Wednesday, August 5, 2009

வேரென நீயிருந்தாய்...(4)

மேற்கு வானின் செக்கச்சிவப்பு மங்கிக்கொண்டிருக்க, கடலின் மேற்பரப்பு மினுங்கிக்கொண்டிருந்தது. இதமான காற்றிற்கு காதோரம் சிலிர்த்தது. மேகங்களற்ற வானில் வெள்ளிகள் பூக்கத் தொடங்கியிருந்தன. கப்பலின் மேற்தட்டில் இருந்தவர்களில் வயதானவர்கள் உட்தட்டுகளுக்குள் தஞ்சம் புகத்தொடங்கியிருந்தனர். கப்பலின் இருபுறமும் தொலைவினில் இரண்டு 'டோரா'க்கள் தங்களுக்கான பணிகளில் ஈடுபட்டிருந்தன.

அணியத்தை ஆக்கிரமித்திருந்தவர்கள் விலக நாங்கள் அணியத்தை அண்மித்தோம். பாரிய நங்கூரம் பக்கத்தில் படுத்திவைக்கப்பட்டிருந்தது. அணியத்திலிருந்து கீழே கடலினைப்பார்க்க அடிவயிற்றினுள் ஏதோ புரள்வது போல் இருந்தது. நீர்ப்பரப்பைக்கிழிக்கும் முனைப்புள்ளியில் பட்டு கடல் இரண்டாகப் பிரிவதுபோல் தோன்றியது. கடலில் எழும் அலைகளால் கப்பலின் ஆட்டம் அணியத்தில் அதிகமாய் இருந்தது.

“ஐசே! எனக்குத் தலையைச் சுத்துறது போல வருகுது. வாங்க உள்ளுக்க போவம்.”
கூட வந்திருந்த நண்பர்களில் ஒருவன் கூறினான்.

“கொஞ்சம் செல்லப் போவம் ஐசே! இப்ப உள்ளுக்குள் ஒரே சனமாயிருக்கும். கத்திக் கொண்டிருக்குங்கள். எல்லாரும் நித்திரையாப் போனாப்பிறகு நாங்க போய் நித்திரையைக் கொள்ளுவம்.”
-இது மற்ற நண்பன்.

எனக்கோ இன்றைய இரவு முழுதையும் வானத்தைப் பார்த்தவாறே இருக்க வேண்டும் போல் இருந்தது.

“நாங்கள் இண்டைக்கு இரவுமட்டும்தான் இப்பிடிக் கடலில இருக்கேலும். இதுக்குப் பிறகு எப்ப எங்களுக்குச் சான்ஸ் (chance) கிடைக்குமோ தெரியாது. அதால இண்டைக்கு இரவு இதிலையே படுப்பம் ஐசே!” 
-என்றேன்.

இரண்டாவது நண்பன் சம்மதிக்க முதல் நண்பன் உட்தளத்துக்குள் சென்றான். பின் நாங்களும் உள்ளே சென்று ஆளுக்கொரு பாயினை எடுத்துக் கொண்டு மேலே வந்தோம். பாய் வெறும் ஊத்தையாகக் கிடந்தது. அமெரிக்கன்மா (கோதுமை மா) வேறு அதில் அப்பிக் கிடந்தது.

“இந்தமுறை கப்பலில மா தான் வந்திருக்குப்போல.” 
என்றான் நண்பன்.

சரக்குக் கப்பலான 'லங்கா முதித' யாழிலிருந்து திருகோணமலைக்குத் திரும்புகையில் ஒருநாள் அவகாசத்தில் பயணிகள் கப்பலாக மாறியிருந்தது. பாயினை அருகில் வைத்து விட்டு அண்ணாந்து வானத்தினைப் பார்த்தேன். வடக்கு வானில் துருவ நட்சத்திரம் துலங்கிக் கொண்டிருந்தது. 'பெருங்கரடி' யின் ஏழு நட்சத்திரங்களும் மிகத் தெளிவாக தெரிந்தன. உச்சி வானத்தில் சிங்கத்தின் தலைக்கான வினாக்குறி வடிவமைக்கும் நட்சத்திரங்களுடன் அதன் வால்ப்பகுதிவரை நீண்ட, முக்கோண வடிவமைக்கும் நட்சத்திரங்களும், கிழக்குத் திசையிற்குக் கோடிழுக்கும் மூன்று நட்சத்திரங்களென திசையறிவதற்கு திசைகாட்டி, இரவினி்ல் அவசியமற்றது என்பதைத் தெளிவாக உணர்த்தின.

நண்பனிடம் நட்சத்திரங்களைக் காட்டி, “நாங்க ஏழாம் வகுப்பில படிச்சது உங்களுக்கு ஞாபகம் இருக்கா” என்று கேட்டது அவனுக்கு விசரைக் கிளப்பியிருக்குமென நினைக்கிறேன். எதுவும் பேசாமல் பாயை விரித்துப் படுத்துக் கொண்டான். நானும் பாயினை விரித்துப் படுத்துக் கொண்டேன். நித்திரை வர, முதல்தடவையாக அடம் பிடித்தது. தெற்கு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த கப்பலின் அணியத்தின் கைப்பிடிகளுக்கிடையால் தென்சிலுவை காட்சியளித்தது. ஆனி மாதத்தின் (June) நேரம் நடுநிசியை அண்டுவதை மேலே வரத்தொடங்கியிருந்த ஆங்கில 'J' வடிவிலமைந்த விருச்சிக இராசியினைக் குறிக்கும் நட்சத்திரங்களும், அதன் அருகே காணப்பட்ட தனுசு இராசிக்கான நட்சத்திரங்களும் உணர்த்தின.

காற்று சற்றே கடுமையாக வீசத் தொடங்கியிருந்தது. காற்று அள்ளிவந்த கடலலைகளிளின் துமிதங்கள் சில எங்கள் மீதும் விழத்தொடங்கியிருந்தன. அருகே திரும்பி நண்பனைப் பார்த்தேன். நன்றாக பாயினைச்சுருட்டிக் குறங்கிக்கிடந்தான். குளிர் அதிகமாகவே கைகள் அனிச்சையாகப்பாயினைப் போர்வையாக்கின. உறக்கம் வர மறுக்கவே விழிகள் மீண்டும் வானத்தை வெறித்தன. அது முன்னிரவுக் காலமாதலால் அப்போதுதான் கீழ்வானில் நிலவு காலிக்கத்தொடங்கியிருந்தது. நட்சத்திரங்கள் எல்லாம் என்னையே பார்த்துக்கண்சிமிட்டுவதாய் மனதுக்குப்பட்டது. 

எத்தனை ஆண்டுகள் ஓடிவிட்டன இப்படி வானத்தைப் பார்த்து சிநேகத்துடன் சிரித்து? நெஞ்சு சிலிர்த்தது. அக்காவும் இப்போது வானத்தைப் பார்ப்பாளா? இதோ, என்னைப் பார்த்துக் கண்சிமிட்டும் இந்த ஒற்றை நட்சத்திரத்தை அக்காவும் பார்ப்பாளா?

நட்சத்திரங்களுடனான அறிமுகத்தை எனக்கு ஏற்படுத்தித்தந்தவளே அவளல்லவா. நட்சத்திரங்களுக்கும் கிரகங்களுக்குமான வேறுபாட்டை, செந்நிறமான செவ்வாய்க்கிரகத்தை, துல்லியமான வியாழனை, புதன், சனி, சுக்கிரன் என்பவற்றுக்கிடையிலான வேறுபாடுகளையெல்லாம் கற்றுத்தந்தவள் அவள்.

அக்கா! எங்கேயிருக்கிறாய் நீ? எப்படியிருக்கிறாய்? எப்படிப்பட்ட சூழ்நிலையினையும் சமாளித்து கலகலப்பாக்கும் நீயில்லாமல், இப்போது நானுமில்லாமல் அம்மா மட்டும் நம் நினைவுகளுடன் எப்படித்தான் தனித்திருக்கப்போகிறாவோ? உன் ஆசையை நிறைவேற்றும் பயணத்தில் நான் பயணிக்கத்தொடங்கியிருப்பதை நீ அறிவாயா? உனது பயணம் நீண்டநெடிய பயணம் என்பதை நானறிவேன். உன்னைத்தொடர்பு கொள்ளமுடியா இடத்தில் நீ. 

ஏ நிலவே! காதலர்க்குத்தூது செல்லும் நீ எனக்காக என் சகோதரியிடம் சேதி சொல்லாயோ. “நிலவு வந்து பொழியும் நேரம் நீ வரவில்லை” என்றவாறல்லவா அவள் சென்றுவிட்டாள். எந்தக்காப்பரணுக்குள் அவள் விழி இமைக்காதிருக்கிறாளோ? அந்த மெல்லியலாளை, வீட்டிலுருக்கையில் வெளியே தனித்துச்செல்லவே அஞ்சியவள், இன்று காலமிட்ட கட்டளையில். அப்பாவைக் காணாமல் ஆக்கியவர்களை எம்மண்ணிலிருந்து காணாமலாக்கும் பணியில்.

ஓ! இன்றைக்கு ஆனி எட்டாந் தேதி. இதே தேதியில் ஏழுவருடங்களுக்கு முன்னர், 1990இல் ஊரில் எத்தனை சந்தோசமாகப்பொழுது கழிந்து கொண்டிருந்தது. கோட்டைப்பிரச்சனையை அடுத்து பாடசாலைகள் யாவற்றிற்கும் விடுமுறை விடப்பட்டிருந்ததால் எல்லோருமே வீட்டில் கூடிக் குதூகலித்துக் கொண்டிருந்தோம். யார் கண் வைத்தார்களோ? 1990 ஆவணி (August) 22உடன் எமது சந்தோசங்கள் அனைத்தும் குழிதோண்டிப் புதைக்கப்பட்டன. கோட்டையில் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டிருந்த படையினரை மீட்கவென அன்றைய தினத்தில் ஊர்காவற்றுறையில் சிங்களப்படையினர் தரையிறக்கப்பட்டிருந்தனர். அன்றைய காலையே பொம்மர் வந்து வங்களாவடிச்சந்தியில் குண்டுகளை வீசிவிட்டுச் சென்றிருந்தது. பின் உலங்குவானூர்திகள் சகட்டுமேனிக்கு 50 கலிபர்களாலும் ரொக்கட் குண்டுகளாலும் மக்கள் எல்லோரையும் பதுங்குகுழிகளுக்குள் முடங்கச் செய்திருந்தன. தொடர்ந்துவந்த நாளும் அவ்வாறே கழிய மறுநாள், அந்தநாள் 24 ஆவணி (August) 1990, எம்மூர் மக்களின் வாழ்வில் மறக்கமுடியாநாள். முச்சக்தி (திரிவிடபலய) நடவடிக்கை மூலம் சிறிலங்கா இராணுவம் எம்மூர்களைச்சிதைத்து அழித்தநாள். ஆமி வருகுது. ஓடுங்கோ என்று அயலவர்கள் சொல்ல என்னுடன் அக்காவையும் அம்மாவையும் “வங்களாவடியடிக்கு அங்கால புங்குடுதீவுப்பக்கமா போங்கோ. நான் முக்கியமான சாமான்களை எடுத்துக்கொண்டுவாறன்” என்று சொன்ன அப்பாவை, அதற்குப்பிறகு நாங்கள் யாருமே காணவில்லை. ஆமி மண்டைதீவுக்குச்சென்றபின்னர் அராலி வெளியிலும், அருகுக்காணிகளிலும் வைக்கோலால் மூடப்பட்டுக்கிடந்த இறந்த சடலங்களுக்குள்ளும் காயம்பட்டவர்களுக்குள்ளும் அப்பாவைக் காணக்கிடைக்கவில்லை. “மண்டைதீவில் வைத்து உங்கட அவரக் ஹெலியில ஏத்தினதைக் கண்டனான்.” என்று தெரிந்தவர் ஒருவர் சில நாட்களின் பின் அம்மாவிடம் கூறினார். அதன்பின்னர் எந்தத்தகவலும் யார்மூலமும் அறியக்கிடைக்கவில்லை. அப்பாவின் பொறியியல் கனவை என்னை நிறைவேற்றுமாறு சொல்லிவிட்டு அக்கா வீட்டைவிட்டுப் புறப்பட்டுவிட்டாள்.

இருண்டவானம் விடியத் தொடங்கியிருந்தது. வந்திருந்தவர்கள் எல்லோரும் காலைக்கடன்களை முடிப்பதற்கு முண்டியடிக்கத்தொடங்கின்ர். எல்லாப் பாதுகாப்புச் சோதனைகளும் முடிந்து திருமலைத் தரையிற் கால் பதிக்க நேரம் மதியத்தை எட்டியிருந்தது. திருமலை நகரத்தனை அடைந்து மதிய உணவை முடிக்கையில் நேரம் 3.00 மணியைக்கடந்திருந்தது. மூவருக்கும் எங்கு செல்வதென்று தெரியவில்லை.

நண்பன் றோசனின் வீட்டிற்கு அருகிலிருந்த பொதுத்தொலைபேசியினூடாக அழைப்பினை ஏற்படுத்தினேன். அவனின் தாயார் மூவரையும் வீட்டிற்கு வருமாறு கூறினார் முகவரியைப் பெற்றுக் கொண்டு, தயக்கத்துடனும் பயத்துடனும் ஓட்டோ ஒன்றினை வாடகைக்கு அமர்த்திக் கொண்டே Orrs Hill இற்கு போகுமாறு கூறினோம். சிறிது நேர பயணத்தின் பின், 

“இதில நீங்க எங்க போகவேணும்?” 
என்றார் ஓட்டோக்காரர். 

அருகிலிருந்த கடையின் பெயர்ப்பலகையில் உவர்மலை என்று இருக்கவே 

“நாங்க Orrs Hill இற்குப் போகவேணும்.” 
என்றேன். 

“இதுதான் Orrs Hill” 
என்றவர் நாங்கள் விழிப்பதைப் பார்த்து, 

“உவர்மலையைத் தான் Orrs Hill எண்டும் சொல்லுறது” 
என்றார். 

நாலாம் ஒழுங்கையில் 41ஆம் இலக்க வீட்டினில் ராயேஸ்வரி அம்மாவைக் கண்டவுடன்தான் நெஞ்சிற்குள் நிம்மதி வந்தது.

உபசரிப்பின் பின் மறுநாள் காலை ஆனி 10, 1997 அன்று, எங்கே புறப்படுவதென்ற தயக்கத்துடன் வவுனியாவில் உள்ள பெரியம்மாவின் மகனுக்கு அழைப்பினை ஏற்படுத்தினேன். அவரோ மிகுந்த பதட்டத்துடன்,

“இயக்கம் வவனியாவுக்குள்ள அடிச்சுக்கொண்டு வந்து கொண்டிருக்கிறாங்கள். தாண்டிக்குளம் எல்லாம் பிடிச்சிற்றாங்களாம். இஞ்ச சனமெல்லாம் ஓட ஆயத்தப் படுத்துதுகள்.” 
என்றார். 

அது வெற்றி நிச்சயம் (ஜெயசிக்குறு) நடவடிக்கைக்கு எதிராக செய் அல்லது செத்துமடி-1 நடவடிக்கையென மறுநாள் கொழும்பில் பத்திரிகை வாசிக்கையில் தெரியவந்தது.


5 comments:

  1. //...உனது பயணம் நீண்டநெடிய பயணம் என்பதை நானறிவேன். உன்னைத் தொடர்பு கொள்ளமுடியா இடத்தில் நீ. ஏ நிலவே! காதலர்க்குத் தூது செல்லும் நீ எனக்காக என் சகோதரியிடம் சேதி சொல்லாயோ. “நிலவு வந்து பொழியும் நேரம் நீ வரவில்லை” என்றவாறல்லவா அவள் சென்றுவிட்டாள். எந்தக்காப்பரணுக்குள் அவள் விழிஇமைக்காதிருக்கிறாளோ? அந்த மெல்லியலாளை, வீட்டிலுருக்கையில் வெளியே தனித்துச் செல்லவே அஞ்சியவள், இன்று காலமிட்ட கட்டளையில். அப்பாவைக் காணாமல் ஆக்கியவர்களை காணாமலாக்கும் பணியில்....//

    இது கதையா நிஜமா தெரியவில்லை. ஆனால் என் கண்களில் கண்ணீர் நிஜம். தாங்க முடியவில்லை. சத்தியமாக சொல்கிறேன். அழுவதை தவிர எதையும் சிந்திக்க முடியவில்லை.

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கதியால்.
    நிஜங்களின் வலி, தாங்கமுடியாதது.

    ReplyDelete
  3. அமெரிக்கன்மாவை ஏற்றும் சரக்கு கப்பலில் மணிச்சரக்குள்ள மாக்களை ஏற்றிய காரணத்தால் "லங்கா முதித" கப்பல் மணிச்சரக்கு கப்பல் என்று பெயர் மாற்றம் பெறுகின்றது....!!!!

    நிஜங்களின் வலியை கதியால் போட்டு அடைக்கமுடியாது என்பது நிஜமே......!!!!!

    அன்புடன் ஆரூரன்

    ReplyDelete
  4. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஆரூரன்

    ReplyDelete
  5. காலம் இட்ட கட்டளையல்ல அன்பரே. (கரி)காலன் இட்ட கட்ட கட்டளை.மோதியழிந்து முகவரிகள் இழந்துவிட்டோம். முகாரி பாட இதுவல்ல நேரம். மூலைக்குள் பதுங்காமல் மூளைக்கு வேலை கொடு. நாளை நமக்காகவும் விடியலாம். நம்பிக்கையுடன் எழுந்திரு.

    ReplyDelete