Wednesday, September 16, 2009

இன்றுடன் நிறைவுற்ற இன்று ஒரு தகவல்


இன்றைய மாலைநேரச் செய்தி இந்தத் தகவலைச் செவியில் அறைந்தது. தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்கள் இன்று (16 புரட்டாதி 2009) இயற்கையெய்தி விட்டார். இனிமேல் எமக்கு இன்று ஒரு தகவல் சொல்ல அவர் வரமாட்டார்.

பிரபலமான எழுத்தாளரும் வானொலி மற்றும் தொலைக்காட்சிப் பேச்சாளருமான அமரர் தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள், தமிழ் உலகால் நன்கு அறியப்பட்டவர். தன் தனிப்பட்ட பாணியிலான பேச்சாற்றலினால் கேட்பவர் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர். அவரின் 'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சியினை அநேகமாக தமிழ் வானொலி நேயர்கள் அனைவருமே இரசித்திருப்பார்கள். யாழ்ப்பாணத்தில் 'வலம்புரி' நாளிதழ் தினந்தோறும் இவரின் 'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சியினைப் பிரதியெடுத்து வெளியிட்டு வந்தது.

நல்லவொரு கருத்தினைக் கூறிவிட்டு முத்தாய்ப்பாக அதற்குப் பொருத்தமானவொரு நகைச்சுவைக் கதையையும் கூறி எம் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தவர். முதன்முதலில் அவரது நிழற்படத்தினைப் பார்த்த பொழுது இவரா அவர் எனச் சந்தேகமாகவே இருந்தது. கருத்துக்களில் மட்டும் சொல்லாது வாழ்க்கையிலும் செய்து காட்டிய மிக அரிய எளிமையான மனிதர் அவர். அவரை முதற்தடவை பார்க்கும் எவருமே இந்த மனிதருக்குள் இப்படியொரு திறமையிரக்கும் என நம்பமாட்டார்கள். அவரது ஒரு நிகழ்ச்சியில் அவரே இதைப்பற்றிக் கூறியிருக்கிறார். அது அவர் தொலைக்காட்சியில் அறிமுகமாகியிராத காலம். ஆனாலும் வானொலியினூடாக அவரது 'இன்று ஒரு தகவல்' மூலம் தென்கச்சி கோ.சுவாமிநாதன் என்கின்ற பெயர் பிரபலமாகியிருந்தது. ஒருமுறை அவர் பேருந்து ஒன்றில் பயணித்துக் கொண்டிருக்கையில் அவரின் பின்னால் இருந்தவர்களில் ஒருவர், மற்றவரிடம் “முன்னுக்கிருப்பவரைப் பார்த்தால் தென்கச்சி கோ.சுவாமிநாதன் போல் உள்ளது.” என்றுகூற அதற்கு மற்றவர் “இருக்காது, அவர் எவ்வளவு அறிவாளி. இவரைப் பார்த்தால் படித்தவர் போலவா தெரிகிறது?” என்றாராம். நம்மாளோ (அதாங்க தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்கள்) எதையுமே காட்டிக்கொள்ளாமல் அமைதியாய் இருந்துவிட்டாராம்.

அண்மையில் இவரிடம், சிரிக்கச் சிரிக்க கதை சொல்கிறீர்களே? ஒரு குட்டிக்கதை மூலம் கேட்பவர்களைக் கண் கலங்கச் செய்ய முடியுமா? எனக் கேட்டதற்கு அவர் அளி்த்த பதில்;

நல்ல இதயமுள்ள வாசகர்களைக் கண்கலங்கச் செய்ய இன்றைக்குக் குட்டிக்கதை கூடத் தேவையில்லை. ஒரு வார்த்தை போதும்.

''ஈழத் தமிழர்கள்!''


(தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களுக்கு எமது இதய அஞ்சலிகள்)

12 comments:

  1. ம்ம்ம்..காலையில் பாடசாலை செல்லும் காலத்தில் இவரின் நிகழ்ச்சியை 7.35 மணிக்கும் கேட்டுவிட்டுத்தான் செல்வேன். எங்கள் எல்லோரையும் சிரிக்க வைக்கும் இவரின் உதட்டில் புன்னகை என்பதை நான் காணவில்லை. மனிதர் முகம் இறுக்கமாக இருக்கும். ஆனால் இதயம் நிச்சயமாக இளகித்தான் இருக்கும்.

    நானும் அவர் படத்தைப் பார்த்துவிட்டு அட இவரா அவர் என்று வியந்திருக்கிறேன்....!!

    ‘கல்கண்டு’ என்ற சஞ்சிகையில் இவரது இன்று ஒரு தகவல்...”தென்கச்சிப் பக்கம்” என்ற பெயரில் வந்தது.

    ’இன்று ஒரு தகவல்’ என்ற நிகழ்ச்சியின் அனைத்து தொகுப்புகளும் நூல் வடிவில் வெளிவந்திருக்கிறது பல பாகங்களாக...!

    நன்றி வலசு தக்க நேரத்தில் பகிர்ந்து கொண்டதற்கு..நீங்கள் குறிப்பிட்ட அந்தப் ஈழத்தமிழர்கள் என்ற பதில் கண்கலங்க வைத்துவிட்டது.

    ReplyDelete
  2. ஐயா தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களிற்கு ஈழத்து நெஞ்சங்களின் இதய அஞ்சலிகள்

    ReplyDelete
  3. ஆம்.. மறைந்துவிட்ட தமிழின் இன்னொரு சொத்து.. கோ. சுவாமிநாதன்..!!!!

    ReplyDelete
  4. வணக்கம் நண்பரே!
    இனிய பாடசாலை அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் தொடரில் உங்களை அன்புடன் அழைக்கின்றேன். என்னோடு நீங்களும் இணைந்துகொள்ளுங்கள். இந்த இணைப்புக்கு சென்று பாருங்கள்.
    http://sownthary.blogspot.com/2009/09/blog-post_25.html

    ReplyDelete
  5. வருகைக்கும் அழைப்பிற்கும் நன்றி BOOPATHY

    ReplyDelete
  6. வலசு, உங்கள் பதிவுகளை நேரம் கிடைக்கும் போது படித்து இரசிக்கிறேன். உங்கள் தமிழ்ப் பற்றைப் பாராட்டுகிறேன். தமிழில் எழுத வேண்டும் என்பதற்காக, திகதிகளை எழுதும் போது தமிழ் மாதங்களைப் பாவிக்கிறீர்கள். 'செப்டம்பர்' என்கிற ஆங்கில மதமும் புரட்டாதி என்கிற தமிழ் மாதமும் முழுமையாக ஒன்றல்ல என்பது நீங்கள் அறியாததல்ல. இந்தப் பதிவில், 16 புரட்டாதி என்று நீங்கள் குறிப்பிடும் திகதிக்கு இன்னும் 5 நாட்கள் உள்ளன. தவறைத் திருத்திக் கொள்வீர்களென எதிர்பார்க்கிறேன்.
    'நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே'.

    ReplyDelete
  7. உங்களின் பெயர் தெரியவில்லையாயினும், தங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க மகிழ்ச்சி. தமிழ்நாட்காட்டியின் பிரகாரம் தை முதலாம் திகதி தைத்திருநாளுடன் ஆரம்பிக்கின்றது. பொதுவாக ஒவ்வொரு தமிழ் மாதமும் அதற்குரிய ஆங்கில மாதம் ஆரம்பித்து ஏறத்தாழ 15 சாட்களின் பின்னரேயே தொடங்குகிறது. பொதுவாகவே எனக்கு மின்னஞ்சல் முலமாகக் கருத்துத் தெரிவிப்பவர்களில் சிலர் தங்களுக்குத் தமிழ் மாதத்தின் பெயர்கள் தெரியாததால் ஆங்கிலப் பெயர்களைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்வதுண்டு. இந்நிலையில் தமிழ்த் திகதியினைப் பயன்படுத்தினால் எப்படியிருக்கும். ஆயினும் உங்கள் கருத்திலுள்ள உண்மையை ஏற்றுக்கொண்டு வரும் நாட்களில் இரு திகதிகளையும் தருவதற்கு முயற்சி எடுக்கிறேன்.

    ReplyDelete
  8. வலசு, மன்னிக்கவும். நான் உங்களை தமிழ்த் திகதியினைப் பயன்படுத்துமாறு கோரவில்லை. செப்டம்பர் 16 என்று பாவிப்பதே சிறந்தது என்பதே எனது தாழ்மையான கருத்து. நாமெல்லோரும் ஆங்கில திகதியினைப் பயன்படுத்தும்போது தமிழில் திகதியினைக் குறிப்பிட்டால் யாருக்கும் புரியாது. அதற்காக திகதியினை தவறாகக் குறிப்பிடுவது (புரட்டாதி 16)முறையல்ல என்றே கூறவந்தேன்.

    ReplyDelete
  9. தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி. தவறினைத் திருத்திக் கொள்கிறேன்.

    ReplyDelete
  10. naan padithavaigalil nalla oru malaranjali ungaludayathu
    annarin anma santhyadaya prarthipoom

    Nagaraj
    www.infinityholes.blogspot.com

    ReplyDelete
  11. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நாகராஜ்.மு

    ReplyDelete