அரிவை  (நெடுநல்வாடை 161 -166)


தவமாய்த் தவமிருந்து வற்றாப்பளை கண்ணகை அம்மன் அருளால் பிறந்த பெண்ணாயிற்றே அவள். அந்தத் தெய்வத்தின் அருள்கூடவா அவளை விட்டுப் போயிற்று? கண்ணகி என்று பெயர் வைத்ததே தப்போ? சிலப்பதிகாரக் கண்ணகியின் காத்திருப்பில் கோவலன். மாதவியிடமிருந்து மீண்டு வந்தானே. சங்ககாலக் கண்ணகியின் பேகனை வம்பப் பரத்தையரிடமிருந்த மீட்டுப் பாணர்கள் கொடுத்தார்களே. இந்தக் கண்ணகியின் கண்ணாளனை வஞ்சகரிடமிருந்து யார் மீட்டுத் தருவாரோ?

..... இன்னாது
இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்
முலையகம் நனைப்ப விம்மி
குழல் இணைவதுபோல் அழுதனள் (புறநானூறு 143 இல் இருந்து)

கயவர் கொண்டு சென்ற தம் காதற்கணவர்களின் வருகைக்காய்க் காத்திருக்கும் பலநூற்றுக்கணக்கான கண்ணகிகளில் இவளும் ஒருத்தி, இவளாலும் உறங்க முடிவதில்லை.

நோமென் நெஞ்சே நோமென் நெஞ்சே
புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங்
கினிய செய்தநங் காதலர்   (குறுந்தொகை 202 இல் இருந்து)
காணாமல் ஆனதால் நோமென் நெஞ்சே

எழுந்து கால்போன போக்கிலே நடந்து போகிறாள் அப்பேதை.

ஐயோ! யாராவது அவளிடம் கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்களேன். பாதங்களைக் கொஞ்சம் பார்த்து வைக்குமாறு. இராமனுக்காய் இப்போதும் காத்திருக்கும் அகலிகைகளில் ஒருத்தி அவளை அரவணைத்துக்கொள்ளக்கூடும்.

இராமனின் பாதத் தீண்டலுக்காய்
இராப்பகலாய்க் காத்திருக்கிறார்கள்
மிதிவெடி அகலிகைகள்!

                                           *************

உசாவல்: குறுந்தொகை, புறநானூறு, நெடுநல்வாடை

படம் - இணையத்தில் பெறப்பட்டது

=================

நன்றி: தாய்வீடு (ஒக்ரோபர் 2017)

Tuesday, December 13, 2016

எண் விளையாடுந் தமிழ்!


எம்தமிழ்ப் புலவர்கள் எண்களை வைத்துத் தமிழில் எப்படியெல்லாம் விளையாடியிருக்கின்றார்கள் என்பதைப் பார்க்கும் போது வியக்காமல் இருக்கமுடியவில்லை. ஒருவகையில் இதுவும் தன் தகவல்களை பிறரறியாவண்ணம் மற்றவருக்குச் சொல்லும் ஒரு உத்தியே. அதாவது இதுவும் ஒருவகைக் குறியாக்கம் (Encryption) தான்.


விவேக சிந்தாமணியில்:

ஒருநான்கும் ஈரரையும் ஒன்றே கேளாய்
உண்மையாய் ஐயரையும் அரையும் கேட்டேன்
இருநான்கும் மூன்றுடனே ஒன்றும் சொல்லாய்
இம் மொழியைக் கேட்டபடி ஈந்தாய் ஆயின்
பெருநான்கும் அறுநான்கும் பெறுவாய் பெண்ணே
பின்னேஓர் மொழிபுகல வேண்டாம் இன்றே
சரிநான்கும் பத்தும் ஒரு பதினைந் தாலே
சகிக்க முடியாதினி என் சகியே மானே!

என்/ எண் விளக்கம்:
ஒருநான்கும் ஈரரையும் ஒன்றே ( 4 + 2 x 1/2 + 1 = 6 - இராசிகளில் ஆறாவது கன்னி) 
ஐயரையும் அரையும் (5 x 1/2 + 1/2 = 3 - வாரத்தில் மூன்றாவது நாளான செவ்வாய்) 
இருநான்கும் மூன்றுடனே ஒன்றும் (2 x 4 + 3 + 1 = 12 - பன்னிரெண்டாவது நட்சத்திரம் உத்தரம். உத்தரம் -> உத்தரவு = விடை/பதில்) 
நான்கும் அறுநான்கும் (4 + 6 x 4 = 28 - தமிழ் ஆண்டுகள் என்று சொல்லப்படுபவற்றில் 28 ஆவது ஆண்டு 'ஜெய' ஆகும்) 
சரிநான்கும் பத்தும் ஒரு பதினைந் தாலே ( 4 + 10 + 15 = 29 - தமிழ் ஆண்டுகள் என்று சொல்லப்படுபவற்றில் 28 ஆவது ஆண்டு 'மன்மத' ஆகும்)

என் விளக்கம்:
ஒருநான்கும் ஈரரையும் ஒன்றே கேளாய் - கன்னியே கேளாய்
உண்மையாய் ஐயரையும் அரையும் கேட்டேன் - உண்மையாய் உன் செவ்வாயைக் கேட்டேன்
இருநான்கும் மூன்றுடனே ஒன்றும் சொல்லாய்- பதிலைச் சொல்வாய்
இம் மொழியைக் கேட்டபடி ஈந்தாய் ஆயின் - நான் கூறியவற்றை விளங்கிக்கொண்டு எனக்கு பதில் உரைப்பாயானால்
பெருநான்கும் அறுநான்கும் பெறுவாய் பெண்ணே - ஜெயம் பெறுவாய் / வெற்றியடைவாய் பெண்ணே
பின்னேஓர் மொழிபுகல வேண்டாம் இன்றே - நான் வேறெதுவும் உனக்குச் சொல்லத் தேவையில்லை, 
சரிநான்கும் பத்தும் ஒரு பதினைந் தாலே - மன்மதத்தாலே - அதனால் உண்டான காதல் உணர்வினை/வேதனையினை
சகிக்க முடியாதினி என் சகியே மானே! - இனியும் என்னால் தாங்கமுடியாது என் தோழியே, மான் போன்றவளே

காளமேகம்:

பூநக்கி ஆறுகால், புள்ளினத்துக்கு ஒன்பதுகால்,
ஆனைக்கு கால் பதினேழ் ஆனதே. மானே கேள்!
முண்டகத்தின் மீது முழுநீலம் பூத்ததுண்டு,
கண்டதுண்டு, கேட்டதில்லை காண்! 

என்/ எண் விளக்கம்:
பூநக்கி ஆறுகால்: பூ-நக்கி - பூவினை நக்கும் வண்டு. வண்டிற்கு ஆறு கால்கள் உண்டு
புள்ளினத்துக்கு ஒன்பதுகால்: புள்ளினம் - பறவை, ஒன்பது கால் (9 x 1/4 = 2 1/4 -இரண்டேகால்) பறவைக்கு இரண்டே (தேற்று ஏகாரம்) கால்
ஆனைக்கு கால் பதினேழ் ஆனதே: ஆனை - யானை, கால் பதினேழ் (1/4 x 17 = 4 1/4 - நாலேகால்) யானைக்கு நாலே (தேற்று ஏகாரம்) கால்

ஔவையார்:

எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே – முட்டமேற்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னா யடா

என்/ எண் விளக்கம்:
எட்டேகால் லட்சணமே: தமிழ் இலக்கங்களில் 8 = 'அ', கால் (1/4) = 'வ' - எட்டேகால் = அவ, எட்டேகால் லட்சணமே = அவலட்சணமே 

Tuesday, July 7, 2015

பார்வை

வெறுமைவெள்ளைத்தாளில்
புள்ளிவைத்து
புளித்துப்போன
கேள்வியைக் கேட்ட
மனோதத்துவ நிபுணரிடம்
சலித்துக்கொண்டே சொன்னேன்
புள்ளிதான் தெரிகிறது.

உறுத்தலைப்பார்க்காமல்,
பரந்திருக்கும் வெறுமையை
பார்க்கப்பழகென்றார்

அதன்பின்னர்தான் எனக்கிப்படி!

அணுவிலும் அநேகம் வெறுமையென்றே
ஆழ்ந்துபார்க்க கறை மறைந்தது
தொடர்ந்துபார்க்க தாளும் மறைந்தது

பின்னும் பார்க்க,
பின்புலம் மறைந்து பின்னும் மறைந்து
அகிலமும் மறைந்தனைத்தும் மறைந்து

மறைந்ததெல்லாம் மறைந்து
மன்னிக்கவும்.
மறைந்ததெல்லாம் மறந்து
எல்லாம் மறந்து
மருந்தும் மறந்து

அகவைத்தியரிடம் செல்லாமல் நான்
கண்வைத்தியரிடம் சென்றிருக்க வேண்டும்

Friday, December 5, 2014

வேரென நீயிருந்தாய்...(56)

17 ஓகஸ்ற் 2003, ஞாயிற்றுக்கிழமை. நதீஷாவிற்கு குத்து ஆரம்பித்துவிட்டிருந்தது. பக்கத்துவீட்டு அன்ரியை உதவிக்கு அழைத்தேன். வந்து பார்த்தவர் ஆஸபத்திரிக்குக்கொண்டு செல்லும்படி கூறவே, முச்சக்கர வண்டியில் கிளிநொச்சி பொன்னம்பலம் ஞாபகார்த்த வைத்தியசாலையை அடைந்தோம். நதீஷாவை வோர்ட்டினுள் அனுமதித்துவிட்டு என்னை வெளியே நிற்கும்படி கூறினார்கள். வலியில் நதீஷா அழுவதைப்பார்க்க தாங்கமுடியாமல் இருந்தது. நேரமாக நேரமாக அவள் குரலில் தெறிக்கும் வேதனையின் அளவு அதிகரித்துச் செல்ல, எனக்குள் திகில் பரவத்தொடங்கியது .உள்ளே சென்ற ஒரு தாதி அவளை ஏசத்தொடங்கினாள்

'இப்ப என்னத்துக்கு இந்தக்கத்து கத்துற? வாயாலயே பெறப் போறாய்?'

நதீஷா ஏதோ முனகுவது கேட்க, அந்தத் தாதியின் மேல் ஆத்திரமாய் வந்தது. வந்த ஆத்திரத்தில் உள்ளே சென்று, 

'கதைக்கிறத கொஞ்சம் யோசிச்சுக்கதைக்க வேணும். சரியா?'  என்றவாறே அந்தத்தாதியை முறைத்தேன்.

'ஆரு உம்மை இதுக்குள்ள விட்டது? வெளியேபோம் முதல்ல. வந்திற்றார் பெரிசா ஆட்டிக்கொண்டு விண்ணாணம் கதைக்க,.'

'வாயிருக்கு எண்டிறதுக்காக கண்டுபாட்டுக்கு கதைச்சால் நடக்கிறதே வேற' எனக் கத்த

'இப்பிடிச் சொல்லுறநீர் இதையெல்லாம் பத்துமாசத்துக்கு முதலே யோசிச்சிருக்கோணும். இப்ப சும்மா இதில நிண்டு கத்தி வேலைசெய்யிறாக்களுக்கு இடைஞ்சல் செய்யாம வெளிய போம் முதல்ல'

'ப்ளீஸ்ஸப்பா...'

குரல்கேட்டு நதீஷாவைப் பார்க்க, அவள் விழிகள் பிரச்சனை பண்ணாமல் போகுமாறு இறைஞ்சின. விட்டால் நிலைமை இன்னும் ரசபாசமாகிவிடலாம் என்று அவள் பயப்படுவது புரிந்து மௌனமாய் வெளியேறினேன். 

எல்லாமே என்னால்தான் வந்தது. கருத்தரித்திருக்கலாமென்று கருதுகின்ற அன்றைய கூடலின் முடிவில் சுவாசம் வலமிடமின்றி சமச்சீராயிருந்ததை அவதானித்ததால் உண்டான பயம், குழந்தைபற்றிய எந்தவொரு தகவல்களையும் அது பிறக்கும்வரை எங்களுக்கு தெரிவிக்கக்கூடாதென மருத்துவர்களிடம் முதலிலேயே நான் சொல்லிவிட்டிருந்தேன். அதனாலேயே நதீஷா கண்டியில் இருக்க விரும்பியிருந்தாலும், வேறு காரணங்களைச்சொல்லி பிள்ளைப்பேற்றை கிளிநொச்சியில் அமையுமாறு பார்த்துக்கொண்டேன். இப்போது அவள் அனுபவிக்கும் வேதனைகளைப் பார்க்கையில் என்மேலேயே எனக்கு கோபம்கோபமா வந்தது. இவ்வாறனவொரு தவறு மீண்டும் நிகழ்ந்துவிடக்கூடாதென்ற எண்ணம் உண்டானது. அது பெண்களின் பிரசவநேரத்து சபதம் போல் அமையக்கூடாதென்பதற்காக உடனடியாகவே வெளிநோயாளர் பிரிவிலிருந்த வைத்தியரை அணுகி எனக்கு வாசெக்டமி செய்யும்படி வேண்டினேன். சிரித்தவர்,

'இதுக்கெல்லாம் எத்தனையோ ரெம்பறறி மெதேட்ஸ்; இருக்கு. நீங்க ஏன் பேர்மனெற் மெதேட்டுக்கு இப்ப போறீங்க? இதெல்லாம் நாலைஞ்சு பிள்ளைப்பெத்தவைக்குத்தான் செய்யிறது. அந்த நேர்ஸ் சும்மா அப்பிடித்தான் சத்தம் போடுவா. இல்லாட்டி எல்லாரும் கத்திக் கொண்டிருப்பினமெண்டு. மற்றம்படிக்கு அது அருமையான மனிசி. பேஷன்ற்சை அந்தமாதிரிப் பாத்துக்கொள்ளும்'

அதற்குள் நதீஷாவின் வீரிட்ட ஓலம் கேட்டது. உடனேயே வைத்தியரிடமிருந்து விடைபெற்று நெஞ்சு படபடக்க பிரசவவிடுதியனைநோக்கி விரைய, மறுபடியும் நதீஷாவின் வீரிட்ட ஓலம். உடல் நடுங்கத் தொடங்கியது. எப்படித்தான் பிரவசவிடுதியனை அடைந்தேனோ தெரியாது. உள்ளே கதவு சாத்தப்பட்டிருக்க, வெளியிலிருந்த வாங்கில் அமர்ந்து கொண்டேன். நெஞ்சுக்குள் பல்வேறு எண்ணங்களும் ஓடலாயிற்று. ஒவ்வொரு பிள்ளைப்பேறும் பெண்ணிற்கு மறுபிறப்பென்பார்கள். இப்போது நதிஷாவின் எந்தவொரு சத்தத்தையும் கேட்கமுடியவில்லை. அவளுக்கு ஏதேனும் ஆகியிருக்ககுமோ? உலகத்திலுள்ள அத்தனை கடவுளர்களையும் பிரார்த்திக்கத் தொடங்கினேன்.

'ஜெயந்தன் எண்டிறது ஆரு?'

குரல்கேட்டு திடுக்கிட்டேன். முன்னர் ஏசிய தாதி வெளியே வந்து நின்றாள். எழுந்தேன்.

'ஓ! நீரா? போம் போய் உள்ளுக்க பாரும்'

ஆச்சரியமாயிருந்தது. சிலமணிநேரங்களின் முன்தான் அப்படிச் சண்டை போட்டடோம். அதனால் அவளுக்கு கட்டாயம் நதீஷாவையும் என்னையும் தெரிந்திருக்கும். பின் எப்படி அதை மறந்திருப்பாள்? எனக்கிருந்த அவசரத்தில் மேற்கொண்டு சிந்திக்க நேரமின்றி உள்ளே விரைந்தேன். கட்டிலில் நதீஷா பலவீனமாய் சோர்ந்துபோய் கண்கள் சொருகிப் படத்திருந்தாள். அருகில் சென்று அவள் தலையைக் கோதினேன். மெல்லக் கண்விழித்தவள், என்கைகளைத் தன் கரங்களுக்குள் அடக்கிக்கொண்டாள்

'உங்கடை பிள்ளையைப் பார்த்திற்றீங்களா?' - என்றாள்

அப்போதுதான் அவள் அருகில் குழந்தையைக்காணவில்லை என்பதை உணர்ந்தேன். 

'எங்க எங்கட பிள்ளை?'

'கழுவக்கொண்டு போயிருக்கினம். இப்ப கொண்டுவந்திருவினம்' - என்றாள் உள்ளே வந்த அந்தத்தாதி.

'எங்க கற்கண்டு ரொபியொண்டும் எங்களுக்கில்லையா? நல்ல அப்பாதான்' என்றாள் தொடர்ந்து.

'கற்கண்டா? ரொபியா?' பதைபதைப்புடன் கேட்டேன்.

'வரும்தானே. பாரும்' என்றவாறே அவள் தன் வேலையில் முழ்கினாள்,

வேறிரு தாதியர்கள் கைகளில் குழந்தைகளுடன் எங்களை நெருங்கினர்.

'கொண்கிராயுலேஷன்ஸ் உங்களுக்கு ரெட்டைப்பிள்ளைகள் பிறந்திருக்கினம். கற்கண்டும் ரொபியும் காணாது. எங்களுக்கு நீங்க ஸ்பெஷல் ட்ரீட் தரவேணும்'

நெஞ்சுக்குள் ஏதோ வெடிக்க, தங்யூ, தங்யூ சோமச்சடி என் பொண்டாட்டி! . ஐ லவ்யூடி குட்டீம்மா!!!  

என்னையறியாமலேயே கண்களிலிருந்தும் தாரைதாரையாய் கண்ணீரருவிகள் பெருக்கெடுக்கத்தொடங்கின.
பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11 பாகம்-12 பாகம்-13 பாகம்-14 பாகம்-15 பாகம்-16 பாகம்-17 பாகம்-18 பாகம்-19 பாகம்-20 பாகம்-21 பாகம்-22 பாகம்-23 பாகம்-24 பாகம்-25 பாகம்-26 பாகம்-27 பாகம்-28 பாகம்-29 பாகம்-30 பாகம்-31 பாகம்-32 பாகம்-33 பாகம்-34 பாகம்-35 பாகம்-36 பாகம்-37 பாகம்-38 பாகம்-39 பாகம்-40 பாகம்-41 பாகம்-42 பாகம்-43 பாகம்-44 பாகம்-45 பாகம்-46 பாகம்-47 பாகம்-48 பாகம்-49 பாகம்-50 பாகம்-51 பாகம்-52 பாகம்-53 பாகம்-54 பாகம்-55

Tuesday, September 30, 2014

ஒரு துரோகியின் கதை

நான் உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லப் போகின்றேன். அது என்னைப் பற்றிய ரகசியம்தான் இதைப்பற்றி நீங்கள் மற்றவர்களிடம் மூச்சுக்கூட விடக்கூடாது. சரியா? 

'நீங்க ஏன் எப்பையுமே ஒருமாதிரி யோசிச்சுக் கொண்டே இருக்கிறீங்க? உங்களுக்கு அப்பிடி என்னதான் பிரச்சினை?' என்று நான் கேட்டதற்கு, இப்படித்தான் அவர் என்னிடம் தனது கதையைச் சொல்லத்தொடங்கினார்.

அது 1983ஆம் ஆண்டு. அப்பாவின் புடவை வியாபாரம் நன்றாகச் செழித்து இலாபம் கொழித்துக் கொண்டிருந்த காலப்பகுதி. நான் வைத்தியராகும் கனவுடன் ஏ.எல் பரீட்சைக்கு தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்தேன். காலம் செய்த கோலமோ காடையர் செய்த கேவலமோ அப்பாவும் புடைவைக்கடைக்குள்ளேயே சிறிலாங்கா அரசின் காடையர்களால் தீயிட்டுக் கொல்லபட்டார். நடப்பதை அறியமுடியாத நிலையில் நாங்களும் ஏனைய தமிழர்களுடன் அகதிகளாகப் பாடசாலைகளில் அடைக்கலம் புகுந்து பின் லங்காராணியில் காங்கேசன்துறைமுகத்தை வந்தடைந்தோம். இப்போது குடும்பப் பொறுப்பு என் தலையில் விழுந்தது. எனக்குப் பின்னே இரு தங்கைகள். வேலை தருவார் யாருமில்லை. யாழ்நகருக்குச் சென்று கடைகடையாய் ஏறி இறங்குகையில் தான் நல்லதம்பியாரைச் சந்தித்தேன். அவருக்கு அப்பாவைத் தெரிந்திருந்ததால் தனது புடைவைக் கடையில் நின்று வேலை பழகுமாறும் பிடித்திருந்தால் தொடர்ந்து வேலை செய்யுமாறும் கூறினார். கடவுள் இல்லையென்று யார் சொன்னது. அப்போது அவர் எனக்குக் கடவுளாகவே தெரிந்தார்.

கடையில் உண்மையாகவும் அர்ப்பணிப்புடனும் வேலைசெய்யத் தொடங்கி அவரின் நம்பிக்கைக்கும் உரியவனாகியிருக்கையில் ஒப்பறேஷன் லிபறேஷன் தோல்வியை அடுத்து இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவாகி, பின் திலீபனின் தியாகச்சாவுடன் இந்தியப்படைகள் வடக்கு கிழக்கெங்கும் ஆக்கிரமிப்புப் படையாய் மாறியது. இப்போது எங்கள் கடைக்கு இந்திய புடைவை வியாபாரிகள் நேரடியாகவே குறைந்த விலைகளில் புடைவைகளைக் கொண்டுவந்து தரத் தொடங்கினார்கள். நல்லதம்பி ஐயாவும் பேரம் பேசி வாங்கும் பொறுப்பை என்னிடமே ஒப்படைத்தார். எங்கள் கடையில் வியாபாரம் செழிக்கத் தொடங்கியது.

'நீங்க ஏன் தனியா பிஸினஸ் செய்யக் கூடாது?' இப்படித்தான் எங்களுக்கு வழமையாக புடைவைகள் கொண்டுவந்து தரும் அந்த வியாபாரி நல்லதம்பியார் இல்லாத ஒரு பொழுதில் என்னிடம் கேட்டான். அவன் கடந்த சில மாதங்களாகவே இந்தியாவிலிருந்து வரும் போது பல அன்பளிப்புப் பொருட்களை எனக்காகக் கொண்டுவந்து தருவதும் பதிலுக்கு நான் உள்ளூர் பொருட்களைக் கொடுப்பதுமாக எங்களுக்குள் வியாபாரத்தைத் தாண்டியும் உறவு பலப்படுத்தப்பட்டிருந்தது

'அவர் எனக்குக் கடவுள் மாதிரி. அவரால தான் எங்கட குடும்பம் இப்ப நல்லா இருக்கு அவருக்கு நான் துரோகம் செய்ய மாட்டன்'

'நீங்க என்ன பேசுறீங்க? இது துரோகமா? நீங்களும் முன்னேற வேணும் தானே'

'பரவாயில்லை. இவர் என்னை நல்லவே கவனிச்சுக் கொள்ளுறேர். அவர் இருக்கிற வரைக்கும் அவரை விட்டிட்டு நான் தனியாத் தொழில் தொடங்க மாட்டன்'

'உங்களைப் போல ஒரு தொழிலாளி கிடைச்சிருக்கிறதுக்கு அவர் கொடுத்து வைச்சிருக்கோணும்'

அந்தக் கொடுப்பினை நல்லதம்பியாருக்கு நீடிக்கவில்லை. சிலநாட்களின் பின் மாலையில் வீட்டுக்குச் செல்லும் வழியில் பலாலி வீதியல் விரைந்து வந்த இராணுவ வண்டியுடன் அவரது உந்துருளி மோதி அந்த இடத்திலேயே மரணத்தைத் தழுவிக் கொண்டார்.

அவரது பிள்ளைகளுக்குள் ஏற்பட்ட சொத்துப் பிரச்சனையால் கடையை விற்பதென்று முடிவாகியது. வழமை போன்று கடைக்கு புடைவை கொண்டு வந்தவனிடம் இனிக் கொண்டுவரத்தேவையில்லையென்று விசயத்தைச் சொன்னதும் அவன் கலங்கி விட்டான். 

'நீங்க என்னுடைய லோயல் கஸ்டமர். என்ரை மெயின் பிஸினஸே உங்களில தான் தங்கியிருக்கு. நீங்களும் இப்பை என்னைக் கைவிட்டிட்டா என்ரை பிஸினசும் போயிரும். நீங்க ஏன் தனிய இப்ப கடையை ஆரம்பிக்கக் கூடாது?'

'அதுக்கு என்னட்டைக் காசில்லையே'

தாடையைச் சொறிந்தவன், வின் வின் பிஸினஸ் மாதிரி நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தே இந்த பிசினசைச் செய்வம். என்ரை பேரில லீகலா எதுவும் செய்யேலாது. அதால உங்கடை பேரிலயே நீங்க கடையை வேண்டி பிஸினஸையும் றெஜிஸ்ரர் பண்ணுங்க. எனக்கு லாபத்தில பங்கு தாங்க. இதுக்கு நீங்க சரியெண்டா, இப்பையே நடக்க வேண்டிய அலுவல்களைப் பாருங்க.'

எதிர்பார்த்ததிலும் விட இலகுவாக கடையும் வியாபாரமும் எனது கைக்கு மாறியது. கடையிற்கான புதிய டிசைனிலான பெயர்ப் பலகையையும் அவனே குறைந்த செலவில் இந்தியாவிலிருந்து வருவித்திருந்தான். யாழ்நகரின் மையப் பகுதியில் யாழ் பேரூந்து நிலையத்தை நோக்கியபடியே மின்சாரநிலைய வீதியில் எங்கள் கடை ஜொலித்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுத்துக்கொண்டிருந்தது. 

அவன் யாழ்ப்பாணம் வரும் நாட்களிலெல்லாம் கடையிலேயே இரவிலும் தங்கி விடுவதால் எனக்கும் கொஞ்சம் ஓய்வு கிடைத்தது. 

இப்போது காலம் மாறியது. இந்திய இராணுவம் வெளியேறும் நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. இனி அவனால் வந்து போக முடியுமோ தெரியாது என்பதால் அவனது பங்கினை அவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதால் கடையை விற்கத் தீர்மானித்து அவனிடம் அது பற்றிச் சொன்னேன்.

'கடையை வித்துறாதீங்க சார், உங்ககிட்ட எவ்வளவு துட்டு இருக்கோ அதை மட்டும் கொடுத்திடுங்க. நீங்களும் நானும் அப்படியா பழகியிருக்கோம். நான் வரமுடியலின்னாலும் பரவால்ல. இந்தக்கடையை மட்டும் மூடிறாதீங்க. அந்த போர்டு, அது என் ஞாபகமாக எப்பவுமே இருக்கட்டும். அதைக் கழட்டிடாதீங்க சார். சரியா?' 

நட்பு சாதிமதம் மட்டுமல்ல அதுநாடு இனம் கடந்தெல்லாம் வியாபித்து வளரக்கூடியதென்பது புரிந்தது. பாரதி பாடியபடி எங்கிருந்தோ வந்தான். ஈங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன். பொதுவாக மலையாளிகளைத் தமிழ் துவேஷிகள் என்பார்கள். ஆனால் இவன் ஒரு மலையாளியாய் இருந்து கொண்டு ஒரு தமிழனான என்னை உய்வித்து விட்டிருக்கிறான்

இப்போது காலம் மாறியிருந்தது. யாழ் பேரூந்து நிலையமும் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் மாற்றப்பட்டுவிட்டிருந்தது. ஆனாலும் மாறாமல் அந்த வில்லுத்தகடு மட்டும் இந்த மின்சார நிலைய வீதியைத் தன் இரவிருப்பிடமாக மாற்றமல் வைத்திருந்தது. காலையில் தமிழீழ வானொலியில் போடப்படும் தத்துவப் பாடல்களுக்கு அபிநயம் பிடத்தபடியும் தன்பாட்டிற்குப் புலம்பிய படியும் யாழ் நகரை வலம் வந்து கொண்டிருந்தது.


ஒருநாள் மதியநேரம் அப்பாவிற்குத் திதி கொடுப்பதற்கு முனியப்பர் கோவிலுக்குச் செல்வதற்காக மூத்திர ஒழுங்கைக்குள்ளால் மிதிவண்டியினை விட்டேன். வீரசிங்கம் மண்டபம் தாண்டி முற்றவெளியை அண்மிக்கையில், அசோகா ஹோட்டலுக்குப் பின்னாலிருந்த புல்லுக்குளத்துப் பற்றைக்குள் வில்லுத்தகடு மறைந்து நிற்பது தெரிந்தது. சத்தமிட்டேன் திடுக்கிட்டுத் திரும்பியது இழித்துக் கொண்டே சாரத்தைத் தூக்கி கையால் பிடித்து ஆட்டிக் காட்டியது.

த்தூ.... முகத்தைத் திருப்பிக் கொண்டேன். அதன் பின் அதனைக் காணும் தருணங்களிலெல்லாம்  முகத்தைத் திருப்பிக் கொள்வேன். அது கடையின் முன்னே வந்து நின்று ஏதோதோ கத்தும் பின் கடை முகப்பைப் பார்த்து ஏதேதோ பிசத்தும். 

சில மாதங்களின் பின் மாத்தையா பற்றிய கதைகள் வதந்திகளாகப் பரவத் தொடங்கின. மணிக்கூட்டுக் கோபுரவீதியல் அமைந்திருந்த தையல் கடையொன்றிலிருந்து சில றோ உளவாளிகள் பிடிபட்டதாய்க் கதைத்துக் கொண்டார்கள். அப்படியானவொரு நாளில்தான் வியாபாரம் முடித்து கடை பூட்டிக்கொண்டிருந்த தருணத்தில் அவர்கள் வந்து என்னைக் கைது செய்து பங்கருக்குள் அடைத்தார்கள். பின்வந்த நாட்களில் பற்பொடி தருகையிலேயே பொழுதுகள் விடிவதை உணரக்கூடியதாகவிருந்தது. சிலமாதங்களின் பின், 

'நீங்க எங்கட மண்ணுக்குச் சொய்த துரோகத்தை மன்னிச்சு விடுறம். இனியாவது ஒழுங்கா இருங்கோ' 

- எண்டு சொல்லி சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்குக் கிட்டவா இறக்கி விட்டாங்கள். பிறகுதான் தெரிஞ்சுது யாழ்ப்பாணத்தை விட்டு எல்லாரும் இடம் பெயர்ந்திற்றினம் எண்டும் இப்ப யாழ்ப்பாணம் முழுக்க ஆமிதான் நிக்கெண்டும்.

தம்பி நீங்களே சொல்லுங்கோ நான் அப்பிடி என்ன துரோகம் செய்தனான்?

ஏனோ தெரியவில்லை. யாழ் இடப்பெயர்விற்கு சில மாதங்களின் முன்பு யாழ்நகரின் மத்தியல் அமைந்திருந்த புடைவைக்கடையொன்றின் பெயர்ப்பலகையொன்றிற்குள் பற்றரியில் இயங்கும் அதிசக்திவாய்ந்த வீடியோகமராவும் சில தொலைத் தொடர்பு சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக கதையொன்று அடிபட்டது என் நினைவினில் வந்துபோனது.

* * *

பின்குறிப்பு: 96.ல் ஊருக்குத் திரும்பியவர்களில் சிலர் இந்த வில்லுத்தகடு, இராணுவ வாகனத்தில் மிடுக்கான சீருடையுடன் திரிந்ததை கண்டதாய்ச் சொன்னார்கள்.

படம் - இணையத்தில் பெறப்பட்டது