Saturday, November 26, 2011

வேரென நீயிருந்தாய்...(43)

மறுநாள் மதிய உணவுக்காகக் கிளம்புகையில்,

“ஜேந்தன்! உங்களுக்கும் ஒரு lunch parcel கொண்டு வந்தனான். இந்தங்க இதைச் சாப்பிடுங்க. please”

'please நதிஷா! என்னை விடுங்க. நான் கடையிலயே சாப்பிடுறன்”

“ஏன்? என்னில நம்பிக்கையில்லையா? நஞ்சு கலந்து தந்திருவன் எண்டு பயப்பிடுறீங்களா?”

“நதீஷா please! சொன்னா விளங்கிக் கொள்ளுங்க. இதெல்லாம் பிறகு உங்கட life-ஐத்தான் affect பண்ணும். நான் இப்ப OK."

“நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்க. உங்களுக்கு என்னில நம்பிக்கையில்லையா? நான் உங்களுக்குக் கூடாதது செய்வன் எண்டா நினைக்கிறீங்க?”

“என்ன நீங்க கதைக்கிறீங்க? நான் எப்பையாவது அப்பிடிச் சொல்லியிருக்கிறனா? நீங்க எனக்கு எவ்வளவு help செய்திருக்கிறீங்க. நீங்க இல்லாட்டி அம்மாவின்ரை செத்தவீட்டில சரியாக் கஷ்ரப்பட்டிருப்பம். நீங்க நல்லனீங்க. கல்யாணம் கட்டப் போறனீங்க. இந்த நேரத்தில நீங்க என்னோட இப்பிடிப் பழகிறது நல்லதில்லை.”

சிரித்தாள். “அப்பிடியெண்டு ஆரு சொன்னது?”

“நான் தான் சொல்லுறன்.”

“ஏன் உங்களுக்கு என்னோட இப்பிடிப் பழகிறதுக்குப் பயமாயிருக்கா?”

“ஏன்? நான் என்னத்துக்குப் பயப்பிடவேணும்”

“இல்லை. என்னில லவ் வந்திரும் எண்டு பயப்பிடுறீங்களோ எண்டு நினைச்சன்.”

அதிர்ந்தேன்.

“என்ன நீங்க? என்ன கதைக்கிறீங்க? உங்களுக்கெல்லா wedding fix பண்ணியிருக்கு. பிறகு என்னைப் போய் இப்பிடிச் cheap-ஆ நினைக்கிறீங்களே”

“ம்ம்ம்.. sorry sorry. சும்மா joke-இற்குத்தான் அப்பிடிச் சொன்னன். அப்பிடியாவது நீங்க சிரிக்கிறீங்களா எண்டு பாப்பம் எண்டுதான். உங்களுக்கு lunch கொண்டுவாறதால எனக்கொண்டும் பிரச்சினையில்லை. நீங்க அதை வடிவா நம்பலாம். உங்களுக்கு என்னிலையும் உங்களிலையும் நம்பிக்கையிருக்கெண்டால் இப்ப சாப்பிட வாங்க இல்லாட்டிப் போய் எங்கையெண்டாலும் கடையில சாப்பிடுங்க. போங்க"

அவள் விலகிச் சிற்றுண்டிச்சாலையை நோக்கிநகர நானும் பின் தொடர்ந்தேன்.

நாட்கள் நகர்ந்தன. இப்போதெல்லாம் யாழ்ப்பாணத்திற்கான யாழ்-கண்டி A9 நெடுஞ்சாலை திறக்கப்பட்டு பகல் வேளைகளில் போக்குவரத்து சீரா நடைபெற்றுக் கொண்டிருந்ததால், அம்மாவின் அஸ்தியை வேலணை சாட்டிக் கடற்கரையில் கரைப்பதற்குத் தீர்மானித்தேன். தீபனால் வர இயலாமல் இருப்பதால். நான் மட்டுமே தனித்துப் பயணாமாவதெனத் தீர்மானித்திருந்தேன். பயணிப்பதற்கு இரு தினங்களே இருக்கையில்,

“ஜேந்தன்! அம்மாவின்ரை முப்பத்தொண்டு நீங்க உங்கட ஊரிலயா செய்யப் போறீங்க?”

வியப்பாயிருந்தது. இவளுக்கு எப்படி இத்தனை விபரங்களும் தெரிந்திருக்கும்.

“ஓம்! அப்பிடித்தான் யோசிச்சிருக்கிறன்.”

“நல்லது ஜேந்தன். உங்கட அம்மாவுக்கும் அதுதான் விருப்பம்”

“என்ன சொல்லுறீங்க”?

”இல்லை. எல்லாருக்கும் தாங்க தாங்க பிறந்த இடத்தில சாகத்தானே விருப்பமாயிருக்கும். உங்கட அம்மாவுக்கும் வேலணையில இருந்து சாகத்தான் விருப்பமாயிருந்திருக்கும். அதுக்குத்தான் கிடைக்கேல்லை. At least அவாவின்ரை அஸ்திகளையாவது அங்கை கொண்டுபோய்ச் செய்தா சந்தோஷப்படுவா தானே.”

ஆச்சரியமாயிருந்தது.

“இதெல்லாம் உங்களுக்கு எப்பிடித் தெரியும்?”

“உங்கட அம்மாதான் சொன்னவா.”

“உங்களுக்கு எப்பிடி அம்மாவோட பழக்கம்? நீங்க எப்ப அம்மாவோட இதெல்லாம் கதைச்சனீங்க?”

வியப்புடன் கேட்டேன். நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

“இல்லை, ஒருநாள் உங்கட வீட்ட சாப்பிட வந்திருந்தனான் தானே. அப்ப தான் சொன்னவா”

“ஓ!”

“தீபனும் உங்களோட ஊருக்கு வாறேரா?”

“இல்லை. அவனுக்கு வேலையில லீவு எடுக்கேலாதாம். நான் மட்டும் தான்.போறன்”

“எண்டைக்குப் போறீங்க?”

“நாளண்டைக்கு”

“வாற வியாழக்கிழமையா?”

“ஓம்”

“என்னத்தில போறீங்க?”

“வியாழக்கிழமை விடிய நேரத்தோட intercity bus எடுத்தா ஒன்பதரை போல வவுனியாவுக்குப் போயிரலாம். பிறகு அங்கையிருந்து ஓமந்தைக்குப் போய் அப்பிடியே யாழ்ப்பாணம் போய்ற்று பிறகு அடுத்தநாள் வேலணைக்குப் போறதுதான்.”

“அப்ப அங்க யாழ்ப்பாணத்தில எங்க தங்குவீங்க? சொந்தக்காரர் வீட்டிலயா?”

“சொந்தக்காரர் இருக்கினம் தான். ஆனா ஏன் அவைக்குக் கரைச்சல் குடுப்பான். என்ரை friend ஒருத்தன்தான் அங்கை எல்லா ஒழுங்குகளும் செய்யிறான். அவன் தன்ரை வீட்டில நிக்கச்சொல்லிச் சொன்னவன். ஆனா எனக்கு விருப்பமில்லை. அதால அங்க முண்டு நாளைக்கு வீடொண்டு எடுக்கச் சொல்லியிருக்கிறன்.”

“ஏன் நீங்க அவற்றை வீட்டில நிக்கேல்லை. மூண்டு நாளைக்கு ஆரும் வாடகைக்கு வீடு குடுப்பினமா?”

“இல்லை. எனக்கு இப்ப அம்மா செத்த தொடக்கு. அவன்ரை வீட்டுக்காரர் சரியா ஆச்சாரம் எல்லாம் பாக்கிறவை. அதுதான் அங்கை தங்கி வீயா ஏன் அவன்ரை வீட்டுக்காரருக்குப் பிரச்சனையைக் குடுப்பான்?. அதோட இப்ப யாழ்ப்பாணம் பார்க்கிறதுக்கு நிறைய சிங்கள ஆக்கள் போகத் தொடங்கியிருக்கினம். அதால இப்ப யாழ்ப்பாணத்தில கன வீடுகள் நாள் வாடகைக்கு விடப்படுகுது. அதிலதான் ஒண்டை book பண்ணச் சொன்னான்.”

“சரி அப்ப கவனமாப் போயிற்று வாங்க. இஞ்சை ஏதும் தேவையெண்டா எனக்கு கோல் பண்ணுங்க.”

* * * * *

அலைபேசியின் அலாரத்திற்கு உறக்கம் துறந்து படுக்கைய விட்டு எழுந்தேன். வியாழன் அதிகாலை 3.45. விரைவாக எழுந்து குளித்துவிடடுப் பயணப் பொதிகளுடன் குருந்துவத்தைச் சந்தியை அடைய அலைபேசி சிணுங்கியது. பார்த்தேன். நதிஷா தான். இவள் எதற்கு இந்த நேரத்தில்?

“ஜேந்தன். இண்டைக்கு நீங்க பயணமெல்லா. வெளிக்கிட்டிட்டீங்களா?”

“ஓம். .இப்ப கண்டி bus க்காக குருந்துவத்தைச் சந்தியில நிக்கிறன். அஞசே காலுக்குத்தான் வவுனியா இன்ரசிற்றி வெளிக்கிடும்.”

“சரி!. அதைக் கேக்கத்தான் எடுத்தனான். ஒருவேளை நீங்க மறந்துபோய் நித்திரை கொள்ளுறீங்களோ தெரியாதெண்டிட்டுத்தான் எடுத்தனான். அப்ப வைக்கிறன்”

அவளும் என்னுடன் கூடவே வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஒரு மனசு ஏங்கியது. நீ சரியான சுயநலவாதியடா. இன்னொரு மனசு கண்டித்தது. அவளுக்கு ஏற்கனவே திருமணம் நிச்சயமாகி அவளும் சந்தோஷமாக இருக்கிறாள். இப்போது போய் உன் சுயநலத்திற்காக அவளை இழுக்கின்றாயே. இதற்கு முதல் எத்தனைதடவைகள் அவள் உன்னை நெருங்கி வந்திருப்பாள். அப்போதெல்லாம் வேண்டாமென்றுவிட்டு இப்போதுதான் அவள் தேவைப்படுிறாளோ. அதுவும் அவளுக்கு இன்னும் கூட அக்காவைப்பற்றி எதுவும் சொல்லவில்லை. இந்த வள்ளலில... நீ கெட்டவனடா. மனசுக்குள் நடந்த போராட்டத்தை நாவலப்பிட்டியிலிருந்து வந்த bus தடைசெய்ய .bus இற்குள் ஏறினேன். கண்டியை அடைய ஐந்து மணியைத் தாண்டிவிட்டிருந்தது வவுனியா bus இற்குள் ஏறிக் கண்களால் இருக்கைகளை நோட்டமிட்டேன். ஒற்றை இருக்கை வரிசையில் மூன்றாவது இருக்கையில் பயணப்பொதியொன்று வைக்கபட்டிருந்தது. அதைத் தவிர்த்து அனேகமாக ஏனைய இருக்கைகள் பயணிகளால் நிரம்பியிருந்தது.

அப்ப இன்றைக்கு baby seat தான். வவுனியா வரை உறங்கிக்கொண்டே செல்லலாம் என்று எண்ணிவந்திருந்த மனது சலித்துக் கொண்டது மனது. சிற்றுார்தியின் உள்ளே அதன் பி்ன்புறம் நோக்கிச் செல்ல, அந்தப் பொதியைப் பின்னாலிருந்த கையொன்று தூக்கியது. அது........

அது....

அது நதிஷாவேதான். அவள் எங்கே இங்கே இந்த bus இற்குள்? ஒருவேளை என்னைப் பயணமனுப்ப வந்திருப்பாளோ?. எனக்காக இந்த அதிகாலையில் வந்து seat பிடித்திருக்கிறாள். இப்படி ஒருத்தி நண்பியாகக் கிடைக்க நான் என்ன தவம் செய்திருக்க வேண்டும்.

“good morning ஜேந்தன்”

“morning நதிஷா. Thanks."

Bus புறப்பட ஆயத்தமாகியது.

”நீங்க இறங்கேல்லயைா bus வெளிக்கிடுது?”

“இல்லை”

சொல்லிவிட்டு அவள் கண்களை மூடிக் கொண்டாள். என்ன இவள்? ஒருவேளை வழியில் இறங்கிக் கொள்ளப்போகிறாளோ? அல்லது என்னுடன் வவுனியா வரை வருவாளா? வந்தால் நன்றாகத் தானிருக்கும்.மனதுக்குள் சந்தோஷம் குடிவந்தது. திரும்பி அவளைப் பார்த்தேன். உண்மையிலேயே அவள் நித்திரையாகி விட்டிருந்தாள். அவள் முகம் எந்தவிதக் களங்கமுமற்று பிரகாசித்துக் கொண்டிருந்தது.


No comments:

Post a Comment