Thursday, July 16, 2009

பேய்களும், பேயர்களும், பேய்க்காட்டல்களும் - II

பேய்களும் பேயர்களும் பேய்க்காட்டல்களும் -இனை வாசித்த பல நண்பர்கள் facebook மூலமாகவும், மின்மடல்கள் மூலமாகவும் சில கேள்விகளையும் தங்களின் கருத்துக்களையும் எழுப்பியிருந்தனர். நேரமின்மை காரணமாக அவர்களுக்கான எனது பதில்களை உடனடியாகத்தர முடியவில்லை. சற்றுமுன்னர் அழைப்பினை ஏற்படுத்தியிருந்த நண்பன் ஒருவனின் நினைவூட்டலால் மீண்டும் பேய்க்காட்ட(?) வேண்டிய நிலை.

சிவபுராணத்தில் “கல்லாய் மனிதராய்ப் பேயாய் கணங்களாய்...” என்று வருவதாகவும் அந்தக்காலத்திலேயே பேய்கள் பற்றிய பிரச்சனை இருந்திருக்கவேண்டும் என்றும், மேலும் சமயபுராணங்கள் தவறான வழியில் மனிதர்களை நடத்துவதாகத் தான் கேள்விப்படவில்லையெனவும் கூறி இதற்கான எனது பதில் என்னவென ஒரு நண்பன் கேட்டிருந்தான். மேலும் பேய்களின் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்துபவர்களைப் பற்றியும், சிலருக்கு ஏற்படும் உளவியல் நெருக்கீடுகளின் விளைவுகளை பேய்கள் பீடித்ததாய்ச் சொல்வது பற்றிய தகவல்களையும் அவன் குறிப்பிட்டிருந்தான். இன்னொருவன் பேய்கள் இருப்பது உண்மையெனவும் அதற்கான ஆதாரங்கள் எனச் சில தகவல்களையும் தந்திருந்தான். தகவல்கள் எல்லாம் எப்போதுமே உண்மையாயிருப்பதில்லை. மேலும் அவையெல்லாவற்றையும் இங்கே குறிப்பிடுவதென்றால் அதுவே ஒரு பதிவாகிவிடும்.

யாருடையதேனும் நம்பிக்கைகளைக் கேலி செய்வதிலோ அல்லது மதங்களைக் கிண்டலடிப்பதிலோ எனக்கென்றும் ஆர்வமில்லை. ஆயினும் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டிய கடப்பாடு எனக்கு இருப்பதாக நான் கருதுவதால் இந்தப்பதிவு.

சைவசமயத்தின் முழுமுதற்கடவுளான சிவனின் வசிப்பிடமாக புராணங்களில் கைலாயமலை குறிப்பிடப்படுகிறது. இப்போது சாதாரண பயணிகளே கைலைக்குச் சென்றுவரக் கூடியதாக இருக்கையில் சிவனும் அவர்தம் பரிவாரங்களும் எங்கே இடம்பெயர்ந்து விட்டார்கள்? அண்மையில் பனிலிங்கம் கூட சில 'பெரிய' மனிதர்களின் கைவரிசையே என்பதை ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. மேலும் ஐயப்பனுக்கு மாலைபோட்டு கடும் விரதம் இருந்து சென்று தரிசிக்கும் மகரஜோதி கூட பேய்க்காட்டலே என ஆதாரத்துடன் ஊடகங்கள் வெளிப்படுத்தியிருந்தன. ஊழிக்காலத்தில் அசுரன் ஒருவன் பூமியைப் பாய்ப்போல்ச் சுருட்டிக்கொண்டுபோய் கடலுக்கு அடியில் ஒளிந்து கொண்டான் என்றும் பின், மச்ச அவதாரமெடுத்து திருமால் மீண்டும் பூமியை மீட்டார் என்றும் இந்துமத புராணங்கள் கூறுகின்றன. பூமியை எப்படி பாய்போல் சுருட்டுவது? பின் எப்படி அதைக் கடலுக்குள் கொண்டுசென்று ஒளிப்பது? இந்துமத புராணங்களில் காணப்படும் பேய்க்காட்டல்களைப் பற்றி அறிவதற்கு பெரியாரின் நூல்களை வாசிப்பது மிகவும் பயனுள்ளதாக அமையும்.

கிறிஸ்துவ மதத்தை எடுத்துக்கொண்டால், அந்த மதத்தின் புனிதநூலான பைபிளிலேயே இரண்டு ஏற்பாடுகள். பழைய ஏற்பாட்டில், சூரியனே புவியைச்சுற்றி வருகிறது எனக்குறிப்பிடப்பட்டிருக்கிறது. பூமிதான் சூரியனைச்சுற்றி வருகின்றது என்று அறிந்து கூறிய மனிதனுக்கு கிறிஸ்துவ மதம் வழங்கிய தண்டனையையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். முஸ்லீம் மதத்தில் சமயத்தின் வளர்ச்சிக்காக மரணிப்பவன் சொர்க்கமடைவான் எனச் சொல்வதாகவும், அந்த நம்பிக்கையினாலேயே பல முஸ்லீம் இளைஞர்கள் தீவிரவாதிகளாக மாறுகிறார்கள் (எல்லோரும் அல்ல, தீவிரவாதிகளாக மாறுபவர்களில் பலர் தங்கள் இனம், மதம் சார்ந்த உரிமைகளுக்காகவே மாறுகிறார்கள் என்பதும், ஆனாலும் அடக்குமுறையாளர்களால் அனைவருமே பயங்கரவாதிகளாக காட்டப்படுவதுமே யதார்த்தம்) என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆக மதங்கள் எப்போதுமே மனிதர்களைச் சரியான வழியிலேயே வழிநடத்துகின்றன என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது?

சிவபுராணத்தில், புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப் பல்மிருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகி கல்லாமனிதராய்ப் பேயாயக் கணங்களாய் வல்லசுரராகி முனிவராயத் தேவராய்...எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் என்கிறார் வாதவூரர். இதைப்பாடிய மாணிக்கவாசகர், தேவரோ முனிவரோ அல்ல. அவரும் ஒரு மனிதராய் இருந்தே இதைப் பாடியிருக்கிறார். அவர் ஒன்றும் தேவராக மாறிய பின்னர் இதைப்பாடவில்லை. மேலும் பலர், மனிதனின் முந்திய பிறப்பு கல் (கல்லாய் மனிதராய்) என்று தவறாக அர்த்தம் செய்துகொண்டு விடுகிறார்கள். உண்மையிலேயே அது கல்லாய், மனிதராய் என்று அல்லாமல் கல்லாமனிதராய் (அறிவில்லாத மனிதராய்) என்றே வருகிறது. ஆகவே கல்லாமனிதர், அதாவது உண்மையை அறியாத மனிதர்கள் தான், பேயாய், கணங்களாய், இப்படிப் பலவாய்த் தம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். முனிவராய்த் தேவராய் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்த வாதவூரர் இறுதியில் தன்னை உணர்ந்து கொண்டேன் என்கிறார். உண்மையை அறிந்து கொண்டுவிட்ட மனிதன் என்கிறார். இங்கே பாடலில் அவர் மனித மனதின் பரிணாம வளர்ச்சி பற்றியே குறிப்பிடுகிறார் என்றே நான் கருதுகிறேன். அதைப்பற்றி எழுதினால் பதிவு நீண்டுவிடும். முடிந்தால் அது இன்னொரு பதிவில்.

அறியாமை தான் ஆனந்தம் எனச்சில பெரியவர்கள் சொல்கிறார்கள். சிறுகுழந்தைகளைப் பார்த்தால் சின்னச்சின்னப் பொருட்களினால் அவர்கள் பெறும் அதே ஆனந்தத்தினை, பின்னாளில் அவர்கள் பெறுவதில்லை. உதாரணமாக ஒரு குழந்தையிடம் 1000 ரூபாய் பணத்தாளினையும், 5 ரூபாய் பெறுமதியான ஒரு அழகிய படத்தினையும் கொடுத்து, இரண்டில் எது வேண்டும் என்றால் அது படத்தினையே தேர்வு செய்யும். இப்படித்தானே திருடர்கள் கொடுக்கும் மிட்டாய்களுக்குப் பதிலாக சின்னக் குழந்தைகள் தங்களின் தங்கச்சங்கிலிகளையே இழந்துவிடுகிறார்கள். நட்பு, துணை அல்லது உறவுகள் எம்மை ஏமாற்றுவதை அறியாதவரை அவர்களுடனான உறவில் மகிழ்ச்சியடையும் நாம், ஏமாற்றலை அல்லது துரோகத்தை அறிநதவுடன், அதுவரை இருந்துவந்த சந்தோஷம் பறந்துவிடுகிறது.

பேய்கள் பற்றி ஆராய்ச்சி செய்த மனோவியல் டொக்ரர் ஒருவர் (டொக்ரர் கோவூர் என நினைக்கிறேன், சரியாக நினைவிலில்லை. 1990 இற்கு முன்னர், ஊரில் இருக்கையில் வாசித்த ஞாபகம்) தனது நூலில், எவ்வாறு பேய்களால் பீடிக்கப்பட்டவர்கள் எனக் கருதப்பட்டவர்களை தான் மனோவியல் மூலம் சிகிச்சையளித்துக் குணப்படுத்தியதாகவும். ஒருமுறை தாங்கள் இரவில் பயணம் செய்கையில் வீதியில் வழிமறித்து நின்ற ஒரு வாகனத்தை யானை என்றெண்ணிப் பயந்ததாகவும் (அந்தப் பாதையில் யானைகளின் நடமாட்டம் இருந்ததாம்) பின்னர் உண்மையை அறிந்து சிரித்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆக அறியாமைதான் பயத்திற்கும் காரணமாய் இருக்கிறது

சிலமாதங்களின் முன் இருநண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கையில், அவர்கள் இருவருக்குமே இரவில் தனியே செல்லப் பயம் எனவும், யாரேனும் ஒரு சிறுதவ்வல்கூட, கூடவந்தால் பயமில்லையெனவும் குறிப்பிட்டிருந்தனர் (எனக்கும் தானுங்க). அந்தச்சின்னக் குழந்தையால், எதிர்ப்படும் இன்னல்கள் அல்லது பயங்கரங்களில் இருந்து எம்மைக்காப்பாற்ற முடியாது என்பது சர்வ நிச்சயம் என்று எமக்குத் தெரிந்தாலும், எம்மையறியாமலேயே, இன்னொருவர்கூட வருகையில் மனதினில் ஒரு துணிச்சல் ஏற்பட்டுவிடுகிறது. திக்கற்றவனுக்குத் தெய்வமே துணை என்பார்கள். எனவே, கடவுள்கள், பேய்கள் பற்றிய எண்ணங்களும் அவ்வாறே வந்திருக்கும் என்றே நான் கருதுகிறேன்.

(கடவுளரை வணங்குபவர்களைப் போலவே பேய்களை வழிபடுபவர்களுமான பில்லிசூனியக்காரர்களும் இருக்கிறார்கள். அவர்கள் மிகமிகச் சிறிய அளவினர் என்பதால், பேய்கள் எல்லோருக்குமே கெடுதல் செய்யுமென்ற நம்பிக்கையும் பரவிவிட்டது).

8 comments:

  1. Please try to attend the bloggers meet on this saturday. Call me at 98560742 if information is needed

    ReplyDelete
  2. தங்கள் அழைப்பிற்கு நன்றி அறிவிலி.
    பங்கேற்க முயற்சிக்கிறேன்

    ReplyDelete
  3. மற்றவர்கள் பின்னுட்டத்திற்கு நக்கலும் கிண்டலுமாக, தனது கருத்தை எந்த விதத்திலேனும் நியாப்படுத்தி தான் சிவபுராணம்,பைபிள்,டொக்ரர் கோவூர் போன்று பலதரப்பட்ட நூல்களை வாசித்து தன்னை விட மற்றவர்கள் சொல்வதெல்லாம் தகவல்கள் தவிர உண்மை இல்லை என்று எண்ணிக்கொண்டிக்கும் வலசுவின் ஆணவப்பேயை ஒழித்தால் நான் பேய் இல்லை என்று ஒத்து கொள்கிறேன்,

    ஆனால் வலசுவிடன் எனக்கு ரொம்ப பிடித்தது அவன் ஆணவம் தான்......!!!!!!

    அன்புடன் பேயன் ஆரூரன்

    ReplyDelete
  4. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி “பேயன் ஆரூரன்”.
    :-)

    உண்மைகளை நிறுவவேண்டிய அவசியமே கிடையாது. பொய்களுக்கே எப்போதும் ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. இது இப்படி நடந்தால்தான் அதை ஏற்றுக்கொள்வேன் என்பது...

    ReplyDelete
  5. பேய்க்கு பேன் பார்த்த பேயன் என சிலர் சிலரின்மேல் கோபம் வரும்போது கூறுவார்களே அது ஏனென்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன், ப்ளீஸ்.

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி Rav.

    முட்டாள் என்று திட்டுவதற்கே “பேய்க்கு பேன் பார்த்த பேயன்” என்று கூறுகிறார்கள். பேய் என்பதற்கு எம்மிடையே நிலவும் கருதுகோள்களின்படி, அதனை எம்மால் தொடுகையின் மூலம் உணரமுடியாது. பின் எப்படி அதன் தலையில் பேன் பார்ப்பது? மேலும் 'ப' வரிசையில் 'எதுகை' (எந்தக்கை என்று கேட்கக்கூடாது) நடையில் வருவதாலும் இவ்வாக்கியப் பிரயோகம் பிரபல்யம் அடைந்து விட்டது என்றே நான் நினைக்கிறேன்.

    ReplyDelete
  7. "பேய் உலகில் நுழையத் தயாரா?"
    சிரிப்பை அடக்கி எழுத்தாளர் படம் பார்க்க
    எதிர்ப்பார்த்த காவி, உடையில் இல்லாமல் பற்களில்...
    புத்தகம் கவிழ்த்து படுக்கையில் கவிழ
    தூக்கம், விவசாயி எதிர்ப்பார்த்த மழையாய் ஏமாற்ற
    பேய் உலகம் மீண்டும் அழைத்தது...
    புதிய தமிழ்ப் பட பாடலாய் புரியாத நான்கு வரிகள்.
    கண்மூடி சொல்ல சொல்ல எங்கோ விழுந்து கொண்டிருந்தேன்...

    வேகம்... படு வேகம்...
    இமை திறக்க முடியா வேகம்...
    "நிறுத்து... சொல்வதை நிறுத்து"
    மூளையின் கட்டளைக்கு அடி பணியா உதடுகள்...
    பாதாள தரையில் விழுந்தும் அடி இல்லை...
    தூரத்தில் இரு உருவங்கள்...
    நெருங்க நெருங்க,
    உருவங்கள் பளிச்சிட,
    அடி நெஞ்சில் பயம்.

    பயப்படாதே... இது கனவு. யாரேனும் எழுப்புங்கள்...
    உருவங்கள் விவரிக்க இயலா உருவங்களுடன்...
    இலேசான பூண்டு வாசணை...
    ஒரு உருவம் என் கையில் 10 எண் பதித்த தகடை கட்ட
    அதன் முகத்தில் ஹிட்லர் சாயலும் தாத்தா சாயலும் மாறி மாறி...
    இது கனவு தன்... இதோ விழிக்கப் போகிறேன்..
    மணி ஓசை
    பால்காரனாக இருக்கும்..
    "மணி ஓசை... உன் முறை. உள்ளே போ"
    ஹிட்லர் சொன்னது...
    கண்களை இருக்கி மூடி
    மீண்டும் புரியா வரிகளை முணுமுணுக்க
    மறுபடி வேகம்...
    வேகம் குறைய... இமைகள் திறக்க...
    படுக்கையில்...
    கனவுதான்...
    கனவுதான்..
    மனம் தேற்றி தண்ணீர் பருக
    கையில் 10 பதித்த தகடு மிண்ணியது...

    பேய் கனவுடன்,
    சுதா-ஆரூரன்.

    ReplyDelete
  8. //
    கனவுதான்..
    மனம் தேற்றி தண்ணீர் பருக
    கையில் 10 பதித்த தகடு மிண்ணியது...
    //

    கவிதை அருமை ஆரூரன்.
    வாழ்த்துக்கள். பகிர்விற்கு நன்றி

    ReplyDelete