Monday, September 6, 2021

மச்சாளின் கல்யாணம்

”அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு; தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?”

கெலோனாவிலிருந்து (Kelowna) வான்கூவர் நோக்கிய பயணத்தில், வன்கூவரினை அண்மிக்கையில், கொழுந்துவிட்டுப் பற்றி எரிந்துகொண்டிருந்த காட்டுத்தீயினைக் காண்கையில் பாரதியாரின் இப்பாடல்தான் மனதிற்குள் எழுந்து வியாபித்துக் கொண்டிருந்தது. அந்தத் தீ பாரதியாரை அடுத்துப் பட்டினத்தாரையும் இழுத்துக்கொண்டு வந்தது.

முன்னை இட்ட தீ முப்புரத்திலே
பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே

பட்டினத்தாரின் இந்தப் பாடலுடன் தொடர்புபட்ட ஞாபகச் சங்கிலித் தொடர் எனக்குச் சுந்தரமூர்த்தி அம்மானை நினைவுக்குக் கொண்டுவந்தது. நான் முதன்முதலாகச் சாட்டி மயானத்திற்குச் சென்று ஒரு பிணம் எரிவதைப் பார்த்ததென்றால் அது சுந்தரமூர்த்தி அம்மானின் பிணத்தைத்தான்.

சுந்தரமூர்த்தி அம்மானைத் தெரியாதவர்கள் 1990 இற்கு முற்பட்ட காலத்தில் வேலணையில் இருந்திருக்க மாட்டார்கள். அதற்காக வேலணை தவிர்ந்த ஏனைய இடங்களில் உள்ளவர்களுக்கு அவரைத்தெரியாது என்று அர்த்தமல்ல. யாழ்ப்பாணத்தில் அக்காலத்திலிருந்த மாட்டுவண்டிச் சவாரிப்போட்டி ஆர்வலர்களில் பெரும்பாலானவர்கள் சுந்தரமூர்த்தி அம்மானின் பரம இரசிகர்கள். முதலிலேயே சொல்ல மறந்து விட்டேன். அந்தக் காலத்தில் அதாவது இந்தியன் ஆமி இலங்கைக்கு வருவதற்குச் சில மாதங்கள் முன்பு வரை, சுந்தரமூர்த்தி அம்மான் யாழ்ப்பாணத்தில மிகவும் பிரபலமான ஒரு மாட்டுவண்டிச் சவாரிக்காரன். மாட்டுவண்டிச் சவாரியில ஆள் ஒரு புலி. 

1987 இல், இலங்கை விமானப்படையின் பொம்மர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், கா.பொ. இரத்தினம் அவர்களின் வீட்டின்மீது, நடாத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் அங்கு நின்றிருந்த இரண்டு குதிரைகள் கொல்லப்பட்டது பத்திரிகைகளில் வந்த செய்தி. ஆனால் அதே குண்டுத் தாக்குதலில் சுந்தரமூர்த்தி அம்மான் ஆசை ஆசையாய் வளர்த்த, மாட்டுவண்டிச் சவாரிகளில் அவருக்கு வெற்றிகளை ஈட்டித்தந்த, அவருடைய இரண்டு எருத்து மாடுகளும் படுகாயமடைந்து ஒரு கிழமையிலேயே இறந்துபோன விடயம் ஏனோ தெரியவில்லை, ஒரு செய்தியிலையும் வரவில்லை. ஆனா அது அவற்றை குடும்பத்தின்ரை வாழ்க்கையையே தூக்கிப் பிரட்டிப் போட்டுது. 

அதுவரைக்கும் சுந்தரமூர்த்திஅம்மான் வீட்டை நான் அடிக்கடி போறதுக்கு முக்கிய  காரணம்  அவரும் அவருடைய வண்டில் மாடுகளும்தான். நான் எப்ப போனாலும் ”வாடா மருமோன” எண்டுதான் பாசமாக் கூப்பிடுவார். அப்போதெல்லாம் ”வாங்க சின்ன மச்சான்” எண்டு அவரின் மகள் என்னை அன்பாகக் கூப்பிட்டாலும் நான் ஆசையாய்  ஓடிப்போய் பக்கத்தில்  நிற்பது அம்மானுக்குப் பக்கத்தில்த்தான். ஏனென்றால் அவர் எப்போதுமே அந்த எருத்து மாடுகளுக்கு அண்மையில்த்தான் நிற்பார். 

அந்தமாடுகளைக் கொஞ்சம் அளைந்துகொண்டு நிற்கையிலேயே மச்சாள் ஏதாவது தின்பண்டங்களைக் கொண்டுவந்து தருவார் அல்லது குடிப்பதற்கு ஏதாவது தருவார். அதனால்த்தான் முதலில் அவர்மீது எனக்குப் பிரியம் உண்டாகியது. ஏனோ தெரியவில்லை. மாமி மட்டும் கொஞ்சம் விலத்தியே நின்று கொள்வார். மாமாவுக்கும் மாமிக்கும் அவ்வளவிற்கு ஒத்துவராது என்பது அந்தவயதில் எனக்கே புரிந்திருந்தது.

மாமியும் மச்சாளைப்போல நல்ல வடிவும் நிறமும். மாமாவும் கறுப்பெண்டாலும் நல்ல களையான ஆள்தான். ஆனால் என்ன, முன்மண்டை முழுக்க அவருடைய நாம்பன் மாடுகள் நல்லா நக்கிக் கொடுத்ததாலயோ என்னவோ நல்ல வழுக்கை. சனிக்கிழமைகளில் வெய்யில் வெளிச்சத்தில அவருடைய தலை, மாமி நல்லாப் புளி போட்டு விளக்கி வைக்கிற பித்தளைச் செம்புகள் மாதிரி, பளபளவெண்டு மினுங்கும். சனிக்கிழமைகளில்த்தான் அம்மான் மாடுகளைக் குளிப்பாட்டிற்றுத் தானும் நல்லா எண்ணெய் தேய்த்து முழுகிறவர். 

அவர் தன்னுடைய முழு நேரத்தையும் தன்னுடைய சவாரி மாடுகளைக் கவனிப்பதிலேயே செலவழிப்பார். மாமிக்கு அது பிடிப்பதில்லை. ”இந்த மனிசனுக்கு என்னைக் கட்டி வைச்ச நேரம் பேசாம ஒரு மாட்டைக் கட்டி வைச்சிருக்கலாம். அதுவும் நாம்பன் மாட்டை. போயும் போயும் இந்த மனிசனுக்குப்போய் என்னைக் கட்டி வச்சாங்களே. இதைக்கட்டி நான் என்னத்தைக் கண்டன்” எண்டு அடிக்கடி புறுபுறுத்துக் கொண்டிருப்பார்.

சுந்தரமூர்த்தி அம்மான் எங்களுக்குச் சொந்த மாமாவோ அல்லது ஒன்றுவிட்ட மாமாவோ கிடையாது. ஆனாலும் உறவுமுறையில் அவர் மாமா என்பது மட்டும் நிச்சயம். அது மட்டுமல்லாமல் அப்போது மச்சாளை, அதுதான் சுந்தரமூர்த்தி அம்மானின் மகளை, எனது ஒன்றுவிட்ட அண்ணாவான எனது பெரியப்பாவின் மகன் சுத்திக் கொண்டிருந்தார். அவரும் மச்சாளும் அப்போது வேலணை மத்திய கல்லூரியில்தான் க.பொ.த. உயர்தரம் படித்துக்கொண்டிருந்தார்கள். நான் பத்து வயது கூடத் தாண்டாத பாலகன் என்பதால், என்னைத் தூதுவிடுவதற்கு அண்ணா முயற்சித்துக் கொண்டிருந்தார். அண்ணா மட்டுமல்ல அண்ணாவிலும் வயது கூடிய வேறுபல அண்ணன்மாரினுடைய சைக்கிள்களும் மச்சாளின் வீட்டிற்கு அண்மையில் அடிக்கடி சுத்திக் கொண்டிருக்கும். 

மச்சாளைக் கனபேர் சுழட்டிக்கொண்டிருந்தாலும் மச்சாள் பெரியப்பாவின்ரை மகனில மனப்படுகிறது எனக்கும் புரிந்திருந்தது. அடிக்கடி என்னட்டை அண்ணாவைப் பற்றி விசாரிப்பா. ஆனால் ஏனென்று தெரியாது, அவர் அண்ணாவைப்பற்றி விசாரிப்பது எனக்குப் பிடிக்காது. மச்சாள் என்னுடன் மட்டும்தான் பழகவேண்டும் என்று என் மனதிற் தோன்றும். மாமாவுக்கும் தன்ரை மகளில நல்ல பிரியம். தன்ரை மகளை ஊரில இல்லாத இளவரசனுக்குத்தான் கட்டிக்குடுப்பன் எண்டு அடிக்கடி சொல்லுவார். அதைக்கேட்டால் என்னுடைய இதயத்தை யாரோ பிடிச்சுக் கசக்கிப்போட்டுப் போறதுபோல இருக்கும்.

சவாரி மாடுகள் இரண்டும் இறந்ததன் பின்னர் மாமா முற்றிலும் ஒடுங்கிப்போயிருந்தார். இப்போது மாமி கொஞ்சம் மகிழ்ச்சியாய் இருப்பதாய்ப்பட்டது. அந்த மகிழ்ச்சியும் கனநாள் நீடிக்கவில்லை. அதற்கு நாட்டு நிலைமையும் ஒரு காரணம். 

கப்டன் மில்லரின் தற்கொடைத்தாக்குதலை அடுத்து ஒப்பரேசன் லிபரேசன் தோல்வியில் முடிவடைந்ததும் அதைத்தொடர்ந்து இலங்கை இந்திய அமைதி ஒப்பந்தம் உருவானதும் மிகவேகமாக நடைபெற்றது. அமைதிப்படை என்ற பெயரில் இந்தியப்படையினர் எமது பிரதேசங்களில வந்திறங்கியதை மக்கள் கொண்டாடிக்கொண்டிருக்க, எங்கள் ஊரில் அதை முதலில் எதிர்த்தவர் சுந்தரமூர்த்தி அம்மான்தான். 

”ஆமி எண்டால் அவனுக்கெண்டு ஒரு குணம் இருக்கும். அது இலங்கை ஆமியெண்டால் என்ன? இந்தியன் ஆமி எண்டால் என்ன? எல்லாம் ஒண்டுதான். இண்டைக்கு அவனைப் பார்த்து ஈயெண்டு இளிக்கிறயள். அவன் நாளைக்குத் தன்ரை குணத்தைக் காட்ட வெளிக்கிடுவான். அப்ப ஓடுவியள் எல்லாரும் முன்னாலயும் பின்னாலயும் பொத்திக்கொண்டு”

அம்மான் அப்பிடிச் சொல்லேக்குள்ள எல்லாரும் அவரை நக்கலாகப் பார்த்தார்கள். ஆனால் விரைவிலேயே நாட்டு நிலைமை மீண்டும் மாறத் தொடங்கியது. அமைதி ஒப்பந்தத்திற்கு எதிராகக் கைதுசெய்யப்பட்ட குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட பன்னிரு வேங்கைகளை இறக்கவிட்டு இந்திய அரசு வேடிக்கை பார்த்தது. அமைதி ஒப்பந்தத்தில் கூறப்பட்டவற்றுக்கு எதிராக இலங்கை அரசு இயங்கத் தொடங்கியது. இந்திய அரசு அதைப்பற்றிய அக்கறையின்றித் தன் நலனை மட்டும் கருத்திற் கொண்டு இயங்கிக்கொண்டிருந்தது. 

இந்நிலையில் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து 1987ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 15ம் திகதி நல்லூரின் வீதியில் தியாகி திலீபன் நீர்கூட அருந்தாமல் தன் உண்ணாநோன்பினைத் தொடங்கினார்.

இந்தியாவின் தேசத்தந்தையாகக் கருதப்படுபவர் மகாத்மா காந்தி அவர்கள். அவர் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எதிராக உண்ணாநோன்பிருந்தே பாரததேசத்திற்கான விடுதலையினைப் பெற்றுத் தந்தார் என்று கூறப்படுகிறது. அப்படியான அகிம்சாவாதியைத் தேசத்தந்தையாகக்கொண்ட பாரதநாடு திலீபனின் உண்ணாநோன்பினை ஏறெடுத்தும் பாராமல் அலட்சியமாய் நடந்துகொண்டது. 

ஈழப்பிரதேசமெங்கும் திலீபனின் உண்ணாநோன்பிற்கு ஆதரவாகப் பெருமளவில் மக்கள் அணிதிரளத் தொடங்கினார்கள். ஆங்காங்கே அடையாள உண்ணாவிரதங்களும் இடம்பெற்றன. சந்திகளில் ஒலிபெருக்கிகளில் திலீபனின் உடல்நிலை பற்றிய அறிவித்தல்களும் உண்ணாநோன்பிற்கு ஆதரவான பாடல்களும் ஒலிபரப்பாகின.

நல்லூரின் வீதியில் நடந்தது யாகம்
நாலுநாள் ஆனது சுருண்டது தேகம்
தியாகத்தின் எல்லையை மீறிய பிள்ளை
திலீபனைப் பாடிட வார்த்தைகள் இல்லை

மக்கள் அனைவரும் இன்னதென்று கூறமுடியாத சோகத்தில் மூழ்கியிருந்தனர். ஆயினும் அடிமனதில் காந்திதேசம் கைவிடாது என்கின்ற ஆழ்ந்த நம்பிக்கை அவர்களை ஆற்றுப்படுத்தியிருந்தது.

”அவங்கள் திலீபனைச் சாக விட்டிருவாங்கள். அவங்களுக்கு எங்களில ஒரு அக்கறையும் இல்லை. இலங்கை அரசாங்கம் அமெரிக்காவுக்கு ஆதரவா இருக்கிறதாலதான் எங்களைப் பாவிச்சு இதுக்குள்ள புகுந்திருக்கிறாங்கள்” எண்டு சுந்தரமூர்த்தி அம்மான் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார்.

பசித் தீயை எரித்த பட்டினித் தீ நீ!
பன்னிரு நாட்கள் பசியுனக்குத் தீனி 

காந்திதேசம் தன் அகிம்சாவாதக் கொள்கையைக் கைவிட்டுவிட்டதை உலகுக்கு உணர்த்தியவாறே பன்னிரு நாட்களில் செப்ரம்பர் 26ம் திகதியன்று தியாகி திலீபன் காவியமானான். அமைதிப்புறா வேடமிட்டு வந்திருப்பவை வேட்டையாடத் துடித்துக் கொண்டிருக்கும் வல்லூறுகளே என்பதை ஈழதேசமும் உணர்ந்து கொண்டது. அதில் முதன்மையானவர்களில் ஒருவனாகப் பெரியப்பாவின் மகனும் இணைந்து கொண்டான்.

எப்பவுமே புதுசாப் பூத்த பூவரசம் பூப்போல நல்ல பளபளப்பா பிரகாசித்துக்கொண்டிருந்த மச்சாளின்ரை முகம் அதுக்குப் பிறகு வாடிப்போன புகையிலை மாதிரி, முகமெல்லாம் கறுத்துப்போய் நல்லா வயக்கெட்டுப் போனது.

சில மாதங்களில் ஊரெல்லாம் மீண்டும் போர் பரவியது. ஒரு வருடத்திற்குள்ளாகவே போராளிகளுக்கு உதவி செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் இந்தியப்படையுடன் சேர்ந்தியங்கிய மண்டையன்குழு அம்மானை மண்டையில் போட்டுவிட்டதாக ஊரில் பேசிக் கொண்டார்கள். அம்மானின் செத்தவீட்டிற்கு இந்தியப்படைக்கும் அதன் கூலிக்குழுக்களுக்கும் அஞ்சிப் பலர் வரவில்லை. அதனாலேயே சுடலைக்குச் செல்லும் சந்தர்ப்பம் பதினொரு வயதில் எனக்கு வாய்த்திருந்தது. 

அதுவரை இளவரசியாக இருந்த மச்சாளும், ”அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் எந்தையும் உடையேம். . .” என்று கலங்கிய பாரிவேந்தனின் மகளிருக்கு ஒப்பானார். 

என்ன, அங்கவை சங்கவைக்குக் கபிலர் இருந்தார். மச்சாளுக்குத்தான் மாமியை விட்டால் யாருமில்லையே. பின்னால் திரிந்தவர்களையும் போர் வந்து ஊரைவிட்டு விரட்டியடித்துவிட்டது  மாமியோ ஊர் உலகம் அடிபடாதவர். அம்மானிடம் அவரை ஒப்படைத்த ஒரே வருடத்தில் அவரது பெற்யோரும் ஒருவர் பின் ஒருவராக வேறு கருப்பையூர்களுக்குப் போய்ச் சேர்ந்துவிட்டார்கள். 

அம்மான் இருக்கும் வரை அவரைப் பெரிதாக மதிக்காத மாமி, இப்போதுதான் அம்மானின் அருமையை உணரத் தொடங்கினார். அதனால் என்ன பயன்? அம்மான் இறந்த இருமாதங்களிலேயே மாமி கிழவியாகிவிட்டதைப் போல் தோற்றமளித்தார். வயிற்றுப்பாட்டிற்காக தங்கள் காணியில் மாமியும் மச்சாளும் தோட்டவேலைகளில் ஈடுபடத் தொடங்கினர். 

இந்தியப் படையுடன் இயங்கிய கூலிப்படைகளின் அப்போதைய பிள்ளைபிடிக்கும் நாட்டுநிலை காரணமாக நானும் வீட்டைவிட்டு வெளியே செல்வதில்லை. இந்தியப் படை வெளியேற நாங்களும் படிப்பைச் சாட்டாக வைத்து யாழ்ப்பாணத்திற்கு இடம் மாறினோம். அதன் பின்னர் அம்மான் குடும்பத்தினருடான தொடர்பு அருகியிருந்தது.

2002 இல் A9 பாதை திறந்தபோது நான் படிப்பு முடிந்து கொழும்பில் வேலை செய்து கொண்டிருந்தேன். பாதை திறந்த பின்னர், நான் ஊருக்குச் செல்லும் வேளைகளில் மச்சாள் வீட்டிற்கும் செல்லவேண்டும் என நினைப்பதுண்டு. 

”குமர் முத்திக் குரங்கானது போல” என்று ஊரில் ஒரு சொலவடை உண்டு. 1988 இற்குப் பின்னர் 2003 இல், ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகள் கழித்து மச்சாளைப் பார்த்தபோது எனக்கு அப்பிடித்தான் தோன்றியது. 

பேரிளம் பெண்ணாகத் தோற்றமளிக்க வேண்டிய முப்பத்திமூன்று வயதிலேயே ஆள் மிகவும் வயதாகிக் கிழண்டிவிட்ட உருவத்துடன் தோற்றமளித்தார். மாமியின் நிலையோ படுமோசம். ஒரு நேரச் சாப்பாட்டுக்கே சிங்கியடிக்கும் அழிபசி நிலையில் அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர். என்னால் இயன்ற உதவிகளைச் செய்வதாகக் கூறிவிட்டு வந்து பின் அதைப்பற்றி மறந்தும் விட்டேன்.

புலம்பெயர்ந்து, பின் 2015 இல் ஊருக்குப் போயிருந்த போது மாமி இறந்துவிட்ட செய்தியறிந்து மச்சாளைச் சென்று பார்த்தேன். மாமியும் இப்போது இல்லாததால், தனிமையிலும் வறுமையிலும் இருக்கும் அவரின் நிலை என்னுள் ஒரு வெறுமையை உருவாக்கியது. அந்த வறுமை நிலையிலும் அவரின் உபசரிக்கும் பண்பு மாறியிருக்கவில்லை. அதுமட்டுமன்றிக் கனடாவிற்குக் கொண்டு செல்வதற்காக பனாட்டு, புழுக்கொடியல் என்பவற்றையும் வற்புறுத்தித் தந்தார். பழைய ஞாகங்கள் வந்து மனதைப் பிசைந்தது. அக்காலத்தில் எத்தனையோ இளைஞர்களின் கனவுக் கன்னியாய் இருந்த மச்சாளின் நிலை, வாழ்வின் நிலையற்ற தன்மையை எடுத்தியம்பியது. 

ஊரில் இல்லாத இராஜகுமரனை, தேவதையாய்த் துள்ளித் திரிந்த தன் இளவரசிக்குத் திருமணம் செய்விக்க நினைத்திருந்த மாமா இருந்திருந்தால். . . 

2018 இல் மீண்டும் ஊருக்குப் போயிருந்த போது மச்சாளின் குடிசைக்கும் சென்றிருந்தேன். அங்கே மச்சாள் இருககவில்லை. அருகில் உள்ளவர்களிடம் விசாரித்த போது, அவர் திருமணமாகிக் கணவனுடன் நீர்வேலியில் வசிப்பதாய்ச் சொன்னார்கள். கதைகளில் தான் இதுபோன்ற நம்பமுடியாத இனிய அதிர்ச்சிகளைக் கேள்விப்பட்டிருக்கின்றேன். இப்போது நிஜமாகவே என் காதுகளில் அந்த வார்த்தைகள் தேனாய் இனித்தன. மனதிற்குள் ஏதோ ஒரு பாரம் கழன்று விலகி நிறைவாய் உண்ந்தேன்.

மறுநாள் வேறொரு உறவின நண்பனைச் சந்திக்கையில் மச்சாளின் வாழ்வைப் பற்றிச் சிலாகித்தேன். யாரேனும் இளமைக்காலத்தில் அவரைக் காதலித்திருந்த ஒருவராக அது இருக்கக்கூடுமோ என்ற என் சந்தேகத்தைக் கூறினேன்.

”அட பேயா! அப்பிடியெல்லாம் ஒண்டுமில்லையடா. அந்த மனிசனுக்குப் பாரிசவாதம் வந்து கால்கையெல்லாம் இழுத்துப்போட்டுது. வருத்தம் பார்க்க வந்த கடைசி மகன்காரன், தாயைத் தன்னோட கனடாக்குக் கூட்டிக்கொண்டு போனாத் தன்ரை பிள்ளைகள அவா பாப்பா எண்டிட்டு, இங்கை இவரைப் பாக்கிறதுக்கு நம்பிக்கையான ஆள் தேடித் திரிஞ்சவன். சரியான ஆக்கள் அம்பிடயில்லை. அம்பிட்ட ஆக்களும் கனக்கக் காசு கேட்டவை. அதுதான் யோசிச்சிற்று அவன் இப்பிடி ஒரு முடிவை எடுத்தவன். மனிசிக்காரிக்கும் இவரை விட்டிட்டு பிள்ளைகளோட போய்க் கனடாவில செற்றிலாக விருப்பம். இப்ப கலியாணம் எண்ட பெயரில ஓசில நம்பிக்கையான ஒரு வேலைக்காரி கிடைச்சிற்றுதெல்லோ”

எனக்குத் தலைசுற்றி மயக்கம் வருவது போல் இருந்தது.

மச்சாளைப் போல இன்னும் எத்தனை எத்தனை தேவதைகளின் வாழ்வுகளில் இந்தப் போர் இப்படி விளையாடியிருக்கும்?

********

நன்றி: தாய்வீடு செப்ரம்பர் 2021