Tuesday, April 26, 2011

வேரென நீயிருந்தாய்...(28)

அது 2000ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டு. மூன்றாம் வருட நிறைவின் பின்னான தொழில்சார் பயிற்சிநெறி (Industrial Training) எங்களுக்கு ஆரம்பித்து விட்டிருந்தது. நானும் தீபனும் கொழும்பில் அரச பொறியியற் கூட்டுத்தாபனத்தில் எங்களுக்கான தொழில்சார் பயிற்சியினை மேற்கொண்டிருந்தோம். இப்போதும் இருவரும் ஒன்றாகவே ஒரே அறையில் தெஹிவளையில் தங்கியிருந்தோம். வார விடுமுறை நாட்களில் மதிய உணவிற்காக றொலெக்ஸ் அல்லது மயூரி-க்குச் செல்வது எங்களது வாடிக்கையாகிப் போனது.

“ஜேன் டேய்! அப்பிடியே சும்மா திரும்பிற மாதிரி பின்னால திரும்படா. உடனே திரும்பாத. மெதுவா”

வாயில் வைக்கக் கொண்டுபோன சிக்கன் லெக்பீஸை வைத்துவிட்டுத் திரும்ப,

“விடு மச்சான். miss-ஆகிற்றுது”

என்னடா நீ? திரும்பச் சொல்லுற. பிறகு miss-ஆகிற்றுது எண்டுற. என்ன நடக்குது?

“இல்லையடா! ஒரு சரக்கொண்டு உனக்கு எறிஞ்சு கொண்டிருந்தது. அதுதான் உனக்குத் தெரிஞ்ச ஆளா எண்டு பார்க்கத்தான். ப்ச்! அதுக்குள்ள அவள் நழுவீற்றாள்”

“நீ என்ன லூசாடா? எப்பப் பார் சரக்குகளின்ர கதைதான்”

“இல்ல மச்சான்! உண்மையிலயே நீ மச்சக்காரன் தான்ரா. அங்க 'பெரா'வில அவள் விடுறாளில்ல. இஞ்ச கொழும்புக்கு வந்து ரெண்டு மாசம்கூட ஆகேல்ல. அதுக்குள்ள இன்னொண்டு. குடுத்து வச்சனியடா”

“அம்மாண! பேய்ப்.. உனக்கு வேறைவேலையில்ல. சும்மா கதை கட்டிக்கொண்டு திரி.”

“இஞ்ச வா! நான் என்ன சும்மாவா கதை கட்டுறன். உள்ளதைத் தானே சொல்லுறன். சத்தியமாடா. நான் நாலைஞ்சு தரம் நோட் பண்ணீற்றன். நாங்க சாப்பிட வாற நேரத்தில இவளும் வந்து உனக்கு எறிஞ்சு கொண்டிருக்கிறாள். நம்பாட்டி நாளைக்கு நீ வந்து இந்தப் பக்கமா இருந்து சாப்பிடு. அப்ப தெரியும் அவள் ஆரப் பார்க்க வாறாள் எண்டு.”

“வேறை வேலையில்ல. ஆரு கண்டது? அவள் உன்னைப் பார்க்கத்தான் வாறாளோ?”

“பேய்ப்... சொன்னா நம்படாப்பா. இப்பிடித்தான் அவள் நதீஷாவையும் சொல்லேக்க நீ நம்பேல்லத்தானே.”

“இஞ்ச வா! இப்ப என்ன கதைக்கிறாய் நீ?”

“முதல் நான் சொல்லேக்க நீ அவள் சும்மா friendly-யாத் தானே பழகிறாள் எண்டு சொன்னீ.”

“ஓ! இப்பையும் அவள் friendly-யாத்தானே பழகிறாள். அவள் என்ன, என்னை லவ் பண்ணுறன் எண்டா சொன்னவள்?”

“அப்ப ஏன் நீ அவளை காய்வெட்ட ஐடியா கேட்டனீ?”

“எனக்கு அவள் கூட close ஆப் பழகிறது uncomfortable-ஆ இருந்துது. அதாலதான் கேட்டன்.”

“அடிச்சுச் சொல்லுறன். இருந்துபார்! கம்பஸ் முடியிறதுக்குள்ள உன்னட்ட வந்து அவள் propose பண்ணுவாள்.”

“எங்க பார்ப்பம். நான் சொல்லுறன் அப்பிடியெல்லாம் ஒண்டும் நடக்காது.”

“எனக்கு மட்டும் என்ன, அப்பிடி நடக்க வேணுமெண்டா விருப்பம்? ஆனா உன்ர குடும்ப நிலை தெரியும்தானே. அதால எதுக்கும் நீ alert-ஆ இருக்கிறது நல்லது.”

றொலெக்ஸை விட்டுக் கிளம்பி அறைக்கு வந்து சேர்ந்த பின்னும் தீபனின் வார்த்தைகள் மனதை அலைக்கழித்துக் கொண்டிருந்தன.

*** *** ***

“நான் serious-ஆத் தான் கேட்கிற. உங்கட life style-ஐப் பற்றிச் சொல்லுங்க”

“அது ஏன் உங்களுக்கு?”

“சும்மா ஒரு GK-க்குத்தான். இப்பொல்லாம் சிங்கள ஆக்களுக்குள்ள arranged marriage நடக்கிறது நல்லாக் குறைஞ்சு போச்சு.”

“தமிழ் ஆக்கள் அப்பிடியில்ல. அனேகமா எல்லாமே arranged marriage தான்”

“அப்ப நீங்களும் arranged marriage தானா?”

“ஏன் கேட்கிறீங்க?”

“கேட்ட கேள்விக்கு answer பண்ணுங்களன் please"

"கல்யாணத்தைப் பற்றியெல்லாம் நான் ஒண்டும் யோசிக்கேல்லை. அப்பிடி நடந்தாலும் அது arranged marriage -ஆத்தான் இருக்கும்.”

“ம்ம்ம்....ஒயாத் typical தெமிழ கட்டி தமாய்” (நீங்களும் typical தமிழ் ஆள் தான்).

”ஏன் அப்பிடிச் சொல்லுறீங்க?”

“தமிழ் girls சொல்லுறவை, dowry வாங்கிறதுக்காகத்தான் தமிழ் ஆக்கள் love marriage பண்ணாம arranged marriage பண்ணுறவை எண்டு. நான் நினைச்சன் நீங்க different-ஆ இருப்பீங்க எண்டு. ஆனா இப்ப விளங்குது நீங்களும் dowry வாங்கிறதுக்காகத்தானே லவ் பண்ணாம இருக்கிறீங்க?”

“ஹலோ மேடம்! arranged marriage-இலயும் சீதனம் வாங்காமக் கட்டலாம்.”

“அப்ப நீங்க சீதனம் வாங்க மாட்டீங்களா?”

கடவுளே! இவளை என்ன செய்யுறது? சுத்திச்சுத்தி அங்கதான் வரப்போறாளோ? மனது வெறுத்தது.

“ஏன் கேட்கிறீங்க,? எனக்கு என்னத்துக்கு சீதனம் தேவை?”

“வாங்குவீங்களா? மாட்டீங்களா?”

“அதையேன் உங்களுக்கு?”

“இல்லை. சீதனம் வாங்குவீங்களெண்டால் உங்களுக்கு நானே ஒரு கல்யாணத்தை arrange பண்ணி broker காசு வாங்கலாம் எண்டுதான்”

“உங்களுக்கென்ன நட்டுக் கழண்டிட்டுதா?” எழுந்த கடுப்பை அடக்கமுடியவில்லை.”

சிரித்தாள்.

“சும்மா joke-க்குத்தான். ஏன் serious-ஆ எடுக்கிறீங்க?”

“உங்களுக்கு வேணுமெண்டா எல்லாம் joke-ஆ இருக்கலாம்.”

“ஏன் திரும்பவும் ரென்சனாகிறீங்க? நீங்க சிரிச்சா எவ்வளவு வடிவா இருக்கிறீங்க தெரியுமா?”

“நாடு கெட்ட கேட்டுக்கு நரிக்கு உழுந்துவடை கேட்டிச்சாம்.”

“உங்களுக்கு உண்மையா என்ன பிரச்சனை? ஏன் எப்பவுமே உம்மெண்டு கொண்டு இருக்கிறீங்க? எப்பிடிச் சிரிக்கிதெண்டு உங்கட அம்மா சொல்லித்தரேல்லையா?”

“mind your words. இப்ப எதுக்குத் தேவையில்லாம இதுக்குள்ள என்ரை அம்மாவை இழுக்கிறீங்க?”

எழுந்த கோபத்தை அடக்க முடியாமல் வெளிக்காட்டினேன்

“Sorry sorry! நான் சும்மா joke-ஆத் தான் கேட்டனான். please cool down. I'm really sorry Jeyanthan. உங்களைச் சிரிக்க செய்யுறதுக்காகத்தான் நான் அப்பிடிக் கேட்டது. please Jeyanthan, please forgive me"

அவள் கெஞ்சுவதைப் பார்க்கப் பாவமாய் இருந்தது. அவள் முகத்தில் சோகம் கவிந்து கொண்டது அப்பட்டமாய்த் தெரிந்தது.

“உங்களுக்கு எங்கட அம்மாவைப் பற்றித் தெரியாது. அதாலதான் இப்பிடிக் கதைக்கிறீங்கள்”

அமைதியாயிருந்தாள்.

“எங்கட தமிழ்ப் பெம்பிளைகளுக்கு தாலி எவ்வளவு முக்கியமெண்டு உங்களுக்குத் தெரியுமா? புருஷன் செத்து தாலி இழந்த விதவைகளாயிருக்கிறவையின்ர நிலைமை தெரியுமா? அதைவிடக் கொடுமை தாலியை வைச்சுக்கொண்டு அதைப் போடுறதா விடுறதா எண்டு தவிக்கிறது. உங்கட ஆமிக்காரர் பிடிச்சுக்கொண்டு போன அப்பா உயிரோட இருக்கிறேரா இல்லையா எண்டு தெரியாம, தாலியைக் கழட்டுறதா போட்டுக் கொண்டிருக்கிறதா எண்டுற குழப்பம். குங்குமப் பொட்டு வைக்கிறதா விடுறதா எண்டுற சிக்கல். அதுக்குள்ள ஊர்ச்சனத்தின்ர நக்கல் ஒரு பக்கம். குங்குமம் வைச்சுக் கொண்டு போனா, அவர் உயிரோடை இருக்கிறேர் எண்டு ஆரும் சொன்னவையோ, ஆமிக்காரர் பிடிச்சுக்கொண்டு போன எல்லாரையும் சாக்காட்டிப் போட்டாங்கள். அந்த மனிசனுக்குச் செய்ய வேண்டிய கிரியைகளையாவது செய்யுங்களன் எண்டுறவையும். குங்குமம் வைக்காமப் போனா, ஆமிக்காரர் பிடிச்சுக் கொண்டு போன ஆக்களில கனபேரை இன்னும் கொழும்பில அறிவிக்காம வைச்சிருக்கிறாங்களாம். பிறகேன் நீங்க இப்பிடித் திரியுறீங்க எண்டுறவையும். இதெல்லாம் சொல்லி விளங்காது. ஆள் செத்திற்றுது எண்டு தெரிஞ்சா கொஞ்ச நாளைக்கு அழுது போட்டு மனசைத் தேற்றிக் கொள்ளலாம். ஆனா எங்கட நிலைமை? இப்பவும், காணாமப் போன அப்பாவை தேடித்தரச்சொல்லி அம்மா அலைஞ்சு கொண்டுதான் இருக்கிறா. அதெல்லாம் அனுபவிச்சாத்தான் அந்த வலி விளங்கும்.”

இதுவரைகாலமும் அடக்கிவைத்திருந்த ஆத்திரத்தில் மனம் குமுறி அடங்கியது.

நதீஷா வெலவெலத்துப் போயிருந்தாள்.


Tuesday, April 19, 2011

வேரென நீயிருந்தாய்...(27)

எங்களுக்கு பொறியியற் கற்கை நெறியின் மூன்றாம் கல்வியாண்டு தொடங்கிவிட்டிருந்தது. மூன்றாம் வருடத்திலும் எல்லா ஆய்வுகூடங்களிலும் அவள் எனது group mate ஆக வந்துவிடுவாளோ என்று முன்னர் பயந்திருந்ததற்கு மாறாக surveying இல் மட்டுமே அவள் எனது group mate ஆக வந்திருப்பது மனதுக்கு நிம்மதியைத் தந்திருந்தது.

அது 1999ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின் இரண்டாம் நாள். அன்று மதியளவில் அந்தத் துக்கச் சேதியைக் கேள்விப்பட்டபோது நம்பமுடியவில்லை. தினமுரசு வாரப் பத்திரிகையின் ஆசிரியர் அற்புதன் காலை 10.30 மணியளவில் கொழும்பில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டார். அப்போதைய காலகட்டத்தில் தினமுரசு பத்திரிகை ஒன்றே எந்தத்தரப்பினருக்கும் பயப்படாமல் உண்மைச் செய்திகளை வெளியிட்டு வந்து கொண்டிருந்தது. அப்போதெல்லாம் தினமுரசு பத்திரிகைக்கு பெரும் கிராக்கி. கடைகளுக்கு வந்த ஒருசில மணித்துளிகளிலேயே அனைத்துப் பத்திரிகைகளும் விற்றுத்தீர்ந்து விடும். சிலவேளைகளில் விரிவுரைகளுக்குச் செல்லாமல்கூட தினமுரசு பத்திரிகை வாங்குவதற்குச் செல்வதுண்டு. அடிபாடு நடக்கும் காலப்பகுதிகளில் பேராதனைச் சந்தியில் தினமுரசு வாங்குவது கடினம் என்று கெலிஓயா-விற்குச் சென்று அந்தப் பத்திரிகையை வாங்குவதுண்டு. அத்தனைதூரத்திற்கு வாசகர்களைத் தன்பக்கம் கவர்ந்து வைத்திருந்த தினமுரசின் ஆணிவேரான அதன் ஆசிரியர் அற்புதன் அவர்களின் இழப்பு எங்கள் எல்லோருக்குமே பெரும் கவலையைத் தந்தது. அந்த மரணத்திற்குச் சரியாக இருமாதங்களுக்கு முன்னர் 02 செப்ரெம்பர் 1999 அன்று, புளொட்டின் இராணுவப் பொறுப்பாளராகவிருந்த மாணிக்கதாசன் அவர்கள் வவுனியாவில் குண்டுவெடிப்பொன்றில் கொல்லப்பட்டிருந்தார். அப்போது வவுனியா புளொட்டின் கோட்டையாகவிருந்தது. அந்தக்குண்டுவெடிப்புச் சம்பவத்திற்குச் சில நாட்களுக்கு முன்பே அவர் பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியொன்றில் புலிகள் அழிந்து விட்டார்கள். அடுத்த கட்டப் போராட்டத்தைத் தாங்களே தலைமையேற்று நடாத்தப்போவதாகத் தெரிவித்திருந்த நிலையிலேயே அவர் கொல்லப்பட்டிருந்தார். அதற்கும் நான்கு மாதங்களுக்கு முன்னர் 1999 மே 29ஆந் திகதி அன்று ராசிக்குழுவின் தலைவர் அவர்கள் மட்டக்களப்பில் வைத்துக் கொல்லப்பட்டிருந்தார். இந்த இருவரினதும் கொல்லப்பட்ட சேதிகளைத் தொகுத்துத் தந்திருந்த ஈ.பி.டி.பி. யைச் சேர்ந்த அற்புதன் அவர்கள் இப்போது கொல்லப்பட்டிருக்கிறார். அவரின் மரணத்தையடுத்து வந்த தினமுரசு, அற்புதன் உள்வீட்டுச்சதிக்குப் பலியாகியிருக்கலாம் என்கின்ற சந்தேகத்தை எழுப்பிவிட்டிருந்தது. அதன்பின் தினமுரசு வாரமலரும் பொலிவிழந்து கவனிப்பார் யாருமற்றுப் போனது.

எப்போதுமில்லாதவாறு இப்போதுதான் அற்புதனின் தாக்கம் அதிமாக உணரப்பட்டது. அவரின் மரணத்திற்கு முதல்நாளான 01 நவம்பர் 199 அன்று ஓயாத அலைகள் - 3 ஆரம்பமாகி விட்டிருந்தது. அக்காவைப்பற்றி எந்தவொரு சேதியும் அறியக் கிடைக்கவில்லை. அதனால் அந்த வருடத்திற்கான வருடாந்தச் சுற்றுலாவில் கலந்து கொள்வதை நான் தவிர்த்திருந்தேன். சுற்றுலா முடிந்து வந்த முதலாவது Surveying இல்,

“ஏன் நீங்க batch trip இற்கு வந்து இல்ல?” -வினவினாள் நதீஷா.

“சும்மா தான்.”

“இல்ல நீங்க பொய் சொல்லுறது.”

சிரித்தேன்.

“என்னால தானே நீங்க வந்தது இல்ல?”

“ஏன்? நீங்க என்ன செய்தனீங்க?”

“அப்ப ஏன் நீங்க வந்து இல்ல?. நீங்க இப்ப என்னோட சரியா கதைக்கிறது இல்லத்தானே?”

“ஏன் அப்பிடிச் சொல்லுறீங்க? எனக்கு trip-க்கு வரவேணும் போல இருக்கேல்ல அதால தான் வரேல்ல.”

“அப்ப ஏன் நீங்க வந்து என்னோட இப்ப நிறையக் கதைக்கிறேல்ல? முந்தி நீங்க கதைக்கிறது தானே?”

“என்ன நீங்க? முந்தி எல்லா lab-இலயும் நாங்க ரெண்டுபேரும் group mates ஆ இருந்ததால கதைச்சம். இப்ப surveying lab இல மட்டும்தானே ரெண்டுபேரும் group mate. அப்ப முந்திமாதிரிக் கதைக்கேலாது தானே”

அவள் முகம் விகசித்தது.

“அப்ப உங்களுக்கு நானில கோபமில்லத் தானே? என்னோட இனி கதைப்பீங்க தானே?” - புன்னகையுடன் கேட்டாள்.

கள்ளங்கபடமற்ற குழந்தைத்தனமான முகத்துடன் கேட்கையில் எப்படி மறுக்க முடியும்? சிரித்தேன்.

பின்வந்த நாட்களில் அடிக்கடி என்னுடன் வந்து கதைக்கத் தொடங்கினாள். அவளது கதைகள் நட்பைத் தாண்டியும் செல்வதாய்ப் பட்டது. தனது குடும்பக் கதைகளைத் தானாகவே பகிர்ந்து கொண்டாள். தனது தந்தையினதும் தாயினதும் காதலைப்பற்றி, அண்ணனினதும் அண்ணியினதும் காதலைப்பற்றி, தாயின் மரணத்தைப்பற்றி, தான் சந்தித்த சந்தோஷ தருணங்கள், சோகச் சம்பவங்கள் எல்லாவற்றையுமே விருப்புடன் பகிர்ந்து கொண்டாள். அவள் சொல்வதைக்காட்டிலும் அந்தத் தருணங்களில் அவள் வெளிப்படுத்தும் முகபாவங்களும், கண்ணசைவுகளும் ஒரு குழந்தைப்பிள்ளையின் குதூகலிப்பை நினைவூட்டின. திடீரென ஒருநாள்,

“நீங்க ஏன் உங்களைப்பற்றி ஒண்டும் சொல்லுற இல்ல?”

“என்னைப் பற்றிச் சொல்லுறதுக்கு விஷேசமா ஒண்டும் இல்ல.”

“ம்ம்ம்ம்........... உங்கட அப்பாவும் அம்மாவும் லவ் பண்ணியா marry பண்ணினவங்க?”

நெஞ்சு திக்கென்றது. இவள் எங்கு வருகிறாள்? உள்ளம் உஷாரானது.

“இல்லை. அவையின்ர arranged marriage தான்”

“அப்ப உங்கட சொந்தக்காரர் ஒருத்தரும் love பண்ணி marry பண்ண இல்லையா?”

“இல்லை. என்ர சொந்தக்காரர் எல்லாருக்கும் arranged marriage தான்” சற்று கறாராகவே கூறினேன்.

“லவ் marriage ஐப்பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?“

சுத்திச்சுத்தி அங்கதான் வரப்போறாளோ? சந்தேகம் அதிகமாகியது.
“இதெல்லாம் இப்ப எதுக்குக் கேக்கிறீங்க?”

“சும்மாதான்”

“எனக்கு இந்த topic கதைக்கிறதில interest இல்ல”

“ஏன்?”

“ஏனெண்டெல்லாம் தெரியாது. எனக்குப் பிடிக்காது. அவ்வளவுதான்.” குரலில் கடுமைகாட்டினேன்

“ஏன் நீங்க கோபப்படுறீங்க? நீங்க ஆரையும் லவ் பண்ணினீங்களா?”

பேய்ப்.... இதுவே வேறையாரும் பெடியளாயிருந்திருந்தால் வாயில வந்திருக்கும்.

“உங்களைப் போல இல்ல எங்கட வாழ்க்கை. உங்களுக்கு எங்கட வாழ்க்கை எப்பிடியெண்டும் தெரியாது. அதாலதான் லவ்கிவ்-வெண்டு கதைக்கிறியள்”


“சரி அப்ப உங்கட life-style பற்றிச் சொல்லுங்களன்”

“என்ன விளையாடுறீங்களா?” கோபம் கொப்பளித்துக்கொண்டு வந்தது


Saturday, April 16, 2011

வேரென நீயிருந்தாய்...(26)

1987ஆம் ஆண்டு பிறந்து விட்டிருந்தது. பாடசாவைக் கல்வித்திட்டத்திலும் மாற்றங்கள் கொண்டுவரப் பட்டிருந்தன. அதுவரை ஆறாம் வகுப்பிலிருந்து ஆரம்பிக்கும் பெரிய பாடசாலைகள் இப்போது ஐந்தாம் வகுப்பிற்குரிய மாணவர்களையும் உள்வாங்கத் தொடங்கியிருந்தனர். வகுப்புகள் என அழைக்கப்பட்டவை ஆண்டுகள் என அழைக்கப்படலாயிற்று. ஐந்தாம் வகுப்பு ஆறாம் ஆண்டாயிற்று. O/L சோதனை எடுக்கும் பத்தாம் வகுப்பு பதினொராம் ஆண்டென மாற்றியழைக்கப்பட்டது. பொதுவாக ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வைத்தே பெரிய பள்ளிக்கூடங்களுக்கான அனுமதிகள் தீர்மானிக்கப்படும். இப்போது நிலைமை மாற்றமடைந்ததால் பெரிய பாடசாலைகள் எல்லாமே ஆறாம் ஆண்டிற்கான நுழைவுத் தேர்வை நடாத்தி மாணவர்களுக்கான அனுமதியை வழங்கிக்கொண்டிருந்தன.

ஜனவரி 1987 இல் சரஸ்வதி வித்தியாலயத்தில் இருந்து யா/வேலணை சேர் வைத்தியலிங்கம் துரைசுவாமி மத்திய மகா வித்தியாலயம் என்கின்ற மிக நீண்ட பெயரால் அழைக்கப்படுகின்ற வேலணை மத்திய கல்லூரிக்கு மாறியிருந்தேன். இடைப்பட்ட ஒரு நாள் மாலைநேரம் உலங்கு வானூர்தி ஒன்றும், பொம்மர்கள் என்று அழைக்கப்படுகின்ற சியாமாசெட்டி ரக குண்டு வீச்சு விமானங்கள் இரண்டும் வந்து கா.பொ.இரத்தினம் அவர்கள் வீட்டின் மேல் தாக்குதலை நடாத்தி விட்டுச் சென்றிருந்தன. அதுதான் தீவகத்தில் நடாத்தப்பட்ட இரண்டாவது வான் தாக்குதல் (மதலாவது வான் தாக்குதல் 1986 ஆம் ஆண்டில் சுருவில் பகுதியில் நடாத்தப் பட்டிருந்தது). அந்தத் தாக்குதலில் இயக்கத்தால் வளர்க்கப்பட்ட இரண்டு குதிரைகள் கொல்லப்பட்டிருந்தன. அப்போதைய நாட்களில் குண்டு வீச்சு விமானிகள் தங்களுக்குள் உரையாடிக் கொள்வதை வானொலிகளின் பண்பலை (FM) அலைவரிசைகளில் எங்களால் செவிமடுக்கக் கூடியதாகவிருந்தது. யாழ்ப்பாணத்திற்கும் வேலணைக்குமான பயணத் தொடர்புகள் அராலிக் கடலினூடாகவும் தம்பாட்டிக் கடலினுாடகவுமே நடைபெற்றுக் கொண்டிருந்தன.

1987 மே மாத இறுதியளவில் யாழ்குடாநாட்டை கைப்பற்றும் வகையில் 'ஒப்பரேஷன் லிபரேஷன்' படை நடவடிக்கையினை பிரிகேடியர் டென்சில் கொப்பேகடுவ தலைமையிலான சிறிலங்காப் படைகள் மூர்க்கமாய் ஆரம்பித்திருந்தன. பலாலி படைத்தளத்திலிருந்து புறப்பட்ட படைகள் விமான மற்றும் கடற்படைத் தாக்குதல்களின் உதவியுடன் தொண்டைமானாறுப் பகுதியூடாக முன்னேறி வல்வெட்டித்துறையைக் கைப்பற்றி மேலும் முன்னேறி நெல்லியடி வரை வந்திருந்தனர். வடமராட்சி மக்கள் பெருமளவிலான உயிர் உடமை இழப்புகளுடன் யாழ் நகரின் ஏனைய இடங்களுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர். மொத்தக் குடாநாட்டிற்குமான ஆனையிறவினுாடான உணவுப் பொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட உணவுப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டது. மக்கள் அகதிகளாகி வள்ளங்களினூடாக பாக்கு நீரிணையைக் கடந்து இந்தியாவில் தஞ்சமடையத் தொடங்கினர்.

ஈழத் தமிழ் மக்கள் தங்களுடைய மீட்பர்களாக இந்தியாவை நம்பிக் கொண்டிருந்தனர். இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் உயிருடன் இருக்கும் வரை, பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு பங்களாதேஷிற்கு உதவியது போன்று இலங்கையிலும் தமிழீழம் மலர்வதற்கு இந்தியா தன் படைகளை அனுப்பி உதவி செய்யும் என்கின்ற அதீத நம்பிக்கை ஈழத்தமிழர்களிடையே நிலவி வந்தது. தூரதிர்ஷ்ட வசமாக 1984 ஒக்ரோபர் 31 இல் இந்திரா காந்தி அம்மையார் கொல்லப்பட தமிழர்களிடையே அந்த நம்பிக்கை சற்றுக் குறைந்து விட்டிருந்தாலும், எந்தக் காலத்திலும் இந்தியா தங்களைக் கைவிடாது என்கின்ற அசையா நம்பிக்கை அவர்களிடையே இருந்தது. இப்போதும் இந்தியா தங்கள் உதவிக்கு வரும் என்று காத்திருக்கத் தொடங்கினர். ஆனாலும் ராஜீவ் காந்தி அவர்கள் தலைமையிலான இந்திய நடுவண் அரசு, இந்திராகாந்தி அம்மையாரைப் போன்று தமிழர்கள் மீது அதிக கரிசனை கொண்டிருந்ததாகத் தெரியவில்லையாயினும், யாழ்ப்பாணத்தில் உணவுப் பொருட்களுக்காய்த் தவிக்கும் மக்களுக்கான உணவுப்பண்டங்களை கப்பல் மூலமாக வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுத்திருந்தது. மக்கள் எல்லோரும் இந்தி உணவுக் கப்பல்களின் வருகையை ஆவலுடன் எதிர் பார்த்துக் காத்திருக்கத் தொடங்கினர். கப்பல் புறப்பட்டு விட்டதாக சேதிவர பாடசாலைகளில் எல்லாம் எங்களிடையே மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது. ஆயினும் அப்போதைய சிறிலங்கா அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்களும் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலியும் தங்கள் இறையாண்மைக் கடலுக்குள் இந்தியக் கப்பல்கள் நுழைவதை தமது கடற்படை அனுமாதிக்காது என்று அறிவித்திருந்ததால் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் போர் மூண்டு பாகிஸ்தான் போன்று இலங்கையும் இரண்டாகப் பிரிந்து விடும் என்று அரசியல் அறிவில்லாத பெரும்மாலான மக்கள் கற்பனைகளில் மிதக்கத் தொடங்கினர்.

ஆயினும் இந்தியாவின் உண்மை முகத்தை ஏற்கனவே அறிந்திருந்த தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) 1982 ஆம் ஆண்டளவிலேயே இது பற்றிய எச்சரிக்கையினை 'வங்கம் தந்த பாடம்' - நூலினூடாக வெளிப்படுத்தியிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களைப் போலவே புளொட்டின் தலைவர் உமாமகேஸ்வரன் அவர்களும் இந்தியா பற்றிய சரியான தீர்க்கதரிசனத்தினை வெளிப்படுத்தியிருந்தார். புளொட் தனது படைபலத் தேவைகளுக்கு இந்தியாவை மட்டுமே நம்பியிராமல் முதன்முதலாக பிறநாடுகளில் போராயுதங்களைக் கொள்வனவு செய்து அவற்றைக் கப்பல் மூலமாக இலங்கைக்கு கடத்தி வரும் வழியில் அந்த ஆயுதக்கப்பலை இந்தியா இடைமறித்துத் தன்வசப்படுத்தியிருந்தது. இந்திய ஆளும் வர்க்கம் எப்போதுமே அயல்நாடுகளின் பிரச்சனையைத் தனது சுயலாபத்திற்காகவே பயன்படுத்தி வந்திருக்கிறது. இது பற்றிய விழிப்புணர்வை தமிழ் மக்களிடையே ஏற்படுத்துவதற்காக 1985ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் யாழ் பல்கலைக் கழகத்தினரால் 'மாயமான்' என்கின்ற வீதி நாடகமும் அரங்கற்றப்பட்டு வந்து கொண்டிருந்தது. ஆனாலும் தமிழ் மக்களிடம் இந்திய நடுவண் அரசு பற்றிய மாயையினைக் களையக் கூடியதாக இருக்கவில்லை. அந்தளவிற்கு இந்தியா எங்களின் மீட்பர் என்கின்ற மயக்கம் தமிழர்களிடையே புரையோடிப்போய்க் கிடந்தது.

1987 ஜூன் 4ம் திகதி மதியம் எங்கள் நம்பிக்கைகளைப் பொய்யாக்குமாற் போல் அந்த சேதி வந்தது. இந்திய உணவுக்கப்பல்கள், இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு இலங்கைக் கடற்படையினால் அவை திருப்பி அனுப்பப்பட்டு விட்டன. மக்கள் மனங்களில் ஏக்கங்கள் குடிகொண்டன. அன்றைய மாலை யாழ்மக்கள் வித்தியாசமான இரைச்சல்களுடன் அதற்குமுன் என்றுமே பார்த்திராத போர்விமானங்கள் யாழ்வான்பரப்பினுள் சீறிப் பாய்ந்து தாழப்பறந்து வந்தன. கிலிகொண்டு மக்கள் பதுங்கு குழிகளுக்குள் ஒளிந்து கொண்டனர். ஆயினும் எந்தவொரு குண்டு வெடிப்பு ஓசையையும் கேட்க முடியவில்லை. தூரத்தில் இருந்தவர்கள் அந்த விமானங்களிலிருந்து பொதிகள் வீசப்படுவதை அவதானித்திருந்தனர். விமானங்கள் யாழ் வான்பரப்பை விட்டு வெளியேறியதும் மக்கள் விமானங்கள் பொதிகள் வீசிய இடங்களைச் சென்று பார்த்தபோது அவையெல்லாம் உணவுப் பொதிகளாய்க் காணப்பட்டன. அன்றைய இரவு இந்தியச் செய்தி, அது இந்தியாவின் மனிதாபிமான நடவடிக்கையான 'ஒப்பரேஷன் பூமாலை' என்பதாக அறிவித்தது.

சண்டை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. மக்களிடம் விடுதலைப் புலிகளின் படைபலம் பற்றியும் ஏனைய இயக்கங்களை தடை செய்தமை பற்றிய விமர்சனங்கள் எழலாயிற்று. அவர்களால்தான் தமிழர் படைபலம் குன்றிப் போய் இந்நிலை ஏற்பட்டதாகக் கதைக்கத் தலைப்பட்டார்கள். மாதம் ஒன்று ஓடி மறைந்து ஜூலை ஐந்தாம் தேதியும் வந்தது. அது ஈழப் போராட்ட வரலாற்றில் மிகமுக்கிமான நாளாகவும் அமைந்துவிட்டிருந்தது.

முதன்முதலாக தற்கொடைப் போராளி கப்டன் மில்லர் ஈழவிடுதலைப் போரில் புதியவொரு அத்தியாயத்தைத் தொடக்கி வைக்க மக்கள் மனதில் விடுதலைப் போர் வெற்றிபெறும் என்கின்ற நம்பிக்கை மறுபடியும் உண்டாயிற்று. அன்றைய தற்கொடைத் தாக்குதலில் நெல்லியடியில் அமைந்திருந்த இராணுவமுகாம் அழிக்கப்பட்டு பெருமளவிலான சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டிருந்தனர். பின் வந்த நாட்களில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிராபகரன் அவர்களை பேச்சுவார்த்தைக்காக வருமாறு இந்தியா அழைப்பு விடுத்தது. 24 ஜூலை 1987 இல் பிரபாகரன் அவர்கள் இந்தியா பயணமாக மக்கள் விடுதலை கிட்டிவிட்டதான மகிழ்ச்சியில் ஆழ்ந்தார்கள். இந்தியாவிற்கு பேச்சுவார்த்தைக்கென அழைக்கப்பட்டு ஏறத்தாழ கைதியாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட நிலையில், 1987 ஜூலை 29 இல், சிறிலங்காத் தலைநகர் கொழும்பில், அப்போதைய இலங்கை அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்களும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அதைத் தொடர்ந்து இந்தியப் படையினர், அமைதி காக்கும் படையினராக வட கிழக்கு மாகாணங்களில் வந்திறங்கினர். பின் இந்தியாவின் தீர்வுத்திட்டம் திணிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் திரும்பிய பிரபாகரன் அவர்கள் 04 ஓகஸ்ற் 1987 இல் சுதுமலைப் பிரகடனத்தை வெளியிட்டு, இந்தியாவிடம் ஆயுதக் கையளிப்பதற்கு இணங்குவதாக அறிவித்தார்.

போர் நின்றுவிட்ட சூழ்நிலையில் எங்கள் காவலர்களாக இந்திய அமைதி காக்கும் படையினர் உலாவர, அவர்கள் செல்லும் வழிகள் எங்கணும் தமிழ் மக்கள் ஆராத்தி எடுத்து வரவேற்று தங்கள் பிரியத்தையும் மகிழ்ச்சியையும் வெளிக்காட்டினர்.
Wednesday, April 13, 2011

வேரென நீயிருந்தாய்...(25)

கப்பல் பயணத்தின் அலுப்புத்தீர்வதற்கு இரு நாட்கள் எடுத்திருந்தது. மறுநாள் மாலை பிளேன்ரீ-யுடன் வறுத்த கச்சான் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் அம்மா அருகில் வந்து அமர்ந்தார். சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு,

“ஜேன்! இந்தா! இந்தக்கடிதத்தை வாசி!

அம்மாவை ஆச்சரியத்துடன் பார்த்தேன்.

“அக்காட்ட இருந்து வந்தது. நீ ஆறுதலா இருக்கேக்க வாசிக்கட்டும் எண்டுதான் இவ்வளவுநாளும் தராம இப்பதாறன்.

எங்களை விட்டுப் பிரிந்ததன் பின்னர் அக்காவிடமிருந்து வந்த முதல் கடிதம் அது. ஆவலுடன் வாசிக்கலானேன். எப்படியோ அவள் என்னைப்பற்றி அறிந்து விட்டிருக்கிறாள். தன்னுடைய சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்வதற்காகவே அந்தக்கடிதம். காடுகளில் நாவற்பழங்களைக் காணும் நேரங்களில் என் நினைவுகள் தன்னுள் துளிர்த்தெழுவதை அவளால் தடுக்க முடியாமலிருக்கிறது.

அது இந்திய படையினரின் ஆக்கிரமிப்புக்கு சிலவருடங்கள் முற்பட்ட சரஸ்வதிபூசைக் காலம். வங்களாவடியில் இருக்கும் சரஸ்வதி வித்தியாலயத்திலேயே அக்காவும் நானும் கல்வி கற்றுக் கொண்டிருந்தோம். சரஸ்வதி பூசைக்காலங்களில்தான் நாவற்பழங்களும் மரங்களில் காய்த்துக் குலுங்கும். நாவற்பழம் கிரந்தி என்று சொல்லி வீட்டில் சாப்பிட விடமாட்டார்கள். ஆனால் அக்காவிற்கோ நாவற்பழங்களின் மேல் அப்படியொரு கொள்ளைப்பிரியம். அதிலும் ஔவைப்பாட்டியின் சுட்டபழம் சுடாதபழம் கதையைப் பாடப்புத்தகத்தில் படித்த பின்னர் அவளுக்கு சுட்டபழம் வேணும், ஆனா அது சுடாம இருக்க வேணும். அதுக்கு அவளுக்கு நான் வேணும்.

நாங்கள் பாடசாலை செல்லும் வழியில்தான் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கா.பொ. இரத்தினம் அவர்களின் வீடு இருக்கிறது. அந்த வீட்டிற்குப் பின்னால் உள்ள காணியொன்றில் பெரிய நாவல் மரமொன்று இருந்தது. அதன் பழங்கள் திராட்சைப்பழ அளவில் இருக்கும். அதன் சுவையும் தனித்துவமானது. பாடசாலை விட்டு அவ்விடத்திற்கு வந்ததும், அக்கா என்னை மரத்தில் ஏறி தனக்கு நல்ல பழுத்த பழங்களாகப் பறித்துத் தரும்படி கெஞ்சுவாள். அவளுக்கு நிலத்தில் விழுந்த பழங்களை உண்பதற்குப் பிடிக்காது. ஒருமுறை இப்படித்தான் ஏறிக் கொண்டிருக்கும் பொழுது தவறி விழுந்து, நல்ல வேளையாக காலெல்லாம் சிராய்ப்புக் காயங்களுடன் தப்பித்துக் கொண்டேன். பொதுவாக, நாவல் மரங்களிலிருந்து விழும் ஆண்பிள்ளைகள் தப்பித்துக் கொள்வது அரிது என்று ஊரில் சொல்வார்கள். அது நாவல் மரத்திற்கேயுரிய நாணம் என்று சொல்லி ஆண்பிள்ளைகளை நாவல்மரங்களில் ஏறவிடுவதில்லை. அந்நிகழ்ச்சியில் அம்மாவிடம் வேண்டிக் கொண்ட அர்ச்சனையின் பின் அந்த வருடத்திற்கு அக்காவின் நாவற்பழ ஆசை அடங்கிப்போயிருந்தது. அடுத்த வந்த வருடம் கா.பொ.இ வீட்டில் இயக்கக்காரர்கள் வந்து முகாமிட்டிருந்தார்கள். அவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எப். ஐச் சார்ந்தவர்கள் ஊரவர்கள் பேசிக் கொண்டார்கள். அப்போது அந்த வீட்டின் முன்னே ஒரு பீரங்கிக்குழல் நீண்டிருக்கும். அதன் வாய் சாக்குப் போட்டு மூடப்பட்டிருக்கும். பாடசாலை செல்லும் போதும் வரும்போதும் அந்த பீரங்கிக்குழலை வேடிக்கை பார்ப்பது எங்களுக்கு வாடிக்கையாகிப் போனது.

பின் வந்த சில நாட்களில் ஈ.பி.ஆர்.டில்.எப் இனர் அந்த வீட்டினை விட்டு வெளியேற வேறொரு இயக்கத்தினர் அந்தவீட்டினை தங்களின் தங்ககமாக மாற்றிவிட்டிருந்தனர். அந்தக் காலங்களில் ஊரில் ஈறோஸ், ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, ரெலா, ரைகர்ஸ், புளொட் என அறுபத்தெட்டு இயக்கங்கள் இருந்தனவாயினும் ரெலோ, ரைகர்ஸ், ஈ.பி. (ஈ.பி.ஆர்.எல்.எப்) புளொட் என்பனவே ஆயுத ரீதியில் பலம் மிக்கவையாக மக்களிடையே பிரபல்யமாகத் தொடங்கியிருந்தன. படித்தவர்கள் மத்தியில் ஈறோஸ் செல்வாக்குப் பெற்றிருந்தது. மற்ற இயக்கங்களைப் போலன்றி புளொட் பொதுமக்களிடமே தங்களுக்கான உணவுப் பொட்டலங்களைப் பெற்றுக்கொண்டிருந்ததுடன் இராணுவ ரீதியிலான தாக்குதல்களை அது பெருமளவிற்கு நடத்தியிருந்ததாகவும் தெரியவில்லை.

'காத்தடிக்குது புயலடிக்குது காரைநகரில ஈ.பி அடிக்குது போறவழியில ரெலோ அடிக்குது வாற வழியில ரைகர் அடிக்குது வயிறு முட்ட புளொட் அடிக்குது'

என மக்களிடையே அதன் செல்வாக்கும் குறையத் தொடங்கியிருந்தாலும் கோட்டையில இருந்து சிறிலங்காப் படையினர் எறிகணைகளை ஏவும் நேரங்களைக் கணக்கிட்டு அபாய ஒலி எழுப்பி யாழ்நகர் மக்களை எச்சரிக்கை செய்யும் பணியை அது செவ்வனே செய்து கொண்டிருந்ததுடன் யாழ் சத்திரச் சந்திக்கு அண்மையில் மணல்மூட்டைகளால் காப்பரண் அமைத்து, அந்த வழியே யாழ் கோட்டையிலிருந்து வரும் துப்பாக்கிச் சூடுகளையும் ஏவுகணைகளையும் அது தடுத்துக் கொண்டிருந்தது. அந்தக்காலத்தில் காரைநகர் கடைற்படை முகாமே ஈ.பி.ஆர்.எல்.எப். இனரின் பிரதான இலக்காக இருந்தது. அடிக்கடி அங்கே சென்று சொறிவதை அவர்கள் வாடிக்கையாக்கிக் கொண்டிருந்தனர்.

திடீரென் ஒருநாள் மதியம் போல் அப்பா கடையை மூடிவிட்டு வேகமாக வீட்டுக்கு வந்தவர்,

“பெடியள் தங்களுக்குள்ளையே அடிபட வெளிக்கிட்டிட்டாங்களாம். இண்டைக்கு இஞ்சையும் ரெலோவும் ரைகர்ஸ்சும் சண்டை பிடிக்கப் போறாங்களாமெண்டு கேள்வி. ஒருத்தரும் ஒருஇடமும் போகாம வீட்டுக்குள்ளேயே இருங்கோ” என்றார்.

மாலை மூன்று மணியளவில் சடசடக்கத் தொடங்கிய துப்பாக்கி வேட்டுக்கள் மாலை ஏழு மணியின் பின்னரே ஓய்விற்கு வந்தன. அன்றைய சண்டையில் தபால் கந்தோரடியில் நின்று விடுப்புப்பார்த்த ஒருவர் கொல்லப்பட்டிருந்தார்.

ஒரு பிள்ளை ரைகர்ஸ்ஸிலும் இன்னொருபிள்ளை வேறொரு இயக்கத்திலும் இருந்த குடும்பத்தவர்கள் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தார்கள். சில தினங்களில் வடக்கு கிழக்கு ரைகர்ஸின் கட்டுப்பாட்டுக்குள் வர ஏனைய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் உயிர் பிழைப்பதற்காய் தப்பி வெளி நாடுகளுக்கு ஓடிக்கொண்டிருந்தனர்.