விமானத்தில் ஏறுவதற்கு முன்னராக boarding gate சோதனையைக் கடந்து boarding pass பதிந்ததன் பின்னர் அறையினுள் காத்திருக்கையில், அலைபேசி அதிர்ந்தது.
"It's amazing how quickly time moves. Yesterday I thought I loved her, but now I don't care about her at all." - Little Manhattan (2005).
குறுஞ்செய்தியை வாசித்ததும் சிரிப்பு வந்தது. “What a love!"
காதல் - புனிதமானதா? இல்லை அசிங்கமானதா?
காதல் இயற்கையானது தான் என்பதை ஏற்றுக்கொண்டாலும் அதுவொரு புதிராகவே அவனுக்குப் பட்டது. கவர்ச்சியான கன்னிகள் கணநேரங்களுக்குச் சலனப்படச் செய்தாலும் அதையெல்லாம் காதல் என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மற்றவர்கள் சொல்கின்ற அனுபவங்களையோ அல்லது அந்தக்கால இந்திரனில் தொடங்கி இந்தக்காலத்து எந்திரன் வரை கூறப்படும் காதல்களையோ அவனால் புரிந்த கொள்ள முடியவில்லை. உயிரியின் அடிப்படை இயல்பான இனப்பெருக்கத்திற்கான ஓர் ஏற்பாடுதான் இந்தக்காதலின் அடிநாதமாக இருக்கமுடியும். எந்தவொரு ஆணும் சரி பெண்ணும் சரி வயதுமுதிர்ந்த எதிர்ப்பாலினைக் காதலித்ததாக வரலாறு கிடையாதே. இனத்தொடர்ச்சியின் அடிப்படையான காமமே நாகரிகமடைந்து காதலாக மாறியிருக்கலாம். ஆயினும் காதலுக்காக உயிரை விட்டவர்களைப் பார்க்கையில் குழப்பமாய் இருக்கிறது.
“காதல் என்ற ஒன்று அது கடவுள் போல. உணரத்தானே முடியும் சொல்ல வார்த்தை இல்லை” திரையிசைப்பாடல் ஞாபகத்தில் வந்து போனது.
காதலை உணராத வரைக்கும் அதைப்பற்றி சிந்தித்து நேரத்தை விரயமாக்குவதில் அர்த்தமில்லை என்பது புரிகையில், பயணிகளை விமானத்திற்குள் அனுமதிக்கத் தொடங்கியிருந்தார்கள்.
விமானப்பணிப்பெண்ணின் வரவேற்பினை ஏற்பதற்கு முன்பாக அங்கே வைக்கப்பட்டிருந்த அன்றைய ஆங்கிலப் பத்திரிகைகளில் ஒன்றை எடுத்துக் கொண்டே விமானப்பணிப்பெண்ணின் செயற்கைத்தனமான புன்னகையுடனான வரவேற்பினை அலட்சியப்படுத்தி உள்நுழைந்து தனக்கான ஆசனத்தைப் பார்த்தான் 56C. அதில் சென்றமர்ந்தான். Check In counter - இல் ஜன்னலோர இருக்கையைக் கேட்கையில், அனைத்து ஜன்னலோர இருக்கைகளும் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறி அவனை எரிச்சல் படுத்தியிருந்தார்கள். ஆயினும் அந்தக் கரையோரத்தின் மூன்று இருக்கைகளிலும் அவனைத்தவிர வேறு யாரேனும் வந்தமர்ந்ததாகத் தெரியாததால் அருகே வந்த விமானப் பணியாளரிடம் சொல்லிவிட்டு ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டான். விமானம் பறப்படுவதற்கான அறிகுறிகளைக் காணவில்லை. இருக்கையின் முன்னேயிருந்த காணொலியிலும் படம் பார்ப்பதற்கான சமிக்ஞைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கவி்ல்லை. கொண்டுவந்திருந்த தினசரியைப் பிரட்டினான்.
“மாயை என்றால் என்ன கிருஷ்ணா?”
நெடுநாளாக தனக்கு புரியாதிருந்த புதிரினை அந்த நாராயணனிடம் வினவினார் நாரதர்.
முறுவலித்தான் மாதவன். இன்றைக்கும் தனக்குப் பரந்தாமன் பதில் தரப்போவதில்லை என்பதைப் புரிந்து கொண்ட நாரதருக்கு எரிச்சலாய் வந்தது.
அறிதுயிலின் போதே அனைத்தையும் அறிந்து கொண்டிருக்கின்ற அந்த அனந்தகிருஷ்ணனுக்குத் தெரியாத நாரதரின் மனப் புகைச்சல்?
“அலுப்பாயிருக்கிறது. வா! ஒருமுறை பூலோகம் சென்று வருவோம்”
நாரதரையும் தன்னுடன் அழைததுக் கொண்டு அப்போதே மண்ணுலகினை அடைந்தான் அந்த ஆதிகேசவன்.
அதிசயமாய் அவர்கள் பாலை நிலத்தினை அடைந்திருந்தார்கள். பயணக் களைப்பினைக் காட்டாது நாரதரும் நடந்தார். தொண்டை வரண்டு நாவடைத்தது.
“நாரதா! தாகமாயிருக்கிறது. தாகசாந்தி செய்ய வேண்டும். எங்காவது நீர்நிலைகள் இருக்கின்றதா என்று தேடிப்பார்த்து எனக்கும் கொண்டு வருவாயாக.”
கூறிவிட்டு அங்கே நின்ற பட்டுப்போன ஒரேயொரு மரத்தின் நிழலில் அமர்ந்து கொண்டான் கிருஷ்ணன்.
நீர்நிலைகள் நாடி நாரதரும் நாயாய் அலைந்தார். கானல் நீர்களைக் கண்டுகண்டு ஏமாந்தார். விரக்தியின் விளிம்புக்கு வந்தவரின் கவனத்தை எங்கோ துரத்தில் கேட்ட சத்தம் ஈர்த்தது. இது நீரோடையின் சலசலப்புச் சத்தமே. சத்தம் வந்த திக்கை நோக்கி நாரதர் நடக்கலானார்.
பெருமளவிலான வணிகச்செய்திகளையே தாங்கிருந்த செய்தித்தாள்களை வேகமாகப் பிரட்டலானான் அவன். சில இலக்கங்களுடன் கூடிய சதுரக்கட்டங்கள் கண்கைளை ஈர்த்தன. அட சுடோக்கு! தன் சட்டைப்பையிலிருந்த பேனாவினை எடுக்கையில் விமனப்பணிப்பெண் ஒருவர் இவனது இருக்கைக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த இருக்கையினை சுட்டிக்காட்டி துாரத்தில் உள்ள ஒருவருடன் உரையாடுவது தெரிந்தது. ஜன்னலோர இருக்கையினின்றும் தன்னை எழச்சொல்லப் போகின்றார்களே என்கின்ற எரிச்சல் உண்டானது. நள்ளிரவு பன்னிரெண்டு மணி கழித்துப் புறப்படும் அந்த விமானம் தன் முடிவிடத்தினை அடைகையில் அங்கேயும் நள்ளிரவு தாண்டி ஓரிரு மணித்துளிகளே கடந்திருக்கும் என்பதால் ஜன்னலோரத்தில் அமர்வதால் எந்தவொரு அனுகூலங்களும் இல்லையென்பது தெரிந்திருந்தாலும் ஏனோ அவனது மனம் அந்த இருக்கையினையே விரும்பிக் கொண்டிருந்தது. ஜீன்ஸ் சேர்ட் அணிந்தவொரு இளம்பெண் தன் இருக்கையினை விமானப்பணிப்பெண்ணிடம் சரிபார்த்துவிட்டு அவனது பக்கத்திருக்கையில் வந்து அமர்ந்தாள். நல்லவேளை! இந்த ஜன்னலோர இருக்கைக்கு உரியவர் அவளில்லை. அவன் சந்தோஷப்பட்டான். பத்திரிகையில் சுடோக்கினை நிரப்புவதில் ஈடுபடலானான்.
“Oh! Sudoku?"
வீணை நாதம் மீட்ட செவிகள் குளிர்ந்தன அவனுக்கு.
திரும்பினான். அவள்!
அண்ணலும் நோக்க அவளும் நோக்க, அங்கே கம்பர் இல்லாத குறை!
நடுஉச்சியில்லாமல் இடப்பக்கம் சற்றே சரித்துக் கன்னஉச்சியிட்டுப் பின் வாரிவிட்டிருந்த கூந்தல் பளபளத்துக் கொண்டிருந்தது.
அவனைப்பார்த்துச் சிரித்தாள். இல்லையில்லை சிணுங்கினாள், இல்லையில்லை சில்லறையாய்க் கொட்டினாள். அவளது கன்னக்குழிக்குள் அவன் விழுந்து கொண்டிருந்தான்.
அடச்சே! என்னவிது. எப்படிச் சொல்வது. இப்படியொரு மயக்கும் சிரிப்பினை எங்குமே பார்த்ததில்லையே. அவன் மயங்கிக்கொண்டிருப்பதாய் உள்ளுணர்வு எச்சரிக்கை விடுக்கவே மயக்கத்தை உதறினான். அவளை உற்றுப் பார்த்தான். அவள் ஒரு தமிழ் அல்லது சிங்களப் பெண்ணாகவே இருக்கவேண்டும் என்று அவளுடைய தோற்றம் சொல்லியது. சிங்கையிலிருந்து செல்வதென்றாலும் அங்கங்களைக் கொஞ்சமேனும் காட்டாமல் மூடியணிந்திருந்த ஆடைகள் அவளது பண்பாட்டைப் பறைசாற்றின. அவள் ஒன்றும் பெரிய அழகியென்று சொல்வதற்கில்லை. ஆனாலும் ஏதோவொன்று அவளிடம் அவனை வசீகரித்துக் கொண்டிருந்தது.
“How to do sudoku?”
சுடோக்கு நிரப்புகையில் வேறு யாரேனும் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால் அவனுக்கு எரிச்சல் வந்திருக்கும். ஏனோ தெரியவில்லை அவளது கேள்வி அவனுக்கு சந்தோஷத்தையே கொடுத்தது.
“We should use the numbers only from 0 to 9 and each of the small 3x3 sqare can have one number only once....mmmm and also in each row and each column one number can come only once. By the by did you ever try it?”
“No no... I just heared about it that it's good for the brain, but I never tried it.“
”Oh! then do you want to try this one, but you see, they mentioned it's the hard one."
- 'டேய்! அடங்குடா' உள்மனம் எச்சரித்தது.
“No thanks. you carry on.."
புன்னகைத்தவாறே அவள் தன் இருக்கைப் பட்டியை அணிந்து கொள்ள இவனுக்குள் பூகம்பம் உண்டானது. பட்டாம்பூச்சியின் சிறகடிப்பு ஒரு பூகம்பத்தினை ஏற்படுத்தும் என்கின்ற கோயாஸ் கோட்பாடு அவனுக்குள் உண்மையாகிக்கொண்டிருந்தது (butterfly effect).
அவளுடன் உரையாடலைத் தொடர விரும்பினாலும், எப்படித் தொடர்வதென்று தெரியாமல் திண்டாடினான். வலவனின் (வலவன் - pilot) வேண்டுகோளுக்கிணங்க எற்கனவே அலைபேசியினை அணைத்துவிட்டிருப்பதால் நண்பர்களிடம் அறிவுரை பெறலாம் எனவெழுந்த நினைப்பிலும் மண் விழுந்தது. எப்படி அவளைத் தன்பக்கம் ஈர்க்கலாம்? அவனுக்குள் சிந்தனைகள் வேர்விட ஆரம்பித்தன.
கையில் வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைகின்றானோ என்றே அவனுக்குத் தோன்றியது? அவளுக்கும் சுடோக்கில் ஆர்வம் இருப்பதால் அதை வைத்தே அவளை வசீகரிக்கலாம் என்றது ஒருமனது. ஓரக்கண்ணால் அவளை அவதானித்தவாறே சுடோக்கின் கட்டங்களை நிரப்பிக் கொண்டிருந்தவன் ஓரிடத்தில் தடுமாறினான். இனி trial & error முறையிலேயே எஞ்சியிருக்கும் கட்டங்களை நிரப்பலாம் என்பது புரிந்தது. விரைவாகச் செய்துமுடிக்க வேண்டிய அங்கலாய்ப்பில் முதலாவது எடுகோள் தப்பாகிப் போனது இறுதி இருகட்டங்களையும் நிரப்ப முயற்சிக்கையில்தான் புரிந்தது. அவளும் இவன் நிரப்புவதையே பார்த்துக் கொண்டிருப்பதால் தான்விட்ட தவறினை அவள் அறிந்து தன் மீதான impression - இனைக் குறைத்துக்கொள்வதை அவன் விரும்பவில்லை. தவறே விடாதது போல் எஞ்சிய இருகட்டங்களையும் நிரப்பிவிட்டு,
பெருமிதமாக அவளைப் பார்த்தான்.
அட! கண்ணாலும் இப்படியெல்லாம் பேசமுடியுமா?. வியப்பினைக் காட்டிப் பாராட்டுவதாயும் இன்னும் என்னென்னவெல்லாமாகவும் அவள் விழிகள் நர்த்தனமாடின.
இது அளாப்பல் ஆட்டம் என்றெழுந்த எண்ணத்தினை All is fair in love and war என்கின்ற பிரபல்யமான ஆங்கில பழமொழியினைச் சொல்லி அடக்கிக் கொண்டான்.
“Wow! you did even the very hard one in a short period. you are great!"
அவள் பாராட்டுக்கள் மேகங்களைத் தாண்டிப்பறந்து கொண்டிருந்த விமானத்தினின்றும் வெளியே வந்து மேகங்களில் அவளும் அவனும் மட்டுமே ஓடி விளையாடுவதைப் போன்ற கிறக்கத்தைத் தந்தன.
“So, you are from Singapore or...?"
"No no.. I'm from SriLanka"
"Then are you working here or studying?"
அவளுக்கு 24 அல்லது 25 வயதிருக்கும் என அவன் அனுமானித்திருந்தான்.
”No no. I just visited here for my mum"
"Oh! then your mum is working here"
"No no. She had been admitted in the hospital for a treatment"
"ப்ச், what happenend to her? anything serious?"
"No no. Now she is OK. She had some cardiac problems. So my father took her here, then I came from Australia to look after her."
"So you are working there in Australia?"
"No no. Just few months before only I completed my management degree there."
"So as you are going to sriLanka, are you going to work there?"
"Oh No no. I got a job in Dubai, I just want to spend some days in my hometown with my relatives and then I'll move to Dubai"
என்னடாப்பா எல்லாக் கேள்விகளுக்கும் எடுத்தவுடன் No no என்கின்றாளே என்கின்ற எண்ணம் அவனுக்குள் எழுந்தாலும் தான் அறிய வேண்டிய தகவல்கள் தானாகவே வந்தடைந்து கொண்டிருப்பது அவனுக்குப் பரவசத்தைத் தந்தது.
”So, where is your hometown?"
”Negombo. By the by I've forgot to ask your name"
"My name? oh! my name is...., but my friends call me Nara."
"Oh! Are you a Sinhala?"
"No no, I'm Tamil, and you?"
"Oh I see, but your nick name seems to be a Sihalala name. Right?...mmmm me...? mmmm.... how to say? actually my mother is a burger and father is a Sinhalese, but I know even Tamil a little bit."
"Oh! how do you know Tamil."
"Many tamil friends studied with me in the International school. So I know Tamil little."
இதற்கும் மேலே எப்படித் தொடர்வதென்று சிந்தித்தான்.
“Nara! if you don't mind may I know why do you have this nick name?"
"mmm... actually in my childhood, in a drama I acted as Naradar, so then my childhood friends called me Naradar and then... later on it becomes Nara, By the by may I know your name."
"So you are an actor? WOW!... mmm... my name? like your friends, my friends call me as Krrish, but I'm not an actress,hahahaa ok? rather I'm a fan of the Hindi actor Krrish and I had a very good collection of his photos. So my friends called me so..".
தோளைக் குலுக்கினாள், உதிர்ந்தான் அவன்.
இதற்கு மேலும் எப்படித் தொடர்வதென்று தெரியாமல் தடுமாறினான். ஆனாலும் அவளுடனான உரையாடலைத் தொடரவே விரும்பினான். ஆயினும் விமானச்சிப்பந்திகள் உணவினைப் பரிமாற ஆரம்பித்திருந்ததால் இருவரின் கவனமும் உணவின் மேல் சென்றது.
உணவினைமுடித்துவிட்டுத் தனக்கு உறக்கம் வருவதாய்ச் சொல்லிவிட்டு அவள் படுத்துக் கொண்டள். தன் உறக்கம் தொலைத்தான் இவன்.
“எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளா?....”
எப்படி இந்த மாற்றம் தனக்குள் உண்டானது?. இதுதான் அந்தக் காதலா? நெஞ்சோடு காதல் வருமென்று நேற்றுவரை நம்பாதிருந்தவன் குழம்பினான். எப்படி இவளிடம் தன்மனம் நாய்க்குட்டியாய் ஓடிச் செல்கிறது? இது காதலா? அல்லது காமத்தின் மாயையா? காமத்தின் மயக்கமாயிருப்பின் அதற்கான எந்தவிதமான தூண்டல்களும் தன்னுள் எழவில்லையே. ஏன்? எனச்சிந்தித்தான். அப்படியானால் இது காதல்தானா?
“காதல் என்ற சொல்லில் காமம் கொஞ்சம் உண்டு இடையில் சின்னக் கோடு அதுதான் வேறுபாடு...”
பாடல்வரிகள் நினைவில் ஓடின. இவள் மேல் தனக்கு காமமும் உண்டாகுமா? உறங்கிக்கொண்டிருக்கும் அவளைப் பார்த்தான்.
“ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ?...”
பாடல் இவளுக்காகவே எழுதப்பட்டது போல் அவனுக்குள் தோன்றிற்று.
“காதல் ஒற்றைக் கண்ணில் காமம் ஒற்றைக் கண்ணில் ரெண்டு கண்ணால் உன்னைப் பார்க்கிறேன்...”
எல்லாக் காதல் பாடல்களும் பின்னணிகளும் மனதிற்குள் ஓடின.
“மனதை அலைபாயவிடாதே! அப்புறம் மீள முடியாது. எதையுமே முளையிலேயே கிள்ளிவிடவேண்டும்” என்கின்ற எச்சரிக்கைச் செய்தியினை ஒரு மனம் திரும்பத்திரும்ப அனுப்பிக் கொண்டிருந்தது. இது காதலெனின் தலைக்கு மேலே மின்குமிழ் (bulb) ஒளிர வேண்டுமே. மணிச்சத்தம் கேட்கவேண்டுமே. அப்படிக் கேட்குமானால் இது காதல்தான் என்பதை உறுதி செய்து கொள்ள முடியுமென அவன் நம்பினான். ஆயினும் இரவு விளக்குகளைத் தவிர அனைத்து மின்விளக்குகளையும் அணைத்துவிட்டுப் பறந்து கொண்டிருக்கும் விமானத்திற்குள் இவையெல்லாம் சாத்தியமில்லை என்பது அவனுக்குப் புரியாமலில்லை. எனவே அவன் எச்சரித்த மனதினைப் புறக்கணிக்கத் தொடங்கினான்.
“விழாமலே இருக்க முடியுமா? விழுந்து விட்டேன் காதல் வலையிலே...”
பாடலில் மனம் லயித்தது.
உறக்கம் இல்லா விழித்தபடி பார்த்திருக்கும் கனவுகளில் மூழ்கினான். சட்டென்று விமானம் மெதுவாய்க் குலுங்கியது போன்று உணர்ந்தான் 'டிங்'- என்று ஒருவகை மணியொலி எழும்பியது. அதைத் தொடர்ந்து விமானத்தினுள்ளும் மின்விளக்குகள் ஒளிரத் தொடங்கின.
“Please pasten your seat belts” என்கின்ற அறிவிப்பு ஒலிபரப்பப்பட்டது. விமானம் செல்லும் பாதையில் காற்றுப் பொட்டலங்கள் (Air pockets) இருப்பதையும் அதனால்தான் இந்த எச்சரிக்கை அறிவிப்புக்கள் என்பதையும் புரிந்து கொண்டான்.
இப்போது அவன் மனம் மிகவும் சந்தோஷமாகவிருந்தது. இது காதல்தான் என்பதில் துளியளவிலேனும் சந்தேகம் எழவில்லை. அவளும் எழுந்து விட்டிருப்பது தெரிந்தது.
ஒரு பெண் உண்மையிலேயே அழகிதானா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவள் நித்திரையால் எழுந்தவுடன்தான் தெரிந்து கொள்ள முடியும். அவளையே உற்றுப் பார்த்தான். புன்னகைத்தாள். கைகளை நீட்டி சோம்பல் முறிக்கையில் இலேசாக உரசுப்பட அவனுக்குள் மின்சாரம் பாய்ந்தது.
“கண்கள் படாமல் கைகள் தொடாமல் காதல் வருவதில்லை....”
அவளிடம் அவளது மின்னஞ்சல் முகவரியினைப் பெற்றுக் கொண்டான். அவள் மீண்டும் உறக்கத்திற்குச் செல்ல, விமானத்திலிருந்து இறங்கியதும் தன்காதலை அவளிடம் தெரிவித்துவிடவேண்டுமென்ற முடிவுடன் கண்ணயர்ந்தான்.
“மன்மதலீலையை வென்றார் உண்டோ...?”
ஆற்றங்கரையையடைந்த நாரதர் தண்ணீர் பருகிவிட்டு கிருஷ்ணனுக்கும் எடுத்துக் கொண்டு எழுந்ததும் அப்படியே திகைத்துப் போய்விட்டார். ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை என ஏராளம் அப்சரஸ்களைப் பார்த்தும் சஞ்சலப்பட்டிராத மனத்திற்குள் பூமழை பொழிந்தது. சன்னியாசியாய் தேச சஞ்சாரியாய்த் திரிந்த கலகக்காரர் சம்சாரியானார். நாட்கள் வருடங்களாகி உருண்டோடுவதை அதிகரித்து வரும் மழலைச் செல்வங்கள் உணர்த்தின.
என்றுமில்லாதவாறு ஒரு மாரிகாலமும் வந்தது. அடைமழை. ஆறு பெருகிப் பெருக்கெடுத்து ஊருக்குள் நுழைந்தது. ஆழிப்பேரலை போன்று இது ஆற்றுப் பேரலை. உற்ற மனையாளையும் பெற்ற குழந்தைகளையும் ஆற்று வெள்ளத்திற்குப் பறிகொடுத்துவிட்டு தேற்றுவாரின்றி தேம்பியழுகையில்தான் நாராயணனின் நினைவு வந்தது. வந்த வேலை மறந்து எங்கெங்கோ அலைந்து எதிலோவெல்லாம் மனதைப் பறிகொடுத்து மீண்டும் ஆரம்ப்பப் புள்ளிக்கே திரும்பியிருந்த நாரதர் தன்னை நொந்தவாறே வந்த வழியே நடந்தார்.
அங்கே அந்த கோபாலன் இவருக்காய்க் காத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவன் காலடியில் வீழ்ந்து கதறப் போனவரை,
“தண்ணீர் எடுத்துவர இவ்வளவு நேரமா? ஏன் அருகில் எங்கேனும் ஆறுகள் இருக்கவில்லையா?”
கோவிந்தனின் கேள்விகளைக் கேட்ட நாரதருக்குள் மின்னலடித்தது. அப்படியானால் இதுவரையில் தான் அனுபவித்தவையெல்லாம்???????
பக்தனின் நெடுநாளைய சந்தேகத்தைத் தீர்த்துவிட்ட சந்தோஷத்தில் புன்னகைத்தான் மாயவன்.
பயணிகள் யாவரும் வெளியேறியபின் விமானத்தினைத் துப்பரவு செய்ய வந்த பணியாளன் இருக்கை 56A யினை அடைந்தான். கீழே ஒரு காகிதத்துண்டு கசக்கி வீசப்பட்டிருந்தது. அதை எடுத்துப் பிரித்துப் படித்தான். kirrish.lanka@gmail.com
காதலுக்காக உயிரை விட்டவர்களைப் பார்க்கையில் குழப்பமாய் இருக்கிறது...........
ReplyDeleteஇவர்கள், எதற்காக காதலுக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்தார்கள்???
மனோதத்துவவியலாளர்களின் கருத்துப்படி, “Denial people/immature people".
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
கனவை நிஜம் என்று நம்பி விட்டவர்களா?
எல்லாக் காதலர்களின் சாபத்திற்கும் உள்ளாகப் போகிறீர்கள்!.ஜாக்கிரதை!!!!!!