Wednesday, August 19, 2009

வேரென நீயிருந்தாய்... (5)

அடர்ந்து படர்ந்திருந்த இருளினைக் கிள்ளிக் கிள்ளிக் கொய்து விட்டது போல் அந்த அதிகாலைப் பொழுதில் மின்கம்பங்களிலிருந்து ஒளியினைப் பெய்துகொண்டிருந்த வீதிமின்விளக்குகளின் வெளிச்சம் இருட்டினைக் காயப்படுத்திக் கொண்டிருந்தது. நானும் புதிதாகசேர்ந்துகொண்ட நண்பர்களுடன் ஆனிமாதத்தின் அந்தச்சனிக்கிழமை அதிகாலைப்பொழுதில் நடந்து கொண்டிருந்தேன். அதிகாலைக் குளிரைக்குறைப்பதற்காகப் பருகியிருந்த தேநீரின் வீரியத்தினை உடல் இழந்து கொண்டிருந்தது. நேரம் எப்படியும் அதிகாலை நான்கரையைத்தாண்டியிருக்கும். எங்களில் யாருடைய கைகளிலும் கடிகாரங்கள் இருக்கவில்லை. ஐந்துலாம்படிச்சந்தியை நெருங்கிய பிற்பாடு வீதிகளில் சுறுசுறுப்புக்காணப்பட்டது. கொழும்பு மாநாகரின் வியாபாரப்பிரதேசமும் நிறைஅழுக்குப்பிரதேசமுமான 'பெற்றா'விற்குள்ளால் நடந்து கொண்டிருந்தோம். கூடவந்தவர்களில் ஒருவன் அன்றுதான் வாழ்க்கையிலேயே முதன்முதலாக பாட்டா (Bata) இறப்பர்ச் செருப்பு அணிந்திருப்பானோ என்னவோ தேய்த்துத்தேய்த்து நடந்து கொண்டிருந்தான். பெற்றா தனியார் பேருந்து நிலையத்தில் எங்களைப் போலவே பலரும் வந்து சேர்ந்திருந்தார்கள். ஆட்களைத்தன் வயிற்றுக்குள் புதைத்துக்கொண்டு பேருந்து கிளம்புகையில் நேரம் காலை ஐந்து மணியைத் தொட்டுவிட்டிருந்தது. கலைந்திருந்த உறக்கம் கண்களைச்சுழற்றவே இருக்கையில் சாய்ந்து கொண்டேன்.

தூக்கம் கலைந்து கண்விழித்துப் பார்க்கையில் பேருந்து ஒரு மலைப்பாதையில் மிகவும் சிரமப்பட்டவாறே ஏறிக்கொண்டிருந்தது. நாக்கிளிப் புழுவைப்போல் அப்படியும் இப்படியுமாய் வளைந்த கொண்டிருந்த பாதை ஒருவாறாக சீர்பெற்று 20 நிமிடங்கள்வரை கழிகையில் நண்பர்கள் பரபரப்பாகினர். சில நிமிடங்கள் கழித்து வந்த இறக்கத்தில் எல்லோருடனும் சேர்ந்து நானும் இறங்கினேன். கடைகளின் பெயர்ப்பலகையை அவதானித்ததில் பேராதனையை அடைந்து விட்டிருந்தது தெரிந்தது. முதல்தடவை வேறொரு நண்பனுடன் பல்கலைக்கழகத்தில் எம்மைப்பதிவு செய்ய வந்தபோது இறங்கிய இடம் இதுவல்ல என்பது புரிந்தது. துவிச்சக்கர வண்டிகளில் வந்த சிலர் எங்களை வரிசையில் வரச் சொன்னதும் நெஞ்சுக்குள் பயம் அடைத்துக் கொண்டது.

“அறுப்பாங்கள், இப்பவே வந்திட்டாங்கள். இண்டைக்கு course முடிஞ்சு வீட்டபோன மாதிரித்தான்...”

முன்னுக்கு நின்ற நண்பனின் முணுமுணுப்புக்கேட்டது. வந்தவர்கள் எமது சிரேஷ்ட மாணவர்கள் என்பதும் இன்றைக்குப் பகிடிவதை எம்மைப்பிழியப் போகின்றது என்பதும் மனதுக்கு உறைத்ததும் உள்ளம் நடுங்கியது. வந்தவர்களோ சிலர். நாங்களோ பலர். எனவே எங்கள் எல்லோரையும் விசாரிக்கவே அவர்களுக்கு நேரம் போதவில்லை. postal course எனப்படும் ஆங்கில வகுப்புக்கு நேரமாகவே எங்களை அருகிலிருந்த உணவகத்தில் உணவருந்திவிட்டு வருமாறு பணித்தார்கள். பின் அனைவரையும் அணிவகுத்து வருமாறு சொல்லிவிட்டு அவர்கள் மறைந்து விட்டார்கள்.

கண்டி-கம்பளை வீதியின் வழியே அணிவகுத்துச் சென்ற நாங்கள் ஒரு பாலத்தைக் கடந்தவுடன் அங்கே நின்ற வேறுசிலர் வழிமறித்துப்பின், வகுப்பிற்கு நேரமாகவே அருகிலிருந்த ஒற்றையடிப்பாதை போன்று காணப்பட்ட ஒரு பாதையினால் எம்மை ஏற்றி அனுப்பினார்கள். புற்பற்றைகளாய் மண்டிக்கிடந்த அந்தப்பாதை வழியே சென்று கட்டடக் காட்டுக்குள் நுழைந்தோம். எங்களுக்கு அனுப்பப்பட்டிருந்த கடிதங்களில் குறிக்கப்பட்டிருந்த வகுப்பறைகளின் இலங்கங்களைத் தேடிக் கண்டடைகையில் வகுப்புகள் ஆரம்பித்து விட்டிருந்தன. முன்னைய வகுப்புகளிற்கு நான் சென்றிருக்கவில்லையாதலால் ஆங்கில ஆசிரியை எனது பெயரைப்பதிவு செய்துவிட்டு இருக்கையில் சென்று அமருமாறு பணித்தார்.

கண்களால் வகுப்பினைத் துளாவினேன் யாராவது தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்கின்ற ஆவலில். ஊஹும். யாரும் தெரிந்தவர்களாய்த் தெரியவில்லையே.

அட! இவளை எங்கோ பார்த்திருக்கிறேன். நன்றாய்ப்பழகியுமிருக்கிறேன். எனது வரிசையில் எதிர்ப்புறமிருந்த பெண் மனதினைக் குடைந்தாள். நன்றாய் யோசித்தும் சட்டென அவள் யாரென நினைவிற்கு வரவில்லை. ஆனால் அவளுடன் எப்போதோ நன்றாய்ப்பழகியிருப்பதாய் மட்டும் மனது அடித்துச்சொன்னது.

யாராயிருப்பாள் இவள். என்னுடன் ஒன்றாய் ரியூசனுக்கு வந்திருப்பாளோ? எங்கே வந்திருப்பாள் Science Academy-க்கா இல்லை Shamrock-இற்கா? Shamrock-இல் Double maths மட்டும்தான். அங்கேயும் கமலசிங்கம் சேரின் கடிக்குப்பயந்து அவரிடம் படித்த பெண்களே இருவர்தான். அவர்களின் யாருடைய பெயருமே எனக்குத் தெரிந்ததில்லை. அவர்களுடன் கதைத்ததுமில்லை. Science Academy-யில் சோதிலிங்கம் சேரிடம் physics படிக்க வந்திருப்பாளோ? வந்திருந்தாலும் அவளுடன் பழகியிருக்கச்சந்தர்ப்பமில்லை. சனிஞாயிறுகளில் காலை 8.00 மணி physics வகுப்பிற்கு நான் வீட்டிலிருந்து 8.00 மணிக்கு வெளிக்கிட்டால் 8.10 இற்கு சைக்கிளைத்தள்ளிக்கொண்டு உள்ளே செல்ல சரியாக எனக்குப் பின்னால் சாளியைத் (ஒருவகை motorcycle) தள்ளிக் கொண்டு சோதிலிங்கம் சேர் வருவார். இருவருமே ஒன்றாகவே உள்ளே செல்வோம். வகுப்புகளில் பின்னாலிருந்தால் கண்தெரியாது என்பதால் பெரும்பாலும் மாணவர்கள் அமரத்தொடங்கும், முதல் அல்லது இரண்டாம் வாங்கில்களிலேயே (bench) அமர்ந்து விடுவதால் கூடப்படிக்கும் பெட்டைகளைப்பார்க்க முடிவதில்லை. பின்னாலையோ பக்கத்தாலையோ திரும்ப வெட்கம் மட்டுமல்ல, பின்னால் அமர்ந்திருக்கும் பெடியங்களின் கடிதாங்க முடியாததாயிருக்கும் என்பதுவும் ஒரு காரணம். இதே நிலைதான் மணியம் சேரின் chemistry பாடத்திலும். ஆக இவளை நான் ரியூசனில் பார்த்திருக்க முடியாது.

A/L படித்ததோ ஆண்கள் பாடசாலையில். அப்படியெனறால் O/L இல் ஒன்றாய்ப் படித்திருப்பாளோ? படிச்ச பள்ளிக்கூடங்களிலையெல்லாம் சொந்தக்காரர் வாத்திமாரா இருந்ததால எங்கட கலாச்சாரப்படி நானும் பெட்டைகள் இருக்கிற பக்கமே திரும்ப முடியாமல் போய்விட்டது. அப்படியானால் வேறு எங்குதான் இவளைப் பார்த்தேன். நன்றாய்ப் பழகியிருப்பதாய் உள்மனம் சொல்கிறதே. ஒருவேளை 95 இல் யாழ்ப்பாணத்திலிருந்து இடப்பெயர்ந்து வசித்த இடங்களில் அருகருகே இருந்திருப்போமோ. அம்மாவுக்கென்றால் நன்றாகத்தெரிந்திருக்கும். பார்ப்போம், இல்லாவிட்டால் இவளிடமே கேட்டால் போயிற்று. கம்பசில பெட்டைகளோட தாராளமாக் கதைக்கலாம் தானே.

யாழ்ப்பாணத்திலையெண்டால் A/L படிக்கும் வரையும் பெடியளும் பெட்டையளும் ஒராளோடையொராள் frirndly-யாக் கதைக்கேலாது. ஆனால் கம்பஸ்க்கு போனாப்பிறகு எண்டால். அவை தாராளமா கதைப்பினம். பெட்டைகிளின்ர வீட்ட பெடியள் போவாங்கள். பெடியளின்ர வீட்ட பெட்டைகள் போகுங்கள். அதைப்பற்றி ஒருத்தரும் கணக்கே எடுக்கிறேல்லை. ஆனால் A/L படிக்கேக்குள்ள ஒரு பெட்டையும் பெடியனும் கதைச்சால் சரி. உடனேயே வீட்டில விளக்கம் தொடங்கீரும். பிறகு அந்தப் பெட்டை போறவாற இடமெல்லாம் அந்தப் பெட்டையின்ர தம்பியோ அப்பாவோ காவலுக்கு வரத் தொடங்கீருவினம். ஏன்தான் அப்படிச் செய்யினமோ தெரியாது. சிலவேளை Teen-age-இல பிள்ளைகள் வயசுக்கோளாறால ஏதும் செய்துபோடுவினம் எண்ட பயம்தான் காரணம் என நினைக்கிறேன். அதாலதான் teen-age முடியும் வரைக்கும் பிளளைகளை கவனமாப்பாக்கிறவை, teen-ageம் முடிஞ்சு பிள்ளைகள் கம்பஸ் போகத்தொடங்கினாப்பிறகு அவை பழகிறதைப்பற்றி அக்கறைப்படுவதில்லை.

பக்கத்தில் திரும்பி அவளைப்பார்க்கிறேன். அட அவளும்தான் என்னைப் பார்க்கிறாள். அந்தக்கண்களில் தெரியும் பரிவும் காருண்யமும் அப்படியே புத்தரை மனக்கண்ணில் கொண்டுவந்து நிறுத்துகிறது. அவளது சிநேகமான இதழ்வலிக்காத அந்த ஒற்றைப்புன்னகை அடித்துச் சொல்கிறது, இவளுடன் நான் நன்கு பழகியிருக்கிறேன் என்பதை மட்டுமல்லாமல் அவளுக்கும் என்னை நினைவிருப்பதை. Class முடிந்தவுடனேயே அவளிடம் விசாரிக்கவேண்டும் என்று உள்மனம் சொல்வதைக் கேட்க எனக்கே வியப்பாயிருக்கிறது.

என்னாயிற்று எனக்கு? எந்தப் பெண்ணையுமே ஏறெடுத்தும் பாராமல் திரிந்த நான் அவளிடம் வலியச் சென்று பேசுவதா? எப்படி? இதற்கு முன் எனக்கு எந்தப் பெண்ணுடனும் வலியச் சென்று கதைத்துப்பழக்கமில்லையே. முடியாது. அவளாய் வந்து கதைத்தால் இதைப்பற்றிக் கேட்கலாம். இல்லையென்றாலும் இன்னும் நான்கு வருடங்கள் இங்குதானே இருக்கப்போகிறோம். அதற்குள் எப்படியும் அவளைப்பற்றி அறிந்து விடலாம் என்று எண்ணியவாறே இருக்க, கண்கள் மீண்டும் அனிச்சையாய் அவள் பக்கம் திரும்பின.

எனக்குள் வியப்பு மேலிட்டது. என்னாயிற்று இந்தப் பட்டினத்தாருக்கு? இன்னும் அவரைக்காணவில்லையே என்று ஆச்சரியமாயிருந்தது. வழமையாகவே அழகாகத்தெரியும் ஒரு பெண்ணை கண் மீண்டும் பார்க்கத் தூண்டினால் மனதிற்குள் கண்ணதாசன் வந்துநின்று 'இந்திரியம் தீர்ந்து போனால் சுந்தரியும் பேய்போல' என்பார். அதையும் தாண்டி அந்தப் பெண்ணின் அழகை கவர்ச்சியை ரசிக்க மனம் விழைந்தால், பின்பிடரியில் இரண்டு தட்டுத்தட்டி 'பெண்ணாகி வந்ததொரு மாயப்பிசாசாம் பிடித்தென்னைக் கண்ணால் வெருட்டி முலையால்மயக்கிக் கடிதடத்துப் புண்ணாங் குழியிடைத் தள்ளியென் போதப் பொருள்பறிக்க' என்பார் பட்டினத்தார். பின் அவரின் அறுவை ஆரம்பித்து விடும்.

சீயும் குருதிச் செழுநீர் வழும்பும் செறிந்தெழுந்து
பாயும் புடவை ஒன்றில்லாத போது பகல் இரவாய்
ஈயும் எறும்பும் புகுகின்ற யோனிக்கு இரவுபகல்
மாயும் மனிதரை மாயாமல் வைக்கமருந்தி்லையே.

என்றவாறே சலித்துக்கொண்டு அவர் தன் தலையில் அடிப்பது மனதுக்குள் தெரிகையில் அந்தப் பெண் மறைந்து போயிருப்பாள்.

ஆனால் இன்று இவர்கள் இருவருமே வரவில்லையே. ஒருவேளை இவளின் அழகை ரசிக்காமல் இவள் யாரென சிந்திப்பதால் இருக்குமோ? அவளை மீண்டும் பார்க்கிறேன். அதே கனிவான கண்கள். வைத்தகண் வாங்காமல் பார்க்கச் சொல்கின்றன. மற்றம்படிக்கு சாதாரணமாக பாடசாலையில் கூடப் படிக்கும் பெண்களில் ஒருத்தியாக பருமனுமாயில்லாமல் ஒடிசலுமாயில்லாமல் அளவாக அவள் இருந்தாள். உடலியல் ரீதியாக எவ்வித ஈர்ப்புமே அவளிடம் ஏற்படவில்லை. இவளை எங்கோ பார்த்திருக்கிறேன், பழகியிருக்கின்றேன் என்கின்ற சிந்தனை மட்டுமே சுற்றிச்சுற்றி வந்தது.

அவளும் என்னையே பார்த்துக்கொண்டிருப்பதுவாய் உள்ளுணர்வு குறுகுறுக்க மீண்டும் அவளைப்பார்க்கிறேன். என்னையே பார்த்துக்கொண்டிருந்தவள் நான் பார்ப்பதை அறிந்ததும் கீழே குனிந்து எனது கால்களைப்பார்க்குமாறு சைகையால் கூறினாள். கீழே குனிந்து பார்த்ததும் அதிர்ந்து விட்டேன். இருகால்களிலுமிருந்து குருதி சொட்டுச்சொட்டாய் வழிந்து கொண்டிருந்தது. அதைக்கவனித்த அருகிலுருந்த மாணவன் மலையட்டை கடித்துவிட்டதாகக் கூறி ஆசிரியையின் அனுமதியுடன் என்னை வெளியில் அழைத்து வந்தான்.

கழிப்பறையில் சென்று பார்த்தபோது நான்கு அட்டைகள் இரத்தம் உறிஞ்சிக் கொழுத்துப்போய் கால்களில் ஒட்டிக்கிடந்தன. ஏற்கனவே குருதியை அவை வயிறு நிறையக்குடித்திருந்ததால் அவற்றை இழுத்தெறிவது சுலபமாயிருந்தது. பின் கால்களைக்கழுவிவிட்டு வழியும் குருதியின் மேல் காகிதத்தை ஒட்டி விட்டு வகுப்பிற்குள் நுழைந்தோம்.

கட்டுக்கட்டாய் குறிப்புகளைத்தந்துவிட்டு, அடுத்த இரண்டாவது சனிக்கிழமை மீண்டும் சந்திக்கலாமெனக்கூறி ஆங்கில ஆசிரியை வகுப்பினை நிறைவு செய்ய, அவளாகவே என்னிடம் வந்தவள்,

“ஹோமத தங்?” (எப்படி இப்போ?) -என்றாள்.

எனக்கு எதுவுமே புரியாமல் அவளைப் பார்க்க,

“ஆர் யூ சிங்கள?" என்றவளிடம் “நோ" என்றேன்.

“ஓ! சொறி சொறி. ஐ தோட் யூ ஆர் சிங்கள. பை த பை, ஹவ் ஆர் யூ பீலிங் நவ்? ரேக் கெயார் எபவுட் லீச்சஸ்.”

என்றவாறே எனது பதிலுக்குக் காத்திருக்காமல் வெளியேறினாள்.

அப்படியானால் இவள் தமிழிச்சி அல்ல. நான்தான் வீணாகக் குழம்பிப்போயிருக்கிறேன். இதற்கு முன்னர் நான் இவளைப் பார்த்திருக்கவோ பழகியிருக்கவோ எந்தச் சந்தர்ப்பமும் இருக்கவில்லை. ஆயினும் இப்போதும் உள்மனம் சொல்லியது, இவளுடன் நான் நன்றாய்ப பழகியிருக்கிறேன் என்று. சிலவேளை இவளின் சாயலில் யாருடனும் என் சின்ன வயதுகளில் நான் பழகியிருந்திருக்கக்கூடும்.

வெளியேறிய மாணவர்களுடன் சேர்ந்து வெளியேற முயல அருகிலிருந்த மாணவன் தடுத்தான், இவன்தான் என்னைக்கழிப்பறைக்கு அழைத்துச் சென்று அட்டைகளை அகற்ற உதவியவன்.

“கொஞ்சம் பொறும் ஐசே! இப்ப போனால் வெளியில நிக்கிற சீனியேர்ஸ் ராக்கிங் பண்ணப் பிடிச்சுக் கொண்டு போயிருவாங்கள். அவங்கள் எல்லாம் போய் முடிஞ்சாப் பிறகு நாங்க போவம்”.

அரைமணி நேரத்தின் பின் வெளியே வந்த போது யாரையுமே காணக்கிடைக்கவில்லை. வரும் போது வந்த பாதையை ஒருவாறு கண்டுபிடித்து பற்றைக்குள்ளால் இரத்தம் உறிஞ்சும் அட்டைகள் பற்றிய மிகுந்த கவனத்துடன் இருவரும் இறங்கினோம். வீதியினை அண்மிக்கையில் தூரத்தில் ஒருவர் வருவது தெரிந்தது. அவர் ஒரு சிரேஷ்ட மாணவராக இருக்கலாமோ என்கின்ற அச்சம் எங்கள் இருவரிற்குள்ளும்.

கிளீன் சேவ்-உம், காலில் பாட்டா இறப்பர் செருப்பும், பெல்ற் இல்லாத ஜீன்சிற்குள் உள்விடப்பட்டிருந்த சேட்-உம் பார்ப்பவர்கள் யாருக்குமே நாங்கள் புதுமுகம் என்பதை உணர்த்தி விடும்.

“ஐசே! அவர் தமிழில கதைச்சால் நாங்கள் விளங்காத மாதிரி நிப்பம். சிங்களம் எண்டிட்டு விட்டிட்டுப் போயிருவேர்.”

என்றான் நண்பன். அவன் இப்போது நண்பனாகி விட்டிருந்தான். அருகில் நெருங்கி வந்தவர் எங்களைப் பார்த்ததும்,

“மல்லிலா ஒயா சிங்களத?” (தம்பிமார் நீங்க சிங்களமா?) - என்றார்.

ஓம் என்பதுபோலவும் இல்லை என்பது போலவுமாக தலையை மாறிமாறி ஆட்டினோம்.

“யூ நோ இங்கிலிஷ் றைற்? ஆர் யூ சிங்கள ஓ ரமில்?”

தயக்கத்துடன் “ரமில்” என்றோம்.

“பேய்ப்.... ஆருக்கடா சுத்துறீங்க? நடவுங்கடா பிறிட்ஜ் குவாட்டசுக்கு. இண்டைக்கு ரெண்டுபேரும் செத்தீங்கடா மவனுகளே.”




1 comment:

  1. Nice one. Now wondering you was a "hidden bucket" (I mean "Kazhzha Vaazhi")

    ReplyDelete