Saturday, April 16, 2011

வேரென நீயிருந்தாய்...(26)

1987ஆம் ஆண்டு பிறந்து விட்டிருந்தது. பாடசாவைக் கல்வித்திட்டத்திலும் மாற்றங்கள் கொண்டுவரப் பட்டிருந்தன. அதுவரை ஆறாம் வகுப்பிலிருந்து ஆரம்பிக்கும் பெரிய பாடசாலைகள் இப்போது ஐந்தாம் வகுப்பிற்குரிய மாணவர்களையும் உள்வாங்கத் தொடங்கியிருந்தனர். வகுப்புகள் என அழைக்கப்பட்டவை ஆண்டுகள் என அழைக்கப்படலாயிற்று. ஐந்தாம் வகுப்பு ஆறாம் ஆண்டாயிற்று. O/L சோதனை எடுக்கும் பத்தாம் வகுப்பு பதினொராம் ஆண்டென மாற்றியழைக்கப்பட்டது. பொதுவாக ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வைத்தே பெரிய பள்ளிக்கூடங்களுக்கான அனுமதிகள் தீர்மானிக்கப்படும். இப்போது நிலைமை மாற்றமடைந்ததால் பெரிய பாடசாலைகள் எல்லாமே ஆறாம் ஆண்டிற்கான நுழைவுத் தேர்வை நடாத்தி மாணவர்களுக்கான அனுமதியை வழங்கிக்கொண்டிருந்தன.

ஜனவரி 1987 இல் சரஸ்வதி வித்தியாலயத்தில் இருந்து யா/வேலணை சேர் வைத்தியலிங்கம் துரைசுவாமி மத்திய மகா வித்தியாலயம் என்கின்ற மிக நீண்ட பெயரால் அழைக்கப்படுகின்ற வேலணை மத்திய கல்லூரிக்கு மாறியிருந்தேன். இடைப்பட்ட ஒரு நாள் மாலைநேரம் உலங்கு வானூர்தி ஒன்றும், பொம்மர்கள் என்று அழைக்கப்படுகின்ற சியாமாசெட்டி ரக குண்டு வீச்சு விமானங்கள் இரண்டும் வந்து கா.பொ.இரத்தினம் அவர்கள் வீட்டின் மேல் தாக்குதலை நடாத்தி விட்டுச் சென்றிருந்தன. அதுதான் தீவகத்தில் நடாத்தப்பட்ட இரண்டாவது வான் தாக்குதல் (மதலாவது வான் தாக்குதல் 1986 ஆம் ஆண்டில் சுருவில் பகுதியில் நடாத்தப் பட்டிருந்தது). அந்தத் தாக்குதலில் இயக்கத்தால் வளர்க்கப்பட்ட இரண்டு குதிரைகள் கொல்லப்பட்டிருந்தன. அப்போதைய நாட்களில் குண்டு வீச்சு விமானிகள் தங்களுக்குள் உரையாடிக் கொள்வதை வானொலிகளின் பண்பலை (FM) அலைவரிசைகளில் எங்களால் செவிமடுக்கக் கூடியதாகவிருந்தது. யாழ்ப்பாணத்திற்கும் வேலணைக்குமான பயணத் தொடர்புகள் அராலிக் கடலினூடாகவும் தம்பாட்டிக் கடலினுாடகவுமே நடைபெற்றுக் கொண்டிருந்தன.

1987 மே மாத இறுதியளவில் யாழ்குடாநாட்டை கைப்பற்றும் வகையில் 'ஒப்பரேஷன் லிபரேஷன்' படை நடவடிக்கையினை பிரிகேடியர் டென்சில் கொப்பேகடுவ தலைமையிலான சிறிலங்காப் படைகள் மூர்க்கமாய் ஆரம்பித்திருந்தன. பலாலி படைத்தளத்திலிருந்து புறப்பட்ட படைகள் விமான மற்றும் கடற்படைத் தாக்குதல்களின் உதவியுடன் தொண்டைமானாறுப் பகுதியூடாக முன்னேறி வல்வெட்டித்துறையைக் கைப்பற்றி மேலும் முன்னேறி நெல்லியடி வரை வந்திருந்தனர். வடமராட்சி மக்கள் பெருமளவிலான உயிர் உடமை இழப்புகளுடன் யாழ் நகரின் ஏனைய இடங்களுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர். மொத்தக் குடாநாட்டிற்குமான ஆனையிறவினுாடான உணவுப் பொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட உணவுப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டது. மக்கள் அகதிகளாகி வள்ளங்களினூடாக பாக்கு நீரிணையைக் கடந்து இந்தியாவில் தஞ்சமடையத் தொடங்கினர்.

ஈழத் தமிழ் மக்கள் தங்களுடைய மீட்பர்களாக இந்தியாவை நம்பிக் கொண்டிருந்தனர். இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் உயிருடன் இருக்கும் வரை, பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு பங்களாதேஷிற்கு உதவியது போன்று இலங்கையிலும் தமிழீழம் மலர்வதற்கு இந்தியா தன் படைகளை அனுப்பி உதவி செய்யும் என்கின்ற அதீத நம்பிக்கை ஈழத்தமிழர்களிடையே நிலவி வந்தது. தூரதிர்ஷ்ட வசமாக 1984 ஒக்ரோபர் 31 இல் இந்திரா காந்தி அம்மையார் கொல்லப்பட தமிழர்களிடையே அந்த நம்பிக்கை சற்றுக் குறைந்து விட்டிருந்தாலும், எந்தக் காலத்திலும் இந்தியா தங்களைக் கைவிடாது என்கின்ற அசையா நம்பிக்கை அவர்களிடையே இருந்தது. இப்போதும் இந்தியா தங்கள் உதவிக்கு வரும் என்று காத்திருக்கத் தொடங்கினர். ஆனாலும் ராஜீவ் காந்தி அவர்கள் தலைமையிலான இந்திய நடுவண் அரசு, இந்திராகாந்தி அம்மையாரைப் போன்று தமிழர்கள் மீது அதிக கரிசனை கொண்டிருந்ததாகத் தெரியவில்லையாயினும், யாழ்ப்பாணத்தில் உணவுப் பொருட்களுக்காய்த் தவிக்கும் மக்களுக்கான உணவுப்பண்டங்களை கப்பல் மூலமாக வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுத்திருந்தது. மக்கள் எல்லோரும் இந்தி உணவுக் கப்பல்களின் வருகையை ஆவலுடன் எதிர் பார்த்துக் காத்திருக்கத் தொடங்கினர். கப்பல் புறப்பட்டு விட்டதாக சேதிவர பாடசாலைகளில் எல்லாம் எங்களிடையே மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது. ஆயினும் அப்போதைய சிறிலங்கா அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்களும் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலியும் தங்கள் இறையாண்மைக் கடலுக்குள் இந்தியக் கப்பல்கள் நுழைவதை தமது கடற்படை அனுமாதிக்காது என்று அறிவித்திருந்ததால் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் போர் மூண்டு பாகிஸ்தான் போன்று இலங்கையும் இரண்டாகப் பிரிந்து விடும் என்று அரசியல் அறிவில்லாத பெரும்மாலான மக்கள் கற்பனைகளில் மிதக்கத் தொடங்கினர்.

ஆயினும் இந்தியாவின் உண்மை முகத்தை ஏற்கனவே அறிந்திருந்த தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) 1982 ஆம் ஆண்டளவிலேயே இது பற்றிய எச்சரிக்கையினை 'வங்கம் தந்த பாடம்' - நூலினூடாக வெளிப்படுத்தியிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களைப் போலவே புளொட்டின் தலைவர் உமாமகேஸ்வரன் அவர்களும் இந்தியா பற்றிய சரியான தீர்க்கதரிசனத்தினை வெளிப்படுத்தியிருந்தார். புளொட் தனது படைபலத் தேவைகளுக்கு இந்தியாவை மட்டுமே நம்பியிராமல் முதன்முதலாக பிறநாடுகளில் போராயுதங்களைக் கொள்வனவு செய்து அவற்றைக் கப்பல் மூலமாக இலங்கைக்கு கடத்தி வரும் வழியில் அந்த ஆயுதக்கப்பலை இந்தியா இடைமறித்துத் தன்வசப்படுத்தியிருந்தது. இந்திய ஆளும் வர்க்கம் எப்போதுமே அயல்நாடுகளின் பிரச்சனையைத் தனது சுயலாபத்திற்காகவே பயன்படுத்தி வந்திருக்கிறது. இது பற்றிய விழிப்புணர்வை தமிழ் மக்களிடையே ஏற்படுத்துவதற்காக 1985ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் யாழ் பல்கலைக் கழகத்தினரால் 'மாயமான்' என்கின்ற வீதி நாடகமும் அரங்கற்றப்பட்டு வந்து கொண்டிருந்தது. ஆனாலும் தமிழ் மக்களிடம் இந்திய நடுவண் அரசு பற்றிய மாயையினைக் களையக் கூடியதாக இருக்கவில்லை. அந்தளவிற்கு இந்தியா எங்களின் மீட்பர் என்கின்ற மயக்கம் தமிழர்களிடையே புரையோடிப்போய்க் கிடந்தது.

1987 ஜூன் 4ம் திகதி மதியம் எங்கள் நம்பிக்கைகளைப் பொய்யாக்குமாற் போல் அந்த சேதி வந்தது. இந்திய உணவுக்கப்பல்கள், இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு இலங்கைக் கடற்படையினால் அவை திருப்பி அனுப்பப்பட்டு விட்டன. மக்கள் மனங்களில் ஏக்கங்கள் குடிகொண்டன. அன்றைய மாலை யாழ்மக்கள் வித்தியாசமான இரைச்சல்களுடன் அதற்குமுன் என்றுமே பார்த்திராத போர்விமானங்கள் யாழ்வான்பரப்பினுள் சீறிப் பாய்ந்து தாழப்பறந்து வந்தன. கிலிகொண்டு மக்கள் பதுங்கு குழிகளுக்குள் ஒளிந்து கொண்டனர். ஆயினும் எந்தவொரு குண்டு வெடிப்பு ஓசையையும் கேட்க முடியவில்லை. தூரத்தில் இருந்தவர்கள் அந்த விமானங்களிலிருந்து பொதிகள் வீசப்படுவதை அவதானித்திருந்தனர். விமானங்கள் யாழ் வான்பரப்பை விட்டு வெளியேறியதும் மக்கள் விமானங்கள் பொதிகள் வீசிய இடங்களைச் சென்று பார்த்தபோது அவையெல்லாம் உணவுப் பொதிகளாய்க் காணப்பட்டன. அன்றைய இரவு இந்தியச் செய்தி, அது இந்தியாவின் மனிதாபிமான நடவடிக்கையான 'ஒப்பரேஷன் பூமாலை' என்பதாக அறிவித்தது.

சண்டை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. மக்களிடம் விடுதலைப் புலிகளின் படைபலம் பற்றியும் ஏனைய இயக்கங்களை தடை செய்தமை பற்றிய விமர்சனங்கள் எழலாயிற்று. அவர்களால்தான் தமிழர் படைபலம் குன்றிப் போய் இந்நிலை ஏற்பட்டதாகக் கதைக்கத் தலைப்பட்டார்கள். மாதம் ஒன்று ஓடி மறைந்து ஜூலை ஐந்தாம் தேதியும் வந்தது. அது ஈழப் போராட்ட வரலாற்றில் மிகமுக்கிமான நாளாகவும் அமைந்துவிட்டிருந்தது.

முதன்முதலாக தற்கொடைப் போராளி கப்டன் மில்லர் ஈழவிடுதலைப் போரில் புதியவொரு அத்தியாயத்தைத் தொடக்கி வைக்க மக்கள் மனதில் விடுதலைப் போர் வெற்றிபெறும் என்கின்ற நம்பிக்கை மறுபடியும் உண்டாயிற்று. அன்றைய தற்கொடைத் தாக்குதலில் நெல்லியடியில் அமைந்திருந்த இராணுவமுகாம் அழிக்கப்பட்டு பெருமளவிலான சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டிருந்தனர். பின் வந்த நாட்களில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிராபகரன் அவர்களை பேச்சுவார்த்தைக்காக வருமாறு இந்தியா அழைப்பு விடுத்தது. 24 ஜூலை 1987 இல் பிரபாகரன் அவர்கள் இந்தியா பயணமாக மக்கள் விடுதலை கிட்டிவிட்டதான மகிழ்ச்சியில் ஆழ்ந்தார்கள். இந்தியாவிற்கு பேச்சுவார்த்தைக்கென அழைக்கப்பட்டு ஏறத்தாழ கைதியாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட நிலையில், 1987 ஜூலை 29 இல், சிறிலங்காத் தலைநகர் கொழும்பில், அப்போதைய இலங்கை அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்களும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அதைத் தொடர்ந்து இந்தியப் படையினர், அமைதி காக்கும் படையினராக வட கிழக்கு மாகாணங்களில் வந்திறங்கினர். பின் இந்தியாவின் தீர்வுத்திட்டம் திணிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் திரும்பிய பிரபாகரன் அவர்கள் 04 ஓகஸ்ற் 1987 இல் சுதுமலைப் பிரகடனத்தை வெளியிட்டு, இந்தியாவிடம் ஆயுதக் கையளிப்பதற்கு இணங்குவதாக அறிவித்தார்.

போர் நின்றுவிட்ட சூழ்நிலையில் எங்கள் காவலர்களாக இந்திய அமைதி காக்கும் படையினர் உலாவர, அவர்கள் செல்லும் வழிகள் எங்கணும் தமிழ் மக்கள் ஆராத்தி எடுத்து வரவேற்று தங்கள் பிரியத்தையும் மகிழ்ச்சியையும் வெளிக்காட்டினர்.




No comments:

Post a Comment