Monday, July 20, 2009

மனிதகுலத்தின் மாபெரும் பாய்ச்சல் - வரலாற்றில் இன்று

இது எனக்கு ஒரு அடிதான், ஆனால் மனிதகுலத்திற்கு இதுவொரு பாய்ச்சல்.
-நீல் ஆம்ஸ்ரோங்

20-07-1969 மனிதகுலம் ஒரு மாபெரும் பாய்ச்சலை நீல் ஆம்ஸ்ரோங்கினூடாக நடத்தியிருந்தது. பூமியிலிருந்து முதன்முறையாக மனிதகுலப் பிரதிநிதிகள் தமது உபகோளிற்கான விஜயத்தினை வெற்றிகரமாக நிகழ்த்தியிருந்தனர்.விண்வெளிஆதிக்கப் போட்டியில் முதற்தடவையாக சோவியத் யூனியன், யூரிகாகரினின் எதிர்பாராத விபத்து
மரணத்தினால் தவிர்க்கமுடியாமல் ஐக்கிய அமெரிக்காவிடம் தோல்வியைத் தழுவியிருந்தது. இன்றுடன் அமெரிக்காவின் அந்தச் சாதனையின் நாற்பது ஆண்டுகள் நிறைவு பெறுகையில், இந்தப் பூமிப் பந்தில் எத்தனையோ மாற்றங்கள். அன்றைய நாளில் விரைவிலேயே செவ்வாய்க்கிரகத்திற்கும் மனிதன் சென்றுவிடுவான் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதை அநேகமாக சோவியத் யூனியனே செய்துகாட்டும் என்ற நம்பிக்கையும் நிலவியது. ஆனால் இன்று?

அந்த ராட்சத நாடே சிதறுண்டு சின்னாபின்னமாகி... “மனிதன் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்” என்கின்ற பழமொழிக்கு ஆதாரமாய்... அல்லது விதி வலிது என்பதை மெய்ப்பிப்பதாய்... அப்படி நினைப்பவர்கள் கொஞ்சம் மாற்றி யோசித்தீர்களானால் அல்லது கழுகுக் கண்கொண்டு பார்ப்பீர்களானால் எது அந்த விதி அல்லது எந்தத் தெய்வம் சோவியத் யூனியன் சிதறுண்டு போக நினைத்தது என்பதைப் புரிந்து கொள்வது அப்படியொன்றும் சிதம்பர சக்கரமல்ல.

மனிதகுலப் பிதிநிதிகள் நிலாவில் கால்தடம் பதித்து பல்லாண்டுகள் கழிந்த பின்னரும் கூட பாலர் வகுப்பில் எங்களுக்கு வழங்கப்பட்ட சைவநெறி நூலில் “கங்கையைச் சடையுள் வைத்தார் கதிர்பொறி அரவும் வைத்தார் திங்களைத் திகழ வைத்தார் ....” என்று சொல்லி சந்திரனின் வரலாற்றுப் புராணக்கதைகளைத் திணித்துக் கொண்டிருக்கிறார்கள். பிள்ளையார் ஒருமுறை நடனமாடினாராம், அவரது ஆட்டத்தைப் பார்த்த சந்திரனுக்குச் சிரிப்பு வந்து சிரித்து விட்டானாம். உடனே சந்திரனைத் தேய்ந்து போகுமாறு பிள்ளையார் சாபமிட்டாராம் (பிள்ளையாரை அடையாளப்படுத்தும் உருவம் நடனமாடினால், அதைப்பார்த்து சிரிப்பு வராமல் என்ன செய்யும்?). தேயத்தொடங்கிய சந்திரன் பயந்து போய் சிவனிடம் சரணடைந்தானாம். சிவன், சந்திரனுக்கு அபயமளித்து தன் தலையில் வைத்துக் கொண்டாராம். இப்போதும் இதையே சொல்லிக் கொடுக்கிறார்களா என்று தெரியவில்லை.
இந்தக் கதையை நம்பத்தொடங்கும் பிஞ்சு உள்ளம், பின்னாளில் சிவனின் தலைமீது தன் கால்தடம் பதித்ததற்காக நீல் ஆம்ஸ்ட்ரோங் மீது ஆத்திரமடையாதா? சைவமதத்தையோ அன்றி இந்துமதத்தையோ போதிக்கக்கூடாது என்கின்ற எண்ணத்தினால் இதைச்சொல்லில்லை. மாறாக பிஞ்சு நெஞ்சங்களில் பொயக்கதைகளைச் சொல்லிப் பேய்க்காட்டி முட்டாளாக்குகிறார்களே என்கின்ற ஆதங்கம்தான் மேலோங்கி நிற்கின்றது. இதை விடுத்து இந்துமதம் (அல்லது வேறு எந்த மதமானாலும்) கூறும் வாழ்க்கை நெறிகளைப்பற்றி, அதில் காணப்படும் உண்மையான தத்துவங்களை விளக்கும் சின்னச்சின்னக் கதைகளாய் பிள்ளைகளுக்குக் கற்றுத்தரலாமே.

6 comments:

  1. கலக்கல்...!!!!!!!!!!!!!

    ReplyDelete
  2. எனக்கு ஒன்று நினைவு வருகிறது. அண்மையில், சில ஆண்டுகளுக்கு முன், [ஸ்றி-றங்கம்] தமிழ் நாட்டில் ஒரு திருமண விழாவில் திடீரென தீ பற்றிக்கொண்டது.

    மணமகன் உட்பட பலர் மாண்டுபோயினர்.

    எனக்கு ஏனோ திருஞான சம்பந்தரின் திருமண விழா பற்றி எமக்கு பாடசாலையில் சொல்லி தந்தது நினைவில் வந்து தொலைத்தது.

    எனது சிற்றறிவுக்கு பட்டது என்னவெனில், அந்த கவிஞனும் தனது மணநாளில் தீக்கிரை ஆக்கப் பட்டான்.

    எம்மவர்கள் அதிலிருந்து ஒரு பாடம் கற்றுக் கொள்வதற்க்கு பதிலாக, கதையை திரித்து விட்டனர்.

    முரளி

    ReplyDelete
  3. நல்ல பார்வை,..

    இதே தலைப்பில் எனது பதிவு,..

    http://jothi-kannan.blogspot.com/2009/07/blog-post_07.html

    நேரம் கிடைத்தால் வந்து பாருங்கள்,..

    ReplyDelete
  4. //இதை விடுத்து இந்துமதம் (அல்லது வேறு எந்த மதமானாலும்) கூறும் வாழ்க்கை நெறிகளைப்பற்றி, அதில் காணப்படும் உண்மையான தத்துவங்களை விளக்கும் சின்னச்சின்னக் கதைகளாய் பிள்ளைகளுக்குக் கற்றுத்தரலாமே.//

    உங்களின் எண்ணங்களும் சரிதான்..

    தற்பொழுது கல்வி திட்டத்தில் பல மாற்றங்கள் வந்துவிட்டன. காக்கா கதையையே மாற்றிவிட்டார்கள்....

    நல்ல பகிர்வு நண்பா

    ReplyDelete
  5. //....மாறாக பிஞ்சு நெஞ்சங்களில் பொயக்கதைகளைச் சொல்லிப் பேய்க்காட்டி முட்டாளாக்குகிறார்களே என்கின்ற ஆதங்கம்தான் மேலோங்கி நிற்கின்றது. ...//

    இன்னமும் 'பேய்' க்குள் இருந்து உங்களால் வெளி வர முடியவில்லை. உங்களுக்கு 'பார்வை' பார்க்க வேணும்.

    ம்ம்ம் சிந்திக்க தூண்டும் பதிவு. சமயங்கள் பிழையான வழியிலேயே போகின்றன.(ஐயா நம்ம சைவ மதத்தை சொன்னேன்)

    ReplyDelete
  6. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி செந்தழல் ரவி.
    ====

    வரவிற்கும் கருத்திற்கும் நன்றி முரளி
    //
    எனது சிற்றறிவுக்கு பட்டது என்னவெனில், அந்த கவிஞனும் தனது மணநாளில் தீக்கிரை ஆக்கப் பட்டான்.

    எம்மவர்கள் அதிலிருந்து ஒரு பாடம் கற்றுக் கொள்வதற்க்கு பதிலாக, கதையை திரித்து விட்டனர்.
    //
    உண்மைதான். ரசித்தேன்
    ===

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி jothi.
    ===

    வரவிற்கும் கருத்திற்கும் நன்றி ஆ.ஞானசேகரன்.
    ===

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கதியால்.
    //
    இன்னமும் 'பேய்' க்குள் இருந்து உங்களால் வெளி வர முடியவில்லை. உங்களுக்கு 'பார்வை' பார்க்க வேணும்.
    //
    நீங்க எங்க பார்த்தீங்க?
    :-)

    //
    ம்ம்ம் சிந்திக்க தூண்டும் பதிவு. சமயங்கள் பிழையான வழியிலேயே போகின்றன.(ஐயா நம்ம சைவ மதத்தை சொன்னேன்)
    //
    புரிகிறது உங்கள் ஆதங்கம்.
    :-(

    ReplyDelete