Sunday, September 27, 2009

மறக்கமுடியாத சரஸ்வதி பூசையும், சாப்பாடும்


அது 2003ஆம் ஆண்டு காலப்பகுதி. அக்பர் விடுதியை ஞாபகப்படுத்தும் விதத்திலேயே தெஹிவளையில் எமது வசிப்பிடமும் அமைந்திருந்தது. அதே விடுதி நண்பர்கள் பலரும் ஒன்றாக, மீண்டும் அக்பர் வாழ்க்கையை நாம் அனுபவித்துக் கொண்டிருந்தோம். அந்த வருடத்தைய வீட்டுப்பூசையன்று என்னையும் இன்னொரு நண்பனையும் தவிர ஏனையவர்கள் கொழும்பில் வசிக்கும் தங்களின் உறவினர்கள் வீட்டிற்கு சென்று விட்டிருந்தனர்.

எங்கள் இருவருக்கும் அவல், சுண்டல் எல்லாம் சாப்பிடவேண்டும் என்கின்ற அவா. கோவிலுக்குப் போகலாமா என்றான் நண்பன். எனக்கோ கோவிலுக்குச் செல்ல இஷ்டமில்லை. ஆயினும் இருவருக்குமே சரஸ்வதி பூசைச் சாப்பாடு சாப்பிட்டே ஆகவேண்டும் என்கின்ற கட்டாயம். அதற்கு உணவின் மீதான பிரியம் மட்டுமல்ல, மற்றைய நண்பர்களிடம் கடி வாங்காமல் இருக்கவேண்டுமே என்கின்ற மானப்(?) பிரச்சனை. சிறிது நேரம் யோசித்து விட்டு என்னுடன் பணியிடத்தில் அறிமுகமாகியிருந்த வேறொரு நண்பரின் வீட்டுக்குச் செல்வதென்கின்ற முடிவுடன் வெள்ளவத்தைக்குப் புறப்பட்டோம்.

அந்த நண்பரின் வீட்டில் இப்படியான கொண்டாட்டங்கள் எல்லாம் மிகச் சிறப்பாகச் செய்யப்படும். அங்கே சென்றபோது அவர்கள் வீட்டில் பூசை நடைபெற்றுக் கொண்டிருந்தது. எம்மைக் கண்டதும் நண்பரின் தாயார் இருந்து சாப்பிட்டு விட்டுப் போகும்படி கூறினார்.

“ஏன் அன்ரி? என்ன விசேசம்?” என்றோம்.

“இண்டைக்கு சரஸ்வதிபூசை வீட்டில செய்யிறம்.” என்றார்.

“ஓ! அப்ப சரஸ்வதி பூசை தொடங்கீற்றுதா?” என்றான் என்னுடன் வந்திருந்த நண்பன்.

“பரவாயில்லை அன்ரி. நாங்க இன்னொரு நாளைக்கு வாறம். இண்டைக்கு வேற அலுவல் ஒண்டு இருக்கு.” என்றேன் நான்.

உடனேயே நாங்கள் வந்திருந்த வீட்டுக்குரிய நண்பர் “அதெல்லாம் முடியாது. இருந்து சாப்பிட்டிட்டுத்தான் போக வேணும். இன்னும் கொஞ்ச நேரத்தில பூசையெல்லாம் முடிஞ்சிரும்.” என்றவாறே பூசையறைக்குள் சென்று விட்டார்.

“இல்ல, நாங்க போகவேணும்.” என்றவாறே தலையைச் சொறிந்தான் என்னுடன் வந்திருந்த நண்பன்.

மற்ற நண்பரின் தாயாரின் வற்புறுத்தலின் பேரில் ஒருவாறாக இருவரும் இருந்து சாப்பிட்டுவிட்டுச் செல்வதற்கு இணங்கிக் கொண்டோம். சிறிது நேரத்திலேயே சக்கரைப் பொங்கல், அவல், சுண்டல் உழுந்து வடையென வயிறும் மனமும் நிறைந்துவிட விடைபெற்றவாறே வீட்டை விட்டு விலகி வீதிக்கு வந்தவுடன் ஆரம்பித்த சிரிப்பு தெஹிவளையில் எமது இருப்பிடம் வந்து சேர்ந்த பின்னும் நிற்கவில்லை. மறுநாள், என்றைக்கேனும் நான் மீண்டும் எழுத ஆரம்பிக்கும் காலங்களில் இந்நிகழ்ச்சியைப்பற்றி கட்டாயம் எழுதுமாறு என்நண்பன் கேட்டுக்கொண்டான்.

அதற்கடுத்தடுத்த வருடங்களில் வந்த சரஸ்வதி வீட்டுப்பூசையன்று நாங்களே அவல் மற்றும் சுண்டல் செய்து கொண்டதும், வேறு நண்பர்களின் இடங்களில் கோழிப்பொங்கல் செய்து பகிர்ந்து கொண்டதெல்லாம் வேறு விடயம்.

6 comments:

  1. வாழ்வில் மறக்க முடியாத நிகழ்ச்சிதாங்க இது. ஓவ்வொரு சரஸ்வதி பூஜைக்கும் இந்த நிகழ்ச்சி உங்களுக்கு ஞாபகம் வரும்.

    ReplyDelete
  2. //
    இராகவன் நைஜிரியா said...
    வாழ்வில் மறக்க முடியாத நிகழ்ச்சிதாங்க இது. ஓவ்வொரு சரஸ்வதி பூஜைக்கும் இந்த நிகழ்ச்சி உங்களுக்கு ஞாபகம் வரும்.
    //
    உண்மை இராகவன் நைஜிரியா. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  3. எல்லாக் கவிதைகளையும் வீணடித்து விட்டு,
    எல்லா உண்மைகளையும் செவி மடுக்க மறந்து விட்டு,
    எல்லா வாழ்க்கையையும் புறக்கணித்து விட்டு
    நாம் கொண்டாடும் பண்டிகைகளில் எல்லாம் அனாதைகளக நிற்பது நமது கடவுள்கள்கள் என்ற கோட்பாடுகளே.

    ReplyDelete
  4. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஷண்முகப்ரியன்.
    //
    நாம் கொண்டாடும் பண்டிகைகளில் எல்லாம் அனாதைகளக நிற்பது நமது கடவுள்கள்கள் என்ற கோட்பாடுகளே.
    //
    உண்மையான வார்த்தைகள். ஆயினும் அதைப்பற்றிய விழிப்புணர்வின்றியே எங்களில் பெரும்பாலானோர் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்பதும் உண்மையே

    ReplyDelete
  5. இன்னுமா மாறவில்லை.. இந்த த*** குணம்... ;)
    நல்லாயிருக்கு பதிவு..

    ReplyDelete
  6. பழக்கத்தை மாற்றினாலும் பரவாணியை மாற்றமுடியாது சுபானு.
    :-)

    ReplyDelete