Monday, October 26, 2020

மனிதன் படைத்த குரங்கு (4)


 அறியாமையே ஆனந்தம். இல்லையா? அதிகம் அறிந்துகொண்டால் மனநிம்மதியும் போய்ச் சந்தேகமும் சேர்ந்துவிடுகின்றது. அப்படித்தானே? - என்ற மனிதப் பொறியிடம்

இல்லை, அறிவே சக்தி (knowledge is the power) என்றேன்.

அப்படியென்றால் உன் சக்தி அதிகமாகியதால்தான் உனக்கு இப்போது வியர்த்து விறுவிறுக்கின்றதோ?.

அதன் கிண்டலைப் பொருட்படுத்தும் மனநிலையில் நானிருக்கவில்லை. இவர்கள் இலுமினாட்டியைச் சேர்ந்தவர்களானால் எதற்காக என்னைத் தம்முடன் இணைக்கவிரும்புகின்றார்கள் என்கின்ற வினா மண்டையைக் குடைந்துகொண்டிருந்தது.

நீ அதிகமாக உனது மூளையைப் போட்டுக் குழப்பிக்கொண்டிருக்கின்றாய். அதனால் தேவையற்ற சந்தேகங்கள் உன்னுள் உருவாகிக்கொண்டிருக்கின்றன. உன்னுள் தோன்றும் சந்தேகங்களை மனம்விட்டு நீ எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். நாங்கள் உன் நண்பர்களே. தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும் என்று வள்ளுவரே சொல்லியிருக்கின்றார். எனவே நீ எங்களுடன் மனந்திறந்து உரையாடலாம்.

சரி நேரடியாகவே விடயத்திற்கு வருகின்றேன். நீங்கள் எல்லாம் யார்?

நான் கணிப்பொறியென்றும் இது உங்களைப்படைத்த குரங்கினத்தின் கடைசிக் குரங்கென்றும் ஏற்கனவே உனக்குத் தெரிந்தது தானே. பிறகென்ன குழப்பம்?

இந்தக் குசும்புதான் என்னை எரிச்சல் கொள்ளச் செய்கிறது. நீ, ஆரம்பத்திலிருந்தே நான் கேட்டகேள்விகளுக்கெல்லாம் நேரடியாகப் பதிலளிக்காமல் என்னைப்பேய்க்காட்டிக்கொண்டிருக்கின்றாய்.

அட! உதுவும் நல்ல கதைதான். நான் உன்னைக் கடவுளாக்க முயற்சித்துக்கொண்டிருக்கின்றேன். நீ என்னவென்றால் நான் பேயைக் காட்டிக்கொண்டிருப்பதாகக் கூறுகின்றாய்.

எனக்குள் சினம் துளிர்விட்டது.

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?

உன்னையும் அந்தப் பரமசிவனாக மாற்றவே நாங்கள் முயன்றுகொண்டிருக்கின்றோம். நீ என்னடாவென்றால் இன்னமும் கழுத்து கருடன் பாம்பென்றுகொண்டு நிற்கின்றாய்.

இந்த விழல் கதையெல்லாம் வேண்டாம். உண்மையிலேயே நீங்கள் யார் எதற்காக என்னை உங்களுடன் இணைத்துக்கொள்ள முயற்சித்துக்கொண்டிருக்கின்றீர்கள்? இதற்கு நீங்கள் பதிலளிக்காவிட்டால் நான் இனி உங்களுடன் உரையாடுவதை நிறுத்திக் கொள்கின்றேன்.

ஹே! நாங்கள்தான் நண்பர்களாகி விட்டோம் என்று கூறினேனே. அப்புறம் எதற்காக இப்படி மௌனவிரதத்திற்குள் நுழைகின்றாய்?

நான் அமைதியாகவிருந்தேன்.

நீ பேசாவிட்டாலும் உன்முகக்குறிப்புகளிலிருந்து உன் எண்ணங்களை என்னால் அறிந்துகொள்வியலும்.

நான் எதுவும் பேசாமல் அப்படியே இருந்தேன். இதற்கும் இது மசியாவிட்டால்...

ஏ! எதற்காக இப்போது தியாகி திலீபனை நீ நினைக்கின்றாய்? அந்தளவிற்கெல்லாம் போய் நீ உண்ணாவிரதம் இருக்க வேண்டியநிலை வராது. நாங்கள் ஒன்றும் அவர்களைப்போல் கெட்டவர்களும் கிடையாது. உனக்கான பதில்களை உன்னிடமிருந்து நீயாகக் கண்டடையவே நாங்கள் உன்னுடன் இவ்வாறு நடந்து கொள்கின்றோம். உன்னுடைய சந்தேகங்களை நீ மனம்விட்டுக் கேள். அதற்கான விடைகளைக் கண்டுபிடிப்பதற்கு நாங்கள் உதவுகின்றோம். நேரடியான பதில்களை எங்களிடமிருந்து எதிர்பார்க்காதே.

சரி அப்படியானால் நீங்கள் இலுமினாட்டியைச் சேர்ந்தவர்களா?

இலுமினாட்டி இப்போதும் இருக்கின்றதென்று நீ நினைக்கின்றாயா? அதற்கான ஆதாரங்கள் எதையாவது நீ கண்டுபிடித்திருக்கின்றாயா? அல்லது உணர்ந்துதான் இருக்கின்றாயா?

இதுவரை இல்லை. ஆனால் கிடைக்கும் தகவல்களை வைத்துப் பார்க்கும்போது அவ்வாறுதான் எண்ணத் தோன்றுகின்றது.

ஆக நீ உனக்குக் கிடைத்த அல்லது நீ அறிந்த தகவல்களை வைத்தே இந்த உய்த்துணர்வுக்கு வந்திருக்கின்றாய். அப்படித்தானே.

ஓம். நீங்கள் என்னைக் கடவுளாக்குவது என்று கூறியதும் கிட்டத்தட்ட அப்படியானது தானே. கடவுளையும் கண்டதில்லை. உணர்ந்ததுமில்லை.

அப்படியானால் நீ கடவுளை நம்பியதே இல்லையா?

சிலவேளைகளில் நம்புவதுண்டு. பலவேளைகளில் நம்புவதில்லை.

குழப்பாதே. கடவுள் உண்டென்று நம்புகின்றாயா இல்லையா?

சிறுவயதுகளில் நம்பியதுண்டு. பின்னர் அந்த நம்பிக்கை குறைந்து இல்லாமல் போய்விட்டது.

ஏன் அப்படி?

கடவுளை நம்பியோர் கைவிடப்படார் என்று சொல்வார்கள். கைவிடப்படுகையில் கடவுள் நம்பிக்கையும் சேர்ந்தே கைவிடப்படுகிறது.

தெளிவாகச் சொல்வதென்றால், நீ இறைவனிடம் இரந்தது கிடைக்கவில்லையெனில் உன் நம்பிக்கை கைவிடப்படுகிறது. கேட்டது கிடைக்கும் போது நம்பிக்கை உண்டாகின்றது. நான் சொல்வது சரியா?

சரி.

அப்படி ஒருதடவை கைவிடப்பட்ட பின்னர் நீ மீண்டும் வேறு விடயங்களுக்காக இறைவனிடம் இறைஞ்சியதில்லையா? உண்மையைச் சொல்ல வேண்டும்.

மீண்டும் அப்படிச்சென்று கடவுளிடம் வேண்டியதுண்டு.

நம்பிக்கையில்லை என்றால் எதற்காக மறுபடி நீ இறைவனிடம் சென்று உன் வேண்டுதல்களைச் சொல்லவேண்டும்?

எனக்குச் சரியாகச் சொல்லத்தெரியவில்லை. திக்கற்றவனுக்குத் தெய்வமே துணை என்பார்கள். அதுபோன்ற கையறுநிலைகளில் கடைசியாகக் கடவுள்பெயரை உச்சரிப்பதுண்டு.

ஆக உன் தேவைகளைப் பொறுத்தே நீ கடவுள் நம்பிக்கை உடையவனாகவோ இல்லாதவனாகவோ மாறுகின்றாய்.

உண்மைதான்.

அப்படியானால் நீ எப்படி இலுமினாட்டியும் உண்மையில் இருக்கின்றது என்பதை நம்புகின்றாய்?

கிடைக்கும் தகவல்கள் அதை நம்பச் சொல்கின்றன. அப்படி என்ன தகவல்கள் உனக்குக் கிடைத்திருக்கின்றன?

இந்தப் பூமியில் பெரும் அதிகாரமும் பணபலமும் ஒருசில மனிதர்களின் கைகளில்தானே இருக்கின்றன. நீயே அறிந்திருப்பாய் ஒவ்வொரு நாட்டின் ஆளும் வர்க்கமும் பெருவணிக முதலைகளும் தமது குறுகிய நலன்களுக்காக எத்தனையோ இனங்களை நாடுகளை அழித்துக் கொண்டிருக்கின்றன. அதுமட்டுமா? எத்தனையோ இயற்கை வளங்கள் சூறையாடப்படுகின்றன. காடுகள் அழிக்கப்படுகின்றன. எத்தனை வன விலங்கினங்கள் முற்றாக இந்தப்பூமியிலிருந்து துடைத்தழிக்கப்படுகின்றன. இந்தக் குரங்கையே எடுத்துக்கொள்ளேன், இதன் ஆயுட்காலம் முடிவடைந்ததம் இக்குரங்கினமும் இங்கிருந்ததற்கான சான்றுகளே இல்லாமல்ப் போய்விடுமே.

இவற்றை மட்டும் வைத்துக்கொண்டு இலுமினாட்டி என்ற ஒன்று இப்போதும் இருக்கின்றது என்பதை நம்பமுடியுமா?

இவை மட்டுமா? இந்தக் கொரோனா தொற்றுவியாதிகூட வேண்டுமென்றே மக்கள் சனத்தொகையைக் குறைப்பதற்காக  உருவாக்கப்பட்டிருக்கலாம் என்கின்ற சந்தேகம்கூட உலாவுகின்றதே. எத்தனை கோடிகளைக் கொட்டி சந்திரன் செவ்வாய் என்று பூமியைத் தாண்டி விண்வெளியில் வேற்றிடங்களுக்குச் சென்று  ஆராய்ச்சி செய்கின்றார்களே. அதில் ஒரு பகுதியை பசியால் வாடும் மக்க்ளைக் கொண்ட நாடுகளுக்குக் கொடுத்து உதவலாமே. எல்லாவற்றிலும் வியாபார ஆதாயம்தான் பார்க்கின்றார்களே அன்றி இந்தப் பெருவணிக முதலைகளோ அல்லது அதிகார வர்க்கமோ கொஞ்சம்கூட மனிதாபிமானம் பார்ப்பதில்லையே.

எதனால் அவர்கள் அப்படிச் செய்கின்றார்கள் என்று நினைக்கின்றாய்?

எல்லாமே சுயநலந்தான். பேராசையும் அதிகார வெறியுமே அவர்களை இப்படியான ஈனச்செயல்களில் ஈடுபடவைக்கின்றன என்றே நான் கருதுகின்றேன்.

ஆனாலும் அவர்களும் ஒரு நாள் இறந்து போவார்களே பின் எப்படி இது தொடரும்?

அவர்களின் வாரிசுகளோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ அவர்களின் அதிகாரத்தையும் பணபலத்தையும் எடுத்துக் கொண்டு அவர்களும் அதே வழியில் தொடர்வார்கள்.

அவர்களுக்கு வாரிசுகளோ குடும்ப உறுப்பினர்களோ இல்லாவிட்டால்?

குடும்ப பந்தமோ வேறுபந்தமோ இல்லாவிட்டால், ஒருவேளை அவர்கள் தங்கள் செயல்களை நிறுத்தி நிதானத்துடன் செய்யக்கூடும்.

எதை வைத்து அவ்வாறு கூறுகின்றாய்?

அந்தக் காலத்தில் சித்தர்களும் யோகிகளும் பெரும் சக்திகளுடன் விளங்கினாலும் அவர்களுக்குக் குடும்ப பந்தமில்லாததால்தானே அவர்கள் உலகநன்மைக்கே தமது சக்திகளைப் பயன்படுத்தினார்கள்.

சரியாகச் சொன்னாய். அதைத்தான் உனக்கும் நாங்கள் செய்திருக்கின்றோம். எனவே நீ நினைப்பதுபோல் நாங்கள் இலுமினாட்டியைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதை இப்போது புரிந்துகொண்டிருப்பாய் என நினைக்கிறேன்

இது என்னிடம் நன்றாகப் போட்டுவாங்கி விட்டது என்பது புரிந்தது.

ஆனால் நான் ஒரு மிகச்சாதாரண மனிதன். என்னால் என்ன செய்யமுடியும் என்று நீங்கள் என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள்?

சித்தர்களைப் பற்றிச் சொன்னாய் அல்லவா? அவர்கள் தமது குறிப்புகளைத் தமிழ்மொழியில்தான் எழுதி வைத்திருக்கின்றார்கள். அவர்களின் மொழிநடையினை எங்களால் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றது. நீ நூலகம் நிறுவனத்தினூடாக ஓலைச்சுவடிகளை வாசிப்பதிலும் ஓரளவு பரிச்சயம் பெற்றிருப்பதை அறிந்திருந்தோம். எனவே எமக்குக் கிடைத்திருக்கும் சில அரிய ஓலைச்சுவடிகளில் உள்ளவற்றைப் புரிந்து கொள்வதற்கு உனது உதவி தேவைப்படுகின்றது.

அதை ஒரு வேலைத்திட்டமாக அளித்திருந்தால் என்னால் இயன்றவரை முயற்சிசெய்து பார்த்திருப்பேனே. நானும் உங்களைப்பற்றி எதையும் அறிந்திருக்கமாட்டேன். நீங்களும் நான் இறந்துவிட்டதாக என்குடும்பத்தினரை நம்பவைக்க வேண்டிய தேவை உருவாகியிருக்காது.

அப்படிச்செய்வதற்குத்தான் நானும் எண்ணியிருந்தேன். ஆனால் இந்தக் குரங்குதான் அதை நிறுத்தி உன்னையும் எங்களில் ஒருவராக இணைக்கச்சொன்னது.

நான் அந்தக் குரங்கினைக் கோபத்துடன் பார்த்தேன்.அது சிரித்துவிட்டுச் சொல்லியது,

உறவுகளை அறுத்தவர்களாலேயே சித்தர்களின் கருத்துகளைச் சரியாகப் புரிந்து கொள்ளமுடியும். அதுமட்டுமல்ல அந்தச்சுவடிகளில் பெரும் சக்திகளை உருவாக்கும் வழிமுறைகளோ அல்லது இரசவாதம் போன்று இரும்பைப் பொன்னாக்கும் வித்தைகளோ அல்லது காயகல்பம் போன்று என்றும் மாறா இளமையுடன் இருக்கவைக்கும் மருந்துகளைத் தயாரிக்கும் முறைகளோ இருந்து  அந்தத் தகவல்களை நீ பின்னர் வேறு வணிக நிறுவனங்களுக்கு விற்றுவிட்டால்? நீங்கள் உருவாக்கிய இந்த மனிதப்பொறி நீ அந்த ஓலைச்சுவடிகளில் இருப்பவற்றை நீ புரிந்துகொண்டு எமக்கு அறிவித்தவுடன் உன்னைக் கொன்றுவிடவே எண்ணியிருந்தது. நான்தான் அதை மாற்றியமைத்தேன்.

இப்போது நான் அந்த மனிதப்பொறியைச் சினத்துடன் பார்த்தேன்.

அதுதான் இப்ப நாங்கள் எல்லோரும் ஒன்றுக்குள் ஒன்றாக ஆகிவிட்டோமே. பிறகெதற்காக என்னுடன் கோபப்படுகின்றாய்? அதோ அந்தக் கணினியில் இனி நீ உன் வேலையைத் தொடங்கலாம். உனக்கான ஓலைச்சுவடிகள் அதிலே படங்களாகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன.

சொல்லிவிட்டு மனிதப்பொறி வெளியேற, நானும் அந்தக் குரங்கும் கணினியில் அந்த ஓலைச்சுவடிகளை ஆராயத் தொடங்கினோம்.

நன்றி - தாய்வீடு (ஒக்ரோபர் 2020)