Monday, August 31, 2009

கனவினைக் குழைத்தொரு



அவனுக்குக் குழப்பமாயிருந்தது. எப்படி இப்படி? தலை விண்விண்ணென வலியைக் கிளப்பிக் கொண்டிருந்தது. இது மப்புத்தான். ஆனால் எப்படி? அவனுக்கு சுத்தமாக நினைவிற்கு வரவில்லை. யாருடன் சென்றிருப்பான் எனக் குழப்பமாயிருந்தது. நிச்சயமாக இது பியராக இருக்க முடியாது. அவனது பிரியத்திற்குரிய ரைகர் பியர் ஒருபோதும் இப்படியான ஒரு போதையைத் தந்ததில்லை. இது வேறு. எல்லாமே குழம்பிப்போன நிலை. அழைத்துச் சென்றவன் வேறு ஏதேனும் 'பெரிசு' கலந்து தந்திருப்பானோ?. இல்லையில்லை. இது கனவு. வெறும் கனவு மட்டுமே. இது நிஜமெனில் கூட வந்தவனையாவது அவன் நிச்சயம் நினைவில் வைத்திருந்திருப்பான். மழைக்கால இருட்டென்றாலும் மந்தி கொப்பிழக்கப் பாயாது என்பதற்கு இன்றுவரை அவன் உதாரணமாய் இருந்தவன். ஆக இது கனவே தான். கனவில் மட்டுமே சம்பந்தாசம்பந்தமில்லா நிகழ்ச்சிகள் வரும். அவன் இதைக் கனவென்றே நம்பத் தொடங்கினான்.

கனவென்பது மனதிற்கு உறுதியானதும், கனவிலேயே அவன் தான் குடித்திருக்கின்றேனா என்பதை உறுதிப்படுத்த விரும்பினான். எழுந்து நடந்தான். உடல் இலேசாகியிருந்தது போன்ற உணர்வு. மெல்ல வீதியைக் கடந்து நடைபாதையில் நடந்தவன் எதிர்பாராத விதமாய் எதிரே வந்தவருடன் மோதிக்கொண்டான். பலத்த இடி முன்நெற்றியில். தடவிவிட்டுக் கொண்டான். வலி அடங்குவதாய்த் தெரியவில்லை. கனவென்றால் இப்படி வலிக்காதே. ஒருவேளை இது நிஜமோ? தன்னைத்தானே கையில் கிள்ளிக் கொண்டான். வலிமட்டுமல்லாது கிள்ளிய இடம் கன்றிப்போய் இருந்தது. அப்படியானால் இது கனவல்ல. இது நிஜமென்று இப்போது நினைக்கத் தொடங்கினான்.

வயிறு பசித்தது. சற்றுத் தொலைவில் சாப்பாட்டுக்கடை தெரிந்தது. அருகே செல்ல ஊதுவத்தி வாசனை மூக்கைத் துளைத்தது. இருக்கையில் அமர முன்னுக்கிருந்தவர்கள் கையை உதறி விட்டு எழுந்தார்கள். பணியாளுடன் பிரச்சனைப்பட்டுக் கொண்டே கல்லாவை நெருங்கியவர்கள். “தோசையின்ர திறத்தில ஆட்டுக்கல்லுக்கொரு மாலை” என்று கோபமாகத் திட்டியவாறே வெளியேறினார்கள்.

அவன் ஆட்டுக்கல்லைப் பார்த்திருக்கிறான். அதில் தோசைக்கு மாவாட்டியுமிருக்கிறான். மாலை போடப்பட்டிருந்த ஆட்டுக்கல்லை உற்று நோக்கினான். அது ஆட்டுக்கல்லல்ல. அவனுக்கது உறுதியாய்த் தெரிந்தது. ஆட்டுக்கல்லின் வடிவில் அமைந்தவொரு உருவம். அந்த உருவத்தை அவன் முன்னரும் பார்த்திருக்கிறான். அந்த உருவத்தைப் பற்றி அவன் புத்தகங்களிலும் வாசித்திருக்கிறான். சட்டென எதுவும் நினைவிற்கு வரவில்லை. அவனுக்கு அங்கிருக்கப் பிடிக்கவில்லை. எழுந்து மீண்டும் நடக்கத் தொடங்கினான்.

இப்போது அவனுக்கு சந்தோசமாயிருந்தது. அது பற்றிய சிறுகுறிப்பொன்று அவன் நினைவிற்கு வந்து விட்டது. அதைப் பற்றிக் கண்ணதாசனின் நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது கலவி நிலையைக் குறிக்கும் ஒரு குறியீடு. புணர்ச்சி நிலையை எதற்காய் ஒரு குறியீட்டால் காட்டவேண்டும். பின் எதற்காய் அதற்கு மாலை போடவேண்டும். ஆகா! அங்கே ஏதேனும் சக்தி ஒளிந்து கிடக்கிறதோ? அதுதானே! புதிதாய் ஒரு ஜீவனை வேறெந்தக் கருவிகளால் உண்டாக்க முடியும்? ஏதோ புரிவது போலவும் புரியாதது போலவும் தோன்றியது. குழப்பம் மறுபடி கூடுவதாய்த் தோன்றியது. இது கனவா இல்லை நனவா என்கின்ற சந்தேகம் மீண்டும் முளைத்தது. இரண்டு பியர் அடித்துவிட்டுப் பேசாமல் போய்ததூங்கி விடலாம் என்றது மனது.

அவன் நடந்து சென்ற பாதையிலேயே அவன் வழக்கமாகச் செல்லும் அந்தக் கடையும் இருந்தது. அவன் தனது வழமையான இருக்கையில் அமர்ந்ததுமே தனது வாடிக்கையாளரைக் கண்டுவிட்ட அந்த இளம்பெண் அவனுக்குப் பிரியமான ரைகர் பியருடன் அவனை நெருங்கினாள். என்றுமில்லாதவாறு இன்று அவள் மிகவும் கிளர்ச்சியூட்டுபவளாய்த் தெரிந்தாள். 'கறந்த இடம் கண்நாட பிறந்த இடம் மனம் நாட...'

ச்சே! எனக்கு என்னவோ ஆயிற்று அவன் மிகத் தீவிரமாகக் குழம்பினான். இது கனவா நிஜமா? எப்படி உறுதிப்படுத்துவது? அந்தப் பெண்ணிடமே ஒரு வெற்றுத்தாளும் ஒரு பேனையும் கொண்டுவருமாறு கேட்டுக் கொண்டான். இப்போது அவனுக்குத் திருப்தியாய் இருந்தது. இது நிஜமெனில் தான் எழுதுவதே ஒரு படைப்பாய் மாறக்கூடும் என அவன் நம்பினான். இல்லை இதுவொரு கனவெனில் தூக்கம் கலைந்த பின்னர் எழுதிய தாள் இருக்காதே. ஆகவே இது கனவென்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவன் நினைத்தான். அவன் தன் மனதில் தோன்றுபவற்றை காகிதத்தில் எழுத நினைத்தான்.

பேனாவை ஒருதடவை பார்த்தவனின் பார்வை அதிலேயே பல நிமிடங்களுக்குத் தொடர்ந்தது. இந்த முனைவடிவை வேறெங்கோ பார்த்திருக்கிறேன். அவன் பார்வையில் இப்போது அந்தப் பேனா மறையத் தொடங்கியிருந்தது. திடீரென அது ஒரு துப்பாக்கிக்குண்டின் முனைப்பகுதியாய் அவன் நெஞ்சைக் குறிபார்த்தது. இந்தச் சின்ன ரவை என்னை என்ன செய்யும் என்று எழுந்த அலட்சியம் சில நொடிப்பொழுதுகளிலேயே அமுங்கிப் போனது. இப்போது அது 50 கலிபர் துப்பாக்கியின் ரவையின் அளவிற்கு வளர்ந்து விட்டிருந்தது. அவனுக்குள் பயம் வேர்விடத் தொடங்குகையில் அது ஒரு ஆர்பிஜி எறிகணையின் அளவிற்கு வளர்ந்திருந்தது. அது தொடர்ந்து வளர்ந்து கொண்டேயிருந்தது. இப்போதைய அதன் பரிமாணத்தை அவன் தன் சின்ன வயதில் பார்த்திருக்கிறான். 50 கிலோகிராம் எடையுள்ள வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட விமானத்திலிருந்து வீசப்பட்டவொரு குண்டினை அவன் 1985ஆம் ஆண்டு காலப் பகுதியில் யாழ்/புனித பததிரிசியார் கல்லூரியில் இடம்பெற்ற கண்காட்சியில் பார்த்திருக்கிறான். பின்நாட்களில் அதை விடப் பாரிய பலமடங்கு எடையுள்ள விமானக்குண்டுகளைப் பார்த்திருந்தாலும் அந்த வடிவத்தில் அவன் பார்த்திருந்த மிகப் பெரிய குண்டு அதுவாகவேயிருந்தது. எனவே இதைவிடப் பெரிதாக அந்தப் பேனா வளரமுடியாது என்கின்ற அவன் கணிப்பைப் பொய்யாக்கி அது மேலும் வளரத் தொடங்கியது.

ஒருவேளை அணுகுண்டு இந்தளவாக இருக்குமோ என்று அவனுள் எழுந்த அனுமானத்தின் அளவுடன் ஒப்பிடுகையில் அந்தப் பேனா சிறிதாகவேயிருந்தது அவனுக்கு ஆறுதலைத் தந்தது. ஆயினும் அது தொடர்ந்து வளர்ந்து அவன் கற்பனையைத் தகர்க்க அவன் உடையத் தொ்டங்கினான். இப்போது அந்தப் பேனாவைப் பார்க்கையில் அதன் முகப்புத் தோற்றம் ஒரு பாரிய விமானத்தின் முகப்பைப் போல் தோன்றியது. இன்னொரு பார்வையில் அதுவொரு நீர்மூழ்கிக் கப்பலின் முகப்பை ஒத்திருந்தது. எப்படியெனினும், தன்னால் வளர்ந்துகொண்டிருக்கும் அந்தப்பேனாவை, தான் அறிந்த வேறொரு பொருளுடன் ஒப்பிடக்கூடியதாயிருப்பதில் அவனுக்குள் ஒருவகை திருப்தியும் சந்தோஷமுமே காணப்பட்டன.

அந்தப் பேனாவை அற்பமாய்ப் பார்த்தான். அது இப்போது விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. முடியாது. இதற்குமேல் இதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கவோ கற்பனை பண்ணிப்பார்க்கவோ அவனால் முடியாது என்பதை உணரத் தொடங்கினான்.

விஸ்வரூபமாய் விரிவடைந்திருந்த பேனா இப்போது அவனை இந்தப் பேரண்டத்தின் ஒரு கோடிக்குள் தள்ளிவிட்டு எங்கும் நீக்கமற விரிவடைந்திருப்பதாய் உணர்கையில் அவன் உருகத் தொடங்கியிருந்தான். அவனுக்குள் ஏற்கனவே உருவாக்கி வைத்திருந்த ஒப்பீடுகளும் எல்லைகளும் உடைந்து சிதறின. அவன் நாபிக்கமலத்திலிருந்து புறப்பட்டு “ஓம்” என்றவாறே அகிலமெங்கும் அதிர்ந்து பரவிய உட்சக்தியுடன் அவன் இலேசாகி, மேலும் இலேசாகி, மேலும் மேலும் இலேசாகி எங்கும் கலக்கத்தொடங்கினான். பின் கரைந்து காணாமல் போனான்.

6 comments:

  1. நல்ல நயமான கர்பனை எழுத்துகள்

    ReplyDelete
  2. ஆழ்ந்த துயர மடுவில் மூழ்கிக் க்ண்டிருப்பவனது மனச் சித்திரங்களைத் தீட்டியுள்ளீர்கள்,வலசு.
    உளவியல் செறிவுள்ள அழுத்தமான படைப்பு.

    ReplyDelete
  3. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஆ.ஞானசேகரன்

    ReplyDelete
  4. வரவிற்கும் தங்களின் கருத்திற்கும் நன்றி ஷண்முகப்ரியன்

    ReplyDelete
  5. ethirpaaraatha tharunangalai santhikka neernthathupol irunththu
    mugunththa vali erpaduthiya padaippu

    ReplyDelete
  6. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி thenammailakshmanan

    ReplyDelete