“தக்கன பிழைக்கும்” என்றார் சாள்ஸ் டாவின்.
செம்மொழியாகிய எம்மொழியாம் தமிழ்மொழி எதிர்காலத்தில் தன்னைத் தக்கவைத்துக் கொள்ளுமா?
இவ்வினாவினை எனக்குள் விதைத்தது அண்மையில் எனக்கு வந்தவொரு கருத்துப் பகிர்வு. பொதுவாக பெயரில்லாமல் (Anonymus) வரும் பின்னூட்டங்களுக்கு நான் பதிலளிப்பதில்லை. ஆயினும் இது, நான் திகதிகளை குறிப்பிடும் முறையைத் தவறென்று கூறி “நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே” என்கின்ற எச்சரிக்கையுடன்(?) வந்ததாலும், அந்தத் குற்றச்சாட்டு சரியென்று நானும் உணர்ந்ததாலும் அதற்கு நானும் பதிலளித்திருந்தேன். பின் அந்த நக்கீரர் தன்னை எனக்கு அறியத்தந்த போது மிக்க மகிழ்ச்சியாய் இருந்தது. எனது மரியாதைக்குரிய நபர்களில் அந்தக் கலைஞனும் ஒருவர். பல கலைஞர்களை உருவாக்கிய பெருமைக்கும் சொந்தக்காரர் அவர்.
இப்போதெல்லாம் தமிழ் திகதிகளை பெரும்பாலும் தின நாட்காட்டிகளிலும் மற்றும் அழைப்பிதழ்களிலும் மட்டுமே காணக்கூடியதாய் இருக்கிறது. மற்றம்படிக்கு நாங்கள் யாவருமே ஆங்கிலத் திகதியினையே எமது வழக்கில் கொண்டிருக்கின்றோம். சரி, உலக நியமத்திற்கு அமைவாக அதைத்தான் பயன்படுத்த வேண்டும். இல்லையேல் நிச்சயமாக அதனால் பல சிக்கல்கள் உருவாகும். இலக்கங்களில் பயன்படுத்துகையில் மொழிப் பிரச்சனை இல்லை. ஆனால் அதில் உள்ள சிக்கல் என்னவென்றால் சில இடங்களில்/நாடுகளில் நாள்/மாதம்/ஆண்டு (dd/mm/yyyy) என்றும் வேறுசில இடங்களில்/நாடுகளில் மாதம்/நாள்/ஆண்டு (mm/dd/yyyy) என்றும் பாவனையில் இருப்பதால் பல சந்தர்ப்பங்களில் சரியான திகதியை அறிவது கடினம். உதாரணமாக 08/09/2009 என்கின்ற திகதியை எடுத்துக் கொண்டால் அது ஒன்பதாம் மாதத்தின் (September) எட்டாம் நாள் என்பதா அல்லது எட்டாம் மாதத்தின் (August) ஒன்பதாம் நாள் என்பதா என்கின்ற குழப்பத்தை உருவாக்கிவிடும். ஆனால் 14/09/2009 என்பதிலோ அல்லது 09/14/2009 இந்தப் பிரச்சனை இல்லை. இது சம்பந்தமான நடைமுறைச் சிக்கல்களை, கணினியில் database சம்பந்தமான வேலைகளில் உள்ளவர்கள் அறிந்திருப்பார்கள். எழுத்து வழக்கில் இந்தச் சிக்கலை எவ்வாறு கையாள்வது?
ஆங்கில ஆண்டு January யில் தொடங்கி December இல் முடிவடைவதாலும் அதற்கேற்ப தற்போது தமிழ் ஆண்டு தை மாதத்தில் தொடங்கி மார்கழி மாதத்தில் முடிவடைவதாலும், இன்றைய திகதியினை எழுத்தில் குறிப்பதற்கு புரட்டாதி 30 எனப் பயன்படுத்தலாம் என்றே எண்ணியிருந்தேன். அது தவறு என்று சுட்டிக்காட்டப்பட்டதை ஏற்றுக் கொண்டதால் இலங்கைப் பத்திரிகைகள் எவ்வாறு இதைக் கையாள்கின்றன என்று பார்த்த போது அவை தமிழ் திகதியினைத் தமிழிலும் ஆங்கில திகதியினை ஆங்கிலத்திலுமே அச்சடிக்கின்றன. இன்றைய திகதியை September 30 என்று அழைப்பதே சரியானதாகத் தோன்றுகிறது. ஆயினும் இதனை ஆங்கிலம் கலவாமல் தமிழில் எழுதும் போது செப்ரம்பர் என்று எழுதுவதா அல்லது செப்டம்பர் என்று எழுதுவதா? அதே போல் இலங்கையைச் சேர்ந்தவர்கள் August மாதத்தினை ஓகஸ்ற் என்று உச்சரிக்கும்/எழுதும் அதேவேளையில் இந்தியாவில் இருப்பவர்கள் ஆகஸ்ட்டு என்றும் சிலர் ஆகஸ்து என்றும் உச்சரிக்கறார்கள்/எழுதுகிறார்கள். ஆக தமிழ் மொழியில் இந்த மாதங்களைக் குறிப்பதில் சிக்கல்கள் உண்டாகின்றன.
வேற்று மொழிச் சொல்லைத் தமிழ்மொழிக்குள் உள்வாங்குவது தவறல்ல. அப்படி உள்வாங்கினால்தான் அந்தமொழி வளரும் என்று உறுதியாக நம்புகின்றேன். ஆயினும் அப்படி உள்வாங்கப்படும் சொல் ஒரே சொல்லாகவும் (spelling) ஒரே உச்சரிப்பையும் கொண்டதாகவும் அமைந்தாலே அது அழகாக இருக்கும் என்றே நான் நினைக்கின்றேன்.
ஆங்கிலத்தில் இங்கிலாந்தின் ஆங்கிலத்திற்கும் அமெரிக்க ஆங்கிலத்திற்கும் வேறுபாடுகள் உள்ளன. உதாரணமாக இங்கிலாந்து ஆங்கிலத்தில் colour என்கின்ற சொல்லிற்கு அமெரிக்க ஆங்கிலத்தில் color என்கின்ற சொல்லே பயன்படுத்தப் படுகிறது (spelling வித்தியாசம்). இப்படியானவற்றை வைத்துக் கொண்டு தமிழிலும் அவ்வாறே பயன்படுத்தலாம் என்று கூறுவதிலும் பார்க்க பொதுவான ஒரு சொல்லைப் பயன்படுத்துவதே சிறந்ததாயிருக்கும் என்று நான் கருதுகின்றேன். அண்மையில் இங்கே பதிவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கூட்டத்திற்கு எதேச்சையாக நானும் சென்றிருந்தேன். அங்கிருந்த பதிவர்களில் பலர் தங்களது எழுத்துப்பிழைகளைத் திருத்துவதற்கு தமிழில் ஒரு எழுத்துப்பிழைதிருத்தி (spell checker) இல்லையே என்று கவலை தெரிவித்திருந்தார்கள். ஏற்கனவே தமிழ் எழுத்துப் பிழைதிருத்தி ஒன்று (https://addons.mozilla.org/en-US/firefox/addon/8902) Mozilla Firefox இணைய உலாவியிற்கு addon வடிவில் ஒழுங்கமைக்கப்பட்டிருப்பினும் அதில் இன்னமும் பெருமளவிலான சொற்கள் இணைக்கப்படவேண்டி இருக்கின்றன.
ஓலைச்சுவடிகளில் எழுதிப் பின் அச்சிலேற்றி தமிழை வளர்ப்பதென்பதெல்லாம் மலையேறிப்போய்விட்ட இலத்திரனியல் காலம் இது. விஜயதசமி அன்றோ அல்லது தைப்பூசம் அன்றோ தட்டில் அரிசி பரவி ஏடுதொடக்குவதெல்லாம் வருங்கால சந்ததியினருக்கு பழைய பஞ்சாங்கம். இனி ஏடு தொடக்குவது கூட (அப்படி ஒரு சடங்கு செய்யவேண்டும் என்று விரும்புவர்கள்) கணினியில் தான் தொடங்குவார்கள். ஆக தமிழையும் கணினியில் கையாள்வதற்குத் தகுந்த மாதிரி இலகுவாக்கினாலேயே கணினியில் தமிழ் வளரும். அதற்காக தமிழின் சிறப்பியல்புகளை புறக்கணிக்க வேண்டியதில்லை. “'ங'-போல் வளை” என்று ஒரு பழமொழியே இருக்கிறது. உயிர்மெய் எழுத்துக்களில் 'ங' வரிசையில் 'ங' தவிர ஏனை எழுத்துக்கள் பாவனையில் இல்லை. ஆயினும் 'ங'-விற்காக அந்த வரிசையில் உள்ள ஏனைய 11 எழுத்துக்களையும் தமிழில் வீணாக வைத்துக் கொண்டிருக்கும் அதேவேளையில் பல ஆங்கிலச் சொற்களைச் சரியாக உச்சரிப்பதற்கான தமிழ் எழுத்துக்கள் எங்களிடம் இல்லை. வடமொழியின் ஆதிக்கம் தமிழிற்குள் பல சொற்களைப் (ஜ,ஸ,ஷ,ஹ) புகுத்தியது. அப்போதிருந்த தமிழறிஞர்கள்/ஆர்வலர்கள் இதைச் செய்திருக்கிறார்கள். ஆகவே தமிழ் மொழிக்கு வெறுமனே செம்மொழி என்கின்ற அந்தஸ்தை மட்டும் அளித்துவிட்டு தங்கள் கடமை முடிந்து விட்டது என்று உரியவர்கள் எண்ணாமல் தமிழ் மொழி தன் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியை (“கன்னித் தமிழோ கம்பன் கவியோ...” என்று பாடாமல் இனி “கன்னித் தமிழோ கணினித் தமிழோ...” என்று வேண்டுமானாலும் பாடலாம்.) அடைய உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய தருணம் இது.
இல்லையேல் “தக்கன பிழைக்கும் அல்லன அழியும்.” என்பதற்கு எடுத்துக்காட்டாக தமிழ்மொழியும் அமைந்துவிடும்.
அருமையான கட்டுரை,வலசு.
ReplyDeleteஎந்த மொழியும் தானே அழியாது,அதன் பயன் அழிந்தால் ஒழிய.
ஏசுநாதர் பேசிய மொழி இன்று ஒரே ஒரு கிராமத்தில் மட்டும் பேசப் படுகிறது.(நன்றி:மெல் கிப்சன்)அதனால் அவரது எண்ணங்கள் அழியவில்லை.
தமிழ் அழியும்,தமிழனின் எண்ணங்கள்(thoughts) உலகத்துக்குத் தேவைப் படாத போது.
வடமொழி மீண்டும் உயிர் பெறுவது அதனுடைய பொருள் வேண்டுமெனப் படும் போது மட்டுமே.
மொழியை விட இசை முக்கியம்.அதனினும் முக்கியம் சொல்லப் படுவதைச் சொல்லாமலே உணர்த்தும் மௌனம்.
வருகைக்கும் கருத்திற்கும் மேலதிக தகவல்களுக்கும் மிக்க நன்றி ஷண்முகப்ரியன்.
ReplyDelete//
தமிழ் அழியும்,தமிழனின் எண்ணங்கள்(thoughts) உலகத்துக்குத் தேவைப் படாத போது.
//
தமிழ் அழிகையில் தமிழன் என்கின்ற அடையாளமும் அழிந்துவிடும்.
//
மொழியை விட இசை முக்கியம்.அதனினும் முக்கியம் சொல்லப் படுவதைச் சொல்லாமலே உணர்த்தும் மௌனம்.
//
எத்தனை பேரால் இதை உணர்ந்து/புரிந்து கொள்ள முடியும்?
உண்மையிலேயே தமிழின் வளர்ச்சி கருதி எமுதப்பட்ட தங்களின் கட்டுரை பெறுமதியானது. தமிழ் வளர்ப்போர் எனத்திரியும் சமூக அந்தஸ்து பெற்றவர்களின் கவனத்திற்கு இக் கட்டுரை சென்றடைய வேண்டும். பிறமொழி நண்பரொருவர் தமிழில் எழுத்துக்களிலும் மாற்றங்கள் வேண்டுமென்றார்(உ+ம்- ஆ என்ற வடிவத்திற்கு பிரதியாக அh, ஈ ற்கு பிரதியாக இh ).
ReplyDelete”அவனைப் போல் ஒருவன்” இருந்தால் தமிழர்கள் வாழ்வார்கள். தமிழர்கள் வாழ்ந்தால் தமிழ் நன்றாக வாழும். தமிழ் நன்றாக வாழ்ந்தால் அது டார்வினின் கருத்தை பொய்யாக்கும். ஆகவே தமிழை வாழவைக்க தக்கதொருவன் இருந்தால் போதும். அவர்களோடு என்ன என்ன செய்ய வேண்டுமோ அதை ஒவ்வொருவரும் செய்தால் செம்மொழி நீடுழி வாழும்.நல்லதொரு சிந்தனை. தக்க காலத்தில் உதித்துள்ளது. தொடரட்டும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி கதியால்.
ReplyDeleteஅந்தக் காலத்திலிருந்தே “எல்லாம் அவன் செயல்” என்று சொல்லிச் சொல்லியே எங்கள் பொறுப்பகளைத் தட்டிக்கழித்து விட்டு சோம்பேறிகளாகி விட்டோம்.
ஷண்முகப்பிரியன், உங்கள் பெயரிலே தெரிகிறது உங்கள் எண்ணம்.
ReplyDeleteவடமொழி மீண்டும் உயிர் பெறுவது அதனுடைய பொருள் வேண்டுமெனப் படும் போது மட்டுமே... அப்படி என்றால் உயிர் கொடுப்பது தான் முக்கியம்.என்ன சொல்ல வாறிங்கள்? மொழியைவிட இசை முக்கியம்? இலக்கியத்தனமாக புசத்த வேண்டாம். தமிழ் அழிந்து விடும் உங்களைப்போன்ற வடமொழிப்பற்றுள்ளவர்களால்... சண்முப்பிரியன் என்று எழுதுவதில் என்ன தவறு... வலசு.. நீங்கள் என்ன சொல்ல வாறிங்கள்? தமிழைப்பற்றியா இசையைப்பற்றிய இந்த பதிவு..
வெண்காட்டான்
//அதேவேளையில் பல ஆங்கிலச் சொற்களைச் சரியாக உச்சரிப்பதற்கான தமிழ் எழுத்துக்கள் எங்களிடம் இல்லை.//
ReplyDeleteஉலகத்தின் தமிழனைவிட வேறொருவன் இப்படி எக்காலத்திலும் சிந்திக்கவே மாட்டான். எந்த ஆங்கிலயேயனும் தமிழிலுள்ள சொற்களைச் சரியாகச் சொல்வதற்கு எழுத்துக்கள் இல்லையென்று கவலைபட்டது கிடையாது. எதவொரு சீனனும் ஆங்கிலச் சொற்களை சீனத்தில் எழுத தகுந்த எழுத்துக்கள் இல்லை என்று வருதம் அடைந்தது கிடையாது. சீனனுக்கு "ர,ற' உச்சரிப்பே வராது. அந்த ஒலிப்பே அவனுக்குக் கிடையாது.அதற்காக அவன் என்றவாது வருத்தம் அடைந்தது உண்டா?
ஆனால் தமிழனுக்கு மட்டும் என்ன ஒரு அடிமை குணம் பாருங்களேன். தமிழில் "f" இல்லை. அதனால் பிப்பிரவரி மாதத்தை எங்களால் சரியான ஆங்கில உச்சரிப்பரில் எழுத இயலவில்லை, அதனால் 'f' வேண்டும் என்பிறோ? பிறகு அரேபிய ஒலிக்கு எழுத்து, சீன மொழிக்கு எழுத்து என கேட்பீரோ?
ஒவ்வொரு மொழியின் உச்சரிப்பும் அவ்வினத்தின் தொன்மை வளர்ச்சியினைக் கொண்டிருப்பது. மொழியியல் படித்தவர்களுக்கு இது தெரியும். பிறமொழி இனத்தாரின் பெயரையோ, மாதப் பெயர்களை எழுதும் போது, அது தமிழ் ஒலி மரபுக்கேற்றபடியே எழுத வேண்டும். காட்டாக சனவரி, பிப்பிரவரி, ஆகத்து, உருசியா, செருமனி, சாவகத் தீவு என்ரு அமைய வேண்டும். தமிழ் அறிவு உடையவர்களுக்கு இஃது இயல்பான செய்தி.
//வேற்று மொழிச் சொல்லைத் தமிழ்மொழிக்குள் உள்வாங்குவது தவறல்ல. அப்படி உள்வாங்கினால்தான் அந்தமொழி வளரும் என்று உறுதியாக நம்புகின்றேன்.//
இதை முற்றிலுமாக தமிழறிஞர்கள் மறுத்துள்ளனர். அப்படியானல் கணினி, மகிழுந்து, பேருந்து, வாடகி, வரிசில், தூவல் என்ற சொல் எதற்கு? computer, car, bus, taxi, pencel, pen என எழுதலாம இனிமேல்???
பிறமொழிச் சொற்களைக் கலப்பதால் தனித்தன்மை கெடவுமே அன்றி, எவ்வாறு மொழி வளரும்? மேற்கூறிய உங்கள் கருத்து ஆங்கில மொழிக்கு ஒத்துவரும். அது ஆங்கில மொழியினரின் கருத்தும் கூட. மொழியறிஞர்களின் கருத்து இல்லை. ஏனெனில் அது கலவையினால் உருவாகிய மொழி. தமிழ் அவ்வாறு இல்லை. கலப்படம் செய்தவர்கள் எல்லாம் இன்று தனித்தன்மை கெடுகின்ற நிலையில் உள்ளனர். மலேசியாவில் இதை மலாய்காரர்களே இப்போது நன்கு உணர தொடங்கிவிட்டனர். வெள்ளம் அணையைக் கடப்பதற்குள் அவர்கள் செயலில் இறங்கிவிட்டனர். தமிழன்???? கண்முன்னே தமிழ் கெட்டாலும், தன் வயிறு நிரம்பினால் மட்டும் மகிழ்ச்சியாக இருப்பான்.
"பிறமொழிச் சொற்களைக் கலந்தால்தான் தமிழ் வளருமா?
http://karutthumedai.blogspot.com/2009/10/blog-post.html
//பல ஆங்கிலச் சொற்களைச் சரியாக உச்சரிப்பதற்கான தமிழ் எழுத்துக்கள் எங்களிடம் இல்லை//
ReplyDelete1. தசாவதாரம் பட விழாவில் சாக்கி சான் தன் தமிழ் உச்சரிப்புக்கு வருந்தவில்லையே..
2. தமிழ் என்பதை TAMIல் என்று உச்சரிக்கிறோமே என்று வெள்ளையன் வருந்தினானா?
நிழலின் அருமை வெயிலில் தெரியும்.. வேறென்ன நான் சொல்ல?
வருகைக்கும் தங்களின் தனிப்பட்ட கருத்திற்கும் நன்றி வெண்காட்டான்.
ReplyDeleteமனமுதிர்ச்சியின் ஒரு கட்டத்தில் மொழியை விடவும் இசையை விடவும் மௌனம் மேலானதாகவும் ஆயிரம் அர்த்தங்களைப் புரிய வைப்பதாகவும் இருக்கும்
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தமிழரண்.
ReplyDelete//
கணினி, மகிழுந்து, பேருந்து, வாடகி, வரிசில், தூவல் என்ற சொல் எதற்கு? computer, car, bus, taxi, pencel, pen என எழுதலாம இனிமேல்???
//
எம்மில் எத்தனை பேர் பேச்சு வழக்கில் இச்சொற்களைக் கையாள்கிறோம்?
புதிய பொருட்கள் அறிமுகமாகும் போதே அதற்கான தமிழ்ப் பெயரும் உருவாகுமானால் அதனை இலகுவாக உள்வாங்கி பேச்சுவழக்கில் கொண்டுவரலாம். அப்படி சொற்களை உருவாக்குவதற்கு உரிய அமைப்பு எதுவேனும் தமிழ் மொழியில் இருக்கிறதா? அப்படி இல்லையெனில் அந்தப் பொருளின் ஆங்கிலப் பெயர் எம்மிடையே கலந்த பின்னர் அதற்கான தமிழ்ப் பெயரை உருவாக்கி, அதைப் பயன்படுத்த முனையும் போது பலராலும் அது புறக்கணிக்கப்பட்டு விடுகிறது என்பதே யதார்த்தமானது.
மேலும் பல சொற்களையும் உச்சரிக்கும் விதத்தில் ஒரு மொழி தன்னை விரிவு படுத்திக் கொள்ளுமானால் அது அந்த மொழியின் வளர்ச்சியாகவே கருதப்படும். இல்லையெனில் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவதாகவே இருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி iniyan23
ReplyDelete//
1. தசாவதாரம் பட விழாவில் சாக்கி சான் தன் தமிழ் உச்சரிப்புக்கு வருந்தவில்லையே..
2. தமிழ் என்பதை TAMIல் என்று உச்சரிக்கிறோமே என்று வெள்ளையன் வருந்தினானா?
//
மற்றவன் வருந்தினானா இல்லையா என்பதல்ல இங்கு முக்கியம். தமிழ் மொழி அதற்கு இசைவாக உள்ளதா? முக்கியமாக கணினியில் அதன் பாவனை இலகுவாக இருக்கிறதா? என்பதே பிரதானம் என நான் நினைக்கிறேன்.
//எம்மில் எத்தனை பேர் பேச்சு வழக்கில் இச்சொற்களைக் கையாள்கிறோம்?//
ReplyDeleteநாங்கள் பயன்படுதுகிறோம் ஐயா. எங்கள் இல்லங்களில், பள்ளிகளில், நண்பர்களிடம் பயன்படுத்துகிறோம். தமிழ் உணர்வுள்ளவர்கள் எங்களைப் பின்பற்றி அவர்களும் பேசுகிறார்கள். பேச்சில் பயன்படுத்த சோம்பேறிகளையும் மொழியுணர்வு அற்றவர்களையும் வைத்து கொண்டு இதுதான் நடப்பியல் என்று சொல்லாதீர்கள். ஆரோக்கிய வாழ்விற்கு வழி வகுத்துக் கொடுத்தனர். ஆனால் நம்மில் எத்தனை பேர் அதைப் பின்பற்றி உணவு; உடற்பயிற்சி, உடல்நல சொதனை என்று செய்கின்றனர்? பலபேர் இல்லை என்பது தானே உண்மை. அதனால், நான் ஆரோக்கிய வாழ்வின் வழிமுறைகள் 'யதார்தமா" இல்லையென்று புறந்தள்ளிவிட முடியுமா? அப்படிதான் புதிய சொல்லாகங்களும்.பயன்படுத்த வேண்டியது நமது கடமை. புறக்கணிப்பது சோம்பேறிகளின் மடமை.
//மேலும் பல சொற்களையும் உச்சரிக்கும் விதத்தில் ஒரு மொழி தன்னை விரிவு படுத்திக் கொள்ளுமானால் அது அந்த மொழியின் வளர்ச்சியாகவே கருதப்படும்//
இது எம்மொழிக்கும் எந்நாளும் பொருத்தமல்லாத மொழியில் கருத்து. என் சட்டை எனக்குதான் பொருத்தமாக் இருக்கும். அச்சட்டை உலக மக்கள் அனைவருக்கும் பொருத்தமாக அமைய வேண்டும் என நினைப்பது அறியாமை; பேதைமை. அது போல எம்மொழி ஒலிகள் எம்மொழிக்குதான் பொருந்தும். உலக மொழிகளுக்கெல்லாம் பொருந்த வேண்டிய அவசியம் இல்லை; தேவையும் இல்லை.
//தமிழ் மொழி அதற்கு இசைவாக உள்ளதா? முக்கியமாக கணினியில் அதன் பாவனை இலகுவாக இருக்கிறதா?//
ReplyDeleteஇன்றைக்கு ஆங்கிலம் தவிர்த்து அத்தனை மொழியிலும் விண்டோஸ் கிடைக்கின்றதே.. ஏன்? ஆங்கிலம் மட்டுமே கணினிக்கு இசைவானது எனில் இத்தனை மொழியில் கணினி செயலி ஏன்?
ஒன்றுக்கும் மேற்பட்ட மொழியில் ஏன் மென்பொருட்கள் ?
அன்று, கணினி வந்து விட்டது இனி தமிழ் வாழாது என்றனர்... இன்று கணினியிலும் தமிழ் வந்து வாழ்வாங்கு வாழ்கிறது..இப்போது இசையாது என்பது, வீண் வாதமே! ஐரோப்பிய மொழிகளின் பல எழுத்துருக்கள் ஆங்கிலத்துக்கு அப்பாற்பட்டவையே...
இலகு படுத்த எவனோ வருவான் என்று எதிர்பார்த்தல் சரியோ? அவனவன் மொழிக்கு அவனவனே பொறுப்பு.. இதை மாற்றான் உணர்ந்திருக்கிறான்.. மரத்தமிழன் எப்போது?
முடியாது என்பதை நிறுத்தி முடிக்கும் வழியைச் சிந்திப்போம்!