Friday, October 30, 2009

வேரென நீயிருந்தாய்... (7)

அன்று சனிக்கிழமை, விடுமுறை நாள். அறையில் இருந்த நண்பர்களில் சிலர் தங்களின் வீடுகளிற்குச்சென்றுவிட்டிருந்தார்கள். இப்போதெல்லாம் குருந்துவத்தைச்சந்தியால் இறங்குவதைத்தவிர்த்து அங்குணாவலையூடாக எமது பாதையினை மாற்றி விட்டிருந்ததில் சிரேஷ்ட மாணவர்களின் பார்வையில்படுவதை பெருமளவில் தவிர்த்துக்கொண்டிருந்தோம். அன்றைய காலைஉணவிற்காக அங்குணாவலைச்சந்தியை அடைய, ச்சே! வெறுத்துப் போனது மனது. சிரேஷட மாணவர்கள்! ஏற்கனவே பல தடவைகள் சந்தித்து தாராளமாய்த்தோப்புக்கரணமும் ரிப்சும் (தண்டால்) அவர்களின் பெயரால் வாரி வழங்கியிருந்தோம்.

“டேய்! இஞ்சை ஏன்ரா வந்தனீங்கள்?”

”சாப்பிட”

”உங்களையெல்லாம் குருந்துவத்தையிலதானே சாப்பிடச்சொன்னது. சீனியர்ஸிற்குச் சுத்திக்கொண்டு இஞ்சால ஒளிச்சுத்திரியிறியள் என. வாங்கடா! இண்டைக்கு அக்பரில வந்து சாப்பிடுங்கோ.”

வெறுத்துப்போன மனதுடன், சிரேஷ்ட மாணவர்களுடன் பேருந்துத் தரிப்பிடத்தினை அடைய பேருந்தும் வந்துசேர்ந்தது.

சிங்கத்தின் குகைக்குள் செல்வது போன்றிருந்தது. வரிசையில் நின்று சாப்பாட்டிற்கு காசு கொடுத்தபோது திகைப்பாயிருந்தது. விலைகள் எல்லாம் அவ்வளவிற்கு குறைவாயிருந்தன.

“இனித் திரும்பிப்போறது உங்கட கெட்டித்தனம்.” என்று சொல்லிவிட்டு அவர்கள் சென்றுவிட, வேறு சிலர் எம்மைச்சூழ்ந்துகொண்டனர். ஒவ்வொருவரையும் ஒவ்வொரு திக்காய்ப்பிரித்து அழைத்துச்சென்றனர். மாடிப்படிகள் நிலத்துக்கு கீழே செல்வது ஆச்சரியமாயிருந்தது.

நாமும் நடக்க தானும் நடக்கின்ற ஏகாந்தப்பெருங்ககனம் என்பது போல் இருண்ட ஹொரிடோரின் வழியாக நடந்து கொண்டேயிருந்தோம். அறையிலக்கங்கள் 2024 முடிந்து 3122ம் முடிந்து 4103 இற்கு வருகையில்,

”மச்சான் கம்பூச்சி வந்து நிக்கிறேராமடாப்பா. இவன வச்சிருந்தால் பிரச்சனை. ஆளை அனுப்பு” - என வேகமாக வந்து சொன்ன இன்னொரு சிரேஷ்ட மாணவனின் சொற்கேட்டு.

“உனக்கு இண்டைக்கு நல்ல காலம். ஓடித்தப்பு”

என்று என்னை விரட்டினார்கள். திரும்பி தனியே வர பாதை பிடிபடவில்லை. மாறி குளியலறைத்தொகுதிக்குள் நுழைய....

“you can go this way.” ஒரு சிங்கள சிரேஷ்ட மாணவன் சரியான பாதைகாட்ட அறை இலக்கம் 2001 தாண்டி வர வெளியே வாசல் தெரிந்தது. வரும்போது கீழே இறங்கி வந்தது நினைவிற்குவந்து குழப்பியது. பின்புதான் அக்பர் விடுதியைப்பற்றி மற்றைய மாணவர்கள் கூறியது நினைவிற்கு வந்தது. அது பள்ளம் மேடு சார்ந்தவொரு நிலப்பரப்பில் அமைந்திருந்ததால் ஒரு கட்டடத் தொகுதி மற்றைய கட்டடத்தொகுதியினின்றும் ஒரு தளம் உயர்ந்திருப்பது புரிந்தது. அதன் வழியே வெளியேறி எங்கே செல்வது என்று குழம்புகையில்.

“அணணே! இதுக்குள்ள என்ன தடவுறாய்?”
-ம்ம்ம்...! சரி! இண்டைக்கு ஆப்புத்தான் என்றது மனது.

“வாடா வா அப்பிடியே எனக்குப்பின்னால சத்தம் போடாம வா” - பின்தொடர்ந்தேன்.

“போய்க் கதவைத் திற” - திறந்தேன்.

“சின்னனில ஒளிச்சுப்பிடிச்சு விளையாடியிருக்கிறியா? ”

”ஓம்”.

”அப்ப இந்த றூமுக்குள்ள எதுக்குள்ளையெண்டாலும் போய் ஒளி. நான் உன்னத் தேடுறன்.”

ஙே!

“என்னடா முழிக்கிற? ரெண்டு அலுமாரி கிடக்கு, கட்டிலுக்குக் கீழ எவ்வளவோ இடங்கிடக்கு. கெதியா ஒளி”.

கட்டிலுக்குக்கீழே குனிந்தேன். திகைத்தேன். அதற்குள் வேறொரு மாணவன் படுத்துக்கிடந்தான். மறுபுறம் திரும்பி மற்றக்கட்டிலின் அடியில் பார்க்க அட! அங்கேயும் வேறொரு மாணவன்.

“என்ன ஒளிஞ்சாச்சா?”

அவசரமாய் அலுமாரிகளைத் திறந்தேன். எல்லாமே ஏற்கனவே வேறு சக மாணவர்களால் நிரப்பப் பட்டிருந்தன.

”என்ன இன்னும் ஒளியேல்லையா?”

”இ.. இ..இடமில்லையண்ணே.”

”சரி அப்ப வந்து கதிரையில இரு.”

கண்களுக்கு எந்தக் கதரையுமே தட்டுப்படவில்லை.

“என்னடா? சொன்னது விளங்கேல்லையோ? கதிரையிலை இருடா எண்டால் வாய்பாத்துக் கொண்டு நிக்கிறாய்”

“ல்ல.. கதிரையொண்டையும் காணேல்ல”

“பேய்ப்... உங்கொப்பனா இஞ்ச கதிரைகொண்டந்து வச்சவன். டேய்! உள்ளுக்க இருக்கிறவங்கள் எல்லாம் வெளியால வாங்கடா” - வந்தார்கள்.

“ஆராரு (யார்யார்) நேற்று ராத்திரியே வந்தாக்கள்?”- இருவர் கையுயத்தினர்.

“ரெண்டு பேரும் ஓடுங்கோ. நீங்க மூண்டு பேரும் வரிசையா வந்து கதிரையில இருங்கோ”

மற்றைய இருவரும் கதிரையில் உட்காருவதைப் போலவே பாவனை செய்ய நானும் உட்கார்ந்தேன்.

”டேய் புதுசா வந்தனி! காலுக்கு மேல கால் போட்டுக்கொண்டு இரு. இருடா எண்டுறன். தூக்கடா ஒரு கால.” - தூக்க முயற்சித்தேன். அப்படியே தவறிக் கீழே விழுந்தேன்.

”ஏன்ரா கதிரையை உடைச்சனி? டேய் குட்டான்! நீ சிரிக்கிற என. போடா போய்ச் சிரிப்ப வெட்டி எறிஞ்சிற்று வா”
முதலாவதாயிருந்த அந்த சின்ன உருவம் தன் சொண்டினை (உதடுகள்) ஒருகையால் இழுத்துப்பிடித்தவாறே மற்றைய கையால் கத்தி கொண்டு அறுப்பது போன்றும் பின் அறுபட்டதை ஜன்னலால் எறிவது போன்றும் பாவனை செய்தான்.

“நீ நல்லா ராக்கிங் வாங்கித்தானிருக்கிற. சரி அப்பிடியே நிலத்தில இரு” - அவன் இருந்தான்.

“டேய் ரெண்டாவது நீ மக்ஸிமம் எத்தனை தோப்பு போட்டிருக்கிற?”

”முன்னூறு”

“நீ”

”நானூற்றிஎண்பது”

“ஆருக்குப் போட்டனி?”

“ஒணரபிள் சுப்பர் சுப்பர் சீனியர் ரமேஷ்”

“சரி எல்லாரும் கிட்ட வந்து நிலத்தில இருங்க” அருகே சென்று அமர்ந்தோம்.

“ஒவ்வொருத்தரா உங்கட detailsஅ சொல்லுங்கோ. இஞ்ச வைச்ச பெயரொண்டும் வேண்டாம்.”

“என்ர பேர் பாலசிங்கம் இந்திரன். சொந்த இடம் கோப்பாய்.....”

“நீ”

“என்ர பேர் சண்முகலிங்கம் கணேசன். சொந்த இடம் பருத்தித்துறை.....”

“நீ”

“என்ர பேர் சுந்தரலிங்கம் ஜெயந்தன். சொந்த இடம் வேலணை....”

“சரி! உங்களில ஆருக்குப்பாட்டுப்பாடத் தெரியும்?”

மூவருமே தெரியாதெனத் தலையாட்டினோம்.

“டேய் பருத்தித்துறையான்! அப்ப நீயொரு கதைசொல்லு. பருத்தித்துறை ஊராம் பவளக்கொடி பேராம்.. எண்டில்லாம நல்லொரு கதையைச் சொல்லு.”

“அண்ணே எனக்குக் கதை தெரியாது.”

“ஆமை முயல் கதை தெரியுமா?”

“ஓம்”

“அப்ப அதைச் சொல்லு.”

“ஒரு ஊரில ஒரு ஆமை இருந்துதாம்.”

“என்னடா அம்புலிமாமாக் கதை போல ஒரு ஊரில ஒரு ஆமையெண்டு? ஊரின்ரை பெயரைச் சொலலிச் சொல்லு”

“பருத்தித்துறை என்கின்ற ஊரில ஒரு முயல் இருந்துதாம்.”

“அப்ப முயலுக்குப் பேரில்லையோ?”

“பருத்தித்துறை என்கின்ற ஊரில ராமன் என்கின்ற முயல் இருந்துதாம்.”

“எப்ப இருந்ததாம்?”

“1997 ஆம் ஆண்டு”

“கதை சொன்னா முழுசாச் சொல்ல வேணும். நீ பிழை விட்டால் திரும்பி முதலில இருந்து சொல்ல வேணும் சரியா? இப்ப சொல்லு”

“1997ஆம் ஆண்டு தை மாதம் 14ம் திகதி பருத்தித்துறை என்கின்ற ஊரில இருந்த ராமன் என்கின்ற முயல் ஒரு ஆமையிடம் சென்று...”

“நிப்பாட்டு. ஆமைக்குப் பெயரில்லையோ?”

“1997ம் ஆண்டு..... ராமன் என்கின்ற முயல் மணி என்கின்ற ஆமையிடம் சென்று ஓட்டப்போட்டிக்கு வருமாறு அழைத்தது. போட்டி தொடங்கியதும்...”

“இஞ்ச வா! போட்டி எங்க நடந்தது?”

“1997ம் .....அழைத்தது. போட்டி மணியாறன் வளவடியில் இருந்த ஒழுங்கையில் தொடங்கியது.”

“எத்தின மணிக்குத் தொடங்கினது?”

“1997.....போட்டி மாலை 4.00 மணிக்குத் தொடங்கியது. ராமன் என்கின்ற முயல் வேகமாக”

“நிப்பாட்டு. போட்டிக்கு ஆரு நடுவர்?”

“1997.... யோன் என்கின்ற நாயை நடுவராக வைத்து போட்டி தொடங்கியது.”

“ஆமை முயல் எல்லாம் ஓடேக்குள்ள என்ன உடுப்பு போட்டிருந்ததுகள்?”

“1997..... ராமன் என்கின்ற முயல் நீல நிறக்காற்சட்டையும் வெள்ளைநிற மேற்சட்டையும் அணிந்திருந்தது.”

“டேய்! ஓட்டபபோட்டி நடக்குது. முயல் ஜட்டி போடாமா ஓடுதாம். ஆருக்குக் கதை விடுறாய்?”

“1997...........”

“....”

“199.....”

“....”

“19......”

“....”

“1......”

“....”

“@#$%^&*......”

“மவனே றூமுக்குப் போய் ஒழுங்கா prepare பண்ணீற்று நாளைக்கு வந்து எனக்கு இந்தக்கதையை முழுக்கச் சொல்லோணும். இல்லையெண்டால்.” - சரியென்றவாறு கணேசன் தலையாட்டினான்.

”சரி எப்பிடி வெளியால போறதெண்டு தெரியுமா? இப்ப lunch time. அக்பர் வாசலால போனீங்களெண்டால் வேறையாரும் பிடிப்பாங்கள். இப்பிடியே அக்பருக்கும் facultyக்கும் இடையால போற றோட்டால போய் பனிக்குள்ள (பனிதெனியா) இறங்கி தப்பிப் போங்கடாப்பா. ”


பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6

Thursday, October 29, 2009

வேரென நீயிருந்தாய்...(6)

1997 ஓகஸ்ற் திங்கள் 11ஆம் நாள் காலை, எமக்கான தீவிர ஆங்கில வகுப்புகள் (Intensive course) ஆரம்பமாயின. எமது வசிப்பிடமாக, பேராதனை முதல்நாளே மாறிவிட்டிருந்தது. கண்டியின் கடுங்குளிரை விரட்டி காலைக்கடன்களை முடித்துவிட்டு குருந்துவத்தைச்சந்தியை நோக்கி இறங்கிக்கொண்டிருந்தோம். எதிர்பார்த்ததைப்போன்றே சிரேஷ்ட மாணவர்கள் வழிமறித்தாலும் வகுப்பிற்கு நேரமாகிவிட்டதால் எம்மை யார் கூப்பிட்டாலும் திரும்பிப் பார்க்காமல் ஓடச்சொல்லிப்பணி்த்தார்கள். சற்று நேரத்திலேயே, எம்மை நிற்கச்சொல்லி சில குரல்களும் ஓடச்சொல்லி சிலகுரல்களும் எம்செவிகளை வந்தடைந்தாலும் ஓடுவதே அவர்களிடமிருந்து தப்புவதற்கான வழி என்பதால் ஓடிக்கொண்டிருந்த எம்மை மிதிவண்டியில் துரத்திவந்த இருவர் வழிமறித்தனர்.

“நிக்கச்சொன்னது காதில கேக்கேல்லையோடா உங்களுக்கு?”

“டேய்! நீதான் கோடுபோட்ட சேட்டு, இஞ்சகிட்ட வாடா.”

பளாரென்ற ஓசைகேட்டுத்திடுக்கிட்டேன். சீலன் தன் கன்னத்தைத்தடவிக் கொண்டிருந்தான். அவனின் விழியோரங்களில் கண்ணீர்த்துளிகள் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தன.

“உனக்கு எங்களப்பாத்தாச் சிரிப்பு வருகுதோ? பேய்ப்... என்னடா பேர் உனக்கு?”

“பார்சிலோனா”

“ஆரடா வச்சது?”

“ஒனரபிள் சுப்பர் சீனியர் செந்தூரன்”

“உங்கொப்பாம்மா வச்சபேர் என்னடா?”

“தில்லைநாதன் சாந்தசீலன்”

“மவனே இண்டைக்கு பின்னேரம் கிளாஸ் முடிய நேர பேய்வீட்டுக்கு வாற. வேறையாரும் கூட்டிக்கொண்டுபோய்ற்றாங்கள் எண்டு சொல்லி வராம விட்டியெண்டா நீ செத்தாய். எல்லாரும் ஓடுங்கடா”

பின்னங்கால் பிடரியில் பட ஓடத்தொடங்கினோம்.

வகுப்பின் இடைவேளையில்,

“என்னை ஐசே! உங்களோட இருக்கிற சீலனை பேய்வீட்டுக்கு வரச் சொல்லியிருக்கிறாங்களாம். அவன் போனா பிறகு அடுத்தடுத்து நீங்களும் போக வேண்டி வரும்.” -என்றான் எனது வகுப்பில் இருந்த நண்பன்.

“பேய்வீடு எங்கை ஐசே இருக்கு? அங்க போனா என்ன செய்வாங்கள்?”

“குருந்துவத்தையிலதான் இருக்கு. அங்க விஐபி-மாரத்தான் கொண்டு போறவங்கள். அங்க போனா முறிமுறியெண்டு முறிச்சுப்போடுவாங்கள். கறண்ட்ஷொட் எல்லாம் குடுப்பாங்கள். கீழ விழேக்குள்ள முழங்கைச் சில்லெல்லாம் வெடிக்கிறமாதிரியிருக்கும். போனவருஷம் எங்கட இம்மீடியற் சீனியர்ஸ்ஸில கறண்ட்ஷொட் வாங்கினவையின்ர இரத்தம் இப்பையும் சுவரில இருக்காம் ஐசே.”

மண்டை விறைத்தது. எப்படி இந்த பகிடிவதைக்குள்ளால் தப்பிப் பிழைக்கப்போகின்றோமோ என்கின்ற பயம் பிரமாண்டமாய் மனமெங்கும் வியாபித்தது. அதற்குள் இன்னொரு சக மாணவன் வந்து எல்லோரது விபரங்களையும் ஒரு தாளில் திரட்டிக்கொண்டிருந்தான். அது சிரேஷ்ட மாணவர் ஒருவரால் அவனுக்கு வழங்கப்பட்ட கோர்ஸ்வேர்க் (course work).

“ஐசே சீனியர்ஸ்ட்ட குடுக்கமுதல் போட்டோக்கொப்பியொண்டு எடுத்து வச்சிற்றுக்குடும்.” என்ற நண்பனிடம் எதற்கு என்றேன்.

”எங்களிட்டையும் இந்தக் கோர்ஸ்வேக்கத் தருவாங்கள். இப்பையே ஒரு கொப்பி எடுத்து வச்சிற்றால் பிறகு நாங்கள் அலையவேண்டியிருக்காது” என்றான்.

அவன் இரண்டாம் தடவையில் பல்கலைக்கழக அனுமதி பெற்றிருந்ததால் தற்போது எமக்கு immediate seniors ஆக இருக்கும் அவனது பாடசாலைக்கால வகுப்புத்தோழர்களிடமிருந்து எல்லாத்தகவல்களையும் அவன் அறிந்து வைத்திருந்தான்.

மாலை வகுப்புக்கள் முடிந்ததும் அவனுடனேயே வேறு பாதையால் இறங்கி புகையிரதப்பாதை வழியே நடந்து பனிதெனியாவை அடைந்து பின் பேருந்தி்ல் ஏறி கலகாச் சந்தியில் இறங்கி மீண்டும் கம்பளைக்கான 718 இலக்க பேருந்தினைப்பிடித்து குருந்துவத்தைச் சந்தியில் இறங்க அதிர்ஷ்ட வசமாய் யாரும் இல்லாதிருக்கவே சந்திக்கடையி்ல் வெதுப்பியினை (bread) வாங்கிக் கொண்டே எனது அறையினை அடைய அறை நண்பர்களில் ஒருவன் ஏற்கனவே வந்துவிட்டிருந்தான்.

பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5

Friday, October 23, 2009

'தனி' குறும்படமும் தனிமையும்.

நேற்று மாலை அங்மோக்கியோ பொதுநூலகத்தில் 'தனி' குறும்பட நிகழவிற்கு நண்பன் ஒருவனுடன் சென்றிருந்தேன். சிங்கையில் நடைபெறும் வழமையான நிகழ்வுகள் போன்றே சிற்றுண்டி வழங்கலின் பின் நிகழ்வுகள் மாலை 06.30 அளவில் ஆரம்பமாயின. செவிக்குணவில்லாத போது வயிற்றுக்கும் கொஞ்சம் ஈயப்படும் என்றார் வள்ளுவர். ஆயினும் இங்கே சிங்கையில் நடைபெறும் அநேக நிகழ்வுகளிலும் வயிற்றிற்கு உணவளித்த பின்பே செவிகட்கும் விழிகட்கும் விருந்தளிக்கப்படகின்றன. ஒருவேளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எல்லோருமே பசி வந்திடப் பத்தும் பறந்துபோம் என்கின்ற ஔவையாரின் கருத்துக்களுடன் உடன்பட்டிருக்கக்கூடும்.


மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் முயற்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த கொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்.


என்று நல்வழிப் படுத்தி என் போன்றவர்களின் வயிற்றில் பால்வார்த்த ஔவைப்பாட்டிக்கும் நன்றி. பின் பாலப்பம் போன்ற தின்பண்டம் தந்த கவிமாலைப் பொழுதின் ஔவைப்பாட்டிக்கும் நன்றி. “வடை சூப்பரா இருக்கண்ணா.” என்ற கூடவந்த நண்பன் தங்கள் ஊரில் (விழுப்புரத்தில்) கையேந்திபவனில் சாப்பிட்ட தருணங்களை நினைவுகூர்ந்தான். உண்மையிலேயே வடையும் அன்னாசியில் செய்யப்பட்ட கேசரியும் அருமையாவே இருந்தன். 'அடு' எடுத்துச் சாப்பிட்டோம்.


தொடர்ந்து வழமைபோன்று தலைமையுரை, வரவேற்புரை என்பவற்றின் பின் குறும்படங்களின் வரலாறு பற்றிய ஒரு உரையினையும் அடுத்து 'இன்று' என்கின்ற குறும்படமும் பின் அதனைத் தொடர்ந்து 'தனி' குறும்படம் பற்றிய மதிப்புரைகளும் இடம்பெற்றன. 'தனி' மற்றும் 'தனிமை' என்கின்ற சொற்களுக்கிடையிலான கருத்து வேறுபாடுகள் மிக அழகாக எடுத்துரைக்கப்பட்டன. ஒவ்வொருவர் பார்வையிலும் 'தனி' குறும்படத்தின் குறியீட்டுப் படிமங்கள் மாறுபட்டிருந்ததனை அவதானிக்கக்கூடியதாயிருந்தது. கவிஞர் பேராசிரியர் அப்துல் ரகுமான் அவர்கள் தனது நூலொன்றில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். ஒரு இலக்கியப் படைப்பானது வாசகரின் பார்வைக்கு ஏற்ப பல்வேறு கருத்துக்களையும் தரக்கூடியதாக இருத்தல் வேண்டும். ஒரே வாசகனுக்குக் கூட அது சிலவேளைகளில் வெவ்வேறு கருத்துக்களைத் தரக்கூடியதாக அமையவும் வேண்டும் என்றார். அவர் ஒருமுறை இரட்டை அர்த்தத்தில் திருக்குறளின் மூன்றாம் பிரிவாகிய காமத்துப்பால் பற்றி எழுதிய,


கடைப்பால்
எனவே
கலப்புப்பால்


என்கின்ற கவிதை வரிகளுக்கு வாசகர்கள் மூன்றாவது அர்த்தம் கூறித் தன்னை வியப்பில் ஆழ்த்தியதை விபரித்திருந்தார். ஆக 'தனி' குறும்படத்திற்கு அதுவும் வசனங்கள் எதுவும் அற்றவொரு குறியீட்டுப் படத்திற்கு அவரவர்கள் தங்கள்தங்கள் புரிதலுக்கு ஏற்றவாறு மதிப்பீடுகள் வழங்கியது ஏற்றுக் கொள்ளக்கூடியதே.


ஞானி ஓஷோ அவர்கள் ஏற்கனவே ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு தனித்தனித் தீவுகளே என்று கூறியிருக்கிறார்.ஒரு குடும்பமாகட்டும் அல்லது ஒரு சமூகமாகட்டும். அங்கே இருப்பவர்கள் எல்லோருமே எல்லா விதத்திலும் ஒத்த எண்ணங்களையும் விருப்பு வெறுப்புகளையும் கொண்டிருப்பதில்லை. அந்த வகையில் அவர்களின் உலகங்கள் வேறானவை. ஒவ்வொருவரும் தனித்தனித் தீவுகளிலேயே அதாவது தங்கள் தங்கள் எண்ணங்களிலேயே வசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆயினும் அந்தத் தீவுகளுக்கிடையே ஏற்படுத்தப் பட்டிருக்கும் பாலங்களே உறவுகள் என அழைக்கப்படுகின்றன. தேவைப்படும் பொழுதுகளில் அந்த உறவுப்பாலங்களில் அவர்கள் சந்தித்துக் கொள்கின்றனர். மற்றம்படிக்கு தங்களின் தனித்தனித் தீவுகளுக்குள் மட்டுமே அவர்களின் எண்ணங்கள்/வாழ்க்கை. இப்படியான உறவுப்பாலங்கள் யாவுமே துண்டிக்கப்பட்டவர்களையே நாம் தனிமையில் வாழ்கின்றவர்கள் என்கின்றோம். சிலர் தாமாக விரும்பி இவ்வாறான உறவுப்பாலங்களைத் துண்டித்துக் கொள்கின்றனர். இவர்கள் கீதையில் சொல்லப்படுவதைப் போல், தனிமையில் கூட்டத்தில் இருப்பதைப் போலவும் கூட்டத்தில் தனிமையில் இருப்பதைப் போலவும் உணரும் வல்லமை படைத்த ஞானிகள். சிலரோ ஏனையவர்களால் துண்டித்துக் கொள்ளப்படுகின்றனர். அப்படிப்பட்டவர்களே வேதனைக்குரியவர்கள். தனிமையில் வாடித் தவிப்பவர்கள். பரிதாபத்திற்குரியவர்கள்.


சி்ஙகையில் வசிக்கும் இளைஞர்களான பாண்டித்துரை மற்றும் அறிவுநிதி ஆகியோரின் தயாரிப்பில், கவிஞர் அய்யப்பமாதவன் அவர்களின் நெறியாள்கையில் ஒளிப்பதிவாளர் செழியன் அவர்களினால் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் 'தனி' குறும்படம் தனிமையில் வாடித் தவிக்கும் ஒருவனின் நிலையை வெளிக்கொணர்வதாக அமைந்திருக்கிறது. தனியாக தனிமையில் வசிக்கும் ஆடவன் ஒருவனின் அன்றாட வாழ்க்கையினை ஏறத்தாழ பத்து நிமிடங்களிற்குள் சித்திரிக்கும் இக்குறும்படத்தினை மூன்று தடவைகள் பார்த்த பின்னரேயே மதிப்பீடு வழங்கியவர்களின் புரிதல்களை ஓரளவிற்காவது உணர்ந்து கொள்ள முடிந்தது. (இக்குறும்படம் ஏற்கனவே இந்தியாவில் திரையிடப்பட்டு http://youthful.vikatan.com/youth/documant28072009.asp என்கின்ற தளத்தில் பார்வையிடக் கூடியதாக இருப்பதை ஏற்கனவே என்னுடன் வந்திருந்த நண்பன் கூறியிருந்தான்.) கதையின் பாத்திரமான ஆடவனுடன் சில செக்கன்களே காட்டப்படும் பெண்ணும் ஒரு பூனையுமே இக்குறும்படத்தில் இடம்பெற்ற உயிருள்ள பாத்திரங்கள்.


குறும்பட வெளியீட்டினை நடாத்திய பின் தமிழ்த் திரையுலகின் ஒளிப்பதிவாளர் செழியன் அவர்களின் உரையும் அதைத் தொடர்ந்து அவருடனான கலந்துரையாடல் என்கின்ற பெயரில் கேள்வி பதில் நிகழ்ச்சியும் இடம்பெற்றது. சில வாரங்களுக்கு முன்னர் இதே தமிழ் திரையுலகிலிருந்து இயக்குனர் சேரன் அவர்களின் உரையும் அவருடனான கலந்துரையாடலும் இடம்பெற்றிருந்தது. அன்றைய நிகழ்வில் பார்வையாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த இயக்குனர் சேரன் அவர்கள் முதலெழுத்து (initial) இல்லாமல் வெறுமனே சேரன் என்றே தனது பெயரினைப் பாவிப்பதைத் தவறென்று ஏற்றுக் கொண்டாலும் இனிமேலும் அதை மாற்றுவதற்கில்லை என்று வெளிப்படையாகச் சொல்லிய பாங்கு அவர் மீதான மரியாதையை என்னுள் அதிகரிக்கச் செய்திருந்தது. ஆயினும் தரமான, குடும்பத்துடன் அமர்ந்திருந்து இரசிக்கக் கூடிய தமிழ்த் திரைப்படங்களைத் தரமுடியாதிருப்பதற்கான பிரதான காரணமாக இருப்பது தமிழ் இரசிகர்களே என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. குத்துப் பாடல்களையும் அங்கங்கள் அனைத்தையும் அரைகுறையாகக் காட்டும் விதமாக ஆடையணிந்து வரும் நடிகைகளையும் கொண்டிருக்கும் படங்களுமே வெற்றி பெறுவதாகவும். கலாச்சார விழுமியங்களைப் பேணியவாறு வரும் படங்கள் தயாரிப்பாளர்களுக்கு நட்டத்தினையே ஏற்படுத்துவதால் எந்தவொரு தயாரிப்பாளருமே அவ்வாறான படங்களில் முதலீடு செய்வதற்கு தயாராயில்லை என்பதுவே யதார்த்தம் என்றார். ஆயினும் விதிவிலக்காகவே அவரின் ஆட்டோகிராப் படம் வெற்றியீட்டியது என்றும் பொக்கிஷம் படம் நட்டத்தையே ஏற்படுத்தியதாகவும் கூறி, தமிழ் இரசிகர்கள் மீதே அதற்கான பழியினைச் சுமத்தியிருந்தார்.


ஒவ்வொரு தனிமனிதனுக்குள்ளும் பல்வேறு இரசனைகள் வக்கிரங்கள் இருந்தாலும் சமூகம் என்று வருகின்ற போது அவர்களுக்குள் தங்களது தனிமனித வக்கிர எண்ணங்களை மறைத்துக் கொண்டு தன் சமூகம் தன் குடும்பம் என்கின்ற எண்ணமே மேலெழுகின்றது. குத்துப் பாடல்களையும் அரைகுறை ஆடை அழகிகளையும் இரசிக்கும் ஒவ்வொரு மனிதனும் தன்னை அல்லது தன் குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் அவ்வாறு ஆடையணிவதையோ அல்லது அவ்வாறான படங்களைத் தன் குடும்பத்தவருடன் சேர்ந்திருந்து பார்ப்பதையோ விரும்புவது கிடையாது. தனிமனித விருப்பம் வேறு. அதே தனிமனிதர்கள் பலர் ஒன்று சேர்ந்து உருவாக்கியிருக்கும் சமூகம் என்பது வேறு. 'தாவணிக் கனவுகள்' என்கின்ற பாக்கியராஜ் அவர்களின் நடிப்பில் வெளிவந்த படத்தில்கூட இவ்வாறானவொரு காட்சியமைப்பு இருக்கிறது. திரையரங்கிற்கு தன் தங்கைகளுடன் செல்லும் ஏழைக் கதாநாயகன், படத்தில் ஆண்பெண் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் வரும் ஒவ்வொரு கட்டத்திலும் தன்னிடமிருக்கும் நாணயங்களைக் கீழே போட்டுவிட்டு தன் தங்கைகளைக் கீழே குனிந்து அவற்றைத் தேடுமாறு கூறுவார். இறுதியில் அப்படியான ஒரு காட்சி வரும்போது கீழே போடுவதற்கு அவரிடம் பணமிருக்காது. அப்போது அவரின் குட்டித் தங்கை ”அண்ணா காசு கீழே போடவில்லையா?” என்று கேட்பது, படம் பார்த்து பல வருடங்கள் கழிந்த பின்பும் இன்னமும் மனதில் நிற்கிறது. ஆக திரையுலகத்தில் உள்ளவர்களுக்கும் இப்படியான உண்மைகள் தெரிந்திருந்தும், அவர்கள் இன்னமும் தனிமனித வக்கிரங்களைத் தீர்க்கும் வகையிலான படங்களை எடுத்துத் தங்கள் கல்லாப்பெட்டிகளை நிரப்பிக் கொள்கின்றார்கள் என்பதே உண்மை. அவர்கள் ஒரு சமுதாயத்தின் விருப்பிற்கேற்ப படமெடுக்கவில்லை. மாறாக நீங்கள் விரும்பிப் பார்ப்பதையே நாங்கள் தருகின்றோம் என்றுகூறித் தம்மை நியாயப் படுத்திக் கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.


இயக்குனர் சேரனும் சரி, ஒளிப்பதிவாளர் செழியனும் சரி, தமிழ்த்திரையுலகில் காணப்படும் குறைகளை அவர்கள் அந்தத் துறையில் இருந்தாலும் வெளிப்படையாகவே ஏற்றுக் கொள்கின்றனர். மேலும் திரு. செழியன் அவர்கள் மேலும் ஒருபடி மேலே போய் பிற மொழிகளில் காணப்படும் தரமான திரைப்படங்களைச் சிலாகித்தும் அவற்றையும் தமிழ் இரசிகர்கள் பார்வையிட வேண்டும் என்று சொன்னதுடன் மட்டுமல்லாது அவ்வாறான தரமான பிறமொழிப் படங்கள் பதினைந்தினை தான் பாண்டித்துரை அவர்களிடம் கொடுத்திருப்பதாகவும் யார் வேண்டுமானாலும் அவற்றைப் பிரதி பண்ணி வீட்டில் சென்று பார்வையிடுமாறும் கூறினார்.


எப்படி ஒரு ஒளிப்படக் கருவியானது தான் காண்பவற்றை எந்தவித உணர்ச்சி வெளிப்பாடுகளுமின்றி அப்படியே பதிவு செய்து கொள்கிறதோ, அவ்வாறே ஒளிப்பதிவாளர் செழியனும் தனது உரையின் போதும், பின் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதும் ஏற்றவிறக்கமின்றிய உணர்ச்சிவசப்படாத ஒரே குரலிலேயே பதிலளித்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


அண்மையில் நான் மிகவும் இரசித்த 'மறைபொருள்' என்னும் தலைப்பிலான குறும்படம் கீழே உங்கள் பார்வைக்காக.

தொல்லைபேசிகளாகும் தொலைபேசிகள்!

மலேசிய வானொலியாகிய மின்னல் F.M. இன் நேற்றைய கண்ணாடித்துண்டுகள் என்னும் பெயரிலான சமூகப்பிரச்சினைகளை அலசி ஆராயும் நிகழ்ச்சியினை செவிமடுத்த போதினில் நெஞ்சு பகீரென்றது. வரும் குறுந்தகவல்கள் (SMS) மற்றும் அறியாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புக்கள் எத்தனை தூரத்திற்கு இளையவர்களுக்கு, அதிலும் குறிப்பாக பள்ளிப்பருவப் பெண்களுக்கு ஆபத்தினை ஏற்படுத்துகின்றது என்பதைப் பாதிக்கப்பட்டவர்கள் பகிர்ந்து கொண்ட போது நெஞ்சடைத்துப் போனது.

பொதுவாக முன்பின் தெரிந்திராத நபர்களிடமிருந்து வரும் குறுந்தகவல்கள், அதை அனுப்பியவர் யாராயிருக்கும் என்கின்ற ஆவலைத் தூண்டிவிடும். அதிலும் குறிப்பாக இளையவர்கள் அதனை ஒரு புதிர் போல எண்ணி அதை விடுவிக்கும் முயற்சியில் இறங்கி விடுகிறார்கள். எனவே அவர்களும் பதில் அனுப்ப, அவர்களைச் சுற்றிப் பின்னப்பட்ட வலைக்குள் அவர்கள் விழுந்து விடுகிறார்கள். குறுந்தகவல்களினூடாக ஏற்படும் உறவுகளுக்குள் சிக்கியவர்களில் இளம்பெண்களே கூடுதலான பாதிப்பினை அனுபவிக்கிறார்கள். நேற்றைய நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவி கூறியவாறு சிலவேளைகளில் அதன் பாதிப்பு அவர்களின் வாழ்க்கை முறையையே மாற்றிவிடுகிறது. அல்லது அவர்களை ஒருவகை மனநோய்க்குள் தள்ளி விடுகிறது. தமக்கு ஏற்பட்ட பாதிப்பினை பெற்றோர்களிடம் கூடச் சொல்வதற்கான அவர்களின் தயக்கத்தால் அவர்கள் மனநோயாளிகளாக மாறிவிடும் அபாயமும் இருக்கிறது.

அந்த நிகழ்ச்சியில் கல்நது கொண்ட கல்வியியலாளர்கள் கூறியது போல் சிறுவர்களுக்கு கைத்தொலைபேசி தேவைதானா என்கின்ற கேள்வி நியாயமானதாகவே எனக்கும் பட்டது. கைத்தொலைபேசியால் சிறுவர்களுக்கு கிடைக்கும் அனுகூலங்களை விட பிரதிகூலங்களே அதிகம். அதிலும் இப்போது video-camera உட்பட இணையத் தொடர்பு வசதிகளும் கைத்தொலைபேசியில் கிடைக்கப்பெறுவதால் பதின்ம வயதினரின் முக்கிய கவனக்கலைப்பானாக இந்தக் கைத்தொலைபேசிகள் மாறி விடுகின்றன. பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவிடப் பெற்றோர்களாலும் முடியாதிருப்பதால் பிள்ளைகள் என்ன செய்கின்றார்கள் என்பதை அறியாது தங்கள் பிள்ளைகள் அப்பாவிகள் என்றே பெரும்பாலான பெற்றோர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

இந்தக் கைத்தொலைபேசிகளால் ஏற்படும் தொல்லைகள் பதின்மப் பருவத்தினரை மட்டும் தான் பாதிக்கின்றன என்று சொல்வதற்கில்லை. ஆயினும் பாதிக்கப்பட்டவர்களில் பெருமளவிலானோர் பதின்மப் பருவத்தினராகவே காணப்படுகின்றனர். நேற்றைய கண்ணாடித்துண்டுகள் நிகழ்ச்சியினை செவிமடுத்துவர்கள் பல தகவல்களை அறிந்திருப்பார்கள். அந்நிகழ்ச்சியினை வழங்கியவர்கள் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்கள்.

எனக்கும் இப்படியான முன்பின் அறிந்திராத நபர் ஒருவரிடமிருந்து தொல்லை வந்து கொண்டிருந்தது. அது 2003ஆம் ஆண்டு காலப்பகுதி. ஒரு நாள் நள்ளிரவு தாண்டிய நேரம் திடீரென தொலைபேசி அலறியது. நித்திரை குழம்பி அதை எடுக்க கையசைக்க அழைப்பொலி நின்று விட்டது. யாராயிருக்கும் என்கின்ற நினைப்புடன் அழைப்பு எண்ணைப் பார்த்த போது, அது புதிய இலக்கமாயிருந்ததுடன் அதே இலக்கத்திலிருந்து ஒரு குறுஞ்செய்தியும் வந்திருந்தது. 'Sellam niththiraiyaa? Good night da sellam'. மண்டை குறுகுறுத்தது. எவன்டா அவன்? அறுப்பான் நித்திரையால இருக்கிறவனை எழுப்பி good night சொல்லுறது என்கின்ற ஆத்திரத்துடன் அந்த இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்த இணைப்புத் துண்டிக்கப் பட்டது.

தொடர்ந்து சில நாட்களுக்கு நள்ளிரவு ஒரு மணி இரண்டு மணிக்கெல்லாம் குறுஞ்செய்தியும் சில கணநேர அவகாசத்தில் துண்டிக்கப்படும் அழைப்புகளும் தொடர்ந்தன. நான் அழைப்பினை ஏற்படுத்த இணைப்புத் துண்டிக்கப்பட்டு விடும். அட! யாரோ ஒரு பொண்ணு எனக்கும் ரூட்டு விடுது என்று மனதுக்குள்ளும் சின்னதாய் ஒரு சந்தோசம்.

அந்த சந்தோசம் ஒரு நாள் கூட நிலைக்கவில்லை. மறுநாள் வந்த குறுஞ்செய்தி விசரைக் கிளப்பியது. “Ennadi nee, naan eththanai sms anuppuran nee oru sms kooda enakku anuppa maaddiyaa?". அந்தச் செய்தியைப் பார்த்ததும் யாரோ என்னைக் காய வைக்கிறார்கள் அல்லது தவறுதலாக எனக்கு அனுப்புகிறார்கள் என்றே எனக்குப் பட்டது. எனவே பதிலுக்கு அவர் யாரெனக் கேட்டு குறுஞ்செய்தி அனுப்பினேன். “Your sweet heart" என உடனேயே பதில் வந்தது. சரி விளையாடுறான். வாடா மாப்பிள, வந்து மாட்டிக்கிட்டியா நாங்களும் விளையாடுவோம்ல, என்கின்ற எண்ணத்தில் நானும் அந்த முகமறியாத் தொடர்புடன் விளையாடத் தொடங்கினேன்.

நண்பன் ஒருவனின் உதவியுடன் தொலைபேசி இலக்கத்தை வைத்து அந்த நபரின் விபரங்களை அறிந்த போது அவர் என்னிலும் 8 வயதுகள் குறைந்த ஒரு மாணவன் என அறிய வந்தது. அவன் நான் பெண் எனவே நம்பிவிட்டான். என்னை சீரியசா காதலிப்பதாக வேறு குறுஞ்செய்திகளில் உளற ஆரம்பித்தான். இத்தனைக்கும் ஒருதடவை கூட தொலைபேசியில் உரையாடியதில்லை. ஒருநாள் அதிகாலை 3 மணியளவில் “Intraikku enka veeddila maadu kantru poaddathu. enakku un gnaapakam thaan. niththirai varukuthillai. sms anuppudi" என்று குறுந்தகவல் அனுப்பி விட்டு துண்டித்த அழைப்பினை (missed call இனை தமிழில் துண்டித்த அழைப்பு எனலாமா?) ஏற்படுத்தினான். வழமை போன்றே நானும் சற்று நேரம் கழித்து துண்டித்த அழைப்பினை ஏற்படுத்தினேன். மறுநாள் யோசித்த போது பாவமாய் இருந்தது. எனக்கு இதுவரையிலான செலவு 2.00 ரூபாய் தான் (ஒரேயொரு குறுஞ் செய்தி மட்டுமே. மற்றதெல்லாம் துண்டித்த அழைப்பு). ஆனால் அவனுக்கோ அது 200.00 ரூபாயையும் தாண்டி விட்டிருந்தது. மேலும் விளையாட்டைத் தொடருவும் மனம் விரும்பவில்லை.

மறுநாள் பொதுத் தொலைபேசியில் அவனை அழைத்து விபரம் சொன்னபோது அதிர்ந்து விட்டான். ஆனாலும் அவன் லேசுப்பட்ட ஆளில்லை. வெள்ளவத்தை W.A.சில்வா மாவத்தையில் இருந்து கொண்டு வீட்டிலை மாடு கன்று போட்டிருக்குதென்று கதை விட்டிருக்கிறான். தன்னுடன் இணையத்தில் பெண் பெயரில் chat செய்த ஒருவரே தனது தொலைபேசி இலக்கம் என்று என்னுடைய இலக்கத்தினை அவனுக்குக் கொடுத்ததாகக் கூறினான். இதைப் பற்றி என் நண்பர்களிடம் கூறி அந்த குறுஞ்செய்திகளைக் காட்டியபோது அவர்களும் “மச்சான் இதே உண்மையில ஒரு பெட்டைக்குப் போயிருந்துதெண்டா அவன்ரை லவ் சக்சசாகியிருக்கும்” என்றனர். உண்மைதான் பெரும்பாலான குறுஞ்செய்திகள் அவ்வளவு உருக்கமாகவும், மனதைக் கரைப்பனவாகவுமே இருந்தன.

ஆக பெற்றோர்களே உங்கள் பதின்மவயதுப் பிள்ளைகளின் கைத்தொலைபேசிகள், அழைப்புக்கள், குறுந்தகவல்கள் தொடர்பாகக் கவனமாக இருங்கள். சரி பெரியவர்கள் என்று அழைக்கப்படுகின்றவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை இந்த அசைபடத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.