Wednesday, July 7, 2021

கனவில் நினையாத… (1)


2021 யூலை

“அம்மா! ஜெயந்தன் எண்டு ஆரையும் உங்களுக்குத் தெரியுமாம்மா?

சி. என் ரவரின் உச்சியிலிருந்து வழுவிக் கீழே விழுவது போலவும், விழுந்து அப்படியே மண்டை வெடித்துச் சிதறுவது போலவும், உணர்ந்தேன், சிந்து வந்து என்னிடம் அப்படிக் கேட்டபோது. 

உடல் பதற்றத்தில் நடுங்கத் தொடங்கியது. வியர்வை பெருக்கெடுக்க நாக்கு வறண்டு உலர்ந்துபோய் பேச்சு வராமல் அடைத்துக்கொள்ள, தலைசுற்றத் தொடங்கியது. 

”அம்மா! அம்மோய்! என்னம்மா ஆச்சு உங்களுக்கு? நீங்க OK-யா?” 

சிந்துவின் உலுக்கலில் நான் விழித்துக் கொண்டேன். 

”அம்மா! என்னம்மா செய்யுது உங்களுக்கு? ஏன் நீங்க ஒருமாதிரி ஆகிற்றீங்க?” 

அவளிடம் எப்படி அதைச்சொல்வது? ஜெயந்தன் என்கின்ற அந்தப் பெயரைக் கேட்டாலே நான் இப்படியாகி விடுகின்றேனே? கடவுளே! 

”எனக்கொண்டுமில்லைச் சிந்து. சாடையாத் தலைச்சுத்தாக் கிடக்கு. கொஞ்சநேரம் படுத்திற்று எழும்பினனெண்டா எல்லாம் சரியாகீரும்” 

”இல்லையம்மா. உங்கட symptoms-ஐப் பாத்தா நல்லதாத் தெரியேல்லை.  எதுக்கும் கொஞ்சம் இருங்கோ. நான் உங்கட பல்ஸ்-ஐயும் ப்ரஷரையும் ஒருக்காச் செக் பண்ணீற்று விடுகிறன்.” 

எனது நாடித்துடிப்பையும், இரத்த அழுத்தத்தையும் பரிசோதித்துவிட்டு, 

”ப்ரஷர் கொஞ்சம் கூடவாத்தான் இருக்கு. உங்களுக்கும் இப்ப நாப்பத்தைஞ்சு வயசாகுது. இனி எல்லாத்திலையும் கவனமா இருக்கவேணுமம்மா. எதுக்கும் நீங்க இப்ப வடிவா றெஸ்ற் எடுங்கோ. நான் ஏலுமெண்டால் நாளைக்கு எங்கட பமிலி டொக்ரரோட கதைச்சு blood checkup-க்கு ஒழங்கு செய்யுறன்” 

நேற்றுப் போல் இருக்கிறது, சிந்து கைக்குழந்தையாய் என்னிடம் தவழ்ந்தது. அதற்குள் அவள் இவ்வளவு வளர்ந்து விட்டாள். அப்படியே அச்சு அசலாக அவள் என்னை மாதிரியே இருப்பது வியக்க வைக்கிறது.

இனி அவளுக்கும் காலாகாலத்தில் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தாக வேண்டும். அதையும் செய்துவிட்டேன் என்றால் அதன் பின் சாவதென்றாலும் நான் நிம்மதியாகச் செத்துப்போகலாம். என்னைவிட்டால் அவளுக்கென்று யாருமேயில்லை. இந்த தாதி வேலையால் அவளும் பாவம், கொரோனா தொடங்கின காலத்திலிருந்து ஓய்வொழிச்சல் இல்லாமல் ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் அலைந்து கொண்டிருக்கிறாள். 

எதற்காக இன்றைக்கு வந்து என்னிடம் ஜெயந்தன் என்று ஆரையும் தெரியுமா என்று கேட்கிறாள்? கடவுளே! ஒருவேளை ஆஸ்பத்திரியில் யாரும்….? Oh my God! இப்ப யூலை மாசம் எண்டுறத மறந்தே போனன். பெரியம்மாவும் அவாவின்ரை குடும்பமும் செத்துப்போய் இருபத்தைஞ்சு வருசமாகப் போகுது. அநியாயப்படுவார் அந்த புக்காராவில வந்து குண்டு போட்டு நவாலி சேர்ச்சுக்குள்ள அடைக்கலமாயிருந்த அப்பாவி மக்களை அநியாயமாச் சாக்காட்டினாங்களே. நானும் பேசாம அதுக்குள்ளயே இருந்து செத்துத் துலைஞ்சிருந்தா இண்டைக்கு எனக்கு இந்த நிலை வந்திருக்காது.

1995 யூலை
 

யாயும் ஞாயும் யாரா கியரோ,

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்,

யானும் நீயும் எவ்வழி யறிதும்,

செம்புலப் பெயனீர் போல,

அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே. - (குறுந்தொகை - 40)

அடுத்த மாதம் A/L சோதனை. நான் சோதனையைப் பற்றி அதிகம் கவலைப்படவுமில்லை. நேரம் ஒதுக்கி வினைகெட்டுப் படிக்கவுமில்லை. வீட்டில் நான் மட்டுமே தனித்திருந்தேன். சாப்பிடுவதற்கும் நித்திரை கொள்வதற்கும் பெரியம்மாவின் வீடு பக்கத்திலிருந்தது. அம்மா கொழும்பிலிருந்து இன்னும் இரு கிழமைகளில் வந்துவிடுவதாக அங்கிருந்து வந்த ஒருவரிடம் கடிதம் கொடுத்துவிட்டிருந்தார். 

பாஸ் நடைமுறை காரணமாக அம்மாவுடன் என்னால் கொழும்புக்குச் செல்லமுடியவில்லை. கனடாவிற்குச் செல்வதற்கான வீசாக் கிடைத்ததும், அம்மா மீண்டும் வந்து என்னை அழைத்துச் செல்வதாய் ஏற்பாடாகியிருந்தது. பிணை வைப்பதற்கும் பெரியம்மா தெரிந்தவர் ஒருவருடன் கதைத்து ஒழுங்கு படுத்தியிருந்தார். 

இன்னும் இரண்டு அல்லது மூன்று கிழமைகளில் கொழும்பு சென்று அடுத்த கிழமையே அண்ணாவின் ஸ்பொன்சரில் கனடாவுக்குச் சென்று விடுவேன் என்பதில் எனக்குச் சற்றேனும் சந்தேகம் இருக்கவில்லை. எனவே வரவிருக்கும் சோதனையைப் பற்றிய கவலைகள் எனது நண்பிகளைப் போல் என்னிடம் கொஞ்சமும் இருக்கவில்லை. 

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை அல்லவா? 

யூலை, மாதத்தின் தொடக்க வாரத்தில், பலாலிப் படைத்தளத்திலிருந்து, சிறிலங்காப் படையினர் முன்னேறிப்பாய்ச்சல் என்னும் பெயரிலான படைநடவடிக்கையினைத் தொடங்கியிருந்தனர். பெடியள் ஆமியை அசைய விடமாட்டாங்கள் என்று இயக்கம் மீதிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையில் நாங்கள் இருந்ததால் அந்த நடவடிக்கையைப் பற்றி இலங்கை வானொலியில் வந்த செய்தியை நாங்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. அது வழமை போன்று இலங்கை வானொலியின் கோயபல்ஸ் பிரச்சாரம் என்றே எண்ணியிருந்தோம். 

வழமைக்கு மாறாக, இராணுவம் அதிவேகமாக ஊர்களுக்குள் ஊடுருவி இடங்களைக் கைப்பற்றிக் கொண்டே வர, 09ம் திகதியன்று அதிகாலை பெரியம்மா வீட்டிலிருந்த நான், அவர்களுடனேயே இடம் பெயர்ந்து நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் தஞ்சமடைந்தேன். 

அங்கே சென்ற பின்னர்தான் எனது அடையாள அட்டையையும் கனடா செல்வதற்குத் தேவையான ஏனைய ஆவணங்களையும் வீட்டிலேயே விட்டுவிட்டு வந்திருப்பது உறைத்தது. மீண்டும் வீட்டுக்குச் சென்று அதை எடுத்து வருவதற்கு உதவிக்கு வரும்படி பெரியம்மாவிடம் கேட்டபோது அவர் என்னிடம் கடுமையாகக் கோபித்துக் கொண்டார். நான் அன்று காலை முழுதும் அழுது கொண்டே இருந்தேன். அதைக் கண்ட அங்கேயிருந்த அண்ணா ஒருவர் என்னிடம் வந்து காரணத்தைக் கேட்டார். சொன்னதும் தானும் என்னுடன் துணைக்கு வருவதாகக் கூறினார். 

இருவரும் மிதிவண்டியில் எமது கிராமத்தை அண்மிக்கையில், அங்கே பாதுகாப்பரணில் நின்ற இயக்கப் போராளிகள் எம்மை இடைமறித்தனர். எமது வீடிருக்கும் பகுதிக்குச் செல்வது பாதுகாப்பற்றது எனவும். எந்த நேரத்திலும் இராணுவம் எமது வீடிருக்கும் பகுதிக்குள் நுழைந்துவிடக்கூடும் எனவும் எச்சரித்தனர். 

நான் அழுது கொண்டே எனது நிலையைக் கூறி எம்மைச் செல்ல அனுமதிக்கும்படி கெஞ்சினேன். எச்சரிப்பது எங்கள் கடமை. அதை மீறி நாங்கள் சென்றால், எங்கள் பாதுகாப்பிற்குத் தாங்கள் பொறுப்பல்ல என்று கூறினார்கள். 

அதைக் கேட்டதும் என்னுடன் வந்திருந்த அண்ணா திரும்பிப்போவோம் என்றார் நான் அழுது கொண்டே என்னுடன் துணைக்கு வரும்படி இறைஞ்சினேன். அரை மனதுடன் மிதிவண்டியை நிறுத்திவிட்டு நடந்து செல்வோம் என்றார். 

நாங்கள் நடந்து சென்று எமது வீட்டினை அடைந்தோம். எனது ஆவணங்களை எடுத்துக் கொண்டு வெளியே வரும் போது புக்காராவினதும் ஹெலியினதும் இரைச்சல்கள் எமது தலைக்கு மேலால் கேட்டன. திடீரென ஹெலியிலிருந்து 50 கலிபரினால் சுடஆரம்பித்தது அதன் சத்தத்திலிருந்து தெரிந்தது. எங்கள் வீட்டின் சில ஓடுகள் உடைந்து நொருங்கிக் கீழே விழுந்தன.  வீட்டினுள் இருப்பது ஆபத்து என்பதால் உடனேயே வெளியேறி அருகிலிருந்த பதுங்கு குழிக்குள் தஞ்சமானோம். 

எங்கோ தூரத்தில் புக்காராவின் பல குண்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்து வெடிக்கும் சத்தங்களுக்கும். ஹெலியிலிருந்து ஏவப்படும் ரொக்கட் குண்டுகளுக்கும். நாமிருந்த பதுங்குகுழி அதிர்ந்து கொண்டிருந்தது. சற்று நேரத்தில் எமது பதுங்கு குழியினைச் சுற்றிச் சப்பாத்துக் கால்களுடன் புரியாத மொழியில் தமக்குள் ஏதோ கதைத்தபடி பலர் நடந்து செல்லும் ஓசையினைக்  கேட்கக் கூடியதாய் இருந்தது. இருவரும் பயத்தில் உறைந்து போய்விட்டோம். நல்லவேளையாக யாரும் பதுங்கு குழியினை எட்டிப் பார்க்கவில்லை. 

அன்றைய இரவு பதுங்குகுழிக்குள்ளேயே கழிந்தது. பசியும் தாகமும் எம்மை வாட்டின. என்னுடன் வந்து மாட்டுப்பட்டிருக்கும் அந்த அண்ணாவைப் பார்க்க எனக்குள் குற்றவுணர்ச்சியும் பெருக்கெடுக்கத் தொடங்கியது. அன்றைய இரவில் பயத்தில் இருவருமே எதுவுமே பேசவில்லை. அடுத்த நாள் காலையில் அந்த அண்ணா மெதுவாக வெளியே எட்டிப் பார்த்து யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள ஏதாவது குடிக்கலாம் என்கின்ற எண்ணத்தில் வீட்டிற்குள் சென்றோம். குசினிக்குள் இருந்த தண்ணீரைக் குடித்துவிட்டு, பானைக்குள் கிடந்த முட்டைமாவையும் தின்று பசியாறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறலாம் என்று நினைக்கையில் எமது ஒழுங்கைக்குள்ளால் உறுமியவாறே .ராணுவ கவசவண்டிகள் செல்வதைப் பார்த்ததும் எமக்கு ஐந்தும்கெட்டு அறிவும் கெட்டுவிட்டது. வீட்டினுள் இருந்தால் வெளியே தெரிந்து விடும் என்பதால் முட்டைமாவையும் தண்ணீரையும் எடுத்துக் கொண்டு மறைவாக மீண்டும் பதுங்குகுழியை அடைந்தோம். 

உள்ளே சென்றதும், பகலில் யாராவது ஆமிக்காரர் வந்து உள்ளே எட்டிப் பார்த்தால் எம்மைக் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதால், பதுங்குகுழிக்கு வெளியே கிடந்த தென்னோலைக் குவியலில் இருந்து சில தென்னோலைகளை ஒரு தடியினால் இழுத்து பதுங்குகுழி வாசலை மூடினோம். நாம் செய்தது எவ்வளவு பெரிய தவறென்பது சிறிது நேரத்திலேயே தெரிய வந்தது. 

தலைவலிபோய்த் திருகுவலி வந்த கதையாக, அந்த ஓலைக்குள்ளிருந்து நல்ல பாம்பென்று உள்ளே எட்டிப் பார்த்தது. பின் அது எம்மை நோக்கி ஊர்ந்து வரத் தொடங்கியது. பாம்பின் மீதான பயத்திலும் பயிர்ப்பிலும் நான் ஜெயந்தன் அண்ணாவை இறுக்கிக் கட்டிப்பிடித்துக்கொண்டு கண்களையும் மூடிக்கொண்டேன்.
 

ஆவீன, மழைபொழிய, இல்லம் வீழ,

அகத்தடியாள் மெய் நோக, அடிகை சாக,

மாவீரம் போகுதென்று விதை கொண்டோட,

வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ள,

சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்ற,

தள்ளவொணா விருந்து வர, சர்ப்பம் தீண்ட,

கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்க,

குருக்கள் வந்து தட்சணைக்கு குறுக்கே நிற்க,

பாவேந்தர் கவிபாடி பரிசும் கேட்க,

பாவி மகள்(ன்) படும் துயரம் பார்க்கொணாதே!


1996 ஜனவரி

பிள்ளை. நீ உன்ரை மனசில என்னதான் நினைச்சுக் கொண்டிருக்கிற? வாற நல்ல சம்பந்தங்களையெல்லாம் வேண்டாமெண்டு கொண்டிருக்கிறாய். உன்ரை கொண்ணனையும் கொஞ்சம் யோசிச்சுப் பார். அவனுக்கும் முப்பது வயதாகப் போகுது. அவனுக்கெண்டாலும் ஒண்டைப் பாத்துக் கட்டி வைப்பமெண்டால் அவன் உன்ரை அலுவலைப் பார்த்திற்றுத்தான் தான் கட்டுவனெண்டுறான்”

”அம்மா எனக்கு இப்பத்தான் இருவது வயசாகுது. இஞ்சை கனடாவுக்கு வந்து இன்னும் மூண்டு மாதம் கூட ஆகேல்லை. அதுக்குள்ளை என்ன அவசரம்?”

”ஓம் உனக்கு வயசு கிடக்குத்தான். ஆனா உன்ர கொண்ணனுக்கெல்லே வயசு வட்டுக்குள்ளை போய்க்கொண்டிருக்கு. அவனைச் செய்யெண்டால் முதலில உனக்குச் செய்து போட்டுத்தான் தான் செய்வனெண்டு கொண்டு நிக்கிறான்”

”ஏனம்மா? இப்ப என்னை அவசரப்படுத்திறீங்க? முதலில அண்ணாக்கு முடிப்பம்.”

”அவனை நான் எத்தினையோ தரம் கேட்டுப் பாத்திற்றன். அவன் உன்ரை அலுவல முடிக்காமத் தான் கட்டமாட்டனெண்டு ஒத்தைக்காலில நிக்கிறான்”.

”ஏன்? அவருக்கென்ன விசரோ? அவர் கட்டிறதுக்கும் நான் கட்டிறதுக்கும் என்ன சம்பந்தம்? அவர் ஏன் எனக்காக wait பண்ணவேணும்?”

”உதெல்லாத்தையும் நானும் அவனிட்டைக் கேட்டனான். அவன் தன்ரை ரெண்டு பிரெண்ட்சின்ரை கதையைச் சொன்னவன். அதைக் கேட்டா அவன் சொல்லுறதும் சரிபோலத்தான் கிடக்கு”

”அப்பிடி என்னம்மா அவற்றை பிரெண்ட்சுக்கு நடந்தது?”

”அவங்களைக் கட்டினவளவையால கல்யாணத்திற்குப் பிறகு பெரிய பிரச்சினையாம். அவங்கட வீட்டுக்கு காசனுப்பவும் விடுறேல்லை. வீட்டுக்காரர் ஊரிலியிருந்து போன் எடுத்தாலும் கட் பண்ணிப்போடுதுகளாம். அதிலயும் ஒண்டு நீ இனி வீட்டுக்குக் காசனுப்பினா டிவோர்சுக்குப் போயிருவன் எண்டு மிரட்டுதாம். டிவோர்சுக்குப் போனா, பிறகு இவன், தான் கடன்வேண்டி வேண்டின வீட்டையெல்லாம் வித்து அவளுக்கும் குழந்தைக்கும் கட்ட வேண்டி வந்திரும். இஞ்சத்தையச் சட்டங்கள் அப்பிடியாம். அதால அவனால தன்ரை குடும்பத்துக்கு ஒண்டுஞ்செய்யேலாம சரியாக் கவலைப்படுறானாம். இத்தனைக்கும் அந்தப் பெட்டைகளும் ஊரிலயிருந்து கல்யாணம் பேசித்தான் இஞ்ச வந்ததுகள். அதுதான் உன்ரை கொண்ணனும் வாறவள் எப்பிடியிருப்பாளோ இல்லாட்டி இஞ்ச வந்தாப்பிறகு எப்பிடி மாறுவாளோ எண்டு பயப்பிடுறான். அவன்ரை பயமும் ஞாயந்தானே.”

”அது சரிதானம்மா. ஆனா எனக்கு இப்ப கல்யாணம் செய்ய விருப்பமில்லை”

”அதுதான் ஏனெண்டு கேட்கிறன்”

”விருப்பமில்லையெண்டா விடுங்கோவன். சும்மா சும்மா என்னைப் போட்டு அரியண்டப்படுத்திக் கொண்டு”

”நீ என்னடி லூசா. இவ்வளவு கதையையும் கேட்டாப்பிறகும் திரும்பத்திரும்ப ஒண்டையே சொல்லிக் கொண்டிருக்கிற”

”அம்மா! என்னால இப்ப கல்யாணம் கட்டோலாது எண்டா அதைப் புரிஞ்சு கொள்ளுங்கோ. அதவிட்டிட்டு சும்மா என்னோட தொணதொணக்காதீங்க”

”பாரன் இவள. நான் இவ்வளவு சொல்லியும். இப்ப கல்யாணம் கட்டிறதில அப்பிடி என்னடி பிரச்சினை உனக்கு?”

”அப்பம் எண்டா புட்டுக் காட்டுறதில்லை”

”வெங்காயம் தெரியதாதெண்டவனுக்கு சோனகன் உரிச்சுக் காட்டினானாம். அப்பிடி இருக்கடி உன்ரை கதை. வேண்டாமெண்டா. ஏன் வேண்டாமெண்டுறாய் எண்டுறதுக்கான காரணத்தையாவது சொல்லன்.”

”வேண்டாமெண்டா வேண்டாம்தான். உங்களைக் கையெடுத்துக் கும்பிடுறன். தயவுசெய்து இதுக்குமேல என்னட்டை ஒண்டும் கேக்காதீங்கம்மா.”

“ஏனடி? அப்ப ஆரையும் நீ லவ் பண்ணுறியா? அட! இப்ப நான் என்ன கேட்டிட்டன் எண்டு இப்ப நீ இப்பிடி முட்டக் கண்ணீர் வடிக்கிற? நீ ஒண்டுக்கும் பயப்பிடத் தேவையில்ல. ஆள் ஆரெண்டு சொல்லு. அவன்ரை வீட்டுக்காரரோட கதைச்சு அவனுக்கே உன்னைக் கட்டி வைக்கிறம். இதுக்குப் போய் அழுது கொண்டு. கொண்ணன் வரட்டும். அவன்ரை டீரெய்ல்ஸ்ஸைக் குடுத்தா அவனே எல்லாத்தையும் செய்வான்.”

”Please அம்மா. என்னட்டை ஒண்டும் கேக்காதீங்க. திரும்பியும் உங்களைக் கையெடுத்துக் கும்பிடுறன். என்னை இப்பிடியே என்ரைபாட்டில விட்டுவிடுங்க”

யாரு மில்லைத் தானே கள்வன்

தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ

தினைத்தா ளன்ன சிறுபசுங் கால

ஒழுகுநீ ராரல் பார்க்கும்

குருகு முண்டுதான் மணந்த ஞான்றே. - (குறுந்தொகை - 25)

 (தொடரும்)

* * * * *
நன்றி: தாய்வீடு - ஜூலை 2021