2002 ஜுன் இறுதிப்பகுதி, நியாப் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்ட பொறியியலாளர்களில் நானும் ஒருவனாய், கிளிநொச்சி மாவட்டத்திற்கு எனக்கான நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டேன். நதீஷாவும் போதனாசிரியர் வேலையை விட்டுவிட்டு என்னுடன் கிளிநொச்சிக்கு வருவதாய் அடம்பிடிக்கவே இருவருமே கிளிநொச்சிக்கு எமது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டோம். ஆரம்ப நாட்களில் எங்கள் மீதான கண்காணிப்பினை உணரக்கூடியதாயிருந்தாலும் நாளடைவில் நாங்களும் கிளிநொச்சிவாசிகளாகி விட்டிருந்தோம். வேலை முடிந்து வந்த நேரம் நதீஷா யோசனையுடன் இருந்தாள்.
“நதீஷா உங்களுக்கு வீட்டில தனிய இருக்கிறது போரடிக்குதெண்டா வேலைக்கு apply பண்ணுங்க. இப்ப UNDP, UNOPS எல்லாம் வேலைக்கு ஆக்களை எடுக்கப்போறதாமெண்டு கதை அடிபடுகுது.”
“நாங்க எங்களுக்கெண்டு ஒரு family-ஐ உருவாக்கிற்று அதுக்குப்பிறகு வேலைக்குப் போறன்”.
“என்ன சொல்லுறீங்க நீங்க? நாங்க இப்ப family-யாத்தானே இருக்கிறம்”
“உங்களுக்கு நான் சொல்லுற family-யின்ரை அர்த்தம் விளங்குதில்லை”
“அப்ப விளக்கமாச் சொல்லுங்கவன்”
“முதலில என்ன நீங்க எண்டு போட்டுக் கதைக்கிறதை நிப்பாட்டுறீங்களா?”
“ஏன்? ஏன் திடீரெண்டு அப்பிடிச் சொல்லுறீங்க”
“நான் இஞ்சையிருக்கிற மற்றாக்களை வடிவா note பண்ணின்னான். அவையெல்லாம் தங்கடை மனிசிமாரை நீங்க எண்டா கூப்பிடுகினம்”
“இப்ப என்ன சொல்லவாறீங்க நீங்க?”
“என்னப்பா நீங்க? இதுகூட விளங்காம?”
“விளங்காமத்தானே கேக்கிறன்”
“விளங்காட்டிப் போய் விளக்குமாத்தை எடுத்து முத்தத்தைக் கூட்டுங்கோ விளங்கும்”
“ஓ! முத்தத்தைக் கூட்டச் சொல்லுறீங்களோ! இப்ப விளங்குது மகாராணியார் என்னத்தைச் சொலலுறா எண்டு. இரவு வரட்டும்”
“என்ன நீங்க? ஒருமாதிரிக் கதைக்கிறீங்? இதில ஏதோ double meaning இருக்குப் போல”
“ஓ அப்பிடியா. நான் single meaning-இல தான் சொன்னனான்.”
“ஐயோ! நீங்க கதையை மாத்தீற்றீங்க. நான் சொன்னனான் என்ன நீங்க எண்டு சொல்லதீங்க. மற்றப் பொம்பிளைகளின்ரை புருஷன்மாரெல்லாம் நீங்க போட்டா அவையோட கதைக்கினம். உரிமையா நீ எண்டு சொல்லித்தானே கதைக்கினம்”
“ஐயோ கடவுளே! என்னையும் அவையை மாதிரி மரியாதையில்லாமலா கதைக்கச் சொல்லுறீங்க”
“உங்களுக்குத்தான் ஒண்டும் விளங்குதில்லை. நீயெண்டு சொல்லி நீங்க என்னோட கதைச்சா இன்னும் கூட close ஆ இருக்கும். அதை விட்டிட்டு இப்பவும் campus இல கதைச்சமாதிரி நீங்க எண்டு கதைச்சா ஒரு கிக் இல்லாம இருக்கு”
“ஓ! அம்மாவுக்கு இப்ப கிக் தேவைப்படுகுதோ”
“இஞ்சேருங்கோ! நான் சொல்லுறது உங்களுக்கு விளங்குதில்லை பாருங்கோ.”
“ஆகா! typical தமிழ் பொம்பிளையளாட்டம்.”
“அப்ப இப்ப விளங்குதேங்கோ? என்னை இனி நீங்க எண்டு கூப்பிடாதேங்கோப்பா”
“சரிசரி அப்ப இனிநான் உங்களை நீர் எண்டு கூப்பிடுறன்”
“பிறகும் பாருங்கோவன்.”
“நீர் என்னப்பா? விடமாட்டீர் போல”
“ஆ! இது! இப்பிடி நீங்க சொல்லுறதைக் கேக்க இன்னும் கூட romance-ஆ இருக்கு”
“அப்ப இண்டைக்கு இரவு நல்ல விருந்து போல”
“அப்ப இவ்வளவு நாளும் இல்லையோ?”
“சரிசரி விடுங்க. sorry! விடும். இரவைக்குப் பாக்கலாம்.”
“சரி நீங்க போய்க் குளிச்சிற்று வாங்கோ. நான் புட்டவிக்கிறன்.”
இரவுணவினை அருந்திவிட்டு வெளியே வந்து நிலவு வெளிச்சத்தில் முற்றத்தில் அமர்ந்தோம். இளந்தென்றல் இதமாக இருந்தது. நதீஷா இப்போதும் ஏதோ யோசனையுடன் இருப்பதாகவே பட்டது.
“நான் அப்போதே கேக்கவேணுமெண்டு நினைச்சனான். பிறகு கதையில விடபட்டிட்டுது. என்ன ஒரே யோசனையா இருக்கிறீஙக. sorry இருக்கிறீர்?”
“ஒண்டுமில்லை”
“பரவாயில்லைச் சொல்லும்.”
“இல்லை சொன்னா நீங்க எப்பிடி எடுத்துக் கொள்ளுறீங்களோ?”
“என்ன நீர்? இப்பிடியேன் கதைக்கிறீர்?”
அவளருகே சென்றமர்ந்தேன். என் மடியினில் தலைவைத்து சாய்ந்து கொண்டாள். அவள் கூந்தலைக் கிளைந்து விட்டவாறே,
“சொல்லும் நதீஷா! என்னத்துக்கு யோசிக்கிறீர். இஞ்சையிருக்க உங்களுக்குப் பிடிக்கேல்லையா? அப்பிடியெண்டா நாங்க கொழும்புக்குப் போவம்.”
“ஐயோ! நீ்ங்க என்ன கதைக்கிறீங்க?”
“அப்ப என்னத்துக்கு யோசிக்கிறீர்?”
“எங்களுக்குக் கல்யாணம் முடிஞ்சு எத்தினை நாளாச்சு?”
“என்ன திடீரெண்டு?”
“கேட்டதுக்குப் பதில் சொல்லுங்கவன்”
“ஏப்ரல் 24 இல கல்யாணம் நடந்ததெண்டா இப்ப மே, ஜுன், ஜுலை மூண்டுமாசமாச்சுது. அதுக்கென்ன?”
“இல்லை. நாங்க எல்லாம் சரியாத்தானே செய்யிறம்?”
“என்ன நீங்க? நாங்க என்ன பிழை விட்டனாங்க?”
“இல்லை மூண்டுமாசமாச்சு இன்னும் ஒண்டையும் காணேல்லை”
“என்ன???? அட! இப்ப அதுக்கென்ன அவசரம்?”
“இல்லை நாங்க வேண்டாமெண்டு இருக்கேல்லைத்தானே. அதுதான் யோசனையா இருக்கு. வேணுமெண்டா ஒருக்கா டொக்டரிட்டைப் போய்ப் பார்ப்பமா?”
“உங்களுக்கென்ன விசரா? டொக்டரிட்டைப் போனாலும் அவர் கல்யாணம்கட்டி ஒரு வருஷம் வரைக்கும் பார்க்கச் சொல்லுவேர். நீங்க மூண்டு மாதத்துக்குள்ளயே கவலைப்படுறீங்க.”
“இல்லை எனக்கு எங்கட குழந்தை வேணும்.”
“எங்களுக்கு இப்பத்தான் 26 வயசு. பிறகேன் கவலைப்படுறீங்க?”
“மூண்டு மாசமா ஒண்டையும் காணேல்ல.......”
“சரி உங்களுக்கு ஆம்பிளைப்பிள்ளையா பொம்பிளைப்பிள்ளையா வேணும்?”
“ரெண்டும் வேணும்”
“எது முதல் வேணும்?”
“ஆம்பிளைப்பிள்ளை. உங்களுக்கு?”
“எனக்குப் பெம்பிளைப்பிள்ளைதான் வேணும்”
“ஏன்?”
“எல்லா ஆம்பிளைகளுக்கும் பெம்பளைப்பிள்ளை தான் பிடிக்கும். அதேபோல பெம்பிளைகளுக்க ஆம்பிளைபை் பிள்ளை பிடிக்கும்”
“ஏனப்பிடி? எனக்கு முதலாவதாத்தான் ஆம்பிளைப்பிள்ளை. அடுத்தது பெம்பிளைப்பிள்ளை தான் வேணும்”
“ஆகா! முதலாவதையே இன்னும் காணேல்லை. அதுக்குள்ள ரெண்டாவதுக்கும் போய்ற்றீங்களா?
“ம்ம்ம்...அதுதான் என்னெண்டு தெரியாது. இண்டைக்கு ஒரே பயமாவும் யோசனையாவும் கிடக்கு”
“சரி அப்ப விளக்குமாத்தை எடுத்துக் கொண்டு வாங்க”
“என்ன?”
“சரி விடுங்க. அதை என்னத்துக்கு? முத்தத்தைக் கூட்டுறன். நீங்க எண்ணிக்கொள்ளுங்க. அவ்வளவையும் திருப்பித் தரவேணும் சரியா? எண்ணுங்க ஒண்டு...”
“வேணாம்........”
அந்த வேணாம் என்பதன் அர்த்தம் இன்னும் வேண்டும் என்பதை இந்த மூன்று மாதகால தாம்பத்திய வாழ்க்கை சொல்லித் தந்திருந்தது.
பொட்டப்புள்ள பெத்துக்கொடு
போதும் என்னை விட்டுவிடு
வெளிச்சம் எரியவிட்டு வெட்கத்தை அணைத்துவிடு
பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11 பாகம்-12 பாகம்-13 பாகம்-14 பாகம்-15 பாகம்-16 பாகம்-17 பாகம்-18 பாகம்-19 பாகம்-20 பாகம்-21 பாகம்-22 பாகம்-23 பாகம்-24 பாகம்-25 பாகம்-26 பாகம்-27 பாகம்-28 பாகம்-29 பாகம்-30 பாகம்-31 பாகம்-32 பாகம்-33 பாகம்-34 பாகம்-35 பாகம்-36 பாகம்-37 பாகம்-38 பாகம்-39 பாகம்-40 பாகம்-41 பாகம்-42 பாகம்-43 பாகம்-44 பாகம்-45 பாகம்-46 பாகம்-47 பாகம்-48 பாகம்-49 பாகம்-50 பாகம்-51 பாகம்-52
No comments:
Post a Comment