Thursday, June 9, 2011

வேரென நீயிருந்தாய்...(32)

அன்புள்ள ஜேன்குட்டிக்கு!

நீ இதை வாசிக்கும் இந்தக் கணத்தில் நான் உங்களை விட்டு, எங்கள் நாட்டை விட்டு, எங்கள் நாட்டின் விடியலுக்காக இவ்வுலகை விட்டே பிரிந்திருக்கக்கூடும். கவலைப் படாதேடா. எப்படியும் அடுத்த பிறப்பிலும் உன்னுடனேயே இருப்பேன். விளங்கும் என நினைக்கிறேன். மானுட ஆன்மா மரணம் எய்தாது என்றான் கண்ணன். நாங்கள் எல்லோருமே ஏதோவொரு வகையில் அருச்சுனர்களே. இந்த வாழ்க்கையும் ஒரு குருஷேத்திரம் தான். எல்லாம் எப்பவோ தீர்மானிக்கப்பட்டாயிற்று. அதை நிறைவேற்றும் நாங்கள் வெறும் கருவிகளே. ஒருவகையில் நானும் இப்போது கீதாவுபதேசம் பெற்ற விஜயன்தான். வரித்துக்கொண்ட கடமையைச் செய்வதில், அதையும் நிறைவாகச் செய்யவேண்டும் என்பதில் அதிக அக்கறை இருக்கின்றது. உன்னை நேரில் சந்தித்தால் என்மனவுறுதி ஆட்டம் கண்டுவிடலாம் என்கின்ற அச்சமும் நிரம்பவே உண்டு. ஆதலால்தான் உன்னோடான சந்திப்புகளைத் தவிர்த்துக் கொண்டிருக்கின்றேன். இன்றுடன் நான் இடம் மாறுகின்றேன். இப்பிறப்பில் இனிமேல் உன்னைச் சந்திக்க முடியும் என்கின்ற நம்பிக்கை எனக்கில்லை. ஆனால் நிச்சயம் அடுத்த பிறப்பிலும் உன்னோடுதானிருப்பேன். உன்னை நினைத்து எனக்குப் பெருமையாக இருக்கிறது. அப்பாவின் கனவை நிறைவேற்றியதற்கு மிக்க நன்றி. அம்மா இனி உனது பொறுப்பு. அவா கஷ்ரப்பட்டது காணும். இனி அவாவை நீதான் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேணும். என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அம்மாவையும் கவலைப் பட விடாதே. இழப்புகள் எங்களுக்குப் புதியவையல்ல. இந்தக் கடிதத்தை நீயாக உடைத்து வாசிக்காமல் தீபனே உன்னிடம் தந்து வாசிக்கச் சொல்லியிருந்தால் நான் உங்களை விட்டுப் பிரிந்து விட்டேனென்று அர்த்தம்....................

மண்டை விறைக்க கையினிலிருந்த கடிதம் நழுவிக் கீழே விழுந்தது. கண்கள் இருண்டு கொண்டு செல்வது புரிகையில் தீபன் என்னை உலுக்க ஆரம்பிப்பது புரிந்தது.

“ஏன்ரா அக்காவைக் கண்டத என்னட்டச் சொல்லாம மறைச்சனி?”

“இல்லையடா! அவாதான் உன்னட்டச் சொல்லக்கூடாதெண்டு promise பண்ணச் சொல்லிக் கேட்டவா. அதாலதான் நான் ஒண்டுமே சொல்லேல்லை.”

“அடச்சீ! எவ்வளவு காலமடா அக்காவைப் பார்த்து? இனி எங்கையடா பார்க்கேலும்?”

அடிவயிற்றிலிருந்து ஏதோவொன்று வெடித்துக் கிளம்புவதாய் உணர்ந்தேன். அப்பா காணாமல் போனபோதுகூட இவ்வளவு தூரத்திற்கு அந்தக் கவலை என்னை வாட்டியிருக்கவில்லை. அக்காவிற்கு நித்திய கண்டம் பூரண ஆயுசு என்றே எண்ணியிருந்தேன். அந்த நினைப்பு இப்போது சிதைந்து சின்னாபின்னமாகிப் போயிருந்தது. வாழ்ககையில் எதுவுமே நிரந்தரமில்லை என்பது அறிவுக்குத் தெரிந்திருந்தாலும் அதை ஏற்க முடியாமல் மனது கிடந்து தவியாய்த் தவித்தது. உலகமே வெறுமையாய் சூனியமாகிப் போனதான உணர்வு நெஞ்சினை ஆக்கிரமிக்கத் தொடங்க தனியனாக உணரத் தொடங்கினேன். கண்களில் நீரருவிகள் ஏற்கனவே ஊற்றுப் பெருக்கத் தொடங்கியிருந்தன.

“ஜேயந்தன் டேய்! control yourself-டா. விசிறிகள் ஆருக்கும் விசயம் தெரிஞ்சுதெண்டால் பிறகு பிரச்சனையாகீரும்.”

“உனக்கு எப்பிடித் தெரியும் அக்கா வீரச்சவெண்டு?”

“இந்தா பேப்பரில கிடக்குது பாரன்.”

வீரகேசரியினைப் பிரட்டினேன்.

..... அண்மையில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத்தாக்குலை மேற்கொண்டவர் ஒரு பெண் தற்கொலைக்குண்டுதாரியெனத் தெரிய வந்திருக்கின்றது. அத்துடன் அங்கே கண்டெடுக்கப்பட்ட தேசிய அடையாள அட்டையின் பிரகாரம் அவரது பெயர் சுந்தரலிங்கம் ஜெயந்தினி என்றும், வவுனியாவை முகவரியாகக் கொண்டிருந்தாலும் அவரது சொந்த இடம் வேலணை என்பதும் இரகசியப் பொலிசாரின் விசாரணைகளில் தெரிய வந்திருக்கின்றது...

“மச்சான் எனக்குத் தலை வெடிக்குதடா... என்னடா நடக்குது? அப்ப, அக்காவின்ரை குண்டுவெடிப்பிலதான் நதீஷாவின்ரை அப்பாவும் செத்திருக்கிறேர். ரெண்டு பேருமே ஒண்டாச் செத்திருக்கினம் பாரன். அவற்றை செத்த வீட்டுக்கு நாங்களும் போய்ற்று வந்திருக்கிறம். ஆனா அக்காவின்ரை?”

உங்களுக்கு மட்டும் எங்கள் உணர்வுகள் புரியும்.
ஊமைகளாய் நாமிருக்கும் காரணம் தெரியும்.
பொங்கும் மகிழ்வோடு நீங்கள் போய்விடுவீர்கள்.
போனபின்னே நாமழுவோம் யாரறிவீர்கள்?

“ஜெயந்தன்! நீ இதைப்பற்றி ஒருத்தருக்கும் ஒண்டும் கதைக்காதை. பேசாம அவாவுக்குச் செய்ய வேண்டிய கிரியைகளை மட்டும் செய்வம் என?. அம்மாவுக்கும் இப்போதைக்கு இதைப்பற்றி ஒண்டும் சொல்ல வேண்டாம் சரியா?



2 comments:

  1. உண்மைக் கதையா எண்டு கேட்கமாட்டேன். ஆனால், நன்றாகவுள்ளது.

    ReplyDelete
  2. BTW, நான் நன்றாயிருக்கிறது என்று சொன்னது ஆக்கத்தை, கதையில் வந்த சம்பவங்களையல்ல.

    ReplyDelete