Thursday, July 23, 2009

ஆங் சான் சூகீ அம்மையாரும் அமைதிக்கான மகாத்மா காந்தி விருதும்.

நேற்றைய வானொலிச் செய்தியின் போது, மியன்மார் நாட்டின் எதிர்க்கட்சித் (National League for Democracy) தலைவியான திருமதி ஆங் சான் சூகீ (Aung San Suu Kyi) அம்மையாருக்கு அமைதிக்கான மகாத்மா காந்தி விருதினை வழங்கிக் கௌரவித்திருக்கும் செய்தியினை கேட்கையில் நெஞ்சுக்குள் ஒருவித பரவசம் வந்தாலும் செய்திமுடிவின் போதே அதைக்கேட்டதால் அதை வழங்கியது யார் அல்லது எது என்பதை அறியமுடியவில்லை. இதுவும் யாரும் ஒரு பதிவரின் வேலையோ என்ற ஐயமும் எழாமலில்லை :-).

இவை எல்லாவற்யும் மீறி, மகாத்மா காந்தியின் பெயரில் வருவதால் ஒருவேளை இது இந்திய அரசின் விருதாக இருக்குமோ என்று எழுந்த சந்தேகம். “உனக்கு எதிலதான் பகிடிவிடுகிறது என்கின்ற விவஸ்தையே இல்லையா?” என்று உள்ளிருந்து கேட்ட குரல் ஒன்றினால் அடுத்தகணமே அடங்கிப்போயிற்று. பின்னர்தான் அது தென்னாபிரிக்காவினைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள மகாத்மா காந்தி அறக்கட்டளை நிறுவனத்தினால் அவ்விருது ஆடிமாத்ம் 20ம் திகதியன்று (அன்று தான் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன.) அவரின் சார்பில் மியன்மாரின் முன்னாள் பிரதமர் தியென் வின் அவர்களிடம் வழங்கப்பட்டதாகவும் தெரியவந்தது. கடந்த வருடம் அவ்விருது தென்னாபிரிக்காவின் முன்னாள் தலைவரான திரு நெல்சன் மண்டேலா அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. இவ்விருவருமே இவ்விருதிற்கு முன்னரேயே சமாதானத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விருதுகள் பற்றிக் கதைப்பதென்றால் (பேசுவதென்றால்) கதைத்துக்கொண்டே போகலாம். சிலருக்கு ஏதாவது விருது வழங்கப் பட்டே ஆகவேண்டும் என்பதற்காகவே சில விருதுகள் உருவாக்கப்படுகின்றன. சில விருதுகள் எதற்காக வழங்கப்படுகின்றன என்கின்ற தெளிவே இல்லாமலும் சிலருக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. இப்படியே எழுதிக்கொண்டு போனால், கடிதங்கள் எழுதிஎழுதியே களைத்துப்போகாமல் இருந்ததற்காக சகிப்புத்தன்மைக்கு யுனெஸ்கோவிடம் விருது பெற்றவர்களைப் போல சிலவேளைகளில் எனக்கும் ஏதேனும் விருதுகள் கிடைக்கக்கூடும் என்கின்ற நப்பாசையும் இருக்கத்தான் செய்கிறது. என்ன? கடிதம் எழுதுவதென்றால் முத்திரைக்குச் செலவு செய்யவேணும். அத்துடன் ஒரு கடிதத் தலைப்பும் (letter pad) வேணும். பதிவு எழுதுவதில் உள்ள சௌகரியம் இவை எவையுமே தேவையில்லை. யுனெஸ்கோ காரர்கள் பதிவுகளையும், பதிவர்களையும் கொஞ்சம் கவனிப்பார்களாக!

1945 ஆனி 19 இல் பிறந்த ஆங்சான் சூயி அவர்களுக்கு இரண்டு வயது இருக்கையில் 1947 ஆடி 19 இல் அவரது தந்தை ஜெனரல் ஆங் சான் (Aung San) அவர்கள் படுகொலை செய்யப்பட்டார். பின் 1948 தை 04ம் திகதி பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடமிருந்து பர்மா (அப்போது மியன்மார், பர்மா என்றே அழைக்கப்பட்டது) விடுதலையாகிறது. தனது கல்வியை இந்தியாவைத் தொடர்ந்து பிரித்தானியாவிலும் பின் அமெரிக்காவிலும் நிறைவு செய்த ஆங்சான் சூயி அவர்கள் 1972 தை 01இல் பிரித்தானியரான மைக்கேல் என்பவருடன் திருமண பந்தத்தில் இணைந்தார். 1988இல் தாயாரின் உடல்நிலை பாதிப்படைந்ததைத் தொடர்ந்து மியன்மாருக்குத் திரும்பிய அவர், 1988 புரட்டாதி 24இல் உருவாக்கப்பட்ட NDL (National League for Democracy) இன் பொதுச்செயலாளராக பதவியேற்றார். 1988 மார்கழி 27 இல் தாயார் மரணமடைய, 1989 தை 02 இல் நடைபெற்ற தாயாரின் இறுதிக்கிரியைகளை அடுத்து மியன்மார் அரசியல் களத்தில் ஆங்சான் சூகி அவர்கள் தீவிரமாகக் களமிறங்கி இராணுவ அடக்குமுறைக்கெதிராகப் போராடினார். அதைத் தொடர்ந்து 1989 ஆடி 20இல் அவர் இராணுவ அரசால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். 1990 வைகாசி 27 இல் நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சி 82% பெரும்பான்மையைப் பெற்றிருந்த போதிலும் இராணுவ ஆட்சியாளர்கள் அவரது கட்சியினை ஆட்சி பீடத்தில் ஏறவிடாது தடுத்ததுடன், ஆங்றான் சூகி அவர்கள் வெளிநாட்டுக்காரரை (பிரித்தானியர்) மணம் செய்து கொண்டதால் அவருக்கு அரசியலில் ஈடுபட அருகதை இல்லை என்றும் அறிவித்து விட்டனர். 1991 இல் சமாதானத்திற்கான நோபல் பரிசினையும் அவர் ஆங்சான் சூகி அவர்கள் பெற்றுக்கொண்டார்.

இப்போது, இந்தியாவின் தேசபிதா என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தியின் பெயரில் அமைதிக்கான ஓர் விருது ஆங்சான் சூகி அம்மையாருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதே இந்தியாவை இப்போது தன் கையசைப்பில் வைத்திருப்பவர் ஒரு வேற்றுநாட்டுப் பெண்மணியென்பதும் குறிப்பிடத்தக்கது.



எனது தமிழக நண்பர்களில் பெரும்பாலனவர்களிடம் உரையாடியதில் இருந்து நான் தெரிந்து கொண்டது, அவர்கள் இப்போதும் சோனியா காந்தியும் (ரஜீவ் காந்தியும்) மகாத்மா காந்திக்கு உறவு என்றே எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். பலர் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததே மகாத்மா காந்தியால்தான் என்றே நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலரே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றியும் அவரது இந்திய தேசிய இராணுவத்தை (INA) பற்றியும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஒரு சிலரோ INA-ஐயும் சிப்பாய்க்கலகத்தையும் சேர்த்துக் குழம்புகின்றனர். பெரும்பாலோனோருக்கு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பற்றியோ அல்லது V.V.S.ஐயர் என்று அழைக்கப்படுகின்ற வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் அவர்களைப் பற்றியோ இந்திய சுதந்திரத்திற்கான அவர்களின் பங்களிப்புகள் பற்றியோ தெரியவில்லை. இவ்வளவும் ஏன், கேரளாவுடனான முல்லைப் பெரியாறு பிரச்சனை பற்றியோ அல்லது கர்நாடகாவுடனான காவிரி நதிநீர்ப்பங்கீட்டுப் பிரச்சனை பற்றியோ, உச்சநீதிமன்றின் தீர்ப்பின் பின்னும் அவை இன்னமும் அமல்படுத்தப்படாதிருப்பதற்கான காரணங்கள் பற்றிய அறிவுமில்லால், அறியும் ஆர்வமுமில்லாதவர்களாகவே அவர்கள் காணப்படுகிறார்கள். காஷ்மீர்ப் பிரச்சனையில் சீனாவிடம் இந்தியா அடைந்த படுதோல்வியின் பின் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அறிஞர் அண்ணா அவர்கள் “போராட்டத்திற்கான காரணிகள் இன்னமும் அப்படியேதான் இருக்கின்றன. எனினும் இப்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு எமது போராட்டத்தினைக் கைவிடுகிறோம்” என்ற அறிவிப்பின் பின் போராட்டத்திற்கான காரணிகளையே அவர்கள் மறந்து விட்டார்கள்.

இந்தியா மிகப்பெரியவொரு ஜனநாயக நாடென்றும், அது மகாத்மா காந்தியின் வழியில் அகிம்சையையே ஆதரிக்கின்றது என்றுமே அதிகளவினர் இப்போதும் எண்ணுகிறார்கள். அப்படி நினைப்பவர்கள் ஆசாத் காஷ்மீரில் இந்தியக் கூலிப்படைகள் செய்யும் அநியாயங்களை அறியாதவர்கள். இதைப் பற்றி ஊடகங்கள்கூட அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லை என்பது கவலைக்குரிய விடயம். ஆனாலும் இந்தியக்கூலிப்படைகள், அவை எதுவாயிருந்தாலும் எப்படிப்பட்டவை என்கின்ற பட்டறிவு எங்களுக்கு நிறையவே உண்டு. மகாத்மா காந்தியின் அகிம்சாவாதக் கொள்கைகளை இன்னமும் இந்தியா மதிக்கிறது என்று இப்போதும் நம்புகின்றவர்கள் அதன் சீத்துவத்தை அறிய உங்கள் நாட்காட்டிகளில் 1987 புரட்டாதி 26ம் திகதியை சற்றே திருப்பிப் பாருங்கள். வெட்கமாயில்லை?

16 comments:

  1. காந்தி என்பவர் பிரித்தானியாவும் நேருவும் தங்கள் ஆசைகளை நிறைவேற்ற பயன் படுத்திய அப்போதைய ஆனந்தசங்கரி/லக்ஸ்மன் கதிர்காமர் மட்டுமே. அவர் இல்லாம இருந்திருந்த இந்திய பொருளாதாரத்தில ஹாங்காங் ஆக மாறியிருக்கும். காந்தி கோவணம் கட்டி இந்தியர்களையும் கோவனதிற்குள் தள்ளி விட்டார். He is a joker for the King maker Neru. கடவுளுக்கு நன்றி! அவரிண்ட பேரில ஒரு ஈழ தமிழனுக்கும் விருது கிடைக்கேல்ல.

    காந்தியை நம்பிக்கெட்டவன்

    ReplyDelete
  2. நீங்கள் குறிப்பிடாத இன்னுமொரு விடயம்: பல மெத்த படித்த தமிழக நண்பர்களுக்கு இந்த பதிவை வாசிக்க கூட தெரியாது, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கொடுக்க வேண்டும்!

    இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பாவித்து ஆட்சி ஏறிய திராவிட கட்சிகள் திரை-படங்களுக்கு தமிழில் பெயர் வைப்பதோடு தங்கள் தமிழ் பற்றை நிறுத்திகொண்டனர்.

    முரளி

    ReplyDelete
  3. விருதுகள் என்பது முத்தம் மாதிரி அது கொடுப்பவருக்கும் இன்பம் வாங்குபவருக்கும் இன்பம் ,

    மேலும் எல்லோருக்கும் எல்லாமுமே தெரியவேண்டியதில்லை, ரத்த களரியை தவிர்க்க மாகத்மா ஒரு variable(மாறி)அவ்வளவுதான் ,

    அறியாமை தான் இங்கே பேரின்பம் நண்பனே......

    எனவே என் பெயரையும் நீ அறியாமல் இருக்க கடவது.....!

    ReplyDelete
  4. வெட்கபட வேண்டிய விடயங்களை புட்டு புட்டு வைத்துள்ளீர்கள் நண்பா! நான் ஒன்றும் சொல்வதிற்கில்லை...

    //எதுவாயிருந்தாலும் எப்படிப்பட்டவை என்கின்ற பட்டறிவு எங்களுக்கு நிறையவே உண்டு.//

    மிக பெரிய வரலாற்று பிழை..

    ReplyDelete
  5. //முரளி சொன்னது....இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பாவித்து ஆட்சி ஏறிய திராவிட கட்சிகள் திரை-படங்களுக்கு தமிழில் பெயர் வைப்பதோடு தங்கள் தமிழ் பற்றை நிறுத்திகொண்டனர்....//

    அருமை

    சகிப்புத்தன்மைக்கான விருது வாங்கிய ஐயா இன்றும் தான் தமிழ் மக்களை ஆளலாம் என்ற நப்பாசையுடன் திரிவதுதான் கேவலம். "பதில் ஏதும் கிடையாமல் 'பப்ளிக்' ஆக பல்லாயிரம் கடிதம் எழுதிய பகலவன்" என்ற பட்டம் அவருக்கு விரைவில் கிடைக்க இருப்பதாக அறிந்தேன்.

    பதிவின் தொடக்கம் வாசிக்கும் போது நோக்கம் என்ன என்று புரியவில்லை. பின்னர் வாட்டி எடுத்து விட்டீர்கள். உணருவார்கள் ஒருநாள்.

    ReplyDelete
  6. //எனது தமிழக நண்பர்களில் பெரும்பாலனவர்களிடம் உரையாடியதில் இருந்து நான் தெரிந்து கொண்டது, அவர்கள் இப்போதும் சோனியா காந்தியும் (ரஜீவ் காந்தியும்) மகாத்மா காந்திக்கு உறவு என்றே எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்//

    சரியான நண்பர்களை நீங்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்றே தெரிகிறது.

    ReplyDelete
  7. வெட்க்கி தலைகுனிகிரேன்
    - இந்தியாவில் பிறந்த தமிழன்

    ReplyDelete
  8. குட்டுங்க, குட்டுங்க நல்லா குட்டுங்க.

    இந்தியத் தமிழர்கள் வழக்கம்போல் இன உணர்வு காக்க பாராட்டி பின்னூட்டம் போடுவாங்க.

    வருத்தங்களுடன்.

    ReplyDelete
  9. //வெட்க்கி தலைகுனிகிரேன்
    - இந்தியாவில் பிறந்த தமிழன்//

    அய்யோ பாவம் இவருக்கும் வ.வே.சு அய்யர், வ.உ.சி எல்லாரையும், தெரியாது போல இருக்கு.

    ReplyDelete
  10. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி Logi.
    //
    அவர் இல்லாம இருந்திருந்த இந்திய பொருளாதாரத்தில ஹாங்காங் ஆக மாறியிருக்கும்.
    //
    நீங்கள் மகாத்மா காந்தி, பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கவேண்டிய நிதியினை வழங்கச் சொல்லி உண்ணாவிரதம் இருந்ததைக் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  11. வரவிற்கும் கருத்திற்கும் நன்றி முரளி
    //
    இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பாவித்து ஆட்சி ஏறிய திராவிட கட்சிகள் திரை-படங்களுக்கு தமிழில் பெயர் வைப்பதோடு தங்கள் தமிழ் பற்றை நிறுத்திகொண்டனர்.
    //
    இதனால் தமிழ் வளருமா என்பது சந்தேகமே.
    “ஜில்லென்று ஒரு காதல்” “சில்லென்று ஒரு காதல்” ஆகவும் “எம்டன் மகன்” “எம் மகன்” ஆகவும் மாறியதே ஒழிய திரைப்படங்கள் தமிழை அதன் கலாச்சாரத்தை வளர்ப்பதனை இது ஊக்குவிக்கிறதா என்பது கேள்விக்குறியே.

    ReplyDelete
  12. //
    விருதுகள் என்பது முத்தம் மாதிரி அது கொடுப்பவருக்கும் இன்பம் வாங்குபவருக்கும் இன்பம்
    //

    உண்மைதான் நண்பா. உன்னையும் உணர்ந்து கொண்டேன்

    ReplyDelete
  13. உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஆ.ஞானசேகரன்

    ReplyDelete
  14. வரவிற்கும் கருத்திற்கும் நன்றி கதியால்

    ReplyDelete
  15. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அறிவிலி.
    //
    சரியான நண்பர்களை நீங்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்றே தெரிகிறது.
    //
    இருக்கலாம் நண்பரே :-)

    ReplyDelete
  16. Anonymus said
    //வெட்க்கி தலைகுனிகிரேன்- இந்தியாவில் பிறந்த தமிழன்
    //

    //
    குட்டுங்க, குட்டுங்க நல்லா குட்டுங்க.

    இந்தியத் தமிழர்கள் வழக்கம்போல் இன உணர்வு காக்க பாராட்டி பின்னூட்டம் போடுவாங்க.

    வருத்தங்களுடன்.
    //
    அறிவிலி said...
    //
    அய்யோ பாவம் இவருக்கும் வ.வே.சு அய்யர், வ.உ.சி எல்லாரையும், தெரியாது போல இருக்கு.
    //

    நண்பர்களே!
    உங்கள் யாரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல என்பதைத் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். அப்படி நீங்கள் நினைக்கிறீர்கள் என்றால் தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்.

    ReplyDelete