Wednesday, July 8, 2009

பேய்களும், பேயர்களும், பேய்க்காட்டுதல்களும்

நேற்றைய தினம் இணையத்தளங்களில் மேய்ந்துகொண்டிருந்த வேளையில் மைக்கல் ஜாக்சனின் ஆவியானது அவரது NEVERLAND PLACE இல் தென்பட்டதெனக் கூறப்படும் செய்தியினையும் அது தொடர்பானவொரு காணொலியினையும் பரவலாக அவதானிக்கக் கூடியதாக இருந்தது. பின் ஆவிகள் அல்லது பேய்கள் எனக் கூறப்படுபவை தொடர்பாக google-இல் தேடியே நேற்றைய பொழுதில் நான் தொலைந்தே போனேன்.

உண்மையிலேயே பேய்கள் இருக்கின்றனவா? அல்லது பேய் என்பதே ஒரு பேய்க்காட்டல் தானா? எத்தனைபேர் பேயைக் கண்டிருக்கிறார்கள்? உண்மையிலேயே அவர்கள் கண்டது பேய்தான் என்பதை எப்படி நம்புவது அல்லது ஏற்றுக்கொள்வது? பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பிரபலமாக்கும் நோக்கத்துடனேயே பேய்கள் அல்லது ஆவிகள் பற்றிய கதைகள் கிளப்பிவிடப்படுகின்றன. ஆனாலும் உலகெங்கும் காணப்படும் அனைத்த சமூகப் பிரிவினரிடையேயும் இந்தப் பேய்கள் பற்றிய நம்பிக்கை அல்லது மூடநம்பிக்கை கடவுளைப் போலவே பரவிக் கிடக்கிறது என்பதே உண்மையாகவும் இருக்கிறது. கடவுள் என்று பரவலாகக் கருதப்படுகின்ற ஒன்று இருக்குமானால் பேய்களும் இருந்தே ஆகவேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.

எது எப்படியிருந்தாலும் பலவகையான பேய்களைப் பற்றிய தகவல்களை நாங்கள் அறியக்கூடியதாய் இருக்கின்றது. சேற்றுநிலங்களில் காணப்படும் கொள்ளிவால்ப்பேய். இதைக் கண்டால் கட்டியிருக்கிற வேட்டியை (அந்தக்காலத்தில் அநேகமாக ஆண்கள்தான் சேற்றுநிலங்களுக்குச் செல்வார்கள். அத்துடன் வேட்டி தான் அவர்களுடைய ஆடையாகவும் இருந்து வந்தது) அவிழ்த்து தலையில சுத்திக்கொண்டு கால் தெறிக்க ஓடவேண்டும் என்று சொல்வார்கள். (விஞ்ஞான ரீதியில் இதற்கு காரணம் உயிர்வாயு என்பது வேறு விடயம்). புளியமரத்தில் வசிக்கும் முனி. இரவில் புளியமரத்திற்கு கீழே சென்றாலோ அல்லது அதன் கீழ் படுத்து உறங்கினாலோ முனி அடித்துவிடும் என்பார்கள். இரவில் மரங்களும் சுவாசத்தை மேற்கொண்டு கரியமிலவாயுவை வெளியிடுவதால் பிராணவாயுவிற்கான பற்றாக்குறை ஏற்பட்டு மயக்கநிலை உண்டாகக்கூடும். மோகினிப்பிசாசு. இது இரவுவேளைகளில் தனியே செல்லும் ஆண்களைக் குறிவைத்தே அலையுமாம். வெண்ணிற ஆடையுடன் தோற்றமளிக்கும் இதனிடமிருந்து மல்லிகை வாசம் வீசும் என்றும், இதனிடமிருந்து தப்பிக்க வேண்டுமெனில் “சுண்ணாம்பு வைத்திருக்கிறாயா?” என்றோ அல்லது “என்னுடன் வருகிறாயா?” என்றோ பேச்சுக் கொடுத்தால் ஓடிவிடுமாம் என்று சொல்லப் படுகிறது.

இவற்றை விடவும் பில்லி சூனியம் போன்றவை மூலம் ஏவிவிடப்படும் பேய்கள் (இவற்றிலும் பல வகைகள் உண்டு) மற்றும் அவலச்சாவின் மூலம் உயிரிழந்தவர்களின் ஆவிகள் எனப் பல வகையான பேய்கள். கந்த சஷ்டி கவசம் படித்தீர்கள் என்றால் எல்லா வகையான பேய்பிசாசுகளின் பெயர்களையும் அறிந்து கொள்ளலாம்.

என்ன பேய்க்கதை கதைக்கிறாய் என்கிறீர்களா? பேய்க்கும் பேய்க்கதைக்கும் என்ன சம்பந்தம்? பொதுவாக நம்பமுடியாத அல்லது ஏற்றுக்கொள்ளமுடியாத விடயங்களைச் சொல்லும் போது “சும்மா பேய்க் கதை கதைககாதே” என்று சொல்வதுண்டு. சிலவேளைகளில் ஏமாளிகளைக் குறிப்பதற்கும் பேய் (அது ஒரு பேய்ப்பெடியன் அல்லது பேய்பபெட்டை) என்ற சொல் பயன்படுத்தப் படுகிறது. அதேபோல் ஏமாற்றுவதையும் பேய்க்காட்டுதல் என்று சொல்வதுண்டு. அப்படியென்றால் இந்தப் பேய் என்பது என்ன?

சரி! உங்களில் யாராவது பேயைக் கண்டிருக்கிறீர்களா? நான் கண்டதில்லை. ஆனால் காட்டியிருக்கிறேன்.அதாங்க! பேயைச் சொல்லிப் பேய்க்காட்டியிருக்கிறேன். அது 95இல் இடம்பெற்ற யாழப்பாண இடப்பெயர்வுக்கு முந்திய காலம். மாலையில் கொழுத்தப்பட்டிருந்த குப்பை தானாகவே அணைந்து விட்டது போல் தோன்றியிருந்தது. பின் இரவு 9.00 மணியளவில் வீட்டிற்கு வந்திருந்த குழந்தை ஒன்றிடம் (அதற்குப் எட்டு வயதிருக்கும்) காற்று வீசும் போதெல்லாம் சாடையாய் ஒளிர்ந்துகொண்டிருந்த செந்தணலைக் காட்டி அதுதான் கொள்ளிவால்ப்பேய், கிட்டப்போனால் பிடித்துவிடும் எனக்கூறினேன். அது பயந்துகொண்டே தன் தந்தையிடம் சென்றது. அவர் எவ்வளவோ கூறியும் அது சமாதானமாகவில்லை. பின் அவர் ஒரு விளக்கினை ஏற்றிக்கொண்டு அந்தக்குழந்தையையும் அழைத்துக்கொண்டு குப்பையருகே சென்று அது வெறும் நெருப்புத்தான். காற்று வீசுகையில் மட்டுமே ஒளிர்கிறது என்றும் விளங்கப்படுத்தியவுடன், அது சிரிததுக்கொண்டே என்னிடம் வந்து “என்னைப் பேய்காட்டப் பார்க்கிறீங்களா?” என்றது.

ஆக அறியாமையைத்தான் பேய் என்கின்றோம். அல்லது அறியாததால் பேய் என்கின்றோம். ஆனாலும் சிலரது அனுபவங்களைக் கேட்டால் அதிர்ந்து விடுகிறோம். ஊரில் இருக்கையில், எமது ஊரைச் சேர்ந்த ஒரு வயதான பெண்ணிற்கு பேய் பிடித்து விட்டது என்று அவரின் நடவடிக்கைகள் மூலம் ஊகித்துக் கொண்ட உறவினர்கள் அவரை கோவில் ஐயரிடம் கொண்டுபோய்க் காட்டினார்கள். பல பேய்களினால் அவர் பீடிக்கப்பட்டிருப்பதாகக் கூறிய ஐயர், அவரை பேயோட்டுபவர் ஒருவரிடம் அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினார். அங்கே அந்தப் பேய்கள் ஒவ்வொன்றையும் அவற்றிற்கு விருப்பமானவற்றை (கோழி, சாராயம், மீன், நண்டு போன்றவை. இவை அனைத்தையும் உயிருடன் அந்த வயதான பெண்ணே தன் பொக்கைவாயால் கடித்தும் உடைத்தும் சாப்பிட்டாராம்) அளித்து அந்தப் பேய்களை பேயோட்டுபவர் விரட்டினாராம். அதன்பின் அவர் சாதாரண நிலைக்கு வந்தவிட்டார். நம்ப முடிகிறதா? ஆனால் இதுவும் கதையல்ல நிஜம் தான்.

எப்படி அப்படி? சிலவேளைகளில் அவர் ஒருவித மனநோய்க்கு உட்பட்டிருந்திருக்கலாம். ஆனாலும் இப்போதும் இப்படியான சந்தர்ப்பங்களில் மனோவியல் நிபுணர்களால்கூட ஏதும் செய்யமுடிவதில்லை. மாறாக பேயோட்டுபவர்களால் இவ்வாறானவர்களை இலகுவாகக் குணப்படுத்த முடிகிறது. அப்படியானால் உண்மையிலேயே பேய்கள் இருக்கின்றனவா என்ற கேள்வி எழலாம்.

உண்மைகள் வேறு நம்பிக்கைகள் வேறு என்றே நான் கருதுகிறேன். யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகலாம். அல்லது அதை நம்பிக் கொண்டிருக்கலாம். அதையெல்லாம் உணமை என்று சொல்ல முடியாது. உண்மைகள் எப்பொழுதுமே எளிதானதாகவும் இயல்பானதாகவுமே இருக்கின்றன. நாம்தான் எமது விருப்புவெறுப்புகளுக்கேற்ப ஒன்றை நம்பத்தொடங்குகின்றோம், அல்லது நம்ப விரும்புகின்றோம். பின் அந்த நம்பிக்கையை உண்மையென்றும் நம்பத்தொடங்குகின்றோம். எனவே நம்பிக்கைகள் எல்லாம் எப்போதுமே உண்மையானவையாக இருப்பதில்லை. பேய்களும் கடவுள்களும் அவ்வாறே. அவை இருக்கின்றன என்று நம்புவதோ, இல்லை என்று நம்புவதோ எமது தனிப்பட்ட விருப்புவெறுப்பு மற்றும் அனுபவங்களால் உருவாகின்றது. ஆனால் அவை இருக்கின்றனவா, இல்லையா என்கின்ற உண்மையை உணர்ந்தவர்கள் அவை பற்றி அலட்டிக் கொள்வதில்லை என்றே நினைக்கின்றேன்.

கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்

13 comments:

  1. பேய் இருக்கிறதோ இல்லையோ என்பதை விட பேய்கள் ஏற்படுத்தும் விளைவுகள் உண்மையானது உ-ம்: மைக்கலின் கண்ணோளி.(இதன் காரணமாக வலசு மனதில் பேய் எதிர்ப்பு சக்தி வந்து அது கட்டுரையாக....பேய் வடிவம் பெற்று......!!!!) இதை எழுதியதற்கு என்னை பேய் பொடியன் என்று வலசு திட்டுவது பேய்யின் உதவியின்றி எனக்கு கேட்கிறது......!!!!! அன்புடன் ஆரூரன்

    ReplyDelete
  2. //...பேய்களும் கடவுள்களும் அவ்வாறே. அவை இருக்கின்றன என்று நம்புவதோ, இல்லை என்று நம்புவதோ எமது தனிப்பட்ட விருப்புவெறுப்பு மற்றும் அனுபவங்களால் உருவாகின்றது. ஆனால் அவை இருக்கின்றனவா, இல்லையா என்கின்ற உண்மையை உணர்ந்தவர்கள் அவை பற்றி அலட்டிக் கொள்வதில்லை என்றே நினைக்கின்றேன்.....//

    அய்யா தாங்கள் இதில் எந்த நிலை.....! உண்மையை உணர்ந்து விட்டீர்கள் போலும்....!!!

    ReplyDelete
  3. வரவிற்கும் கருத்திற்கும் நன்றி ஆரூரன்
    //
    பேய் இருக்கிறதோ இல்லையோ என்பதை விட பேய்கள் ஏற்படுத்தும் விளைவுகள் உண்மையானது
    //
    உண்மையிலேயே பேய்கள் பற்றிய அறியாமையால் ஏற்படுகின்ற விளைவுகளே அதிகம்.

    ReplyDelete
  4. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கதியால்.
    //
    அய்யா தாங்கள் இதில் எந்த நிலை.....! உண்மையை உணர்ந்து விட்டீர்கள் போலும்....!!!
    //
    கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்.

    ReplyDelete
  5. வரவிற்கும் கருத்திற்கும் நன்றி Naadi

    ReplyDelete
  6. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    செய்திவளையம் குழுவிநர்

    ReplyDelete
  7. விக்ரவாண்டி ரவிச்சந்திரனிடம் கேட்டால் இன்னும் நன்றாக சொல்வார்...

    ReplyDelete
  8. //கடவுள் என்று பரவலாகக் கருதப்படுகின்ற ஒன்று இருக்குமானால் பேய்களும் இருந்தே ஆகவேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.//

    ம்ம்ம்ம்.... நம்பிக்கை ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  9. நல்லா பேய்காட்டிப்போட்டீர்.

    ReplyDelete
  10. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஆ.ஞானசேகரன்.
    //
    ம்ம்ம்ம்.... நம்பிக்கை ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
    //
    இது சும்மா தானே!

    ReplyDelete
  11. வரவிற்கும் கருத்திற்கும் நன்றி rav.
    //
    நல்லா பேய்காட்டிப்போட்டீர்.
    //
    அப்ப நீங்களும் பேய்காட்டப்பட்டிட்டியள் என்கிறீர்களா?
    :-)

    ReplyDelete