Wednesday, November 10, 2010

வேரென நீயிருந்தாய்...(14)


ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டு
சூரையன் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே!



வரப்பிரகாஷின் சாவினை அடுத்து பகிடிவதை முற்றிலுமாய் நின்று போய் விட்டிருந்தது. பின்வந்தவொருநாளில் பகிடிவதை உத்தியோகபூர்வமாக முடிவிற்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்டிருந்த ஒரு சிலரைத் தவிர அனேகமாக நாங்கள் எல்லோருமே வரப்பிரகாஷை மறந்துவிட்டு எங்களெங்கள் வேலைகளில் ஈடுபடலானோம்.

விரிவுரைகளின் போதான தூக்கக்கலக்கங்களை களைவதற்கு துண்டுகளில் வரும் கிசுகிசுக்கள் உதவிக்கொண்டிருந்தன. Drawing வகுப்புகளின் போது போதனாசிரியர்கள்வந்து வரைந்து கொண்டிருக்கும் படங்களின் மேல் 'B' தர பென்சில்களால் வட்டமடித்துக் கடுப்பேற்றிக் கொண்டிருந்தார்கள். அதைத் தவிர்த்து ஏனைய ஆய்வு கூட வகுப்புகளும் surveying - உம் சந்தோஷமாகச் சென்று கொண்டிருந்தன. ஐந்து பேர்களைக் கொண்டிருந்த சில குழுக்களைச் சேர்ந்தவர்கள் வந்து Surveying அலுப்பாயிருக்கின்றது என்று கூறுவதைக் கேட்க வியப்பாயிருந்தது. எனது surveying குழுவில் நான்கு பேர் மட்டுமே. அதிலும் ஒராள் பெண். மற்றைய பெண்களைப் போலல்லாது ஆண்களுக்குச் சமமாக நதிஷாவும் பற்றைகள் பள்ளங்களுக்குள் இறங்கி வேலையில் ஈடுபடுவது அவள் மேல் ஒரு மரியாதையை உருவாக்கியிருந்தது. மற்றைய குழுக்களில் பெண்களுக்காகவும் ஆண்களே பற்றைகளுக்குள் இறங்குவதும் அதைச் சில ஆண்கள் வலியப்போய் விரும்பிச் செய்வதும் வேறு விடயம். அப்படியான விடயங்களே கிசுகிசுக்களாக வந்து விரிவுரைகளில் எங்களை விழிப்புடன் வைத்திருந்தன. பெண்களுடன் ஆண்கள் கதைக்கக் கூடிய தருணங்களாக ஆய்வுகூடங்களும் Surveying-மே விளங்கின. பாடசம்பந்தமான உரையாடல்கள்கூட சில வேளைகளில் வாளி வைப்பதாக திரிபடைவதும் உண்டு. எங்களுக்கிடையில் வாளி என்றும் அன்ரி-வாளி என்றும் இரு பிரிவுகள் உருவாகி விட்டிருந்தன. வாளிகள் என்று தங்களை அழைத்துக் கொள்வதனை யாருமே விரும்பியிருக்கவில்லையாயினும் அன்ரி-வாளி என்று தங்களை அழைத்துக் கொள்வோர் அப்படிக் கூறிப் பெருமைப்பட்டுக் கொள்வதையும், மற்றவர்கள் காணாதவிடத்து கள்ளவாளி வைப்பதில் ஈடுபடுவதையும் காணக்கூடியதாக இருந்தது. அதுகூட ஒரு அரசியல் மாதிரித் தான். சொல்வதொன்று செய்வதொன்று. அரசியலில் இதெல்லாம் சகஜம், இல்லையா?

இப்போதெல்லாம் நதீஷாவுடன் கூச்சமில்லாமல் உரையாடுவதற்கு நான் பழகியிருந்தேன். அதற்கு அவள் சிங்களமாயிருந்ததால் எங்களைப் பற்றி விரிவுரை மண்டபங்களில் கிசுகிசுக்கள் வராது என்பதும் ஒரு காரணமாயிருந்திருக்கக் கூடும். அதனுடன் முதல் நாள் சந்திப்பில் ஏற்கனவே இவளுடன் நன்றாகப் பழகியிருந்ததாக தோன்றியது கூட இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது. இப்போது கூட அப்படித் தோன்றினாலும் அதற்கான எந்தவொரு சாத்தியமும் இருக்கவில்லையென்பது தான் வெளிப்படை உண்மை. இவையெல்லாவற்றையும் தவிர்த்துப் பார்த்தால், இப்போதுதான் முதன்முறையாக என்வயதொத்த ஒரு பெண்ணிடம் பழக வேண்டிய சந்தர்ப்பம் உண்டாகியிருக்கின்றது. இவளுடன் கூச்சமில்லாமல் பழகினாலும் ஏனைய பெண்களுடன் அது சிங்களப் பெண்களாயிருந்தாலும் சரி, பழகுவதில் உள்ள இயல்பான கூச்சம் இன்னமும் போகவில்லை என்பதை Explorer Club-இனரால் அழைத்துச் செல்லப்பட்ட மலையேற்றம் (hike) உணர்த்தியது.

அது முதலாண்டு மாணவர்களுக்கான Explorer club -இன் அறிமுகம். அதையொட்டி ஒரு மலையேற்றத்திற்கு ஒழுங்கு செய்திருந்தார்கள். கண்முன்னே விரவித் தெரியும் கந்தானை மலைத்தொடரின் உச்சியில் கால் பதிப்பதற்கான நாள். மனதிற்குள் கொண்டாட்டம். அந்த மலைத்தொடரின் முகட்டுக்குக் கீழேயே முகில்ப்படலங்கள் விளையாடித் திரிவதை கீழேயிருந்து பார்த்திருக்கின்றேன். மலையேறினால் நிச்சயம் அந்த முகில்களை அளைந்து விளையாடலாம். நினைக்கவே உடல் சிலிர்த்தது.

ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது. அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டால் அழகிருக்காது...
பொதுவாக தமிழ்ப் பெண்கள் மலையேற்றத்திற்கு போவதில்லை. இம்முறையும் அப்படியே. ஆனாலும் வழமைக்கு மாறாக பல ஆண்களும் வரமுடியாத நிலையில் இருந்தார்கள். பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்தின் நாடகப் போட்டி அன்று மாலை EOE அரங்கில் நடைபெற இருந்தது. அந்தப் போட்டியில் எமது பிரிவும் (batch) போட்டியிடவிருப்பதனால் பெரும்பாலான மாணவர்களும் மலையேற்றத்திற்கு வரவில்லை. “வாளி வைக்கிறவங்கள் தான் சங்கங்களோட திரியிறவங்கள்” என்கின்ற கருத்து பகிடிவதைக் காலங்களிலேயே திணிக்கப்பட்டிருந்தது. தமிழ் நிகழ்ச்சிகளுக்கும் எனக்கும் வெகுதூரம். அதற்காக கதை, கவிதை, நாடகம் என்றால் என்னவிலை என்று கேட்பதில்லை. ஏதோ அதற்கும் எனக்கும் தொடர்பில்லை. நாய்க்கேன் போர்த்தேங்காய் என்கின்ற நினைப்பு. அவ்வளவே. நாங்கள் தங்களுக்கு ஆதரவு தராமல் மலையேறுகின்றோம் என்று நாடகத்தில் பங்கேற்ற சிலருக்குக் கடுப்பு, எங்களுக்கோ மலையேற்றத்தை விட்டிட்டு இதென்ன கண்டிறியாத நாடகம் என்கின்ற வெறுப்பு.

“நீங்க நல்லா வாளி வையுங்கோடாப்பா” என்று விட்டு நாங்கள் மலையேற்றத்திற்கு கிளம்பி விட்டோம்.

காடுகள் பற்றைகளுக்குள்ளால் முன்னே செல்பவர்கள் வழியேற்படுத்தித்தர நாங்கள் சிறுசிறு குழுக்களாகப் பின் தொடர்ந்தோம். குளவிகள் இருக்கும் சில இடங்களில் மௌனமாய் நகர்ந்தோம். சில மேடுகளை முன்னே சென்றவர்கள் அமைத்துத் தந்த கயிற்றைப் பிடித்துக்கொண்டு ஏறினோம். மிகுந்த களைப்பாய் உணர்ந்தேன். என்னுடன் வந்திருந்த மற்றைய சில நண்பர்களும் களைத்துப் போகவே அங்கிருந்த புற்றரை மீது அமர்ந்து கொண்டோம். ஏறத்தாழ அதுவும் ஒரு போர்ப்பயிற்சிப் பட்டறை போன்றே தோன்றியது. திடீரென அக்காவின் நினைப்பு வந்தது. இதைவிடக் கடுமையான பயிற்சிகள் எல்லாம் அவள் எடுத்திருப்பாள் என்கின்ற எண்ணமே சோர்வைப் போக்கியது. சில சிங்களப் பெண்கள் நாங்கள் களைத்துப்போய்க் குந்தியிருப்பதைப் பார்த்துச் சிரித்தவாறே கடந்து சென்றார்கள்.

“மச்சான்! விசிறிச் சரக்குகள் எங்கள நக்கலாப் பாக்கிறாளவை. எழும்புங்கோடா. வெக்கமடா”
எழுந்து நடக்கத் தொடங்கினோம்.

“ஜெயந்தன்!”

திரும்பினேன். நதீஷா நின்றிருந்தாள்.

“mmmm... have some snacks."
அவளிடமிருந்த ஒரு பையை நீட்டினாள்.

“Thanks"
வாங்கிக் கொண்டேன்.

“ஹே! மெயா தமாய் நதிஷாகே ஜெயந்தன்” (இது தான் நதிஷாவின்ர ஜெயந்தன்)
அவளுடன் வந்த பெண்கள் அவளைக் கலாய்க்க, சிரித்துக் கொண்டே சென்றார்கள்.

“மச்சான் குடுத்து வச்சனியடா... ”
என்னிடமிருந்த பையினைப் பறித்துக் கொண்டார்கள்.

எனக்கு எதையுமே தராமல் தின்று தீர்த்தவர்கள்,

“அப்ப எப்ப மச்சான் கிச் பார்ட்டி?”
என்னையும் கலாய்க்கத் தொடங்கினார்கள்.

'இதை இப்படியே விட்டால் பிறகு லெக்சர் ஹோல் நோட்டீஸ் வரைக்கும் போய்விடுமே' என்கின்ற பயம் வந்தது.

'இவளுக்கேன் இந்தத் தேவையில்லாத வேலை?' நதிஷாவின் மேல் ஆத்திரமாய் வந்தது.

'கதையை உடனேயே அமத்த வேணும்' மூளைக்குள் அலாரமடித்தது.

“இது மச்சான், surveying-இலயும், workshop-இலயும் என்னைக் கொண்டு வேலை வேண்டுறதுக்கெடாப்பா! இவளவையைப் பற்றித் தெரியாதே?” மனதறிந்து பொய் சொன்னேன்.

“நீ சடையுறாய் மச்சான். என்னவோ எனக்கெண்டால் இது நல்லதாய்ப்படேல்ல. சொல்லிப்போட்டன்”

கோபம் கோபமாய் வந்தது.

“என்ன கதைக்கிறாய் நீ? அம்மாண வாற ஆத்திரத்திற்கு. உனக்கு என்னைப் பற்றி எல்லாக் கதையும் தெரியும். பிறகுமேன் இப்பிடிக் கதைக்கிறாய்?”
அறை நண்பன் தீபனை அதட்டினேன். அவனுக்கு அப்பாவைப்பற்றியும் அக்காவைப் பற்றியும் தெரிந்திருந்தது.

“சரிசரி விடடாப்பா! ஏன் இப்ப கோபப்படுகிறாய்? விசிறிப் பெட்டையள் சோஷலாத்தான் பழகுவாளவை. நாங்க சும்மாதான் உன்னைக் கடுப்பேத்தின்னாங்கள். சரிசரி வெளிக்கிடு. மற்றாக்களெல்லாம் கனதூரம் போய்ற்றாங்கள்”

விரைவாக நடக்க ஆரம்பித்தோம்.

மனது கொந்தளித்துக் கொண்டிருந்தது. அமைதியாய் சலனப்படாதிருந்த மனம் இந்தவொரு சின்னச் சம்பவத்தால் குழம்பிக் கொண்டிருந்தது. இவ்வளவு நாளும் ஒருத்தரும் எந்தவொரு பெட்டையையும் வைச்சு என்னைக் கடிச்சதில்லை. இப்ப இவளால கடிவாங்க வேண்டிக்கிடக்கே. அவமானமாய் உணர்ந்தேன். சுற்றிவர ஒரே புகார் மூட்டமாய் இருந்தது. இந்தப் புகார் மூட்டம் தான் கீழேயிருந்து பார்க்கையில் அழகான முகில்க் கூட்டங்களாய்த் தெரிகின்றன. எந்த முகில் கூட்டங்களைத் தொட்டு அனுபவிக்க வேண்டுமென்று ஆவல் பட்டிருந்தேனோ, அது இப்போது என்னைத் தழுவிக் கொண்டு இருந்தாலும் அந்த சிலிர்ப்புகளையும் சில்லிடல்களையும் பூரணமாய் அனுபவிக்க முடியாதவாறு இந்தவொரு சின்னச் சம்பவம் என்னைப் பாதித்து விட்டிருக்கிறது. எப்படியானவொரு முட்டாள் நான்!

இயல்பாய் எதேச்சையாய் நட்புணர்வில் தரப்பட்ட ஒரு உணவுப் பண்டத்திற்காய் இப்படியா குழம்புவது? கடைக்கண்ணால் அவளை நோக்கினேன். எந்தவொரு விகல்பமுமின்றி தன் தோழிகளுடன் அவள் சிரித்துப் பேசியவாறே அந்த ரம்மியமான சூழலை அனுபவித்துக் கொண்டிருந்தாள். அவளிடம் எந்தக் கல்மிஷமும் கிடையாது என்பதை அவளது அந்த இயல்பான சிரிப்பும் முகபாவனையும் அடித்துச் சொல்லிற்று. நான்தான் சும்மா மற்றவர்களின் பேச்சைக்கேட்டுக் குழம்பியிருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். இப்போது மனம் இலேசாகியிருந்தது.

கூதல்காற்று உடலைத் தழுவியது. கீழிருந்து பார்க்கையில் ஏற்பட்டிருந்த முகில்களின் மீதான பிரியமும் பிரமிப்பும் இப்போது குறைந்து விட்டிருந்தன. பஞ்சுப் பொதி போல் அள்ளி விளையாடலாம் என எண்ணியிருந்ததற்கு மாறாக உண்மையில் அவை வெறும் புகார்க் கூட்டங்களே என்பதும், ஆயினும் துாரத்துப் பார்வைக்கே அவை அழகாகத் தோன்றுகின்றன என்பதும் தெரிந்தது. எமது வாழ்வில் பெரும்பாலான விடயங்கள் அப்படித்தானே! தூரத்தில் பார்த்து நாம் மயங்குபவற்றின் உண்மைச் சொரூபங்கள் அவற்றை அண்மித்து விட்டதன் பின் தானே தெரிகின்றன அல்லது புரிகின்றன.

5 comments:

  1. ஜெயந்தன்,

    நான் நதியா ஸாரி நதிஷா பேசுகிறேன்,
    என்மீது ஆசை அதிகம் வைத்து அதை சொல்லாமால் மனதை அடக்கி வைத்து...!!! உன் படிப்பை கோட்டை விட்டு பின் வேர் என நீயிருந்தாய், இலை என நான் இருந்தேன் என்று புலம்பி கடையில் முரளி மாதிரி ஏதாவது வந்து தொலைக்க போது....!!!!! நேரமிருந்தால் வந்து பார், அதற்கு முதல் சேரனின் படங்களை பார்த்துவிட்டு வருவது நல்லது.

    பல்கலைக்கழகம் என்னை அதிக உயிர் கொலை செய்த myrein manro அறிவித்தது என்க்கு ஒருவிதத்தில் பெருமையாக இருந்தாலும், 25 வருடங்கள் என்னை சந்திக்க முன் நன்றாக வாழ்ந்த உயிர் என்னிடம் கொண்ட மையல் காரணமாக பலவற்றை இழ்ந்து
    இறுதியில் இதயம் பட cliamax போல தன்னை மாய்த்து கொள்வ்து சங்கடமாக உள்ளது.



    பின் குறிப்பு: உன்னிடன் நான் காட்டும் மனிதாபிமான காரணமாகத்தான் உனது தாய் மொழியின் உனக்கு மடல் அனுப்புகிறேன், இதை பிறகு காதல் கூதல் என்று குழப்பிக்க கூடாது, என்னடா விசிறி தமிழ் எழுதுகிறதே என எனது புத்திசாலித்தனத்தை மெச்சினால் ஸாரி.....!!! நான் சிங்களத்தில் தட்டச்சு செய்து பின் இணையத்தில் Paste பண்ணிவுடன் அது தமிழுக்கு மாறி விடுகிறது அடுத்த முறை Na'vi Language இல் கடிதம் அனுப்புகிறேன்.
    http://www.learnnavi.org/





    என்னை தொடபு கொள்ள வேண்டிய email:nathisha@easy.com


    நட்புடன் நதிஷா..

    ReplyDelete
  2. வாளி என்பது ஒரு உளவியல் பிரச்சினை. சிலரால் பெண்களுடன் ஒரு வரைமுறையுடன் சகஜமாகப் பழகமுடிவதில்லை. அவர்கள் அதன் வெறுப்பாலோ என்னவோ இலகுவாக ‘வாளி’ வைக்கிறான் என்று ஒதுக்கி வைத்துவிடுவார்கள். என்னதான் மற்ற நண்பர்களுடன் நின்று அவர்களை ‘வாளி’ என்று நக்கல் அடித்தாலும் மனதுக்குள் ஒரு ஏக்கம் இருந்துகொண்டே இருக்கும். எம்முடன் எவரும் கதைக்கவில்லையே என்று.

    நன்றாக உள்ளது...தொடருங்கள்..!!!

    ReplyDelete
  3. வலசுவின் சார்பாக நதிஷாவின் ஈமெயிலுக்கு கடிதம் போட்டேன் ஒரு மறு மொழியையும் காணோம்....!!! நதிஷா நீ நிஜமா அல்லது கற்பனை பாத்திரமா(வாளி)....???? அல்லது வலசுவிற்கு மட்டுமே தெரியும் சிங்களத்து சின்ன குயிலா..???

    எது எப்படி ஆயினும், உன்னை மயக்கும் மந்திரத்தை சொல்லு மெயிலே(nathisha@easy.com) ஸாரி மயிலே...!!!!!


    இங்ஙனம்,
    எனது பெயர் போடக்கூட விருப்பமில்லை, உன்னை அறிந்தால் தான் எனது பெயருக்கு முழு அர்த்தம் கிடைக்கும் அதுவரை.....!!!

    ReplyDelete
  4. //முகில்களை, கீழிருந்து மேல் பார்க்கும் போதும் மட்டுமல்ல, முகில்களின் மேலிருந்து கீழ் பார்க்கும் போதும், அதே பிரமிப்புத்தானே?//

    இப்படி வெவ்வேறு பார்வைகளும், கற்பனைகளும், இரசனைகளும் இல்லாது விட்டால்.......

    கற்பனை செய்து பார்க்கவே முடியாதில்லையா எம் வாழ்க்கையை இப்பூவுலகில்!!!!

    அதற்காகத்தானோ என்னமோ, எண்ணங்கள், கருத்துகள், எல்லாமே மாறும் உலகாக இது இருக்கிறது.

    ஆனால், சிலவற்றை மட்டும்தான், எவ்வளவு மாறினாலும் எந்த வயதிலும் ரசிக்க முடிகிறது! வாளியை சொன்னேன்.

    ReplyDelete
  5. வேலணை வலசு, நல்லாத் தான் எழுதிறியள்..உங்கடை கம்பசு புதினக்களை.. உண்மையிலேயே சோக்கானா அனுப்வப் பதிவு அது.. பேராதானைக் கம்பஸும்,உந்த அக்பர் கொஸ்ரலிலை எங்கடை பெடியள் அடிக்கிற பம்பலுகளும், குறிஞிசுக் குமரனும், ஆட்ஸ் faculty தியேட்டரும் குறிஞ்சிக்குமரனும் எல்லாம் பேராதனைக்கே வந்தமைந்த கொடைகள்..அதை அனுபவிக்க போன பிறப்பிலை புண்ணியம் செய்திருக்கோணும்.சொன்னாப்போலை எங்களை விட கனவயசு சீனியர் போல கிடக்குது

    ReplyDelete