Tuesday, November 2, 2010

தவறவிட்டவைகள்.

காலை பணியிடத்தில் வேலை ஆரம்பித்த சிறிது நேரத்திற்கெல்லாம் ஒரு தொலைபேசி அழைப்பு. அவருடைய ஒரு முக்கியமான அலுவல் சம்பந்தமாக நாங்கள் இருவருமே கவனிக்கத் தவறியிருந்த ஒரு விடயம் அதிர்ஷ்டவசமாக அவருக்கு மின்னஞ்சலூடாக நினைவூட்டப்பட்டிருந்தது. அந்த மின்னஞ்சல் நினைவூட்டல் இல்லாதிருந்துவிடின் அந்த அலுவல் அதோகதிதான். [பலாப்பழத்தை வைச்சுப் பாத்துக்கொண்டிருக்க வேண்டியிருந்திருக்கும் :-)]

மதியம் வேறொரு நண்பன் ஒருவனிடமிருந்து வந்த மின்னஞ்சலின் இணைப்பினூடக இந்த வலைப்பூவினைச் சென்றடைந்திருந்தேன். ஏற்கனவே பலமுறை அந்த வலைப்பூவினை ரசித்திருக்கின்றேனாயினும் கடைசியாக எப்போது சென்றேன் என்பது நினைவிலில்லை. பொதுவாக வேலைகளில் அலுப்படிக்கும் நேரங்களில் தமிழ் வலைத்திரட்டிகளில் சென்று வலைப்பூக்களைத் தரிசிப்பதேயன்றி எந்தவொரு வலைப்பூவினதும் நிரந்தர வாசகனாக இருப்பதில்லை. என்னுடைய இயல்பே அப்படித்தான். சிலதளங்களின் நிரந்தர வாசகனாகி விட வேண்டும் என்கின்ற உந்துதலைத் தந்தாலும் என்னுடைய தாமசக்குணம் அதனைச் செயற்படுத்த விடுவதில்லை.

ஆழ்மனதின் அற்புத சக்திகள் என்கின்ற தலைப்பின் கீழ் மனதை ஒருமுனைப் படுத்துதல் பற்றிய அந்த கட்டுரையை விரும்பி இரசித்திருந்த மனது அதனை உடனடியாகச் செயற்படுத்த விழைந்தது. இந்த மனம் எப்போதும் இப்படித்தான், புதியவைகளை நாடி ஓடிக்கொண்டிருக்கின்றதேயின்றி அவற்றைத் தொடர்ந்து கைக்கொள்வதில் அக்கறை காட்டுவதில்லை. மனதின் விந்தைகளை அறிந்துவிட ஆசைப்படுவதேயன்றி அறிந்தவற்றைத் தொடர்ந்து கடைப்பபிடிப்பதில் அக்கறை காட்டுவதில்லை. அல்லது கவனிக்காமல் விட்டுவிட்டு புதிய விடயங்களை தேடி அலைந்து கொண்டிருக்கிறது.

முன்னால் கைக்கெட்டும் தூரத்தில் இருந்தது விசைப்பலகை (Key Board). அதில் உற்றுக்கவனிக்க என்ன இருக்கின்றது என்கின்ற அலட்சியம் எப்போதுமே. பத்து வருடங்களுக்கும் மேலாகப் பார்த்துப் பழகிய பரிச்சயம் அதனுடன். கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததைப் போன்றே ஆரம்பத்தில் அலுப்பும் அலட்சியமும் வந்தது. ஆயினும் தொடர்ந்து உற்று நோக்கிக் கொண்டேயிருந்தேன். இப்போது பெட்டிகள் கோலம் போட ஆரம்பித்தன. அது வேறு அனுபவங்களை இழுத்து வரத்தொடங்கியது. எனக்கு எப்போதும் தொடர்ச்சியாகப் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தால் அந்தப் பெட்டிகளின் ஓரங்கள் வழியே கோலங்கள் வரையத்தொடங்கிவிடும் மனது. விசைப்பலகையில் குவிக்க நினைத்தால் அது விரிவடையத் தொடங்கியது. மனதை அடக்கநினைத்தால் தான் அடங்காது முரண்டுபண்ணும், அதை விட்டுவிட்டு அமைதியாய் அதை அலட்சியப்படுத்தினால் தானே அடங்கிவிடும் என்கின்ற சூட்சுமம் தெரிந்திருந்ததால் அடங்கும் வரை அமைதியாயிருந்தேன்.

விசைப்பலகையில் எத்தனை விசைகள் (keys) இருக்கின்றன. உங்களில் எத்தனைபேருக்கு உங்கள் விசைப்பலகையில் உள்ள விசைகளின் எண்ணிக்கை தெரிந்திருக்கின்றது வாழ்க்கையில் முதற்தடவையாக விகைகளின் எண்ணிக்கையை எண்ணத் தொடங்கினேன். நான் இதுவரையில் பாவித்திராத விசையொன்றும் (Scroll Lock) என் கவனத்திற்கு வந்தது. அதன் பயன்பாடு பற்றி அறிந்து கொள்வதற்காகக google-இனை நாடினேன். என்னை அலைய வைக்காமல் யாரோ ஒரு புண்ணியவானுக்கும் அந்த சந்தேகம் வந்து அதற்கு வேறொரு புண்ணியவானும் பதிலளித்திருந்தார்.

மனம் வியப்பும் வெறுப்பும் கலந்தவொரு நிலைக்குப் போனது. இந்தவொரு சின்னப் பொருளிலேயே இத்தனைவருட காலமாய் இந்தச் சின்னச்சின்ன விடயங்களைக் கவனிக்காமல் விட்டிருக்கின்றேன் என்றால்...

என்னத்தைச் சொல்லுறது? நீங்கள் எப்படி?

2 comments: