Wednesday, November 24, 2010

வேரென நீயிருந்தாய்...(19)

யாழிலிருந்து வெளியிடங்களுக்கான போக்குவரத்துத் தொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்டு ஏறத்தாழ மூன்று வாரங்கள் கடந்து விட்டிருந்தன. இரண்டாம் ஆண்டிற்கான எமது கற்கை நெறிகள் 26 ஒக்ரோபர் 1998 அன்று ஆரம்பிக்கப்பட இருப்பதாக ஏற்கனவே அறிவக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தில் எமது பிரிவைச் சேர்ந்த சுமார் 40 மாணவர்களும் எப்படிச் செல்வதென்று தெரியாமல் அங்கலாய்த்துக் கொண்டிருந்தாலும் கணிசமான அளவு மாணவர்கள் இங்கே இருப்பதனால் பல்கலைக்கழகம் எங்களுக்கு ஏதாவது உரிய நடவடிக்கை எடுக்கும் என்கின்ற நம்பிக்கையும் இருந்தது. யாழ்ப்பாணத்தின் இதுவரைகால வரலாற்றிலேயே பெருமளவிலான மாணவர்கள் பொறியியற் பீடங்களுக்கு தெரிவான பெருமை உயர்தரம் 1995 (A/L 1995) இனையே சாரும். அதற்குப் பின்னர் யாழ்ப்பாணம் இராணுவக்கட்டுப்பாட்டிற்குள் வந்ததன் பிற்பாடு மின்சார வசதிகள் இருந்தும் கூட பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகுவோரின் விகிதாசாரம் பாரிய அளவில் வீழ்ச்சி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் பெருமையை உயர்தரம் 1995 பெறுவதற்குக் காரணமாயிருந்தவர்கள்? பரீட்சை நெருங்குகையில் எத்தனையோ இடப்பெயர்வுகள், சொத்தழிவுகள், உயிரிழப்புக்கள். பரீட்சை நடைபெறுமா என்பது கூட பரீட்சை மண்டபத்தில் வினாத்தாளினைக் கையில் பெறும்வரை சந்தேகமாய்த்தானிருந்தது. பரீட்சைகள் யாவும் முடிவடையும் வரையிலும் பரீட்சைகள் தொடர்ந்து நடக்குமா என்கின்ற நம்பிக்கையீனம் தொடர்ந்து கொண்டேயிருந்தது. பரீட்சைகள் யாவும் முடிந்த சில தினங்களுக்குள்ளேயே ஒக்ரோபர் 30 இல் ஒட்டுமொத்த வலிகாமமும் இடம்பெயர்ந்து விட்டது. அதுவரை காலமும் அந்த இடப்பெயர்விற்கான அவசியத்தினைத் தாமதப்படுத்தி விட்டிருந்தவர்களை நினைக்கையில் நெஞ்சு நெகிழ்கிறது.

22 ஒக்ரோபர் 1998 அன்று அந்த உறுதிப்படுத்தப்பட்ட செய்தி எங்களை வந்தடைந்திருந்தது. மறுநாள் யாழிலிருந்து திருமலை செல்வதற்கான கப்பல் ஆயத்தமாகவிருப்பதால் மறுநாள் அதிகாலையில் யாழ் புகையிரத நிலையத்திற்கு வருகை தருமாறு அறிவித்திருந்தார்கள். யாழிலிருந்து வெளியே செல்வதற்காக பெருமளவிலானோர் அந்தரித்துக் கொண்டிருந்தனர். கடந்த 25 நாட்களாக யாழிலிருந்தான வெளியிடங்களுக்கான போக்குவரத்துத் துண்டிக்கப்ட்டிருந்தது. 1200 பயணிகள் வரை இந்தக் கப்பலில் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டு மக்களுக்கு கப்பலில் செல்வதற்கான பயணச்சீட்டுக்களும் விற்கப்பட்டுக் கொண்டிருந்தன. பல்கலைக்கழக மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட முதல் இரண்டு பேரூந்துகளுக்குள் நாங்கள் திணிக்கப்பட்டுதட தெல்லிப்பழையில் இறக்கிவிடப்பட்டோம். மாலை மூன்று மணியளவில் மேலும் சில பேரூந்துகளில் பயணிகள் வந்து சேர்ந்திருந்தனர். 1200 பயணிகளில் பாதிப்போர் கூட வந்து சேர்ந்திருக்க மாட்டார்கள். திடீரென சில பச்சைநிறப் பேரூந்துகள் காங்கேசன்துறைப் பக்கமாகவிருந்து வந்து சேர்ந்தன. அவற்றின் யன்னல் கண்ணாடிகள் யாவும் கறுப்புவர்ணம் பூசப்பட்டு வெளியால் எதையுமே பார்க்க முடியாதவாறு இருந்தது. அவசரஅவசரமாக வந்திருந்த பயணிகள் யாவரையும் அந்தப் பேரூந்துகளில் அள்ளி அடைத்துக் கொண்டு காங்கேசன்துறை துறைமுகத்தை அடைகையில் மாலை நான்கரை கடந்து விட்டிருந்தது. எங்கள் அனைவரையும் பேரூந்துகளில் இருந்து இறக்கி உடனடியாகவே கப்பலின் அடித்தட்டுக்கு முந்திய தளத்தி்ற்குள் செலுத்திக் கொண்டிருந்தார்கள். உள்ளே புழுங்கி அவிந்து கொண்டிருந்தது. நீண்ட நேரமாகியும் கப்பல் புறப்படுவதற்கான அறிகுறிகளைக் காணோம். அந்தத் தளத்தை விட்டு வெளியே செல்வதற்கான அனுமதி எங்களுக்கு மறுக்கப்பட்டிருக்க வெக்கையால் ஏற்பட்ட வியர்வையில் குளித்துக் கொண்டிருந்தோம்.

சில மணிநேரங்களின் பின்னர் கப்பல் நகரத் தொடங்குவதை உணர முடிந்தது. பின் மறுநாள் காலையிலேயே திருமலைத் துறைமுகத்தைச் சென்றடைந்திருந்தாலும் கப்பலைக் கரைக்கு நகர்த்தாமல் சிறுசிறு வள்ளங்கள் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக பயணிகளை இறக்கிக் கொண்டிருந்தார்கள். எங்கள் முறை வந்ததும் மேல்தளத்துக்கு வந்து ஆசுவாசமாக வெளிக்காற்றைச் சுவாசித்தோம். வள்ள்தில் பயணிக்கையில் அருகிலிருந்தவன் “அங்க பாருங்கடா” எனச் சொல்லவே அவன் காட்டிய திசையில் பார்த்தோம். நாங்கள் வந்த அதே கப்பலிலிருந்து மற்றப்பக்கமாக கடற்படைக் கலங்களினூடாக நீலச்சீருடை தரித்த கடற்படையினரை வெளியேற்றிக் கொண்டிருந்தார்கள். 1200 பொதுமக்கள் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், எங்களுடன் வந்திருந்த பயணிகளின் எண்ணிக்கை 500 இலும் குறைவானதாக இருந்ததற்கான காரணம் வெளிப்படலாயிற்று.

அன்றைய இரவே அக்பர் விடுதியை அடைந்து சிரேஷ்ட மாணவர்களின் அறைகளில் 'கஜே' அடித்து விட்டு (இலவசமாக விடுதிச் சட்டத்திற்கு முரணான வகையில் தங்குதல்) மறுநாள் வெளியிடங்களில் அறைகளைத் தேடியலைந்து அன்றைய இரவே புதிய இடங்களுக்குக் குடியேறினோம். தொடர்ச்சியான பயணக்களைப்பும் அலைச்சலும் காலை தாண்டியும் எங்களை உறக்கத்தில் ஆழ்த்தியிருந்தது. இரண்டாம் வருடத்தின் முதல் நாளிலேயே காலை வேளை விரிவுரைகளைத் தவறவிட்டிருந்தோம். மதிய உணவை முடித்துவிட்டு வந்து ஆய்வுகூடங்களை அலசியதில் அன்றைக்கே Elect lab-இல் செய்முறை வகுப்பு இருந்தது தெரிய வந்தது. இந்தவருடத்தில் இருவர் கொண்ட குழுக்கள். இந்தவருடமும் நதீஷா தான் குறூப்மேற். அம்மாவுடன் இருந்த இத்தனை காலமும் நதீஷா என்கின்ற ஒருத்தி என் நண்பியாகி விட்டிருந்ததை மறந்தே போயிருந்தேன். அம்மாவுடன் இருந்த ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு விதமாகக் கழிந்திருந்தன. சில நாட்களில் மிக்க மகிழ்ச்சியாகக் கழிந்திருந்தது. விதம்விதமாக சமைத்துப் போட சப்புக்கொட்டிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அனேக நாட்களில் இரவில் வெள்ளைப்பி்ட்டுடன் கயல்மீன் பால்சொதியும் அல்லது மணக்கமணக்க நண்டுக் கறியும் வெழுத்துவாங்கியிருந்தேன். காலை வேளைகளில் பாலப்பம், உழுத்தங்கழி, தேசையென என்னை அசத்தியிருந்தார் அம்மா. எங்காவது சண்டை ஆரம்பித்து விட்டால் அம்மாவின் முகத்தில் கவலைகள் கவிந்து கொள்ளும். சமைக்கவும் மறந்து சாப்பிடவும் மறந்து ஆழ்ந்த சிந்தனையுடன் கடவுளைப் பிரார்த்தித்தபடியே இருப்பது அவரின் வாடிக்கையாகிவிடும். என்னைப் பொறுத்த வரையில் அக்காவுக்கு நித்திய கண்டம் பூரண ஆயுசு என்கின்ற உணர்வே ஏற்பட்டிருந்தது. மணலாற்றில் 1993 இல் இயக்கம் பெயரிட்டு நடாத்திய முதலாவது தாக்குதலான இதயபூமி-1 இனைக் கேட்ட நாளிலிருந்து அண்மையில் நடந்துமுடிந்த ஓயாத அலைகள்-2 வரை ஒவ்வொரு சண்டைப் பொழுதுகளிலும் அம்மா அக்காவிற்காகப் பிரார்த்திப்பதைப் பார்த்துப் பார்த்து அக்காவிற்கு மரணமே கிடையாது என்கின்ற எண்ணம் ஊறிப் போயிருந்தது.

Elect lab - இற்குள் நுழைந்து எங்கள் குழுவிற்கான இருப்பிடத்தைத் தேடுகையில் நதீஷா ஏற்கனவே வந்து விட்டிருப்பது தெரிந்தது.

“Hi! how was your training and holiday? how is your mum?"

“Thanks! it was good, my mother is also fine. what about you?”

“It's OK”
அவள் சிரிக்க முயற்சித்துத் தோற்பது தெரிந்தது. வழமையாகப் புன்னகையைத் தவழவிட்டுக் கொண்டிருக்கும் அவள் வதனத்தில் சோகம் சூழ்ந்திருப்பது தெரிந்தது.

“Anything wrong?. It seems like you are not happy”
பற்களால் உதடுகளைக் கடித்து சோகத்தை அடக்குவது தெரிந்தது. என்னிடம் சொல்லலாமா விடலாமா என்கின்ற தயக்கமும் குழப்பமும் அவள் மனத்திற்குள் ஓடுவதை முகம் காட்டிக்கொண்டிருந்தது. எம்மை நோக்கிப் போதனாசிரியர் வருவது தெரியவே அன்றைய செய்முறைக்காக வைக்கப்பட்டிருந்த குறிப்பினில் பார்வையைத் திருப்பினோம்.

பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11 பாகம்-12 பாகம்-13 பாகம்-14 பாகம்-15 பாகம்-16 பாகம்-17 பாகம்-18

4 comments:

  1. //என்னைப் பொறுத்த வரையில் அக்காவுக்கு நித்திய கண்டம் பூரண ஆயுசு என்கின்ற உணர்வே ஏற்பட்டிருந்தது. மணலாற்றில் 1993 இல் இயக்கம் பெயரிட்டு நடாத்திய முதலாவது தாக்குதலான இதயபூமி-1 இனைக் கேட்ட நாளிலிருந்து அண்மையில் நடந்துமுடிந்த ஓயாத அலைகள்-2 வரை ஒவ்வொரு சண்டைப் பொழுதுகளிலும் அம்மா அக்காவிற்காகப் பிரார்த்திப்பதைப் பார்த்துப் பார்த்து அக்காவிற்கு மரணமே கிடையாது என்கின்ற எண்ணம் ஊறிப் போயிருந்தது.//

    தன் ஆசா பாசங்களைத் துறந்து, தன் உயிரை விட மன்னுயிரைப் பேணப் போராடும் உலகப் போர்வீரர்கள்,தியாகிகள் எல்லோருமே மரணத்தை வென்றவர்களாயிற்றே...

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. தன் ஆசா பாசங்களைத் துறந்து, தன் உயிரை விட மன்னுயிரைப் பேணப் போராடும் உலகப் போர்வீரர்கள்,தியாகிகள் எல்லோருமே மரணத்தை வென்றவர்களாயிற்றே...

    எல்லாவற்றையும் நீ ஏற்றுக் கொள்பவனாயிருந்தால் இந்த உலகில் உனக்கெதிரானது என்று எதுவுமே இராது” - ஓஷோ

    ReplyDelete
  4. 95, 96, 97.... என்னத்த சொல்ல... மீண்டும் நினைக்கயில், நெஞ்சு கனக்கும் காலம்...

    முரளி, இங்கிலாந்து

    ReplyDelete