Thursday, April 23, 2009

கடவுளர் பற்றிய கனவிலிருப்போர்க்கு.....

இடுக்கண் களைந்தெம்
இன்னல் தீர்க்க வராத
“இரக்கமிலி”களைப்
பற்றிய கனவிலிருப்போரே!

கண்டேன்!
அந்த கடவுளரை
அண்டேன் என
நின்றவன் நான்,
விண்டேன் உம்மனக்குறைகளை.

ரொம்பப் பாவம் அவர்கள்.
அவர்தம் குறைகளை முறையிட,
ஆளின்றிய அவ(/க)தி நிலையில் அவர்கள்.

உம்குறை தீர்க்க
அவர்கட்கும் ஆசையாம்.
ஆனாலும் எல்லோர்க்கும்
வயதாகி விட்டதாம்.
அவதரித்து வருதற்கும்
அலுப்பாயிருக்கிறதாம்.

சிவனின் நெற்றிக்கண்ணில்
பூ-வளர்ந்து விட்டதாம் (catract).
அறுவைச் சிகிச்சையாலும்
அதையகற்ற முடியாதாம்.

சக்திக்கு மாதவிலக்கு நின்று
நெடுங்காலமாகி விட்டதாம்.
பேரப்பிள்ளைகள் வேண்டி
பிள்ளைகளுடன் பிரச்சனையாம்.

பிள்ளையாரால் ஒரு
பிள்ளையை உருவாக்க
தொப்பை தடையென்று
gym-இற்குப் போய் treadmill-இல் ஓடி
அதையும் உடைத்தாயிற்றாம்.

முருகனுக்கோ முதிர்ச்சியடையுமுன்பே
திருமணமாகி அதுவும்
இருமணமாகி, ஏற்பட்ட
சக்களத்திச் சண்டையினால்
உண்டான உளவியல் நெருக்கீட்டால்
பெண்டிரை அண்டவே பயமாம்.

யுகந்தோறும் அவதரித்துக்
களைத்த கண்ணனால்
அடிமுடி தேடி, பட்ட அவமானத்துடன்
நாபிக் கமலத்தில் இன்னோர்
அயனை இனிநினைக்கவே முடியாதாம்.

பிரம்மனுக்கோ
பிரணவ மந்திரமே மறந்து விட்டதாம்.
பின் எப்படி படைப்பதாம்
அதுவம் இன்னோர் கடவுளை?

ஆஞ்சநேயர் இன்னமும்
பிரமச்சரிய விரதத்தையே
பின்பற்றுகிறாராம்.

ஆதலினால்,
கடவுளர் பற்றிய
கனவினில் இருப்போரே!

உறக்கம் கலைத்து
உண்மையை உணருங்கள்.

இல்லையேல்,
“வாருங்கள் நாங்களினி
பேய்களை வழிபடுவோம்”
எனச் சிலர் உங்களை
தடம் மாற்றக்கூடும்.

நக்கிப் பிழைத்தற்கா, இல்லை
நாய் வாழ்க்கை வாழ்தற்கா
நாம் தவம் செய்தோம்?

எமக்காக இங்கே
கடவுளரும் வரப்போவதில்லை.
பேய்களும் தரப்போவதில்லை
எமக்கான வரத்தை.

Friday, April 17, 2009

வேரென நீயிருந்தாய்...(3)

க்கும்ம்ம்...க்கும்ம்ம்...க்கும்ம்ம்...
கூய்ங்.கூய்ங்.கூய்ங்.கூய்ங்.கூய்ங்.கூய்ங்.கூய்ங்.கூய்ங்.கூய்ங்.கூய்ங்........

ஆட்டிலறி எறிகணைகளும் பல்குழல் எறிகணைகளும் காதை செவிடாக்கத்தொடஙகின.

*****************

“நதீஷா, நவீன், நாவினி எல்லாரும் கெதியா பங்கருக்குள்ள போங்கோ. ஷெல்லடிக்க வெளிக்கிட்டாங்கள்.”

“நதீஷா நீர் அங்க என்ன செய்யுறீர்?”

“அடுப்பில கஞ்சியிருக்கப்பா. இன்னும் அஞ்சு நிமிசத்தில இறக்கீரலாம். நீங்க பிள்ளையளோட பங்கருக்குள்ள இருங்கோ நான் வந்திருவன்.”

“அப்பா! கிட்டவா அடிக்கிறாங்கள். அம்மாவை கெதியா வரச்சொல்லுங்கப்பா.”-நாவினி அழுதாள்.

“நீங்க ரெண்டுபேரும் உள்ளுக்குள்ளையே இருங்கோ. நவீன் குழப்படி செய்யக்கூடாது. நான் போய் அம்மாவைக் கூட்டிக்கொண்டுவாரன். நாவினி! நவீனைப் பார்த்துக் கொள்ளுங்கோ. தம்பியை வெளிய வர விடாதீங்க. சரியா”
சொல்லிவிட்டு பங்கரை விட்டு வெளியே வந்தேன்.

நாவினி யார்? நவீன் யார்?
மற்றவர்களுக்கு அவர்கள் இருவரும் எங்கள் இரட்டைப்பிள்ளைகள். நிமிடக் கணக்கில் நாவினி நவீனுக்கு அக்காவாகி விட்டாள். ஆனால் எனக்கும் நதீஷாவிற்கும் அவர்கள் பிள்ளைகள் மட்டுமா? எத்தனை பேருக்குத் தெரியும் இந்த ஜென்மாந்திரத் தொடர்பு? சொன்னாலும் அவர்களால் புரிந்து கொள்ளத்தான் முடியுமா?

க்கும்ம்...

கண்ணிமைக்கும் கணத்திற்குள் என்ன நடக்கிறது என்று புரிவதற்குள்... எங்கேயோ தூக்கிவீசப்படுகிறேன். எல்லாமே மங்கலாகி பச்சையாகி இருளாகி.....

*****************

ஐயோ! அம்மா! என்ரை ஐயோ.....நதீஈஈஈஷாஆஆஆ...

வலி உயிர் பிழிந்தது. கால்வலி மறைந்து களுத்து விண்விண்ணென வலிக்கத் தொடங்கியது. கையை அசைக்க இயலவில்லை. களுத்தைத் திருப்பக் கூட முடியில்லை. தலையை உரசிச் செல்வது போல் கிபிரின் (மிகையொலி குண்டுவீச்சு விமானம்) பேரிரைச்சல் காதைக் கிழித்தது.

“த.ண்..ணீ...” தாகம் எடுக்க முனகத் தொடங்கினேன்.

“டொக்ரர்! இஞ்ச இந்தாளுக்கு உயிர் இருக்குப்போல. அனுங்கிச் சத்தம் கேட்குது.”
-இது, இது சின்னவனின் குரல்.

“சின்னவன்! அவரைப் பார்த்தால் களுத்தில சரியான அடிபோல. ஸ்ரெச்சரக் கொண்டுவந்து ஆளத்தூக்கி மற்றக் கட்டிடத்துக்குள்ள கொண்டுபோங்கோ.”
-இது புதிய குரல். ஆம்பிள டொக்ரர். அப்ப அந்த டொக்ரர் அக்கா எங்க?

“அண்ணே! எனக்கு என்ன நடந்தது?”
ஸ்ரெச்சரில் கிடத்திய சின்னவனிடம் கேட்கிறேன்.

“ஆஸ்பத்திரிக்குள்ளயும் கிபிர்க்காரன் குண்டு போட்டுட்டான் அண்ணை.”

“அப்ப அந்த டொக்ரர் அக்கா எங்க?”

கனத்த மௌனம். சின்னவனிடமிருந்து பதில் இல்லை.

“அண்ணை அந்த டொக்ரர் அக்காவுக்கும் காயமா?”

“அந்த அக்கா வீரச்சாவடைஞ்சிற்றா அண்ணை.”

“என்ன?” அதிர்ந்தேன்.

வீரச்சாவு என்றால் அவர்...?

ஓ! அதனால் தான் அந்த இக்கட்டான வேளையில் கூட எவ்வளவு இயல்பாக பதற்றமில்லாமல் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். மற்றவர்களை பங்கருக்குள் அனுப்பிவிட்டு கடமையே கண்ணாக.... காலனுக்கும் கடமையை செய்பவர்களைக் கண்டால் மிகவும் பிடிக்கும் போல....

“அண்ணை! நீங்க யோசிக்காதீங்கோ” நீங்க நாளைக்கு வரைக்கும் தாக்குப் பிடிச்சிட்டியள் எண்டால் பிறகு கப்பலில ஏறிரலாம்.”

இழப்புகள் வாடிக்கையாகிப் போனதால் சில நிமிடங்களிலேயே, ஏற்படுகின்ற இழப்புகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் சின்னவனுக்கும் வந்திருக்கிறது. இந்த ஏற்றுக் கொள்ளலைப் பற்றித் தானே பெரியபெரிய ஞானிகளெல்லாம் போதிக்கிறார்கள். காலம் களிம்பு தடவியாற்றாத காயமும் உண்டோ? ஆனால் பெரும்பாலானவர்கள் தமக்கு நேர்ந்த இழப்புகளை ஏற்றுக்கொள்ளமுடியாமல் இருப்பதால் அல்லவா பெரும் மனஉளைச்சல்களுக்கு ஆளாகின்றார்கள்.

சொல்ல வார்த்தையேதும் இல்லாததால் மௌனமானேன்.

“அண்ணை! நீங்க கடுமையா யோசிக்கிறீங்க போல. ஒண்டுக்கும் யோசிக்காதைங்கண்ணை. நான் உங்கட அவாவ தேடிக் கூட்டிக் கொண்டுவாறன். நீங்க ரெண்டுபேரும் நாளைக்குக் கப்பலில போகலாம்.”
சொல்லிவிட்டு சின்னவன் அகன்றான்.

எல்லோரையும் ஏற்றிச் செல்லக் கப்பல் வருமா....?

********************

கப்பலில் பயணிப்பதற்காக வந்திருந்தவர்களெல்லாம் அருகருகே அமைந்திருந்த இரு வீடுகளில் தற்காலிகமாக இளைப்பாறுவதற்காய் வாகனங்களிலிருந்து இறக்கிவிடப்பட்டிருந்தார்கள். வீடுகள் மிகவும் விசாலமானவையாய் இருந்தன. நிலைகளிலிருந்த கதவுகளும் சாளரங்களும் காணாமற் போயிருந்தன. சுற்றிவரவும் பற்றைகள் பற்றிப் படர்ந்து அந்த அயல் முழுவதும் ஒரே பற்றைக்காடாய்க காட்சியளித்தது. தூரத்தில் சில இடிபாடடைந்த வீடுகளும் ஒரு கோவிலும் பாழடைந்து காணப்பட்டன. ஒரு காலத்தில் மிகவும் பரபரப்பான நகரம் கலந்த கிராமமாக இருந்த இடம் இன்று இப்படியாய் வாழ்வின் நிலையற்ற தன்மைக்கு சாட்சியாய். தூரத்துக் கடற்காற்றில் பனைவடலிகள் சலசலத்தன. தொலைதூரத்தில் உலங்குவானூர்தி ஒன்று உறுமி உறுமிச் சென்றுகொண்டிருந்தது.

“அண்ணே திருகோணமலைக்குப் போய்ச்சேர எவ்வளவு நேரம் எடுக்கும்?”
அருகிலிருந்தவரைக் கேட்டேன்.

“பின்நேரம் வெளிக்கிட்டம் எண்டால் நாளைக்கு விடியேக்க Tringo-வில நிக்கலாம்.”

“கப்பல் குலுக்குமோ அண்ணே?”

“இது பெரிய கப்பல் எண்டபடியால பெரிசாக் குலுக்காது எண்டுதான் நினைக்கிறேன்.” சொன்னவர்
“தம்பி இந்த bag-களைக் கொஞ்சம் பாத்துக் கொள்ளுங்கோ. நான் ஒருக்கா bathroom-க்குப் போய்ற்றுவாறன்.” என்றவாறே விலகினார்.

என்னுடன் ஒன்றாக வந்திருந்த மற்றைய இருவரையும் பார்க்கிறேன். பயணக்களைப்பில் தூங்கிவிழுந்து கொண்டிருந்தார்கள்.

“கட்டி ஒக்கம போலிமட்ட எண்ட.” (எல்லாரும் வரிசையி்ல் வாருங்கள்) என்ற கடற்படைச் சிப்பாயின் குரல் கேட்டு தூங்கிவழிந்து கொண்டிருந்தவர்கள் எல்லாம் தூக்கம் கலைந்து பரபரப்பாயினர்.

என்னுடன் வந்திருந்தவர்களுடன் நானும் இணைந்து கொண்டேன். ஒவ்வொருவரின் உடைமைகளும் உடலும் தீவிர சோதனைக்குப் பின்னர் மீண்டும் வேறு பேரூந்துகளில் ஏற்றப்பட்டோம். பேருந்தின் ஜன்னல்கள் எல்லாம் கறுப்பு வர்ணம் பூசப்பட்டு வெளியே பார்க்க முடியாதவாறு மறைக்கப்பட்டிருந்தன. மக்கள் மாக்களாக அடையப்பட பேரூந்து புறப்பட்டது. பத்து நிமிட பயணத்தின் பின்னர் கதவுகள் திறக்கப்பட கடற்காற்று முகத்தில் மூசியறைந்தது. கரைக்கு அண்மையில் லங்காமுதித அணைக்கப் பட்டிருக்க வந்திருந்வர்கள் தங்கள் தங்கள் கையுடைமைகளுடன் (hand-luggage) கப்பலுக்குள் ஏறிக்கொண்டிருந்தனர்.

பரந்து விரிந்திருந்த நீலக்கடலை நோக்கினேன். அமைதியான அளவான அலைகள். சற்றுத் தொலைவிலேயே இரண்டு பாரிய கப்பல்கள் ஒன்று பாதி மூழ்கியவாறும், மற்றையது 90 பாகையில் சாய்ந்து கிடையாகவும் மூன்றாம்கட்ட ஈழப்போரின் சாட்சியங்களாய் தரைதட்டிக் கிடந்தன. திடீரென எங்கிருந்தோ விரைந்த வந்த நீருந்துவிசைப் படகொன்று அவற்றின் அருகிற் செல்ல மாடப்புறாக்கூட்டம் ஒன்று விர்ரென்று ஒருமித்து சிறகடித்துப் பறந்து பின் மீண்டும் அந்தக் கப்பலுக்கே திரும்பியது.

“கட்டி ஒக்கம அத்துலட்ட யண்ட.” (எல்லாரும் உள்ளுக்குள் செல்லுங்கோ) வேறொரு கடற்படையினன் கட்டளை பிறப்பிக்க கப்பலின் மேற்தட்டிலிருந்தவர்களுடன் அவசரஅவசரமா இறங்கி கப்பலின் உள்ளே சென்றேன். சிறிது நேரத்தில் கப்பல் புறப்படுவதை உணரமுடிந்தது. அதன்பின் அரைமணிநேரம் கழித்து மேற்தட்டுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

அந்திச் சூரியன் செம்மஞ்சள் நிறத்தில் தொலைதூரத்தில் கடலுக்குள் மூழ்க ஆரம்பித்திருந்தான். “...கண்டி நகரில் குளிரோ கடுமை. காங்கேசன்துறையில் வெயிலோ கொடுமை...” சின்ன வயதில் பாடப்புத்தகத்தில் படித்த பாடல் நினைவுக்கு வந்தது. கண்டி நோக்கி, எதிர்காலக் கனவுகளுடனும் பகிடிவதை (ராகிங்) பற்றிய பயங்களுடனும், எங்களுடைய பயணம் ஆரம்பித்தது. ஊரையும் உறவுகளையும் பிரியும் இதயவலியுடன் நானும் மற்றைய இருவரும் (நண்பர்களாக மாறப் போகின்றவர்கள்) கரையினை நோக்க, காங்கேசன்துறை துறைமுகம் எம்மைவிட்டு விலகிக் கொண்டிருந்தது.


(வேர் விடும்)

Saturday, April 11, 2009

கடவுள் pass-ஆ fail-ஆ?

நேற்று முன்தினம் வியாழக்கிழமை அந்தி்ப் பொழுதில் அலுவல் ஒன்றிற்காக Little India விற்கு செல்ல நேர்ந்தது. சென்ற இடத்திற்கு அண்மையில்தான் செரங்கூன் வீதியில் வீரமாகாளி அம்மன் ஆலயம் இருக்கிறது. அன்று ஏதோ விஷேசம் போல, கூட்டம் சற்றே அதிகமாய் அலைமோதியது. வழமையாக எனது நண்பனொருவனுடன் அந்த வழியால் செல்லும் போது கோவிலுக்குள்ளும் செல்வது வழக்கம். அவனது நோக்கம் பற்றி எனக்குத்
தெரியாது. ஆனால் எனது பிரதான நோக்கம் உண்பதற்கு அங்கே ஏதாவது இருக்கும் என்பதாகும். இங்கே வந்தபிறகு கோவில்களுக்கு செல்வதே இரண்டு நோக்கங்களுக்காக. ஒன்று ஊர் நண்பர்களைச் சந்திக்கலாம். மற்றது ஊர்ச் சாப்பாடு. மற்றம்படிக்கு எனக்கும் கடவுளுக்கும் (அப்படி ஒருவர் இருந்தால்) ஒட்டுமில்லை உறவுமில்லை.

அன்றைக்கும் ஒரு பிடிபிடிக்கலாம் என்ற நோக்கத்துடன் உள்ளே சென்றேன். பின்பக்கம் சென்றதும் புரிந்துவிட்டது இன்றைக்கு நல்ல வேட்டையென்று. ஆம்! எனக்கு பிடித்தமான உணவு அங்கே வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. உண்மையிலேயே மிளகு கலந்த அந்த சாதத்தின் பெயர் என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனாலும் ஈராண்டுகட்கு முன்னர் அதை முதன்முதலில் பஞ்சவடி ஆஞ்சநேயர் ஆலயத்தில் ருசித்ததில் இருந்து அந்த உணவு எனக்குப் பிடித்துக் கொண்டு விட்டது. உணவை உண்டு முடித்ததும் இன்னும் கொஞ்சம் என்றது நாக்கு, வயிறல்ல. இன்னொருமுறை எடுத்தால் மிகமிக அதிகமாகி விடும். எனவே நாக்கை கட்டுப்படுத்திக்கொண்டு முன்னால் வந்தேன்.

வள்ளி தெய்வானை சகிதமாக வெள்ளி மயிலேறி முருகப் பெருமான் உலாத்தலுக்கு ஆயத்தமாயிருந்தார். அவரைக் காவுவதற்காக நான்கு பக்கமும் தலா ஐந்து பேராக மொத்தம் இருபது பேர்.

கடவுள் இருக்கிறார் என்பது உண்மையோ பொய்யோ இருப்பதாகச் சொல்லப்படும் கடவுள்களில் எனக்குப் பிடித்த கடவுள் இந்தக் கந்தன் தான். என் பால்யவயதுச் சிநேகிதன் அவன். ஏனோ தெரியவில்லை சின்ன வயதில் அவனை எனது ஒரு நெருங்கிய சிநேகிதனாகவே நினைத்து வைத்திருந்தேன். எனக்கும் அவனுக்கும் ஏராளமான கொடுக்கல் வாங்கல்களும் அப்போதிருந்தன. அந்த நேரத்தில் ஊரில் எங்கள் வீட்டிற்கு அணமையில் அமைந்திருந்தது அவனின் ஆலயமாய் இருந்ததினாலோ அல்லது இருக்கின்றதாய்ச் சொல்லப்படுகின்ற கடவுளரிடையே அவன்தான் வயதில் குறைந்தவனாய் இருந்ததினால் ஏற்பட்ட பிரியத்தினாலோ, இல்லை நானும் அவனது பெயரைக் கொண்டிருந்ததாலோ அல்லது இவை எல்லாவற்றினாலுமாகவோ, அவனை நான் எனது சிறுபிராயத்தில் எனது ஒரு நண்பனாக வரித்துக்கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் கோவில் திருவிழா ஒவ்வொரு மாதமும் வாராதா என்கின்ற ஏக்கம் இருக்கும். சுவாமி காவுவதற்கு என்வயதொத்த நண்பர்களிடையே போட்டியிருக்கும். நாங்கள் சிறுவர்களென்பதால் சண்டேசுவரர் தான் எங்களிடம் சரணடைவார். முருகா! எப்படா நான் வளர்ந்து எப்படா உன்னைத் தூக்கிறது என்று நினைப்பேன். ஆனால் தொடர்ந்து ஏற்பட்ட தொடர்ச்சியான இடப்பெயர்வுகளும் வாசித்து உட்கொள்ளப்பட்ட கருத்துக்களும் விதண்டாவாதம் கதைப்பதனால் அறிவை வளர்த்ததாய் எண்ணி வளர்த்து வைத்திருக்கும் ஆணவமும் எங்களுக்கிடையிலான உறவினைத் துண்டித்துவிட்டிருந்தன. ஏனோ தெரியவில்லை அந்த நேரத்தில் என் சிறுவயது நினைவுக்ள மனதில் அலைமோதின. சிரித்துக் கொண்டேன்.

முருகா நீ உண்மையிலேயே இருக்கின்றாயா? அப்படியானால் ஏன் இத்தனை இடர்கள்?தேவர்கள் துயர்தீர்க்கவென்று அவதரித்ததாய்ச் சொல்லப்படுபவனே! எங்கே நீ? நெற்றிக் கண்ணிருந்து வந்தவனே! அரக்கர்களிடமிருந்து அடியவரைக் காப்பதற்காய் முப்புரங்களை எரித்ததாய்ச் சொல்லப்படும் உன் அப்பன் எங்கே? அரக்கர்களும் அந்நிய அரக்கியும் கிழக்கோட்டான்களும் குஞ்சுகுரும்பான்களுடன் என் உறவுகளை அழித்துக் கொண்டிருக்கையில் தமிழ்க்கடவுள் என்று சொல்லப்படுகின்ற நீ, அந்த அப்பாவித் தமிழரைக் காக்காமல் என்ன செய்கிறாய்? நீயெல்லாம் ஒரு கடவுள். உனக்கெல்லாம் ஒரு கோயில். என் அறியாப்பருவத்தில் உன்னைப் போய்க் காவ நினைத்தேனே. சரி நீ இருப்பது உண்மையானால் இப்போது உன்னைக் காவச் செய் பார்க்கலாம்.

பராசக்தி மைந்தனுக்குப் பரீடசையை வைத்துவிட்டு காவுபவர்களைப் பார்த்தேன். சிலர் வேட்டியுடனும் பெரும்பாலானோர் நீளக்காற்சட்டையுடனும் மேலங்கியுடனுமே இருந்தனர்.

வீதிஉலா (உள்வீதி தான்) ஆரம்பித்தது. பின்கம்பில் இரண்டாவதாக நின்றவர் எனக்கு கையசைத்து அருகில் வருமாறு அழைத்தார். அங்கு நின்ற ஐவரிலும் அவர் சற்று உயரமாக இருந்தார். அவரை வேறெங்கும் பார்த்ததாய் நினைவில்லை. இருந்தும் அருகில் சென்றேன். இதைச் சற்றுப் பிடியுங்கள் என்றவாறே என்தோளினைக் காவுகம்பின் அருகில் இழுத்துவிட்டு அவர் விலகினார். திகைப்பிலிருந்து விடுபட்டு அவரைத் தேடினேன். காணமுடியவில்லை கூட்டத்துடன் கலந்து விட்டார்.

வேலைய்யா! இது உன் வேலையா? மெய்சிலிர்க்க மயிர்ககால்கள் குத்திட்டன.
என்பக்கத்தில் நின்றவர்களில் நான் சற்று உயரமாயிருந்ததால், அதிகபாரம் என் தோள்களில். உனக்கு சவால் விட்டதற்காய் அதிகம் சுமக்க வைக்கிறாயா சுப்பிரமணியா?

வீதியுலா முடித்து வீடுவந்து சேர்ந்த போதும் நடந்ததை நம்ப மனது மறுத்தது.

முகம் அலம்புவதற்காய் குளியலறைககுச் சென்றேன். அலம்பிவிட்டு முகம் பார்க்கும் கண்ணாடியை நோக்கினேன்.

“சரியான ஈனா வாவன்னாடா நீ!” என்றது தளவாடியில் தெரிந்த எனது விம்பம்.

“ஏன்? ” என்றேன்.

“பின் எனன? உன்னை அழைத்தவனும் அதிக பாரம் தாங்கமாட்டாமல் தான்
உன்னிடம் சுமத்தியிருப்பான்.”

“பலர் நிற்க என்னை எதற்காக அழைக்க வேண்டும்?” தடுமாறினேன்.

“உன்னைப் பார்த்த உடனேயே எல்லோருக்குமே தெரிந்துவிடுமே நீயொரு இளிச்ச வாயன் என்பது.”

அப்படியென்றால் இது சும்மா ஒரு coincidence தானா?

அதுதானே கடவுள் என்று ஒன்று இருந்தால் இப்படியெல்லாம் அநியாயம் நடக்குமா? அதுவும் நச்சுவாயு அடிக்கவும் அந்த நமச்சிவாயம் பார்த்துக் கொண்டிருககுமா? ஆலகால நஞ்சருந்திய நீலகண்டன் என்றல்லவா அது அழைக்கப்படுகிறது.

Wednesday, April 8, 2009

வேரென நீயிருந்தாய்...(2)

“அண்ணை டொக்டர் சொன்னவா உங்களையும் கப்பல்ல அனுப்ப வேணுமாம். இஞ்ச வைச்சிருக்கேலாதாம். உங்களோட துணைக்கு வேணுமெண்டால் ஒராள் வரலாமாம். வாறதுக்கு ஆரும் இருக்கினமோ அண்ணை?”

“முதலில என்ர மனிசி எங்கையெண்டு சொல்லங்கண்ணே. அவளுக்கு என்ன நடந்தது?”

“அண்ணை உங்களையே தெரியாது. எப்படியண்ணை உங்கட அவாவ எனக்கு தெரியும்?”

“எனக்கும் அவளுக்கும் வேறை ஒருத்தரையும் இஞ்ச தெரியாதண்ணே.”

“நீங்க எவ்விடம் அண்ணை? உங்கட அவா எந்த ஊர்? அவாவின்ர பேர் என்ன?”

“எந்த இடத்தையெண்டண்ணே சொல்லுறது? வன்னியில எல்லா இடத்திலையும் இருந்தாச்சு.”

“இல்லையண்ணை உங்கட சொந்தக்காரர் ஆரும் இருந்தால் அவையிட்ட கேட்டுப்பார்க்கலாம். இல்லையெண்டாலும் அவையில ஒராள உங்களோட துணைக்கு அனுப்பலாம்.”

“என்ர சொந்தக்காரர் ஒருத்தரும் இஞ்ச உயிரோட இல்லை அண்ணே.”

“அப்ப அவாவின்ரை...?”

“ம்ம்ம்....அவாவுக்கும் இல்லை. நீங்க எனக்கு ஒருக்கா அவா எங்க இருக்கிறா எண்டு கண்டுபிடிச்சுச் சொல்லுவியளே?”

“எப்பிடியண்ணை கண்டுபிடிக்கிறது? எதுக்கும் அவாவின்ர பேரையும் ஊரையும் சொல்லுங்கோ. விசாரிச்சுப் பார்க்கிறன்.”

“அவவின்ர பேர் நதிஷா. ஊர்.....”

“எந்த ஊர் எண்டு சொன்னீங்களெண்டால்தான் ஆரும் ஊர்க்காரரிட்ட விசாரிக்கலாம்.”

“அவா இந்த இடம் இல்லையண்ணே.”

“அப்ப எங்க யாழ்ப்பாணமா?”

“இல்லையண்ணே. அவா வந்து... கண்டி.”

“கண்டியோ...?”

“ஓமண்ணே! கண்டியில கட்டுகஸ்தோட்டை...”

“அண்ணை கொஞ்சம் பொறுங்கோ. அவா சிங்கள ஆளா?”.

“ஓமோம். ஆனா நல்லா தமிழ் கதைப்பா.”

“அப்பிடிச் சொல்லங்கோவன். அந்தச் சிங்கள அக்காவையும் இங்கதான் அட்மிட் பண்ணியிருக்கு. ஆனா அவாவுக்கு பெரிசா காயம் இல்லையெண்டதால இண்டைக்கே விட்டிடுவினம்.”

அப்பாடா! என்ர நதிஷா இஞ்சதான் இருக்கிறாள். கடவுளே என்னைக் காப்பாத்தீற்றாய். மனம் இலேசாகியது.

“அண்ணை அந்த அக்காவை வரச் சொல்லவே?”

நதிஷா சிங்களமெண்டதும், சின்னவன் ஏதும் சொல்லுவான் என்று எதிர்பார்த்திருந்தேன். அவன் அவளை அக்கா என்று சொன்னதும் மனதுக்கு நிம்மதியாயிருந்தது. என்ன அதிசயம். எம்மிடையே எத்தனை எத்தனை உறவுகள் இருந்தன. அண்ணன், அத்தான், மாமன், மச்சான், சித்தப்பா, பெரியப்பா.....அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இன்று? எல்லா உறவுகளும் ஆறு வகைக்குள் அடங்கி விட்டனவே. வயது குறைந்தவரென்றால் தம்பி அல்லது தங்கை. ஏறத்தாழ ஒத்த வயதென்றால் அண்ணே அல்லது அக்கா, வயதானவர்களென்றால் ஐயா அல்லது அம்மா. துன்பம் சூழ்ந்த வேளையில், சாதி மத பேதமின்றி எல்லோருமே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாய்....

“சின்னவன்! அந்த அண்ணையிட்ட விபரம் எடுத்திட்டீங்களே? அவர நாளைக்கு வாற கப்பலில அனுப்ப வேணும்.”
இது முதலில பனடோல் குடுக்கச் சொன்ன அக்கா. பார்க்க முடியாவிட்டாலும் குரலை அடையாளம் உணரமுடிந்தது.

“அண்ணை அப்ப நாளைக்கு அக்காவையும் உங்களோட கப்பலில அனுப்புவம் என?”

“ஓமோம். அவாவை ஒருக்கா இஞ்ச வரச்சொல்லுறீங்களா?”

தூரத்தில் எங்கோ விசில் சத்தம்.

“சின்னவன்!”அந்த டொக்ரரின் பதற்றமான குரல்

“விசில் சத்தம் கேட்டதல்லா? கிபிர் வெளிக்கிட்டிட்டுது போல. இனி ஷெல்லும் மல்ரிபரலும் அடிக்கத் தொடங்கீருவாங்கள். உடனே ஏலக் கூடிய ஆக்களை பங்கருக்குள்ள கொண்டு போங்கோ. போங்கோ இஞ்ச நிக்காதீங்கோ.”

”டொக்ரர்! அப்ப இவரை என்ன செய்யிறது?”

”அவரோடை நிண்டால் நாளைக்கு சிலவேளை உம்மையும் கப்பலில தான் அனுப்ப வேண்டியிருக்கும். உதிலை நிண்டு நீர் ஒண்டுஞ் செய்யேலாது. போம் போம்.”
டொக்ரர் சின்னவனை விரட்டினார்.

“அப்ப நீங்க டொக்ரர்?”

“எனக்கு இப்ப ஒரு கேஸ் வந்திருக்கு. 3 மாதப் பிள்ளையொண்டின்ர ஒருகை ஷெல்லடியில துண்டாகிற்றுதாம். இப்ப தான் கொண்டுவந்திருக்கினம். நாளைக்கு அவையையும் கப்பலில அனுப்பவேணும். கதைச்சு நேரத்தை வீணாக்காமல் பங்கருக்குள்ள போங்கோ சின்னவன்.”

“அணணை ஒண்டுக்கும் பயப்படாதைங்கோ!. நான் இஞ்சதான் பக்கத்தறைக்குள்ள தான் நிப்பன். ஷெல்விழுந்தா எல்லாரும் ஒண்டா மேல போவம்.”
சொல்லிவிட்டு நகர்ந்தார் அந்த பெண் டொக்ரர். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் எப்படித்தான் அவரால் இப்படி இயல்பாகப் பேச முடிகிறதோ?உயிர்ப்பயமென்பதே இவர்களுக்குக் கிடையாதா?

இவள் நதிஷாவும் இப்பிடித்தான். ச்சே! அவளை வரச் சொல்லுவமெண்டால், அதுக்குள்ள ஷெல்லடிக்கத் தொடங்கீற்றாங்கள். நாளைக்கு கப்பலில போறதெண்டால்....
(வேர் விடும்)

Monday, April 6, 2009

பார்த்தீபன் சபதம்

பதின்மூன்றாம்நாள் குருஷேத்திரம், குருதியாறு பொங்கிக் கொப்பளித்துப் பாய்ந்து கொண்டிருக்கையில, மாலை மங்கி இருள் கவியத் தொடங்கியிருந்தது. அன்றைய போரின் முடிவிற்கான சங்கொலிகள் முழங்கவே வீரர்கள் தத்தம் பாசறை நோக்கித் திரும்பத் தொடங்கியிருந்தனர்.

“கண்ணா! ஏன் எமது பாசறை என்றுமில்லாதவாறு இன்று அமைதியாய் இருக்கிறது?”

வில் வளைத்து அம்பு தொடுத்துக் களைத்திருந்த காண்டீபன் வினாத் தொடுத்தான்.

எல்லாமே அறிந்திருந்த மாதவன், தன் மருகன், உத்தரை மணாளன் உதவி கேட்டு சங்கொலி எழுப்பியபோது தன் பாஞ்சன்யம் முழக்கி பார்த்தன் செவி சென்றடைவதைத் தடுத்திருந்த மாயவன் மௌனமாயிருந்தான்.

அரவக் கொடியோன் அணியினர் அநியாயமான முறையிற் தனியாளாய் நின்ற அபிமன்யுவைத் தாக்க, சுபத்திரை மைந்தன் வீரசுவர்க்கமடைந்துவிட்டான்.

நெஞ்சு துடித்தது. எப்படி முடிந்தது? பாதுகாப்பு கவசமாய் தானை தாங்கி நின்றவன், பத்மவியூகப் படைசாய்த்து புயலாகிச் சென்றவன் எப்படித் தனியனானான்?

துரோணர் அமைத்த பத்ம வியூகத்தினுள் மாட்டிக்கொண்ட உதிஷ்டிரனை மீட்பதற்கு உத்தரை மணாளன் உடனே ஏகினான். தருமபுத்திரன் தப்பிக்க தனஞ்சயன் மைந்தன் மாட்டிக்கொண்டான்.

ஜெயத்ரதன் தான் பெற்ற வரம் கொண்டு பாண்டவர் படையினைத் தடுத்ததனால் துரோணர் தலைமையில் துரியோதனப்படை தனியனாய் நின்றவனை சேர்ந்து நின்று தாக்கினார்கள். அக்கினி அம்புகளை அள்ளி அள்ளி எய்தார்கள். அபிமன்யுவை அழித்தாரகள். வரம்பெற்ற ஜெயத்ரதன் இல்லையேல் இது நடந்திருக்காது. வனவாச காலத்தில் போரிட்டு தோல்வியடைந்து அவமானப்பட்ட ஜெய்த்ரதன் நயவஞ்சகமாய் வஞ்சம் தீர்த்துக் கொண்டான்.

அனைத்தையும் அறிந்த அருச்சுனன் விழிகள் அனலைக் கக்கின.
“நாளை சூரிய மறைவிற்குள் ஜெயத்ரதனைக் கொல்வேன். இல்லையேல் தீ மூட்டி அதில் வீழ்ந்து இறப்பேன்”
சபதமிட்டான் பார்த்தீபன்.

Saturday, April 4, 2009

தந்தையுமானவள்

கவிதைக்குப் பொய் அழகு என்றார் வைரமுத்து.
ஆனால் கவிதைக்கும் பொய்யை விட கருத்தே அழகு என்பது என் தாழ்மையான கருத்து. எப்படி நகைகள் அணியஅணிய பெண்கள் அழகாகிக் கொண்டு போவார்களோ, அப்படியே பொய்களால் அலங்கரி்க்க கவிதையும் அழகாகிக் கொண்டே போகும். ஆனாலும் நகைகளால் மட்டுமே (புன்னகை தவிர்த்து) அழகாய்த் தெரியம் பெண்களை யார் மீண்டும் ரசிப்பார்கள்?

சரி பெண்ணுக்கும் கவிதைக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?
அதை இன்னொரு பதிவில் பார்க்கலாம்.


ஏறத்தாழ எட்டு வருடங்களுக்கு முன்னர், வேறொரு நண்பன் சார்பில் எழுதப்பட்ட கவிதையின் ஞாபகச் சேமிப்பிலிருந்து பிறக்கிறது இந்தக்கவிதை, இம்முறை இன்னொரு நண்பனுக்காக.
(ஆக இது எனக்கான கவிதை அல்ல, என்ன கொடுமை சார்!)

எப்படி ஒரே நதியில் இருமுறை நீராட முடியாதோ, அவ்வாறே ஒரே கவிதையை இருமுறை எழுத முடியாது என்பதும் நிதர்சனம்.
எனவே மூலம் ஒன்றாக இருக்க, ஓடி வந்த பாதை மட்டுமே மாறியிருக்கிறது இந்தக் கவிநதிக்கு.


தந்தையுமானவள்

மௌனமொழி பேசியெனை
மயக்கிப் பின்,
உன் விழிவீச்சுவிந்தால்
என் இதயக்கருவறையைக்
கர்ப்பமாக்கிச் சென்றவளே.

இப்போதெல்லாம் ஏனடி
இந்தப் பாராமுகம்?

எப்படியடி முடிந்தது உன்னால்,
காரியம் முடிந்ததும்
கைவிடும் கயவனாயாக?

சேல் காட்டிச்
செல்லும் பெண்ணே! என்
சூல் கொண்டுன் கருக்கொண்ட
காதல் சிசுவிங்கு தன்
கால் கொண்டு
உதைக்கிறதே!

உனைக் காணும்
நேரங்களிலெல்லாம்
பிரசவ வேதனை என்னைப்
பிரட்டியெடுக்கிறது.

ஆனாலும் பயப்பிராந்தியிலென்
வாய்யோனிமடல்கள்
உலர்ந்துபோய் விடுவதால்
பெறுமாதம் தாண்டியும்...

ச்சே...
என்ன மனுசனடி நீ!
நம் காதல் குழந்தைக்கு
அப்பனாய் நீயிருந்தும்
ஆபத்தில்கூட உதவாமல்....

சரி!
கணவானாய்த்தான் வேண்டாம்
கருக்கலைப்புச் செய்ய
ஒரு மருத்துவிச்சியாயாவது?...

Friday, April 3, 2009

வேரென நீயிருந்தாய்...(1)

எங்கேயிருக்கிறேன் நான்? என்னாயிற்று எனக்கு? எங்கேயென் நதீஷா?எங்கேயென்...ஸ்ஸ்ஸ்...ஆ..........விண்ணென்ற வலி வலது தொடையில் தொடங்கி உடலெங்கும் பரவத்தொடங்கியது. கண்களை வேறு எதுவோ மறைத்துக்கொண்டிருந்தது.

இது கனவா? இருக்க முடியாது. இந்த வலி நிஜம். காலை, ஏன் கைகளைக் கூட அசைக்க முடியாதவாறு வலி, வலி வலி....

வலியை மீறிய மனவலிமையுடன் இடது கையை ஊன்றி எழமுயல்கிறேன்.

“அண்ணே எழும்பாதீங்கோ. அப்பிடியே படுத்திருங்கோ. கால அசைக்கக்கூடாது.” ஏதோவொரு குரல் என்னை மிரட்டுகிறது.

“டொக்ரர் அந்தப் பேஷன்ருக்கு நினைவு வந்திற்றுது.” எங்கோ தொலைதூரத்தில் இருந்து கேட்பதாய் அதேகுரல்.

யாரோ அருகில் வந்து கன்னத்தைத் தட்டி “அண்ணை இப்ப எப்பிடியிருக்கு?”
யாரிது. இது, இந்தக்குரல் நதிஷா இல்லை. முதலில் அதட்டிய குரலும் இல்லை.

“நதிஷா....”

“அண்ண தயவு செய்து சத்தம் போடாதீங்கோ. மற்ற பேஷன்ற்ஸ்ஸும் முழிச்சுரிவினம்.”
அதே குரல், இம்முறை அதுவும் அதட்டியது.

“ஐயோ! வலிக்குது. தாங்கமுடியுதில்ல. ஐயோ! அம்மா.. ந.தீ..ஷா...”

“சின்னவன் இந்த பேஷன்ருக்கு ரெண்டு பனடோல் குடுங்கோ” சொல்லிவிட்டு அந்தக் குரல் நகர்ந்து சென்றது.

பனடோல் தந்தவரிடம் “அண்ணே! எனக்கு நடந்தது. என்ர மனிசி பிள்ளைகள்...என்ர மனிசி எங்கையண்ணே?”

“அண்ணே குறைவிளங்காதைங்கோ. உங்கட பேர்கூட இஞ்ச ஒருத்தருக்கும் தெரியாது. இதுக்குள்ள உங்கட சொந்தக்காரரைப் பற்றி எப்பிடியண்ணே தெரியும்? நீங்க இப்ப புதுமத்தாளன் ஆசுப்பத்திரியிலை இருக்கிறியள்.”


(வேர் விடும்...)