Friday, November 19, 2010

வேரென நீயிருந்தாய்...(16)

அன்றைய மாலை அக்பர் விடுதியும் கலகலத்துக் கொண்டிருந்தது. முதலாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு வைபவம் பல்கலைக்கழகத்தின் Gym இற்குள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. முதலாண்டு மாணவர்கள் எல்லாம் தங்களை அலங்கரித்துக்கொண்டு குழுக்கள்குழுக்களாகப் பிரிந்தும் சேர்ந்தும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தனர். என் மனம் ஏனோ அமைதியிழந்து காணப்பட்டது. எந்தக்குழுவுடனும் சேராது தனித்திருக்கவே விரும்பினேன். ஆயினும் நண்பர்களின் வற்புறுத்தல்கள் அதிகமாகத் தொடங்கியிருந்தது. என்னவென்று சொல்லித் தப்பிப்பது? சில மாதங்களுக்கு முன்னர் எமது பிரிவின் சுற்றுலாப் பயணத்தின் நினைவுகள் மனதில் நெருடலை ஏற்படுத்தின.


முதலாண்டு மாணவர்களின் அந்த வருடத்திற்கான சுற்றுலா (batch trip) சிறிலங்காவின் தென்பகுதியை நோக்கியதாக அமைந்திருந்தது. சூரியன் மேற்கே சாயத் தொடங்கியிருந்த நேரம், காலி (Galle) கடற்கரையில் நீராடி விட்டு எழுந்து வந்து உடைமாற்றிப் பின் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தோம்.

“Jeyanthan! join with us to take a group photo"
நதீஷா அழைத்தாள்.

சுற்றும் முற்றும் பார்த்தேன். தமிழ் மாணவர்களில் தீபன் மட்டுமே அருகில் நின்றிருந்தான். இவன் எப்பிடியும் இதைப் போட்டுக்குடுப்பான். பிறகு மற்றவர்களின் கடி தாங்கமுடியாதுபோய்விடும். யோசித்தேன். இளநீர் குடிச்சவனும் கள்ளன்தான் கோம்பை சூப்பினவனும் கள்ளன்தான். அவனையும் என்னுடன் சேர்ந்து படம் எடுக்க வருமாறு அழைத்தேன். நமட்டுச் சிரிப்புடன் வந்தவன், திடீரென புகைப்படம் எடுக்க நின்றிருந்த சிங்களப் பெண்ணிடம் புகைப்படக்கருவியினை வாங்கிவிட்டு அவளையும் எங்களுடன் சேர்ந்துநிற்கச் சொல்லிவிட்டு அவன் புகைப்படப்பிடிப்பாளனாக மாறிவிட்டான். “ஆப்புத் தான்” என்றது உள்மனது. நன்றி சொல்லிவிட்டு அந்தச் சிங்களப் பெண்கள் வேறிடம் நோக்கிச் செல்ல,

“வாழ்ந்திற்றாய் மச்சான்!” கொடுப்புக்குள் சிரித்தான் தீபன்.

'படம் எடுத்த விசயம் C-Wing காரங்களுக்குத் தெரிஞ்சுதெண்டால் அவ்வளவுதான்! லெக்சர் கோலில நோட்டீசுகள் விட்டே கிழிச்சுப்போடுவாங்கள் ஏற்கனவே C-Wing இல இருக்கிற கொஞ்சப் பேரோட கறள். அவங்கள்தான் லெக்சர் கோலில நோட்டீசுகள் எழுதி நாறடிக்கிறவங்கள் என்கின்ற சந்தேகம் ஏறத்தாழ உறுதிப்படுத்தப் பட்டிருந்தது. இந்த விஷயம் வெளிய நோட்டீசில வராமத் தடுக்கிறதெண்டால், சாட்சிக்காரனின் காலில விழுகிறதை விட சண்டைக்காரன்ர காலில விழுகிறது மேல் எண்டது மாதிரி தீபனைத் தான் வாயைத் திறக்காமச் செய்ய வேணும்.'

திரும்பினேன். தீபன் சற்றுத்தூரத்தில் வேறு நண்பர்களுடன் என்னைக்காட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். ''சரி! விஷயம் கைமீறி விட்டது' சலித்துக் கொண்டது மனது. நீராடிவிட்டு வருகையில் வந்திருந்த உற்சாகம் காணாமல் போயிருந்தது. எதிலும் ஒன்றிப்போகமுடியாமல் மனம் தத்தளித்தது. திங்கட்கிழமை விரிவுரை மண்டபத்தில் வரப்போகும் நோட்டீசுகளை எண்ணி அது சஞ்சலப்பட ஆரம்பித்தது. இந்த மனம் எப்போதும் இப்படித்தான். மற்றவர்களைப் பற்றி வரும் நோட்டீசுகளை ஆவலுடன் தேடித்தேடி வாசிக்கும் மனது, தன்னைப்பற்றி ஏதாவது நோட்டீசுகள் வருகின்றது எனின் கோபப்படுகின்றது அல்லது வெறுத்துப்போகின்றது. எதையுமே இயல்பாய் பகிடியாய் எடுத்துக் கொள்வதற்கு அதனால் இயலாமல் இருக்கிறது. நான் என்கின்ற Ego அதற்கு நிறையவே இருப்பதுதான் அதற்கான காரணம். இந்த Ego-வினை அகற்றாமல் இருக்கும் வரை எந்தவொரு விடயத்தையுமே உள்ளவாறே இயல்பாய் ஏற்றுக்கொள்வது கடினம் தான்.

மாலைச்சூரியன் மறையத்தொடங்குகையில் பேரூந்துகளுக்குள் ஏறிக்கொண்டோம். ஆட்டங்கள் பாட்டங்கள் மாறி அது நேயர் விருப்பம் நிகழ்ச்சியாக மாறியது.

“ஹலோ!”

“எங்களுக்கு ஒரு பாட்டுப் போடுறீங்களா?”

“என்ன பாட்டு?”

“சிங்களத்துச் சின்னக் குயிலே எனக்கு ஒரு மந்திரத்தைச் சொல்லு மயிலே...”

“யாராருக்காகவெல்லாம் இந்தப் பாடலைக் கேட்கின்றீர்கள்?”

“ஜெயந்தனுக்காக மட்டும்”

பாடல் ஆரம்பிக்க என்னை இழுத்து நடுவில் விட்டுவிட்டு சுற்றிவர நின்ற கைதட்டி ஆடிப்பாடத் தொடங்கினார்கள். சுற்றிவரப் பார்த்தேன் முன்னுக்கு சிலர் வாளி வைத்துக் கொண்டிருந்தார்கள். ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. “உங்கா! முன்னுக்கே பப்பிளிக்கா வாளி வைக்கிறாங்கள். அவங்களையெல்லாம் விட்டிட்டு சும்மா ஒரு போட்டோ எடுத்த என்னை வைச்சு நக்கலடிக்கிறதைப் பார்க்க இரத்தம் கொதித்தது. ஆக்களோட கொழுவ வேணும் போலத் தோன்றியது. அப்படிக் கொழுவினால் விஷயம் இன்னும் பெரிதாகி விடும் என்பதால் அடக்கிக் கொண்டேன்.

அடுத்து வந்த திங்கட்கிழமை காலையில் எதிர்பார்த்தபடியே என்னைப் பற்றியும் நோட்டீசுகள் வந்திருந்தன. மற்றையவர்களுடன் ஒப்பிடுகையில் அது குறைவாக இருந்தாலும் அது தந்த பாதிப்பு இன்னமும் மனதில் இருந்தது. எனவேதான் வெளியே சென்று படம் எடுத்தால் சிலவேளை நதீஷாவையும் காண நேரிடலாம். அப்படி நேர்ந்தால் அவள் இயல்பாக படமெடுக்கக் கூப்பிட அதைப்பார்த்து பிறகு லெக்சர் கோலில நோட்டீஸ் வர, ஏன் தேவையில்லாத உபத்திரவங்கள்? எனவேதான் படம் எடுத்துக்கொண்டு செல்லும் குழுக்களுடன் இணைவதைத் தவிர்த்துக் கொண்டிருந்தேன்.

“ஜெயந்தன்! என்னடா செய்யுறாய். கெதியா வாடாப்பா. எல்லாரும் போய்ற்றாங்கள் புறோக்கிறாமெல்லாம் தொடங்கப் போகுது”
தீபன் அழைத்தான்.

மகாவலியின் மேலான அக்பர் பாலத்தினைக் கடந்து Gym இனை அடைகையில் “காதல் ரோஜாவே... எங்கே நீ எங்கே?...” பாடலை ஒருவன் பாடிக் கொண்டிருந்தான்.

“ஜெயந்தன் டேய்! உனக்குச் சிற்றுவேஷன் சோங் போகுதடாப்பா”

”பேய்ப். அம்மாண வாயில வருகுது. சத்தம் போடாம அமத்திக் கொண்டு வா”

சற்று நேரத்தில் ஒவ்வொருவராக உள்ளே வருவதும் சிலரை அழைத்துக் கொண்டு வெளியே போவதுமாய் இருந்தார்கள். அருகில் இருந்த தீபன் என்னையும் வெளியே வருமாறு அழைத்தான். சென்றோம்.

“இந்தா மச்சான்! அடியடா”

“எனக்கு வேண்டாம். எனக்குப் பழக்கமில்லை”

”பேய்ப்.... நாங்க மட்டும் என்ன வீட்டிலையே பழகீற்றா வந்தனாங்கள். சும்மா அடியடா!”

“நான் போறன். நீங்க இருந்து அடியுங்கோ”

”பேய்ப்... நீ மட்டும் போறியோ? அங்கை உள்ளுக்கை போய் சரக்குகளுக்கு போட்டுக் குடு ஆராரு தண்ணியடிக்கிறம் எண்டு”

“ஏன்ரா நதீஷா உன்னைத் தண்ணியடிக்கக்கூடாதெண்டு சொன்னவளோ?”

'என்னடா இவங்கள் எல்லாத்துக்கும் அவளை இதுக்குள்ள இழுக்கிறாங்கள். ஏன்தான் அவள் எனக்கு குறூப்மேற்றா வந்து சேர்ந்தாளோ?' விசராய்க் கிளம்பியது.

“ஜெயந்தன்! நீ நதீஷாவுக்குப் பயந்துதான் தண்ணியடிக்கமாட்டன் எண்டுறாய்”

என்னுடைய Ego-வில் விழுந்தது அடி.

“இஞ்ச கொண்டா அடிச்சுக் காட்டுறன்”

பிளாஸ்ரிக் தம்ளரில் கலந்து தந்ததை வாங்கி முகர்ந்து பார்த்தேன். வயிற்றைப் பிரட்டியது.

“பாத்துக்கொண்டிருக்காம அப்பிடியே மூக்கைப் பொத்திக்கொண்டு அடித்தொண்டையில ஊத்து. ஒரு பெக் போய்ற்றுதென்றால் பிறகு ஒண்டும் தெரியாது”

தொண்டைக்குழியில் கரித்துக் கொண்டே வயிற்றுக்குள் சில்லிட்டுக் கொண்டு இறங்குவதை உணர்ந்தேன்.

“இந்தா மச்சான்! கோல்ட் லீப். இதையும் இழுத்துப்பார்”

உதட்டில் பொருத்தி புகையினை உள்ளுக்குள் இழுத்தேன். தொண்டை கமறிப் புரக்கடித்தது.

சிறிது நேரம் செல்ல மிதப்பாய் இருந்தது. சுற்றிவர இருப்பவையெல்லாம் இலேசாக ஆடுவதாய் தெரிந்தது.

“இன்னொரு பெக் அடி மச்சான்”

இப்போது அதன் மணமும் சுவையும் ரம்மியமாய் தெரிந்தன.

“ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோல மயில் என் துணையிருப்பு....” பாடல் வரிகள் மனதிற்குள் ஓட,

“ஜேன்!”

“அழ்க்கா!” - திடுக்கிட்டேன். இவள் எப்படி இங்கே?

“என்னடா இது?”

“அழ்து சுழ்ம்மா தாழ்ன்”

“இதுக்காகவா இஞ்ச வந்தனி?”

“எழ்ன்ன நீ? சுழ்ம்மா தொணதொணழ்ன்னு?”

“என்னடா குடிகாரங்கள் மாதிரி தண்ணியடிச்சு போட்டு உளறுறாய்? அம்மாக்குத் தெரிஞ்சுதெண்டால்..?

“சள்தான் போழ்டி”

தலைசுற்றியது. ஓவ்வ்வ்... வாந்தி வாந்தியாய் வந்தது. மண்டை விண்விண்ணென வலிக்கத் தொடங்கியது. எடுத்த வாந்தியின் மேல் அப்படியே சாய்ந்தேன்.

“ஆள் பிளற்றாகிற்றான். தூக்கிக்கொண்டுபோய் றூமில போட்டிட்டு வாங்கடாப்பா”
எங்கோ கனவில் கேட்பதாய் இருந்தது.

விழிப்பு வருகையில் தாங்கமுடியாத தலைவலி. அந்தத் தலைவலிதான் விழிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எனது கட்டிலில் வாந்தியெடுத்துவிட்டு அதன் மேலேயே கிடப்பதை உணர்கையில் அருவருப்பாய் இருந்தது. எழ முயற்சித்தேன். முடியவில்லை. தலைப்பாரமாய் இருந்தது.

“அம்மா... அக்கா...” முனகினேன். யாரையும் வரக் காணோம்.

“அக்கா....” வழமையாய் வந்து என் பாரம் தீர்ப்பவள் வரக்காணோம். நேற்றிரவு நடந்தது நினைவினில் வந்தது. ச்சே! என்ன மனிதன் நான். அக்காவைப் போய்த் திட்டியிருக்கின்றேனே. ரோசக்காரி அவள் இனி வரமாட்டாள். மண்டை வெடித்தது. எதையோ இழந்துவிட்டு வெறுமையாய் தனிமையை உணர்ந்தேன். மதுவின் இயல்பு பற்றி எப்போதோ வாசித்த கதையொன்று நினைவினில் வந்து போனது.

ஒரு அறையினுள் ஒரு போத்தல் மதுவும், கிளர்ச்சியூட்டும் மாதுவும், பச்சிளங் குழந்தையும் இருந்தார்கள். நன்னடத்தையைச் சோதிப்பதற்காய் ஒருவனைக் கூட்டிவந்து அந்த அறையினுள் இருக்கும் மதுவை அருந்த வேண்டும் அல்லது அந்த இளம் மாதுவை வன்புணர்ச்சி செய்யவேண்டும் அல்லது அந்தப் பச்சிளங் குழந்தையை அடித்துக் கொல்ல வேண்டும் என்றார்கள். சிறிது நேரம் யோசித்த அந்த மனிதன் மது தனக்கு மட்டும் தான் கெடுதல் தரும். மற்றைய இரண்டும் பிறருக்கு கேடு செய்யும் என்பதால் அங்கிருந்த மதுவினை எடுத்துப் பருகினான். போதையேறியதும் புத்தி தடுமாறியது. காமம் தலைதூக்கியது. மாதுவின் மேல் பாய்ந்தான். அதைக்கண்ட குழந்தை வீரிட்டு அலறியது. அந்த அழுகையொலி அவனுக்கு நாரசமாய் இருக்கவே அந்தக் குழந்தையைத் தூக்கி அடித்துக் கொன்றுவிட்டு மங்கையின் மீது மீண்டும் பாய்ந்து தன் காம இச்சைகளைத் தீர்த்துக் கொண்டான்.

ஏறத்தாழ நானும் அந்த மனிதனின் நிலையிலேயே இருப்பதாய் உணர்ந்தேன். கண்களில் நீர் பெருகியது.


4 comments:

  1. மது குடிக்க வெறிக்கும் மாது காண வெறிக்கும், என்னை கண்ட பிறகும் உனக்கு மது வெறி தான் போதை ஏற்றி இருக்கின்றது என்றால் என் மீது உனக்கு காமம் இல்லா தமிழ் கூறும் நல்லுலக காதல் தான் என்பதில் கிஞ்சித்தும் சந்தேகம் இல்லை...!!!! ஆனால் பின்னர் உன் உடல் மெலிவுக்கு நான் தான் காரணம் என்று பல்கலை கழகம் பேசிக் கொண்டது உன் மீதான உயரிய மதிப்பை குறைத்தது......!!!!!

    நட்புடன் நதிஷா

    ReplyDelete
  2. காமமெனப்படும் பண்டைச் செயலில்
    காதல் கலவாது காத்துக்கொள் .

    கூட்டல் ஒன்றே குறியென்றானபின்
    கழிப்பது காமம் மட்டும் எனக்கொள்

    முன்னும் பின்னும் ஆட்டும் சகடை
    ஆணும் பெண்ணும் அதுவேயெனக்கொள்.

    Thank you,
    nathisha@easy.com

    ReplyDelete
  3. >'படம் எடுத்த விசயம் C-Wing காரங்களுக்குத் தெரிஞ்சுதெண்டால்

    ஐயோ, எங்கள் காலத்திலும் C-Wing மோசம். அதிலும் அந்த வேலணைக் காரனும், புங்குடுகாரனும்;;;;

    ReplyDelete
  4. அருமையான பதிவு. என்னை மீண்டும் பழைய நினைவுகளை மீட்க செய்ததுக்கு நன்றி.

    C - Wing குறும்புகளும் மறக்க முடியாதவை.


    "எங்கள் காலத்திலும் C-Wing மோசம். அதிலும் அந்த வேலணைக் காரனும், புங்குடுகாரனும்;;;;"

    (:-))

    ReplyDelete