Monday, December 16, 2019

பன்முக ஆளுமை நிறைந்த புன்னாலை மைந்தன் மருத்துவர் ஆ.திருநாவுக்கரசு

அறிமுகமும் அருமை பெருமைகளும்

அது 1990ஆம் ஆண்டின் முதற்காலாண்டுப் பகுதிவேலணையின் வங்களாவடிச் சந்தியிலுள்ள துரையண்ணை கடையில் பொருட்கள் வாங்குவதற்காக நிற்கின்றேன்துரை அண்ணைக்கு இருமல் கமறுகிறதுஅப்போது அங்கே வந்த லான்ட்மாஸ்ரர்கார நாதன் அண்ணை.

'என்னண்ணை இப்பிடிக்காட்டு இருமல் இருமிறியல்இப்ப இந்த இருமல் இஞ்ச கனபேருக்கு வந்திருக்குதொத்துவருத்தமோவும் தெரியாதுபோய் ஆரும் டாக்குத்தரிட்டைக் காட்டி மருந்தேதும் வாங்கிக் குடியுங்கோவன்.'

'இஞ்சை ஆர் நல்ல டாக்குத்தர்மார் இருக்கினம்குடிநீர்தான் அவிச்சுக்குடிக்கிறனான்சனியன் பிடிச்ச இருமல் நிண்டாத்தானே'

 'உங்களுக்குத் தெரியாதோ அண்ணைஇப்பயொரு சுப்பர் டாக்குத்தர் ஒராள் எங்கட ஆசுப்பத்திரிக்கு வந்திருக்கிறேராம்நல்ல கைராசியான ஆளெண்டு எல்லாரும் கதைக்கினம்ஒருக்காப் போய்ப் பாருங்கோவன்ஆளும் நல்ல மனிசனாம்ஆக்களோட நல்ல அன்பாய் ஆதரவாய்க் கதைக்கிறேராம்'.

'அப்பிடியாவேறையும் ஆரோ கடைக்கு வந்தாக்கள் அவரைப்பற்றிக் நல்லாக் கதைச்சவதான்நான்தான் அக்கறைப் படேல்லவிட்டிட்டன்நாளைக்கு ஒருக்காப் போய்ப் பார்க்கிறன்.'

நண்பராக

சிலநாட்களின் பின் எனது தந்தையாருக்கும் நோய் வரவேஅயலவர்களின் ஆலோசனைகளுக்கு இணங்க வேலணை அரசினர் வைத்தியசாலைக்குச் செல்கின்றார்அங்கே நோயாளர் வரிசையில் காத்திருக்கின்றார்அவருக்கு முன்னதாக இருந்த நோயாளி மருத்துவரின் அறைக்கு உள்ளே செல்லும் போது கதவு திறக்கையில்அந்த மருத்துவரைக் காண்கின்றார்அதற்குள் கதவு மூடப்பட்டுவிடுகிறதுஅருகில் நின்ற தாதியிடம்,

'பிள்ளை,  உள்ளுக்குள்ள இருக்கிறது டொக்ரர் திருநாவுக்கரசுவே?' 

-என உரத்துக் கேட்கிறார்.

மருத்துவரின் அறைக்கதவு திறக்கின்றதுவெள்ளை வெளீரென்ற சீருடையில்அச்சீருடையின் நிறத்திற்குப் பொருத்தமான பற்களின் புன்னகையுடன்தூயதமிழரின் நிறத்தில்மெலிந்தநிமிர்ந்த உருவத்துடன் வெளியே வந்தவர்

' மாஸ்ரர் நீங்களா?' 

என்று ஆச்சரியத்துடன் என் தந்தையை விளிக்கிறார்சில நொடிகளிலேயே,

'மன்னிச்சுக்கொள்ளுங்கோ மாஸ்ரர்பேஷன்றசை பார்த்திற்று வாறன்

என்றுகூறிவிட்டுக் காத்திருக்கும் நோயாளியிடம் விரைகின்றார் ஆ. தி. அரசு என்று அழைக்கப்படும் மருத்துவர் ஆ.திருநாவுக்கரசு.

மருத்துவர் ஆ. திருநாவுக்கரசு அவர்களும் எனது தந்தையாரும் மன்னாரில் பணிபுரிகையில் ஒரே இடத்தில் ஒன்றாகத் தங்கியிருந்து பணியாற்றியிருக்கின்றார்கள். இருவருமே வெவ்வேறு துறைகளில் அரசவையில் பணியாற்றியதால் அவர்களின் பணியிடங்கள் மாறிக்கொண்டே இருந்திருக்கின்றன.

பலவருடங்களின் பின்னான சந்திப்பில் அவர்களிடம் பேசிக்கொள்வதற்கு நிறையவே இருந்தன. நோயாளர்கள் காத்திருந்ததால், அவர்கள் அன்று மாலையே மீண்டும் சந்தித்துக் கொண்டனர். அச்சந்திப்புகள் தொடரவே மருத்துவர் ஆ.திருநாவுக்கரசு. அரசு அவர்கள் எங்கள் குடும்ப நண்பர் ஆகின்றார்.

வழிகாட்டியாக

அது கோட்டைப்பிரச்சனைக் காலமாதலால், எங்கள் வேலணையில் பாடசாலைகள் அடிக்கடி மூடப்பட்டன. வான்வெளித் தாக்குதல்களுக்கு அஞ்சி வெளியிடங்களில் கூடி விளையாடுவதையும் தவிர்த்திருந்தோம். ஆகவே கதைப்புத்தகங்களிடமே எங்கள் பொழுதுகள் தஞ்சமடைந்திருந்தன. எங்கள் வீட்டுக்கு வருகை தரும் மருத்துவர் ஆதி. அரசு அவர்கள் இதை அவதானித்திருக்கின்றார். வாரவிடுமுறைகளில் தன் ஊரான புன்னாலைக்கட்டுவனுக்குச் சென்றுவிட்டு வருகையில் தன் பிள்ளைகள் வைத்திருக்கும் கதைப்புத்தகங்களை எமக்குக் கொண்டுவந்து தருவதும் பின் எங்களிடம் உள்ள கதைப்புத்தகங்களை தன்பிள்ளைகள் வாசிப்பதற்குக் கொண்டு சென்றுகொடுப்பதுமாக ஒரு தொடர்பாளனாக மாறிப்போனார்.

தனியே கதைப்புத்தகங்களாக வாசித்துக் கொண்டிருந்த எங்களை நாங்கள் அறியாமலேயே தமிழறிஞர்கள் மற்றும் உலகப் பெரியார்களின் வரலாறுகளைப் படிக்கவைத்தார்.  அப்படியே அறிவியல் நூல்களின் பக்கமும் எங்கள் கவனத்தைத் திருப்பினார்.

சில மாதங்களிலேயே அவரது குடும்பமும் வேலணைக்கு இடம்மாற, அவரின் பிள்ளைகளும் நாங்களும் நல்ல நண்பர்களானோம். கோட்டைப் பிரச்சனையும் தீவிரமானது.

கடமை வீரராக

ஆகஸ்ற் 22-24 மூன்று நாட்களும் வேலணைத் தீவு பதுங்குகுழிகளுக்குள் முடங்கியிருந்த வேளையில் வேலணை மருத்துவமனைக்குப் பிரசவத்திற்காக ஒருபெண்ணைக் கொண்டுவருகின்றார்கள். பல்வேறு திக்குகளிலிருந்தும் எறிகணைகள் வந்துகொண்டிருப்பதால் மருத்துவமனை விடுதியின் பதுங்குகுழியினுள் இருந்த மருத்துவர் ஆதி. அரசு அவர்கள் அழைக்கப்படுகின்றார். பிரவசவலியில் துடிக்கும் பெண்ணை மருத்துவமனைக் கட்டடத்திற்குள் வைத்துப் பிரசவம் பார்ப்பதற்கு முடியாதநிலையில். அப்பெண்ணை மருத்துவமனை வளவிற்குள் அமைந்திருந்த பதுங்குகுழிக்குள் கொண்டுசென்று, அங்கு வைத்துப் பிரசவம் பார்க்கப்படுகின்றது. தாயும் சேயும் நலமடைய உறவினர்கள் மருத்துவரை நோக்கித் தம்கைகளைக் கூப்புகின்றனர்.

மூடநம்பிக்கைகளை ஒழிப்பவராக 

1991 இல் வேலணை முற்று முழுதாக வெறிச்சோடுகின்றது. இடம்பெயர்ந்து நாங்கள் யாழ் நகருக்கு அண்மையில் குடியேறுகின்றோம். மருத்துவர். ஆதி. அரசு அவர்களின் குடும்பமும் இடம்பெயர்ந்து யாழ் நகருக்கு அண்மையிலேயே தங்கியிருந்தார்கள். யாழ் மருத்துவமனையை அண்டிய பகுதி சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரால் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்படுகின்றது. அடிக்கடி மண்டை தீவிலிருந்து யாழ் நகரின் கரையோரப் பகுதிகளை நோக்கி இரவுகளில் எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்படுவது வாடிக்கையாகின்றது.

நாங்கள் தங்கியிருந்த வீடு பாதுகாப்பு வலையத்தின் எல்லையில் அமைந்திருந்ததால், எறிகணைத் தாக்குதல்கள் அதிகமாகும் இரவுகளில் அவர் தன் குடும்பத்தினருடன் வந்து எங்கள் வீட்டினில் தங்கியிருப்பார்கள். அவ்வாறான ஒரு இரவில் நாங்கள் எல்லோரும் முற்றத்தில் கூடியிருந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தோம். அப்போது வளவின் ஒரு மூலையில் நிலத்திலிருந்து ஒரு செந்தணல் தோன்றிப்பின் சிறிது தீப்பற்றி எரிந்து அணைந்து பின் சிறிது நேரத்தின் பின் மீண்டும் அது தொடர்ந்து கொண்டிருந்தது. அதனை அவரது சின்னப் பிள்ளைகள் ஒன்றிடம் காட்டி அதுதான் கொள்ளிவாய்ப்பேய். கிட்டப்போனால் பிடித்துவிடும் என்றேன். அப்பிள்ளை நான் சொன்னதை நம்பி அழுதுகொண்டே தன் தந்தையிடம் சென்றது. அவர் உடனேயே ஒரு விளக்கைத் தன்னுடன் எடுத்துக் கொண்டு,  நெருப்புத் தெரிந்த இடத்திற்கு அந்தப்பிள்ளையையும் தன்னுடன் அழைத்துச்சென்று அந்த இடத்தைக் காட்டினார்.

பகலில் கொளுத்தப்பட்டிருந்த குப்பை முற்றாக அணையாமல் சாம்பல் பூத்திருந்தது. காற்று வீசுகையில் சாம்பல் விலகத் தணல் வெளியே தெரிந்து தீப்பற்றியிருக்கிறது. காற்று நின்றதும், மீண்டும் சாம்பல் மூட அது அணைந்துவிட்டது. காரணத்தை அறிந்த பிள்ளை சிரித்துக்கொண்டே என்னிடம் வந்து என்னைப் பேய்க்காட்டப் பார்க்கிறீர்களா என்றது?

தந்தையாக

காலநதியின் சுழலில் சிக்கி வெவ்வேறு திக்குகளில் பிரிக்கப்பட்டோம். 2011 இன் நடுப்பகுதியில் நான் வேலணைக்குச் சென்ற பொழுதினில் மீண்டும் அவர் வேலணையில் பணிபுரிவதை அறிந்து மிக்க மகிழ்ச்சியுடன் அவருடன் அளவளாவினேன். தந்தையின் ஸ்தானத்திலிருந்து அறிவுரைகளுடன் வாழ்த்துரைத்தார்.

தக்கார் தகவிலார் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப் படும்

என்றார் வள்ளுவப் பெருந்தகை. அந்த வகையில் மருத்துவர் ஆ.திருநாவுக்கரசு அவர்கள் ஆற்றிய பணிகளும், கல்வியிலும் தொழிலிலும் எல்லாவற்றிலுமாய் உயர்ந்து நிற்கும் அவர்தம் பிள்ளைகளும் அவர் ஒரு பெருந்தகை என்பதைப் பறைசாற்றி நிற்கின்றன.