Wednesday, June 2, 2021

பேசாப்பொருள்



குறிப்பறிவுறுத்தல்:

”உங்களுக்கு வரவர வீட்டில அக்கறையே இல்லாமப் போய்ற்றுது. நான் ஒருத்தி கிடந்து எல்லாத்தையும் என்ரை தலையில அள்ளிப்போட்டுக்கொண்டு மாரடிக்க வேண்டிக்கிடக்கு, ஐயோ நான்படுற பாடிருக்கே நாய்படாப்பாடு”

”உமக்கென்னப்பா நடந்தது இப்ப. ஒரு மனுசன் வேலையால களைசு்சு விழுந்து வந்து நிம்மதியா கொஞ்சநேரம் big boss பார்ப்பமெண்டால். இப்ப உமக்கு என்னப்பா பிரச்சனை?”

“எனக்கென்ன பிரச்சனை? உவன் ஜெயந்தனுக்குத்தான் ஏதோ பிரச்சனை போலக்கிடக்கு”

”என்னப்பா சொல்லுறீர்? அவனுக்கென்ன பிரச்சனை? வாற செப்ரம்பருக்குத் தான் யூனிவேர்சிற்றிக்குப் போக இருக்கிறான். அதுக்குள்ளை அவனுக்கென்ன பிரச்சனை வந்தது?”

”நீங்க கொஞ்சம் ஜெயந்தனோட கதைக்கவேணும். ஆளின்ரை நடவடிக்கைகள் கொஞ்சநாளா ஒரு மாதிரிக் கிடக்கு. நானும் நாலைஞ்சுதாரம் கேட்டுப் பாத்திற்றன். ஒண்டுஞ் சொல்லுறானில்லை. எனக்கெண்டால் சரியான பயமாய்க்கிடக்கு”

”சரியப்பா விடும். நான் அவனைப் பாத்துக் கொள்ளுறன். இந்த விக்டோரியா லோங் வீக்கென்ட்டுக்கு அவனை எங்கையும் பார்க்கிற்குக் கூட்டிக்கொண்டு போய்க் கதைக்கிறன்.”

”ஓமப்பா. உங்களோடையெண்டால் அவன் மனம் விட்டுக் கதைப்பான். நான் வந்தா இடைஞ்சலாயிருக்கும். நீங்க மட்டும் அவனைக் கூட்டிக்கொண்டுபோய் வடிவா என்ன பிரச்சினை எண்டு கேளுங்கோ. ஒண்டுக்கும் அவனைப் பேசிக்கீசிப் போடாதேங்கோ. பிறகு ஒண்டு கிடக்க ஒண்டு நடந்துதெண்டால், குஞ்சாச்சி பேரனும் சூசைட் பண்ண முதல் உப்பிடித்தான் ஒருமாதிரித் திரிஞ்சவனொமெண்டு சனம் கதைச்சது.”

”நீர் சும்மா விசர்க்கதை கதை கதைக்கிறீர். நாங்க என்ன அவையைப் போல அவ்வளவு strict-ஆவா அவனை வளர்க்கிறம். இந்த லொக்டவுண் வந்து எல்லாரையும் வீட்டுக்குள்ள முடக்கினதால எல்லாச் சனமுமே இப்ப கொஞ்சம் டிப்றசனாத்தான் இருக்கு. இதுக்குப் போய் இப்படிக் கவலைப்படுறீர்”

”இல்லையப்பா. பெத்த மனசுக்கு ஏதோ நல்லதாப் படேல்ல. அதுதான் நீங்க ஒருக்கா அவனிட்ட ஓப்பினா மனம் விட்டு அவனுக்கு என்ன பிரச்சினை எண்டு கேட்டு அதைத் தீர்த்து வைச்சிற்றீங்க எண்டால் நானும் நிம்மதியா இருந்திருவன். எங்களுக்கு இருக்கிறதோ ஒண்டே ஒண்டு கண்ணே கண்ணெண்டு இந்த ஒரே ஒரு குருத்துத்தான். அதுக்கு ஒண்டெண்டால் பிறகு நானும் குஞ்சாச்சியின்ரை மோளைப் போல நானும் நடைப்பிணமாத்தான் திரிய வேண்டியிருக்கும்.

”சும்மா விசர்க்கதை கதைக்கிறத முதலில நிப்பாட்டும். உமக்கு இப்ப எங்களுக்கு ஒரேயொரு பிள்ளைதான் இருக்கெண்டுறது கவலையெண்டா வாரும் அப்ப இண்டைக்கே இன்னொண்டுக்கு ஆயத்தப்படுத்துவம்”.

”நாப்பது வயதிலதான் நாய்க்குணம் எண்டுவாங்கள் என்ர மனுசனுக்கு அது அம்பது வயசில வருகுது போல”

”ஐம்பதிலும் ஆசை வருமெண்டு பாட்டே இருக்கடியப்பா”

”இது போறபோக்குச் சரியில்லாமக் கிடக்கு. வயதுக்கு வந்த பிள்ளையை வீட்டில வைச்சுக்கொண்டு. எனக்குக் குசினிக்குள்ள நிறைய வேல கிடக்கு நான் போகவேணும. நீங்க ஜேனோட கதைக்க வேணுமெண்டிறத மறந்திடாதீங்க”

”சரி சரி. எல்லாம் விளங்குது. கெதியா குசினி வேலைகளை முடியும்”

கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு – (குறள் 1271)

 

நாணுத் துறவுரைத்தல்:

”அம்மா! நான் உங்களிட்டை ஒண்டு சொல்ல வேணும் அம்மா. அது உங்களுக்குப் பிடிக்காது எண்டு தெரியும், But உங்களுக்குத் தெரியாம அதைச் செய்ய நான் விரும்பேல்லை”

எழில் வந்து என்னிடம் அப்படிச் சொன்னபோது நான் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல்,

”அப்பிடி என்னடி பெரிசா எங்களுக்குப் பிடிக்காததைச் செய்யப் போறாய்? நீ கேட்டு இதுவரைக்கும் எதுக்கு நானோ அல்லது உன்ரை கொப்பரோ மாட்டனெண்டு சொல்லியிருக்கிறம்?”

”இல்லையம்மா இது கொஞ்சம் சீரியசான விசயம். அப்பாவோட இதைப்பற்றிக் கதைக்கேலாது. அதாலதான் உங்களிட்டைசை் சொல்லுறன்”

”அப்படி என்னடி இந்த வயதில உனக்கு சீரியான விசயம்?”

”We are planning to have sex”

“What the …? என்னடி உளறுறாய்?”

”ஓம் அம்மா, நேற்று whatsapp-இல இதைப்பற்றி நானும் ஜெயந்தனும் சீரியஸா டிஸ்கஸ் பண்ணீற்றுத்தான் உங்களிட்டச் சொல்லுறன்”

”உனக்கென்னடி விசர்கிசர் பிடிச்சிற்றுதா? சும்மா என்னோட வந்து விளையாடுறதுக்கு உனக்கு வேறை விசயம் ஒண்டும் கிடைக்கேல்லையா?

”அம்மா! I'm talking serious”

“நல்லா வேண்டப்போற என்னட்ட. முளைச்சு இன்னும் மூண்டு இலைகூட விடயில்ல. பார் அதுக்குள்ள கதைக்கிற கதையை. வரட்டும் இணை்டைக்கு கொப்பர். பொம்பிளைப்பிள்ளையெண்டு அளவுக்கு மீறிச் செல்லம் குடுத்து உன்னைக் குட்டிச் சுவராக்கிப் போட்டேர். எக்கணம் தெரிஞ்சவை ஆற்றையும் காதில இந்தக் கதை விழுந்துதெண்டா குடும்ப மானமே போச்சு. கண்டறியாத போன் ஒண்ட வாங்கிக் குடுத்து, முதலில உந்தப் போனைத்தான் அடிச்சு உடைக்க வேணும்.”

”அம்மா! Please இப்பை எதுக்கு இவ்வளவு ரென்ஷனாகிறீங்க?” இந்தக் கொரோணா lockdown-ஆல எங்கட prom-உம் நடக்காது போல இருக்கு. நாங்க மட்டுமில்லை எங்கட மற்ற பிரண்ட்ஸ் இதைப்பற்றிக் கதைச்சவை.”

”பிள்ளை! உன்ரை கதையைக் கேக்கக் கேக்க எனக்கு ரத்தமெல்லாம் கொதிச்சு உடம்பெல்லாம் பதறத் தொடங்குது. உந்தக் கனடாவுக்கு வந்து பிள்ளைகளை வளர்க்கிறதுக்கு மனிசர் படுறபாடு இருக்கே! கடவுளே!”

”இது இதுதான் அம்மா உங்கடை பிரச்சனை. நீங்க இன்னமும் உங்கட காலத்தில ஊரில இருந்த மாதிரியே இப்பையும் இஞ்சை இருக்கவேணும் எண்டு  நினைக்கிறீங்கள் அம்மா? ஊரிலயே இப்ப எவ்வளவு மாறிப்போய் இருக்கோ?”

”பிள்ளை நாங்க எங்க இருந்தாலும் தமிழர்தான். எங்களுக்கெண்டு ஒரு பண்பாடு இருக்கு. சும்மா மற்ற இன ஆக்கள் மாதிரி கண்டவங்களோடையும் படுத்தெழும்பிறது இல்லை எங்கட பண்பாடு. சின்னனில இருந்து உனக்குத் தமிழையும் எங்கடை பண்பாட்டையுமு் வடிவாச் சொல்லித் தந்து தானே வளர்த்தனான். பிறகென்னத்துக்கு இப்ப இப்பிடித் தறிகெட்டு அலையிற? இது உன்ரை பிழையில்லை. உனரை பிறண்ட்ஸ்தான் உன்னையும் நல்லாப் பழுதாக்கிப் போட்டுதுகள். பண்டியோட சேந்த கண்டும் பீ தின்னுமாம்”

”Please mind your words அம்மா! எதுக்கு இப்பை என்ரை பிறண்ட்ஸ்ஸைத் திட்டுறீங்கள். இது முழுக்க முழுக்க என்ரை முடிவதான். என்ரை பிறண்ட்ஸ் ஒண்டும் என்னை force பண்ணேல்லை. அதுசரி மற்ற இன ஆக்களைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியுமெண்டு இப்பிடிக் கதைக்கிறீங்கள்? அவையும் தங்கட partners-க்கு genuine-ஆத்தான் இருக்கினம். என்ன, ஒரு கொஞ்சப்பேர் செய்யிற பிழையளை வைச்சுக்கொண்டு முழு இனமும் அப்படியெண்டு நினைக்கிறது எவ்வளவு பிழை தெரியுமா?”

”ஓ! உனக்கு இப்ப இதுகள் எண்டா எல்லாம் நல்ல வடியாத் தெரியும் என? வருகுது நல்லா வாயில. அவள் லோறாவை இஞ்ச வீட்ட வந்து உன்னோட பழக விட்டது சரியான பிழையாப் போச்சு. அந்தப் பிரஞ்சுக்காரிதான் உன்ரை மனசையும் கெடுத்துப் போட்டாள்.”

”அம்மா லோறாவைப் பற்றிப் பிழையாக் கதைக்காதீங்கோ. அவளும் என்னைப் போலதான். அவளின்ரை அம்மாட்டை அவளும் இதைப்பற்றி இரண்டு கிழமைக்கு முதல் கதைச்சவளாம். லோறாவின்ரை அம்மா ஒரு நாள் முழுக்கச் சாப்பிடாமக் கிடந்தவாவாம். பிறகும் ஒரு கிழமையா சரியான அப்செற்றா இருந்தவாவாம். அதுக்குப் பிறகுதான் சரியெண்டு சொன்னவாவாம். அதுமட்டுமில்லாம பமிலி டொக்டரோட கதைச்சு birth control pills-உக்கும் priscription வேண்டிக் குடுத்தவாவாம்.”

”அதுகளுக்கென்ன? அதுகள் என்ன எங்களைப் போல கற்பு மானம் எண்டு பண்பாட்டோடையா வாழுதுகள்?  நான்தான் பெரிய பிழைவிட்டிட்டன். உன்னைத் தமிழ்ப் பெட்டையளோட மட்டும்தான் பழக விட்டிருந்திருக்க வேணும்”

”அம்மா! நீங்க கோபத்தில தேவையில்லாமா மற்றாக்களைப் பற்றி பிழைபிழையாக் கதைக்கிறீங்கள். தமிழாக்களோட மட்டும் நான் பழகியிருந்தா எனக்கு இந்த feelings  வந்திருக்காது எண்டு நினைக்கிறீங்களோ? உங்க. எங்கட ஸ்கூலில படிச்ச ஒரு அக்காவுக்கு என்ன நடந்தது எண்டு எனக்கும் தெரியும். அவாவின்ரை அம்மாவும் லோறாவின்ரை அம்மா போல இருந்திருந்தா. ப்ச். விடுங்கோ. எங்களுக்கேன் தேவையில்லாம மற்றாக்களின்ரை கதைகள்? நீங்க என்ரை வயசில இருக்கேக்குள்ள உங்களுக்கு இந்த feelings ஒண்டும் இருக்கேல்லையா?”

”உங்கடை வயசில நாங்க ஷெல்லுக்கும், ஹெலிக்கும், பொம்மருக்கும் பயந்து பயந்து உயிரைக் கையில பிடிச்சுக் கொண்டு வாழ்ந்தனாங்களே தவிர, உன்னை மாதிரி இப்பிடி ஒண்டும் அமரில திரியேல்ல. எங்கட பெடியளின்ரை காலத்தில பெம்பிளைப் பிள்ளைகள் எல்லாம் எவ்வளவு சுதந்திரமா வாழ்ந்தாலும் ஒருத்தரும் எங்கட பண்பாட்டை மீறினதில்லை”

”அப்ப அந்தக் காலத்தில ஊரில ஒருத்தரும் லவ் பண்ணவுமில்லை. ஒருத்தருக்கும் பிள்ளைகளும் பிறக்கவுமில்லை எண்டு சொல்லுறீங்களோ?”

”நிப்பாட்டடி! நீ கதைக்கிறதைக் கேக்க என்ரை காதெல்லாம் கூசுது. கடவுளே! நான் என்ன பாவம் செய்தனோ? எனக்கெண்டு இப்பிடி ஒண்டு வந்து பிறந்திருக்கே? இதிலும் விட நீ பிறக்காம இருந்திருந்தா நான் எவ்வளவு சந்தோஷமா இருந்திருப்பன். இந்த வயிறெரிஞ்சு சொல்லுறன். நீ நல்லாவே இருக்கமாட்ட.”

”அம்மா please இப்பிடிக் கதைக்காதீங்கோ. நான் என்ரை feelings-ஐ உங்களிட்டச் சொன்னனான். நீங்கள் என்னை understand பண்ணுவீங்கள் எண்டு நினைச்சன். யாமினி அப்பையும் திருப்பித்திருப்பிச் சொன்னவள் இதுகளைப் பற்றி வீட்டில கதைக்காதை. எங்கடை parents இதுகளைப் பெரிய பிரச்சினை ஆக்குவினம் எண்டு. ஆனா லோறா தான் சொன்னவள் எங்கட parents தான் எங்கட actual well-wishers எண்டும் அவையைத்தான் நாங்க கட்டாயம் respect பண்ண வேணுமெண்டும். அதாலதான் என்ரை லைப்ல நடக்க இருந்த ஒரு இம்போட்டனற் விசயத்தை, அது உங்களுக்குப் பிடிக்காதெண்டு தெரிஞ்சும் உங்களிட்டைச் சொன்னனான். யாமினி சரியாய்த்தான் சொல்லியிருக்கிறாள். சரி விடுங்கோம்மா. இப்பிடி உங்களிட்டைத் திட்டு வாங்கிறதிலும் விட நான் ஒண்டையும் அனுபவிக்காமலே சும்மா இருந்தே செத்துப் போகிறன்.”

”ஐயோ! என்ரை எழில்குஞ்சு, ஏனம்மா அம்மாவைப் போட்டு இப்பிடிக் கொல்லுறாய். நீ நல்லா இருக்கவேணும் எண்டுதானே நானும் உன்ரை அப்பாவும் இப்படிக் கஸ்ரப்படுகிறம். பார் அந்த மனுசன. இந்தக் கொரோனாக்குள்ளயும் இருக்க நிக்க நேரமில்லாமா ரெண்டு வேலைக்குப் போகுது. உன்ரை யூனிவர்சிற்றிப் படிப்புக்கு நீ லோன் எடுத்துக் கஷ்ரப்படக் கூடாதெண்டு ஏற்கனவே உனக்கு RESP-யில தேவையான அளவு காசு சேத்தாப்பிறகும், உனக்கெண்டு ஒரு வீடும் வேண்டிவிட்டு அந்த மோட்கேஜ் காசும் கட்டுறதுக்காக எவ்வளவு கஷ்ரப்படுகுது? நீ நல்லாப் படிச்சுப் பெரியாளா வரவேணும். உனக்குப் பிடிச்சமாதிரியே நல்ல மாப்பிள்ளை பார்த்துக் கட்டி வைக்கவேணுமெண்டு எவ்வளவு கனவுகள் எங்களிட்ட இருக்கு. ஏனம்மா நீ எங்களைப் புரிஞ்சுகொள்ள மாட்டன் எண்டுற? இந்த வயசில இதெல்லாம் கூடாதம்மா.”

”நீங்க எல்லாரும் உங்கட கனவுகளுக்கும் feelings-களுக்கும் தான் இம்போட்டன்ற் குடுக்கிறீங்களே ஒழிய என்ரை feelings-ஐ விளங்கிக் கொள்ளுறீங்களில்லை. சரி விடுங்கோ. நான் ஜெயந்தனிட்டைச் சொல்லுறன் அவனெண்டா என்னை நல்லா understand பண்ணுவான்.”

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில் – (குறள் 1137)

 

புணர்ச்சி விதும்பல்:

“ஜேன்! தோளுக்கு மூத்தாத் தோழன் எண்டு சொல்லுறது. அப்பா உன்னோட ஒரு பிரண்டாத்தானே பழகிறனான். பிள்ளை ஏன் இப்ப கொஞ்ச நாளா ஒரு மாதிரி இருக்கிறீங்கள்?”

”open-ஆச் சொல்லுறதெண்டால் எனக்கு இதைப்பற்றி உங்களோட கதைக்கக் கொஞ்சம் awkward இருக்கப்பா”

”ஏனப்பு அப்பிடி நினைக்கிறாய்? அப்பாவை உங்கட ஒரு நல்ல பிரண்டா நினைச்சு open-ஆக் கதையப்பு. அம்மாவும் உன்னைப் பற்றிச் சரியாக் கவலைப்படுகிறா.”

”என்ரை feelings உங்களுக்கு விளங்குமா எண்டுதான் எனக்கு doubt-ஆ இருக்கப்பா”

”நானும் உங்கட வயசெல்லாம் கடந்துதான் வந்தனான். என்ரை பிள்ளை ஆரையும் love பண்ணினாலும் பரவாயில்லை. அப்பா பேசமாட்டேர். நீங்க உங்கட பிரச்சினையைச் சொல்லுங்கோ. அத solve பண்ணுறதுக்கு அப்பாவும் உங்களுக்கு  help பண்ணுவேர்.”

”எழிலை எனக்கு நல்லாப் பிடிக்குமப்பா”

”ஓ! உங்கட பிரண்ட் எழிலைச் சொல்லுறீங்களோ? ஓம் அவா நல்ல பிள்ளை தானே. ஏன் அவாக்கு உங்களில விருப்பமில்லையாமா?”

”இல்லையப்பா. அவளுக்கும் என்னில சரியான விருப்பம். I think we are in love”

“It’s OK அப்பு. Love பண்ணுறது ஒண்டும் பிழையான விசயம் இல்லைத்தானே. அது உங்கட படிப்பைக் குழப்பாம இருந்தாச் சரி. உதுக்கா நீங்கள் இவ்வளவு யோசிச்சனீங்கள். நான் என்னவோ ஏதோ எண்டு பயந்து போனன். இதுக்கேன் நீங்க ஒருமாதிரி இருக்கிறீங்கள்? நல்ல happy-ஆ energetic-ஆ எல்லோ இருக்க வேணும்.”

இல்லையப்பா. எழிலின்ரை வீட்டில அது கொஞ்சம் பெரிய பிரச்சினை ஆகீற்றுது.”

”ஏனடா அவைக்கு என்ன பிரச்சினை? இந்த வயசில எதுக்கிந்த லவ் எண்டு பிரச்சினை பண்ணுகினமா?”

”அதில்லையப்பா. அதை என்னெண்டு உங்களிட்டைச் சொல்லிறது எண்டுதான் தெரியேல்லை அப்பா”

”எனக்குத் தெரிஞ்சு அவையும் எங்கட ஆக்கள்தான். பிறகு என்ன தான் அவைக்குப் பிரச்சினை? ஆரு எழிலின்ரை அப்பாவா பிரச்சினை பண்ணுறார்?”

”ஐயோ அப்பா! எழிலின்ரை அப்பாவுக்கு இதைப்பற்றி ஒண்டுமே தெரியாது. அவாவின்ரை அம்மாதான். அவா இப்ப எழிலோட பெரிசாக் கதைக்கிறதும் இல்லையாம்.”

”அவா கோபப்படுறதிலயும் ஒரு ஞாயம் இருக்குத்தானே. நீ அவாவின்ரை point-இல இருந்து யோசிச்சுப் பார். இந்த வயசிலையே லவ் எண்டா எந்தப்  parents தான் பயப்பிடமாட்டினம். அதிலையும் பொம்பிளைப் பிள்ளையை வைச்சிருக்கிறவை.  பயப்பிடுவினம் தானே.”

”ஓம் அப்பா. அது சரியெண்டு இப்ப எனக்கு விளங்குது. ஆனா அவா உங்கள, அம்மாவைப் பற்றியெல்லாம் கூடாமப் பேசினவாவாம். பிள்ளையை ஒழுங்கா வளக்கத் தெரியாமக் காவாலி போல வளத்திருக்கிறீங்களாம் எண்டும் சொன்னவாவாம். அதுதான் எனக்கு சரியான guilty-ஆ இருக்கு”

”இந்த வயசில கனபேருக்கும் ஒரு crush வாறது சகஜம். நீங்க இன்னும் கொஞ்சம் deep-ஆப்போய் லவ் பண்ணத் தொடங்கீற்றீங்க. சரி விடு. இதைப்பற்றியெல்லாம் கனக்கக் கவலைப்படாத”

”Love மட்டுமில்லையப்பா நாங்க அதுக்கும் கொஞ்சம் கூடவா  think பண்ணின்னாங்கள். அதை எழில் அவளின்ரை அம்மாட்டைச் சொல்லப்போய்த்தான் இவ்வளவு பிரச்சினையும்”

”அப்பிடி என்னடா love-க்கும் மேலால think பண்ணின்னீங்க?”

”அது வந்து, வந்து… Ezhil and me talked about having …”

“Having….?”

“அப்ப்ப்பா, அதை எப்பிடி என்ரை வாயால உங்களிடை்டைச் சொல்லுறது. நாங்க அவசரப்பட்டிருக்கக் கூடாதுதான். ஆனா..”

”You mean sex?”

“mmmm, yah, I’m so sorry அப்பா.”

”It’s OK ஜேன். We can talk openly. You are an adult now.”

“Thanks pa. So, we planned to have it after the pandemic. Some of our other friends talked about to have the first experience in our prom night, but due to the pandemic, maybe we won’t have it. That’s why…”

“I can understand it ஜேன். நீங்க ரெண்டு பேரும் அதை விரும்பினால் நாங்க அதைத் தடுக்க ஏலாது. உங்கட இந்த வயசக் கடந்துதான் நாங்களும் வந்தனாங்கள். அந்த உணர்ச்சிகளையும் கடந்துதான் வந்தனாங்கள். எண்டாலும் எங்களால ஒரு கட்டுப்பாட்டோட இருக்க, நாங்க இருந்த எங்கட நாட்டு சூழ்நிலையும் பெரிய உதவியா இருந்துது. 

”Thanks pa. எங்க நீங்க என்னைப் பேசப்போறீங்களோ எண்டு நான் சரியாப் பயந்துகொண்டிருந்தனான்”

”நீ இப்பிடி open-ஆ என்னோட கதைச்சது எனக்கும் நல்ல சந்தோஷம். ஒரு அப்பாவா இல்லாமா இதையெல்லாம் கடந்துவந்த உன்ரை ஒரு நல்ல பிரண்டா உனக்குச் சில விசயங்களைச் சொல்ல விரும்பிறன். அதையும் கேட்டிட்டு நீ என்ன முடிவெடுத்தாலும் சந்தோஷமா அப்பா அதை accept பண்ணுவார். அதை இப்பவே உனக்கு அப்பா promise பண்ணுறார். சரியா?”

”சரியப்பா”

”இந்த Teenage வயசிலதான் ஹோர்மன்கள் சுரக்கத்தொடங்கிறது. பாலியல் உந்துதல்கள் ஏற்படுகிறது எல்லாம் ஏற்கனவே நீங்கள் படிச்சிருப்பீங்கள். ஆனால் இன்னொண்டையும் நீங்க நினைவில வைச்சிருக்க வேணும். செக்ஸ் எண்டுறது எல்லா உயிர்களுக்குமே அளவில்லாத pleasure-ஐத் தருகிறது.

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள

எண்டு வள்ளுவரும் சொல்லியிருக்கிறார். எண்டாலும், அது அடிப்படையில இன்னொரு உயிரை உற்பத்தியாக்குகின்ற செயல். இன்னொரு உயிரியை உற்பத்தியாக்குவதற்கு எவ்வளவு சக்தி தேவைப்படும் என்று யோசிச்சுப் பார்த்திருக்கிறியா? இந்த சக்தியை விரயமாக்காமல் எங்கட கவனத்தைப் படிப்பிலயோ வியைாட்டிலயோ இல்லாட்டி எங்களுக்கு விருப்பமான ஒரு பொழுதுபோக்கிலயோ பயன்படுத்தினால் அதனால கிடைக்கிற பயன் எங்கட பிற்கால வாழ்க்கைக்கு நல்ல பிரயோசனமாயிருக்குமே. அதுக்காக செக்ஸே கூடாது எண்டு நான் சொல்ல வரேல்ல. ஆனா இந்தக் காலத்தில, இந்த வயசு வந்து எங்கட வருங்கால வாழ்க்கையை வளமாக்குவதற்குத் தேவையான விடயங்களைச் செய்ய வேண்டிய வயசு. அப்பிடிச் செய்தீங்களெண்டா பிற்காலத்தில கஷ்ரப்படாம வாழலாம்.”

”நீங்க சொல்லுறது சரிதான் அப்பா, ஆனா என்னால என்ரை mind-அக் control பண்ணேல்லாம இருக்கு. எப்ப பார்த்தாலும் அந்த ஞாபகவே வந்து படுத்துது. கனவில கூட”

”You mean wet dreams?”

தலையைக் குனிந்து கொண்டான்

“Don’t worry ஜேன். It’s normal, I too had it. So, you don’t need to feel guilty. இதுகளையெல்லாம் நீ பெரிசா எடுக்கத் தேவையில்லை. இது தொந்தரவா இருக்கெண்டு நீ நினைச்சியெண்டால் நீ தியானம் பழகலாம். அது உனக்கு நிறைய help பண்ணும் எண்டு நினைக்கிறன். அது மட்டுமில்ல இப்ப நாங்க எல்லாருமே முந்தி மாதிரி வெளியில போய்த் திரியாம வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கிறதாலயும் தனிய இருக்கிறதாலயும் தான் இப்பிடியான நினைவுகள் வாறது. அதால இதைப்பற்றி நீ guilty-ஆ feel பண்ணத் தேவையில்ல. Please feel relax”

“Thanks pa. I’m so relaxed now after talking to you”.

”நான் உன்னை எதுக்குமே force பண்ணேல்லை ஜேன். இது உன்ரை லைப். நீதான் முடிவெடுக்கவேணும். ஒருவேளை if you still feel you want to have sex, please consider the protection for both of you. உனக்கு நான் என்ன சொல்ல வாறன் எண்டு விளங்கும் எண்டு நினைக்கிறன்.

“Don’t worry அப்பா!. நான் இப்ப நல்ல தெளிவாயிற்றன். என்னால இனி இந்த situation-அ வடிவா handle பண்ணேலும். Thank you so much pa. உங்கட இந்த help-இற்கு.”

மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார் – (குறள் 1289)

நன்றி: தாய்வீடு - ஜூன் 2021