Thursday, November 12, 2009

தொடரூந்து (MRT) எனக்கொரு போதிமரம்


இன்றைய மதிய நேரம். ஒரு கோடியிலிருந்து மறுகோடி வரையிலான நீண்ட தொடரூந்துப் பயணம். ஆரம்பத்தில் பயணிகள் அதிகம் இல்லையாயினும் பயணத்தூரம் செல்லச்செல்ல இருக்கைகள் நிரம்பி, நின்று கொண்டு பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. தொடரூந்து நிலக்கீழ்ச் சுரங்கத்திற்குள் நுழைய அலைபேசியின் வானொலி இணைப்புத் துண்டிக்கப்பட்டது. சுற்றிவர நோட்டமிட்டேன். வழமை போன்றே ஒவ்வொரு பயணிகளும் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாதது போல் தங்கள் தங்கள் உலகில் ஜீவித்துக் கொண்டிருந்தார்கள். அநேகமானோர் காதுகள் iPod-உடனேயே இணைக்கப்பட்டிருந்தன. சிலர் PSP (PlayStation Portable) யில் தீவிரமாக விளையாடிக்கொண்டிருந்தனர்.

அடுத்த தரிப்பிடத்தில் இறங்குவதற்காய், எனக்கருகிலிருந்தவர் எழ, அந்த இருக்கையைக் குறிவைத்து ஒரு சீன இளம்பெண் வந்தாள். அங்கங்கே அங்கங்கள் காட்டும் ஆடையுடன் மதர்ப்பாயிருந்தாள். வாளிப்பாய், வனப்பை அள்ளிக்குவித்து வைத்தது போல் கவர்ச்சியாய் இருந்தாள். அருகில் அமர்ந்ததும் உள்ளம் கிளுகிளுப்பாவதை உணர்ந்தேன்.

அடுத்து வந்த தரிப்பிடத்தில் எனக்கு மறுபக்கத்தில் அமர்ந்திருந்தவர் எழ, அப்போதுதான் உள்ளே நுழைந்த இன்னோர் சீன மூதாட்டி அதில் வந்தமர்ந்தாள். உற்று நோக்கினேன். கூன்விழுந்து உடல் தளர்ந்து நரைதிரை கண்ட பெண். கைகளில் முகத்தில் ஆங்காங்கே பட்டைபட்டையாய் தோல் உரிந்தும் சில இடங்களில் புண்ணாகியும்...அருவருப்பாய் உணர்ந்தேன்.

எனக்குள் பார்த்தேன். ஒருபுறம் தேவதை மறுபுறம் தேவாங்கு என்று எழுந்த எண்ணம் மறுகணமே அடங்கிப்போனது. இப்போது என்னால் அருவருப்பாய்ப் பார்க்கப்படுகின்ற இந்த முதிய பெண்ணும் பல ஆண்டுகளுக்கு முன்னர், அப்போதைய இளைஞர்களுக்கு ஒரு தேவதையாய் இருந்திருக்கக்கூடும். யார் கண்டது, எத்தனை இளைஞர்கள் இவள் பின்னால் அலைந்தார்களோ? இதோ இப்போது என்மறுபக்கத்தில் சுண்டி இழுக்கும் கவர்ச்சியுடன் காணப்படும் இந்த இளம்பெண் இன்னும் பல ஆண்டுகள் கழித்து, அப்போது வரும் இளைஞர்களால் அருவருப்பாய்ப் நோக்கப்படக்கூடும்.

அழகு, நிரந்தரமற்றதெனினும் முதற்பார்வையில், நாம் அழகாய் தெரிபவற்றின் மேல் கவரப்படவும் அசிங்கமாய் தெரிபவற்றின் மேல் வெறுப்புறவும் தானே செய்கிறோம். வாழ்வின் இருகோடி அந்தங்களும் என் இருபுறமும் இப்போது இருப்பதாய் எனக்குப்பட்டது. அழகைக் கண்டு ரசிப்பதா? அல்லது அசிங்கத்தைப் பார்த்து வெறுப்பதா? உணர்வுகள் திண்டாடின.

சரி! இந்த மூதாட்டியை எல்லோருமே அருவருப்பாய்த்தான் பார்ப்பார்களா? மீண்டும் அந்த மூதாட்டி பக்கம் திரம்பினேன். அட! அவருக்கு மறுபுறம் அவரை ஆதுரமாய் அணைத்தவாறே ஒரு வயோதிகர், அவரின் கணவராய் இருக்க வேண்டும். இருவருமே மிகவும் மகிழ்ச்சியாக தங்களுக்குள் உரையாடிக்கொண்டிருந்தனர்.

என்னால் அருவருப்பாய் வெறுக்கப்பட்ட அதே பெண், இன்னொருவருக்கு விருப்புக்குரியவராய் அழகானவராய்த் தெரிகிறார். “காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு” என்கின்ற பழமொழி ஞாபகத்தில் வந்து போனது. ஆக அவர் அருவருப்பாய் எனக்குத் தெரிவது எனது பிரச்சனையே அன்றி அந்த மூதாட்டியின் பிரச்சனையல்ல. அப்படியானால் எனக்கு அழகாய்த் தெரியும் மறுபுறம் அமர்ந்திருக்கும் அந்தப் பெண்ணும் வேறு யாராலும் வெறுக்கப்படக் கூடுமா? என்கின்ற கேள்வி எழுந்தது. இருக்கலாம், யாருக்குத் தெரியும்? “ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளே இருப்பது ஈரும் பேனுமாம்”. பொதுவாக அழகான பெண்களிடம் காணப்படும் அகங்காரத்தினால் எத்தனையோ பேரை இவள் கேவலமாக நடத்தியிருக்கக்கூடும். சிலவேளைகளில் இவள் அகங்காரமற்றவளாய், எல்லோருடனும் அன்பாய் பழகுவளாய்க்கூட இருக்கலாம். இல்லை வேறுவிதமான இரசனை கொண்டவர்களுக்கு சிலவேளை இவள் அசிங்கமாய்க்கூடத் தெரியலாம். ஆக இவள் எனக்கு அழகாய்த் தெரிவதும் எனது பிரச்சனையே அன்றி அவளுக்கும் அதற்கும் சம்பந்தமேயில்லை. ஒரு தெருநாய்க்கு ஒரு குட்டை போட்ட பெட்டைநாய் தான் அழகாய் கவர்ச்சியாய்த் தெரியுமேயன்றி ஐஸ்வர்யாராய் அல்ல.

அழகுகூட ஒரு ஒப்பீடே என்றது உள்மனது. உண்மைதான் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு இன்னொருபொருள் கிடைக்காத போதுதான் நாம் ஒன்றை அப்படியே அது உள்ளவாறே ஏற்றுகொள்வோம். ஆனால் அப்படி, ஒப்பிடமுடியாத ஒரு பொருள் என்று எதுவும் எம்மிடையே உள்ளதா?

உண்மையைச் சொல்லுங்கள். இந்தக் கேள்வியை வாசித்ததும் உங்களுக்குள் ஒரு ஒப்பீடு நடந்ததா? இல்லையா? இதுதான், இந்த ஒப்பீடுதான் எமது எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம். ஆனால் இதே ஒப்பீடுதான் இன்றைய விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சிக்கும் காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக நாம் பிரச்சனைகள் என்று எண்ணுபவற்றிற்கு காரணம் நாம் ஒப்பிடும் பொருட்கள் அல்ல, மாறாக நாம்தான் எமது பிரச்சனைகளுக்குக் காரணம் என்பது புரிந்தது.

இப்போது அந்த அழகிய இளம்பெண் பக்கம் திரும்ப அவள் எனக்கு இளம்பெண்ணாக (அழகிய விடுபட்டுப் போனது) தெரிந்தாள். மறுபுறம் திரும்ப அசிங்கமாய்த் தெரிந்த மூதாட்டி, வயதான பெண்ணாக (அசிங்கம் விடுபட்டுப் போனது) தெரிந்தார். ஏதோ புரிபட்டதாய் உணர்ந்தேன். இன்னும் ஒப்பீடு இருப்பதாகவே தெரிந்தது. நேரம் செல்லச்செல்ல இருவரும் பெண்களானார்கள் (இளமை/முதுமை என்பது விடுபட்டுப் போனது). மேலும் சில கணங்கள் கழிய இருவருமே சக மனிதர்களானார்கள் (பெண்கள் என்பது விடுபட்டுப்போனது). மேலும் சில கணங்கள் கடக்கையில்... நான் இறங்கவேண்டிய தரிப்பிடம் வந்துவிட்டதாக அறிவிக்கப்பட சிந்தனை கலைந்து வெளியே வந்தேன்.

வெளியே வானொலிக்கான சமிக்ஞைகள் இல்லாததால் iPod-இனை அணிந்து கொண்டேன்.

“...எறும்புத்தோலை உரித்துப் பார்த்தேன், யானை வந்ததடா. -நான்
இதயத்தோலை உரித்துப் பார்த்தேன் ஞானம் வந்ததடா...”

கண்ணதாசனின் பாடல்வரிகள் அர்த்தத்துடன் செவிகளை வந்தடைந்து கொண்டிருந்தன.

Monday, November 9, 2009

வள்ளுவர் ஆணாதிக்கவாதி. தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளையையும் கிள்ளிய டாக்டர் கி.வீரமணிசிங்கப்பூர், பெரியார் சமூக சேவை மன்றத்தின் ஏற்பாட்டில், நேற்றைய (08 நவம்பர் 2009) மாலை வள்ளல் பொ.கோவிந்தசாமிப்பிள்ளை திருமண மண்டபத்தில் நடைபெற்ற, 'பெரியார் கண்ட வாழ்வியல்' எனும் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தோம்.


புதுமைத் தேனி மா.அன்பழகன் அவர்கள் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்த எம்.இலியாஸ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். வழமையான வரவேற்புரை போன்றல்லாது அது, வரவிருக்கும் செம்மொழி மாநாட்டினையொட்டியதான ஒரு வேண்டுகோள் உரையாகவும் அமைந்திருந்தது. பின் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் “புதியதோர் உலகம் செய்வோம்...” பாடலுக்கு மாணவியொருவர் மிக அற்புதமாக நடனமாடினார். பின்னர் வந்த குழந்தையொன்று “தமிழுக்கு அமுதென்று பேர்...” என்கின்ற பாடலை வயதிற்கு மீறிய முதிர்ச்சியுடன் மிக அருமையாகப் பாடினார்.

இம்முறை முதன்முறையாக சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தினரால் 'பெரியார் விருது' விருது வழங்கப்பட்டது. சிங்கை தேசிய நூலக வாரியத்தின் மூத்த அதிகாரி திருமதி புஷ்பலதா அவர்கள், தமிழ்மொழி வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய/ஆற்றிக் கொண்டிருக்கும் பணிக்காக அவ்விருது, வழங்கிக் கௌரவிக்கபட்டார்.

டாக்டர். சோம. இளங்கோவன் அவர்களின் வாழ்த்துரையினை அடுத்து தமிழ்நாடு திராவிடர் கழகத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் சிறப்புரை ஆரம்பித்தது.


அவரின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவர் 30 நிமிடங்கள் மட்டுமே உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் பெருமளவு நிமிடங்களுக்கு மேடையில் அமர்ந்திருந்தவர்களைப் பற்றியே புகழ்ந்து கொண்டிருந்தபோது, ச்சே! 30 நிமிட நேரத்தையும் இப்படியே தான் விரயமாக்கப் போகின்றாரோ என்று, அவரிடம் வேறு பல விடயங்களையும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த மனது சலிததுக் கொண்டது. பின் அவர் பெரியாரின் வாழ்வில் இடம்பெற்ற பல சம்பவங்களையும் பகிர்ந்து கொண்டபோது என்ன மனிதர் இவர்? இப்படிக் கீழ்த்தரமானவராக நடந்து கொள்கின்றாரே என்றுதான் எண்ணத்தோன்றியது.

பெரியார் ஒருபோதுமே தன்னை யாரும் மேடையில் வைததுப் புகழ்ந்து பேசுவதை விரும்பியதில்லை. மேலும் அவர், ஒருவரை மிகக் கடுமையாகத் தண்டிக்க வேண்டுமெனில், தண்டிக்கப்பட வேண்டியவரை மேடையில் ஏற்றி வைத்துவி்ட்டு அவரைப்பற்றிப் புகழ்ந்து கொண்டே இருந்தால் அதை விடக் கடுமையான தண்டனை வேறொன்று இருக்க முடியாது என்றார். அப்படியானால் மேடையில் இருந்து விழாவைச் சிறப்பித்தவர்கள் மேல் டாக்டர் கி. வீரமணி அவர்களுக்கு அப்படி என்ன கோபமோ? தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளைகளையும் கிள்ளி விட்டிருந்தார்.

30 நிமிடங்களைத் தாண்டி சூடுபிடித்து நீண்டு சென்ற உரை ஒரு மணித்தியாலத்திற்கும் அதிகமான நேரத்தினை விழுங்கி விட்டிருந்தாலும் பார்வையாளர்களைத் தனது பேச்சினால் கட்டிப்போட்டிருந்தார். பெரியார் கண்ட வாழ்வியலினை பலரும் முறையாக அறிந்திருக்கவில்லை என்று குறைபட்டுக் கொண்டார். பெரியாரைப் பற்றிப் பலரும் அறிந்திருந்தாலும் அவர்களில் பெரும்பாலானவர்களும் குருடர்கள் பார்த்த யானை போன்றே பெரியாரின் ஒவ்வொரு பக்கங்களை மட்டுமே அறிந்திருப்பதாகவும் கூறினார். உண்மைதான், பெரியாரினால் வலியுறுத்தப்பட்ட பெண்விடுதலை, சிக்கனம், சீர்திருத்தத் திருமணம் என்பவற்றையெல்லாம் விட்டுவிட்டு , நாத்திகம் பேசுவதற்கு மட்டுமே இப்போதெல்லாம் பெரியாரின் பெயர் உபயோகிக்கப்படுகிறது.

“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்”

என்கின்ற குறளினை உவமைக்கு எடுத்திருந்த டாக்டர் கி.வீரமணி அவர்கள், ஆண்களை மட்டுமே இக்குறள் குறிப்பதாகக் கூறினார். மேலும்,

“ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்”

என்கின்ற குறளினையைம் கூறிய அவர் வள்ளுவர் ஆணாதிக்க வாதியாக இருந்திருப்பாரோ என்கின்ற சந்தேக விதையினையும் தூவிவிட்டிருந்தார். ஒரு ஆணுக்கு இந்த சமூகத்தில் என்னென்ன உரிமைகள் உள்ளதோ அதே உரிமைகள் ஒரு பெண்ணுக்கும் இருக்கவேண்டும் என்பதற்காக பெரியார் அயராது உழைத்ததாகவும் கூறினார். சிங்கப்பூர், எப்போதோ பெரியார் கண்ட, பெண்விடுதலையை அடைந்து விட்டிருப்பதைப் பார்த்து தான் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறினார்.

நிகழ்ச்சிகள் நிறைவுற வெளியே வந்தோம். அப்போது வயதானவர் ஒருவர் எங்களருகில் வந்து நாங்கள் எங்கே இருக்கின்றோம் என்று வினவினார். நாங்கள் சொன்னதும், என்னருகில் நின்றிருந்த அம்மாவிடம் “உங்கள் பெண்பிள்ளைகள் யாரும் மணமாகாமல் இருக்கின்றார்களா?” என்றார். ஒருவேளை அந்த அம்மாவிற்கு தெரிந்தவராய் இருக்கலாம் என்கின்ற எண்ணத்தில் நான் பார்வையாளனானேன். அவர் தனது மகனுக்குத் தகுந்த பெண் தேடுவதாகவும், ஊரில் (இந்தியாவில்) பெண்கள் இருந்தால் அறியத்தரும்படியும் கேட்டது தான் அந்த உரையாடலின் சாராம்சம். பின் அநத அம்மாவுடன் உரையாடிய போது இன்றுதான் அவரை முதன்முதலில் சந்திப்பதாகவும், இங்குள்ள பெரும்பாலான பெற்றோர் தங்கள் ஆண்பிள்ளைகளுக்கான மணமகள்களை ஊரிலேயே தேடுவதாகவும், அப்படி இணைந்து கொண்ட குடும்பங்கள் ஒற்றுமையாக இருப்பதாகவும், இங்கேயே திருமணம் செய்து கொண்ட பெரும்பாலனவர்களின் குடும்பங்கள் விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் நிற்பதாகவும் கூறினார். அப்படியானால், இதைத்தான் பெரியார் கண்ட பெண்விடுதலை என்பதா?