Monday, August 24, 2009

நினைவுகளில் நீ

முதற்காதலும் முதல்முத்தமும் மட்டுல்ல
முதன்முதலாய் மரிக்கப்பட்ட நட்பும்
மறக்க முடியாதது தான்.

காதலில் தொலைந்தவர்கள் மட்டுமல்ல
நட்பைத் தொலைத்தவர்களும்
கவிதை வரையத் தொடங்கலாம்.

ஜெயந்தா!
அகமகிழ்ந்திருந்தோம்
அஜந்தா ஓவியமாய்
அழியாப் புகழ்பெறுவாயென.

பதின்மப் பருவத்தின்
ஆரம்பப் படிக்கட்டில் நாம்.
உனக்கென்ன வயதப்போ?
பதின்மூன்றா பதின்நான்கா?

பாலகராய்த்தான் நாம்
பள்ளிக்குச் சென்று வந்தோம்.
பாதகர்கள வந்தார்கள். எம்மைப்
பரிதவிக்கச் செய்தார்கள்.

கொடியபடை பாதைகண்டு
விலகிவிட நின்ற உந்தன்
முன்னிருநாள் பசியறிந்த
சிற்றன்னை கஞ்சி தந்தாள்.

கஞ்சி வாயில் வைக்கவில்லை,
கயவர் வாயில் வந்து விட்டார்.
ஓடச்சொல்லிப் பணித்துவிட்டு
சடசடத்தது அவர் துப்பாக்கி.

ஓட்டப் பந்தயத்தில்
எப்போதும் நீ முதலிடம்தான்.
வெற்றிக்கம்பம் தாண்டிக்கூட
களைத்து நீ வீழ்ந்ததில்லை.

இம்முறை நீ வீழ்நதாயாம்.
வீழ்ந்தபின் எழவேயில்லையாம்.
நீ மட்டுமல்ல உன் அயலவர்கள்
எல்லேர்ரும் உன்னுடன் தானாம்.

சேதி அறிகையில் நெஞ்சு துடித்தது.
ஆதி மூலமோ அறியாத் துயிலிலாம்.
ஆரொடு நோவோம்? ஆர்க்கெடுத்துரைப்போம்?
வேரொடு பிடுங்கி, வீசப்பட்ட எம்வாழ்க்கை

உடல்கள் அழியலாம் கொண்ட
உறவுகள் அழிவதில்லை. நீ
மறைந்தாலும் உன் நினைவுகள்
மறைவதில்லை.

(24-08-1990 அன்று வேலணையில் சிறிலங்காப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட இன்பநாயகம் ஜெயந்தனின் 19ம் ஆண்டு நினைவாகவும் அன்றைய தினத்தில் படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களுக்காகவும்)

10 comments:

  1. உடல்கள் அழியலாம் கொண்ட
    உறவுகள் அழிவதில்லை. நீ
    மறைந்தாலும் உன் நினைவுகள்
    மறைவதில்லை.

    ReplyDelete
  2. உங்கள் வலிக்கும் நினைவுகளுடன் எனது அஞ்சலியும் கலக்கட்டும்,வலசு.

    ReplyDelete
  3. இதயம் நொருங்கிய இந்த பதிவின் மூலம் ஏற்பட்ட துயரில் நானும் இணைந்து கொள்கிறேன். இப்படி எத்தனையோ இழப்புகளில் இதயம் இன்றும் நெருப்பாய் எரிந்து கொண்டு இருக்கிறது.

    ReplyDelete
  4. //முதற்காதலும் முதல்முத்தமும் மட்டுல்ல
    முதன்முதலாய் மரிக்கப்பட்ட நட்பும்
    மறக்க முடியாதது தான்.//

    உங்களின் வலி எனக்கு புரிகின்றது நண்பா

    ReplyDelete
  5. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி Thevathasan Yogalingam

    ReplyDelete
  6. வரவிற்கும் வலிப்பகிர்விற்கும் மிக்க நன்றி ஷண்முகப்ரியன்

    ReplyDelete
  7. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஆ.ஞானசேகரன்.

    ReplyDelete
  8. வரவிற்கும் கருத்திற்கும் நன்றி கதியால்
    //
    இப்படி எத்தனையோ இழப்புகளில் இதயம் இன்றும் நெருப்பாய் எரிந்து கொண்டு இருக்கிறது.
    //
    உண்மைதான்

    ReplyDelete
  9. எங்க பக்கம் வருவதற்கு யாருக்கும் தடையில்லை.
    எனவே பயப்படாமல் அடிக்கடி வந்து போகலாம்.
    வாங்க வாங்க.......வந்து கொண்டே இருங்க.
    இங்கு கதவே இல்ல ........

    ReplyDelete
  10. உங்களின் வருகைக்கும் வரவேற்பிற்கும் நன்றி பிரபா

    ReplyDelete