Wednesday, March 28, 2012

வேரென நீயிருந்தாய்...(49)

காலை விடிந்துவிட்டிருந்தது. எழுந்து காலைக்கடன்களை முடிக்கையில் உதயனும் வந்து விட்டிருந்தான். அவன் தான் இங்கே அம்மாவின் அந்திரெட்டிக்கிரியைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருப்பவன்.

“மச்சான் டேய்! இன்னும் பத்து நிமிசத்தில van வந்திரும். என்னமாதிரி ரீ ஏதும் குடிச்சிற்று வரப்போறியோ இல்லாட்டி போகேக்கை வழியில ரவுணுக்க குடிச்சிற்றுப் போவமா?”

“இல்லடா. இண்டைக்கு விரதம்தானே. எல்லாத்தையும் முடிச்சிற்றுக் குடிப்பம்.”

“ஐயருக்கு அங்க வேலணையிலயே ஒழுங்கு படுத்தியிருக்கு. சாமான்களெல்லாம் எங்கட வீட்டில கிடக்கு. அப்பிடியே போற வழியில அதையும் ஏத்திக்கொண்டு பாட்டுப்படிக்கிற ஆளையும் மற்றவரையும் ஏத்திக்கொண்டு போவம் என.”

“அதோட நதீஷாவும் வரும்”

“அதாரு நதீஷா?”

“அது தான் என்ரை wife ஆ வரப்போறவா?”

“இப்ப ஆள் எங்க? இதைப்பற்றி நீ முதல்ல ஒண்டும் சொல்லேல்லையே”

“அதெல்லாம் பிறகு ஆறுதலாச் சொல்லுறன். அந்தா van ஒண்டு பள்ளேக்கை (படலைக்குள்ள) நிக்குதுபோல. அதுவா நாங்க போற van?"

“ஓமடா van வந்திற்றுது. அப்ப வெளிக்கிடு போவம்.”

வாகனத்தில் புறப்பட்டு அந்திரெட்டிக்குத் தேவையான பொருட்களையும் மற்றைய இருவரையும் ஏற்றிக் கொண்டு ஆரியகுளம் சந்திக்குச் சென்றோம். அங்கே நதீஷா ஏற்கனவே தயாராக இருக்கவே அவளையும் ஏற்றிக்கொண்டு ஸ்ரான்லி வீதியூடாகச் சென்று மிட்டாய்கடைச்சந்தியில் காங்கேசன்துறை வீதியைப்பிடித்து சத்திரச்சந்தியை அடைய முன்னே முற்றவெளிக்குள்ளால் கோட்டை தெரிந்தது.

“அந்தா! அதுதான் jaffna fort"

நதீஷாவிற்கு காட்டினேன்.

“கிட்ட போகலாமா?”

“உள்ளுக்குள்ள போகேலாது. ஆனா அதுக்குக் கிட்டவாத்தான் இப்ப போகப்போறம்.”

van முற்றவெளிக்கு அண்மையில் வந்து வலதுபுறமாய்த் திரும்ப அந்தப் பாரிய தொலைத்தொடர்பு கோபுரம் கண்ணில் பட்டது.

“இந்தா telecom tower இருக்குத்தானே. அப்ப ஏன் இஞ்ச dialog-இன்ரை coverage இல்லாம இருக்கு?”

“இது அந்தக்காலத்தில இருந்தே இருக்குது. எப்பிடியும் இன்னும் கொஞ்ச காலம் போக இஞ்சையும் coverage வந்திரும்.”

இப்போது van பண்ணையை அடைந்து விட்டிருக்க, கோட்டையின் ஒருபகுதி தெளிவாகத் தென்பட்டது.

“திலீபன்ரை death aniversary அண்டுதானே இதை எல்ரீரி பிடிச்சது?”

“ஓம்! 1990 ஆம் ஆண்டில. பிறகு தொண்ணூற்றைஞ்சில ஆமி யாழ்ப்பாணத்தப் பிடிக்கேக்க கோட்டையும் போய்ற்றுது”

அது 1990 ஆம் ஆண்டு காலப்பகுதி, யாழ்கோட்டையின் முற்றுகையை உடைக்க தீவுப்புகுதியினூடாக நரவேட்டையாடியவாறே மண்டைதீவினை அடைந்திருந்த சிறிலங்காப்படையினர், அதன்பின்னர் கோட்டையினை மீட்பற்கு மேற்கொண்ட முயற்சியில் ஒரு தொகுதிப்படையினர் கோட்டையினுள் சென்று விட்டிருந்தாலும், கோட்டையை தொடர்ந்து தக்கவைத்திருக்க முடியாமு என்பதனை உணர்ந்திருந்தனர். மேலும் திலீபனின் நினைவுநாளன்று மீண்டும் கோட்டையைக் கைப்பற்ற இயக்கம் நடவடிக்கை எடுக்க இருப்பதனை அறிந்து முதல்நாள் இரவே கோட்டையை விட்டு வெளியேறி மண்டைதீவை அடைய திலீபனின் மூன்றாவது நினைவுநாளான 26 september 1990 அன்று யாழ் கோட்டையில் புலிக்கொடி ஏறியது.

“இந்தக் கோட்டையில் என்று புலிக்கொடி பறக்கிறதோ, அன்றுதான் எமக்கு விடிவு. அன்றுதான் எமக்கு சுதந்திரம்.” என்ற திலீபனின் கனவு, யாழ்நகர மக்களைப்

பொறுத்தவரை மெய்ப்பட்டது. இந்தக் கோட்டையில் இருந்து வந்த எறிகணைகளால் ஏற்பட்ட அழிவுகள் எத்தனை? சிறிலங்காப்படைகள் மட்டுமா? அமைதிப்புறா வேடமணிந்து வந்திருந்த வல்லுறுகள், வைத்தியசாலையையே துவம்சம் செய்திருந்தன. காந்தி தேசத்தின் அகிம்சாவாத முகமூடியினை திலீபன் கிழித்தெறிந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே 10 October 1987 அன்று இந்தக் கோட்டையிலிருந்து வந்த இந்தியப்படைகள் யாழ் போதனா வைத்தியசாலைக்குள் புகுந்து அங்கு கடமையிலிருந்த வைத்தியர்கள், ஊழியர்கள், நோயாளிகள் என் சுமார் அறுபது வரையலான அப்பாவிப் பொதுமக்களைப் படுகொலை செய்து கொன்றுகுவித்திருந்தன.

“கட்டிய ஒக்கம கொஹேத யன்னே?” (எல்லாரும் எங்க போறீங்க?)

-பண்ணை சோதனைச்சாவடியிலிருந்த படையினனின் கேள்வியில் சிந்தனை கலைந்தது.

“வேலணைட்ட யனவா” (வேலணைக்குப் போறம்)
முன்னாலிருந்த உதயன் பதிலளித்தான்.

வாகனத்திற்குள்ளால் எல்லாரையும் எட்டிப்பார்த்துத் திருப்தியுற்ற பின்னர் வாகனத்தைத் தொடர்ந்து செல்ல அனுமதித்தான். இப்போது van பண்ணை வீதிவழியே பயணத்தை ஆரம்பித்தது. இரு புறமும் கடலிருக்க அதன்நடுவே அமைந்திருந்த சிதைவடைந்த வீதியினூடாக நாங்கள் பயணிக்கலானோம்.

சங்கிலிப்பாலத்தைக் கடந்து மண்டைதீவுச்சந்தியில் போடப்பட்டிருந்த வேகக்குறைப்புத் தடைகளையும் தாண்டிய பின்னர் van இப்போது ஓரளவிற்கு வேகம் எடுத்திருந்தது. வீதியின் இருமருங்கும் பார்வையைச் செலுத்தலானேன். கடல்நீர் வீதியின் இடது புறத்திலிருந்து வலதுபுறம் நோக்கி 'போக்கு'-களினுாடாகவும் பாலத்தினுாடாகவும் பாய்ந்து கொண்டிருந்தது.

“ஏன் கடல் இப்பிடி இந்தப் பக்கம் தண்ணி கூடவாவும் மற்றப்பக்கம் குறைவாவும் இருக்கு? தண்ணி எப்பவும் இந்தப்பக்கம் தான் ஓடுமா?”
- ஆச்சரியத்துடன் கேட்டாள் நதீஷா.

“இது இப்பிடித்தான். ரெண்டு பக்கமும் மாறிமாறி ஓடிக்கொண்டிருக்கும். காலமையில இந்தப்பக்கம் ஓடிச்சுது எண்டா பின்னேரம் மற்றப்பக்கம் ஓடும்.”

“அப்ப எப்பவுமே காலமையில இந்தப்பக்கத்திலயிருந்துதான் ஓடுமா?”

“இல்லையில்லை. வடிவாத் தெரியாது. நான் நினைக்கிறன் சந்திரன் இருக்கிற பக்கத்துக்கு தான் கடல்தண்ணி ஓடிக்கொண்டிருக்கும். பௌர்ணமிக்கு கடல் பொங்கிறதுக்குக் காரணம் சந்திரனின்ர ஈர்ப்புவிசை எண்டு சொல்லுறவை. இதுவும் அதாலையாத்தான் இருக்கும்”

“ம்ம்... இதுதான் இலங்கையில ஆக நீளமான பாலமாயிருக்கும். என?”

“இதில்ல. புங்குடுதீவுப்பாலம் தான் ஆக நீளம் கூடினது”

இப்போது நாங்கள் அல்லைப்பிட்டியை நெருங்கிக் கொண்டிருந்தோம்

“ஓ! ஆ! அதென்ன பெரிய building ஒண்டு இடிஞ்சு கிடக்கு?“

“அதுதான் அல்லைப்பிட்டி அலுமினியம் factory”

“அப்ப அது இப்ப இல்லையா?”

“எனக்குத் தெரிஞ்சு இது ஒருக்காவும் இயங்கேல்லை. நாங்க சரியான சின்னனா இருக்கேக்கை இயங்கினதாம். பிறகு சண்டை தொடங்கினாப்பிறகு மூடுப்பட்டிட்டுது”

அல்லைப்பிட்டிச்சந்தியிலுிருந்த சோதனைச்சாவடியைத் தாண்டி பயணித்துக் கொண்டிருந்தோம். இருபுறமும் வெட்டவெளிகள். வலது பக்கம் தூரத்தே கடல் தெரிந்தது.

“இந்த இடங்களில ஒருத்தரும் விவசாயம் செய்யிறதில்லையா?”

“மாரி காலத்தில றோட்டடுக்கு ரெண்டு பக்கமும் சரியான வெள்ளம் நிக்கும். அதோட கடல் தண்ணியும் கலக்கிறதால இந்த இடமெல்லாம் உவர் நிலமா மாறிற்றுது. அதால இந்த இடங்களில பயிர் ஒண்டும் செய்யேலாது”

“அப்ப கடலை மறிச்சு அணைகட்டினா கொஞ்ச காலத்துக்குப் பிறகு பயிர் செய்யலாம் தானே. அதோட நன்னீரும் உள்ளுக்குள்ளை நிக்கிறதால அந்தத் தண்ணிய பிறகு பயிர்ச்செய்கைக்குப் பாவிக்கலாம் தானே”

“பூனைக்கு ஆரு மணி கட்டிறதெண்ட மாதிரி இது இப்பிடியே கிடக்கு. முந்தியும் இந்த நன்னீர் சேமிப்புப் பற்றி கனபேர் ஐடியாக்கள் எல்லாம் போட்டவைதான். ஆனா சண்டை நடக்கிறதாலயோ என்னவோ பிறகு அதைப்பற்றி ஒருத்தரும் கதைக்கறேல்ல.”



பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11 பாகம்-12 பாகம்-13 பாகம்-14 பாகம்-15 பாகம்-16 பாகம்-17 பாகம்-18 பாகம்-19 பாகம்-20 பாகம்-21 பாகம்-22 பாகம்-23 பாகம்-24 பாகம்-25 பாகம்-26 பாகம்-27 பாகம்-28 பாகம்-29 பாகம்-30 பாகம்-31 பாகம்-32 பாகம்-33 பாகம்-34 பாகம்-35 பாகம்-36 பாகம்-37 பாகம்-38 பாகம்-39 பாகம்-40 பாகம்-41 பாகம்-42 பாகம்-43 பாகம்-44 பாகம்-45 பாகம்-46 பாகம்-47 பாகம்-48

3 comments:

  1. பண்ணை ரோட்டால ஊருக்கு போறமாதிரி இருக்கு.
    சாட்டி வெள்ளை கடற்கரையில் நீந்தி திரிந்த காலங்கள் மறக்க முடியாதவை.
    இப்ப புளியங்க்கூடலில உவர் கடல் நீர் உள்ளுக்கு வராம அணை கட்டி இருக்கினம். மற்ற இடங்களிலும் அணை கட்டினால் நல்லது.

    ReplyDelete
  2. Ippa mankumpaan muthal aralich chanthi saravanai varai anai kaddappaddullathu.athoda vadakku raodkum maniyakaaran veeddadimaddum velanai roadkku metkaala mika nantraaka anai kaddi malai neer seruvathatkuriya setup vadivaaka seiyappaddullathu.

    Velanai patti melum pathivu seiyunkal anna 50 aththiyaayam enough.

    ReplyDelete
  3. தகவல்களுக்கு மிக்க நன்றி 'அந்தக்காலம்' & பெயரிலி

    ReplyDelete